யெகோவாவுக்கு முன்பாக நம் நாட்களை எப்படி எண்ணலாம்?
“நேற்று சூரியன் கண்மூடும் வேளைக்குள் பொன்னான இரண்டு மணிநேரம் காணாமற்போய்விட்டது, அவை ஒவ்வொன்றும் அறுபது வைர நிமிடங்கள். கண்டுபிடிப்போருக்கு சன்மானம் ஏதும் வழங்கப்படுவதாக இல்லை, ஏனெனில் அது ஒரேயடியாக தொலைந்து போய்விட்டது!”—லிடியா எச். ஸிகர்னி, அமெரிக்க எழுத்தாளர் (1791-1865).
நம்முடைய ஆயுசு நாட்கள் வெகு சொற்பமாகவும் வேகமாய் கடந்து செல்வதாகவும் தோன்றுகிறது. குறுகிய வாழ்நாளைக் குறித்து ஆழ்ந்து யோசித்த சங்கீதக்காரன் தாவீது இவ்வாறு ஜெபம் செய்யும்படி தூண்டப்பட்டார்: “கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும். இதோ, என் நாட்களை நாலு விரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாதது போலிருக்கிறது.” சொல்லிலும் செயலிலும் கடவுளுக்கு பிரியமாக வாழ வேண்டும் என்பதே தாவீதின் ஆவலாக இருந்தது. “நீரே என் நம்பிக்கை” என்று கூறி தான் கடவுளை சார்ந்திருப்பதை வெளிப்படுத்தினார். (சங்கீதம் 39:4, 5, 7) யெகோவா அந்த ஜெபத்தைக் கேட்டார். அவர் உண்மையில் தாவீதின் செயல்களை அளந்து அதற்கேற்ற பலனையும் அளித்தார்.
அவசரகதியில் பம்பரமாய் சுழலும் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் மும்முரமாய் மூழ்கிவிடுவது எளிது. முக்கியமாக செய்வதற்கும் அனுபவிப்பதற்கும் நிறைய இருக்கிறது, ஆனால் நேரமோ கொஞ்சம்; இது நம்மில் ஆதங்கத்தை ஏற்படுத்தலாம். கடவுளுடைய பிரியத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற தாவீதின் அதே ஆதங்கம்தான் நமக்கும் ஏற்படுகிறதா? யெகோவா நிச்சயமாகவே நம் ஒவ்வொருவரையும் கூர்ந்து கவனித்து ஆராய்கிறார். கடவுளுக்கு பயந்த மனிதனாகிய யோபு சுமார் 3,600 ஆண்டுகளுக்கு முன்பு, யெகோவா தன் வழிகளைப் பார்த்து தன் எல்லா செயல்களையும் ஆராய்ந்ததை ஒத்துக்கொண்டார். “அவர் விசாரிக்கும்போது நான் அவருக்கு என்ன மறு உத்தரவு சொல்லுவேன்” என யோபு கேட்டார். (யோபு 31:4-6, 14) ஆவிக்குரிய காரியங்களுக்கு முதலிடம் கொடுத்து கடவுளுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நம் நேரத்தை ஞானமாக பயன்படுத்துவதன் மூலம் நம் நாட்களை அவருக்கு முன்பாக மதிப்புள்ளவையாக்க முடியும். பின்வரும் விஷயங்களுக்கு மிகுந்த கவனம் செலுத்துவோமாக.
ஆன்மீக காரியங்களுக்கு முதலிடம் கொடுப்போம்
“அதிமுக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்” என ஏவப்பட்டு எழுதப்பட்ட வேத எழுத்துக்கள் சொல்லும்போது, அவை ஆவிக்குரிய காரியங்களை முதலிடத்தில் வைக்கும்படியே நம்மை அறிவுறுத்துகின்றன. இந்த அதிமுக்கியமான காரியங்கள் யாவை? ‘திருத்தமான அறிவும் முழு பகுத்துணர்வுமே’. (பிலிப்பியர் 1:9, 10, NW) யெகோவாவின் நோக்கத்தைப் பற்றிய அறிவைப் பெற நேரத்தை ஞானமாக பயன்படுத்துவது அவசியம். என்றாலும், ஆன்மீக காரியங்களை வாழ்க்கையில் மிக முக்கியமானவையாக வைக்கும்போது அவை நன்மையையும் திருப்தியையும் தரும் வாழ்வை நமக்கு உறுதியளிக்கும்.
“கர்த்தருக்கு ஏற்கத்தகுந்தது இன்னதென்று தொடர்ந்து நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்” என அப்போஸ்தலனாகிய பவுல் நமக்கு நினைப்பூட்டுகிறார். நிச்சயப்படுத்திக் கொள்ளுதல் என்பது நம் இருதயத்தின் எண்ணங்களையும் ஆசைகளையும் சுயபரிசோதனை செய்வதை உட்படுத்த வேண்டும். “யெகோவாவுடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்” என்றும் அப்போஸ்தலன் சொல்கிறார். (எபேசியர் 5:10, 17, NW) அப்படியானால் யெகோவாவுக்குப் பிரியமானது எது? பைபிளின் நீதிமொழி ஒன்று இவ்வாறு பதிலளிக்கிறது: “ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள். நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்.” (நீதிமொழிகள் 4:7, 8) ஒருவர் கடவுளுடைய ஞானத்தைப் பெற்று அதைப் பயன்படுத்துகையில் யெகோவா மகிழ்ச்சியடைகிறார். (நீதிமொழிகள் 23:15) அத்தகைய ஞானத்தின் சிறப்பு என்னவெனில் அதை யாரும் கையாட அல்லது அழிக்க முடியாது. சொல்லப்போனால், அது ‘துன்மார்க்க வழியிலிருந்தும் மாறுபாடு பேசுகிறவர்களிடத்திலிருந்தும்’ காப்பாற்றி பாதுகாக்கிறது.—நீதிமொழிகள் 2:10-15.
அப்படியானால், ஆன்மீக காரியங்களிடமாக அசட்டையான எந்த மனப்பான்மையையும் தவிர்ப்பது எவ்வளவு ஞானமானது! யெகோவா சொல்லும் காரியங்களுக்கு போற்றுதலையும், அவர் பேரில் ஆரோக்கியமான பயத்தையும் வளர்ப்பது அவசியம். (நீதிமொழிகள் 23:17, 18) இத்தகைய மனநிலையை வாழ்க்கையின் எந்த சமயத்திலும் வளர்த்துக்கொள்ளலாம்; ஆனாலும் இளமைப்பருவத்திலேயே இந்த சரியான மனநிலையை வளர்த்துக்கொண்டு பைபிள் நியமங்களின்படி நம் ஆள்தன்மையை வடிவமைப்பது சிறந்தது. “நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை” என கூறுகிறார் ஞானியாகிய அரசன் சாலொமோன்.—பிரசங்கி 12:1
யெகோவா பேரில் போற்றுதலை வளர்ப்பதற்கு மிக நெருக்கமான வழி, ஒவ்வொரு நாளும் தனிப்பட்ட ஜெபத்தில் அவரை அணுகுவதாகும். யெகோவாவை நம்பியிருப்பதன் முக்கியத்துவத்தை தாவீது அறிந்திருந்தார்; அதனால்தான், “கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேட்டு, என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும்; என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்” என அவர் மன்றாடினார். (சங்கீதம் 39:12) கடவுளோடு உள்ள நெருக்கமான உறவு சில சமயங்களில் கண்ணீர் விடும் அளவுக்கு நம் உணர்ச்சிகளை தொடுகிறதா? நம் இருதயத்திலுள்ள அந்தரங்கமான விஷயங்களை எந்தளவுக்கு அதிகமாக யெகோவாவிடம் தெரிவித்து, அவருடைய வார்த்தையை தியானிக்கிறோமோ அந்தளவுக்கு அவரும் நம்மிடத்தில் நெருங்கி வருவார்.—யாக்கோபு 4:8.
கீழ்ப்படிதலை கற்றுக்கொள்ளுங்கள்
கடவுள் மீது சார்ந்திருப்பதன் அவசியத்தை உணர்ந்த மற்றொரு விசுவாசமுள்ள மனிதர் மோசே. தாவீதைப் போல மோசேயும் வாழ்க்கை சஞ்சலம் நிறைந்தது என்பதை உணர்ந்தார். ஆகவேதான், ‘ஞான இருதயமுள்ளவனாகும்படி, தன் நாட்களை எப்படி எண்ணுவது’ என காண்பிக்கும்படி அவர் கடவுளிடம் விண்ணப்பித்தார். (சங்கீதம் 90:10-12) யெகோவாவின் சட்டங்களையும் நியமங்களையும் கற்று, அதற்கேற்ப வாழும்போது மட்டுமே ஞானமுள்ள இருதயத்தை பெற முடியும். மோசே இதை அறிந்திருந்ததால் பிற்பாடு, இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை சுதந்தரிப்பதற்கு முன்பு கடவுளுடைய சட்டங்களையும் நியமங்களையும் அவர்களுக்கு திரும்பத் திரும்ப எடுத்து சொல்வதன் மூலம் அந்த அடிப்படை சத்தியத்தை அவர்கள் மனதில் பதிய வைக்க முயன்றார். இஸ்ரவேலை ஆளுவதற்கு பிற்பாடு யெகோவா தேர்ந்தெடுக்கவிருந்த எந்தவொரு ராஜாவும் நியாயப்பிரமாணத்தின் ஒரு பிரதியை தனக்கென எழுதி வைத்து அதை வாழ்நாள் முழுவதும் வாசிக்க வேண்டியிருந்தது. ஏன்? கடவுளுக்கு பயப்படுதல் இன்னதென்று கற்றுக்கொள்வதற்காக. இது ராஜாவின் கீழ்ப்படிதலுக்கு பரீட்சையாக இருக்கும். அவருடைய இருதயம் சகோதரர் பேரில் மேட்டிமை கொள்ளாமல் பாதுகாக்கும்; அவருடைய ஆட்சிக்காலத்தையும் நீடிக்கச் செய்யும். (உபாகமம் 17:18-20) இதே வாக்குறுதியை தாவீதின் குமாரனாகிய சாலொமோனிடத்தில் யெகோவா மீண்டுமாக எடுத்துரைத்தார்: “உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல, நீயும் என் கட்டளைகளையும் என் நியமங்களையும் கைக்கொண்டு, என் வழிகளில் நடப்பாயாகில், உன் நாட்களையும் நீடித்திருக்கப்பண்ணுவேன்.”—1 இராஜாக்கள் 3:10-14.
கீழ்ப்படிதலை கடவுள் முக்கியமான விஷயமாக கருதுகிறார். யெகோவா எதிர்பார்க்கும் காரியங்களிலும் கற்பனைகளிலும் குறிப்பிட்ட சில அம்சங்களை முக்கியமற்றதுபோல் துச்சமாக நினைத்தால், அதை அவர் கவனிப்பார் என்பது உறுதி. (நீதிமொழிகள் 15:3) இதை அறிவது, யெகோவாவின் கற்பனைகள் அனைத்திற்கும் மதிப்பும் மரியாதையும் காட்ட—அது எப்போதுமே எளிதான காரியமாக இராவிட்டாலும்கூட—தூண்ட வேண்டும். கடவுளுடைய சட்டங்களுக்கும் கற்பனைகளுக்கும் கவனம் செலுத்த முயலுகையில் அதைத் ‘தடைபண்ண’ சாத்தான் தன்னாலான அனைத்தையும் செய்கிறான்.—1 தெசலோனிக்கேயர் 2:18.
வணக்கத்துக்காகவும் கூட்டுறவுக்காகவும் ஒன்றுகூடி வரும்படி சொல்லப்பட்டுள்ள பைபிளின் ஆலோசனைக்கு கீழ்ப்படிவதும் மிக முக்கியம். (உபாகமம் 31:12, 13; எபிரெயர் 10:24, 25) ஆகவே, ‘உண்மையிலேயே பயனுள்ள காரியத்தை செய்வதற்கான மனவுறுதியும் விடாமுயற்சியும் எனக்கு இருக்கிறதா?’ என நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். பண பாதுகாப்பு வேண்டும் என்ற குறியில், கூட்டங்கள் வாயிலாக கிடைக்கும் போதனையையும் கூட்டுறவையும் அசட்டை செய்வோமானால் அது யெகோவாவோடு உள்ள நம் உறவை பலவீனப்படுத்தும். “நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் [யெகோவா] சொல்லியிருக்கிறாரே” என அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார். (எபிரெயர் 13:5) யெகோவாவின் கற்பனைகளுக்கு மனப்பூர்வமாய் கீழ்ப்படிவது, அவர் நம்மை கவனித்துக்கொள்வார் என்ற முழு நம்பிக்கையை காட்டுகிறது.
இயேசு கீழ்ப்படிதலைக் கற்று, நன்மையும் அடைந்தார். ஆகவே நாமும் அதையே செய்யலாம். (எபிரெயர் 5:8) எந்தளவுக்கு கீழ்ப்படிய கற்றுக்கொள்கிறோமோ அந்தளவுக்கு சிறிய விஷயங்களிலும்கூட கீழ்ப்படிவது சுலபமாகிறது. நம் உத்தமத்தன்மை காரணமாக, வெறுப்பூட்டும் விதமாகவும் கடுகடுப்பாகவும் மற்றவர்கள் நடந்துகொள்வதை நாம் சகிக்க வேண்டியிருக்கலாம் என்பது உண்மையே. முக்கியமாக வேலை செய்யுமிடத்தில், பள்ளியில் அல்லது வித்தியாசப்பட்ட மதநம்பிக்கையுடைய குடும்பத்தில் இந்நிலை ஏற்படலாம். இருந்தாலும், இஸ்ரவேலருக்கு சொல்லப்பட்ட விஷயத்திலிருந்து நாம் ஆறுதலடையலாம். அதாவது, அவர்கள் ‘யெகோவாவில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வார்களானால் அவரே அவர்களுக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவராக இருப்பார்.’ (உபாகமம் 30:20) இதே வாக்குறுதிதான் நமக்கும் அளிக்கப்படுகிறது.
நேரத்தை ஞானமாக பயன்படுத்துங்கள்
நேரத்தை ஞானமாக பயன்படுத்துவதும்கூட யெகோவாவுக்கு முன்பாக நம் நாட்களை எண்ணுவதற்கு நமக்கு உதவும். பணத்தை சேமித்து வைப்பதுபோல் நேரத்தை சேமித்து வைக்க முடியாது; அதை செலவழித்தே ஆக வேண்டும் அல்லது வீணாகிவிடும். கடந்துபோகும் ஒவ்வொரு மணிநேரத்தையும் திரும்பப் பெற முடியாது; போனது போனதுதான். நமக்கு எப்போதுமே தலைக்கு மேல் வேலை இருந்துகொண்டுதான் இருக்கும்; ஆனால் நம் வாழ்க்கையின் குறிக்கோள்களை எட்டும் வகையில் அந்நேரத்தை செலவழிக்கிறோமா? ராஜ்ய பிரசங்க வேலையிலும் சீஷராக்கும் வேலையிலும் தவறாமல் பங்குகொள்ள வேண்டுமென்பதே கிறிஸ்தவர்கள் அனைவரின் முக்கியமான குறிக்கோள்.—மத்தேயு 24:14; 28:19, 20.
நேரத்தின் மதிப்பை நன்கு உணர்ந்தால் மட்டுமே நாம் அதை ஞானமாக பயன்படுத்துவோம். ஆகவே, எபேசியர் 5:16 (NW) “வாய்ப்பான காலத்தை வாங்குங்கள்” என அறிவுறுத்துவது பொருத்தமானதே; குறைந்த முக்கியத்துவம் உடைய காரியங்களை விட்டுவிடுவதை இது சுட்டிக்காட்டுகிறது. நேரத்தை வீணடிக்கும் காரியங்களை குறைப்பதை இது அர்த்தப்படுத்துகிறது. டிவி பார்ப்பதிலோ இன்டர்நெட்டை அலசி ஆராய்வதிலோ அதிக நேரத்தை செலவிடுவது, பிரயோஜனமற்ற பத்திரிகைகளை வாசிப்பது அல்லது பொழுதுபோக்குகளில் அதிகமாக ஈடுபடுவது நம்மை களைப்படையச் செய்யலாம். அதிகப்படியான பொருளுடைமைகளை வாங்கி குவிப்பதும்கூட ஞானமுள்ள இருதயத்தை சம்பாதிப்பதற்கான நேரத்தை விழுங்கிவிடும்.
“திட்டவட்டமான இலக்குகள் இன்றி நேரத்தை நல்லமுறையில் பயன்படுத்துவது முடியாத விஷயம்” என நேரத்தை கவனமாக திட்டமிடுவதை ஆதரிப்போர் கூறுகிறார்கள். இலக்குகள் வைப்பது சம்பந்தமாக ஐந்து தராதரங்களை அவர்கள் குறிப்பிடுகிறார்கள்: திட்டவட்டமானது, அளவிடத்தக்கது, எட்டத்தக்கது, எதார்த்தமானது, கால அட்டவணைக்குட்பட்டது.
பயனுள்ள ஓர் இலக்கு பைபிள் வாசிப்பில் முன்னேறுவதாகும். அதற்கு முதற்படி பைபிள் முழுவதையும் வாசிப்பது என்ற இலக்கை திட்டவட்டமானதாக்குவது. அடுத்த படியானது நம் இலக்கை அளவிடத்தக்கதாக்குவது. இவ்வாறு செய்வதன் மூலம் நாம் எந்தளவுக்கு முன்னேறியிருக்கிறோம் என்பதை கண்டுகொள்ளலாம். இலக்குகள் நம் முயற்சியை ஊக்குவித்து முன்னேற்றுவிப்பதாய் இருக்க வேண்டும். அவை எட்டத்தக்கவையாகவும் எதார்த்தமானவையாகவும் இருக்க வேண்டும். நமது ஆற்றல், திறமை, நமக்கு கிடைக்கும் நேரம் ஆகியவற்றை கவனத்தில் கொள்வதும் அவசியம். அந்த இலக்கை எட்டுவதற்கு சிலருக்கு அதிக காலம் எடுக்கலாம். முடிவாக நமது இலக்கு கால அட்டவணைக்குட்பட்டதாய் இருப்பதும் அவசியம். ஒரு காரியத்தை செய்து முடிப்பதற்கு ஒரு தேதியை குறித்துக்கொள்வது அதை செய்து முடிப்பதற்கான தூண்டுதலை முடுக்கி விடலாம்.
யெகோவாவின் சாட்சிகளுடைய உலக தலைமை அலுவலகத்தில் சேவை செய்யும் அனைவரும் அல்லது உலகம் முழுவதிலுமுள்ள அதன் கிளை அலுவலகங்கள் ஒன்றில் சேவை செய்யும் அனைவரும் பெத்தேலில் அவர்களுடைய முதலாம் வருடத்தின் போது முழு பைபிளையும் வாசித்து முடிக்க வேண்டும் என்பது திட்டவட்டமான ஓர் இலக்கு. பயன்தரும் பைபிள் வாசிப்பு தங்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கு பிரயோஜனமாயிருக்கிறதையும், தங்களுக்கு நன்மையுண்டாக போதிக்கிற யெகோவாவுடன் நெருங்கிய உறவை வைத்துக்கொள்வதற்கு பங்களிப்பதையும் அவர்கள் அறிவார்கள். (ஏசாயா 48:17) தவறாமல் பைபிள் வாசிப்பதை நம்முடைய இலக்காகவும் வைக்க முடியுமா?
தகுந்த விதத்தில் நம் நாட்களை எண்ணுவதன் நன்மைகள்
ஆவிக்குரிய காரியங்களுக்கு முதலிடம் கொடுப்பது அபரிமிதமான ஆசீர்வாதங்களை தரும். குறிப்பாக, அது நமக்கு மனநிறைவு தரும் உணர்வையும் வாழ்க்கைக்கு நோக்கத்தையும் அளிக்கிறது. எப்போதும் உள்ளப்பூர்வமாக ஜெபத்தில் யெகோவாவோடு பேசுவது நம்மை அவரிடம் நெருங்கி வரச் செய்கிறது. ஜெபம் செய்வதுதானே நாம் அவரில் சார்ந்திருப்பதை காட்டுகிறது. பைபிளையும் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” அளிக்கிற பைபிள் சார்ந்த பிரசுரங்களையும் தினமும் வாசிப்பது, கடவுள் பேசும்போது நாம் மனப்பூர்வமாக செவிகொடுத்து கேட்பதை காட்டுகிறது. (மத்தேயு 24:45-47, NW) இது ஞானமுள்ள இருதயத்தை பெறுவதற்கும் அதன் மூலம் வாழ்க்கையில் சரியான தீர்மானங்களையும் தெரிவுகளையும் செய்வதற்கும் உதவுகிறது.—சங்கீதம் 1:1-3.
யெகோவாவின் கற்பனைகளுக்கு கீழ்ப்படிவதில் நாம் மகிழ்ச்சி காண்கிறோம்; ஏனெனில் அவ்வாறு கீழ்ப்படிவது பாரமானதல்ல. (1 யோவான் 5:3) யெகோவாவுக்கு முன்பாக ஒவ்வொரு நாளையும் எண்ணும்போது, அவரோடுள்ள நம் உறவை பலப்படுத்துகிறோம். நம் சக கிறிஸ்தவர்களுக்கு மெய்யான ஆவிக்குரிய ஆதாரமாகவும் நாம் ஆகிறோம். இப்படிப்பட்ட செயல்கள் யெகோவா தேவனை மகிழ்விக்கின்றன. (நீதிமொழிகள் 27:11) யெகோவாவின் அங்கீகாரத்தை இப்போதும் எப்போதும் அனுபவிக்கும் சந்தோஷத்தைவிட உயர்வானது எதுவுமேயில்லை!
[பக்கம் 21-ன் படம்]
ஆவிக்குரிய காரியங்களை கிறிஸ்தவர்கள் முக்கியமானவையாக கருதுகிறார்கள்
[பக்கம் 22-ன் படங்கள்]
உங்கள் நேரத்தை ஞானமாக பயன்படுத்துகிறீர்களா?
[பக்கம் 23-ன் படம்]
நாம் ஒவ்வொரு நாளையும் யெகோவா ஏற்கும் விதத்தில் எண்ணும்போது அவரோடுள்ள நம் உறவை பலப்படுத்துகிறோம்