யூசிபியஸ்—“சர்ச் சரித்திரத்தின் தந்தை”?
பொது சகாப்தம் 325-ம் ஆண்டு நைசியாவுக்கு வரும்படி எல்லா பிஷப்புகளுக்கும் ரோம சக்ரவர்த்தி கான்ஸ்டன்டைன் அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பின் நோக்கம்: கடவுளுக்கும் அவரது குமாரனுக்கும் இடையிலான உறவைப் பற்றிய பெரும் விவாதத்தை தீர்த்து வைப்பதே. அந்தக் காலத்தில் பேரறிஞராக கருதப்பட்ட ஒருவரும் அங்கு வந்திருந்தார். செசரியாவைச் சேர்ந்த யூசிபியஸே அவர். வேத வசனங்களை யூசிபியஸ் உன்னிப்பாக படித்திருந்தார்; கடவுள் ஒருவரே என்ற கிறிஸ்தவர்களின் கோட்பாட்டை ஆதரித்தும் வந்திருந்தார்.
நைசியாவில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு “கான்ஸ்டன்டீனே தலைமைதாங்கி, முழு ஈடுபாட்டுடன் விவாதித்தார்; . . . கிறிஸ்துவுக்கும் கடவுளுக்கும் இடையில் இருக்கும் உறவைப் பற்றி அந்த ஆலோசனை சபை வழங்கிய விசுவாசப்பிரமாணத்தை, அதாவது ‘பிதாவும் அவரும் ஒருவர்’ என்ற முக்கியமான கோட்பாட்டை அவர்தான் முன்மொழிந்தார். . . . பேரரசனின் மீதிருந்த அதீத பயபக்தியால், இருவரை தவிர மற்ற எல்லா பிஷப்புகளும் அந்த விசுவாசப்பிரமாணத்தில் கையெழுத்திட்டனர்; அவர்களில் பலர் தங்கள் நம்பிக்கைக்கு மாறாகவே கையெழுத்திட்டனர்” என என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா கூறுகிறது. கையெழுத்துப் போடாதவர்களில் யூசிபியஸும் ஒருவரா? அவர் எடுத்த நிலைநிற்கையிலிருந்து நாம் என்ன பாடத்தை கற்றுக்கொள்ளலாம்? யூசிபியஸின் பின்னணியை, அதாவது அவருடைய தகுதிகளையும் சாதனைகளையும் நாம் சற்று சிந்திக்கலாம்.
அவர் எழுதிய குறிப்பிடத்தக்க புத்தகங்கள்
பாலஸ்தீனாவில் சுமார் பொ.ச. 260-ல் யூசிபியஸ் பிறந்திருக்கலாம். சின்ன வயதிலேயே பாம்ஃபலஸ் என்பவருடன் கூட்டு சேர்ந்தார். செசரியாவிலிருந்த சர்ச்சின் கண்காணிப்பாளராக பாம்ஃபலஸ் இருந்தார். இவர் நடத்திய இறையியல் பள்ளியில் யூசிபியஸ் சேர்ந்து கொண்டு ஓர் ஆர்வமிக்க மாணவரானார். பாம்ஃபலஸ் வைத்திருந்த பிரமாண்டமான நூலகத்தின் பிரசுரங்களை யூசிபியஸ் தீர்க்கமாக ஆராய்ந்தார். அவர் ஒரு புத்தகப் புழுவாகவே ஆகிவிட்டார், முக்கியமாக பைபிளை படிப்பதில். அவர் பாம்ஃபலஸின் உற்ற நண்பராகவும் ஆனார். அதனால்தான் பிற்பாடு “பாம்பலஸின் மகன் யூசிபியஸ்” என தன்னை குறிப்பிட்டார்.
யூசிபியஸ் தன் இலட்சியங்களை இவ்வாறு குறிப்பிட்டார்: “அடுத்தடுத்து வந்த புனித அப்போஸ்தலர்களைப் பற்றியும், நமது இரட்சகரின் நாள் முதல் நம் நாள் வரையில் கடந்து சென்றிருக்கும் காலங்களைப் பற்றியும் எழுதுவதும்; சர்ச்சின் சரித்திரத்தில் இடம் பெற்ற பல முக்கியமான சம்பவங்கள் எப்படி நிகழ்ந்தன என்பதை விவரிப்பதும்; மிகப் பிரசித்திபெற்ற சபை வட்டாரங்களிலுள்ள சர்ச்சை நிர்வகித்து தலைமை தாங்கியவர்கள் யார், ஒவ்வொரு தலைமுறையிலும் கடவுளுடைய வார்த்தையை சொல் வடிவிலோ எழுத்து வடிவிலோ அறிவித்தவர்கள் யார் என்பதை குறிப்பிடுவதுமே என் நோக்கம்.”
மிகவும் உயர்வாக கருதப்பட்ட பிரசுரமாகிய கிறிஸ்தவ சர்ச்சின் சரிதை (ஆங்கிலம்) என்றாலே யூசிபியஸ்தான் நினைவில் நிழலாடுவார். சுமார் பொ.ச. 324-ல் அதன் பத்து தொகுதிகளை அவர் பிரசுரித்தார்; பழங்காலத்தில் எழுதப்பட்ட மிக முக்கியமான சர்ச் சரிதை என அவை கருதப்படுகின்றன. இந்த சாதனையின் விளைவாக, சர்ச் சரித்திரத்தின் தந்தை என யூசிபியஸ் அறியப்படலானார்.
சர்ச்சின் சரிதை என்ற பிரசுரத்தைத் தவிர, கால வரலாறு (ஆங்கிலம்) என்ற பிரசுரத்தையும் இரண்டு தொகுதிகளாக எழுதினார். முதல் தொகுதி உலக சரித்திரத்தின் ஒரு சுருக்கமாக இருந்தது. நான்காம் நூற்றாண்டில், உலக சம்பவங்களின் கால வரிசை சம்பந்தமாக அதிகாரப்பூர்வ வழிகாட்டியாக ஆனது. இரண்டாம் தொகுதி, சரித்திர சம்பவங்கள் நடந்த தேதிகளை குறிப்பிட்டது. பல தேசங்களில் அடுத்தடுத்து வந்த அரசர்களைப் பற்றிய விவரங்களை இணையான பத்திகளில் விளக்கிக் காட்டினார்.
வேறு இரண்டு சரித்திர பிரசுரங்களையும் யூசிபியஸ் எழுதினார்: ஒன்று பாலஸ்தீனாவின் உயிர் தியாகிகள் (ஆங்கிலம்), மற்றொன்று கான்ஸ்டன்டைனின் வாழ்க்கை சரிதை (ஆங்கிலம்). முதல் பிரசுரம் பொ.ச. 303-10 வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கியது. அந்தக் காலப்பகுதியில் வாழ்ந்த தியாகிகளைப் பற்றி அது கலந்தாராய்கிறது. அந்தக் காலப்பகுதியில் நடந்த சம்பவங்களுக்கு கண்கண்ட சாட்சியாக யூசிபியஸ் இருந்திருக்கலாம். அடுத்த பிரசுரம், நான்கு புத்தகங்களாக வெளியிடப்பட்டது. அவை பேரரசன் கான்ஸ்டன்டைனின் இறப்புக்குப்பின் பொ.ச. 337-ல் எழுதப்பட்ட மதிப்புமிக்க சரித்திர தகவல்கள் அடங்கிய புத்தகங்கள். அவை சரித்திர உண்மைகளைப் பிட்டு வைக்கவில்லை, வெறும் புகழ்ச்சியையே பதிவு செய்திருந்தன.
கொள்கையை ஆதரிக்கும் பிரசுரங்களையும் யூசிபியஸ் எழுதினார். அவர் காலத்தில் வாழ்ந்த ரோம ஆளுநர் ஹயரோக்கில்ஸுக்கு கொடுத்த பதிலடியும் அவற்றில் அடங்கியிருந்தது. கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஹயரோக்கில்ஸ் எழுதினார், யூசிபியஸோ கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக எழுதினார். அதோடு, வேதாகமத்தின் நூலாசிரியர் கடவுளே என்பதற்கு ஆதாரமாக 35 புத்தகங்களை எழுதினார். மிகவும் சிரமப்பட்டு எழுதிய மிக முக்கியமான புத்தகங்களாக அவை கருதப்பட்டன. அவற்றின் முதல் 15 புத்தகங்கள், எபிரெய வேதாகமத்தை கிறிஸ்தவர்கள் புனித எழுத்துக்களாக அங்கீகரிப்பதை ஆதரித்து பேசுகின்றன. மற்ற 20 புத்தகங்களோ, கிறிஸ்தவர்கள் யூத நியமங்களை விட்டுவிட்டு புதிய நியமங்களையும் முறைமைகளையும் பின்பற்றுவது சரியானதே என்பதற்கு ஆதாரத்தை அளிக்கின்றன. இந்த 35 புத்தகங்களுமே யூசிபியஸ் அறிந்திருந்த கிறிஸ்தவத்துக்கு முழு ஆதரவை அளிக்கின்றன.
யூசிபியஸ் சுமார் 80 ஆண்டுகள் (சுமார் பொ.ச. 260-340) உயிர் வாழ்ந்தார், பழங்கால சரித்திரங்களை எழுதிக் குவித்த எழுத்தாளர்களில் ஒருவரானார். முதல் மூன்று நூற்றாண்டுகளில் நடந்த சம்பவங்கள் அவருடைய பிரசுரங்களில் அடங்கும். பேரரசன் கான்ஸ்டன்டைன் காலத்தில் நடந்தவையும் அவற்றில் உட்படும். பிற்பட்ட காலங்களில் அவர் எழுத்தாளராக மட்டுமல்ல செசரியாவில் பிஷப்பாகவும் சேவை செய்தார். யூசிபியஸ் ஒரு சரித்திராசிரியர் என பெரிதும் அறியப்பட்டாலும், மத ஆதரவாளராகவும், நிலயியல்பு ஆய்வாளராகவும், போதனையாளராகவும், திறனாய்வாளராகவும், பைபிள் விளக்கவுரையாளராகவும் இருந்தார்.
அவரது இரட்டை நோக்கங்கள்
இத்தனை பிரமாண்டமான, வரலாறு காணாத வேலையை யூசிபியஸ் ஏன் ஆரம்பித்தார்? ஒரு புதிய சகாப்தத்திற்குள் அடியெடுத்து வைக்கும் காலப்பகுதியில் அவர் வாழ்ந்து வந்ததாக நம்பியதால்தான். கடந்த தலைமுறைகளின் போது முக்கிய சம்பவங்கள் நடந்திருந்ததாகவும், அவற்றைப் பற்றி எழுதப்பட்ட பதிவு வருங்கால சந்ததிக்கு தேவைப்பட்டதாகவும் அவர் நினைத்தார்.
மதத்தை ஆதரிக்கும் மற்றொரு நோக்கமும் யூசிபியஸுக்கு இருந்தது. கிறிஸ்தவத்தை ஆரம்பித்து வைத்தவர் கடவுளே என அவர் நம்பினார். ஆனால் சிலர் இந்தக் கருத்தை ஏற்கவில்லை. ஆகவே அவர் இவ்வாறு எழுதினார்: “புதிய கருத்துக்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஆசையில் பெருந் தவறுகளை செய்து, உண்மையில் ஞானம் இல்லாததை ஞானம் என்று சொல்லி அதை கண்டுபிடித்தவர்களென அறிவித்துக்கொண்டு, கொடிய ஓநாய்களைப் போல் கிறிஸ்துவின் மந்தையை கருணையின்றி பாழாக்கியிருப்பவர்களின் பெயர்கள், அவர்களின் எண்ணிக்கை, அவர்கள் வாழ்ந்த காலப்பகுதி ஆகியவற்றை தெரிவிப்பதே என் நோக்கம்.”
யூசிபியஸ் தன்னை ஒரு கிறிஸ்தவராக கருதினாரா? அவ்வாறே தோன்றுகிறது, ஏனெனில் கிறிஸ்துவை “நம் இரட்சகர்” என அவர் குறிப்பிட்டிருக்கிறார். “நம் இரட்சகருக்கு விரோதமாக போட்ட சதித் திட்டங்களால் யூதா தேசம் முழுவதற்கும் நேர்ந்த இன்னல்களை குறிப்பிடுவதும், கடவுளுடைய வார்த்தையை புறஜாதியார் என்னென்ன வழிகளில், எந்தெந்த காலங்களில் நிந்தித்து குறைகூறினார்கள் என்பதை பதிவு செய்வதும் என் நோக்கம்; அதோடு வித்தியாசப்பட்ட காலப்பகுதிகளில், இரத்தம் சிந்துதல் மற்றும் கொடூரமான துன்புறுத்துதல் மத்தியிலும் அந்த வார்த்தைக்காக போராடியவர்களின் பண்புகளை விவரிப்பதும், நம் நாளில் தங்கள் விசுவாசத்தை வெளிப்படையாக அறிவித்திருப்பவர்களைப் பற்றியும் நம் இரட்சகர் அவர்களுக்கு இரக்கத்தோடும் தயவோடும் உதவியிருப்பதைப் பற்றியும் தெரிவிப்பதும் என் நோக்கம்” என அவர் அறிவித்தார்.
அவரது பெரும் ஆய்வு
அவர் தனிப்பட்ட முறையில் படித்த புத்தகங்களும் மேற்கோள் காட்டிய புத்தகங்களும் ஏராளம் ஏராளம். யூசிபியஸ் எழுதிய பிரசுரங்கள் மட்டுமே பொது சகாப்தத்தின் முதல் மூன்று நூற்றாண்டுகளைச் சேர்ந்த பிரபலமான ஆட்களை வெளிப்படுத்தியுள்ளன. முக்கியமான பொது இயக்கங்களைப் பற்றிய பயனுள்ள பதிவுகளை வெளிப்படுத்தும் தகவல்கள் அவருடைய பிரசுரங்களில் மட்டுமே காணப்படுகின்றன. அவர் தகவல்களை எந்தெந்த புத்தகங்களிலிருந்து சேகரித்தாரோ அவை இப்போது இல்லை.
தகவல்களை சேகரிப்பதில் யூசிபியஸ் முழு மூச்சுடன் இறங்கினார். நம்பகமான தகவல்களுக்கும் நம்பகமற்ற தகவல்களுக்கும் இடையிலான வித்தியாசத்தைக் கண்டுபிடிப்பதற்காக அவர் சிரத்தையோடு முயன்றிருப்பதாக தெரிகிறது. ஆனாலும் அவருடைய பிரசுரங்களில் பிழைகள் உள்ளன. சில சமயங்களில் அவர் தவறாக விளக்கம் அளித்திருக்கிறார், சில மனிதரையும் அவர்களது செயல்களையும் பற்றி தவறாகவும் புரிந்திருக்கிறார். சில சமயங்களில் அவருடைய காலகணிப்பில் பிழை இருந்திருக்கிறது. அவரிடம் எழுத்து நயமும் இல்லை. இத்தகைய வெளிப்படையான குறைபாடுகள் இருந்தாலும், அவருடைய பிரசுரங்கள் பல அரும்பெரும் பொக்கிஷங்களாகவே கருதப்படுகின்றன.
அவர் சத்தியத்தை நேசித்தாரா?
பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையிலான உறவு சம்பந்தமாக தீர்க்கப்படாமல் இருந்த விவாதத்தைக் குறித்ததில் யூசிபியஸ் அக்கறை காட்டினார். யூசிபியஸ் நம்பியபடி குமாரனுக்கு முன்பே பிதா இருந்தாரா? அல்லது பிதாவும் குமாரனும் ஆரம்பத்திலிருந்தே ஒன்றாக வாழ்ந்தார்களா? “அப்படி ஒன்றாக வாழ்ந்தவர்கள் என்றால் பிதா என்றும் குமாரன் என்றும் எப்படி இருக்க முடியும்” என அவர் கேட்டார். தன்னுடைய நம்பிக்கைக்கு ஆதாரமாக பைபிள் வசனங்களையும் அவர் குறிப்பிட்டார். ‘தம்மைவிட பிதா பெரியவராயிருக்கிறார்’ என்று யோவான் 14:28-லும் தாம் மெய்க் கடவுளால் ‘அனுப்பப்பட்டவர்’ என்று யோவான் 17:3-லும் இயேசு சொன்னதை அவர் குறிப்பிட்டார். கொலோசெயர் 1:15 மற்றும் யோவான் 1:1 வசனங்களைக் குறிப்பிட்டு, லோகாஸ் அல்லது வார்த்தை ‘அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமான’ கடவுளுடைய குமாரனே என விவாதித்தார்.
ஆனால், ஆச்சரியமூட்டும் விஷயம் என்னவெனில், நைசியாவில் ஆலோசனைக் குழுவின் கூட்டத்திற்கு முடிவில் யூசிபியஸ் தன் நம்பிக்கைக்கு எதிரான கருத்துக்கே ஆதரவு அளித்தார். கடவுளும் கிறிஸ்துவும் ஒன்றாகவும் சமமாகவும் இருப்பவர்கள் அல்ல என்ற தன்னுடைய வேதப்பூர்வ நிலைநிற்கைக்கு முரணாக அவர் பேரரசனுக்கு ஒத்திணங்கிப் போனார்.
கற்க வேண்டிய பாடம்
நைசியாவில் நடந்த ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலைக்கு யூசிபியஸ் அடிபணிந்து வேதப்பூர்வமற்ற கோட்பாட்டுக்கு ஏன் ஆதரவளித்தார்? அவர் மனதில் அரசியல் இலட்சியங்கள் ஏதும் இருந்ததா? முதலாவதாக, ஆலோசனைக் குழு கூட்டத்தில் அவர் ஏன் கலந்து கொண்டார்? எல்லா பிஷப்புகளுக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த போதிலும் 300 பேர் மட்டுமே அதில் கலந்து கொண்டார்கள். அப்படியானால், தன் சமுதாய அந்தஸ்தை காத்துக்கொள்வதில் ஒருவேளை யூசிபியஸ் அக்கறையுள்ளவராய் இருந்தாரா? பேரரசன் கான்ஸ்டன்டைன் ஏன் அவரை உயர்வாக கருதினார்? ஆலோசனை கூட்டத்தின் போது பேரரசனின் வலப் பக்கத்தில் யூசிபியஸ் அமர்ந்திருந்தார்.
தம் சீஷர்கள் ‘இந்த உலகத்தின் பாகமாக இருக்கக் கூடாது’ என்ற இயேசுவின் கோரிக்கையை யூசிபியஸ் அசட்டை செய்திருப்பதாகவே தெரிகிறது. (யோவான் 17:16; 18:36) “விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா?” என சீஷனாகிய யாக்கோபு கேட்டார். (யாக்கோபு 4:4) அதோடு, “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக” என பவுல் அறிவுரை கூறியிருப்பது எவ்வளவு பொருத்தமானது! (2 கொரிந்தியர் 6:14) நாமோ பிதாவை “ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்”கிறவர்களாக இவ்வுலகிலிருந்து பிரிந்திருப்போமாக.—யோவான் 4:24.
[பக்கம் 31-ன் படம்]
நைசியாவில் நடந்த ஆலோசனை குழுவின் கூட்டத்தை சித்தரிக்கும் ஓவியம்
[படத்திற்கான நன்றி]
Scala/Art Resource, NY
[பக்கம் 29-ன் படத்திற்கான நன்றி]
Courtesy of Special Collections Library, University of Michigan