சாதாரண மக்களிடம் யெகோவா அக்கறை காட்டுகிறார்
நாம் தனிச்சிறப்பு வாய்ந்தவர்களாக அல்லது அதீத திறமை உள்ளவர்களாக இருந்தால்தான் கடவுள் நம்மை கண்டுகொள்வாரா? ஐக்கிய மாகாணங்களின் 16-வது குடியரசுத் தலைவரான ஆபிரகாம் லிங்கன் இவ்வாறு சொன்னதாக கூறப்படுகிறது: “சாமானிய மக்களை கடவுள் விரும்புகிறார். அதனால்தான் அநேக சாமானிய மக்களை படைக்கிறார்.” தாங்கள் வெறும் சாதாரண மக்கள் எனவும் விசேஷ பண்புகள் எதுவும் தங்களிடம் இல்லை எனவும் பெரும்பாலோர் நினைக்கின்றனர். சாதாரண மக்கள், ஏழையாகவும் மற்றவர்களைவிட தாழ்ந்த நிலையிலும் இருப்பவர்களைக் குறிக்கலாம். அதேவிதமாக சாமானியம் என்ற வார்த்தையும், விசேஷ சலுகையோ உயர்ந்த அந்தஸ்தோ இல்லாத, சாதாரண நிலைக்கும் கீழே உள்ள இரண்டாந்தர நிலையை சுட்டிக்காட்டுகிறது. எப்படிப்பட்டவர்கள் மத்தியில் இருக்க நீங்கள் விரும்புகிறீர்கள்? ஆணவமும் பெருமையும் வீம்பும் பிடித்தவர்கள் மத்தியிலா? அல்லது, மற்றவர்கள் மீது உண்மையிலேயே அன்பை காட்டும் சிநேகபான்மையான, மனத்தாழ்மையான, பணிவடக்கமுள்ள மக்கள் மத்தியிலா? இரண்டாவதாக குறிப்பிடப்பட்ட மக்கள் மத்தியில் இருக்கவே நீங்கள் விரும்புவீர்கள் இல்லையா?
உணர்ச்சிரீதியில் துஷ்பிரயோகம் செய்வதும், கேலி செய்வதும் சர்வசாதாரணமாக இருக்கும் இன்றைய உலகில், கடவுள் தங்கள் மீது தனிப்பட்ட அக்கறை காட்டுகிறார் என்பதை நம்புவது சிலருக்கு கடினமாக இருக்கிறது. “அன்பென்றால் என்ன விலை என்று கேட்கும் குடும்பத்தில் நான் வளர்ந்தேன். என்னை மட்டம் தட்டினார்கள், கேலி செய்தார்கள், என்னைப் பார்த்து ஏளனமாக சிரித்தார்கள். ஆகையால் சிறுவயதிலேயே நான் எதற்கும் லாயக்கில்லாதவன் போல் உணர்ந்தேன்” என்பதாக இந்தப் பத்திரிகையின் வாசகர் ஒருவர் எழுதினார். “கடந்த காலத்தில் பட்ட காயங்கள் இன்னும் ஆறாததால் இப்போது கஷ்டநஷ்டங்களை அனுபவிக்கையில் துவண்டுபோய் விடுகிறேன்” என்றும் எழுதினார். இருந்தபோதிலும், சாதாரண மக்கள் ஒவ்வொருவர் மீதும் கடவுள் அக்கறையுடன் இருக்கிறார் என்பதை நம்புவதற்கு காரணங்கள் உள்ளன.
சாதாரண மக்கள் மீது கடவுளின் அக்கறை
“யெகோவா மகத்தானவர், மிகவும் புகழப்படத்தக்கவர்; அவருடைய மகத்துவம் ஆராய்ச்சிக்கெட்டாதது” என தாவீது ராஜா எழுதினார். (சங்கீதம் 145:3, திருத்திய மொழிபெயர்ப்பு) இருந்தபோதிலும் யெகோவாவின் மகத்துவம், நம்மீது அன்புடனும் இரக்கத்துடனும் அவர் அக்கறை காட்டுவதற்கு தடையாக இருப்பதில்லை. (1 பேதுரு 5:7, NW) உதாரணமாக, சங்கீதக்காரன் இவ்வாறு சொன்னார்: ‘நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு யெகோவா சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.’—சங்கீதம் 34:18.
உலக மக்களை கவரும் உடல் அழகு, கௌரவம், செல்வம் போன்றவற்றை கடவுள் முக்கியமானவையாக கருதுவதில்லை. இஸ்ரவேலருக்கு கடவுள் கொடுத்த சட்டம், ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் விதவைகளுக்கும் பரதேசிகளுக்கும் அவர் இரக்கத்தோடு அக்கறை காண்பித்ததை காட்டியது. எகிப்தில் கொடூரமாக நடத்தப்பட்ட இஸ்ரவேலரிடம் கடவுள் இவ்வாறு கூறினார்: “அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; . . . விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக; அவர்களை எவ்வளவாகிலும் ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாய்க் கேட்”பேன். (யாத்திராகமம் 22:21-24) எளியவர்கள் மீது யெகோவா அக்கறை காட்டுகிறார் என்பதில் ஏசாயா தீர்க்கதரிசி தன்னுடைய நம்பிக்கையை தெரியப்படுத்தினார்: “கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெரு வெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்.”—ஏசாயா 25:4.
கடவுளுடைய “இயல்பின் அச்சுப் பதிவாக” இருக்கும் இயேசு கிறிஸ்து, தம்முடைய ஊழிய காலம் முழுவதும் சாதாரண மக்களிடம் உண்மையான அக்கறையை காட்டியதன் மூலம் தம் சீஷர்களுக்கு மாதிரியை வைத்தார். (எபிரெயர் 1:3, பொது மொழிபெயர்ப்பு) திரளான ஜனங்களைக் கண்டபொழுது, “அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால்” இயேசு “அவர்கள்மேல் மனதுருகி”னார்.—மத்தேயு 9:36.
இயேசு எந்த வகையான நபர்களை தம்முடைய அப்போஸ்தலர்களாக தேர்ந்தெடுத்தார் என்பதையும் கவனியுங்கள்; அவர்கள் ‘கல்வியறியாத சாமானிய மனிதரென்று’ அறியப்பட்டார்கள். (அப்போஸ்தலர் 4:13, தி.மொ.) இயேசுவின் மரணத்திற்கு பிறகு, கடவுளுடைய வார்த்தையை கேட்க அவருடைய சீஷர்கள் எல்லா வகை மக்களையும் அழைக்க ஆரம்பித்தனர். “அவிசுவாசியோ சாமானியமானவனோ” கிறிஸ்தவ சபைக்குள் வந்து விசுவாசியாக மாறலாம் என்பதாக அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 14:24, 25, தி.மொ.) உலக தராதரங்களின்படி உயர்ந்த அந்தஸ்துள்ளவர்களை மட்டுமே தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக அநேக பாமர மக்களையே தம்முடைய சேவைக்காக கடவுள் தேர்ந்தெடுத்தார். “சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்” என்பதாக அப்போஸ்தலன் பவுல் கூறினார்; மேலும், “மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்து கொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்து கொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்து கொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமை பாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்” என்றார்.—1 கொரிந்தியர் 1:26-29.
அதேவிதமாகவே, இன்றும்கூட கடவுள் நம்மீதும் உண்மையான அக்கறையை காட்டுகிறார். “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்” அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். (1 தீமோத்தேயு 2:4) நமக்காக மரிக்கும்படி கடவுள் தம்முடைய குமாரனையே இந்த பூமிக்கு அனுப்பினார்; அந்த அளவுக்கு நம்மீது அன்பு காட்டினார். எனவே நம்மீது அன்பு காட்ட யாரும் இல்லை என்றோ, நாம் எதற்கும் லாயக்கில்லாதவர்கள் என்றோ உணர வேண்டியதில்லை. (யோவான் 3:16) ஆவிக்குரிய சகோதரர்களில் மிகச் சிறியவர்களைக்கூட, இயேசுவை நடத்தும் விதமாகவே நாம் நடத்த வேண்டியது முக்கியம் என்பதை அவரே காட்டினார். “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்” என்பதாக இயேசு கூறினார். (மத்தேயு 25:40) இந்த உலகம் நம்மை எப்படி கருதினாலும் சரி, சத்தியத்தை நேசித்தால் கடவுளுடைய கண்களில் நாம் விசேஷித்தவர்களாக இருப்போம்.
பிரேசிலில், தகப்பனை இழந்த பிரான்ஸிஸ்கூa என்ற சிறுவன் கடவுளோடு ஒரு நல்ல உறவை வளர்த்துக்கொண்ட பிறகு அப்படித்தான் உணர்ந்தான். “யெகோவாவையும் அவருடைய அமைப்பையும் பற்றி அறிந்து கொண்டது, பாதுகாப்பற்ற உணர்வையும் கூச்ச சுபாவத்தையும் சமாளிக்க உதவியது. நம் ஒவ்வொருவரிடமும் யெகோவா அக்கறை காட்டுகிறார் என்பதையும் கற்றுக்கொண்டேன்” என்று விளக்கினான். பிரான்ஸிஸ்கூவிற்கு யெகோவா உண்மையான தகப்பனானார்.
இளைஞர்கள் மீதான அக்கறை
ஒரு தொகுதியாக மட்டுமல்ல தனிப்பட்ட விதமாகவும் இளைஞர்களிடம் யெகோவா உள்ளப்பூர்வ அக்கறை காட்டுகிறார். இளைஞர்களாக இருந்தாலும் சரி முதியவர்களாக இருந்தாலும் சரி, நாம் ஒருபோதும் தலைக்கனம் பிடித்தவர்களாக இருக்க விரும்புவதில்லை என்பது உண்மைதான். இருந்தபோதிலும் நமக்குள் இருக்கும் சில திறமைகளையும் பண்புகளையும் எதிர்காலத்தில் கடவுள் பயன்படுத்தலாம். நம்முள் புதைந்திருக்கும் திறமைகளை முழுவதுமாக வெளிக்கொணர என்னென்ன விதங்களில் நம்மை பக்குவப்படுத்தி பயிற்றுவிக்க வேண்டும் என்பது யெகோவாவுக்குத் தெரியும். உதாரணமாக, 1 சாமுவேல் 16-ம் அதிகாரத்தில் உள்ள பதிவை கவனியுங்கள். ஈசாயின் இளைய மகனாகிய தாவீதை இஸ்ரவேலின் வருங்கால ராஜாவாக யெகோவா தேர்ந்தெடுத்தார். ஆனால் இஸ்ரவேலின் ராஜாவாவதற்கான தகுதிகள் தாவீதைவிட மற்றவர்களுக்கு அதிகம் இருப்பதாக சாமுவேல் தீர்க்கதரிசி நினைத்தார். ஆகவே தாவீதை தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை யெகோவா விளக்கினார்; “நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்க வேண்டாம்; நான் இவனைப் [தாவீதின் அண்ணனை] புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.”—1 சாமுவேல் 16:7.
இன்றும் யெகோவா தங்கள் மீது உண்மையிலேயே அக்கறை காட்டுகிறார் என்று இளைஞர்கள் நம்பிக்கையுடன் இருக்க முடியுமா? பிரேசிலைச் சேர்ந்த இளம் பெண் ஆனாவின் உதாரணத்தை கவனியுங்கள். அநேக இளைஞர்களைப் போலவே ஆனாவும், ஊழலையும் அநீதியையும் கண்டு கலக்கமடைந்தாள். பிற்பாடு, ஆனாவின் அப்பா அவளையும் அவளுடைய தங்கைகளையும் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு கூட்டிச் செல்ல ஆரம்பித்தார். அதன் பிறகு கடவுளுடைய வார்த்தையை பற்றி கற்றுக்கொண்ட விஷயங்களை ஆனா அனுபவித்து மகிழ ஆரம்பித்தாள். பைபிளையும் கிறிஸ்தவ பிரசுரங்களையும் படிக்க ஆரம்பித்தாள்; யெகோவாவிடம் ஜெபிக்கவும் ஆரம்பித்தாள். படிப்படியாக, கடவுளுடன் மிக நெருங்கிய உறவை வளர்த்துக் கொண்டாள். “என் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள மலைக்கு சைக்கிளில் போய், சூரிய அஸ்தமனமாகும் அழகை பார்த்து ரசிக்க எனக்கு ரொம்ப பிடிக்கும். அங்கே நான் யெகோவாவிடம் ஜெபம் செய்வேன், அவருடைய இரக்கத்திற்கும் தாராள குணத்திற்கும் நன்றி சொல்வேன். நான் எந்த அளவிற்கு அவரை நேசிக்கிறேன் என்பதையும் தெரிவிப்பேன். யெகோவாவையும் அவருடைய நோக்கங்களையும் பற்றி அறிந்து கொண்ட பிறகுதான் எனக்கு மன அமைதியும் பாதுகாப்புணர்வும் கிடைத்திருக்கிறது” என்பதாக அவள் கூறினாள். நீங்களும்கூட யெகோவாவின் அன்பான கரிசனையைப் பற்றி தியானிக்க நேரம் எடுத்துக்கொள்ள முயற்சி செய்கிறீர்களா?
நம்முடைய பின்னணி, யெகோவாவுடன் நெருங்கிய உறவை அனுபவித்து மகிழ்வதை கடினமாக்கலாம் என்பது மறுக்க முடியாத உண்மை. உதாரணத்திற்கு லிடியாவை எடுத்துக் கொள்ளுங்கள். அவள் தன் மனதை வாட்டி வதைத்த விஷயத்தைப் பற்றி தன்னுடைய அப்பாவிடம் பேசியபோது “என்ன முட்டாள்தனம்” என்று அவர் வெடுக்கென்று சொல்லி அவள் வாயை அடைத்தார். அந்த பிரச்சினையை அவள் மறக்க வேண்டும் என்றே அவளுடைய அப்பா நினைக்கிறார் என்பது புரிந்தாலும், லிடியா இவ்விதமாக கூறினாள்: “பைபிளை படித்ததால்தான், நான் ஆசைப்பட்டதெல்லாமே, ஏன் அதற்கும் அதிகமாகவே எனக்கு கிடைத்தது. காந்தம் போன்று கவர்ந்திழுக்கும் யெகோவாவின் குணாதிசயங்களே அவரை என்னுடைய மிகச் சிறந்த நண்பராக்கியது. என்னுடைய உணர்ச்சிகளையும் அந்தரங்க பயங்களையும் மனம் திறந்து கொட்ட நன்கு புரிந்துகொள்ளும் அன்பான அப்பா எனக்கு இப்போது கிடைத்திருக்கிறார். இந்த உலகத்திலே மிகவும் முக்கியமான நபரான அவரிடம் மணிக்கணக்காக என்னால் பேச முடியும், அவர் நான் பேசுவதைக் கேட்கிறார் என்ற நிச்சயத்துடனும் இருக்க முடியும்.” பிலிப்பியர் 4:6, 7 போன்ற வசனங்கள் யெகோவாவின் அன்பான கரிசனையை உணர அவளுக்கு உதவின. அவை இவ்விதமாக சொல்கின்றன: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.”
உங்கள் தேவைகளை கவனிக்க உதவி
யெகோவா தம்முடைய ஊழியர்கள் மீது தனிப்பட்ட விதமாகவும் உலகளாவிய சபையாகவும் அக்கறை காட்டுகிறார். நம்முடைய பரலோக தகப்பனிடம் பேசுவதற்கு நேரத்தை ஒதுக்குவதன் மூலம் நாமும் அவர்மீது நம்முடைய அன்பை காட்டலாம். அவரோடுள்ள நம் உறவை ஒருபோதும் லேசாக எடுத்துக்கொள்ளக் கூடாது. யெகோவாவிடம் தனக்கிருந்த உறவை தாவீது எப்போதும் மனதில் வைத்திருந்தார். அவர் இவ்விதமாக சொன்னார்: “கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள் முழுதும் காத்திருக்கிறேன்.”—சங்கீதம் 25:4, 5.
கடவுளுடன் ஒரு நெருங்கிய உறவை வளர்த்துக் கொள்ள முடியும் என்ற விஷயம் உங்களுக்கு புதிதாக இருக்கலாம். நீங்கள் எந்தப் பிரச்சினையை எதிர்ப்பட்டாலும் சரி, உன்னத கடவுள் தம்முடைய சித்தத்திற்கு இசைவாக உங்களுக்கு உதவ முடியும் என்று நீங்கள் எப்போதும் நம்பலாம். (1 யோவான் 5:14, 15) ஆகையால், உங்கள் சூழ்நிலைகளையும் தேவைகளையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு, திட்டவட்டமாக குறிப்பிட்டு ஜெபம் செய்ய பழகிக் கொள்ளுங்கள்.
நம்முடைய தேவைகளை உணர்ந்து கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை ஆலய பிரதிஷ்டை சமயத்தில் சாலொமோன் ராஜா செய்த ஜெபம் சிறப்பித்துக் காட்டுகிறது: “தேசத்திலே பஞ்சம் உண்டாகிறபோதும், கொள்ளைநோய் உண்டாகிறபோதும், வறட்சி, சாவி, வெட்டுக்கிளி, பச்சைக்கிளி உண்டாகிறபோதும், அவர்களுடைய சத்துருக்கள் அவர்கள் வாசஞ்செய்கிற தேசத்திலே அவர்களை முற்றிக்கை போடுகிறபோதும், யாதொரு வாதையாகிலும் யாதொரு வியாதியாகிலும் வந்திருக்கிறபோதும், எந்த மனுஷனானாலும், இஸ்ரவேலாகிய உம்முடைய ஜனத்தில் எவனானாலும், தன் தன் வாதையையும் வியாகுலத்தையும் உணர்ந்து, [“தெரிந்திருப்பதால்,” NW] . . . செய்யும் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டுதலையும் . . . பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து, . . . அவனவனுடைய எல்லா வழிகளுக்கும் தக்கதாய்ச் செய்து பலன் அளிப்பீராக.” (2 நாளாகமம் 6:28-31) உண்மையில், உங்களுக்கு மட்டும்தான் ‘உங்களுடைய வாதையும் உங்களுடைய வியாகுலமும் தெரியும்.’ ஆகவே, உங்களுடைய உண்மையான தேவைகளையும் விருப்பங்களையும் ஒப்புக்கொண்டு யெகோவாவிடம் தெரிவிப்பது எவ்வளவு முக்கியம். அப்படி செய்தால், யெகோவா உங்கள் ‘உள்ளத்து விருப்பங்களை நிறைவேற்றுவார்.’—சங்கீதம் 37:4, பொ.மொ.
யெகோவாவோடு உள்ள உங்கள் உறவைப் பலப்படுத்துங்கள்
தம்முடன் நெருங்கிய உறவை அனுபவிக்க சாதாரண மக்களுக்கு வாய்ப்பு தருவதில் யெகோவா சந்தோஷப்படுகிறார். “நான் . . . உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்” என்று அவருடைய வார்த்தை உறுதியளிக்கிறது. (2 கொரிந்தியர் 6:18) உண்மையில் யெகோவாவும் அவருடைய குமாரனும் நாம் வெற்றி பெற்று நித்திய ஜீவனைப் பெற வேண்டும் என்றே விரும்புகின்றனர். குடும்பத்திலும் வேலை செய்யுமிடத்திலும் கிறிஸ்தவ சபையிலும் நமக்கிருக்கும் பொறுப்புகளை சரிவர செய்வதற்கு யெகோவா எப்போதும் நமக்கு உதவி செய்வார் என்று அறிவது எவ்வளவு உற்சாகமளிக்கிறது!
இருந்தபோதிலும் நாம் அனைவருமே கடினமான சூழ்நிலைகளை எதிர்ப்படுகிறோம். மோசமான உடல்நிலை, குடும்ப பிரச்சினைகள், குறைந்த வருமானம், அல்லது வேறு ஏதாவது ஒன்று நம்மை கஷ்டப்படுத்தலாம். ஒரு சோதனையை அல்லது பரீட்சையை எப்படி சமாளிப்பது என்று நமக்கு தெரியாமல் இருக்கலாம். அதிகரித்து வரும் பிரச்சினைகள் பொல்லாத பிசாசாகிய சாத்தானிடமிருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ வருகின்றன; அவன் கடவுளுடைய மக்களுக்கு எதிராக ஆவிக்குரிய போர் செய்கிறான். ஆனாலும் வேறு ஒருவர் நம்மை நன்கு புரிந்துகொண்டு யெகோவாவுடன் தொடர்ந்து நல்ல உறவை காத்துக்கொள்ள நமக்கு உதவுகிறார். அவர் பரலோகத்தில் உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கும் இயேசு கிறிஸ்துவே. “நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்” என்பதாக வாசிக்கிறோம்.—எபிரெயர் 4:15, 16.
கடவுளுடைய அருளைப் பெறுவதற்கு புகழ்பெற்றவராகவோ செல்வமிக்கவராகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை அறிவது நமக்கு எத்தனை நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது! அதனால், இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்ப்படும்போது சங்கீதக்காரனைப் பின்பற்றுங்கள்; அவர் இவ்வாறு ஜெபம் செய்தார்: “நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்; தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்.” (சங்கீதம் 31:9-14; 40:17) யெகோவா மனத்தாழ்மை உள்ளவர்களையும், சாதாரண மக்களையும் நேசிக்கிறார் என்பதில் உறுதியாக இருங்கள். உண்மையில், ‘அவர் நம்மேல் அக்கறையாக இருப்பதால் நம்முடைய கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடலாம்.’—1 பேதுரு 5:7, NW.
[அடிக்குறிப்பு]
a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 29-ன் படங்கள்]
இயேசுவின் சீஷர்களில் அநேகர் கல்வியறிவில்லாத சாமானியர்
[பக்கம் 30-ன் படம்]
உறுதியான விசுவாசத்தைப் பெற கிறிஸ்தவர்கள் முயற்சி செய்கின்றனர்
[பக்கம் 31-ன் படங்கள்]
கடவுளுடைய இரக்கத்தை அனுபவிக்க நாம் பிரபலமானவராக இருக்க வேண்டியதில்லை