உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீபத்தில் வெளிவந்த காவற்கோபுரம் பத்திரிகைகளை வாசித்து மகிழ்ந்தீர்களா? சரி, பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் விடையளிக்க முடியுமா என்று பாருங்கள்:
•என்ன சில வழிகளில் ரூத் அருமையான முன்மாதிரி வைத்தாள்?
ரூத், யெகோவா மீது வைத்திருந்த அன்பிலும், நகோமியிடம் காட்டிய பற்றுமாறா அன்பிலும், சுறுசுறுப்பிலும், மனத்தாழ்மையிலும் முன்மாதிரியாக திகழ்ந்தாள். அவளை “குணசாலி” என்று ஜனங்கள் கருதுவதற்கு போதிய காரணம் இருந்தது. (ரூத் 3:11)—4/15, பக்கங்கள் 23-6.
• சாதாரண ஆட்களிடம் யெகோவா அக்கறை காட்டுகிறார் என்பது நமக்கு எப்படி தெரியும்?
சாதாரண ஆட்களை சிறுமைப்படுத்த வேண்டாமென எகிப்தில் கொடூரமாக நடத்தப்பட்டிருந்த இஸ்ரவேலரிடம் யெகோவா கூறினார். (யாத்திராகமம் 22:21-24) தம் பிதாவின் மாதிரியைப் பின்பற்றிய இயேசு சாதாரண ஆட்களிடம் உண்மையான அக்கறை காட்டினார், ‘கல்வியறியாத சாமானிய மனிதரை’ தம்முடைய அப்போஸ்தலர்களாக அவர் தேர்ந்தெடுத்தார். (அப்போஸ்தலர் 4:13, திருத்திய மொழிபெயர்ப்பு; மத்தேயு 9:36) இளைஞர்கள் உட்பட மற்றவர்களிடம் அக்கறை காட்டுவதன் மூலம் நாம் கடவுளுடைய மாதிரியைப் பின்பற்றலாம்.—4/15, பக்கங்கள் 28-31.
• நம் செயல்களை யெகோவா கவனிக்கிறார் என்று நம்புவதற்கு நமக்கு என்ன காரணம் உள்ளது?
மனிதர்களின் செயல்களை யெகோவா கவனிக்கிறார் என பைபிள் பதிவுகள் காட்டுகின்றன. ஆபேல் செலுத்திய பலியை அவர் கவனித்தார், நாம் செலுத்தும் “உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை” அவர் கவனிக்கிறார். (எபிரெயர் 13:15) சுத்தமான, நெறி பிறழாத விதத்தில் வாழ்வதன் மூலம் தம்மைப் பிரியப்படுத்த ஏனோக்கு பிரயாசப்பட்டதை யெகோவா அறிந்திருந்தார். சாறிபாத் ஊரை சேர்ந்த புறதேசத்தாளான ஒரு விதவை தன்னிடமிருந்த கொஞ்ச உணவையும் எலியா தீர்க்கதரிசியுடன் பகிர்ந்துகொண்டதை கடவுள் கவனித்தார். நம் விசுவாச செயல்களையும் யெகோவா கவனிக்கிறார்.—5/1, பக்கங்கள் 28-31.
• பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளுக்குப் பிறகு கிறிஸ்தவர்களான யூதர்கள் கடவுளுக்குத் தனிப்பட்ட விதத்தில் தங்களை ஒப்புக்கொடுக்க வேண்டியிருந்ததாக ஏன் சொல்லப்படலாம்?
பொ.ச.மு. 1513-ல் பூர்வ இஸ்ரவேலர்கள் யெகோவாவுடன் ஒப்புக்கொடுக்கப்பட்ட உறவுக்குள் வந்தார்கள். (யாத்திராகமம் 19:3-8) அது முதற்கொண்டு நியாயப்பிரமாண உடன்படிக்கையின்கீழ் அந்த ஒப்புக்கொடுக்கப்பட்ட தேசத்தில் யூதர்கள் பிறந்தார்கள். ஆனால் பொ.ச. 33-ல் கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் யெகோவா நியாயப்பிரமாண உடன்படிக்கையை நீக்கிப் போட்டார். (கொலோசெயர் 2:14) அதன் பிறகு கடவுள் ஏற்றுக்கொள்ளத்தக்க விதத்தில் அவரை சேவிக்க விரும்பிய யூதர்கள் அவருக்கு ஒப்புக்கொடுத்து இயேசு கிறிஸ்துவின் பெயரில் முழுக்காட்டுதல் பெறுவது அவசியமானது.—5/15, பக்கங்கள் 30-1.
•தூபம் காட்டுவது இன்று மெய் வணக்கத்தின் ஓர் அம்சமா?
பூர்வ இஸ்ரவேலில் தூபம் காட்டுவது மெய் வணக்கத்தின் ஓர் அம்சமாக இருந்தது. (யாத்திராகமம் 30:37, 38; லேவியராகமம் 16:12, 13) ஆனால் தூபவர்க்கத்தைப் பயன்படுத்துவது உட்பட நியாயப்பிரமாண சட்டம் கிறிஸ்துவின் மரணத்தின்போது முடிவுக்கு வந்தது. மதம் சாராத காரியங்களுக்காக தூபவர்க்கத்தைப் பயன்படுத்தலாமா என்பதை கிறிஸ்தவர்கள் தாங்களாகவே தீர்மானித்துக் கொள்ளலாம், ஆனால் அது இன்று மெய் வணக்கத்தின் ஓர் அம்சமல்ல. மற்றவர்களை இடறலடைய செய்யாதபடிக்கு அவர்களுடைய உணர்வுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.—6/1, பக்கங்கள் 28-30.
• உண்மையில் இயேசு பூமியில் வாழ்ந்தார் என்பதற்கு சமீபத்தில் வெளியான என்ன செய்தி பலரது சிந்தனையைத் தூண்டியிருக்கிறது?
இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் எலும்பு பெட்டி பெரும் விளம்பரத்தைப் பெற்றது. இது முதல் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படுகிறது, இதில், “யோசேப்பின் குமாரனும், இயேசுவின் சகோதரனுமாகிய யாக்கோபு” என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இயேசு வாழ்ந்ததற்கு “பைபிளைத் தவிர மிகப் பழமையான தொல்பொருள் அத்தாட்சி” இதுவாகத்தான் இருக்குமென சிலர் நினைக்கிறார்கள்.—6/15, பக்கங்கள் 3-4.
• மனிதன் அன்பாக இருக்க எப்படி கற்றுக்கொள்கிறான்?
மனிதர்கள் முதலாவதாக அன்பு காண்பிக்க கற்றுக்கொள்வது, அவர்களுடைய பெற்றோரின் முன்மாதிரியிலிருந்தும் அவர்கள் கொடுக்கும் பயிற்சியிலிருந்தும்தான். கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அன்பையும் மரியாதையையும் காண்பிக்கையில் பிள்ளைகள் அன்பு காட்ட கற்றுக்கொள்ளலாம். (எபேசியர் 5:28; தீத்து 2:4) பாசம் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு சூழ்நிலையில் வளர்ந்தவரும்கூட தகப்பனைப் போன்று யெகோவா தரும் வழிநடத்துதலை ஏற்றுக்கொள்வதன் மூலமும், பரிசுத்த ஆவியின் உதவியைப் பெறுவதன் மூலமும், கிறிஸ்தவ சகோதரத்துவத்தின் கனிவான ஆதரவிலிருந்து பயனடைவதன் மூலமும் அன்பு காட்ட கற்றுக்கொள்ளலாம்.—7/1, பக்கங்கள் 4-7.
• யூசிபியஸ் யார், அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்?
யூசிபியஸ் ஆரம்ப கால சரித்திராசிரியர்களில் ஒருவர்; இவர் பொ.ச. 324-ல், கிறிஸ்தவ சர்ச்சின் சரிதை (ஆங்கிலம்) என்ற புத்தகத்தின் பத்து தொகுதிகளை எழுதினார். குமாரனுக்கு முன்பே பிதா இருந்ததாக யூசிபியஸ் நம்பியபோதிலும் நைசியாவில் ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் அதற்கு எதிரான கருத்தையே அவர் ஏற்றுக்கொண்டார். தம் சீஷர்கள் ‘இந்த உலகத்தின் பாகமாக இருக்கக் கூடாது’ என இயேசு எதிர்பார்த்ததை யூசிபியஸ் அசட்டை செய்திருப்பதாக தெரிகிறது. (யோவான் 17:16)—7/15, பக்கங்கள் 29-31.
• பலதார மணம் பற்றிய தம்முடைய கருத்தை யெகோவா மாற்றிக் கொண்டிருக்கிறாரா?
இல்லை, பலதார மணம் பற்றிய தம்முடைய கருத்தை யெகோவா மாற்றிக் கொள்ளவில்லை. (மல்கியா 3:6) ‘தன் மனைவியோடே இசைந்திருப்பதும்,’ அவளோடு ஒரே மாம்சமாயிருப்பதும் முதல் மனிதனுக்கான கடவுளுடைய ஏற்பாடாக இருந்தது. (ஆதியாகமம் 2:24) விபச்சாரம் தவிர வேறெந்த காரணத்திற்காகவும் மணத்துணையை விவாகரத்து செய்துவிட்டு, மறுமணம் செய்வது ஒருவரை விபச்சாரக்காரர் ஆக்கும் என இயேசு சொன்னார். (மத்தேயு 19:4-6, 9) கிறிஸ்தவ சபை ஆரம்பமானது முதல் பலதார மணம் செய்துகொள்வதை யெகோவா பொறுத்துக் கொள்ளவில்லை.—8/1, பக்கம் 28.