கிறிஸ்தவமண்டலம் எப்படி இந்த உலகத்தின் பாகமானது
காலப்போக்கில், பூர்வ கிறிஸ்தவம் ஆரம்பமான ரோம பேரரசு வீழ்ந்தது. கிறிஸ்தவம் புறமதத்தின்மீது முடிவாக வெற்றிசிறந்த சமயமும் அதுவே என்று அநேக சரித்திராசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். ஒரு வித்தியாசப்பட்ட நோக்குநிலையை வெளிப்படுத்துபவராய் ஆங்கிலிக்கன் பிஷப் E. W. பார்ன்ஸ் எழுதினார்: “இலக்கிய வடிவான நாகரிகம் வீழ்ச்சி அடைந்ததும், கிறிஸ்தவம், கிறிஸ்துவாகிய இயேசுவைப்பற்றிய உயரிய விசுவாசமாய் இருக்கத் தவறியது: அது சிதைந்துகொண்டிருக்கும் உலகில் ஒரு சமுதாய சாந்தாகப் பயன்படும் ஒரு மதமாக ஆனது.”—கிறிஸ்தவத்தின் எழுச்சி (The Rise of Christianity).
அந்த வீழ்ச்சிக்குமுன், பொ.ச. இரண்டாம், மூன்றாம், நான்காம் நூற்றாண்டுகளில், இயேசுவைப் பின்பற்றியதாக உரிமைபாராட்டியவர்கள் அநேக வழிகளில் ரோம உலகத்திலிருந்து தங்களைப் பிரித்து வைத்துக்கொண்டதாகச் சரித்திரம் பதிவு செய்திருக்கிறது. ஆனால், இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் முன்னறிவித்தபடி, கோட்பாடு, நடத்தை மற்றும் அமைப்பில் விசுவாச துரோக வளர்ச்சியையும் அது வெளிக்காட்டுகிறது. (மத்தேயு 13:36-43; அப்போஸ்தலர் 20:29, 30; 2 தெசலோனிக்கேயர் 2:3-12; 2 தீமோத்தேயு 2:16-18; 2 பேதுரு 2:1-3, 10-22) முடிவில், கிரேக்க ரோம உலகுடன் விட்டுக்கொடுத்தல்கள் செய்யப்பட்டன; கிறிஸ்தவர்களாக உரிமைபாராட்டிய சிலர் உலகின் புறமதக் கோட்பாடுகளை (அதன் பண்டிகைகள், ஒரு தெய்வத்தாயையும் திரித்துவக் கடவுளையும் வணங்குதல் போன்றவை), அதன் தத்துவம் (ஓர் அழியாத ஆத்துமாவில் நம்பிக்கை போன்றது), அதன் நிர்வாகம் செய்யும் அமைப்பு (ஒரு குருவர்க்கத்தின் தோற்றத்தில் காணப்பட்டதைப் போன்றது) ஆகியவற்றை ஏற்கத் துவங்கினர். இந்தக் கறைப்படுத்தப்பட்ட கிறிஸ்தவ உருதான் புறமத மக்கள் கூட்டத்தைக் கவர்ந்தது; இதையே ரோம பேரரசர்கள் முதலில் ஒழித்துக்கட்ட முயன்றனர்; ஆனால் பின்னர் அதை ஏற்றுக்கொண்டு தங்களுடைய ஆதாயத்திற்காகப் பயன்படுத்த முயற்சி செய்தனர்.
உலகத்தால் ஜெயிக்கப்படுதல்
சர்ச் சரித்திராசிரியர் அகஸ்டஸ் நெயான்டர், “கிறிஸ்தவம்” மற்றும் உலகிற்கு மத்தியிலான இந்தப் புதிய உறவில் உட்பட்டிருந்த ஆபத்துக்களைக் காண்பித்தார். தாங்கள் உலகத்திலிருந்து பிரிந்திருப்பதைக் கிறிஸ்தவர்கள் விட்டுக்கொடுத்தால், “விளைவு என்னவென்றால், உலகத்துடன் சர்ச் ஒரு குழப்பத்தில் இருக்கும் . . . அதன்மூலமாக சர்ச் தன்னுடைய தூய்மையை இழந்துவிடுவாள், மேலும், ஜெயிப்பதாகத் தோற்றமளித்தாலும், அவள் தானே ஜெயிக்கப்படுவாள்,” என்று எழுதினார்.—ஜெனரல் ஹிஸ்டரி ஆஃப் தி கிறிஸ்டியன் ரிலிஜன் அன்ட் சர்ச், தொகுதி 2, பக்கம் 161.
இதுதான் நிகழ்ந்தது. நான்காம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ரோம பேரரசராகிய கான்ஸ்டன்டீன், தன்னுடைய சிதைவுறும் பேரரசைப் பூசுவதற்காகத் தன்னுடைய நாளின் “கிறிஸ்தவ” மதத்தைப் பயன்படுத்த முயற்சி செய்தான். இதை அடைவதற்கு, கிறிஸ்தவர்களாக உரிமைபாராட்டியவர்களுக்கு மத சுதந்திரம் அளித்தான்; மேலும் புறமத குருவர்க்கத்தின் சில சிலாக்கியங்களை, அவர்களுடைய குருவர்க்கத்திற்கு மாற்றம் செய்தான். தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா குறிப்பிடுகிறது: “கான்ஸ்டன்டீன் சர்ச்சை, சமுதாய பொறுப்பேற்கும்படியாக உலகத்திலிருந்து விலகியிருப்பதைவிட்டு வெளியே வரச்செய்து, புறமத சமுதாயத்தை சர்ச்சுக்காக ஆதாயப்படுத்த உதவினார்.”
தேசிய மதம்
கான்ஸ்டன்டீனுக்குப் பிறகு, பேரரசராகிய ஜூலியன் (பொ.ச. 361-363) கிறிஸ்தவத்தை எதிர்க்கவும் புறமதத்தைத் திரும்ப நிலைநாட்டவும் முயற்சி எடுத்தார். ஆனால் அவர் தோல்வியுற்றார்; சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர், பேரரசராகிய முதலாம் தியோடோஷியஸ் புறமதத்திற்குத் தடைவிதித்து, திரித்துவ “கிறிஸ்தவத்தை” ரோம பேரரசின் தேசிய மதமாக அமைத்தார். திறம்பட்ட துல்லியத்துடன் பிரஞ்சு சரித்திராசிரியரான ஆன்ரீ மாரூ எழுதினார்: “தியோடோஷியஸின் ஆட்சியின் முடிவில், கிறிஸ்தவம், அல்லது இன்னும் குறிப்பாகச் சொன்னால், பாரம்பரிய கத்தோலிக்க மதம், முழு ரோம உலகின் அதிகாரப்பூர்வ மதமாக ஆனது.” பாரம்பரிய கத்தோலிக்க மதம் உண்மை கிறிஸ்தவத்தை மாற்றீடு செய்து, ‘உலகத்தின் பாகமாக’ ஆனது. இயேசுவை ஆரம்பத்தில் பின்பற்றியவர்களின் மதத்திலிருந்து இந்தத் தேசிய மதம் வெகுவாக வித்தியாசப்பட்டதாய் இருந்தது; அவர்களிடம் அவர் சொன்னார்: “நீங்கள் உலகத்தின் பாகமாக இல்லை.”—யோவான் 15:19, NW.
பிரஞ்சு சரித்திராசிரியரும் தத்துவ அறிஞருமான லூயீ ரூஸீயா எழுதினார்: “அது பரவுகையில், கிறிஸ்தவம் அடையாளம் காணமுடியாத அளவிற்கு எதிர்பாராத மாற்றங்களை அடைந்தது. . . . தர்மத்தால் பிழைத்த ஏழைகளின் ஆரம்ப சர்ச், அப்போதைய அதிகாரங்களை ஆதிக்கம் செலுத்த முடியாதபோது அவற்றோடு இசைந்து சென்று ஒரு வெற்றி சிறக்கும் சர்ச்சானது.”
பொ.ச. ஐந்தாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ரோமன் கத்தோலிக்க “புனிதர்” அகஸ்டின் கடவுளின் நகரம் (The City of God) என்ற தன்னுடைய பெரிய இலக்கியப் படைப்பை எழுதினார். அதில் “கடவுளுடையதும் மனிதனுடையதுமாகிய” இரண்டு நகரங்களை அவர் விவரித்தார். இந்தப் படைப்பு கத்தோலிக்கரும் உலகமும் பிரிந்திருப்பதை வலியுறுத்தியதா? உண்மையில் இல்லை. பேராசிரியர் லாட்யூரெட் குறிப்பிடுகிறார்: “பூமிக்குரிய மற்றும் பரலோகத்துக்குரிய இந்த இரண்டு நகரங்களும் ஒன்றோடொன்று இணைந்தவை [என்பதாக] அகஸ்டின் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.” “[கத்தோலிக்க] சர்ச் நிறுவப்பட்டதுடன் இந்த உலகத்தில் கடவுளுடைய ராஜ்யம் ஏற்கெனவே தொடங்கியாகிவிட்டது,” என்று அகஸ்டின் கற்பித்தார். (தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா, மேக்ரோப்பீடியா, தொகுதி 4, பக்கம் 506) இவ்வாறு, அகஸ்டினுடைய மூல நோக்கம் என்னவாக இருந்திருப்பினும், அவருடைய கொள்கைகள், கத்தோலிக்க சர்ச்சை இந்த உலகத்தின் அரசியல் விவகாரங்களோடு மிக ஆழமாக ஈடுபடுத்துவதாக இருந்தன.
ஒரு பிளவுபட்ட பேரரசு
பொ.ச. 395-ல் முதலாம் தியோடோஷியஸ் இறந்தபோது, ரோம பேரரசு அதிகாரப்பூர்வமாக இரண்டாகப் பிரிக்கப்பட்டது. கிழக்கத்திய, அல்லது பெஸான்டைன் பேரரசு, கான்ஸ்டான்டிநோப்பிளைத் (முன்னாள் பெஸான்டியம், தற்போது இஸ்டான்பூல்) தன் தலைநகராகவும், மேற்கத்திய பேரரசு, இத்தாலியிலுள்ள ராவென்னாவை தன் தலைநகராகவும் (பொ.ச. 402-ற்குப்பின்) கொண்டிருந்தன. அதன் விளைவாக, கிறிஸ்தவமண்டலம் அரசியல்சம்பந்தமாகவும் மதசம்பந்தமாகவும் பிளவுபட்டதாயிற்று. சர்ச்சுக்கும் தேசத்திற்கும் இடையிலுள்ள உறவுகளைக்குறித்ததில், கிழக்கத்திய பேரரசு, செசரியாவிலுள்ள யுஸீபியஸின் (மகா கான்ஸ்டன்டீனின் காலத்தில் வாழ்ந்தவர்) கொள்கையைப் பின்பற்றியது. உலகத்திலிருந்து பிரிந்திருத்தல் என்ற கிறிஸ்தவ நியமத்தைப் புறக்கணிப்பவராய், பேரரசரும் பேரரசும் கிறிஸ்தவமாகிவிட்டால், சர்ச்சும் தேசமும் ஒரே கிறிஸ்தவ சமுதாயமாகும் என்றும், அது பேரரசரைப் பூமியிலுள்ள கடவுளுடைய பிரதிநிதியாகக் கொண்டிருக்கும் என்றும் யுஸீபியஸ் வாதாடினார். பொதுவாக, சர்ச்சுக்கும் தேசத்திற்கும் இடையிலான இந்த உறவு நூற்றாண்டுகளாக கிழக்கத்திய பாராம்பரிய சர்ச்சுகளால் பின்பற்றப்பட்டிருக்கிறது. தி ஆர்த்தடாக்ஸ் சர்ச் என்ற தன்னுடைய புத்தகத்தில் ஒரு பாரம்பரிய பிஷப்பாகிய தீமோத்தி உவார் விளைவைக் காண்பித்தார்: “கடந்த பத்து நூற்றாண்டுகளாக தேசப்பற்று பாரம்பரியத்துவத்தின் அழிவுக்குக் காரணமாக இருந்திருக்கிறது.”
மேற்கில், படையெடுக்கும் ஜெர்மானிய இனத்தவரால், கடைசி ரோமப் பேரரசர் பொ.ச. 476-ல் முடிதுறக்கச் செய்யப்பட்டார். இது மேற்கத்திய ரோம பேரரசின் முடிவைக் குறித்தது. அதன் விளைவாக ஏற்பட்ட அரசியல் வெறுமையைக்குறித்து, தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா குறிப்பிடுகிறது: “ஒரு புதிய வல்லமை உருவமைக்கப்பட்டது: ரோம சர்ச், ரோம பிஷப்பின் சர்ச். இந்த சர்ச், மறைந்த ரோமப் பேரரசின் வாரிசாகத் தன்னை நினைத்துக்கொண்டது.” இந்த என்ஸைக்ளோப்பீடியா தொடர்ந்து சொல்கிறது: “ரோம போப்புகள், . . . சர்ச்-அரசாங்கம் என்பதன் எல்லைகளுக்கு அப்பால் சென்று, சர்ச்சின் அரசாங்கம் வேண்டுமென்ற மதசார்பற்ற கோரிக்கையை விடுத்து, கிறிஸ்து, போப்புக்கு சர்ச் மீதான ஆவிக்குரிய அதிகாரத்தை மட்டுமல்ல, ஆனால் உலகப்பிரகாரமான ராஜ்யங்களின்மீது உலகத்தைச்சார்ந்த அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறார் என்று குறிப்பிடும் இரு வாள்கள் என்று சொல்லப்பட்ட கொள்கையை உருவாக்கினர்.”
தேசிய புராட்டஸ்டன்ட் சர்ச்சுகள்
இடைக்காலத்தினூடே, பாரம்பரிய மற்றும் ரோமன் கத்தோலிக்க மதங்கள் தொடர்ந்து அரசியலிலும், உலகப்பிரகாரமான சதித்திட்டங்களிலும், போர்களிலும் மிகுதியாக ஈடுபட்டுக்கொண்டிருந்தன. உலகத்திலிருந்து பிரிந்திருக்கும் உண்மைக் கிறிஸ்தவத்திற்கு ஒரு திரும்பிவருதலைக் குறிப்பதாக 16-ம் நூற்றாண்டின் புராட்டஸ்டன்ட் சீர்த்திருத்தம் இருந்ததா?
இல்லை. தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்காவில் நாம் வாசிக்கிறோம்: “லூத்தரன், கால்வினிஸ்ட், ஆங்கிலிக்கன் பாரம்பரியங்களின் புராட்டஸ்டன்ட் சீர்திருத்தவாதிகள் . . . அகஸ்டினின் கருத்துக்களை உறுதியாகப் பற்றியிருந்தனர்; அவருடைய இறைமையியலுக்கு அவர்கள் ஒரு தனிப்பட்ட கவர்ச்சியைக் கொண்டிருந்தனர். . . . பதினாறாம் நூற்றாண்டின் மூன்று முக்கிய புராட்டஸ்டன்ட் பாரம்பரியங்களில் ஒவ்வொன்றும் . . . சாக்ஸனி [மத்திய ஜெர்மனி], ஸ்விட்ஸர்லாந்து, மற்றும் இங்கிலாந்தில் உள்ள உலகப்பிரகாரமான அதிகாரிகளிடமிருந்து ஆதரவைப் பெற்று, இடைக்கால சர்ச் அரசாங்கத்தோடு கொண்டிருந்த அதே நிலையில் தொடர்ந்திருந்தன.”
உண்மையான கிறிஸ்தவத்திற்கு ஒரு திரும்பிவருதலைக் கொண்டுவருவதற்கு மாறாக, அந்தச் சீர்திருத்தம், அரசியல் நாடுகளின் நட்பைப் பெற்றுக்கொண்டு அவர்களுடைய போர்களில் அவர்களுக்கு ஊக்கமாக ஆதரவளித்த பெரும் எண்ணிக்கையான தேசிய அல்லது பிராந்திய சர்ச்சுகளைப் பிறப்பித்தன. உண்மையில், கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டன்ட் சர்ச்சுகள் மதப்போர்களைத் தூண்டியிருக்கின்றன. மதத்திடமாக ஒரு சரித்திராசிரியனின் அணுகுமுறை (An Historian’s Approach to Religion) என்ற தன்னுடைய புத்தகத்தில் அர்னால்ட் டாயின்பீ அத்தகைய போர்களைப்பற்றி எழுதினார்: “அவர்கள் படைப்பலத்தைக்கொண்டு ஒருவரையொருவர் கீழடக்க முயலும் முரட்டுத்தனமான செயலில், பிரான்ஸ், நெதர்லாந்து, ஜெர்மனி மற்றும் ஐயர்லாந்தில் கத்தோலிக்கரையும் புராட்டஸ்டன்டினரையும், மேலும் இங்கிலாந்திலும் ஸ்காட்லாந்திலும் போட்டியிடும் புராட்டஸ்டன்ட் உட்பிரிவுகளையும், காட்சியில் வைத்தனர்.” ஐயர்லாந்தையும் முன்னாள் யுகோஸ்லாவியாவையும் பிரித்துக்கொண்டிருக்கும் தற்போதைய சண்டை சச்சரவுகள் ரோமன் கத்தோலிக்க, பாரம்பரிய, மற்றும் புராட்டஸ்டன்ட் சர்ச்சுகள் இன்னும் உலக விவகாரங்களில் ஆழ்ந்து ஈடுபட்டிருக்கின்றன என்று காண்பிக்கின்றன.
உலகத்திலிருந்து பிரிந்திருக்கும் உண்மை கிறிஸ்தவம் இனிமேலும் பூமியில் இல்லை என்பதை இவை யாவும் அர்த்தப்படுத்துகின்றனவா? பின்தொடரும் கட்டுரை அந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும்.
[பக்கம் 10, 11-ன் பெட்டி/படங்கள்]
“கிறிஸ்தவம்” எவ்வாறு ஒரு தேசிய மதமானது
கிறிஸ்தவம் ஒருபோதும் உலகத்தின் பாகமாய் இருப்பதற்காக அமைக்கப்படவில்லை. (மத்தேயு 24:3, 9; யோவான் 17:16) இருந்தாலும், பொ.ச. நான்காம் நூற்றாண்டில், “கிறிஸ்தவம்” ரோமப் பேரரசின் அதிகாரப்பூர்வமான தேசிய மதமானதாக சரித்திரப் புத்தகங்கள் நமக்குச் சொல்கின்றன. இது எவ்வாறு நிகழ்ந்தது?
நீரோவில் (பொ.ச. 54-68) துவங்கி பொ.ச. மூன்றாம் நூற்றாண்டினுள் வரையாக எல்லா ரோமப் பேரரசர்களும் கிறிஸ்தவர்களை மும்முரமாகத் துன்புறுத்தினர் அல்லது அவர்களைத் துன்புறுத்துவதற்கு அனுமதித்தனர். அவர்களைப் பொறுத்துக்கொள்வதற்கு ஓர் அறிவிப்பை வெளியிட்ட முதல் ரோமப் பேரரசர் காலியீனஸ் (பொ.ச. 253-268) ஆவர். அப்படியிருந்தும், அந்தப் பேரரசு முழுவதும் கிறிஸ்தவம் ஒரு விலக்கப்பட்ட மதமாக இருந்தது. காலியீனஸிற்குப்பின், துன்புறுத்தல் தொடர்ந்தது; டயோக்லேஷியன் (பொ.ச. 284-305) மற்றும் அவனை அடுத்துப் பின்தொடர்ந்தவர்களின்கீழ், அது தீவிரமாக்கவும்பட்டது.
நான்காம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், பேரரசராகிய முதலாம் கான்ஸ்டன்டீனின் பெயரளவிலான மதமாற்றத்துடன், திருப்பம் ஏற்பட்டது. இந்த “மதமாற்றத்தை”க்குறித்து, பிரஞ்சு புத்தகமாகிய டாவ்—நியூவெல் ஆன்ஸிக்ளோப்பேடீ காடோலெக் (தியோ—புதிய கத்தோலிக்க என்ஸைக்ளோப்பீடியா) குறிப்பிடுகிறது: “கான்ஸ்டன்டீன் ஒரு கிறிஸ்தவ பேரரசராக உரிமைபாராட்டினார். உண்மையில், அவர் தன்னுடைய மரணப்படுக்கையில்தான் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டார்.” இருப்பினும், பொ.ச. 313-ல், கான்ஸ்டன்டீனும் அவருடைய உடன் பேரரசரான லைஸீனியஸும், கிறிஸ்தவர்களுக்கும் புறமதத்தினருக்கும் ஒரேவிதமான மதச் சுதந்திரத்தை அளிக்கும் ஓர் ஆணையைப் பிறப்பித்தனர். நியூ கத்தோலிக் என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது: “புறமதம் மட்டுமன்றி கிறிஸ்தவமும் அதிகாரப்பூர்வமாக ஒரு ரிலிஜியோ லைக்கிட்டா [சட்டப்பூர்வ மதம்] என்று ஏற்கப்பட்டதைக் குறிக்கும் மதச் சுதந்திரத்தைக் கிறிஸ்தவர்களுக்கு கான்ஸ்டன்டீன் அளித்தது ஒரு புரட்சிகரமான செயலாகும்.”
இருப்பினும், தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா அறிவிக்கிறது: “அவர் [கான்ஸ்டன்டீன்] கிறிஸ்தவத்தை அந்தப் பேரரசின் மதமாக்கவில்லை.” இன்ஸ்டிட்டியூட் ஆஃப் பிரான்ஸின் அங்கத்தினரான பிரஞ்சு சரித்திராசிரியர் ஷான்ரேமீ பலான்க் எழுதுகிறார்: “ரோம தேசம் . . . எப்படியும், சட்டப்படி புறமதத்தைச்சார்ந்ததாக நிலைத்திருந்தது. மேலும் கான்ஸ்டன்டீன் கிறிஸ்துவின் மதத்தைப் பற்றியவராக இருக்கையில், அந்த நிலைமைக்கு ஒரு முடிவைக் கொண்டுவரவில்லை.” தி லெகஸி ஆஃப் ரோம் என்ற இலக்கியப்படைப்பில் பேராசிரியர் எர்னஸ்ட் பார்க்கர் குறிப்பிட்டார்: “[கான்ஸ்டன்டீனின் வெற்றி] கிறிஸ்தவத்தைத் தேசிய மதமாக உடனடியாக ஸ்தாபிப்பதில் விளைவடையவில்லை. கிறிஸ்தவத்தைப் பேரரசின் பொதுப்படையான வணக்கமுறைகளில் ஒன்றாக ஏற்பதோடு கான்ஸ்டன்டீன் திருப்தி அடைந்தார். அடுத்த எழுபது வருடங்களுக்குப் பழைய புறமத சடங்குகள் ரோமில் அதிகாரப்பூர்வமாகச் செய்யப்பட்டன.”
ஆகவே இந்தக் கட்டத்தில், ரோம பேரரசில் “கிறிஸ்தவம்” ஒரு சட்டப்பூர்வமான மதமாக இருந்தது. அது அந்தப் பதத்தின் முழுமையான அர்த்தத்தில், எப்போது அதிகாரப்பூர்வமான தேசிய மதமானது? நியூ கத்தோலிக் என்ஸைக்ளோப்பீடியாவில் நாம் வாசிக்கிறோம்: “[கான்ஸ்டன்டீனின்] கொள்கைமுறை ஜூலியனைத்தவிர [பொ.ச. 361-363] அவரைப் பின்தொடர்ந்தவர்களாலும் கைக்கொள்ளப்பட்டது; அவர் கிறிஸ்தவத்தைத் துன்புறுத்தியது, அவருடைய மரணத்தால் ஒரு திடீர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. முடிவாக, 4-ஆம் நூற்றாண்டின் கடைசி காற்பகுதியில், மகா தியோடோஷியஸ் [பொ.ச. 379-395] கிறிஸ்தவத்தை அந்தப் பேரரசின் அதிகாரப்பூர்வமான மதமாக்கி, வெளிப்படையான புறமத வணக்கத்தை அடக்கி கீழ்ப்படுத்தினார்.”
இதை உறுதிப்படுத்துவதாயும் இந்தப் புதிய தேசிய மதம் என்ன என்பதை வெளிப்படுத்துவதாயும், பைபிள் அறிஞரும் சரித்திராசிரியருமான F. J. ஃபோக்ஸ் ஜாக்ஸன் எழுதினார்: “கான்ஸ்டன்டீனின்கீழ் கிறிஸ்தவமும் ரோம பேரரசும் ஒன்றுகூட்டப்பட்டது. தியோடோஷியஸின்கீழ் அவை இணைக்கப்பட்டன. . . . இதுமுதற்கொண்டு, கத்தோலிக்கன் என்ற பட்டம் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகியோரைச் சமமான பயபக்தியுடன் வணங்குவோருக்கு மட்டுமே ஒதுக்கப்படுவதாக இருந்தது. இதற்காக, இந்தப் பேரரசரின் முழு மதக் கொள்கைமுறையும் இதற்காகவே செலுத்தப்பட்டு, கத்தோலிக்க மதம் ரோமர்களின் ஒரே சட்டப்பூர்வமான மதமாவதில் விளைவடைந்தது.”
ஷான்ரேமீ பலான்க் எழுதினார்: “தியோடோஷியஸ், புறமதத்தை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கையில், பாரம்பரிய [கத்தோலிக்க] சர்ச்சின் ஆதரவிற்காகவும் முன்வந்தார்; பொ.ச. 380-ன் அவருடைய ஆணையில், தன்னுடைய எல்லா பிரஜைகளும் போப் டாமஸஸ் மற்றும் அலெக்சான்டிரியாவின் [திரித்துவ] பிஷப்பின் விசுவாசத்தைப் பற்றிக்கொள்ளவேண்டும் என்று கட்டளையிட்டு, ஏற்க மறுத்தவர்கள் மதச் சுதந்திரத்தை இழக்கச்செய்தார். கான்ஸ்டான்டிநோப்பிளின் மகா ஆலோசனை சபை (381) திரும்பவும் எல்லா முரண்சமய கருத்துக்களையும் கண்டனம் செய்தது; அவற்றை எந்தப் பிஷப்பும் ஆதரிக்காதபடி பேரரசர் கவனித்துக்கொண்டார். நைசீய [திரித்துவ] கிறிஸ்தவம் நன்கு, உண்மையான தேசிய மதமாகிவிட்டது . . . சர்ச் தேசத்துடன் நெருங்க இணைந்திருந்து அதன் தனிப்பட்ட ஆதரவை அனுபவித்தது.”
இவ்வாறு, அப்போஸ்தலர் நாட்களிலிருந்த கலப்படம் செய்யப்படாத கிறிஸ்தவம், ரோமப் பேரரசின் தேசிய மதமாகவில்லை. பேரரசர் முதலாம் தியோடோஷியஸால் பலவந்தமாகச் சுமத்தப்பட்டதும், இப்போது இருப்பதைப்போலவே அப்போது இருந்த ரோமன் கத்தோலிக்க சர்ச்சால் கடைப்பிடிக்கப்பட்டுவருவதுமான நான்காம் நூற்றாண்டு திரித்துவ கத்தோலிக்க மதம், உண்மையிலே இந்த உலகத்தின் ஒரு பாகமாக இருக்கிறது.
[படத்திற்கான நன்றி]
Emperor Theodosius I: Real Academia de la Historia, Madrid (Foto Oronoz)
[பக்கம் 8 படத்திற்கான நன்றி]
Scala/Art Resource, N.Y.