வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
பெற்றோரில் ஒருவர் மட்டுமே யெகோவாவின் சாட்சியாக இருக்கும்போது பிள்ளையைப் பயிற்றுவிப்பது சம்பந்தமாக வேதவசனங்கள் என்ன வழிநடத்துதலை அளிக்கின்றன?
துணைவர் அவிசுவாசியாக இருந்தால், யெகோவாவின் சாட்சியாக இருக்கும் தாயோ தகப்பனோ பிள்ளையைப் பயிற்றுவிப்பது சம்பந்தமாக இரண்டு முக்கிய நியமங்களை பைபிள் தருகிறது. ஒன்று: “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.” (அப்போஸ்தலர் 5:29) மற்றொன்று: “கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறது போல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்.” (எபேசியர் 5:23) இந்த இரண்டாவது நியமம், கணவர்கள் விசுவாசியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனைவிகளுக்கு பொருந்துகிறது. (1 பேதுரு 3:1) பிள்ளைகளுக்கு போதிக்கும்போது, இந்த நியமங்களை சாட்சியாக இருக்கும் பெற்றோர் எப்படி சமநிலையுடன் பின்பற்றலாம்?
கணவர் யெகோவாவின் சாட்சியாக இருக்கும்போது ஆன்மீக ரீதியிலும் சரீர ரீதியிலும் தன் குடும்பத்துக்குத் தேவையானவற்றை அளிக்கும் பொறுப்புள்ளவராக இருக்கிறார். (1 தீமோத்தேயு 5:8) விசுவாசியாக இல்லாத தாய் தன் பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவழித்தாலும் சாட்சியாக இருக்கும் தகப்பன் அவர்களுக்கு போதிக்க வேண்டும்; இதற்காக, ஆவிக்குரிய விதத்தில் அவர்களுக்கு வீட்டில் பயிற்சி அளிக்க வேண்டும், மேலும் தார்மீக அறிவுரைகளை பெறுவதற்கும் பயனளிக்கும் கூட்டுறவை அனுபவிப்பதற்கும் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
சாட்சியல்லாத மனைவி தன் பிள்ளைகளை வணக்க ஸ்தலத்திற்கு அழைத்து செல்வதிலோ தன்னுடைய மத நம்பிக்கைகளை அவர்களுக்குக் கற்பிப்பதிலோ விடாப்பிடியாக இருந்தால் என்ன செய்வது? நாட்டின் சட்டம் அந்த உரிமையை அவளுக்கு அளிக்கலாம். அத்தகைய வணக்க ஸ்தலங்களில் பிள்ளைகள் வணக்க காரியங்களில் ஈடுபட தூண்டப்படுகிறார்களா இல்லையா என்பது எந்தளவுக்கு தகப்பன் ஆன்மீக ரீதியில் அவர்களுக்குப் போதித்திருக்கிறார் என்பதைப் பொறுத்ததே. பிள்ளைகள் பெரியவர்களாகையில் தகப்பன் கற்பித்த பைபிள் போதனை, கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் சத்தியத்தைப் பின்பற்ற அவர்களுக்கு உதவ வேண்டும். சத்தியத்தின் சார்பாக பிள்ளைகள் நிலைநிற்கை எடுக்கையில் விசுவாசியாக இருக்கும் தகப்பன் எவ்வளவு சந்தோஷப்படுவார்!
தாய் யெகோவாவின் சாட்சியாக இருந்தால் பிள்ளைகளின் நித்திய நலனில் அக்கறையுள்ளவளாக இருப்பதோடு தலைமை ஸ்தான நியமத்துக்கும் மரியாதை காட்ட வேண்டும். (1 கொரிந்தியர் 11:3) பல சந்தர்ப்பங்களில், சாட்சியாக இருக்கும் மனைவி பிள்ளைகளுக்கு தார்மீக, ஆன்மீக ரீதியில் போதிப்பதை விசுவாசியாக இல்லாத கணவர் எதிர்க்க மாட்டார்; அத்தகைய போதனை யெகோவாவின் மக்களுடைய கூட்டங்களில் கிடைக்கிறது. யெகோவாவின் அமைப்பிலிருந்து பிள்ளைகள் பயனுள்ள போதனைகளைப் பெறுவதால் அடையும் நன்மைகளை விசுவாசியாக இல்லாத தன் கணவர் புரிந்துகொள்வதற்கு அந்தத் தாய் உதவலாம். ஒழுக்க ரீதியில் சீரழிந்து வரும் இவ்வுலகில் பைபிள் ஒழுக்கநெறிகளை பிள்ளைகளின் மனதில் பதிய வைப்பதால் கிடைக்கும் பலனை அவள் சாதுரியமாக வலியுறுத்தலாம்.
எனினும், தன் மதத்தை பிள்ளைகள் பின்பற்ற வேண்டுமென விசுவாசத்தில் இல்லாத கணவன் வற்புறுத்தலாம்; அதற்காக அவர் தன் வணக்க ஸ்தலங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று, தன் மத போதனையை அவர்களுக்குப் புகட்டலாம். அல்லது அக்கணவர் எல்லா மதங்களையும் அடியோடு வெறுப்பவராக, எந்த மத போதனையையும் தன் பிள்ளைகள் பெறக்கூடாது என உறுதியாக சொல்லலாம். குடும்பத்தின் தலைவராக, தீர்மானம் எடுக்கும் முக்கியப் பொறுப்பு அவருக்கே உள்ளது.a
விசுவாசியாக இருக்கும் மனைவி, ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவளாக தன் கணவனுடைய தலைமை ஸ்தானத்துக்கு மரியாதை காட்டுகையில் பின்வருமாறு சொன்ன அப்போஸ்தலர்களாகிய பேதுரு மற்றும் யோவானின் மனநிலையை மனதில் வைக்க வேண்டும்: “நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக் கூடாதே.” (அப்போஸ்தலர் 4:19, 20) பிள்ளைகளின் ஆவிக்குரிய நலனைக் கருத்தில் கொண்டு, சாட்சியாக இருக்கும் தாய் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவர்களுக்குத் தேவையான ஒழுக்கநெறி சார்ந்த வழிநடத்துதலை கொடுப்பாள். யெகோவாவுக்கு முன்பாக, சத்தியம் என தான் அறிந்திருப்பவற்றை மற்றவர்களுக்குக் கற்பிக்கும் பொறுப்பு அவளுக்கு இருக்கிறது; அப்படி கற்பிப்பதற்கு அவளுடைய பிள்ளைகள் விதிவிலக்கல்ல. (நீதிமொழிகள் 1:8; மத்தேயு 28:19, 20) சாட்சியாக இருக்கும் தாய் இந்தக் கஷ்டமான பிரச்சினையை எப்படி கையாளலாம்?
உதாரணத்துக்கு, கடவுள் நம்பிக்கை என்ற விஷயத்தை எடுத்துக்கொள்வோம். சாட்சியாக இருக்கும் மனைவி தன் கணவனுடைய கட்டுப்பாடுகளால் தன் பிள்ளைகளுக்கு முறைப்படி பைபிள் படிப்பு நடத்த முடியாதிருக்கலாம். அப்படியானால் தன் பிள்ளைகளுக்கு அவள் யெகோவாவைப் பற்றி எதையுமே கற்பிக்காமல் இருக்க வேண்டுமா? வேண்டியதில்லை. அவளுடைய சொல்லும் செயலும் இயல்பாகவே தன் படைப்பாளரின் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தும். இந்த விஷயத்தில் பிள்ளைகளுக்கு கண்டிப்பாக சந்தேகங்கள் வரும். மனைவி தன்னுடைய மத சுதந்திரத்தை பயன்படுத்தி, படைப்பாளரிடம் தனக்குள்ள நம்பிக்கையைப் பற்றி பிள்ளைகளிடமும் மற்றவர்களிடமும் தாராளமாக பேசலாம். பிள்ளைகளோடு பைபிள் படிப்பு நடத்த முடியாதபோதிலும் அல்லது தவறாமல் அவர்களைக் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்ல முடியாமல் போனாலும் யெகோவா தேவனைப் பற்றிய அறிவை அவர்களுக்குப் புகட்டலாம்.—உபாகமம் 6:7.
ஒரு சாட்சிக்கும் விசுவாசியாக இல்லாத அவருடைய துணைக்கும் இடையேயான உறவைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே; இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன.” (1 கொரிந்தியர் 7:14) விசுவாசியாக இருக்கும் துணையின் நிமித்தம் தாம்பத்திய உறவை யெகோவா பரிசுத்தமானதாக கருதுகிறார்; பிள்ளைகளும் யெகோவாவின் பார்வையில் பரிசுத்தமானவர்களாகவே இருக்கிறார்கள். சாட்சியாக இருக்கும் மனைவி, பிள்ளைகள் சத்தியத்தைப் புரிந்துகொள்ள தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்; மற்றதை யெகோவாவின் கைகளில் விட்டுவிட வேண்டும்.
பிள்ளைகள் பெரியவர்களாகையில் தங்கள் பெற்றோரிடமிருந்து பெற்றுக்கொண்டிருக்கிற தகவல்களின் அடிப்படையில் என்ன நிலைநிற்கையை எடுக்க வேண்டுமென தீர்மானித்தாக வேண்டும். “தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல” என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு இசைவாக செயல்பட அவர்கள் தீர்மானிக்கலாம். (மத்தேயு 10:37) “பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள்” என்றும் அவர்களுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டிருக்கிறது. (எபேசியர் 6:1) சாட்சியாக இல்லாத பெற்றோர் தரும் கஷ்டங்களைச் சகிக்க வேண்டியிருந்தாலும் அவருக்கு கீழ்ப்படிவதைவிட ‘தேவனுக்குக் கீழ்ப்படிவதற்கு’ அநேக இளைஞர்கள் தீர்மானித்திருக்கிறார்கள். எதிர்ப்பின் மத்தியிலும் யெகோவாவை சேவிக்க பிள்ளைகள் தீர்மானிப்பதைக் காண்பது, சாட்சியாக இருக்கும் பெற்றோருக்கு எத்தகைய ஆசீர்வாதம்!
[அடிக்குறிப்பு]
a தனக்கு விருப்பமான மதத்தைப் பின்பற்ற மனைவிக்கு இருக்கும் சட்டப்பூர்வ உரிமையில் கிறிஸ்தவ கூட்டங்களில் கலந்துகொள்வதும் அடங்கும். சிலருடைய விஷயங்களில், அத்தகைய சந்தர்ப்பங்களில் வயதுவராத சிறுபிள்ளைகளைக் கவனித்துக்கொள்ள கணவர் விரும்பாதவராக இருந்திருக்கிறார்; எனவே பாசமுள்ள தாய் அவர்களைத் தன்னுடன் கூட்டங்களுக்கு அழைத்து செல்ல கடமைப்பட்டவளாக இருந்திருக்கிறாள்.