மதத்தின் கடந்தகால கண்ணோட்டத்தில் அதின் எதிர்காலம்
பகுதி 13: பொ.ச. 476 முதல் இருளிலிருந்து, “பரிசுத்தமான” ஒன்று
“இருளில் செய்யப்படும் பாவங்கள் பரலோகத்தில் அக்கினித் தகடுகளைப் போன்று காணப்படுகின்றன.”—சீப் பழமொழி
ஏப்ரல் மாதம் 1988-ல் பொதுச் செயலர் மிக்கேல் கோர்பச்சேவ், சர்ச்சோடும் அதன் உறுப்பினர்களோடும் அதன் உறவுகளில் அரசு செய்திருக்கும் தவறுகளை திருத்திக்கொள்ளவிருக்கிறது என்பதாக வெளிப்படையாகச் சொல்வதைக் கேட்டபோது சோவியத் யூனியனிலுள்ள சர்ச் பூரித்துபோனது.
ரோமன் கத்தோலிக்க போப் இரண்டாம் ஜான் பால், “கிறிஸ்து விரும்பியதும் சர்ச்சின் இயற்கையான மரபுக்கு அடிப்படையானதுமான அந்தப் பரிபூரண ஐக்கியத்தை முயன்று அடைவதற்கு இருதயப்பூர்வமான ஆசையின் வெளிக்காட்டாக ஆயிரம்-வருட-வயதான சகோதரி சர்ச்சுக்கு” வாழ்த்துக்களை அனுப்பியபோது, மற்றொரு வகையான ஒரு பிளவும்கூட தீர்க்கப்படும் வழியிலிருப்பதாகத் தோன்றியது. ஆனால் முதலாவதாக ‘சகோதரி சர்ச்சுகளிடையே’ எவ்விதமாக ஒரு பிளவு தோன்றியது?
ஒருபோதும் இருந்திராத ஐக்கியத்தின் இழப்பு
நான்காவது நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரோம சாம்ராஜ்யத்துக்குப் பேரரசனாக ஆன பின்பு, மகா கான்ஸ்டன்டைன், அதன் தலைநகரை ரோமிலிருந்து, பாஸ்போரஸ் கரையில் அமைந்திருந்த கிரேக்கப் பட்டணமாகிய பைசான்டியமிற்கு மாற்றினான். அதற்கு கான்ஸ்டான்டிநோப்பிள் என்று மறுபெயர் சூட்டப்பட்டது, இன்று நாம் அதை துருக்கியிலுள்ள இஸ்டான்புல் என்பதாக அறிந்திருக்கிறோம். சிதறிப்போகும் ஆபத்திலிருந்த பேரரசை ஒன்றுசேர்ப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாக இருந்தது. உண்மையில் இரண்டாவது நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே, “எத்தனை மங்கலாக இருந்தாலும், பிளவுபட்ட ஒரு பேரரசுக்கு வரைபடத்தின் எல்லைக்கோடுகள் ஏற்கெனவே வரையப்பட்டாயிற்று” என்று தி நியு என்சைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா குறிப்பிடுகிறது.
பேரரசின் மேற்கத்தியப் பகுதியைக் காட்டிலும் கிழக்கத்தியப் பகுதிகளில் கிறிஸ்தவம் வேகமாகவும் அதிக தடையின்றியும் பரவிவிட்டிருந்தது. ஆகவே உலகளாவிய (கத்தோலிக்க) மதத்தில் ஐக்கியத்துக்கு ஓர் ஆற்றலை கான்ஸ்டன்டைன் கண்டான். ஆகவே அடிப்படையில் பேரரசு பிளவுபட்டிருந்தது போல அதன் மதமும் பிளவுபட்டது. ரோமை முக்கியமாகக் கொண்டிருந்த சர்ச்சைவிட கிழக்கத்திய சர்ச் அதிக பழமைப்பற்றுள்ளதாக இருந்தது, ரோம் அளித்த புதிய இறையியல் பழக்கங்களை இது எதிர்த்தது. “பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையாக இரண்டு சர்ச்சுகளுக்குமிடையே அநேக அரசியல் மற்றும் இறையியல் கருத்து வேறுபாடுகள் இருக்கும்” என்பதாக உலக சரித்திரத்தின் காலின்ஸின் நிலப்படம் கூறுகிறது.
இந்த இறையியல் கருத்துவேறுபாடுகளில் ஒன்று நைசியா விசுவாசப்பிரமாணத்தை உட்படுத்தியது. இது வேத ஆதாரமற்ற திரித்துவக் கோட்பாட்டின் வளர்ச்சியை ஊக்குவித்தது. சர்ச் நடத்திய முதல் மூன்று பொது குழுக்களினால் (பொ.ச. 325-ல் நைசியா, பொ.ச. 381-ல் கான்ஸ்டான்டிநோப்பிள், பொ.ச. 431-ல் எபேசு) உருவாக்கப்பட்டபடி விசுவாசப்பிரமாணம் “பரிசுத்த ஆவி . . . பிதாவினிடத்திலிருந்து வெளிப்பட்டு வருவதாக” பேசியது. ஆனால் ஆறாவது நூற்றாண்டில் ஒரு குழுவில், மேற்கத்திய சர்ச் “பிதாவினிடத்திலிருந்தும் குமாரனிடத்திலிருந்தும் வெளிப்பட்டு வருகிற” என்பதாக வாசிக்கும்படியாக சொற்றொடரை மாற்றியது. ஃபிலியோக்கு-வின் (குமாரனிடத்திலிருந்தும் என்பதற்குரிய லத்தீன்) இந்தப் பிரச்னை இந்தக் கிறிஸ்தவ சகோதரிகளுக்கிடையிலான கருத்துவேற்றுமைக்குரிய ஒரு குறிப்பாக இருந்தது. இன்னும் அவ்விதமாக இருந்துவருகிறது.
இருண்ட காலத்தின் ஆரம்பத்தைத் தனிப்படுத்திக் காட்டும் வகையில் பொ.ச. 476-ல் மேற்கத்திய பேரரசு ஒரு முடிவுக்கு வந்தபோது ஒற்றுமையின்மை அதிக வெளிப்படையாக தெரிய வந்தது. கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில், இருண்ட காலம் நிச்சயமாகவே அறிவாற்றலின் அந்தகாரம் மற்றும் அறியாமையின் ஒரு சகாப்தமாக இருந்தது. கிறிஸ்தவத்தின் சுவிசேஷ ஒளி தற்காலிகமாக கிறிஸ்தவமண்டலத்தின் இருளினால் மறைக்கப்பட்டுவிட்டது.
மதசம்பந்தமான இருள் ஐக்கியத்துக்குச் சாதகமாக இல்லை. “கிறிஸ்தவ உலகின் பல்வேறு பிரிவுகளும் ஒருபோதும் முயன்று அடையாத ஓர் ஐக்கியத்தை இடைவிடாமல் தேடிக்கொண்டிருந்தன” என்பதாக கான்டர்பரி ஹெர்பர்ட் வாடம்ஸின், மதகுருக்கள் குழுவின் முன்னாள் உறுப்பினர் சொல்லுகிறார். “முழுமையாக ஐக்கியமாக இருந்து பின்னால் சிதறிப்போன ஒரு காரியமாக அது இல்லை” என்பதாக அவர் சொல்லுகிறார். “கிறிஸ்தவமண்டலம் ஒரு சமயம் ஒரு பெரிய ஐக்கியப்பட்ட சர்ச்சாக இருந்தது என்ற கருத்து ஒரு கற்பனைச் செய்தியாகும்” என்பதாக அவர் மேலுமாகச் சொல்கிறார்.
ஒரு “குழந்தை” பிறக்கிறது
கிறிஸ்மஸ் நாளன்று பொ.ச. 800-ல் பிறந்த “குழந்தை” பரிசுத்தமானது என்றழைக்கப்படும்படி வளர்ந்தது. அது மூன்றாம் போப் லியோ, கிழக்கத்திய சர்ச்சிலிருந்து பிரிந்து சென்று மேலை ஐரோப்பியரின் அரசனாகிய சார்லிமேகினியை பேரரசனாக முடிசூட்டியப் பின்பு தோன்றிய திரும்ப நிலைநாட்டப்பட்ட மேற்கத்திய சாம்ராஜ்யமாகும். குறுகிய ஓர் இடைவேளைக்குப் பின்பு, மேற்கத்திய சாம்ராஜ்யம் பொ.ச. 962-ல் புத்தூக்கம் பெற்று பின்னால், பரிசுத்த ரோம பேரரசு என்ற அதிக பகட்டானப் பட்டப்பெயரால் அறியப்படலாயிற்று.
உண்மையில் ரோம பேரரசு என்பது தவறாக வழங்கும் பெயராகும். அதன் பிராந்தியத்தில் பெரும்பகுதியான, இந்நாளைய ஜெர்மனி, ஆஸ்திரியா, மேற்கு செக்கோஸ்லேவாக்கியா, சுவிட்ஸர்லாந்து, கிழக்கு ஃபிரான்சு மற்றும் தென் நெதர்லாந்து தேசங்கள் இத்தாலிக்கு வெளியே இருக்கின்றன. ஜெர்மன் தேசங்களும் ஜெர்மன் ஆட்சியாளர்களும் பெருந்தொகையாயிருந்ததன் காரணமாக அதன் அதிகாரப்பூர்வமானப் பெயர் பின்னால் ஜெர்மன் நாட்டின் பரிசுத்த ரோம பேரரசு என்று மாற்றப்பட்டது.
பேரரசு மதத்தை அரசியலோடு கலந்தது. “உலகில் தனியொரு அரசியல் ஆட்சித்தலைவர் இருக்க வேண்டும், அனைத்துலகச் சர்ச்சுக்கு இசைவாக, ஒவ்வொன்றும் அதன் சொந்த செயல் எல்லையிலும் கடவுளிடமிருந்து பெறப்பட்ட அதிகாரத்தோடும் வேலை செய்ய வேண்டும்” என்பதே உள்நோக்கமாக இருந்தது என்பதாக கோலியரின் என்சைக்ளோப்பீடியா விளக்குகிறது. ஆனால் எல்லைப் பிரிவின் கோடு எப்போதும் தெளிவாக இருக்கவில்லை, ஆதலால் இது கருத்து மாறுபாடுகளுக்கு வழிநடத்தியது. குறிப்பாக 11-வது மற்றும் 13-வது நூற்றாண்டுகளின் மத்தியிலிருந்த காலப்பகுதிகளுக்கிடையே சர்ச்சும் அரசும் ஐரோப்பிய தலைமை ஸ்தனத்துக்குப் போட்டி போட்டன. அரசியலில் மதத்தின் ஈடுபாடு தன்னலமற்றதும் நியாயமானதுமாக இருந்தது என்பதாக சிலர் நினைக்கின்றனர், ஆனால் ஆசிரியர் வாடம்ஸ் ஒப்புக்கொள்கிறபடி, “ஆட்சிக்கு வர போப்பின் அவா, இந்நிகழ்ச்சியில் ஒரு முக்கியப் பங்கை வகித்தது குறித்து எந்தச் சந்தேகமுமில்லை.”
அதனுடைய கடைசி ஒன்றரை நூற்றாண்டு கால வாழ்வின் போது பொதுப் பேரரசரின் உறுதியற்ற ஆட்சி அதிகாரத்தின் கீழ், பேரரசு உறுதியாக இணைக்கப்படாத தேசங்களின் ஒரு தொகுப்பாக தாழ்ந்த நிலைக்கேகியது. அதனுடைய சரித்திரத்தின் இந்தக் கட்டத்தின் போது, “அது பரிசுத்தமாகவுமில்லை, ரோமகவுமில்லை, ஒரு பேரரசாகவும் இல்லை” என்பதாக சொன்ன ஃபிரெஞ்சு எழுத்தாளர் வால்டேரின் வார்த்தைகள் மிகவும் பொருத்தமாக இருந்தன. கடைசியாக, 1806-ல் வயதின் காரணமாக நரைத்த மயிரோடும் புனித நிலைக்கு சிபாரிசு செய்ய எதையும் கொண்டில்லாமலும் “பரிசுத்த குழந்தை” மரித்தது. 1871-ல் அது ஜெர்மனியின் தூய ரோமப் பேரரசின் காலத்தில் மீண்டும் எழுந்தது, ஆனால் 1918-ல், 50-க்கும் குறைவான ஆண்டுகளுக்குப் பின்னால் வீழ்ச்சியடைந்தது. 1933-ல் அடால்ப் ஹிட்லரின் நாசியர் ஆட்சிக்குரிய ஜெர்மன் குடியரசு ஐரோப்பா முழுவதிலும் மெதுமெதுவாக முன்னேறிச் சென்றது. அது 1945-ல் பெர்லினின் அழிபாடுகளில் இழிவுக்குரிய முடிவுக்கே வந்தது.
மேற்கில் ஜெர்மனியின் செல்வாக்குகள்
ஜெர்மன் குறிப்புரை ஏடு, மேயரின் விளக்கப்பட உலக சரித்திரம் “ஐரோப்பிய வரலாற்றின் இடைநிலைக் காலத்தின்” தூண்களாக . . . ரோமர்கள் நாணயமடித்த காலத்தின் மூன்று பிற்பகுதியைச் சேர்ந்த உயர்தரமான பண்டைய மரபு, கிறிஸ்தவம் மற்றும் கடைசியாக தங்கள் மூதாதையரிடமிருந்து ஜெர்மானிய மக்கள் எடுத்துக்கொண்ட பாரம்பரியங்களைக்” குறிப்பிடுகிறது. இதை உறுதிப்படுத்துவதாய், ஜெர்மன் ஆசிரியர் எமில் நேக் சொல்வதாவது: “போப் மகா கிரிகோரியின் ஆலோசனையின்படி சர்ச் அநேக புறமத பண்டிகைகளைக் கிறிஸ்தவத்துக்குரியதாக மாற்றிவிட்டதன் காரணமாக, பழைய ஜெர்மானிய வருடாந்தர பண்டிகைகள் அநேகமாக கிறிஸ்தவ திருநாட்களின் பெயரில் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வந்தன.”
இந்த மதசம்பந்தமான பண்டிகைகளைக் கடைப்பிடிப்பது ஜெர்மானிய மக்களின் மத்தியில் ஆழமான மத பக்தியுணர்வை அர்த்தப்படுத்தவில்லை. ஜெர்மானிய மதத்தின், காலமான நிபுணர் ஆண்டிரியஸ் ஹெஸ்லர் அதை “அதிகத்தை தடைசெய்யாமலும், எந்த ஒரு புராண கோட்பாடு உறுதி உட்பட கடினமாக எதையும் வற்புறுத்தாததுமான மதமாக” அதை விளக்குகிறார். “ஒரு நபர் தன் பலிகளைச் செலுத்தி, ஆலய வரியைக் கட்டி, பரிசுத்த ஸ்தலத்தை அவமதியாமல், கடவுட்களைப் பற்றி நிந்தனையாக எதையும் எழுதாதிருக்கும் பட்சத்தில் அவர் பக்திமானாகக் கருதப்பட்டார்.” அவர் முடிவாகச் சொல்கிறார்: “அது மத சம்பந்தமான உணர்ச்சியாக இருக்கவில்லை. . . . ஒரு ஜெர்மான் நாட்டவனின் இலட்சியம் அவன் மதத்தில் சார்ந்ததாக இல்லை.”
பூர்வ ஜெர்மானிய மக்கள் கடவுட்களை நம்பியபோதிலும், கடவுட்களைப் படைத்த இன்னும் அதிக மேம்பட்ட ஒரு சக்தி இருத்தது என்பதாக நினைத்தார்கள். இது “விதியின் சக்தி” என்பதாக ஆசிரியர் நாக் விளக்குகிறார். “இது பலிகளாலோ ஜெபங்களாலோ கட்டுப்படுத்தப்பட்டதாக இல்லை” என்றும் சொல்கிறார். எப்படியிருந்தாலும், விதி “கண்மூடித்தனமாக மனப்போக்காக” கருதப்படவில்லை, ஏனென்றால் அது இயற்கை சட்டங்களுக்கு இசைவாக இயங்கியது. ஆகவே ஒரு நபர் “பலியாளாக அல்ல, சுயாதீனமுள்ளவராக” கருதப்பட்டார்.
ஜெர்மானிய மதம் இயற்கையில் அதன் ஆரம்பத்தைக் கொண்டிருந்தது. பலிகள் அநேகமாக திறந்த வெளியில் சோலைகளிலும் காடுகளிலும் செலுத்தப்பட்டன. ஜெர்மானிய கட்டுக்கதை, கடவுட்கள், மும்மை சால் மரம் என்றழைக்கப்பட்ட ஓர் இயலுலக அண்டத்துக்குரிய மரத்தில் தினந்தோறும் வழக்குமன்றக் கூட்டம் நடத்தியதாகப் பேசுகிறது. மதத்தின் என்சைக்ளோப்பீடியா அதை இவ்வாறு விவரிக்கிறது: “அது வானளவுக்கு [உயர்ந்தும்] அதன் கிளைகள் உலகம் முழுவதும் பரவியுமிருந்தது. . . . மரத்தின் அடையாள அர்த்தம் . . . மற்ற பாரம்பரியங்களில் பிரதிபலிக்கப்பட்டிருக்கிறது. பூர்வ பாபிலோனில், உதாரணமாக இயலுலகத்துக்குரிய மரம் கிஷானு, பரிசுத்தமான ஓரிடத்தில் வளர்ந்தது. . . . பூர்வ இந்தியாவில், பிரபஞ்சம் தலைகீழக நிற்கும் மரத்தினால் உருவகப்படுத்தப்பட்டது. . . . [ஆனால்] மும்மை சால் மரம் கருத்தில் எந்த யூதேய–கிறிஸ்தவ அம்சத்துக்கும் அத்தாட்சி இல்லை.”
இந்தப் பின்னணியை முன்னிட்டுப் பார்க்கையில், ஜெர்மானிய மதத்தின் தீவிரமான செல்வாக்குள்ள தேசங்களில், மக்கள் அதிக மதப்பற்றுள்ளவர்களாக இல்லாமல், அநேகமாக விதிவசம் என்ற நம்பிக்கையுள்ளவர்களாக இருந்தது பின்வருமாறு சொல்லும் மனசாய்வுடையவர்களாக இருக்கின்றனர்: ‘இயற்கையே என் தெய்வம்!’ ஜெர்மானிய மதம் கிறிஸ்தவமண்டலத்திற்குள் அறிமுகம் செய்து வைத்த அநேக புறமதப் பழக்கவழக்கங்கள் இயற்கை–தொடர்புடையதாக இருப்பதும்கூட புரிந்து கொள்ளப்படத்தக்கதே. விளக்குகளையும் புல்லுருவிகளையும் பயன்படுத்துவது, கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முந்தின நாள் மாலை கட்டை எரிப்பது அல்லது கிறிஸ்மஸ் மரத்தைக் காட்சிக்கு வைப்பது போன்ற இப்படிப்பட்ட கிறிஸ்மஸ் பழக்கங்கள் ஒருசில உதாரணங்களாகும்.
இதற்கிடையில் கிழக்கில்
மேற்கத்திய சர்ச்சோடு எப்போதும் மனவேறுபாடுடையதாக, கிழக்கத்திய சர்ச் தனக்குள்ளும்கூட சமாதானமாயிருக்கவில்லை. உருவ வழிபாட்டினை எதிர்த்து நடத்தப்பட்ட இயக்கத்தின் விஷயத்தில் இது தெரிகிறது. மேற்கத்திய சர்ச்சுகளில் பொதுவாகக் காணப்பட்ட சிலைகளைப் போன்ற முப்பரிணாம உருவங்களிலிருந்து வேறுபடும் தெய்வ வடிவங்கள் (ICONS) தட்டையான பரப்பின் மீது உயர்த்தப்பட்ட வேலைபாடு உட்பட மதசம்பந்தமான உருவங்களாக அல்லது படங்களாக இருந்தன. அவை பொதுவாக கிறிஸ்துவை, மரியாளை அல்லது ஒரு “புனிதரை” வரைந்து காட்டுவதாக இருந்தன. அவை கீழை நாடுகளில் அத்தனை பிரபலமாகிவிட்டதால், பேட்ஸ் கல்லூரியைச் சேர்ந்த ஜான் S. ஸ்டிராங்கின் பிரகாரம், “அவை பிரதிநிதித்துவம் செய்த உருவங்களை நேரடியாக கண்ணாடிப் போல நிழலிட்டு காட்டியதாக அல்லது அவற்றின் பதிப்பாக கருதப்பட்டு, [மேலும்] . . . பரிசுத்தமான மற்றும் இயல்பாக அற்புதமான வல்லமையால் நிறைந்தவையாகக் கருதப்பட்டன.” என்றபோதிலும் எட்டாவது நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில், பைசான்டியத்தின் பேரரசர் மூன்றாம் லியோ, அவைகளின் உபயோகத்தைத் தடைசெய்தான். பொ.ச. 843 வரையாக, சர்ச்சைக்கு தீர்வான முடிவுக் காணப்படாமலே இருந்தது. அந்தச் சமயம் முதற்கொண்டு, கிழக்கத்திய சர்ச்சில் உருவச் சிலைகளின் உபயோகத்துக்கு ஒப்புதலளிக்கப்பட்டிருக்கிறது.
கிழக்கத்திய ஒற்றுமையின்மைக்கு மற்றொரு உதாரணம் எகிப்திலிருந்து வருகிறது. ஒருசில எகிப்திய கத்தோலிக்கர்கள் எகிப்திய மொழியை பேசுகையில் மற்றவர்கள் கிரேக்க மொழி பேசினார்கள், இரண்டு மொழி தொகுதியினரும் கிறிஸ்துவின் இயல்பைக் குறித்து பூசலிட்டுக் கொண்டனர். பைசான்டியன் அதிகாரிகள் இதை ஒப்புக்கொள்ள மறுத்தபோதிலும், சட்ட உரிமையின்படி எப்படியாயினும் மெய்நடப்பில் இரண்டு வித்தியாசமான சர்ச்சுகள் இருப்பதற்கு வழிநடத்தியது. எல்லாச் சமயங்களிலும் ஒவ்வொரு கட்சியும் தன் மேற்றிராணியார்களில் ஒருவரை அலெக்ஸாண்டிரியாவின் வட்டார முதல்வரின் அந்தஸ்துக்கு உயர்த்த சூழ்ச்சி திட்டமுறகளைக் கையாண்டு வந்தன.
இன்று கிழக்கத்திய சர்ச் இன்னமும் பிரிந்தே இருக்கிறது. ரோமன் சர்ச்சோடு ஐக்கியமாயிருக்கும், ஒருசில கிழக்கத்திய சர்ச்சுகள், உதராணமாக, யூனியேட் என்றழைக்கப்படும் சர்ச்சுகள், ரோமின் போப்பினுடைய அதிகாரத்தை ஏற்றுக்கொள்கின்றனர். மறுபட்சத்தில் கிழக்கத்திய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுகளும், சிறிய அளவில் மட்டுமே கிழக்கத்திய சர்ச்சுகள் என்றழைக்கப்படுகிறவைகளும் அவ்விதமாகச் செய்வதில்லை.
அக்கினித் தகடுகள் போல
புனிதமற்றதாயும், ரோமனாகவும் பேரரசாகவும் இல்லாத ரோம ஆட்சி முடிவுக்கு வருவதற்கு வெகு காலத்துக்கு முன்பாகவே, “மற்ற கிறிஸ்தவர்களிடமாக கிறிஸ்தவர்களின் பகைமை என்ற முன்னோரின் சொத்து கிறிஸ்தவ கிழக்கில் இருதயங்களில் ஆழமாக பதித்துவைக்கப்பட்டாயிற்று” என்கிறார் ஆங்கலிக்கன் சர்ச்சை சேர்ந்த வாடம்ஸ். நிச்சயமாகவே, “கிறிஸ்தவன்” “கிறிஸ்தவனை” பகைக்கும் பாவம், அந்தகாரத்தில் செய்யப்பட்டாலும்கூட, பரலோகத்தில் கவனிக்கப்படாமல் இல்லை, ஆனால் அக்கினித் தகடுகளைப் போல அத்தனை வெளிப்படையாக இருந்தது.
மேலுமாக கிறிஸ்தவமண்டலத்தின் பிரிந்திருக்கும் வீட்டின் பாவம் பூமியின் மீது கவனிக்கப்படாமல் இல்லை. உதாரணமாக, “தன்னுடைய பயணங்களிலிருந்தும் தனக்கு நெருங்கியவர்களிடமிருந்தும் கிறிஸ்தவத்தைப் பற்றி நன்றாகவே தெரிந்து வைத்திருந்த”, பொ.ச. ஏழாவது நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு குறிப்பிடத்தக்க அராபிய நாட்டவர், மதகுரு வாடம்ஸ், “கிறிஸ்தவர்கள் மத்தியில் தான் கவனித்த சர்ச்சைகளைக்” குறித்து மனஅமைதியோடு இருக்கவில்லை என்பதாகச் சொல்லுகிறார். இந்த மனிதர் ஐக்கியமற்ற கிறிஸ்தவமண்டலத்தால் அளிக்கப்பட்டதைவிட அதிக மேம்பட்ட ஒரு வழியை தேடினார். அவர் அதைக் கண்டுபிடித்தாரா? 1989-ல் முழுமையாக உலக மக்கள் தொகயில் 17 சதவீதத்தினர் அவருடைய கொள்கைக்கு ஆதரவளித்து வந்தார்கள். இந்த மனிதன் யார் மற்றும் “கடவுளுடைய சித்தத்துக்கு கீழ்ப்படுத்துவது” குறித்து அவர் என்ன நினைத்தார் என்பதை எமது அடுத்த இதழில் தோன்றும் கட்டுரை விடையளிக்கும். (g89 7/8)
[பக்கம் 29-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
ரோம பேரரசின் வீழ்ச்சியின் போது (பொ.ச. 476), கிறிஸ்தவமண்டலம் போட்டியிடும் ஆறு மேற்றிராணியார்களின் கீழ் பிளவுபட்டது—ரோம், கான்ஸ்டான்டிநோப்பிள், அந்தியோகியா, அலெக்ஸாண்டிரியா, எருசலேம் மற்றும் சாலமி (சீப்புரு)
ரோம்
கான்ஸ்டான்டிநோப்பிள்
அந்தியோகியா
சாலமி
எருசலேம்
அலெக்ஸாண்டிரியா
[பக்கம் 28-ன் படம்]
இயேசு மற்றும் மரியாளின் மத உருவங்கள்