சிலுவைப் போர்கள்—‘அவலம் நிறைந்த மாயத்தோற்றம்’
இத்தாலியிலிருந்து விழித்தெழு! நிருபர்
ஏறக்குறைய தொளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, 1096-ல், முதலாவது சிலுவைப் போர் ஆரம்பிக்கும் தறுவாயில் இருந்தது. நீங்கள் அந்த சமயத்தில் மேற்கு ஐரோப்பாவில் வாழ்ந்திருந்தால், ஆண்களும் வண்டிகளும் குதிரைகளும் கப்பல்களும் அணியணியாய் செல்வதை பார்த்திருப்பீர்கள். பொ.ச. ஏழாம் நூற்றாண்டிலிருந்து முஸ்லிம்கள் கட்டுப்பாட்டில் இருந்த புனித நகரமாகிய ஜெரூசலமை நோக்கி அவை சென்றுகொண்டிருந்தன.
அதுவே முதலாவது சிலுவைப் போர். எட்டு பெரிய சிலுவைப் போர்கள் நடந்தன என்று அநேக சரித்திராசிரியர்கள் கூறுகின்றனர். இந்தப் படையெடுப்புகள் கிழக்கு மேற்கு உறவுகளில் ஒரு தழும்பை ஏற்படுத்தின. கடவுள் மற்றும் கிறிஸ்துவின் பெயரில் படுகொலைகளும் கொடூரங்களும் நிகழ்ந்தன. கடைசியான பெரிய சிலுவைப் போர் 174 வருடங்கள் கழித்து, 1270-ல் ஆரம்பமானது.
“சிலுவைப் போர்” என்ற வார்த்தையானது “சிலுவை” என்று அர்த்தப்படும் லத்தீன் வார்த்தையான க்ருக்ஸ் என்பதிலிருந்து வருகிறது. இந்த அநேக படையெடுப்புகளில் பங்குகொண்டவர்கள் சிலுவையின் அடையாளத்தை தங்கள் உடைகளில் தைத்திருந்தனர்.
காரணங்கள்
ஜெரூசலமையும் பரிசுத்த கல்லறை என்று அழைக்கப்பட்டதையும் முஸ்லிம்களிடமிருந்து திரும்ப பெறுவதே சிலுவைப் போர்களின் நோக்கமென்று அறிவிக்கப்பட்டது. ஆனால் காரணங்கள் அதைவிட அதிகத்தை உட்படுத்தின. சில சம்பவங்களைத் தவிர, மத்திய கிழக்கில் வாழ்ந்துகொண்டிருந்த பெயர்க் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் உறவுகள் ஓரளவு சுமூகமாக இருந்தன. சிலுவைப் போர்களுக்கு வழிநடத்திய ஒரு முக்கிய காரணமானது ஐரோப்பாவில் நிலவிய கொந்தளிப்பு மிக்க அரசியல், பொருளாதார மற்றும் மத சூழ்நிலையாகும்.
11-வது நூற்றாண்டில், உணவு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் புதிய நாட்டுப்புறங்கள் வேளாண்மைக்காக ஒதுக்கிவைக்கப்பட்டன. நகர்ப்புறங்கள் புதுவாழ்வை அனுபவித்தன. மக்கள்தொகை அதிகரித்துக்கொண்டிருந்தது. என்றபோதிலும், ஒரு பஞ்சம் அதிகமான விவசாயிகளை ஏழ்மைக்குள் அமிழ்த்தியபோது, அநேகர் நகரங்களில் வந்து குவிந்தனர். அங்கே வேலையில்லா திண்டாட்டமும், துன்பமுமே அவர்களுக்காக காத்திருந்தன. அடிக்கடி கலவரங்கள் ஏற்பட்டன.
சமூகநிலையின் உச்சத்தில் அநேக பண்ணைநில அரசர்கள் இருந்தனர். சார்லிமேனின் பேரரசு உடைந்ததால் ஏற்பட்ட அரசியல் வெறுமையை சாதகமாக பயன்படுத்தி, இந்த தொழில்முறையான யுத்தவீரர்கள் புதிய சொத்துக்களை கைப்பற்ற விரும்பினர்.
ரோமன் கத்தோலிக்க சர்ச்சும் கொந்தளிப்பான ஒரு காலப்பகுதியில் இருந்தது. 1054-ல் கிழக்கத்திய சர்ச் மீதிருந்த கட்டுப்பாட்டை அது இழந்தது. அதோடுகூட, ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டதாகவும் அரசியலில் தலையிட்டதாகவும் அநேக பாதிரிமார்கள் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
கிளர்மான்டில் போப்பின் அழைப்பாணை
இந்தச் சூழ்நிலையில்தான் இரண்டாம் போப் அர்பன் முதலாவது சிலுவைப்போருக்கான அழைப்பை கொடுத்தார். ஜெரூசலமையும் பாலஸ்தீனாவையும் திரும்ப கைப்பற்ற ராணுவ நடவடிக்கை எடுப்பது அநேக நோக்கங்களை சேவிக்கும் என்று அவர் கருதினார். அது மேற்கத்திய கிறிஸ்தவமண்டலத்தின் ஒற்றுமையை வலுப்படுத்தி, ரோம சர்ச்சின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தும். மேல்தர வகுப்பினர் மத்தியில் தொடர்ந்திருந்த சச்சரவுகளுக்கான வடிகாலாகவும் அது அமையும். முக்கியமாக பொருளாதார மற்றும் மத நன்மைகளுக்கு மாற்றீடாக, இந்த மேல்தர வகுப்பினர் தங்கள் ராணுவத் திறமையை “உயர்தர” நோக்கத்திற்காக உபயோகிப்பர்; இவ்வாறு சர்ச்சின் ஆயுதம் தாங்கிய துணை உறுப்பினராக செயல்படுவர்.
நவம்பர் 27, 1095-ல் பிரான்ஸிலுள்ள கிளர்மான்டில் நடைபெற்ற ஒரு அவைக்கு முன்பாக அர்பன் தன்னுடைய அழைப்பாணையை விடுத்தார். தெய்வீக தண்டனைப் பெற தகுதியானவர்கள் என்பதாக தங்கள் எதிரிகளை பற்றிய ஒரு பொல்லாத வர்ணனையை சர்ச் கொடுத்தது. கிழக்கத்திய “கிறிஸ்தவர்களை” முஸ்லிம்களிடமிருந்து பாதுகாக்க இந்த யுத்தம் அவசியம் என்று முதலாவது சிலுவைப்போரில் பங்குகொண்ட பாதிரியான ஃபுஷே டஷார்ட்ர கூறினார். வழியில் அல்லது யுத்தத்தில் இறந்தவர்களுக்கு உடனடியாக பாவமன்னிப்பு வழங்கப்படும் என்று வாக்கு கொடுக்கப்பட்டது. இவ்வாறாக இந்தப் பண்ணைநில அரசர்கள் தங்கள் மத்தியிலேயே சண்டை போட்டுக்கொள்வதற்கு மாறாக “புறமதத்தினர்”களுக்கு எதிரான ஒரு “பரிசுத்த” யுத்தம் செய்வது சாத்தியமானது. அந்த அவையில் முதல் சிலுவைப்போரின் குறிக்கோளுரையாக ஆகவிருந்த, “இது கடவுளுடைய சித்தம்!” என்ற கூக்குரல் எதிரொலித்தது.
இரண்டு புறப்பாடுகள்
புறப்படும் தேதியாக ஆகஸ்ட் 15, 1096 நிர்ணயிக்கப்பட்ட பிறகு, ராணுவ செயல்பாடுகள் ஒப்படைக்கப்பட்டிருந்த பாமர வர்க்கத்தைச் சேர்ந்த பண்ணையார்களின் ஆதரவை போப் நிச்சயப்படுத்திக்கொண்டார். அந்தப் பொறுப்பு முடிந்து திரும்பிவரும்வரை அவர்களுடைய சொத்துக்களை பாதுகாப்பதாக சர்ச் உறுதியளித்தது. அதிக செல்வந்தர்களாக இல்லாத மற்றவர்கள் நன்கொடைகள் மூலம் இந்த நோக்கத்திற்கு உதவும்படி தூண்டப்பட்டனர்.
என்றபோதிலும், குறிக்கப்பட்ட தேதிக்குமுன்பாக சிலர் புறப்பட்டுவிட்டனர். பயிற்றுவிக்கப்படாததும் ஒழுங்கில்லாததுமான இந்த கும்பல் பெண்களையும் பிள்ளைகளையும் உட்படுத்தியது. அவர்கள் பௌபெரெஸ் கிறிஸ்டி (கிறிஸ்துவின் பிச்சைக்காரர்கள்) என்று அழைக்கப்பட்டனர். ஜெரூசலம் அவர்களுடைய இலக்காக இருந்தது. ஜனக்கூட்டத்தை தூண்டியெழுப்புகிறவர்களால் அவர்கள் வழிநடத்தப்பட்டனர்; 1095-ன் முடிவு சமயத்தில் பொதுமக்கள் மத்தியில் பிரசங்கிக்க ஆரம்பித்திருந்த சன்னியாசியான பீட்டர் துறவியே அவர்களுள் மிகவும் பிரபலமானவராக இருந்தார்.
மத்தியகால சரித்திர எழுத்தாளரான எக்ஸின் ஆல்பர் கூறுகிறபடி, பீட்டர் ஏற்கெனவே ஜெரூசலமிற்கு பயணம் செய்திருந்தார். ஒருநாள் இரவு கிறிஸ்து தோன்றி, மேற்கிற்கு எடுத்துச்செல்லவேண்டிய ஒரு அதிகார சான்றிதழை பெறுவதற்காக ஜெரூசலமின் வட்டார பிஷப்பிடம் போகும்படி அவரிடம் கட்டளையிட்டதாக சொல்லப்படுகிறது. அந்த கனவு பலித்ததாகவும் கடிதத்தை பெற்றபிறகு பீட்டர் ரோமுக்கு சென்று போப்பை சந்தித்ததாகவும் ஆல்பர் கூறுகிறார். ஆல்பரின் பதிவு உண்மையையும் கற்பனையையும் பிணைக்கிறது; ஆனால் நிகழ்ந்ததாக சொல்லப்பட்ட கனவுகளும் தரிசனங்களும் கடிதங்களும் ஜனக்கூட்டத்தை நடத்துவதற்கு வல்லமை வாய்ந்த தூண்டுகோல்களாக இருந்தன.
துறவி பீட்டரிடம் சேர்ந்த கும்பல், கொலோனை விட்டு ஏப்ரல் 20, 1096-ல் புறப்பட்டது. கடற்பிரயாணம் செய்வதற்குத் தேவையான வசதிகள் இல்லாததால், பௌபெரெஸ் கிறிஸ்டி, பரிசுத்த நகரத்திற்கு செல்லும் நீண்ட பயணத்தை நடந்து அல்லது மோசமான நிலையிலிருந்த வண்டிகளில் செல்லவேண்டியிருந்தது. சீக்கிரத்திலேயே உணவும் ஆயுதங்களும் இல்லாமற்போய்விட்டதால் செல்லும் வழியிலெல்லாம், இந்த ஒழுங்கற்ற கும்பலான “கிறிஸ்துவின் போர்வீரர்க”ளுடைய வருகையை சற்றும் எதிர்பாராத உள்ளூர் மக்களை அந்தக் கும்பல் கொள்ளையிட்டது.
ஊழல்மிகுந்த பிஷப்புகளுக்கு பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஐரோப்பிய யூதர்களே அவர்களால் முதலாவது தாக்கப்பட்டார்கள். தாங்கள் புறப்பட்ட நகரங்களான ரூயன், கொலோன் போன்ற இடங்களில், துறவி பீட்டரை பின்பற்றியவர்கள் யூதர்களுக்கு எதிராக அட்டூழியங்களை செய்தனர். மேன்ஸ் நகரைச் சேர்ந்த யூதர்கள், “தங்கள் சிறு குழந்தைகளைக்கூட இந்தக் கிறிஸ்தவர்கள் விட்டுவைக்காமலும் எவர் மீதும் இரக்கம் காட்டாமலும் இருக்கிறார்கள் என்பதை பார்த்தபோது, தங்கள் சொந்த சகோதர சகோதரிகளையும் மனைவிகளையும் தாய்களையும் தாக்கி ஒருவரை ஒருவர் கொன்றனர். மனதை உருக்கிய நிகழ்ச்சி என்னவென்றால், புறஜாதியாரின் கைகளில் சாவதைவிட தங்கள் கைகளில் சாவதே மேலானது என்று நினைத்த தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் தொண்டைகளை அறுத்து அல்லது அவர்களை குத்தி கொலைசெய்தனர்” என எக்ஸின் ஆல்பர் கூறுகிறார்.
சிறிய ஆசியாவுக்கு செல்லும் வழியில் பால்கன் நாடுகளுக்கு பிரயாணம் செய்தபோதும் இதேபோன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. அந்தக் கும்பல் கான்ஸ்டான்டிநோப்பிளை அடைந்தவுடன் அப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் திரும்ப நடக்காதபடி பேரரசர் முதலாம் அலெக்சஸ், ஆசிய கடலோரங்களுக்கு போகும்படி பௌபெரெஸ்-க்கு அனுமதியளித்தார். அங்கே ஏராளமான பெண்களும் குழந்தைகளும் வியாதியஸ்தரும் வயோதிபரும் முஸ்லிம் படைகளால் கொல்லப்பட்டனர். சிலர் மட்டுமே கான்ஸ்டான்டிநோப்பிளுக்கு வெற்றிகரமாக திரும்பிவந்தனர்.
இதற்கிடையில், 1096-ன் கோடைகாலத்தின்போது பயிற்சி பெற்ற ராணுவங்கள் புறப்பட்டன. அந்நாளைய பிரசித்திபெற்ற தலைவர்களால் அவர்கள் வழிநடத்தப்பட்டனர். கட்டுப்பாடற்று, முன்னதாகவே ஆரம்பித்த பௌபெரெஸ்-ன் புறப்பாடு போப் அர்பனை கவலையுறச் செய்தது; ஆகவே கிழக்கிற்கு போகும் சிலுவைப் போர் வீரர்களின் செயல்பாடுகளை அவர் ஒழுங்குபடுத்தினார். இப்போது புறப்படுகிறவர்கள் தங்களை ஆதரித்துக்கொள்ள போதுமான பொருட்கள் இருக்கின்றன என்பதை நிரூபிக்க வேண்டும். பெண்கள், பிள்ளைகள், வயதானவர்கள், ஏழைகள் ஆகியோர் பங்குகொள்வதை குறைப்பதே அதன் நோக்கமாக இருந்தது.
வெற்றிகளும் மற்ற படுகொலைகளும்
கான்ஸ்டான்டிநோப்பிளுக்கு வந்துசேர்ந்த பிறகு, அந்தப் படைகளும் வீரப் பெருந்தகைகளும் தப்பித்த பௌபெரெஸ்களும் தங்கள் இலக்கை நோக்கி சென்றனர். மறுபடியும் கடவுளுடைய பெயரில் வன்முறையான சம்பவங்கள் தொடர்ந்தன. அந்தியோகியாவின் முற்றுகையின்போது தங்கள் எதிரிகளை படுகொலை செய்தபிறகு சிலுவைப் போர் வீரர்கள், “சடலங்களை எல்லாம் ஒரு பெரிய பொது பிரேதக்குழியில் போட்டுவிட்டு, எண்ணிக்கையை தீர்மானிப்பதற்காக வெட்டப்பட்ட அவர்களுடைய தலைகளை—கடற்கரையிலிருந்த பாபிலோனுடைய அமீரின் அரசாங்க தூதுவர்களுக்கு அனுப்பப்பட்ட நான்கு குதிரைகள் மீதிருந்த தலைகள் தவிர மற்றவற்றை—[தங்கள்] பாசறைக்கு கொண்டுவந்தனர்” என்று சரித்திர எழுத்தாளரான பெட்ருஸ் டுடீபொடஸ் கூறுகிறார்.
ஜூலை 15, 1099-ல் ஜெரூசலம் சிலுவைப் போர் வீரர்களிடம் வீழ்ச்சியடைந்தது. அகிலேயின் ரேமோன் பின்வருமாறு விவரிக்கிறார்: “அது கொடூரமான காட்சியாக இருந்தது. அதிர்ஷ்டசாலிகளாக இருந்த [எதிரிகளில்] சிலருடைய தலை துண்டிக்கப்பட்டது; தங்கள் உடல்கள் அம்புகளால் துளைக்கப்பட்டவர்களாக மற்றவர்கள் மதில்களிலிருந்து விழுந்தனர்; மற்ற அநேகர் சுட்டெரிக்கப்பட்டனர். நகரத்தின் தெருக்களிலும் அதன் பொது இடங்களிலும் வெட்டப்பட்ட தலைகளும் கைகளும் கால்களும் குவியலாக கிடந்தன.” ஆனால் மறுபடியும், சிலுவைப் போர் வீரர்கள் மதத்தின் பெயரில் வன்முறையை நியாயப்படுத்த முயன்றனர்.
ஒரு மாயத்தோற்றத்தின் முடிவு
அந்த வெற்றி, லத்தீன் ஜெரூசலம் ராஜ்யம் உருவாவதில் விளைவடைந்தது. சீக்கிரத்திலேயே, கிழக்கில் தங்களை ஸ்தாபித்துக்கொண்ட பண்ணைநில அரசர்கள் மத்தியில் ஏற்பட்ட போட்டிகள் காரணமாக இந்த ராஜ்யம் நிலையற்றதாக இருந்தது. இதற்கிடையில் முஸ்லிம்கள் ராணுவ அடிப்படையில் தங்களை மீண்டும் சீரமைத்துக்கொண்டனர். பாலஸ்தீனாவில் நிலத்தை இழப்பதை நிச்சயமாகவே அவர்கள் விரும்பவில்லை.
காலப்போக்கில் மற்ற சிலுவைப் போர்கள் ஏற்பாடு செய்யப்பட்டன; கடைசியானது 1270-ல் நடந்தது. என்றபோதிலும், தோல்விகளின் காரணமாக, மதத்தின் பெயரில் செய்யப்பட்ட இந்த ஏற்பாடுகள் சரிதானா என்று அநேகர் சந்தேகித்தனர். இந்த “பரிசுத்த” யுத்தங்களை கடவுள் உண்மையில் அங்கீகரித்திருந்தால், அவருடைய ஆசீர்வாதத்துடன் செயல்பட்டதாக உரிமைபாராட்டியவர்களை அவர் நிச்சயம் ஆதரித்திருப்பார் என்று அவர்கள் நினைத்தனர். என்றபோதிலும், 13-வது நூற்றாண்டிலிருந்தே மதப்போர்களையும் அதில் மதகுருக்களின் பங்கையும் சர்ச் சட்ட நிபுணர்கள் நியாயப்படுத்த முயன்றனர்.
முதல் சிலுவைப் போர் வீரர்களைத் தூண்டிய உற்சாகம் குறைந்துபோயிற்று. முக்கியமாக, அந்த யுத்தங்கள் தொடர்வதானது கடைசியில் மேற்கின் பொருளாதார அக்கறைகளை சீர்குலையச் செய்யும். ஆகவே அவர்கள் ஐரோப்பிய கிறிஸ்தவமண்டலத்தின் உட்புற எதிரிகளான ஸ்பெய்னிலுள்ள அரபியர்கள், “முரண் கோட்பாட்டாளர்கள்” மற்றும் வடக்கின் புறஜாதிகளுக்கு எதிராக யுத்தம் செய்ய ஆரம்பித்தனர்.
1291-ல் சிலுவைப் போர் வீரர்களின் கடைசி அரணான பட்டணமாகிய ஏக்கர் முஸ்லிம்களிடம் வீழ்ச்சியடைந்தது. ஜெரூசலமும் ‘பரிசுத்த கல்லறையும்’ முஸ்லிம்கள் கைவசமே இருந்தன. இரண்டு நூற்றாண்டுகளாக நடந்த சண்டைகளில், பொருளாதார மற்றும் அரசியல் அக்கறைகள் மத விஷயங்கள்மீது ஆதிக்கம் செலுத்தின. இத்தாலிய சரித்திராசிரியன் பிராங்கோ கார்டினி கூறுகிறார்: “இந்தச் சமயத்திற்குள்ளாக சிலுவைப் போர்கள் கடுஞ்சிக்கலான அரசியல் மற்றும் பொருளாதார ஏற்பாடுகளாக கொஞ்சம் கொஞ்சமாக உருவெடுத்திருந்தன. பிஷப்புகள், குருமடத் தலைவர்கள், ராஜாக்கள், பணம் சேர்ப்பவர்கள், வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள், ஆகியோர் அடங்கிய ஒரு சிக்கலான அதிகாரப் போராட்டமாக இருந்தது. இந்தப் போட்டியில் . . . இயேசுவின் கல்லறை அதன் எல்லா முக்கியத்துவத்தையும் இழந்தது.” கார்டினி மேலுமாக கூறுகிறார்: “சிலுவைப் போர்களின் சரித்திரம்தான் மிகப்பெரிய பிழை, மிகச் சிக்கலான சூழ்ச்சி, மிகவும் கொடூரமான, இன்னும் சில வழிகளில் கிறிஸ்தவமண்டலத்தின் மிகவும் ஏளனமிக்க மாயத்தோற்றம் ஆகியவற்றின் சரித்திரம்.”
அசட்டை செய்யப்பட்ட பாடம்
பொருளாதார பேராசையும் அரசியல் ரீதியில் பெரும் புகழுக்கான ஆவலும் மத வெறிக்கும் படுகொலைக்கும் வழிநடத்தக்கூடும் என்பதை சிலுவைப் போர்களும் அவற்றின் தோல்விகளும் கற்பித்திருக்க வேண்டும். ஆனால் அந்தப் பாடம் அசட்டை செய்யப்பட்டிருக்கிறது. நம்முடைய கிரகத்தின் பல்வேறு பாகங்களை ரத்தத்தால் கறைப்படுத்தியிருக்கும் அநேக சண்டைகளே இதற்கு அத்தாட்சி. இந்தச் சண்டைகளில் அருவருப்புகளுக்கான முன்னணியாக அடிக்கடி மதமே செயல்பட்டிருக்கிறது.
என்றபோதிலும் இது அதிக நாட்களுக்கு தொடராது. வெகு சீக்கிரத்தில் சிலுவைப் போர்களையும் இன்றைய நவீன நாளைய “பரிசுத்த” யுத்தங்களையும் தொடர்ந்து ஊட்டிவளர்த்துவரும் அந்த மனச்சாய்வு, எல்லா பொய் மதத்தோடும் சாத்தானுக்கு கீழ்ப்பட்டிருக்கும் முழு காரிய ஒழுங்குமுறையோடும் சேர்ந்து இல்லாமற்போகும்.—சங்கீதம் 46:8, 9; 1 யோவான் 5:19; வெளிப்படுத்துதல் 18:4, 5, 24.
[பக்கம் 12-ன் படத்திற்கான நன்றி]
The Complete Encyclopedia of Illustration/ ஜே. ஜி. ஹெக்
[பக்கம் 15-ன் படம்]
மேலே: ஜெர்மனியிலுள்ள ஓர்ம்ஸில் இருக்கும் யூத கல்லறை—முதல் சிலுவைப் போரில் நடந்த படுகொலைக்கான ஒரு நினைவுச்சின்னம்
இடது: சிலவைப் போர் வீரனின் கல்-தலை
இடது கோடி: சிலுவைப் போரில் ஈடுபட்ட புகழ்பெற்ற ஒரு குடும்பத்தின் அடையாளச்சின்னம்
[படத்திற்கான நன்றி]
அடையாளச்சின்னமும் கல்-தலையும்: Israel Antiquities Authority; போட்டோக்கள்: இஸ்ரேல் மியூசியம், ஜெரூசலம்