மெய் வணக்கம் குடும்பத்தை ஒன்று சேர்க்கிறது
மரியாவுக்கு 13 வயது; அப்போது அவளும் அவளுடைய தங்கை லூசியும் தங்களுடைய உறவினரிடமிருந்து யெகோவாவைப் பற்றி கேள்விப்பட்டார்கள். பூமியில் பரதீஸில் வாழும் நம்பிக்கையைப் பற்றியும் அவர்களுடைய மாமா விளக்கினார். இன்னும் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவலால் அவருடன் யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்திற்குச் சென்றார்கள். அங்கு கொடுக்கப்பட்ட தெளிவான போதனை மரியாவை கவர்ந்தது. இது சர்ச்சிலிருந்து மிகவும் வித்தியாசப்பட்டதாக இருந்தது, பாட்டு பாடுவதைத் தவிர பெரும்பாலும் அங்கே வேறொன்றும் இருக்காது! விரைவில் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவருடன் இந்தப் பிள்ளைகள் பைபிள் படித்துக் கொண்டிருந்தார்கள்.
இவர்களுடைய அண்ணன் யூகோவுக்கு தத்துவத்திலும் பரிணாமத்திலும் அதிக ஈடுபாடு இருந்தது. தான் ஒரு நாத்திகவாதி என்று சொல்லிக்கொண்டார். ஆனால் இராணுவ சேவை செய்துகொண்டிருந்த சமயத்தில், உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா?a என்ற புத்தகத்தைப் படித்தார். பல கேள்விகளுக்கு வேறெந்த மதமும் கொடுக்க முடியாத பதில்களைக் கண்டுபிடித்தார். தனது இராணுவ சேவையை முடித்த பிற்பாடு, பைபிளைப் படிப்பதன் மூலமும் தனது தங்கைகளுடன் கூட்டங்களுக்குச் செல்வதன் மூலமும் தான் புதிதாக கண்டறிந்த கடவுள் நம்பிக்கையை பலப்படுத்த ஆரம்பித்தார். சத்தியத்தைப் பற்றி கேள்விப்பட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு, மரியாவும் லூசியும் 1992-ல் முழுக்காட்டுதல் எடுத்தார்கள், இவர்களுடைய அண்ணன் இரண்டு வருடங்கள் கழித்து எடுத்தார்.
ஆனால், கத்தோலிக்க பாரம்பரியத்தில் ஊறிப்போன அவர்களுடைய பெற்றோர்களோ பைபிள் சத்தியத்தில் ஆர்வம் காட்டவில்லை. யெகோவாவின் சாட்சிகளை தொல்லைபிடித்தவர்களாக கருதினார்கள், இருந்தாலும் இவர்களுடைய பிள்ளைகள் தங்களுடைய வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வருகிற இளம் சாட்சிகளின் நல்நடத்தையையும் அடக்கமான உடையையும் உயர்வாக மெச்சினார்கள். அதோடு, சாப்பாட்டு நேரங்களில், கூட்டங்களில் கற்றுக்கொண்ட விஷயங்களைப் பற்றி பிள்ளைகள் பேசுவார்கள், இது இவர்களுடைய பெற்றோரின் ஆர்வத்தைத் தூண்டியது.
என்றபோதிலும், பெற்றோர்கள் இருவரும் பில்லிசூனியத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்கள். அப்பா ஒரு குடிகாரர், அம்மாவை அடிப்பார். குடும்பம் பிளவுறும் நிலையில் இருந்தது. இப்படிப்பட்ட சமயத்தில், குடித்துவிட்டு மோசமாக நடந்ததால் அப்பா இரண்டு வாரம் சிறையில் இருந்தார். சிறையில் இருந்தபோது பைபிளை படிக்க ஆரம்பித்தார். அதை வாசித்தபோது கடைசி நாட்களைப் பற்றி இயேசு சொன்ன வார்த்தைகள் அவருடைய கண்ணுக்குத் தட்டுப்பட்டன. இது அவர்கள் இருவருடைய மனதிலும் பல கேள்விகளை எழுப்பின, அப்பாவும் அம்மாவும் ராஜ்ய மன்றத்திற்குச் சென்றார்கள், அதோடு வீட்டு பைபிள் படிப்பையும் ஏற்றுக்கொண்டார்கள். சத்தியத்தைக் கற்றுக்கொண்டு வந்தபோது, பில்லிசூனியம் சம்பந்தப்பட்ட எல்லா புத்தகங்களையும் கிழித்துப் போட்டார்கள், யெகோவாவின் பெயரில் கூப்பிட்டதால் பிசாசுகளின் தாக்குதல்களிலிருந்தும் விடுதலை பெற்றார்கள். தங்களுடைய குணங்களிலும் நிறைய மாற்றங்களை செய்ய ஆரம்பித்தார்கள்.
1999-ல் பொலிவியாவில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் யூகோ தங்களுடைய பெற்றோர்களுக்கு முழுக்காட்டுதல் கொடுப்பதைப் பார்த்தபோது மரியாவும் லூசியும் எவ்வளவு மெய்சிலிர்த்துப் போயிருப்பார்கள் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? யெகோவாவையும் அவருடைய நோக்கங்களையும் பற்றி மரியாவும் லூசியும் கேள்விப்பட்டு சுமார் ஒன்பது வருடங்கள் கடந்துவிட்டன. யூகோவுடன் சேர்ந்து இப்பொழுது அவர்கள் முழுநேர ஊழியம் செய்துவருகிறார்கள். மெய் வணக்கம் தங்களுடைய குடும்பத்தை ஒன்று சேர்த்ததில் அவர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி!
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.