அன்புள்ள தயவு எவ்வளவு முக்கியம்?
“மனிதனிடம் உள்ள விரும்பத்தக்க குணம் அவனுடைய அன்புள்ள தயவே” என்பதாக பைபிள் விளக்குகிறது. (நீதிமொழிகள் 19:22, NW) அன்பின் தூண்டுதலால் செய்யப்படும் தயவான செயல்கள் உண்மையில் விரும்பத்தக்கவையே. என்றாலும், “அன்புள்ள தயவு” என்ற பதத்தை பைபிள் பயன்படுத்தும்போது, ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டுள்ள உறவுகளின் அடிப்படையில் காட்டப்படும் தயவை குறிக்கிறது; உதாரணத்திற்கு, ஒருவர் முன்பு தயவு காட்டியதால் ஏற்பட்ட உறவின் அடிப்படையில் காட்டப்படும் தயவை அர்த்தப்படுத்தலாம். அதனால் இது உண்மைப்பற்றுறுதி என்ற கருத்தையும் கொடுக்கிறது.
விரும்பத்தக்க இந்த குணத்தை யூதாவின் ராஜாவாகிய யோவாஸ் வளர்க்க தவறினார். அவர் தன்னுடைய அத்தைக்கும், மாமாவான யோய்தாவுக்கும் நன்றிக்கடன்பட்டிருந்தார். யோவாஸ் ஒரு வயதிற்கும் குறைவாக இருந்தபோது அவருடைய பொல்லாத பாட்டி தன்னை ராணியாக்கிக் கொண்டு, சிம்மாசனத்தில் அமருவதற்கு வாரிசாக விளங்கிய யோவாஸின் சகோதரர்களை கொன்றாள். ஆனால் அவருடைய மாமாவும் அத்தையும் யோவாஸை பத்திரமாக மறைத்து வைத்ததால் அவளால் அவரை கொலை செய்ய முடியவில்லை. அவர்கள் கடவுளுடைய சட்டங்களையும் அவருக்கு போதித்தார்கள். யோவாஸுக்கு ஏழு வயதானபோது அவருடைய மாமா யோய்தா, பிரதான ஆசாரியராக தனக்கிருந்த அதிகாரத்தை பயன்படுத்தி கெட்ட அரசியை கொன்று, யோவாஸை ராஜாவாக்கினார்.—2 நாளாகமம் 22:10–23:15.
இளம் யோவாஸ் தன்னுடைய மாமாவின் மரணம் வரை நல்ல முறையில் ஆட்சி செய்தார்; ஆனால் அதன் பிறகு விக்கிரக வழிபாட்டிற்குத் திரும்பிவிட்டார். யோவாஸின் விசுவாச துரோகச் செயலை பற்றி எச்சரிக்க யோய்தாவின் குமாரனாகிய சகரியாவை கடவுள் அவரிடம் அனுப்பினார். சகரியாவை கல்லெறிந்து கொல்ல யோவாஸ் ஏற்பாடு செய்தார். எந்த குடும்பத்திற்கு அதிக கடன்பட்டிருந்தாரோ அந்த குடும்பத்திற்கு எதிராகவே அவர் இரண்டகம் செய்தது எப்பேர்ப்பட்ட அதிர்ச்சியாக இருந்தது!—2 நாளாகமம் 24:17-21.
“[சகரியாவின்] தகப்பனாகிய யோய்தா தனக்குச் செய்த தயையை [“அன்புள்ள தயவை,” NW] ராஜாவாகிய யோவாஸ் நினையாமல் அவனுடைய குமாரனைக் கொன்று போட்டான்” என பைபிள் சொல்லுகிறது. சகரியா சாகும் தறுவாயில், ‘ஆண்டவர் இதைக் கண்டு பழிவாங்குவாராக’ என்று சொன்னார். சகரியாவின் வார்த்தைகள் உண்மையாயின; யோவாஸ் மிகவும் நோய்வாய்ப்பட்டார், அவருடைய வேலைக்காரர்களாலேயே கொலையும் செய்யப்பட்டார்.—2 நாளாகமம் 24:17-25; பொது மொழிபெயர்ப்பு.
யோவாஸ் ராஜாவைப் போல இல்லாமல் பின்வரும் இந்த ஆலோசனையை பின்பற்றும் அனைவரும் அருமையான எதிர்காலத்தை பெறுவார்கள்: “கிருபையும் [“அன்புள்ள தயவும்,” NW] சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; . . . அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் தயை . . . பெறுவாய்.”—நீதிமொழிகள் 3:3, 4.