மகா கான்ஸ்டன்டைன்—கிறிஸ்தவத்தை ஆதரித்தவரா?
“மகா” என்ற பட்டப்பெயரால் கெளரவிக்கப்படும் சரித்திர புருஷர்கள் சிலரில் ரோம பேரரசர் கான்ஸ்டன்டைனும் ஒருவர். “செயின்ட்,” “பதின்மூன்றாம் அப்போஸ்தலன்,” “அப்போஸ்தலருக்கு நிகரான பரிசுத்தர்,” ‘முழு உலகிலும் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஆண்டவர் அருளால் தெரிந்தெடுக்கப்பட்டவர்’ என்ற பட்டப்பெயர்களையும்கூட கிறிஸ்தவமண்டலம் சூட்டியிருக்கிறது. மற்றொரு பரிமாணத்திலிருந்து பார்த்தால், கான்ஸ்டன்டைனை சிலர், “இரத்தக்கறைபடிந்தவனாக, எண்ணற்ற பெருங்குற்றங்களால் களங்கப்பட்டவனாக, வஞ்சகனாக, . . . படுபயங்கர கொடுங்கோலனாக, கொடூர குற்றச்செயல்கள் புரிந்தவனாக” வர்ணிக்கின்றனர்.
மகா கான்ஸ்டன்டைன், கிறிஸ்தவத்துக்கு நல்லருள் புரிந்த மிக முக்கியமானவர்களில் ஒருவரென கிறிஸ்தவர்கள் என்று உரிமைபாராட்டும் பலர் போதிக்கப்பட்டிருக்கின்றனர். ரோம துன்புறுத்துதலினால் வந்த அவலத்திலிருந்து கிறிஸ்தவர்களை மீட்டு, மத சுயாதீனம் வழங்கியவர் என அவரை புகழ்கின்றனர். மேலும், கிறிஸ்தவ இயக்கத்தை முன்னேற்றுவிக்கும் பலமான ஆசையுடன் இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றிய உண்மையான சீஷர் எனவும் பரவலாக நம்பப்படுகிறது. கிழக்கத்திய ஆர்த்தடாக்ஸ் சர்ச் மற்றும் காப்டிக் சர்ச், கான்ஸ்டன்டைனையும் அவரது தாயார் ஹெலனாவையும் “செயின்ட்ஸ்” என பறைசாற்றியிருக்கின்றன. அவர்களுடைய பண்டிகை, ஜூன் 3-ல் அல்லது சர்ச் நாட்காட்டியின்படி மே 21-ல் கொண்டாடப்படுகிறது.
உண்மையில் மகா கான்ஸ்டன்டைன் யார்? அப்போஸ்தலருக்குப் பின்பு கிறிஸ்தவத்தின் வளர்ச்சியில் அவருடைய பங்கு என்ன? இக்கேள்விகளுக்கு சரித்திரத்தையும் அறிஞர்களையும் பதிலளிக்க அனுமதிப்பது மிகவும் அறிவொளியூட்டுவதாய் உள்ளது.
சரித்திரப்பூர்வ கான்ஸ்டன்டைன்
சுமார் பொ.ச. 275-ம் ஆண்டில், செர்பியாவிலுள்ள நைசஸ் என்ற இடத்தில் கான்ஸ்டன்டைன் பிறந்தார்; அவர் கான்ஸ்டன்டையஸ் க்ளாரஸ் என்பவருடைய புதல்வன். அவருடைய தகப்பன் பொ.ச. 295-ல் ரோமின் மேற்கத்திய மாகாணங்களுக்குப் பேரரசராக விளங்கினார். அந்தச் சமயத்தில், பேரரசர் கலிரியஸ் என்பவரிடமிருந்து வந்த கட்டளைகளின்படி, டன்யூப் என்ற இடத்தில் கான்ஸ்டன்டைன் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். பொ.ச. 306-ம் ஆண்டில், பிரிட்டனில் இறக்கும் தறுவாயில் இருந்த தன் தகப்பனிடம் கான்ஸ்டன்டைன் திரும்பினார். தன் தகப்பன் இறந்தவுடனே, இராணுவத்தால் பேரரசராக கான்ஸ்டன்டைன் முடிசூட்டப்பட்டார்.
அந்தச் சமயத்தில், வேறு ஐந்து ஆட்கள் தங்களை பேரரசர்களாக உரிமைபாராட்டினர். பொ.ச. 306-க்கும் 324-க்கும் இடைப்பட்ட காலத்தில், ஓயாமல் உள்நாட்டுப் போர் நடைபெற்றது; அதன்பின் கான்ஸ்டன்டைன் தனிப் பேரரசராக ஆனார். இரு இராணுவ சண்டைகளில் கான்ஸ்டன்டைன் வெற்றிவாகை சூடினார்; அது அவருக்கு ரோம சரித்திரத்தில் ஓர் அழியா முத்திரையைப் பதித்தது. ரோம பேரரசில் அவரை தனி ஆட்சியாளராகவும் ஆக்கியது.
பொ.ச. 312-ல், ரோமுக்கு வெளியே உள்ள மில்வியன் பிரிட்ஜில் போர் நடந்தது; அதில் கான்ஸ்டன்டைன் தன்னுடைய எதிரி மாக்சென்டையஸை தோற்கடித்தார். அந்தப் போரின்போது, “இந்த அடையாளத்தில் வெல்” என்ற அர்த்தமுடைய இன் ஹாக் சீக்னோ வின்கெஸ் என்ற லத்தீன் வார்த்தைகள் பொறிக்கப்பட்ட சுடரொளிவீசும் சிலுவை விண்ணில் தோன்றியது என கிறிஸ்தவ ஆதரவாளர்கள் உரிமைபாராட்டினர். படைக் கேடயங்களில் கிரேக்க மொழியிலுள்ள கிறிஸ்துவினுடைய பெயரின் முதல் இரண்டு எழுத்துக்களை குறியிடும்படி கான்ஸ்டன்டைனுக்கு கனவில் சொல்லப்பட்டது எனவும் நம்பப்படுகிறது. இருப்பினும், இக்கதையின் காலக்கணிப்பில் அநேக குளறுபடி உள்ளது. கிறிஸ்தவத்தின் சரித்திரம் (ஆங்கிலம்) என்ற நூல் இவ்வாறு குறிப்பிடுகிறது: “இத்தரிசனம் கிடைத்த சரியான காலத்தையும் இடத்தையும் அதன் விவரங்களையும் பற்றிய அத்தாட்சியில் முரண்பாடு உள்ளது.” ஒரு புறமத ஆட்சிப் பேரவை கான்ஸ்டன்டைனை ரோமுக்கு வரவேற்று, அவரை முதன்மை அகஸ்டஸ் என்றும் பான்ட்டிஃபெக்ஸ் மேக்ஸிமஸ், அதாவது அந்தப் பேரரசின் புறமத கடவுளுடைய பிரதான ஆசாரியன் என்றும் அறிவித்தது.
பொ.ச. 313-ல், கிழக்கத்திய மாகாணங்களுக்கு ஆட்சியாளராக இருந்த பேரரசர் லிஸிநியஸ் என்பவருடன் கான்ஸ்டன்டைன் ஒரு கூட்டு ஏற்பாட்டை செய்தார். மிலன் அரசாணையின் மூலம், எல்லா மதத் தொகுதியினருக்கும் வணக்க சுயாதீனத்தையும் சம உரிமைகளையும் இருவரும் சேர்ந்து வழங்கினர். இருப்பினும், சரித்திராசிரியர்கள் பலர் இந்த ஆவணத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் கூறுகின்றனர்; அதாவது, இது ஒரு வழக்கமான அலுவல் கடிதம்தான் எனவும், கிறிஸ்தவத்தின் மீதான கொள்கை மாற்றத்தை சுட்டிக்காட்டும் பேரரசுக்குரிய முக்கிய ஆவணம் அல்ல எனவும் சொல்கின்றனர்.
அடுத்து வந்த பத்தாண்டுக்குள், கான்ஸ்டன்டைன் தனது கடைசி போட்டியாளர் லிஸிநியஸையும் தோற்கடித்தார்; இதன்மூலம் ரோம உலகில் தன்னிகரற்ற பேரரசராக ஆனார். பொ.ச. 325-ல், ஞானஸ்நானம் பெறாமல் இருக்கும்போதே, “கிறிஸ்தவ” சர்ச்சின் முதலாவது பெரிய திருச்சபை குழுவுக்கு தலைமைதாங்கினார்; இந்தக் குழு, அரியநிஸத்தை (Arianism) கண்டனம் செய்து, முக்கிய நம்பிக்கைகள் அடங்கிய நைசியன் விசுவாசப் பிரமாணம் (Nicene Creed) என்றழைக்கப்படும் ஒரு விவரப்பட்டியலை தயாரித்தது.
பொ.ச. 337-ல், கான்ஸ்டன்டைன் வியாதியால் சாகக் கிடந்தார். அவர் மரணப்படுக்கையில் இருந்தபோது ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டார்; அதன்பின் இறந்துவிட்டார். அவருடைய மறைவுக்குப்பின், அந்த அரசப் பேரவை ரோம கடவுட்களுக்கு இணையாக அவரை வைத்தது.
கான்ஸ்டன்டைனின் ராஜதந்திரத்தில் மதம்
மதத்தைக் குறித்து மூன்றாம் நான்காம் நூற்றாண்டு ரோம பேரரசர்களுடைய பொதுவான மனப்பான்மை சம்பந்தமாக, இஸ்டாரியா டு எலினிகூ எத்நூஸ் (கிரேக்க தேசத்தின் சரித்திரம்) என்ற புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “ஏகாதிபத்திய அரியணையில் வீற்றிருந்தவர்களுக்கு ஆழ்ந்த மதப்பற்று இல்லை; அப்படி இல்லாதிருந்தபோதிலும், மக்களுடைய சிந்தனைக்கு விருந்தளித்து, தங்களுடைய அரசியல் திட்டங்களின் வரையறைக்குள் மதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதையும் தங்களுடைய செயல்களில் சிறிதளவாவது மதம் சார்ந்த மணம் வீசும்படி செய்வதையும் அவசியமென கருதினார்கள்.”
நிச்சயமாகவே, காலத்தோடு ஒத்துவாழ்ந்த மனிதரே கான்ஸ்டன்டைன். தன்னுடைய அரசாட்சியின் ஆரம்பத்தில், அவருக்கு ஏதாவது “தெய்வீக” அருள் தேவைப்பட்டது; ஆனால் செல்வாக்கு இழந்துவந்த ரோம கடவுட்களால் இதைக் கொடுக்க முடியவில்லை. மதமும் மற்ற ஸ்தாபனங்களும் உள்ளிட்ட அந்தப் பேரரசு வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது; எனவே, அதை மீண்டும் நிலைநிறுத்துவதற்குப் புதியதும் உயிர்ப்பூட்டுவதுமான ஏதோவொன்று தேவைப்பட்டது. ஈட்ரியா என்ற என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு சொல்கிறது: “கான்ஸ்டன்டைன் முக்கியமாக கிறிஸ்தவத்தில் நாட்டமுடையவராக இருந்தார்; ஏனெனில் அது அவருடைய வெற்றிக்கு மட்டுமல்ல, அவருடைய பேரரசை மறுசீரமைப்பதற்கும்கூட பக்கபலமாய் விளங்கியது. எல்லா இடங்களிலும் இருந்த கிறிஸ்தவ சர்ச்சுகள் அவருடைய அரசியல் ஆதரவாயின. . . . அக்காலங்களில் இருந்த திருச்சபை பெருந்தலைவர்கள் அவரை புடைசூழ்ந்திருந்தனர். . . . அவர் தங்களுடைய ஒற்றுமையை குலைக்காமல் காத்துக்கொள்ளும்படி அவர்களிடம் வேண்டிக்கொண்டார்.”
அதற்குள் விசுவாசதுரோகம் ஆழமாய் வேரூன்றி கறைபடுத்தியிருந்த “கிறிஸ்தவ” மதத்தை, ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கான தன்னுடைய பெருந்திட்டத்தை நிறைவேற்றுவதற்குப் புத்துயிரூட்டும் சக்தியாகவும் ஐக்கியப்படுத்தும் சக்தியாகவும் திறம்பட்ட விதத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம் என கான்ஸ்டன்டைன் உணர்ந்தார். தன்னுடைய சொந்த அரசியல் ஆதாயத்தை முன்னேற்றுவிப்பதில் ஆதரவுபெற விசுவாசதுரோக கிறிஸ்தவத்தின் அடிப்படை கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டு, ஒரே “கத்தோலிக்க” அல்லது சர்வலோக மதமாக மக்களை ஒன்றுபடுத்த தீர்மானித்தார். புறமத பழக்கவழக்கங்களுக்கும் பண்டிகைகளுக்கும் “கிறிஸ்தவ” பெயர்கள் சூட்டப்பட்டன. மேலும், “கிறிஸ்தவ” குருமார்களுக்கு புறமத ஆசாரியர்களுக்குரிய அந்தஸ்தும் சம்பளமும் செல்வாக்கும் வழங்கப்பட்டன.
கான்ஸ்டன்டைன் அரசியல் காரணங்களுக்காக மத ஒருமைப்பாட்டை நாடினார்; ஆகையால், கருத்துவேறுபாட்டு எதிர்ப்பு குரல்களை உடனடியாக அடக்கிவிட்டார்; இதை அவர் கோட்பாட்டுக்குரிய சத்தியத்தின் அடிப்படையில் அல்ல, ஆனால் பெரும்பான்மையருடைய ஒப்புதலின் அடிப்படையிலேயே சாதித்தார். மிகவும் பிளவுபட்ட “கிறிஸ்தவ” சர்ச்சிற்குள் ஆழமாக வேரூன்றியிருந்த கோட்பாட்டு வேறுபாடுகளே, “கடவுளால் அனுப்பப்பட்ட” மத்தியஸ்தராக செயல்படும் வாய்ப்பை அவருக்குத் தந்தது. வடக்கு ஆப்பிரிக்காவிலுள்ள டோனாடிஸ்டுகளிடமும் (Donatists) மாகாணத்தின் கிழக்குப் பகுதியிலிருந்த அரியுஸ் (Arius) சீஷர்களிடமும் தான் வைத்திருந்த தொடர்புகள் வாயிலாக, உறுதியான, ஐக்கியப்பட்ட மதத்தை உருவாக்குவதற்கு, அறிவுறுத்தி இணங்க வைப்பது மட்டுமே போதுமானதல்ல என்பதை உடனடியாக கண்டுணர்ந்தார். a அரியுஸ் கருத்துவேறுபாட்டைத் தீர்ப்பதற்காக சர்ச்சின் சரித்திரத்தில் முதல் திருச்சபை ஆலோசனைக் குழுவை கூட்டினார்.—“கான்ஸ்டன்டைனும் நைசியா ஆலோசனைக் குழுவும்” என்ற பெட்டியைக் காண்க.
கான்ஸ்டன்டைனைப் பற்றி சரித்திராசிரியர் பால் ஜான்ஸன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “கிறிஸ்தவத்தை அவர் பொறுத்துக்கொண்டதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, ஐதிகம் மற்றும் ஐதிகமற்ற கொள்கையின் பேரில் சர்ச்சின் கொள்கையைக் கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்பை அது தனக்கும் அரசாங்கத்திற்கும் அளித்ததால் இருக்கலாம்.”
அவர் எப்பொழுதாவது கிறிஸ்தவரானாரா?
ஜான்ஸன் குறிப்பிடுகிறார்: “கான்ஸ்டன்டைன் ஒருபோதும் சூரிய வணக்கத்தைக் கைவிடவில்லை; தனது நாணயங்களில் பொறிக்கப்பட்டிருந்த சூரிய சின்னத்தை நீக்காமல் வைத்துக்கொண்டார்.” கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு சொல்கிறது: “கான்ஸ்டன்டைன் இருமதத்தினருக்கும் சம ஆதரவு காண்பித்தார். பான்ட்டிஃபெக்ஸ் மேக்ஸிமஸாக புறமத வணக்கத்தை கவனித்துக்கொண்டு, அதன் உரிமைகளைப் பாதுகாத்தார்.” என்ஸைக்ளோப்பீடியா ஈட்ரியா குறிப்பிடுகிறது: “கான்ஸ்டன்டைன் ஒருகாலும் கிறிஸ்தவராக ஆகவில்லை.” அது மேலும் சொல்வதாவது: “[கான்ஸ்டன்டைன்] தன்னுடைய வாழ்வின் இறுதிக்கட்டத்தில் கிறிஸ்தவரானார் என அவருடைய சரிதையை எழுதிய செசரியாவைச் சேர்ந்த யூஸிபியஸ் சொல்கிறார். அவர் பெற்ற ஞானஸ்நானம் நம்பத்தக்கதாய் இல்லை; ஏனெனில் [கான்ஸ்டன்டைன்] ஞானஸ்நானம் பெற்றதற்கு முந்திய நாள், ஜியூஸ் கடவுளுக்கு பலி செலுத்தினார், ஏனெனில் பான்ட்டிஃபெக்ஸ் மேக்ஸிமஸ் என்ற பட்டப்பெயரும்கூட அவருக்கு இருந்தது.”
பொ.ச. 337-ல் அவருடைய மரணம் வரையாக, பான்ட்டிஃபெக்ஸ் மேக்ஸிமஸ், அதாவது மத விஷயங்களுக்கு உன்னத தலைவர் என்ற புறமத பட்டப்பெயரும் கான்ஸ்டன்டைனுக்கு இருந்தது. அவருடைய ஞானஸ்நானத்தைக் குறித்ததில், இவ்வாறு கேட்பது நியாயமானதே: வேதாகமத்தில் கேட்கப்பட்டுள்ளபடி, ஞானஸ்நானம் பெறுவதற்குமுன் உண்மையான மனந்திரும்புதலும் செயல்களில் மாறுதலும் இருந்தனவா? (அப்போஸ்தலர் 2:38, 40, 41) யெகோவா தேவனுக்கு ஒப்புக்கொடுத்திருப்பதன் அடையாளமாக கான்ஸ்டன்டைன் பெற்ற ஞானஸ்நானம் முழுக்கு ஞானஸ்நானமாக இருந்ததா?—அப்போஸ்தலர் 8:36-39-ஐ ஒப்பிடுக.
ஒரு “செயின்ட்”?
என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா இவ்வாறு சொல்கிறது: “கான்ஸ்டன்டைன் எப்படிப்பட்ட நபர் என்பதன் அடிப்படையில் அல்ல, ஆனால் அவர் சாதித்தவற்றின் அடிப்படையிலேயே மகா என்ற பட்டப்பெயர் சூட்டப்பட்டார். உண்மையில், அவருடைய குணத்தை வைத்து எடைபோட்டால், பூர்வ காலத்திலும் நவீன காலங்களிலும் [மகா] என்ற சிறப்புப்பெயர் கொடுக்கப்பட்டவர்கள் அனைவரோடும் ஒப்பிடுகையில் அவர் அப்பெயருக்குத் தகுதியற்றவராகவே இருக்கிறார்.” கிறிஸ்தவத்தின் சரித்திரம் நமக்கு இவ்வாறு தெரிவிக்கிறது: “அவருடைய மூர்க்கத்தனமான போக்கையும் கோபத்தில் செய்த கொடூரமான செயல்களையும் பற்றி பூர்வகால அறிக்கைகள் இருந்தன. . . . மனித உயிருக்கு அவர் எந்தவித மதிப்பையும் காண்பிக்கவில்லை. . . . வயதானபோது அவருடைய அந்தரங்க வாழ்க்கை மிகவும் இழிவானதாக ஆனது.”
கான்ஸ்டன்டைனுடைய குணங்கள் மிகவும் மோசமாக இருந்தன என்பது தெளிவாக இருக்கிறது. “அவருடைய சலனபுத்தியே குற்றங்கள் செய்வதற்கு பெரும்பாலும் காரணம்” என சரித்திர ஆய்வாளர் ஒருவர் குறிப்பிடுகிறார். (“ராஜவம்ச கொலைகள்” என்ற பெட்டியைக் காண்க.) எச். ஃபிஷ்ஷர் தன்னுடைய ஐரோப்பிய சரித்திரம் (ஆங்கிலம்) என்ற நூலில், கான்ஸ்டன்டைன் “கிறிஸ்தவ பண்புள்ளவராக” இல்லை என வாதிடுகிறார். உண்மைகள் அவரை, “புதிய மனுஷனைத்” தரித்துக்கொண்ட ஓர் மெய் கிறிஸ்தவராகவும் கடவுளுடைய ஆவியின் கனிகள்—அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்—உள்ளவராகவும் அடையாளப்படுத்திக் காண்பிப்பதில்லை.—கொலோசெயர் 3:9, 10; கலாத்தியர் 5:22, 23.
அவருடைய முயற்சிகளின் விளைவுகள்
புறமத பான்ட்டிஃபெக்ஸ் மேக்ஸிமஸாக—அதனால் ரோம பேரரசின் மதத் தலைவராக—விசுவாசதுரோக சர்ச் பிஷப்புகளின் நட்பை சம்பாதிக்க கான்ஸ்டன்டைன் முயற்சித்தார். ரோம தேசிய மதத்தின் அதிகாரிகளாக அவர்களுக்கு வல்லமையையும் முக்கியத்துவத்தையும் செல்வத்தையும் வழங்கினார். கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு ஒப்புக்கொள்கிறது: “சில பிஷப்புகள், அரசவையின் பகட்டினால் குருடாக்கப்பட்டு, கடவுளுடைய தூதர், பரிசுத்தமானவர் என அந்தப் பேரரசரை புகழுமளவுக்கும், கடவுளுடைய குமாரனைப் போல பரலோகத்தில் ஆட்சிசெய்வார் என முன்னறிவிக்குமளவுக்கும்கூட சென்றுவிட்டனர்.”
விசுவாசதுரோக கிறிஸ்தவம் அரசியல் ஆட்சியின் தயவுக்குள் வந்தபோது, அது மேன்மேலும் இவ்வுலகத்தின் பாகமாகவும் அதன் ஒழுங்குமுறையின் பாகமாகவும் ஆனது; இப்படியாக, இயேசு கிறிஸ்துவின் போதனைகளிலிருந்து படிப்படியாக விலகிச் சென்றது. (யோவான் 15:19; 17:14, 16; வெளிப்படுத்துதல் 17:1, 2) இதன் விளைவாக, “கிறிஸ்தவம்,” பொய்க் கோட்பாடுகள் மற்றும் பழக்கவழக்கங்களின்—அதாவது, திரித்துவம், ஆத்துமா அழியாமை, எரிநரகம், உத்தரிக்கும் ஸ்தலம், இறந்தோருக்கான ஜெபங்கள், ஜெபமாலைகளையும் நினைவுச்சின்னங்களையும் உருவச்சிலைகளையும் பயன்படுத்துதல், இன்னும் இதுபோன்றவற்றின்—கூட்டுக்கலவையாக ஆனது.—2 கொரிந்தியர் 6:14-18-ஐ ஒப்பிடுக.
கான்ஸ்டன்டைனிடமிருந்தே, ஆதிக்கம் செலுத்தும் போக்கை சர்ச் சுதந்தரித்தது. அறிஞர்கள் ஹென்டர்சன் மற்றும் பக் இவ்வாறு சொல்கின்றனர்: “சுவிசேஷத்தின் எளிமை கெடுக்கப்பட்டுவிட்டது, டாம்பீகமான சமயச் சடங்குகளும் ஆசாரங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன, கிறிஸ்தவ போதகர்களுக்கு உலகப்பிரகாரமான கெளரவமும் சம்பளமும் வழங்கப்பட்டன, கிறிஸ்துவின் ராஜ்யம் பெரும்பாலும் இவ்வுலகத்தின் ராஜ்யமாகவே மாற்றப்பட்டுவிட்டது.”
மெய் கிறிஸ்தவம் எங்கே?
கான்ஸ்டன்டைனின் “மகத்துவத்திற்குப்” பின்னால் மறைந்துள்ள சத்தியத்தை சரித்திர உண்மைகள் அம்பலப்படுத்துகின்றன. மெய் கிறிஸ்தவ சபையின் தலைவராகிய இயேசு கிறிஸ்துவால் ஸ்தாபிக்கப்படுவதற்குப் பதிலாக, கிறிஸ்தவமண்டலம் ஓரளவு புறமத பேரரசரின் அரசியல் ஆதரவு மற்றும் தந்திரமிக்க செயல்களின் விளைப்பயனாய் திகழ்கிறது. சரித்திராசிரியர் பால் ஜான்ஸன் கேட்பது மிகப் பொருத்தமாக உள்ளது: “பேரரசு கிறிஸ்தவத்திற்கு அடிபணிந்ததா, அல்லது கிறிஸ்தவம் பேரரசிற்கு விலைபோனதா?”
இன்றுள்ள மெய் கிறிஸ்தவ சபையை அடையாளம் கண்டுகொள்வதற்கும் அதனுடன் கூட்டுறவுகொள்வதற்கும் உண்மையிலேயே தூய கிறிஸ்தவத்தை தழுவ விருப்பமுள்ளோர் உதவி செய்யப்படலாம். உலகமுழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகள், மெய் கிறிஸ்தவத்தை அடையாளம் கண்டுகொள்வதற்கும் கடவுள் ஏற்கத்தகுந்த முறையில் அவரை வணங்குவதற்கும் நேர்மை இருதயமுள்ள மக்களுக்கு உதவ நிச்சயமாகவே விரும்புகின்றனர். —யோவான் 4:23, 24.
[அடிக்குறிப்பு]
a டோனாடிஸம் என்பது பொ.ச. நான்காம் ஐந்தாம் நூற்றாண்டுகளில் இருந்த ஒரு “கிறிஸ்தவ” மதப்பிரிவு. பூசையின் செல்லத்தக்கத்தன்மை அந்த ஊழியருடைய ஒழுக்கநெறி பண்பை சார்ந்திருக்கிறது எனவும் பெரும் பாவத்திற்குக் காரணமானவர்களை சர்ச் அதன் உறுப்பினர் ஸ்தானத்திலிருந்து விலக்கிவிட வேண்டும் எனவும் இதைப் பின்பற்றியவர்கள் வாதாடினர். அரியநிஸம் என்பது இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையை மறுதலித்த நான்காம் நூற்றாண்டு “கிறிஸ்தவ” இயக்கமாகும். கடவுள் பிறப்பிக்கப்படாதவர், ஆரம்பமில்லாதவர் என அரியுஸ் போதித்தனர். குமாரன் பிறப்பிக்கப்பட்டவராதலால், பிதாவைப் போல அதே கருத்தில் கடவுளாக இருக்க முடியாது. குமாரன் ஆரம்பமில்லாதவர் அல்ல, ஆனால் பிதாவின் சித்தத்தினால் சிருஷ்டிக்கப்பட்டவரும் ஜீவிப்பவருமானவர்.
[பக்கம் 28-ன் பெட்டி]
கான்ஸ்டன்டைனும் நைசியா ஆலோசனைக் குழுவும்
ஞானஸ்நானம் பெறாத பேரரசர் கான்ஸ்டன்டைன், நைசியா ஆலோசனைக் குழுவில் என்ன பாகத்தை வகித்தார்? என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா இவ்வாறு குறிப்பிடுகிறது: “கான்ஸ்டன்டைனே தலைமைதாங்கி, விவாதங்களைக் கொண்டுசெல்வதில் மும்முரமாக ஈடுபட்டார் . . . இருவர் தவிர மற்ற எல்லா பிஷப்புகளும், பேரரசர் என்ற பயபக்தியோடும் ஆச்சரியத்தோடும் பார்த்து அந்த விசுவாசப் பிரமாணத்தில் கையொப்பமிட்டனர்; அவர்களில் பெரும்பான்மையோர் தங்களுக்கு விருப்பமின்றி அப்படி செய்தனர்.”
இரண்டு மாத கடும் சர்ச்சைக்குப்பின், இந்தப் புறமத அரசியல்வாதி குறுக்கிட்டு, இயேசுவே கடவுள் என்று சொன்னவர்கள் சார்பாக தீர்மானம் செய்தார். ஆனால் ஏன்? கிறிஸ்தவ கோட்பாட்டின் சிறு சரித்திரம் (ஆங்கிலம்) இவ்வாறு சொல்கிறது: “கிரேக்க இறையியலில் கேட்கப்பட்ட கேள்விகளைப் பற்றி கான்ஸ்டன்டைனுக்கு எவ்வித அடிப்படை புரிந்துகொள்ளுதலும் கிடையாது.” அவருக்கு புரிந்திருந்ததெல்லாம், மதப் பிரிவினை தன்னுடைய பேரரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதே. எனவே, தன்னுடைய பேரரசை பலப்படுத்துவதற்கு உறுதிபூண்டிருந்தார்.
கான்ஸ்டன்டைனின் ஆதரவுகள் என்பதன்கீழ் நைசியாவில் வரையப்பட்ட இறுதி ஆவணத்தைப் பற்றி இஸ்டாரியா டு எலினிகூ எத்நூஸ் (கிரேக்க தேசத்தின் சரித்திரம்) இவ்வாறு சொல்கிறது: “கோட்பாட்டுக்குரிய விஷயங்களில் [கான்ஸ்டன்டைனின்] அக்கறையின்மையையும், . . . எப்படியாவது சர்ச்சுக்குள் ஐக்கியத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதில் அவருடைய பிடிவாதமான வற்புறுத்தலையும், கடைசியாக ‘புறமத பிஷப்பாக’ தானே எந்தவொரு மதம் சார்ந்த விஷயத்தையும் பற்றி இறுதி தீர்மானம் செய்ய வேண்டும் என்ற பலமான தூண்டுதலையுமே இது காட்டுகிறது.” அந்த ஆலோசனைக் குழுவில் செய்யப்பட்ட தீர்மானங்களுக்குப் பின்னால் கடவுளுடைய ஆவி இருந்திருக்குமா?—அப்போஸ்தலர் 15:28, 29-ஐ ஒப்பிடுக.
[பக்கம் 29-ன் பெட்டி]
ராஜவம்ச கொலைகள்
இந்தத் தலைப்பில், இஸ்டாரியா டு எலினிகூ எத்நூஸ் (கிரேக்க தேசத்தின் சரித்திரம்), “குடும்பத்தில் கான்ஸ்டன்டைன் செய்த அருவருப்பான குற்றங்கள்” என்று அந்தப் புத்தகம் அழைக்கும் விஷயங்களை விவரிக்கிறது. தன் ராஜவம்சத்தை ஸ்தாபித்தவுடனேயே, எதிர்பாரா சாதனைகளை எவ்வாறு மகிழ்ந்து அனுபவிப்பது என்பதை மறந்துவிட்டு, அவரைச் சூழ்ந்திருந்த ஆபத்துக்களை உணர ஆரம்பித்தார். சந்தேகவாதியாகவும் ஒருவேளை தன்னலம் நாடும் முகஸ்துதி செய்பவர்களால் தூண்டப்பட்டவராகவும் இருந்தார்; எனவே முதலாவதாக, போட்டியாளனாக வரும் சாத்தியமுள்ள தன் உறவினனாகிய (nephew) லிஸிநியநஸ்மீது—அதாவது, தான் ஏற்கெனவே மரண தண்டனை கொடுத்த சக-அகஸ்டஸின் மகன்மீது—அவருடைய சந்தேகம் வளர்ந்தது. இந்தக் கொலையை செய்தப்பின்பு, கான்ஸ்டன்டைனின் மூத்த மகன் கிரிஸ்பஸுக்கு மரண தண்டனை விதித்தார். இதற்கு உடந்தையாக இருந்தது கிரிஸ்பஸின் மாற்றாந்தாய் ஃபாஸ்டா; ஏனெனில் அவளுடைய சொந்த பிள்ளைகள் முழு அதிகாரம் பெறுவதற்கு இவர் ஒரு தடையாக இருப்பதாய் தோன்றியது.
ஃபாஸ்டாவின் இச்செயல், கடைசியில் அவளே திடீரென சாவதற்கு காரணமாய் அமைந்தது. கடைசிவரை தன்னுடைய மகன் கான்ஸ்டன்டைன்மீது செல்வாக்கு செலுத்திவந்த அகஸ்டா ஹெலனா, இந்தக் கொலைக்கு உடந்தையாய் இருந்ததாக தெரிகிறது. கான்ஸ்டன்டைனை அடிக்கடி ஆட்டிப்படைத்த நியாயமற்ற உணர்ச்சிகளும்கூட, அவருடைய அநேக நண்பர்களும் கூட்டாளிகளும் ஒருவர்பின் ஒருவராக கொலைசெய்யப்படுவதற்கு காரணமாய் இருந்தன. இடைக்கால சரித்திரம் (ஆங்கிலம்) என்ற நூல் இவ்வாறு முடிக்கிறது: “தன்னுடைய சொந்த மகனுக்கும் மனைவிக்கும் மரண தண்டனை விதித்தது—கொலை என்று சொல்லவே தேவையில்லை—கிறிஸ்தவத்தின் ஆவிக்குரிய செல்வாக்கு அவருடைய இருதயத்தைத் தொடவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது.”
[பக்கம் 30-ன் படம்]
ரோமிலுள்ள இந்த வளைவு, கான்ஸ்டன்டைனை கெளரவிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது
[பக்கம் 26-ன் படத்திற்கான நன்றி]
Musée du Louvre, Paris