வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
பூர்வ இஸ்ரவேலர்கள் பலதார மணம் செய்வதை யெகோவா அனுமதித்தார், ஆனால் இப்போதோ அனுமதிப்பதில்லை. அப்படியென்றால், அவருடைய தராதரம் மாறிக்கொண்டே இருக்குமா?
பலதார மணம் பற்றிய தம்முடைய கருத்தை யெகோவா மாற்றவில்லை. (சங்கீதம் 19:7; மல்கியா 3:6) மனிதர்களுக்காக தொடக்கத்தில் அவர் செய்த ஏற்பாடுகளில் ஒன்றாக அது இருக்கவில்லை, இன்றும் அவ்வாறு இல்லை. ஆதாமுக்கென்று ஒரு துணையை உருவாக்கியபோது, ஒரு கணவனுக்கு ஒரு மனைவி என்ற தெய்வீக தராதரத்தை யெகோவா குறிப்பிட்டார். “இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்” என்றார்.—ஆதியாகமம் 2:24.
இயேசு கிறிஸ்து பூமியிலிருக்கும்போது, விவாகரத்து, மறுமணம் ஆகியவற்றைப் பற்றி அவரிடம் கேள்வி கேட்டவர்களுக்கு இந்தத் தராதரத்தையே மறுபடியும் குறிப்பிட்டார். அவர் சொன்னார்: “ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?” மேலுமாக, “எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ் செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணினால், அவன் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்” என்றும் சொன்னார். (மத்தேயு 19:4-6, 9) ஆக, ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளை வைத்திருப்பதும் விபச்சாரம் என்பது இதிலிருந்தே தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
அப்படியென்றால், பூர்வகாலங்களில் பலதார மணம் ஏன் அனுமதிக்கப்பட்டது? இந்தப் பழக்கத்தை யெகோவா ஆரம்பித்து வைக்கவில்லை என்பதை ஞாபகத்தில் வையுங்கள். காயீனின் வம்சாவளியில் வந்த லாமேக்கு என்பவனே முதன்முதலாக ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளை வைத்திருந்தான் என பைபிள் குறிப்பிடுகிறது. (ஆதியாகமம் 4:19-24) நோவாவின் நாளில், யெகோவா ஜலப்பிரளயத்தை வருவித்த சமயத்தில், நோவாவும் அவருடைய மூன்று மகன்களும் ஆளுக்கு ஒரு மனைவியை மட்டுமே வைத்திருந்தார்கள். பலதார மணம் செய்திருந்த அத்தனை பேரும் ஜலப்பிரளயத்தில் அழிந்து போனார்கள்.
நூற்றாண்டுகளுக்கு பிறகு, இஸ்ரவேலர்களை தம்முடைய ஜனங்களாக யெகோவா தேர்ந்தெடுத்த சமயத்தில், ஒரு மனைவியை மட்டுமே வைத்திருப்பது வழக்கமாக இருந்தபோதிலும் சிலர் ஏற்கெனவே பலதார மணம் செய்தவர்களாக இருந்தனர். ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளை உடைய குடும்பங்கள் பிரிந்துவிட வேண்டும் என கடவுள் அப்போது கட்டாயப்படுத்தவில்லை. மாறாக, அந்தப் பழக்கத்தை அவர் சீராக்கினார்.—யாத்திராகமம் 21:10, 11; உபாகமம் 21:15-17.
பலதார மணம் செய்வது தற்காலிகமாகத்தான் பொறுத்துக் கொள்ளப்பட்டது; திருமணத்தைக் குறித்து யெகோவா ஆதியில் வைத்த தராதரத்தை எடுத்துக்காட்டிய இயேசுவின் வார்த்தைகளும், கடவுளுடைய பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு அப்போஸ்தலன் பவுல் எழுதிய வார்த்தைகளும் இதைக் காண்பிக்கின்றன. அவர் சொன்னார்: “அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்க வேண்டும்.” (1 கொரிந்தியர் 7:2) கிறிஸ்தவ சபையில் ஒரு கண்காணியாகவோ ஒரு உதவி ஊழியராகவோ நியமிக்கப்படும் எவரும் ‘ஒரே மனைவியையுடைய புருஷராக’ இருக்க வேண்டுமென்றும் பவுல் தேவ ஆவியினால் ஏவப்பட்டு எழுதினார்.—1 தீமோத்தேயு 3:2, 12; தீத்து 1:6.
இவ்வாறு, சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ சபை தோன்றிய சமயத்திலிருந்து பலதார மணம் செய்வதை யெகோவா பொறுத்துக் கொள்ளவில்லை. ஆதியில் திருமணத்திற்கு எந்த தராதரம் இருந்ததோ அந்தத் தராதரமே, அதாவது ஒருவனுக்கு ஒருத்தி என்ற தராதரமே அச்சமயத்தில் திரும்பவும் நடைமுறைக்கு வந்தது. இன்று, உலகெங்கும் உள்ள கடவுளுடைய மக்களுக்கான தராதரமும் இதுவே.—மாற்கு 10:11, 12; 1 கொரிந்தியர் 6:9, 10.