மதத்தின் கடந்தகால கண்ணோட்டத்தில் அதன் எதிர்காலம்
பகுதி 12: பொ.ச. 100–476சுவிசேஷ ஒளியை அணைத்துப்போடுதல்
“பெரும்பான்மையான மக்கள் தங்களை சுத்திகரித்துக்கொள்வதற்குப் பதிலாகச் சத்தியத்தைக் கலப்படம் செய்வதைச் சுலபமாகக் கண்டனர்.” சார்ல்ஸ் காலேப் கால்டன், 19-வது நூற்றாண்டு ஆங்கில மதகுரு
கிறிஸ்தவ மதத்தின் ஸ்தபகரை ரோம் பொ.ச. 33-ன் ஆரம்பத்தில் மரணத்திற்கு உட்படுத்தியபோது, பைபிள் சரித்திரத்தின் அந்த ஆறாவது உலக வல்லரசு கிறிஸ்தவர்களுக்கு ஒவ்வாத ஒன்றாய் இருந்தது. அது அவர்களைச் சிறைப்படுத்தியது, சிலரை சிங்கங்களின் வாய்க்கு ஒப்புவித்தது. ஆனால் நீரோவின் தோட்டங்களுக்கு ஒளியூட்டுவதற்காக மானிடத் தீப்பந்தங்களாய் இரத்தச்சாட்சியாக மரிக்கும் அச்சுறுத்தலின் மத்தியிலும், முதல் நூற்றாண்டு ரோம கிறிஸ்தவர்கள் தங்களுடைய ஆவிக்குரிய ஒளியைத் தொடர்ந்து வீசிக்கொண்டிருந்தனர். (மத்தேயு 5:14) என்றபோதிலும் காலப்போக்கில் நிலைமை மாறியது.
“மூன்றாவது நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில் சர்ச் மதிப்பு மரியாதைக்குரிய ஒன்றாய் இருக்க ஆரம்பித்தது,” என்று கிறிஸ்து முதல் கான்ஸ்டன்டீன் வரை என்ற நூல் குறிப்பிடுகிறது. ஆனால் மதிப்பு மரியாதை, “தராதரங்கள் குறைக்கப்படுவதில்,” விளைவடைந்தது. எனவே, “கிறிஸ்தவ வாழ்க்கை கிறிஸ்தவ விசுவாசத்திற்கு ஒரு தேவையாக இனிமேலும் இருக்கவில்லை.”
சுவிசேஷ ஒளி மங்கலாகிவிட்டது. “நான்காவது நூற்றாண்டில் கிறிஸ்தவ எழுத்தாளர்கள் உரிமைப்பாராட்டியது என்னவெனில், ஒரு கிறிஸ்தவனாகவும் ரோமனாகவும் இருப்பது கூடிய காரியம் என்பது மட்டுமல்லாமல், ரோமின் நீண்ட சரித்திரம் உண்மையில் கிறிஸ்தவக் காவியத்தின் ஆரம்பம் . . . ரோம் தெய்வீக நியமனத்தைக்கொண்டது என்பதே அதன் ஊகிப்பு,” என்று ரோமப் பேரரசு என்ற நூல் கூறுகிறது.
இந்தக் கருத்தை ரோமப் பேரரசனாயிருந்த மகா கான்ஸ்டன்டீன் ஏற்றவனாயிருந்தான். பொ.ச. 313-ல் கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவ மதத்தை சட்டப்பூர்வமான மதமாக்கினான். மதத் தலைவர்களை அரசுப் பணியில் அமர்த்தி, மத விவாகரங்களை அரசு கட்டுப்படுத்த அனுமதித்து சர்ச்சையும் தேசத்தையும் ஒன்று சேர்ப்பதன் மூலம் கான்ஸ்டன்டீனின் சேவை உண்மையில் தவறான சேவையாக இருந்தது.
இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் அந்தியோகியாவின் மேற்றிராணியார் இக்னேஷியஸ், சபை சார்ந்த அரசு என்ற ஒரு புதிய முறையை ஏற்கெனவே அறிமுகப்படுத்தியிருந்தார். சபைப் பொறுப்பு ஒரு மூப்பர் குழுவால் கவனிக்கப்பட்டுவருவதற்குப் பதிலாக, மேற்றிராணிய முடியரசு ஒவ்வொரு சபைக்கும் பொறுப்பாளராக ஒரு தனி சர்ச்நபரை ஏற்படுத்தியது. ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர், கார்தேஜின் மேற்றிராணியார் சைப்ரியன் இந்தச் சமயகுருமாராட்சி முறையை ஏழு நிலைகொண்ட சமய குருமாராட்சியாக விரிவாக்கினார், இதில் மேற்றிராணியார் பிரதான ஸ்தனத்தை வகித்தார். அவருக்குக் கீழ் குருமார்கள், துணை குருமார்கள், உதவி குருமார்கள் போன்ற மற்ற ஸ்தனங்கள் இருந்தன. மேற்கத்திய சர்ச் ஓர் எட்டாவது ஸ்தனத்தை ஏற்படுத்திட, கிழக்கத்திய சர்ச் ஐந்து ஸ்தனங்களைக்கொண்ட சமய குருமாராட்சியில் திருப்தி கண்டது.
தேசிய அரசின் அங்கீகாரம் இணைந்த இந்த முறை எதற்கு வழிநடத்தியது? இம்பீரியல் ரோம் என்ற நூல் விளக்குகிறது: “கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட மிகுந்த துன்புறுத்தலின் கடைசி அலைக்குப் பின்பு 80 ஆண்டுகள் மட்டுமே கடந்திருக்க, சர்ச்தானே அதற்கு எதிரான கோட்பாடுகளை நம்பியவர்களை மரணத்திற்கு உட்படுத்த ஆரம்பித்தது, மற்றும் அதன் சபைகுருக்கள் ஏறக்குறைய பேரரசருக்குச் சமமான அதிகாரத்தைச் செலுத்துகிறவர்களாக இருந்தனர்.” தம்முடைய சீஷர்கள் “உலகத்தின் பாகமானவர்களல்ல”, அதைப் படைபலத்தால் அல்ல ஆனால் அவர்களுடைய விசுவாசத்தால் ஜெயிக்க வேண்டும் என்று இயேசு சொன்னபோது மேற்குறிப்பிடப்பட்ட காரியத்தைத் தம் மனதில் கொண்டில்லை என்பது நிச்சயம்.—யோவான் 16:33; 17:14; 1 யோவான் 5:4-ஐ ஒப்பிடவும்.
“புனிதர்களும்” கிரேக்க கடவுட்களும்
கான்ஸ்டன்டீனின் காலத்திற்கு வெகுநாட்களுக்கு முன்பே புறமத கருத்துகள் கிறிஸ்தவ மதத்தைக் கலப்படம் செய்திருந்தன. ரோமின் மதத்தில் ஒரு சமயத்தில் பலமாக செல்வாக்கு செலுத்தியிருந்த கிரீஸின் கற்பனைக் கடவுட்கள் கிறிஸ்தவ மதத்தின்மீதும் செல்வாக்கு செலுத்த தொடங்கியிருந்தன. “ரோம் ஒரு பேரரசாக ஆவதற்குள்ளாக ஜூப்பிட்டர் கிரேக்கரின் ஜீயஸுக்கு இணையாக அமைந்தது. . . . பின்னர் சிறந்ததும் மகா மேன்மையுமான ஜூப்பிட்டர் ஆப்டிமஸ் மாக்ஸிமஸாக வணங்கப்பட்டது, இந்த வழக்குச்சொற்கள் பின்னர் கிறிஸ்தவ மதத்திற்குள்ளும் ஏற்கப்பட்டு, பல நினைவுச் சின்னங்களில் காணப்படுகிறது,” என்று ரோமன் மித்தாலஜி என்ற நூல் கூறுகிறது. தி நியு என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா தொடர்ந்து கூறுகிறது: “கிறிஸ்தவ மதத்தின் கீழ் தீரச் செயல் நடப்பித்த கிரேக்கரும் தெய்வங்களுங்கூட புனிதர்களாகப் பிழைத்தனர்.”
“அநேக தெய்வங்கள் கலப்புற ஆரம்பித்தன, பிராந்திய வேறுபாடுகள் மங்க ஆரம்பித்தன. . . . ” என்று விளக்குகிறார் எழுத்தாசிரியர் M.A. ஸ்மித். “வெவ்வேறு தெய்வங்கள் ஒரு மகா சக்திக்குரிய வித்தியாசமான பெயர்கள்தான் என்று மக்கள் நினைக்கலாயினர். . . . எகிப்திய இஸிஸ், எபேசியரின் ஆர்ட்டெமிஸ், மற்றும் சீரியரின் அஸ்தார்த் ஒன்றுசேர்க்கப்படலாம். கிரேக்கரின் ஜீயஸ், ரோமரின் யூப்பித்தர், எகிப்திய அம்மோன்-ரே, யூதரின் யாவேயுங்கூட அந்த ஒரு மகா சக்தியைப் பிரார்த்திக்க பயன்படுத்தக்கூடிய பெயர்களாகும்.”
ரோமில் கிரேக்கர் மற்றும் ரோமரின் கருத்து ஒன்றுபட, கிறிஸ்தவ மதம் மற்ற இடங்களிலும் மாற்றங்களைக் கண்டுவந்தது. அலெக்சாண்டிரியா, அந்தியோகியா, கார்த்தேஜ், மற்றும் இதெஸா ஆகிய இடங்கள் எல்லாமே மதவியல் நடவடிக்கைகளின் மைய இடங்களாக அமைய, தனி மதக் கருத்துப் பள்ளிகளை விருத்திசெய்தனர். கேன்டர்பரியின் முன்னாள் ஆங்கில நாட்டுத் திருச்சபையின் தலைமைக் குருப்பணியிலிருந்த ஹெர்பர்ட் உவாடம்ஸ் கூறுவதாவது, உதாரணமாக அலெக்சாண்டிரியன் பள்ளி “குறிப்பாக ப்ளேட்டோ கருத்துகளால் செல்வாக்குச் செலுத்தப்பட்டதாக இருந்தது,” பெரும்பகுதியான “பழைய ஏற்பாட்டு” கூற்றுகளுக்கு உருவகப் பொருளை வழங்கியது. அந்தியோகியா பள்ளி பைபிளினிடமாக ஒரு நேரடியான, குறைகாணும் மனப்பான்மையை ஏற்றது.
தூரம், பேச்சுத்தொடர்பின்மை, மற்றும் மொழி சார்ந்த தப்பெண்ணங்கள் அந்த வித்தியாசங்களை வளர்த்தன. என்றபோதிலும், அந்த நிலைமைக்கு முக்கிய காரணமாக இருந்தது என்னவென்றால், தனிப்பட்ட நன்மை கருதி சத்தியத்தைக் கலப்படம் செய்ய மனமுள்ளவர்களாயிருந்த மதத் தலைவர்களின் சுயாதீன ஆவியும் தன்னலப் பேராசையுமாகும், இப்படியாக சுவிசேஷத்தின் ஒளியை அணைத்துப்போட்டனர்.
“‘ஞானமென்று’ பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கை”
முதல் நூற்றாண்டிலேயே, கிறிஸ்தவ மதம் பொய் மதப் போதனைகளின் செல்வாக்கின் கீழ் வந்ததால் பவுல் தீமோத்தேயுவை, “ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கு விலகி”யிருக்க எச்சரித்தான். (1 தீமோத்தேயு 6:20, 21) இது இரண்டாவது நூற்றாண்டில் பிரபலமான மறையியல் சார்ந்த இயக்கத்தைக் (Gnosticism) குறிப்பதாயிருக்கக்கூடும், இது முதல் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம், அநேகமாய்ச் சீமோன் மேகஸ் என்பவனோடு ஆரம்பித்திருக்கலாம். இது பைபிளில் அப்போஸ்தலர் 8:9-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் சீமோனுடன் சம்பந்தப்பட்டதாயிருக்கக்கூடும் என்று சில அதிகாரிகள் உரிமைப் பாராட்டுகின்றனர்.
மறையியல் சார்ந்த அந்த இயக்கம் “அறிவு” என்று பொருள்படும் கிரேக்க வார்த்தையாகிய நாசிஸ் (gnosis) என்ற சொல்லிலிருந்து தன் பெயரைப் பெற்றது. சாதாரண கிறிஸ்தவர்கள் அறிந்திராத ஆழ்ந்த காரியங்களின் விசேஷ இரகசிய அறிவின்பேரில்தான் இரட்சிப்பு அடங்கியிருக்கிறது என்று அந்த மறையியல் சார்ந்த இயக்கத்தினர் கூறினர். இந்த அறிவைப் பெற்றிருப்பது, மத என்சைக்ளோபீடியா என்ற நூல் கூறுவதுபோல், “இயேசு வெளிப்படுத்திய ஆழத்தில் காணப்படும் சத்தியத்”தைக் கற்பிக்க அவர்களுக்கு உதவுகிறது என்று உணர்ந்தனர்.
மறையியல் சார்ந்த இயக்கத்தின் கருத்துகளின் மூலங்கள் பல. பைபிள் எண்களுக்கு மறைந்த அர்த்தங்களைக் கொடுக்கும் பழக்கத்தை அவர்கள் பாபிலோனிலிருந்து எடுத்துக்கொண்டனர். அவை இரகசிய உண்மைகளை வெளிப்படுத்துவதாகக் கருதப்பட்டது. ஆவி நல்லதுதான், எல்லாமே அடிப்படையில் பொல்லாதது என்றும்கூட அவர்கள் கற்பித்தனர். “இது பாரசீகத் துவைதத்திலும் கிழக்கத்திய சீனாவின் ‘யின்’ மற்றும் ‘யாங்’ சமயத்திலும் ஏற்கெனவே காணப்பட்ட அதே விவாதச் சங்கிலி,” என்கிறார் ஜெர்மன் ஆசிரியர் கார்ல் ஃப்ரிக். “மறையியல் இயக்கத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்ட “கிறிஸ்தவம்” நிச்சயமாகவே கிறிஸ்தவமல்லாத மூலாதாரங்களைச் சார்ந்திருக்கிறது. எனவே இது எப்படி “இயேசு வெளிப்படுத்திய ஆழத்தில் காணப்படும் சத்தியமாக” இருக்க முடியும்?
அறிஞர் R.E.O. வைட் மறையியல் இயக்கத்தை “தத்துவ ஊகம், மூடநம்பிக்கை, பகுதியளவான மந்திரம் சார்ந்த சடங்குகள், சிலசமயங்களில் மூட வைராக்கியமும் ஆபாசமான சமய வழிபாடு ஆகிய காரியங்களின் ஒரு கூட்டு,” என்கிறார். அரிஜோனா பல்கலைக்கழகத்தின் ஆண்ட்ரு M. கிரீலி கூறுகிறார்: “மறையியல் சார்ந்த இயக்கத்தினரின் இயேசு சிலசமயங்களில் இசைவில்லாத, சிலசமயங்களில் அறிவில்லாத, சிலசமயங்களில் புல்லரிக்கச்செய்வதில் சற்று மிஞ்சியும் இருக்கிறார்.”
கிறிஸ்துவைப்பற்றிய உண்மையைப் புரட்டுதல்
கிறிஸ்துவைப் பற்றிய உண்மையைப் புரட்டுவதில் மறையியல் இயக்கத்தினர் தனித்து இல்லை. நெஸ்டோரியஸ், கான்ஸ்டான்டிநோப்பிளின் ஐந்தாம் நூற்றாண்டு கோத்திரப்பிதா, கிறிஸ்து ஒருவரில் இருவர் என்று கற்பித்தார். மானிடராயிருந்த இயேசுவும், கடவுளுடைய தெய்வீகக் குமாரனும் ஆவார். கிறிஸ்துவைப் பெற்றெடுத்த மரியாள் மனிதனைப் பெற்றெடுத்தாள், தெய்வீகக் குமாரனை அல்ல. இந்தக் கருத்து “ஒரே இயல்பு” கோட்பாட்டுக்கு இணக்கமாயிருக்கவில்லை; இந்தக் கோட்பாடு பிரகாரம் கடவுளுக்கும் குமாரனுக்கும் இடையிலான ஒருமைப்பாடு பிரிக்கமுடியாதது, இரண்டு இயல்புகளாலானது என்றாலும், இயேசு உண்மையில் ஒருவரே, முழுமையாகக் கடவுளும் அதேசமயத்தில் முழுமையாக மனிதருமாவார். இதற்கிசைவாக, மரியாள் கடவுளைத்தான் பெற்றெடுத்திருக்க வேண்டும், வெறுமென மானிட இயேசுவை அல்ல.
இரண்டு கோட்பாடுகளுமே முந்தைய நூற்றாண்டில் எழும்பியிருந்த ஒரு முரண்பாட்டின் விளைவுகளாயிருந்தன. ஓர் அலெக்சாண்ட்ரிய குரு ஏரியஸ் கிறிஸ்து பிதாவுக்குக் கீழானவர் என்று விவாதித்தார். எனவே, கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் இருக்கும் உறவை விளக்குகையில் அவர் ஹோமூசியஸ் (ஒரே வஸ்துவாலானவர்) என்ற பதத்தைப் பயன்படுத்த மறுத்தார். இயேசு ‘பிதாவைப்போன்று அதே வஸ்துவாலானவர்’ என்று சொல்லி நைசியா ஆலோசனைச் சங்கம் அவருடைய கருத்தை பொ.ச. 325-ல் மறுத்தது. கிறிஸ்து கடவுள் அவதாரம் என்று பொ.ச. 451-ல் சால்சிடன் ஆலோசனைக் குழு கூறியது. ஒரு திரியேக தெய்வத்தைப் பற்றிய பாபிலோனிய, எகிப்திய, கிரேக்க கோட்பாடு கிறிஸ்துவும் அவருடைய பிதாவும் இரண்டு வித்தியாசமான நபர்கள், எந்தவிதத்திலும் சமமானவர்கள் அல்ல என்ற கிறிஸ்துவின் போதனையை மறைத்துவிட்டது.—மாற்கு 13:32; யோவன் 14:28.
உண்மையில், டெர்ட்டூலியன் (சுமார் பொ.ச. 160–சுமார் பொ.ச. 230) வடஅமெரிக்க சர்ச்சின் ஓர் உறுப்பினர் “ட்ரினிடாஸ்” என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார், இது ஏரியஸ் பிறப்பதற்கு சற்று முன்பு கிறிஸ்தவ மதத்தின் புழக்கத்திற்கு வந்தது. டெர்ட்டூலியன்தான் கிரேக்குக்குப் பதில் லத்தீனில் பரவலாக எழுதிய முதல் இறைமையியலர், மேற்கத்திய இறைமையியலுக்கு அஸ்திவாரம் போடுவதற்கு உதவியாயிருந்தார். அதுபோலவேதான் ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வந்த வடஆப்பிரிக்க இறைமையியலர் “புனிதர்” அகஸ்டீன். “[அகஸ்டீன்] கிறிஸ்தவப் பழமையின் மிகப் பெரிய சிந்தனையாளராகப் பொதுவாக அங்கீகரிக்கப்படுகிறார்,” என்கிறது தி நியு என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா. ஆனால் அதன் அடுத்த வார்த்தைகள் எல்லா உண்மையான கத்தோலிக்கருக்கும் அல்லது புராட்டஸ்டன்டினருக்கும் அக்கறைக்குரியவை: “அவனுடைய மனது புதிய ஏற்பாட்டின் மதம் கிரேக்க தத்துவத்தின் ப்ளேட்டோனிய பாரம்பரியத்துடன் முழுவதுமாய் ஒன்றாய்க் கலந்துவிட்ட உருக்கலமாயிருந்தது; இந்தக் கலப்பில் வந்த பலன் இடைக்கால ரோமன் கத்தோலிக்க மதம் மற்றும் மறுமலர்ச்சிப் புராட்டஸ்டன்ட் மதமுமான கிறிஸ்தவமண்டலத்திற்குக் கடத்தப்பட்டது.”
கத்தோலிக்க மதம் நெருக்கடியிலிருக்கிறது
நான்காவது நூற்றாண்டின் முடிவில் பேரரசன் தியோடோசியஸ் I கத்தோலிக்க மதத்தை அரசு மதமாக ஆக்குவதன் மூலம் கான்ஸ்டன்டீன் ஆரம்பித்துவைத்ததை முடித்தார். அதற்கு பின்னர் கான்ஸ்டன்டீன் அஞ்சின விதமாகவே ரோம சாம்ராஜ்யம் பிளவு கண்டது. பொ.ச. 410-ல் ரோம் விசிகோத்தியரால் பிடிக்கப்பட்டது. இவர்கள் வெகு காலமாக அந்தச் சாம்ராஜ்யத்துக்குத் தொந்தரவு ஏற்படுத்திக்கொண்டிருந்த ஒரு ஜெர்மானிய மக்கள். பொ.ச. 476-ல் ஜெர்மானிய தளபதி ஓடோக்கர் மேற்கத்திய பேரரசரைக் கவிழ்த்து, தன்னை அரசனாக அறிவித்தான், இப்படியாக மேற்கத்திய ரோம சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.
இந்தப் புதிய சூழ்நிலைகளின்கீழ், கத்தோலிக்க மதம் என்ன செய்யும்? பொ.ச. 500-ல் அது உலக மக்கள் தொகயில் ஏறக்குறைய 22 சதவீதத்தினரைத் தன் அங்கத்தினர்களாகக் கொண்டிருப்பதாய் உரிமைபாராட்டியது. ஆனால் கணக்கிடப்பட்ட இந்த 4.3 கோடி பெரும்பான்மையான மக்கள் தங்களை சுத்திகரித்துக்கொள்வதற்குப் பதிலாகச் சத்தியத்தைக் கலப்படம் செய்வதைச் சுலபமாகக் கண்ட மதத் தலைவர்களின் பலியாட்களாகக் கண்டனர். உண்மைக் கிறிஸ்தவத்தின் சுவிசேஷ ஒளி அணைக்கப்பட்டுப்போனது. ஆனால் “இருளிலிருந்து ‘பரிசுத்தமான’ ஒன்று” விரைவில் பிறக்கும் என்பதை எமது அடுத்த இதழ் கலந்தாராயும். (g89 6/22)
[பக்கம் 29-ன் பெட்டி]
மறையியல் சார்ந்த இயக்கத்தின் மாதிரி நம்பிக்கைகள்
மார்சியான் (இரண்டாம் நூற்றாண்டு) இயேசுவுக்கும் அவருடைய பிதாவுக்கும் கீழான அபூரணப் “பழைய ஏற்பாட்டு” கடவுளுக்கும், அறியப்படாத “புதிய ஏற்பாட்டு” அன்பின் கடவுளுக்கும் இடையே வித்தியாசத்தைக் குறிப்பிட்டான். “அறியப்படாத கடவுள் மறையியல் சார்ந்த கோட்பாட்டின் ஓர் அடிப்படைப் பொருள்,” என்று மத என்சைக்ளோபீடியா விளக்குகிறது. இந்த அறியப்படாத கடவுள் “உன்னத புத்திக்கூர்மையுள்ளவர், மனித புத்திக்கூர்மைக்கு எட்டாதது,” என்று அடையாளங்காட்டப்படுகிறார். மறுபட்சத்தில் சடப்பொருளாலான இவ்வுலகத்தைப் படைத்தவர் கீழானவர், முழுமையான புத்திக்கூர்மையுள்ளவர் அல்ல, அவர் படைப்புத்துணைகளுடன்கூடிய படைப்பு முதல்வர்.
மோன்டானஸ் (இரண்டாவது நூற்றாண்டு) கிறிஸ்து உடனடியாக வருவது குறித்தும் இன்று துருக்கி என்றழைக்கப்படும் இடத்தில் புதிய எருசலேமை ஸ்தாபிப்பது குறித்தும் பிரசங்கித்தார். கோட்பாட்டைவிட நடத்தையின்பேரில் அதிக அக்கறைக் காண்பித்தவராய் கிறிஸ்தவ மதத்தின் ஆரம்ப மதிப்பீடுகளை மீண்டும் நிலைநாட்ட முற்பட்டார்; ஆனால் மட்டுமீறிச் சென்றதால், அந்த இயக்கம் இறுதியில் அது கண்டனம் செய்த அதே தளர் நிலைக்குப் பலியாகி வீழ்ச்சியுற்றது.
வேலன்டீனஸ் (இரண்டாவது நூற்றாண்டு), ஒரு கிரேக்கப் புலவரும் எல்லாக் காலத்திற்கும் பிரபலமாயிருந்த மறையியல் இயக்கத்தினருமானவர் உரிமைப்பாராட்டியதாவது, இயேசுவின் ஆவியுடல் மரியாள் மூலம் கடந்தது என்றாலும், உண்மையில் அது மரியாளுக்குப் பிறந்தது அல்ல. இதற்குக் காரணம், மறையியலர் எல்லாப் பொருட்களையுமே பொல்லாதது என்று கருதினார்கள். இப்படியாக, இயேசு ஒரு மாம்ச உடலைக்கொண்டிருந்திருக்க முடியாது அல்லது அதுவும் தீயதாகிவிடும். டோசடிஸ்டியர் என்றறியப்பட்ட மறையியலர், இயேசுவின் மனித வாழ்வு பற்றிய எல்லாமே வெறும் காட்சியும் தோற்றமும்தான் என்று போதித்தனர். இது அவருடைய மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் உட்படுத்தியது.
மேனஸ் (மூன்றாவது நூற்றாண்டு) அல்பாபிலையு என்று அழைக்கப்பட்டான். “பாபிலோனியன்,” என்பதற்கு அரபுச் சொல், ஏனென்றால் அவன் தன்னை “பாபிலோனுக்கு வந்தக் கடவுளுடைய தூதுவன்” என்று அழைத்துக்கொண்டான். அவன் கிறிஸ்தவ மதம், புத்த மதம், ஸோராஸ்ட்ரிய மதம் ஆகிய மதங்களின் அடிப்படைக் கூறுகளைக் கலந்திணைத்து ஒரு சர்வலோக மதத்தை உருவாக்க முயன்றான்.
[பக்கம் 28-ன் படம்]
கிறிஸ்தவ மதத்தைப் புறமதத்துடன் கலந்திணைப்பதன் மூலம் கான்ஸ்டன்டீன் சுவிசேஷ ஒளியை அணைத்துப்போட உதவினான்