தூபம் காட்டுதல்—மெய் வணக்கத்தின் ஓர் அம்சமா?
“கடவுளின் அன்பு மணம் வீசுகிறது.” இது பூர்வ எகிப்தியரின் சொல் வழக்கு. தூபம் காட்டுவது பெரும்பாலும் அவர்களுடைய வழிபாட்டின் ஒரு பாகமாகவே இருந்தது. கடவுட்கள் அருகிலேயே இருப்பதாக நம்பி எகிப்தியர்கள் தினமும் தங்கள் கோவில்களிலும், வீட்டிலிருந்த தூப பீடங்களிலும், வியாபார ஸ்தலங்களிலும்கூட தூபம் காட்டினார்கள். பிற நாடுகளிலும் இதுபோன்ற பழக்கங்கள் பின்பற்றப்பட்டன.
தூபம் என்பது என்ன? இது நறுமணப் புகையை அல்லது அதற்காக எரிக்கப்படும் பொருளை குறிக்கலாம். இது சாம்பிராணி, குங்கிலியம் போன்ற நறுமணமூட்டும் மரப்பிசின்களால் செய்யப்படுகிறது. இந்தப் பொருட்கள் பொடியாக்கப்பட்டு, பெரும்பாலும் வாசனை பொருட்கள், மரப்பட்டை, மலர்கள் போன்றவற்றுடன் சேர்த்து எரிக்கப்படுகின்றன; இவ்வாறு பல்வேறு சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற வெவ்வேறு நறுமணங்கள் உண்டாக்கப்படுகின்றன.
தூபவர்க்கம் மிகவும் விரும்பத்தக்க ஒரு பொருளாக இருந்ததால் பண்டைய காலங்களில் விலையுயர்ந்த பொருளாக ஆனது. ஆகவே அதில் சேர்க்கப்பட்ட பொருட்கள் முக்கிய வியாபார பொருட்களாயின. வணிக மார்க்கங்கள் வழியே பயணித்த வணிகக் கூட்டத்தார் தொலைதூர தேசங்களிலிருந்து இந்தப் பொருட்களை எடுத்துச் சென்றார்கள். யாக்கோபின் இளம் குமாரனான யோசேப்பு இஸ்மவேல வியாபாரிகளிடம் விற்கப்பட்ட சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கலாம். அவர்கள், “கீலேயாத்திலிருந்து . . . எகிப்துக்குக் கொண்டு போகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின் தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள் மேல் ஏற்றிக்கொண்டு வந்தார்கள்.” (ஆதியாகமம் 37:25) தூபவர்க்கத்துக்கு மவுசு அதிகமானதால், சாம்பிராணி வியாபாரிகளால் துவக்கப்பட்ட வணிக மார்க்கமானது ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே போக்குவரத்தை ஏற்படுத்தியது.
இன்றும்கூட அநேக மத சம்பிரதாயங்களிலும் சடங்குகளிலும் தூபம் காட்டப்படுகிறது. அதுமட்டுமல்ல, அதன் அருமையான சுகந்தத்தை முகர்ந்து மகிழ்வதற்காகவே அதிகமதிகமானோர் அதைத் தங்கள் வீடுகளில் பயன்படுத்துகிறார்கள். தூபம் காட்டுவதை கிறிஸ்தவர்கள் எப்படி கருத வேண்டும்? வழிபாட்டில் அதை பயன்படுத்துவதை கடவுள் ஏற்றுக்கொள்கிறாரா? இந்த விஷயத்தில் பைபிள் என்ன சொல்கிறது என்பதை நாம் ஆராயலாம்.
‘யெகோவாவுக்கு பரிசுத்தமான ஒன்று’
பூர்வ இஸ்ரவேலரின் காலத்தில், தூபம் காட்டுவது ஆசரிப்புக் கூடாரத்தில் ஆசாரியர்களின் முக்கிய பணியாக இருந்தது. “உண்மையில், தூபம் காட்டுவதை ஒரு வணக்கச் செயலாக அல்லது பரிசுத்த காணிக்கையாகவே எபிரெயர்கள் எப்போதும் கருதியதாக தெரிகிறது. இதைத் தவிர வேறு எதற்காகவும் இதைப் பயன்படுத்தியதாக பதிவேதுமில்லை” என மெக்ளின்டாக், ஸ்ட்ராங் என்பவர்களின் சைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது.
நான்கு வித பொருட்களைக் கலந்து ஆசரிப்புக் கூடாரத்தில் தூபம் காட்ட வேண்டுமென யெகோவா தேவன் கட்டளையிட்டார்; “சுத்த வெள்ளைப்போளமும் குங்கிலியமும் அல்பான் பிசினுமாகிய கந்தவர்க்கங்களையும் சுத்தமான சாம்பிராணியையும் நீ சமநிறையாக எடுத்து, தைலக்காரன் செய்கிறதுபோல அதற்குப் பரிமளமேற்றி, துப்புரவான பரிசுத்த தூபவர்க்கமாக்கி, அதில் கொஞ்சம் எடுத்துப் பொடியாக இடித்து, நான் உன்னைச் சந்திக்கும் ஆசரிப்புக் கூடாரத்திலிருக்கும் சாட்சி சந்நிதியில் வைப்பாயாக” என்றார். (யாத்திராகமம் 30:34-36) பிற்பாடு யூத ரபீக்கள் ஆலயத்தில் பயன்படுத்துவதற்காக தூபவர்க்கத்தில் வேறு சில பொருட்களையும் சேர்த்ததாக கல்விமான்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஆலயத்தில் போடப்பட்ட தூபம் பரிசுத்தமாக இருந்தது, கடவுளை வணங்குவதற்கு மட்டுமே அது பயன்படுத்தப்பட்டது. ஆகவே, “இந்தத் தூபவர்க்கத்தை நீ செய்ய வேண்டிய முறையின்படி உங்களுக்காகச் செய்துகொள்ளலாகாது; இது கர்த்தருக்கென்று [“யெகோவாவுக்கென்று,” NW] உனக்குப் பரிசுத்தமாயிருப்பதாக. இதற்கு ஒப்பானதை முகருகிறதற்காகச் செய்கிறவன் தன் ஜனத்தில் இராதபடி அறுப்புண்டு போகக்கடவன்” என யெகோவா கட்டளையிட்டார். (யாத்திராகமம் 30:37, 38) ஆசாரியர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட பலிபீடத்தில் தினமும் இருமுறை தூபவர்க்கம் போட்டனர். (2 நாளாகமம் 13:11) பிரதான ஆசாரியரோ பாவநிவாரண நாளன்று மகா பரிசுத்த ஸ்தலத்திலே தூபம் காட்டினார்.—லேவியராகமம் 16:12, 13.
எல்லாரும் தூபம் காட்டுவதை கடவுள் ஏற்றுக்கொள்ளவில்லை. தாங்களும் ஆசாரியர்களுக்கு சளைத்தவர்களல்ல என்பதுபோல் அசட்டுத் துணிச்சலுடன் தூபம் காட்டிய மற்றவர்களை அவர் தண்டித்தார். (எண்ணாகமம் 16:16-18, 35-40; 2 நாளாகமம் 26:16-20) யூத தேசத்தார் பொய் வணக்கத்தில் ஈடுபட்டு, தங்கள் கைகளை இரத்தக் கறைகளால் நிரப்பி, அதேசமயத்தில் தூபமும் செலுத்தியது யெகோவாவுக்கு வெறுப்பாயிருந்தது. அவர்களுடைய மாய்மாலம், “தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது” என யெகோவாவை சொல்ல வைத்தது. (ஏசாயா 1:13, 15) யெகோவா கட்டளையிட்டபடி அவரை வணங்க இஸ்ரவேலர் கொஞ்சமும் சிரத்தை எடுக்கவில்லை. சொல்லப்போனால் அவர்கள் ஆலயத்தையே இழுத்து மூடி வேறு பலிபீடங்களில் தூபம் காட்டினர். (2 நாளாகமம் 28:24, 25) வருடங்கள் பல உருண்டோடியபின், கீழ்த்தரமான பொய்க் கடவுட்களின் வணக்கத்திலும் இந்த பரிசுத்த தூபம் காட்டப்பட்டது. இத்தகைய பழக்கங்கள் யெகோவாவுக்கு வெறுப்பூட்டுபவையாக இருந்தன.—எசேக்கியேல் 16:2, 17, 18.
தூபவர்க்கமும் ஆரம்ப கால கிறிஸ்தவர்களும்
பொ.ச. 33-ல் புதிய உடன்படிக்கையை கிறிஸ்து ஆரம்பித்து வைத்தபோது, நியாயப்பிரமாண உடன்படிக்கை முடிவுக்கு வந்தது. அப்போது பரிசுத்த தூபம் காட்டும்படி ஆசாரியர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளையும் முடிவுக்கு வந்தது. (கொலோசெயர் 2:14) ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் வணக்கத்தில் தூபவர்க்கம் காட்டியதாக எந்தப் பதிவும் இல்லை. இதைக் குறித்து மெக்ளின்டாக், ஸ்ட்ராங் என்பவர்களின் சைக்ளோப்பீடியா இவ்வாறு கூறுகிறது: ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் “தூபம் காட்டவில்லை என்பது உறுதி. சொல்லப்போனால் அது பொய்மத வணக்கத்தின் அடையாளமாக கருதப்பட்டது. . . . பக்தர் ஒருவர் புறமத பீடத்தின் மீது கொஞ்சம் தூபவர்க்கத்தைப் போடுவது வணக்க செயலை குறித்தது.”
ஆரம்ப கால கிறிஸ்தவர்கள், தங்கள் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என தெரிந்தும் ரோம பேரரசரின் ‘தெய்வத் தன்மையை’ ஏற்றுக்கொள்வதற்கு அடையாளமாக தூபம் காட்ட மறுத்தனர். (லூக்கா 4:8; 1 கொரிந்தியர் 10:14, 20) அந்தக் காலத்தில் விக்கிரகாராதனையில் தூபம் பயன்படுத்தப்பட்டதால் ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் தூபவர்க்க வியாபாரத்திலும்கூட ஈடுபடவில்லை என்பது ஆச்சரியமூட்டும் விஷயமல்ல.
இன்று தூபம் காட்டுதல்
இன்று தூபவர்க்கம் எதற்காக பயன்படுத்தப்படுகிறது? பல கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளின் சடங்காச்சாரங்களிலும் பொது வழிபாட்டிலும் தூபம் காட்டப்படுகிறது. ஆசியாவில் பல குடும்பங்கள் தங்கள் கடவுட்களை கனப்படுத்தவும் இறந்தோரை பாதுகாக்கவும் கோவில்களிலும் வீட்டு தூப பீடங்களிலும் தூபம் காட்டுகின்றனர். நறுமணம் பரப்ப, சுகப்படுத்த, சுத்திகரிக்க, பாதுகாக்க என மத சம்பந்தப்பட்ட பல காரியங்களுக்காகவும் இது பயன்படுத்தப்படுகிறது.
சமீப காலங்களில் மதத்தைச் சாராதவர்கள் மத்தியிலும் தூபம் காட்டுவது பிரபலமாகியுள்ளது. சிலர் தியானிக்கும்போது தூபவர்க்கத்தை எரிக்கிறார்கள். தூபத்தை பயன்படுத்தி “அறிவுக்கெட்டா நிலைகளையும்” மனிதனுக்கு அப்பாற்பட்ட “சக்தியையும்” அடைவதைப் பற்றி ஒரு குறிப்பேடு சொல்கிறது. வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தூபம் காட்டும் சடங்காச்சாரங்களை செய்யும்படி அந்த குறிப்பேடு சிபாரிசு செய்கிறது; அவை “மீமானிட சக்திகளோடு” தொடர்பு கொள்வது சம்பந்தப்பட்டவை. அப்படி கிறிஸ்தவர்கள் செய்யலாமா?
பொய் மத பழக்க வழக்கங்களை தூய வணக்கத்தோடு கலப்படம் செய்ய முயலுவோரை யெகோவா முற்றிலுமாக கண்டிக்கிறார். அப்போஸ்தலன் பவுல், ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை மேற்கோள்காட்டி அதை கிறிஸ்தவர்களுக்கு பொருத்தினார்; இவ்வாறு பொய் மதத்தின் அசுத்தத்தால் பாதிக்கப்படாதிருக்கும்படி அவர்களை ஊக்குவித்தார். “‘அவர்கள் நடுவிலிருந்து வெளியேறுங்கள்; அவர்களை விட்டுப் பிரிந்து செல்லுங்கள்’ என்கிறார் ஆண்டவர். ‘தீட்டானதைத் தொடாதீர்கள் அப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொள்வேன்’” என அவர் எழுதினார். (2 கொரிந்தியர் 6:17, பொது மொழிபெயர்ப்பு; ஏசாயா 52:11) ஆகவே, பொய் வணக்கத்தோடு அல்லது மாயவித்தையோடு சம்பந்தப்பட்ட எதையும் தவிர்க்க உண்மை கிறிஸ்தவர்கள் கவனமாக இருக்கிறார்கள்.—யோவான் 4:24.
மத சடங்காச்சாரங்களிலும் ஆவியுலக தொடர்பு சம்பந்தப்பட்ட காரியங்களிலும் தூபவர்க்கம் பயன்படுத்தப்படுவதால் மொத்தத்தில் அதை உபயோகிப்பதே தவறு என்று அர்த்தமா? அப்படியல்ல. ஒருவேளை வீட்டில் நறுமணத்திற்காக அதை உபயோகிக்க ஒருவர் விரும்பலாம். (நீதிமொழிகள் 27:9) அவ்வாறு விரும்பினாலும், தூபம் காட்டுவதைக் குறித்ததில் ஒரு கிறிஸ்தவர் சில குறிப்புகளை கவனத்தில் வைக்க வேண்டும். உங்கள் பகுதியிலுள்ளவர்கள் பொய் மத பழக்கவழக்கமாக அதை கருதுகிறார்களா? உங்கள் சமுதாயத்தில், ஆவியுலக தொடர்புடைய சடங்குகளுக்குத்தான் பெரும்பாலும் தூபம் காட்டுகிறார்களா? அல்லது மதம் சாராத காரியங்களுக்காக இது பொதுவாக பயன்படுத்தப்படுகிறதா?
தூபவர்க்கத்தை பயன்படுத்த ஒருவர் தீர்மானிக்கையில் அவர் தன் மனசாட்சியையும் மற்றவர்களின் உணர்ச்சிகளையும் மனதில் வைக்க வேண்டும். (1 கொரிந்தியர் 10:29) ரோமர்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய வார்த்தைகள் இங்கு பொருந்துகின்றன. “சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம். போஜனத்தினிமித்தம் தேவனுடைய கிரியையை அழித்துப்போடாதே. எந்தப் பதார்த்தமும் சுத்தமுள்ளதுதான்; ஆனாலும் இடறலுண்டாகப் புசிக்கிறவனுக்கு அது தீமையாயிருக்கும். மாம்சம் புசிக்கிறதும், மதுபானம் பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும்” என அவர் எழுதினார்.—ரோமர் 14:19-21.
‘தூபம் போன்ற’ ஜெபங்கள்
இஸ்ரவேலர் தூபம் காட்டியது, கடவுளால் கேட்கப்படும் ஜெபங்களுக்கு பொருத்தமான அடையாளமாக இருந்தது. ஆகவேதான், ‘என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாக இருக்கக்கடவது’ என யெகோவாவை நோக்கி சங்கீதக்காரனாகிய தாவீது பாடினார்.—சங்கீதம் 141:2.
உண்மையுள்ள இஸ்ரவேலர்கள் தூபம் காட்டுவதை ஓர் அர்த்தமற்ற சடங்காக கருதவில்லை. தூபவர்க்கத்தை தயாரிப்பதிலும் தூபம் போடுவதிலும் யெகோவா கட்டளையிட்டபடி செய்ய அவர்கள் அதிக சிரத்தை காட்டினார்கள். இன்று கிறிஸ்தவர்கள் சொல்லர்த்தமான தூபவர்க்கத்தை பயன்படுத்துவதில்லை; ஆனால் பரலோக தகப்பனுக்கு மனமார்ந்த நன்றியையும் மரியாதையையும் காட்டும் விதத்தில் ஜெபங்களை ஏறெடுக்கிறார்கள். ஆலயத்தில் ஆசாரியர்கள் காட்டிய சுகந்த வாசனையுள்ள தூபத்தை போல, ‘செம்மையானவர்களின் ஜெபம் அவருக்கு பிரியம்’ என கடவுளுடைய வார்த்தை நமக்கு உறுதியளிக்கிறது.—நீதிமொழிகள் 15:8.
[பக்கம் 29-ன் படங்கள்]
ஆசரிப்புக்கூடாரத்திலும் ஆலயத்திலும் உபயோகிக்கப்பட்ட தூபம் பரிசுத்தமானது
[பக்கம் 30-ன் படம்]
தியானிப்பதற்காக கிறிஸ்தவர்கள் தூபத்தை எரிக்கலாமா?