அகதிகள் முகாமில் வாழ்க்கை
“அகதிகள் முகாம்” என்ற வார்த்தைகளைக் கேட்டவுடன் எது உங்களுடைய நினைவுக்கு வருகிறது? எப்போதாவது ஒரு முகாமுக்குப் போயிருக்கிறீர்களா? அது எப்படி இருக்கும்?
இந்தக் கட்டுரை எழுதப்பட்ட சமயத்தில், டான்ஜானியாவின் மேற்குப் பகுதியில் 13 அகதிகள் முகாம்கள் ஸ்தாபிக்கப்பட்டிருந்தன. உள்நாட்டு போர்களால் சுமார் 5,00,000 அகதிகள் ஆப்பிரிக்காவின் பிற நாடுகளிலிருந்து வெளியேற வேண்டியதாயிற்று. ஐக்கிய நாட்டு அகதிகள் தலைமை ஆணையரின் (United Nations High Commissioner of Refugees [UNHCR]) ஒத்துழைப்புடன் டான்ஜானியா அரசாங்கம் இவர்களுக்கு கைகொடுத்து வருகிறது. முகாம் வாழ்க்கை எப்படிப்பட்டது?
முகாமுக்கு வந்துசேருதல்
சில வருடங்களுக்கு முன்னர் தன் குடும்பத்தாருடன் முகாமுக்கு வந்து சேர்ந்தபோது என்ன நடந்தது என்பதை கன்டிடா என்ற டீனேஜ் பெண் சொல்கிறாள்: “அடையாள எண் போடப்பட்ட ரேஷன் கார்டை கொடுத்து, எங்களுடைய குடும்பத்தை நியருகுசு என்ற அகதிகள் முகாமுக்கு அனுப்பினார்கள். அங்கே எங்களுக்கு வீட்டு நம்பரும் தெரு நம்பரும் கொடுத்தார்கள். நாங்களே சொந்தமாக ஒரு சிறிய வீட்டை கட்டிக்கொள்வதற்கு எங்கிருந்து மரம் வெட்டலாம், புல் எடுத்துக்கொள்ளலாம் என்பதை காட்டினார்கள். சேற்றை குழைத்து நாங்களே செங்கல் தயாரித்தோம். எங்களுக்கு பெரிய பிளாஸ்டிக் ஷீட் கொடுத்தார்கள், அதை நாங்கள் கூரையாக போட்டுக் கொண்டோம். வேலை ரொம்ப கஷ்டமாகத்தான் இருந்தது, ஆனால் எங்களுடைய எளிமையான வீடு ரெடியானபோது மகிழ்ச்சி அடைந்தோம்.”
பதினைந்து நாட்களுக்கு ஒரு தடவை புதன்கிழமை அன்று ரேஷன் கார்டை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். “ஆமாம், UNHCR கொடுக்கும் உணவுப் பொருட்களை வாங்குவதற்காக நாங்கள் கேன்டீனுக்குப் போய் வரிசையில் நிற்போம்” என சொல்கிறாள் கன்டிடா.
ஒரு நாளைக்கு என்னென்ன உணவுப் பொருட்கள் ஒரு நபருக்கு கொடுக்கப்படும்?
“ஒவ்வொருவருக்கும் சுமார் 3 கப் மக்காச்சோள மாவும் ஒரு கப் பச்சைப் பட்டாணியும் 20 கிராம் சோயாபீன்ஸ் மாவும் 30 மில்லி சமையல் எண்ணெய்யும் 10 கிராம் உப்பும் கொடுக்கிறார்கள். சிலசமயங்களில் ஒரு கட்டி சோப் தருகிறார்கள், அதைத்தான் நாங்கள் ஒரு மாசத்திற்கு வைத்துக்கொள்ள வேண்டும்.”
அங்கு சுத்தமான நீர் கிடைக்குமா? ரிஸிக்கி என்ற இளம் பெண் கூறுகிறாள்: “ஆமாம், பக்கத்திலுள்ள ஆறுகளிலிருந்து பைப் மூலமாக பெரிய நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு வருகிறார்கள். அங்கிருந்து ஒவ்வொரு முகாமிலுமுள்ள தண்ணீர் பிடிக்கிற இடங்களுக்கு அனுப்புவதற்கு முன்னாடி குளோரின் போட்டு சுத்தப்படுத்தி அனுப்புகிறார்கள். அப்படியிருந்தும், சீக்கு வராமல் இருப்பதற்காக தண்ணீரை நாங்கள் கொதிக்க வைத்துத்தான் குடிக்கிறோம். பைப்பில் தண்ணீர் பிடிக்கிறது, துணிமணிகளை துவைச்சிப் போடறது என காலையிலிருந்து சாயங்காலம் வரை எப்போது பார்த்தாலும் எங்களுக்கு வேலைதான். ஒரு நாளைக்கு ஒன்றரை பக்கெட் தண்ணீர்தான் எங்களுக்கு கிடைக்கும்.”
இந்த மாதிரியான முகாம்களுக்கு நீங்கள் சென்றால், பாலர் பள்ளி, ஆரம்பப் பள்ளி, இடைநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளைப் பார்க்கலாம். முகாமில் முதியோர் கல்வித் திட்டமும்கூட எங்காவது இருக்கலாம். முகாமின் பாதுகாப்புக்காக முகாமுக்கு வெளியே போலீஸ் ஸ்டேஷனும் அரசு அலுவலகமும் இருக்கிறது. பெரிய மார்க்கெட்டையும் நீங்கள் பார்க்கலாம், அங்கே சின்னச்சின்ன கடைகள் இருக்கின்றன; காய்கறிகள், பழங்கள், மீன், கோழி, இன்னும் பிற அத்தியாவசியமான பண்டங்களை அகதிகள் அங்கே வாங்கிக்கொள்ளலாம். உள்ளூரிலுள்ள ஆட்கள் சிலர் வியாபாரத்திற்காக மார்க்கெட்டிற்கு வருகிறார்கள். ஆனால் ஏதாவது வாங்க வேண்டுமானால் அகதிகளுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது? சிலர் சிறிய காய்கறி தோட்டம் போட்டு அதில் விளையும் பொருட்களை மார்க்கெட்டில் விற்கிறார்கள். மற்றவர்களோ தங்களுக்கு கிடைக்கும் மாவு அல்லது பச்சைப் பட்டாணிகளில் கொஞ்சத்தை விற்று, இறைச்சி அல்லது பழங்கள் வாங்கிக்கொள்கிறார்கள். ஆம், அந்த முகாம் ஒரு பெரிய கிராமம் மாதிரி காட்சியளிக்கலாம். சிலர் தங்களுடைய சொந்த ஊரில் செய்வது மாதிரியே மார்க்கெட்டில் சிரித்துப் பேசிக் கொண்டு பொழுது போக்குவதை சகஜமாக பார்க்கலாம்.
ஆஸ்பத்திரிக்கு சென்றால், அங்குள்ள டாக்டர் ஒருவர் அந்த முகாமில் உள்ள சில கிளினிக்குகளில் சின்னச்சின்ன வியாதிகளுக்கு மட்டுமே வைத்தியம் பார்க்கப்படும் என்றும், எமர்ஜென்ஸி கேஸ்களையும் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்ட கேஸ்களையும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வருவார்கள் என்றும் உங்களிடம் தெரிவிக்கலாம். ஆஸ்பத்திரியில் பேறுகால மருத்துவ பிரிவும் பிரசவ வார்டும் முக்கியமானவைதான், ஏனென்றால் 48,000 அகதிகள் இருக்கும் ஒரு முகாமில், ஒரு மாதத்திற்கு சுமார் 250 குழந்தைகள் பிறக்கலாம்.
ஆன்மீக ரீதியில் நன்கு போஷிக்கப்படுதல்
டான்ஜானியாவில் உள்ள முகாம்களில் தங்கியிருக்கும் ஆவிக்குரிய சகோதரர்களைப் பற்றி தெரிந்துகொள்ள உலகெங்கிலும் வாழும் யெகோவாவின் சாட்சிகள் விரும்பலாம். மொத்தமாக, சுமார் 1,200 பேர் அங்கே இருக்கிறார்கள், அவர்கள் 14 சபைகளாகவும் 3 தொகுதிகளாகவும் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஆன்மீக வாழ்க்கை எப்படி இருக்கிறது?
இந்த முகாம்களுக்கு வந்தவுடன் பக்தியுள்ள இந்த கிறிஸ்தவர்கள் செய்த முதல் காரியம் ராஜ்ய மன்றம் கட்டுவதற்கு ஓர் இடத்தை கேட்டதே. சாட்சிகளை எங்கே கண்டுபிடிப்பது, வாராந்தர கூட்டங்களுக்கு எங்கே செல்வது என்பதை அகதிகள் அறிந்துகொள்ள இது உதவும். லூகூஃபூ முகாமில் 7 சபைகள் இருக்கின்றன, அங்கே மொத்தம் 659 கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். பொதுவாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கூட்டங்களுக்கு இந்த 7 சபைகளிலும் மொத்தம் சுமார் 1,700 பேர் வருகிறார்கள்.
எல்லா முகாம்களிலும் உள்ள யெகோவாவின் சாட்சிகள் பெரிய கிறிஸ்தவ மாநாடுகளிலிருந்தும் அசெம்பிளிகளிலிருந்தும் நன்மை அடைகிறார்கள். லூகூஃபூ முகாமில் நடந்த முதல் மாவட்ட மாநாட்டிற்கு 2,363 பேர் வந்திருந்தார்கள். முழுக்காட்டுதல் கொடுப்பதற்காக மாநாடு நடைபெறும் இடத்திற்கு வெளியே ஒரு குளத்தை அவர்கள் அமைத்திருந்தார்கள். நிலத்தில் மண்ணைத் தோண்டி ஏற்படுத்தப்பட்ட குழியே அந்த குளம்; அதில் தண்ணீர் நிற்பதற்காக பிளாஸ்டிக் ஷீட் போட்டிருந்தார்கள். சகோதரர்கள் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஆற்றுக்குப் போய் சைக்கிளில் தண்ணீர் கொண்டு வந்து அதிலே நிரப்பினார்கள். ஒவ்வொரு தடவையும் 20 லிட்டர் தண்ணீர் மட்டுமே கொண்டுவர முடிந்ததால், அவர்கள் பல தடவை போய்வர வேண்டியிருந்தது. முழுக்காட்டுதல் பெறுபவர்கள் அடக்கமான உடையணிந்து வரிசையாக நின்றார்கள். மொத்தம் 56 பேர் முழுக்காட்டுதல் பெற்றார்கள். மாநாட்டில் ஒரு முழுநேர ஊழியரிடம் பேட்டி கண்டபோது அவர் 40 பேருக்கு பைபிள் படிப்புகளை நடத்தியதாக சொன்னார். அவர்களில் நான்கு பேர் அந்த மாநாட்டில் முழுக்காட்டுதல் பெற்றார்கள்.
அந்த முகாம்களை தவறாமல் சென்று சந்திப்பதற்கு யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகம் பிரயாண கண்காணிகளை ஏற்பாடு செய்திருக்கிறது. அந்தப் பிரயாண கண்காணிகளில் ஒருவர் இவ்வாறு சொல்கிறார்: “நம் சகோதரர்கள் ஊழியத்தில் ரொம்ப ஆர்வமாக ஈடுபடுகிறார்கள். பிரசங்கிக்க அவர்களுக்கு ஒரு பெரிய பிராந்தியமே இருக்கிறது; அங்குள்ள ஒரு சபையில் ஒவ்வொரு பிரஸ்தாபியும் சுமார் 34 மணிநேரம் ஊழியத்தில் செலவிடுகிறார். அநேகர் அக்கறை காட்டுவோரிடம் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பைபிள் படிப்புகளை நடத்துகிறார்கள். இதுபோன்ற ஒரு நல்ல பிராந்தியம் தனக்கு எங்கேயும் கிடைக்காது என ஒரு பயனியர் [முழுநேர ஊழியர்] சொன்னார். முகாமிலுள்ள ஜனங்கள் நம்முடைய பிரசுரங்களை ரொம்ப விரும்பி படிக்கிறார்கள்.”
பைபிள் பிரசுரங்கள் முகாம்களுக்கு எப்படி போய் சேருகின்றன? தங்கனிகா ஏரியின் கிழக்கு கரையில் அமைந்துள்ள கிகோமா டவுனுக்கு கிளை அலுவலகம் பிரசுரங்களை ரயிலில் அனுப்பி வைக்கிறது. அங்குள்ள சகோதரர்கள் அவற்றை பெற்று சபைகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறார்கள். சில சமயங்களில் அவர்கள் ஒரு டிரக்கை வாடகைக்கு அமர்த்தி, அதன் மூலம் எல்லா முகாம்களுக்கும் பிரசுரங்களைக் கொண்டு சேர்க்கிறார்கள். கரடு முரடான ரோடுகளில் வந்து இவற்றை கொண்டு சேர்ப்பதற்குள் சுமார் மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆகிவிடுகின்றன.
பொருளாதார உதவி
முக்கியமாக பிரான்சு, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் இந்த முகாம்களிலுள்ள அகதிகளுக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கிறார்கள். சிலர் உள்துறை அமைச்சகம் மற்றும் ஐ.நா. அகதிகள் தலைமை ஆணையரின் ஒப்புதலுடன் டான்ஜானியாவிலுள்ள முகாம்களை சந்தித்திருக்கிறார்கள். ஐரோப்பாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகள், சோயா பாலையும், துணிமணிகளையும், ஷூக்களையும், பள்ளிப் பாடப் புத்தகங்களையும், சோப்புகளையும் நிறைய சேகரித்தார்கள். “நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மை செய்யக்கடவோம்” என்ற பைபிள் நியமத்தைப் பின்பற்றி அகதிகள் அனைவருக்கும் அவற்றை நன்கொடையாக வழங்கினார்கள்.—கலாத்தியர் 6:10.
இந்த மனிதாபிமான முயற்சிகள் மூலமாக அநேக அகதிகளுக்கு உதவி அளிக்கப்பட்டிருப்பதால் நல்ல பலன்கள் கிடைத்திருக்கின்றன. அந்த உதவிக்காக ஒரு முகாமிலுள்ள அகதிகள் சமூக குழு இவ்வாறு நன்றி தெரிவித்தது: “உங்களுடைய அமைப்பு மூன்று முறை செய்திருக்கிற மனிதாபிமான செயலுக்கு எங்கள் அனைவரின் சார்பாகவும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். . . . ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், கைக்குழந்தைகள் என 12,654 பேருக்கு துணிமணிகளை கொடுத்திருக்கிறோம். . . . மூயோவோஸி அகதிகள் முகாமில் தற்போது 37,000 பேர் இருக்கிறார்கள். மொத்தத்தில் 12,654 பேருக்கு அல்லது 34.2 சதவீதத்தினருக்கு உதவி கிடைத்திருக்கிறது.”
மற்றொரு முகாமிலுள்ள 12,382 அகதிகளுக்கு மூன்று ஆடைகள் வீதம் கொடுக்கப்பட்டது; இன்னொரு முகாம் நடுநிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளி மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்களுக்கு தேவைப்படும் ஆயிரக்கணக்கான பாடப் புத்தகங்களைப் பெற்றுக்கொண்டது. ஒரு பகுதியில் உள்ள UNHCR கணிப்பியல் அலுவலர் இவ்வாறு சொன்னார்: “அகதிகள் முகாம்களில் இருப்பவர்களுடைய ஏராளமான தேவைகளை இந்த நன்கொடை திருப்திப்படுத்தியது, இதற்கு நாங்கள் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம். இப்போது சமீபத்தில் 5 பெட்டி பாடப் புத்தகங்களை பெற்றிருக்கிறோம்; அவற்றை முகாமில் உள்ளவர்களுக்கு எங்கள் சமூக சேவைக் குழு பகிர்ந்தளித்திருக்கிறது. . . . உங்களுக்கு மிக்க நன்றி.”
கைகொடுத்து உதவியதைப் பற்றி உள்ளூர் செய்தித்தாள்களும்கூட குறிப்பிட்டன. “டான்ஜானியாவிலுள்ள அகதிகளுக்கு ஆடைகள் வந்து கொண்டிருக்கின்றன” என மே 20, 2001 ஸண்டே நியூஸ் செய்தித்தாளின் தலையங்கம் குறிப்பிட்டது. “இந்த நன்கொடைக்கு அகதிகள் மிகுந்த போற்றுதல் காட்டுகிறார்கள்; ஏனெனில் போடுவதற்கு உடை இல்லாததால் பள்ளிக்கூடம் போவதை நிறுத்திவிட்ட சில பிள்ளைகள் இப்போது ஒழுங்காக போகிறார்கள்” என அந்த செய்தித்தாளின் பிப்ரவரி 10, 2002 பதிப்பு குறிப்பிட்டது.
கஷ்டப்பட்டாலும் கைவிடப்படவில்லை
பெரும்பாலான அகதிகளுக்கு முகாம் வாழ்க்கையைப் பழகிக்கொள்வதற்கு சுமார் ஒரு வருடம் பிடிக்கிறது. அவர்கள் எளிமையான வாழ்க்கை நடத்துகிறார்கள். கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளிலுள்ள ஆறுதலளிக்கும் நற்செய்தியை பிற அகதிகளுக்குச் சொல்ல இந்த முகாம்களிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் நிறைய நேரத்தை செலவிடுகிறார்கள். அவர்கள் ஓர் புதிய உலகைப் பற்றி சொல்கிறார்கள்; அங்கே அனைவரும் “தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.” அப்போது அனைவருமே ‘தங்கள் தங்கள் திராட்சச் செடியின் நிழலிலும், அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவார்கள். சேனைகளுடைய யெகோவாவின் வாய் இதைச் சொல்லிற்று.’ கடவுளுடைய ஆசீர்வாதத்தால் அகதிகள் முகாம்களே இல்லாத ஒரு பூமியாக இப்பூமி மாறும் என்பது உறுதி.—மீகா 4:3, 4; சங்கீதம் 46:9.
[பக்கம் 8-ன் படம்]
டூடா முகாமிலுள்ள வீடுகள்
[பக்கம் 10-ன் படங்கள்]
லுக்கோல் ராஜ்ய மன்றம் (வலது) லூகூஃபூவில் முழுக்காட்டுதல் (கீழே)
[பக்கம் 10-ன் படம்]
லூகூஃபூ முகாமில் மாவட்ட மாநாடு