“புனித” ஸ்தலத்தில் இரத்த ஆறு
முதலாம் சிலுவைப் போருக்கு ரோமின் போப் பச்சைக்கொடி காட்டினார். 1099, ஜூலை 15-ல் எருசலேமை கையகப்படுத்தும் அதன் இலட்சியம் ஈடேறியது. இரத்தக்களரி, உடலில் மின்சாரத்தைப் பாய்ச்சியதுபோல் இருந்தது! அந்தக் கொடூரத்தில் தப்பிப்பிழைத்தோர் இருவரே—ஒருவர் ஆளுநர், மற்றொருவர் அவருடைய மெய்க்காப்பாளன். அதுவும் நிறைய லஞ்சத்தைக் கொடுத்ததாலேயே. சிலுவைப் போர்கள் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில், அங்கு மீதமிருந்த முஸ்லிம்கள் மற்றும் யூதர்களின் கதியை ஆன்டனி பிரிஜ் என்ற மதகுரு விவரிக்கிறார்: “சிலுவைப் போர்வீரர்கள் தங்கள் மனம்போன போக்கில் எதைச் செய்யவும் அனுமதிக்கப்பட்டதால், நகரத்திற்குள் சென்று பயங்கரமான முறையிலும் கொடூரமான முறையிலும் தங்களுக்கிருந்த தீரா இரத்த தாகத்தை தணித்துக்கொண்டனர். . . . நகரத்தில், ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் என்று யாரையும் விட்டு வைக்காமல் எதிர்ப்பட்ட ஒவ்வொருவரையும் கொன்று குவித்தனர். . . . எல்லாரையும் கொலை செய்த பின்பு வெற்றி வீரர்கள் நகர வீதிகளில் உலா வந்து . . . கடவுளுக்கு நன்றி செலுத்த புனித செப்புல்சரின் சர்ச்சுக்கு சென்றனர்.”
எருசலேமின்மீது கிறிஸ்தவமண்டலம் சிலுவைப் போரின்மூலம் வெற்றி சிறந்த நாள் முதற்கொண்டே ரோமன் கத்தோலிக்க, கிழக்கத்திய ஆர்த்தடாக்ஸ் மற்றும் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொண்ட மற்ற மதங்களுக்கிடையே எப்போதும் சண்டை சச்சரவுகள் இருந்தன. பல்வேறு சர்ச் தலைவர்களுக்கிடையே எருசலேமின் புனித ஸ்தலங்களையும் அதைச் சுற்றியிருந்த பகுதிகளையும் கைப்பற்றுவதற்கு எழுந்த கலகமே 1850-ல் க்ரைமியன் யுத்தம் நிகழ்வதற்கு முக்கிய காரணமானது. ரஷ்யாவிற்கு எதிராக இங்கிலாந்து, பிரான்ஸ், ஒட்டோமன் அரசு ஆகிய நாடுகள் போரிட்டன; விளைவு ஐந்து லட்சம் உயிர்கள் பலியாயின.
அந்த யுத்தத்திற்குப் பிறகும் எருசலேமிற்காகவும் அதன் புனித ஸ்தலங்களுக்காகவும் கிறிஸ்தவமண்டலம் செய்த கலகம் தொடர்ந்தது. அந்தச் சமயத்தில் அந்த நாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ஒட்டோமன்கள், வெவ்வேறு மதத்தினரிடையே அந்தப் புனித ஸ்தலங்களை பங்கிட்டு கொடுப்பதின் மூலம் சமாதானத்தை நிலைநாட்ட முயன்றனர். “இந்த நியதி . . . நவம்பர் 1947-ன் பங்கீட்டு தீர்மானம் என்பதன் அடிப்படையில் ஐக்கிய நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வாறு இது சர்வதேச சட்டத்தின் பாகமானது” என டாக்டர் மனாசே ஹாரல் என்பவர் இதுவே எருசலேம் (ஆங்கிலம்) என்ற தன் புத்தகத்தில் விளக்குகிறார். இதன் விளைவாக, புனித செப்புல்சரின் சர்ச்சு, ரோமன் கத்தோலிக்கருக்கும், கிரேக்க ஆர்த்தடாக்ஸுகளுக்கும், ஆர்மீனியன்களுக்கும், சிரியன்களுக்கும், காப்ட்ஸ்களுக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டது. இறுதியாக, எதியோப்பியர்கள் தங்களுக்கும் அதில் உரிமை இருக்கிறது என்பதற்கு பட்டா கொடுக்கும்படி அந்த சர்ச்சின் கூரையின் மேல் சில அங்கத்தினர்கள் குடிசை போட்டு குடியிருப்பதன்மூலம் வலியுறுத்தினர். புனித செப்புல்சரின் சர்ச்சை கிறிஸ்தவமண்டலத்தின் மகா புனித ஸ்தலம் என அநேகர் கருதுகின்றனர். அதனுள் கோவில்களும், சிலைகளும், உருவச் சின்னங்களும் நிரம்பி வழிகின்றன. புனித ஸ்தலமாக கருதப்படும் மற்றொன்று கார்டன்ஸ் கல்வாரி ஆகும். ஒருவேளை இங்குதானே இயேசு மரத்தில் தூக்கப்பட்டு பின்பு அடக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என்று சில புராட்டஸ்டன்டினர் குறிப்பிடுகின்றனர்.
புனித ஸ்தலங்களின்மீது நம்பிக்கை வைத்திருந்த ஒரு பெண்ணிடம் வெகு காலத்திற்கு முன்பு இயேசு இவ்வாறு சொன்னார்: “நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது. . . . உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்[வார்கள்].” (யோவான் 4:21-24) இதன் காரணமாக, உண்மை கிறிஸ்தவர்கள் புனித ஸ்தலங்களை பூஜிப்பதில்லை. பொ.ச. 70-ல் ரோம சேனைகளால் உண்மையற்ற எருசலேம் அழிக்கப்பட்டதுதானே கிறிஸ்தவமண்டலத்திற்கு விடுத்த ஓர் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். அதன் விக்கிரக வணக்கமும், பிரிவினைகளும், இரத்தப்பழியும் கிறிஸ்தவம் என்ற அதன் பெயரையே பொய்யாக்குபவையாய் திகழ்கின்றன. எனவே, மகா பாபிலோனில் உள்ளடங்கும் எல்லா மதங்களுமே, கிறிஸ்தவமண்டலம் உட்பட, கடவுள் முன்னறிவித்த அழிவிலிருந்து தப்பமுடியாது.—வெளிப்படுத்துதல் 18:2-8.