மதத்தின் கடந்தகால கண்ணோட்டத்தில் அதன் எதிர்காலம்
பகுதி 15: பொ.ச. 1095–1453 பட்டயத்திற்குத் திரும்புதல்
“மனிதர் மதத்துக்காக வாதாடுவார்கள், அதற்காக எழுதுவார்கள், அதற்காகப் போராடுவார்கள், அதற்காக மரிப்பார்கள்; அது வாழ எதுவும் செய்வார்கள்.” சார்ல்ஸ் காலேப் கால்டன், 19-வது நூற்றாண்டு ஆங்கில மத குரு
கிறிஸ்தவ மதம் ஆரம்ப வருடங்களில் தங்கள் மதத்திற்கிசைவாக வாழ்ந்த விசுவாசிகளால் ஆசீர்வதிக்கப்பட்டது. தங்களுடைய விசுவாசத்தைத் தற்காப்பவர்களாக, அவர்கள் “தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்”தை வைராக்கியத்துடன் பயன்படுத்தினார்கள். (எபேசியர் 6:17) ஆனால் பின்னர், அதாவது 1095-க்கும் 1453-க்கும் இடைப்பட்ட கால சம்பவங்களில் எடுத்துக்காட்டப்பட்டிருப்பதுபோல, பெயர் கிறிஸ்தவர்கள் உண்மைக் கிறிஸ்தவத்தின்படி வாழாமல் மற்ற வகையான பட்டயங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.
ஆறாவது நூற்றாண்டுக்குள் மேற்கத்திய ரோம பேரரசு செயலற்றுப்போனது. அது கான்ஸ்டான்டிநோப்பிளைத் தன் தலைநகராகக் கொண்ட கிழக்கத்திய எதிரிணைப் பைசாண்டீயத்தால் மாற்றப்பட்டது. ஆனால் அவற்றின் சர்ச்சுகள் உறவில் ஆட்டங்கண்டதால் வேகமாக வளர்ந்துவரும் இஸ்லாமிய ஆதிக்கத்தால் அச்சுறுத்தப்படுவதைக் கண்டன.
ஏழாவது நூற்றாண்டில் முஸ்லீம்கள் எகிப்தையும் வட ஆப்பிரிக்காவிலுள்ள பைசாண்டீன் பேரரசின் மற்ற பகுதிகளையும் கைப்பற்றியபோதுதான் கிழக்கத்திய சர்ச் இதை உணர ஆரம்பித்தது.
பின்னர் ஒரு நூற்றாண்டுக்குள்ளாகவே, இஸ்லாமியர் ஸ்பய்ன் வழியாக ஃபிரான்சுக்குள் பிரவேசிப்பதை, பாரிசில் ஏறக்குறைய நூறு மைல்கள் கடந்திருப்பதைக் கண்டு மேற்கத்திய சர்ச் அதிர்ச்சிக்குள்ளானது. அநேக ஸ்பனிய கத்தோலிக்கர் இஸ்லாமிய மதத்துக்கு மதமாறினர், மற்றவர்கள் முஸ்லீம் வழிமுறைகளையும் முஸ்லீம் கலாச்சாரத்தையும் ஏற்றனர். “இழப்பு கண்டு கசப்புற்ற சர்ச் ஸ்பனிய ஆண்மகன்கள் பழிவாங்குதலின் தீப்பிழம்பைக் கொழுந்து விட்டு எறிய இடைவிடாது உழைத்தனர்” என்று பூர்வீக இஸ்லாம் என்ற புத்தகம் கூறுகிறது.
அநேக நூற்றாண்டுகளுக்குப் பின்னர், ஸ்பனிய கத்தோலிக்கர் தங்களுடைய நிலப்பகுதியில் பெரும்பகுதியைக் கைப்பற்றிய பின்னர், “தங்களுடைய முஸ்லீம் குடிகளுக்கு எதிராக எழுந்து இரக்கமற்றவிதத்தில் அவர்களைத் துன்புறுத்தினர். அவர்களுடைய விசுவாசத்தை மறுதலிக்கும்படியாகவும் அவர்களை வற்புறுத்தினர், அவர்களுடைய தேசத்தைவிட்டு அவர்களை விரட்டியடித்தனர், ஸ்பனிய—முஸ்லீம் கலாச்சாரத்தின் எந்த ஓர் அறிகுறியும் இல்லாத வகையில் கடுமையான நடவடிக்கை எடுத்தனர்.”
பட்டயத்தின் முனையில்
1095-ல் போப் அர்பன் II ஐரோப்பிய கத்தோலிக்கரை சொல்லர்த்தமான பட்டயத்தை எடுக்கும்படியாக அழைப்பு விடுத்தார். மத்திய கிழக்குப் புனித தேசங்களிலிருந்து இஸ்லாமியர் வெளியேற்றப்படவிருந்தனர். அந்தத் தேசங்கள் தங்களுக்கு உரியவை என்று கிறிஸ்தவமண்டலம் முழு உரிமை கோரியது.
“நீதிப்” போர் என்பது ஒரு புதிய எண்ணம் அல்ல. உதாரணமாக, ஸ்பய்ன் மற்றும் சிஸிலி முஸ்லீம்களுக்கு எதிரான போரில் அது வேண்டப்பட்டது. அர்பனின் வேண்டுகோளுக்குப் பத்தாண்டுகளுக்கு முன்னதாக போப் கிரிகோரி VII “கடவுளுடைய எல்லாப் பகைவர்களுக்கும் எதிராகப் போரிடுவதற்கு ஒரு கிறிஸ்துவின் இராணுவம் பற்றிய எதிர்நோக்கை உடையவராயிருந்து, கிழக்குக்கு ஓர் இராணுவத்தை அனுப்புவதைக்குறித்தும் எண்ணம் கொண்டிருந்தார்,” என்று பிரின்ஸ்டன் இறைமையியல் பள்ளியின் கார்ல்ஃப்ரீடு ஃப்ரோலிச் கூறுகிறார்.
அர்பனின் செயல் ஓரளவுக்கு பைசாண்டீன் பேரரசர் அலெக்சியஸின் உதவிக் கோருதலுக்குப் பிரதிபலிப்பாக இருந்தது. ஆனால் கிறிஸ்தவமண்டலத்தின் கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய பகுதிகளின் உறவுகளில் முன்னேற்றம் காணப்படுவதாய்த் தென்பட்டதால், சண்டைப்போட்டுக்கொண்டிருக்கும் உடன் சர்ச்சுகளை மீண்டும் ஐக்கியப்படுத்துவதற்கு இது அளித்த வாய்ப்பினால் போப் உந்தப்பட்டிருக்கக்கூடும். நிலைமை என்னவாயிருந்த போதிலும், கிளெர்மான்ட் ஆலோசனைக் குழுவைக் கூட்டினான், அது இந்தப் “புனிதமான” செயலில் ஈடுபட விரும்புகிறவர்கள் பாவமன்னிப்பு அளிக்கப்பட்டு தண்டனைக் குறைக்கப்படவேண்டும் என்ற அறிக்கையை நிறைவேற்றியது. அதற்கான பிரதிபலிப்பு எதிர்பாராத வகையில் நம்பிக்கைதருவதாய் இருந்தது. “டெயஸ் ஓல்ட்” (“கடவுளுடைய சித்தம்”) என்பது கிழக்கிலும் மேற்கிலும் திரண்டழுந்த குரலாக இருந்தது.
தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பமாயின, இவை இரண்டு நூற்றாண்டுகளை உள்ளடக்கின. (பக்கம் 26-ல் பெட்டியைப் பார்க்கவும்.) தாக்குதலுக்குக் காரணம் பைசாண்டீனியர் என்று முஸ்லீம் மக்கள் முதலாவது நினைத்தனர். ஆனால் அவற்றின் உண்மையான ஆரம்பத்தை உணர்ந்து அவர்களை ஃபிராங்க்ஸ், ஜெர்மானிய மக்கள் என்று அழைத்தனர்; இதிலிருந்துதான் ஃபிரான்ஸ் அதன் பெயரைப் பின்னர் பெற்றது. இந்த ஐரோப்பிய “காட்டுமிராண்டிகளின்” சவாலைச் சந்திப்பதற்காக, முஸ்லீம்கள் மத்தியில் ஒரு புனித போருக்கான அல்லது போரட்டத்துக்கான உணர்ச்சிகள் வளர்ந்தன. பிரிட்டிஷ் பேராசிரியர் டெஸ்மண்டு ஸ்டுவர்ட் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “சொல்லிலும் முன்மாதிரியிலும் இஸ்லாமிய நாகரிகத்தின் விதைகளை விதைத்த ஒவ்வொரு அறிஞனுக்கும் அல்லது வியாபாரிக்கும் இஸ்லாம் போருக்கான ஓர் அழைப்பாக இருப்பதைக் கண்ட ஒரு போர்வீரன் இருந்தான்.” பன்னிரண்டாவது நூற்றாண்டின் இரண்டாம் பகுதிக்குள்ளாக, முஸ்லீம் தலைவர் நூருதீன் வடக்கு சீரியா மற்றும் மேல் மெசப்பொத்தேமியாவிருந்த முஸ்லீம்களை ஒன்றுபடுத்தி ஒரு திறம்பட்ட இராணுவ சேனையை அமைத்துவிட்டான். எனவே “கிறிஸ்துவின் மதத்தை முன்னேற்றுவிப்பதற்காக இடைக்காலக் கிறிஸ்தவர்கள் போரயுதங்களை ஏந்தியது போல, நபிநாயகத்தின் மதத்தை முன்னேற்றுவிக்க முஸ்லீம்கள் ஆயுதம் ஏந்தினார்கள்,” என்று ஸ்டுவர்ட் கூறினார்.
உண்மைதான், மதத்தின் நோக்கத்தை முன்னேற்றுவிப்பது என்பது எப்பொழுதுமே உந்து சக்தியாக இருந்ததில்லை. ஐரோப்பாவின் பிறப்பு என்ற நூல் குறிப்பிடுவதாவது, பெரும்பாலான ஐரோப்பியருக்கு அந்தச் சிலுவைப் போர்கள் “புகழ் பெறுவதற்கு, அல்லது பொருள் கொள்வதற்கு, அல்லது புதிய நிலப்பகுதிகளைப் பெறுவதற்கு, அல்லது முழு தேசங்களை ஆளுவதற்கு—அல்லது மகிமைதரும் தீரச்செயலின் சலிப்பைத் தப்புவதற்குக் கவர்ச்சியான ஒரு வாய்ப்பை அளித்தது.” கிழக்கத்திய மத்தியதரைக்கடல் பிரதேசங்களில் வர்த்தக ஸ்தபனங்களைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்பு இருப்பதை இத்தாலிய வியாபாரிகளுங்கூட காணக்கூடியவர்களாயிருந்தனர். ஆனால் உள்நோக்கம் என்னவாக இருந்தபோதிலும், எல்லாருமே தங்களுடைய மதத்துக்காக மரிக்க மனமுள்ளவர்களாயிருந்தனர்—கிறிஸ்தவமண்டலத்தின் ஒரு “நீதிப்” போரில் அல்லது ஒரு முஸ்லீம் ஜிஹாதில்.
பட்டயம் எதிர்பாராத பலன்களைக் கொண்டுவருகிறது
“சிலுவைப்போர்கள் கிழக்கிலுள்ள முஸ்லீம்களுக்கு எதிராகச் செய்யப்பட்ட போரயிருந்தபோதிலும், சிலுவைப்போர் செய்தவர்களின் வைராக்கியம் சிலுவைப்போர் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில், அதாவது ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் மீது காண்பிக்கப்பட்டது. சிலுவைப்போர்களில் ஈடுபட்டவர்களின் பிரபல குறிக்கோள், இயேசுவின் மரணத்திற்காகப் பழிவாங்குதல் என்பதாயிருந்தது, இதற்கு முதல் பலியாட்களானவர்கள் யூதர்களாவர். யூதர்கள் துன்புறுத்தப்படுவது 1096-ல் ரூவனில் நிகழ்ந்தது. இதை உடனடியாகத் தொடர்ந்ததுதான் ஒர்ம்ஸ், மேய்ன்ஸ் மற்றும் கொலானில் படுகொலைகள்,” என்று மத என்சைக்ளோபீடியா கூறுகிறது. இது நாசி ஜெர்மானியரின் நாட்களில் நிலவிய செமிட்டிக் இனத்தவருக்கு எதிரான ஆவிக்கு வழிகாட்டியாக அமைந்தது.
சிலுவைப்போர்கள் கிழக்கத்திய கோத்திரப்பிதா மைக்கெல் செரலேரியஸ் மற்றும் மேற்கத்திய கார்டினல் ஹம்பர்ட் பரஸ்பர அடிப்படையில் சர்ச்சிலிருந்து ஒருவரையொருவர் நீக்கிக்கொண்ட சமயமாகிய 1054 முதல் வளர்ந்துவரும் கிழக்கு-மேற்கு இறுக்க நிலையை அதிகரித்தன. சிலுவைப் போர் வீரர்கள் தாங்கள் கைப்பற்றிய நகரங்களில் கிரேக்க குருமார்களை நீக்கி லத்தீன் குருமார்களை வைத்தபோது, கிழக்கு-மேற்கு பிளவு பாமரரையும் தொட ஆரம்பித்தது.
கேன்டர்பரியைச் சேர்ந்த முன்னாள் ஆங்கில தலைமைச் சமயகுரு ஹெர்பர்ட் உவாடம்ஸ் கருத்துபடி, போப் இன்னொசென்ட் III “இரட்டை வேஷம்” போட்ட சமயத்தில் இரண்டு சர்ச்சுகளுக்கும் இடையிலான பிளவு நான்காவது சிலுவைப்போரின் போது முடிவுக்கு வந்தது. மறுபட்சத்தில் கான்ஸ்டான்டிநோப்பிள் சூறையாடப்பட்டது குறித்து போப் எரிச்சலடைந்தார். (பக்கம் 26-லுள்ள பெட்டியைப் பார்க்கவும்.) அவர் எழுதினார்: “லத்தீனியர் தீமைக்குரிய முன்மாதிரியை வைத்து, பிசாசின் கிரியைகளை நடப்பித்து வருகிறதைப் பார்த்திருந்து, ஏற்கெனவே அவர்கள் கிரேக்கரால் நாய்களைவிட மோசமாக வெறுப்பதற்குத் தகுந்த காரணங்களைக் கொண்டிருக்கும் கிரேக்கரின் சர்ச் எப்படி போப்பாண்டவர் சார்ந்த வழிபாட்டு முறைக்கு திரும்ப முடியும்.” மறுபட்சத்தில், அந்தச் சூழ்நிலையை அவர் உடனடியாகப் பயன்படுத்தி, ஒரு மேற்கத்திய கோத்திரப்பிதாவின் கீழ் ஒரு லத்தீன் ராஜ்யத்தை ஸ்தபித்தார்.
தொடர்ந்த போரக் கொண்டிருந்த இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர், பைசாண்டீன் பேரரசு அதிக பலவீனமாயிருந்ததால், ஓட்டோமான் துருக்கியரின் தாக்குதல்களைச் சந்திக்க முடியாதவர்களானதால், இறுதியில் மே 29, 1453-ல் கான்ஸ்டான்டிநோப்பிளைக் கைப்பற்றினர். அந்தப் பேரரசு வெறுமென ஓர் இஸ்லாமிய பட்டயத்தால் மட்டுமே நாசப்படுத்தப்படவில்லை, ஆனால் ரோமிலுள்ள உடன் சர்ச்சின் பட்டயத்தாலும் வீழ்த்தப்பட்டது. இஸ்லாம் மதம் ஐரோப்பாவுக்குள் பிரவேசிப்பதற்குப் பிளவுபட்ட கிறிஸ்தவமண்டலம் வசதியான அடிதளத்தை அமைத்துக்கொடுத்தது.
அரசியல் மற்றும் துன்புறுத்தலின் பட்டயங்கள்
சிலுவைப்போர்கள் போப்பின் மதம் மற்றும் அரசியல் தலைமையைப் பலப்படுத்தியது. அவை “ஐரோப்பிய அரசியல் விவகாரங்களைக் கட்டுப்படுத்தும் ஒரு கரத்தைப் போப்புக்கு அளித்தன,” என்று எழுதுகிறார் சரித்திராசிரியர் ஜான் H. மண்டி. சீக்கிரத்திலேயே “சர்ச் ஐரோப்பாவின் மிகப் பெரிய அரசாங்கமாக ஆனது . . . , வேறு எந்த மேற்கத்திய அரசைவிட அதிக அரசியல் அதிகாரத்தைச் செலுத்த முடிந்தது.”
இந்த அதிகார ஏணியில் ஏறுவது மேற்கத்திய ரோம சாம்ராஜ்யம் சரிந்தபோது கூடிய காரியமானது. மேற்கில் ஒற்றுமையை நிலைபடுத்துவதற்கான ஒரே சக்தியாக சர்ச் அமைந்தது. எனவே ஒரு பலமான அரசியல் அதிகாரியின் கீழ், அதாவது பைசாண்டீன் பேரரசரின் கீழ் இருந்த கிழக்கத்திய சர்ச்சுகளைக் காட்டிலும் அது சமுதாயத்தில் மிகவும் பலமான ஓர் அரசியல் பங்கை வகித்தது. மேற்கத்திய சர்ச் கொண்டிருந்த அரசியல் மகிமை போப்பின் தலைமைச் சிறப்புக்கு நம்பிக்கை ஏற்பட இடம் அளித்தது. போப் கனத்துக்குரியவர் என்ற எண்ணத்திற்கு இடமளித்தபோதிலும், கோட்பாடு மற்றும் அதிகார எல்லைக்கு போப்தானே முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார் என்பதைக் கிழக்கத்திய சர்ச் மறுத்தது.
அரசியல் அதிகாரத்தாலும் தவறாக வழிநடத்தப்பட்ட மத நம்பிக்கைகளாலும் உந்துவிக்கப்பட்ட ரோமன் கத்தோலிக்கச் சர்ச் எதிர்ப்பை நசுக்கிட பட்டயத்திற்குத் திரும்பியது. தங்களுக்கு முரணான கோட்பாடுடையவர்களை வெட்டி வீழ்த்துவதே அதன் முக்கிய வேலையாக ஆனது. செக்கசுலோவாக்கியாவில் ப்ரேகிலுள்ள கார்ல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சரித்திர பேராசிரியர்கள் மிரோஸ்லாவ் ஹ்ரோச் மற்றும் அன்னா ஸ்கிபோவா, இந்த முரண் கோட்பாட்டாளரைக் கையாளுவதற்கான விசேஷ உயர்முறை மன்றம் எப்படி இயங்கியது என்பதை விளக்குகிறார்: “பொது பழக்கத்திற்கு முரணாக, தகவலளிப்பவர்களின் பெயர்கள் . . . வெளிப்படுத்தப்பட வேண்டியதாயில்லை.” போப் இன்னொசென்ட் IV 1252-ல் வாதனையை அனுமதித்த “பூண்டோடழிக்கும்” ஒரு சுற்றறிக்கையை அனுப்பினார். “13-வது நூற்றாண்டில் கழுமரத்தில் உயிரோடு எரிக்கப்படும் பொதுவான முறை . . . அடையாள அர்த்தத்தைக் கொண்டிருந்தது, அதாவது, இப்படிப்பட்ட தண்டனையை நிறைவேற்றுவதில் சர்ச் இரத்தம் சிந்தும் பழிக்கு விலகியிருக்கிறது என்பதை அர்த்தப்படுத்தியது.”
முரண்கோட்பாட்டாளருக்கு எதிராக நிறுவப்பட்ட உயர்முறை மன்றத்தினர் ஆயிரக்கணக்கான ஆட்களைத் தண்டித்தனர். மற்றும் ஆயிரக்கணக்கானோர் கழுமரத்தில் உயிரோடு எரிக்கப்பட்டனர். சரித்திராசிரியர் உவில் டுரண்ட் பின்வருமாறு குறிப்பிடுவதற்கு இது வழிநடத்தியது: “ஒரு சரித்திராசிரியனிடம் எதிர்பார்க்கப்பட்ட காரியங்களுக்கும் ஒரு கிறிஸ்தவனுக்கு அனுமதிக்கப்பட்ட காரியங்களுக்கும் இடங்கொடுத்து, நாம் அந்த முரண்கோட்பாட்டாளருக்கு எதிரான உயர்முறை மன்ற நடவடிக்கைகளை . . . மனிதவர்க்கத்தின் சரித்திரப் பதிவில் மிகக் கரிய புள்ளிகளாக, எந்த ஒரு விலங்கினத்திற்கும் அறியப்படாததாயிருக்கும் ஒரு மூர்க்கத்தை வெளிப்படுத்துகிறதாக வரிசைப்படுத்த வேண்டும்.”
முரண்கோட்பாட்டாளருக்கு எதிரான நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள், 17-வது நூற்றாண்டு ஃபிரஞ்சு தத்துவஞானியும் விஞ்ஞானியுமாகிய பிளேய்ஸ் பாஸ்கலின் வார்த்தைகளை நினைவுபடுத்துகிறது. அவர் எழுதினார்: “மக்கள் ஒரு மத நம்பிக்கையில் தீயதைச் செய்வது போன்று அந்தளவுக்கு முழுமையாகவும் உற்சாகத்துடனும் மற்ற சமயங்களில் செய்வதில்லை.” ஓர் உண்மை என்னவென்றால், வித்தியாசமான மத கொள்கைகளைத் தொடருகிறவர்களுக்கு எதிராகத் துன்புறுத்தலின் பட்டயத்தைப் பயன்படுத்துதல் காயீன் ஆபேலைக் கொன்றது முதல் பொய் மதத்தின் பண்பாக இருந்துவந்திருக்கிறது.—ஆதியாகமம் 4:8.
வேற்றுமையின் பட்டயத்தால் துண்டிக்கப்படுதல்
தேசிய அளவில் பிளவும் அரசியல் செயல் திட்டங்களும் 1309-ல் போப்பின் இல்லம் ரோமிலிருந்து அவிக்னானுக்கு மாற்றப்படுவதற்கு வழிவகுத்தது. அது 1377-ல் ரோமுக்கு மீண்டும் மாற்றப்பட்டபோதிலும், ஒரு புதிய போப் அர்பன் VI தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து கூடுதல் போரட்டங்கள். ஆனால் அவரைத் தேர்ந்தெடுத்த அதே மதத் தலைமைக் குருக்கள் அல்லது கார்டினல்கள் ஒரு போட்டி போப்பை, கிளெமன்ட் VII-ஐ தேர்ந்தெடுத்தார்கள். இவர் அவிக்னானில் தங்கினார். 15-வது நூற்றாண்டின் ஆரம்பத்தில் காரியங்கள் அதிக குழப்பத்தைக் கண்டது, ஒரே சமயத்திலே சிறிது காலத்திற்கு மூன்று போப்புகள் ஆண்டனர்!
மேற்கத்திய, அல்லது மகா, மதப்பிரிவு என்று அறிப்பட்ட இந்த நிலை கான்ஸ்டன்ஸ் மறைக்குழுவால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அது மறைக்குழு நியதியை வகுத்தது, அதாவது திருச்சபைச் சார்ந்த தீர்மானங்கள் செய்வதற்கான அதிகாரம் பொது மறைக்குழுக்களினுடையது, போப்பின் அதிகாரத்துக்கு உட்பட்டதாயில்லை. இப்படியாக, 1417-ல் அந்த மறைக்குழு மார்ட்டின் V-ஐ புதிய போப்பாகத் தெரிந்தெடுத்தது. மீண்டும் ஐக்கியப்பட்ட போதிலும், சர்ச் மிகவும் பலவீனமடைந்தது. காயங்களின் மத்தியிலும், போப்பின் அதிகாரம் எந்த விதமான மறுமலர்ச்சிக்கான தேவையையும் அங்கிகரிக்க மறுத்தது. புனித வ்லாடிமிர் ஆர்த்தடாக்ஸ் மறையியல் பயிலகத்தைச் சேர்ந்த ஜான் L. பூஜம்ரா கூறுகிறபடி, இந்தத் தோல்வி “பதினாறாவது நூற்றாண்டுக்குரிய மறுமலர்ச்சிக்கு அஸ்திவாரம் போட்டது.”
தங்களுடைய மதத்தின்படி வாழ்ந்தார்களா?
கிறிஸ்தவ மதத்தின் ஸ்தபகர் தம்மைப் பின்பற்றினவர்களிடம் சீஷராக்கும்படி கூறினார், ஆனால் அப்படிச் செய்வதில் உடல் வலிமைக் கொண்டு பலவந்தப்படுத்தும்படி அவர் கூறவில்லை. உண்மை என்னவெனில், “பட்டயத்தை எடுக்கிறவன் பட்டயத்தாலே மடிவான்” என்று அவர் குறிப்பாக எச்சரித்தார். அதுபோல, சாதகமற்ற பிரதிபலிப்பைக் காண்பிக்கும் எவரையும் சரீரப்பிரகாரமாய் வருத்தும்படியாகத் தம்மைப் பின்பற்றியவர்களிடம் சொல்லவில்லை. பின்பற்றவேண்டிய கிறிஸ்தவ நியமம்: “கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைப்பண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதக சமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும். . . . சாந்தமாய் அவர்களுக்கு [எதிர்பேசுகிறவர்களுக்கு] உபதேசிக்க வேண்டும்.”—மத்தேயு 26:52; 2 தீமோத்தேயு 2:24–26.
சொல்லர்த்தமாகவே போர்ப் பட்டயத்திற்கும், அடையாள அர்த்தமுள்ள அரசியல் மற்றும் துன்புறுத்தல் என்ற பட்டயங்களுக்கும் திரும்புவதன் மூலம், கிறிஸ்தவ மதத்தின் ஸ்தபகராகத் தான் உரிமைப்பாராட்டும் நபரைக் கிறிஸ்தவமண்டலம் பின்பற்றவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஏற்கெனவே வேற்றுமையால் அழிக்கப்பட்டுவருவதால், அது ஒரு முழுமையான அழிவின் அச்சுறுத்தலை எதிர்ப்பட்டது. ரோமன் கத்தோலிக்க மதம், “சீர்திருத்தம் தேவைப்படும் ஒரு மத”மாக இருந்தது. ஆனால் சீர்திருத்தம் வந்ததா? அப்படியென்றால், எப்பொழுது? யாரிடமிருந்து? எமது மே மாத இதழ் இதைக்குறித்துக் கூடுதலாகக் கூறும். (g89 8/8)
[பக்கம் 26-ன் பெட்டி/படம்]
நல்ல கிறிஸ்தவ போர?
சிலுவைப் போர்கள் கிறிஸ்தவர்கள் போரிடும்படியாகச் சொல்லப்பட்ட நல்ல போராட்டமா?—2 கொரிந்தியர் 10:3, 4; 1 தீமோத்தேயு 1:18.
முதல் சிலுவைப் போர் (1096–99) எருசலேம் மீண்டும் கைப்பற்றப்படுவதிலும், கிழக்கில் நான்கு லத்தீன் மாநிலங்கள் அமைக்கப்படுவதிலும் விளைவடைந்தது: எருசலேம் ராஜ்யம், எதேசா மாவட்டம், அந்தியோகிய இளவரசு ஆட்சிப் பகுதி, மற்றும் ட்ரைபோலி மாவட்டம். சரித்திராசிரியர் H.G. வெல்ஸ் மேற்கோள் காண்பித்திருக்கும் ஓர் அதிகாரி எருசலேம் கைப்பற்றப்படுவது குறித்து பின்வருமாறு கூறுகிறார்: “படுகொலை பயங்கரமாயிருந்தது; மனிதர் சவாரிசெய்யும்போது வெற்றிகொள்ளப்பட்டவர்களின் இரத்தம் தெளிக்குமளவுக்கு தெருக்களில் ஓடியது. இரவில், ‘அளவுகடந்த மகிழ்ச்சிக்குக் கண்ணீர் சிந்துகிறவர்களாக’ சிலுவைப்போர் வீரர்கள் திராட்சை ஆலைகளில் பணியாற்றியவர்களைப்போல கல்லறைகளுக்கு வந்து, இரத்தக் கறை கொண்ட தங்கள் இரு கரங்களையும் ஜெபத்தில் கூப்பினர்.”
இரண்டாவது சிலுவைப்போர் (1147–49) 1144-ல் எதெசா மாவட்டம் சீரியா முஸ்லீம்களுக்கு இழக்கப்பட்டதால் ஆரம்பிக்கப்பட்டது; கிறிஸ்தவமண்டலத்தின் “மத நம்பிக்கையற்றவர்களை” முஸ்லீம்கள் வெற்றிகரமாகத் திரும்பியனுப்பியபோது, அது முடிவுக்கு வந்தது.
மூன்றாவது சிலுவைப்போர் (1189–92) முஸ்லீம்கள் எருசலேமை மீண்டும் கைப்பற்றியதற்குப் பின்னர் செய்யப்பட்டது. அதன் தலைவர்களில் ஒருவர்தான் இங்கிலாந்தின் “சிம்மநெஞ்சன்” ரிச்சர்டு I. “அது மோதல், சச்சரவு மற்றும் ஒத்துழைப்பு இன்மையால் சீரழிந்தது,” என்று மத என்சைக்ளோபீடியா கூறுகிறது.
நான்காவது சிலுவைப்போர் (1202–4) நிதி குறைவால் எகிப்திலிருந்து கான்ஸ்டான்டிநோப்பிளுக்குத் திருப்பப்பட்டது; நாடுகடத்தப்பட்ட பைசாண்டீன் வேஷக்காரன் அலெக்சியஸ் சிங்காசனத்துக்கு ஏறிட உதவியதற்கு பொருளாதார உதவி வாக்களிக்கப்பட்டது. “[இதனால் விளைந்த] சிலுவைப்போர் வீரர்களின் பெருங்கொள்ளையை ஆர்த்தடாக்ஸ் கிழக்கு மறக்கவும் இல்லை, மன்னிக்கவும் இல்லை,” என்கிறது மத என்சைக்ளோபீடியா. அது மேலும் கூட்டுகிறது: “அந்த உட்பிளவு உறுதியாக ஸ்தாபிக்கப்படுவதற்கு ஒரு தேதி குறிப்பிடப்படவேண்டுமானால், மிகவும் பொருத்தமாக இருப்பது—மனோதத்துவ நிலையிலிருந்து—1204-ம் ஆண்டு.”
பிள்ளைகளின் சிலுவைப்போர் (1212) ஆயிரக்கணக்கான ஜெர்மானியர் மற்றும் ஃபிரஞ்சு பிள்ளைகள் அவர்கள் அடையவேண்டிய இடத்தை அடைவதற்கு முன்பே அவர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தியது.
ஐந்தாவது சிலுவைப்போர் (1217–21), போப்பாதிக்கத்தின் கீழிருந்த கடைசியானது, குறைபாடுள்ள தலைமைத்துவத்தினாலும் குருமாரின் குறுக்கீட்டினாலும் தோல்வியடைந்தது.
ஆறாவது சிலுவைப்போர் (1228–29) ஹோஹன்ஸ்டாஃபனைச் சேர்ந்த பேரரசர் ஃப்ரடிரிக் II என்பவர் தலைமையில் நடந்தது. இவரைப் போப் கிரிகோரி IX முன்னதாக சர்ச்சிலிருந்து நீக்கியிருந்தார்.
ஏழாவது மற்றும் எட்டாவது சிலுவைப்போர்கள் (1248–54 மற்றும் 1270–72) ஃபிரான்சைச் சேர்ந்த லூயி IX தலைமையில் நடந்தது, ஆனால் வடக்கு ஆப்பிரிக்காவில் அவருடைய மரணத்துக்குப் பின்னர் வீழ்ச்சியடைந்தது.
[பக்கம் 25-ன் படம்]
ஜெர்மனியில் ஒர்ம்ஸ் என்ற இடத்திலுள்ள யூதர் கல்லறை—முதல் சிலுவைப் போரின் நினைவுச்சின்னம்