கடவுள் ஒரு திரித்துவம் என ஆரம்ப சர்ச் கற்பித்ததா?
பகுதி 4—எப்போது, எவ்வாறு திரித்துவக் கோட்பாடு தோன்றிற்று?
இத்தொடரின் முதல் மூன்று கட்டுரைகள், திரித்துவக் கோட்பாடு, இயேசு மற்றும் அவரது சீஷர்களாலோ, ஆரம்ப சர்ச் பிதாக்களாலோ கற்பிக்கப்படவில்லை எனக் காட்டின. (பிப்ரவரி 1, 1992; மே 1, 1992; மற்றும் ஜூலை 1, 1992 காவற்கோபுரம்) இவ்விறுதிக் கட்டுரை, திரித்துவக் கொள்கை எவ்வாறு தோன்றியது என்பதையும், பொ.ச. 325-ல் நைசியா ஆலோசனை சபை என்ன பாகத்தை வகித்தது என்பதையும் ஆராயும்.
சிறிய ஆசியாவில் நைசியா நகரில் பொ.ச. 325-ஆம் ஆண்டு பேராயர்களின் ஆலோசனைக் குழு ஒன்றை ரோம பேரரசன் கான்ஸ்டன்டீன் கூட்டினார். அவரது நோக்கம் சர்வவல்லமையுள்ள கடவுளிடமாக கடவுளுடைய குமாரனின் உறவுபற்றி தொடர்ந்து இருந்துவந்த மதப்பூசல்களைத் தீர்ப்பதேயாகும். அக்குழுவின் முடிவு குறித்து என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா கூறுகிறது:
“கான்ஸ்டன்டீன் தலைமைதாங்கி, முழு ஈடுபாடுடன் கலந்தாலோசிப்புகளைத் தானே வழிநடத்தினான் . . . கிறிஸ்துவுக்கும் கடவுளுக்கும் இடையில் இருக்கும் உறவை எடுத்துக்காட்டும் ஆலோசனை சங்கம் கூறின ‘பிதாவுடன் ஒரே வஸ்து’ [ho·mo·ouʹsi·os] என்ற முக்கியமான பிரமாணத்தை அவன்தானே முன்கொண்டுவந்தான். . . . இருவர் மாத்திரமே நீங்கலாக, அந்தப் பிஷப்புகள், பேரரசனால் மட்டுமீறி அதிர்ச்சியடைந்து, அந்த விசுவாசப்பிரமாணத்துக்குக் கையெழுத்திட்டனர், அவர்களில் பலர் தங்கள் மனவிருப்பத்துக்கு மிக மாறாக அவ்வாறு செய்தனர்.”1
இப்புறமத அரசர் அவரது பைபிள் சார்ந்த உறுதியான நம்பிக்கைகளின் காரணமாகத் தலையிட்டாரா? இல்லை. கிறிஸ்தவ கோட்பாட்டின் ஒரு சுருக்கச் சரித்திரம் கூறுகிறது: “கிரேக்க இறையியலில் கேட்கப்பட்ட கேள்விகளைக் குறித்து கான்ஸ்டன்டீனுக்கு அடிப்படையாய் ஒன்றுமே விளங்கவில்லை.”2 மத பிரிவினை தன்னுடைய பேரரசுக்கு ஆபத்தாயிருந்ததென்பதை மாத்திரமே அவன் உண்மையில் விளங்கிக்கொண்டான். ஆகவே அவை தீர்க்கப்படவேண்டும் என்று அவன் விரும்பினான்.
அது திரித்துவக் கோட்பாட்டை நிலைநிறுத்தியதா?
நைசியா ஆலோசனைக் குழு திரித்துவத்தை கிறிஸ்தவமண்டலத்தின் ஒரு கோட்பாடாக நிலைநிறுத்தியதா? பலர் அவ்விதமாக இருப்பதாகக் கருதுகின்றனர். ஆனால் உண்மைகள் வேறுவிதமாகக் காட்டுகின்றன.
அந்த ஆலோசனைக் குழுவால் பிரகடனம் செய்யப்பட்ட விசுவாசப்பிரமாணம் ஒரு குறிப்பிட்ட விதத்தில் கடவுளின் குமாரனை பிதாவாகிய கடவுளுக்கு நிகராக நோக்க பல குருமார்களுக்கு இடமளிக்கும் காரியங்களைக் கடவுளுடைய குமாரனைப் பற்றி உறுதியாகக் கூறுகிறது. இருப்பினும், நைசீன் விசுவாசப்பிரமாணம் எதைச் சொல்லவில்லை என பார்ப்பது தெளிவூட்டுவதாயிருக்கிறது. முதன் முதலில் பிரசுரிக்கப்பட்டபடி, முழு விசுவாசப்பிரமாணம் கூறினது:
“காணக்கூடியதும் காணக்கூடாததுமான சகலத்தையும் படைத்தவரான சர்வவல்லமையுள்ள பிதாவாகிய ஒரே கடவுளை நாங்கள் விசுவாசிக்கிறோம்;
“மேலும் ஒரே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறோம். அவர் கடவுளின் குமாரன், பிதாவிலிருந்து தோன்றியவர், ஒரே பேறானவர், அதாவது, பிதாவின் வஸ்துவிலிருந்து பெறப்பட்டவர், கடவுளிலிருந்து கடவுள், ஒளியிலிருந்து ஒளி, மெய்க்கடவுளிலிருந்து மெய்க்கடவுள், தோன்றியவர், தோற்றுவிக்கப்பட்டவர் அல்லர். பிதாவுடன் ஒரே வஸ்துவாய் இருப்பவர். வானத்திலுள்ள மற்றும் பூமியிலுள்ளவைகளாகிய அனைத்தும் அவர் மூலமாக உண்டாயின. அவர் மனிதராகிய நமக்காக நமது இரட்சிப்புக்காக கீழே வந்து, அவதாரமானார், மனிதனாகி பாடுபட்டு, மூன்றாவது நாள் திரும்பவும் எழுந்து, பரலோகத்துக்கு ஏறிப்போனார். உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க வருவார்;
“பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறோம்.”3
இந்த விசுவாசப்பிரமாணம் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி, ஒரே கடவுளில் மூன்று நபர்கள் என்கிறதா? அது மூவரும் நித்தியத்துவம், வல்லமை, ஸ்தானம் மற்றும் ஞானத்தில் சமமானவர்கள் என்கிறதா? இல்லை. இங்கே எவ்விதத்திலும் ஒன்றில் மூன்று எனும் பிரமாணம் இல்லை. இந்த மூல நைசீய விசுவாசப்பிரமாண வாசகம் திரித்துவத்தை நிலைநிறுத்தவோ, உறுதிசெய்யவோ இல்லை.
அந்த விசுவாசப்பிரமாணம் அதிகபட்சம் குமாரனை பிதாவுடன் “ஒரே வஸ்து”வாயிருப்பதாக சமநிலைப்படுத்துகிறது. ஆனால், அது பரிசுத்த ஆவியைப்பற்றி அப்படியெதுவும் கூறவில்லை. அது சொல்வதெல்லாம் “நாங்கள் பரிசுத்த ஆவியை . . . விசுவாசிக்கிறோம்.” அது கிறிஸ்தவமண்டலத்தின் திரித்துவக் கோட்பாடல்ல.
“ஒரே வஸ்துவாயிருப்பது,” (ho·mo·ouʹsi·os) என்ற முக்கிய சொற்றொடரும்கூட அக்குழு பிதா மற்றும் குமாரனின் எண் சார்ந்த சமத்துவத்தை நம்பியது என கண்டிப்பாக அர்த்தப்படுத்தவில்லை. புதிய கத்தோலிக்க என்ஸைக்ளோபீடியா கூறுகிறது:
“பிதா மற்றும் குமாரனின் வஸ்துவைக் குறித்த எண் சார்ந்த ஒற்றுமையை உறுதிசெய்ய அக்குழு கருதியதா என்பது சந்தேகத்துக்குரியது.”4
குமாரனும் பிதாவும் எண்ணிக்கை சார்ந்த வகையில் ஒன்றாயிருப்பதாய் அக்குழு கருதியிருந்தாலும் அது ஒரு திரித்துவமாகாது. அது, திரித்துவக் கோட்பாடு தேவைப்படுத்துவது போல ஒன்றில் மூன்று அல்ல, வெறுமென இரண்டில் ஒன்றாக இருக்கும்.
“ஒரு சிறுபான்மையினரின் நோக்குநிலை”
நைசியாவில் குமாரன் கடவுளுக்கு நிகரானவர் என பொதுவாக பேராயர்கள் நம்பினார்களா? இல்லை. வேறுபடும் நோக்குநிலைகள் இருந்தன. உதாரணமாக, ஒரு கருத்து ஏரியஸால் விளக்கப்பட்டது. குமாரன் காலத்தில் ஒரு குறிப்பிட்ட ஆரம்பத்தைக் கொண்டிருந்தார். எனவே கடவுளுக்கு நிகரானவர் அல்ல, ஆனால் எல்லா விதத்திலும் கீழானவர் என அவர் கற்பித்தார். மறுபட்சத்தில் அதனேசியஸ் ஒரு குறிப்பிட்ட வகையில் குமாரன் கடவுளுக்கு நிகர் என நம்பினார். வேறு கருத்துகளும் இருந்தன.
குமாரனை, கடவுளைப் போன்ற அதே வஸ்துவால் (பொருண்மை மாறுபடாத) ஆனவர் எனக் கருதும் அக்குழுவின் தீர்மானம் குறித்து மார்டின் மார்டி சொல்கிறார்: “நைசியா உண்மையில் ஒரு சிறுபான்மையினரின் நோக்குநிலையை பிரதிநிதித்துவம் செய்தது; ஏரியஸ் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத பலருக்கு அந்த முடிவு கலக்கமூட்டுவதாயும் ஏற்கத்தகாததாயும் இருந்தது.”5 அவ்வாறே, எ செலக்ட் லைப்ரரி ஆப் நைசீன் அண்டு போஸ்ட்-நைசீன் ஃபாதர்ஸ் ஆப் தி கிறிஸ்டியன் சர்ச் என்ற புத்தகம், “ஏரியஸ் கொள்கைக்கு முரணான ஒரு தெளிவாக வரையறுக்கப்பட்ட கோட்பாட்டு நிலை ஒரு சிறுபான்மையினரால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அவர்களே தங்கள் நோக்கத்தை சாதிப்பதில் வெற்றிபெற்றனர்,” எனக் குறிப்பிடுகிறது.6 கிறிஸ்தவ கோட்பாட்டின் ஒரு சுருக்கச் சரித்திரம் குறிப்பிடுகிறது:
“கிழக்கின் பிஷப்புகள் மற்றும் இறையிலருக்கு முக்கியமாக ஆட்சேபிக்கத்தக்கதாய் தோன்றியது கான்ஸ்டன்டீனால் விசுவாசப்பிரமாணத்தில் புகுத்தப்பட்ட ho·mo·ouʹsi·os [‘ஒரே வஸ்துவாலான,’] என்ற கருத்தாகும். அதுவே, பின்தொடர்ந்த மரபுக்கோட்பாட்டிற்கும், முரண்கோட்பாட்டிற்கும் இடையிலான கருத்துவேறுபாட்டின் பொருளாயிருந்தது.”7
ஆலோசனைக் குழுவிற்குப் பின் பத்தாண்டுகளாக பூசல் தொடர்ந்தது. குமாரனை சர்வவல்லமையுள்ள கடவுளோடு சமநிலைப்படுத்தும் கருத்தின் சார்பாயிருந்தவர்கள் ஒரு காலத்துக்கு ஆதரவைக்கூட இழந்தனர். உதாரணமாக, அதனேசியஸ் பற்றி மார்டின் மார்டி கூறுகிறார்: “பொதுமக்களிடையே அவரது மதிப்பு எழுந்தது, வீழ்ந்தது. [ஆலோசனைக் குழுவிற்குப் பிற்பட்ட வருடங்களில்] அவர் அடிக்கடி நாடுகடத்தப்பட்டதன் காரணமாக, அவர் நடைமுறையில் வழக்கமாக பிரயாணம் செய்யும் ஒரு நபராக ஆனார்.”8 கடவுளுடன் குமாரனை சரிசமமாக்கும் அவரது நோக்குநிலைகளை அரசாங்க மற்றும் சர்ச் அதிகாரிகள் எதிர்த்ததால் அதனேசியஸ் பல வருடங்களை நாடுகடத்தப்பட்ட நிலையில் கழித்தார்.
எனவே, பொ.ச. 325-ல் நைசியா ஆலோசனைக் குழு திரித்துவக் கோட்பாட்டை நிலைநிறுத்தியது அல்லது உறுதிசெய்தது என உறுதியாய்க் கூறுவது உண்மையல்ல. பின்னர் திரித்துவப் போதனையாய் ஆனது, அச்சமயத்தில் இருக்கவில்லை. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகிய ஒவ்வொருவரும் உண்மைக் கடவுள்; மேலும் நித்தியத்துவம், வல்லமை, ஸ்தானம் மற்றும் ஞானத்தில் நிகரானவர்கள் எனினும் ஒரே கடவுள்—ஒருவரில் மூவரான கடவுள் என்பது அந்த ஆலோசனைக் குழுவாலோ ஆதி சர்ச் பிதாக்களாலோ உருவாக்கப்படவில்லை. முதல் மூன்று நூற்றாண்டுகளின் சர்ச் கூறுவது போல:
“திரித்துவத்தின் நவீன பிரபலமான கோட்பாடு . . . ஜஸ்டின் [மார்டரின்] வார்த்தைகளிலிருந்து எந்த ஆதரவையும் பெறுவதில்லை; இக்கூற்று நைசீனுக்கு முற்பட்டக் காலத்துப் பிதாக்கள் அனைவருக்கும் பொருத்தப்படலாம்; அதாவது, கிறிஸ்துவின் பிறப்புக்கு பின்னான மூன்று நூற்றாண்டுகளிலிருந்த கிறிஸ்தவ எழுத்தாளர்கள் அனைவருக்கும் பொருந்தும். அவர்கள் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியைப் பற்றிப் பேசுவது உண்மையே, ஆனால் சரிசமமானவர்களாக அல்ல, ஒரே எண் உள்ளியல்புடையோராயல்ல, ஒருவரில் மூவராய் அல்ல, இப்போது திரித்துவக்கோட்பாட்டாளர் ஏற்றுள்ள எந்தக் கருத்திலும் அல்ல. அதற்கு முற்றிலும் எதிர்மாறானதே உண்மையாயிருக்கிறது. இப்பிதாக்களால் விவரிக்கப்பட்ட திரித்துவக் கோட்பாடு நவீன கோட்பாட்டிலிருந்து நிச்சயமாகவே வேறுபட்டிருக்கிறது. மனித கருத்துகளின் சரித்திரத்தின் எந்த ஓர் உண்மையைப் போன்றே இதை நாங்கள் ஆதாரத்துக்கு இசைவாயிருப்பதாய் உறுதியாயிருக்கிறோம்.”
“முதல் மூன்று நூற்றாண்டுகளில் இந்தத் [திரித்துவக்] கோட்பாட்டை இப்போதிருக்கும் கருத்தில் கொண்ட எந்த ஓர் எழுத்தாளரையும் யாரேனும் காண்பிக்கும்படி நாங்கள் சவால்விடுகிறோம்.”9
இருப்பினும், நைசியா ஒரு திருப்புமுனையைக் குறித்தது. அது, பின்னர் திரித்துவக் கோட்பாட்டிற்கு வழிவகுத்த குமாரனைப் பிதாவுக்கு நிகரானவர் என்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதற்கு வழிவிட்டது. J. A. பக்ளி எழுதிய இரண்டாம் நூற்றாண்டு மரபுக்கோட்பாடு குறிப்பிடுகிறது:
“குறைந்தபட்சம் இரண்டாம் நூற்றாண்டின் இறுதிவரையேனும், உலகளாவிய சர்ச், ஓர் அடிப்படைக் கருத்தில் ஒன்றுபட்டிருந்தது; அவர்களனைவரும் பிதாவின் ஈடற்ற உன்னதத்தன்மையை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் அனைவரும் சர்வவல்லமையுள்ள பிதாவாகிய தேவனை மட்டுமே உன்னதர், மாறாதவர், வருணனைக்கு அப்பாற்பட்டவர், ஆரம்பமில்லாதவர் எனக் கருதினர். . . .
“இரண்டாம் நூற்றாண்டு எழுத்தாளர்கள் மற்றும் தலைவர்களின் காலத்துக்குப் பின், ஆரம்ப கால நம்பிக்கையின் இவ்வனைத்து தூள்-தூளாக அரிக்கப்படுதலின் இறுதி எட்டப்பட்டது . . . அந்த நிலைக்கு சர்ச் தன்னை மெதுவாக ஆனால் கண்டிப்பாக வழுவிச் செல்வதைக் கண்டது . . . அங்கே ஒரு சிறு கிளர்ச்சியடைந்த சிறுபான்மைத் தொகுதி, இணங்கிப் போகும் பெரும்பான்மைத் தொகுதியின் மேல் அதன் முரண் கோட்பாடுகளைப் பரப்பியது. அதன் பின்னணியில் அரசியல் அதிகாரிகளுடன், தங்கள் நம்பிக்கையின் பழைய சுத்தத்தை மாசற காத்துக்கொள்ள முயன்றவர்களை வற்புறுத்தி, ஏய்த்து மிரட்டினது.”10
கான்ஸ்டான்டிநோப்பில் ஆலோசனை சபை
பொ.ச. 381-ல் கான்ஸ்டான்டிநோப்பில் ஆலோசனைக் குழு நைசியா விசுவாசப்பிரமாணத்தை உறுதிசெய்தது. மேலும் அது வேறொன்றையும் கூட்டியது. அது பரிசுத்த ஆவியை “ஆண்டவர்” அல்லது “உயிரளிப்பவர்” என்றழைத்தது. விரிவாக்கப்பட்ட பொ.ச. 381-ன் விசுவாசப்பிரமாணம் (ஏறத்தாழ அதுவே இன்று சர்ச்சுகள் பயன்படுத்துவது, மேலும் அது “நைசீன் விசுவாசப்பிரமாணம்” என்று அழைக்கப்படுகிறது) ஒரு முழு வளர்ச்சியுற்ற திரித்துவ மதக்கோட்பாட்டை உருவாக்கும் எல்லையில் கிறிஸ்தவமண்டலம் இருந்ததெனக் காட்டுகிறது. எனினும், இந்த ஆலோசனைக் குழுகூட அந்தக் கோட்பாட்டை பூர்த்தி செய்யவில்லை. நியு கேத்தலிக் என்ஸைக்ளோபீடியா ஒப்புக்கொள்கிறது:
“நைசியா 1-க்கு 60 ஆண்டுகளுக்குப் பின் கான்ஸ்டான்டிநோப்பில் ஆலோசனைக் குழு [பொ.ச. 381] அதனுடைய பரிசுத்த ஆவியின் தெய்வத்தன்மையின் பொருள் விளக்கத்தில் ‘ஒரே பொருளாலானது,’ என்பதைத் தவிர்த்தது அக்கறையூட்டுவதாய் இருக்கிறது.”11
“இவ்விசுவாசப்பிரமாணத்தின் பாகத்தில் தெளிவாகப் புலப்படும் சொற்களின் மென்மை, உதாரணமாக, பரிசுத்த ஆவியின் ஒரேபொருள் எனும் பதத்தை பிதா மற்றும் குமாரனுடன் ஒரே பொருளாயிருக்கிறார் என பயன்படுத்த தவறியிருப்பது ஆகியவை கல்விமான்களுக்கு வியப்பாய் இருக்கிறது.”12
அதே என்ஸைக்ளோபீடியா ஒப்புக்கொள்கிறது: “ஒரே பொருளாலான என்பது வேதவாக்கியங்களில் தோன்றுவதில்லை.”13 இல்லை. பைபிள் அப்பதத்தை பிதாவுடன் ஒரே பொருளாயிருப்பதாக பரிசுத்த ஆவிக்கோ, குமாரனுக்கோ பயன்படுத்துவதில்லை. பைபிளில் இல்லாத, உண்மையில் பைபிளுக்கு விரோதமான திரித்துவக் கோட்பாட்டிற்கு வழிநடத்த உதவிய பைபிளில் இல்லாத பதமே இது.
கான்ஸ்டான்டிநோப்பிலுக்குப் பின்னரும் கிறிஸ்தவமண்டலம் முழுவதிலுமாக திரித்துவப் போதனை ஏற்றுக்கொள்ளப்பட, பல நூற்றாண்டுகள் ஆயின. நியு கேத்தலிக் என்ஸைக்ளோபீடியா கூறுகிறது: “மேற்கில் . . . கான்ஸ்டான்டிநோப்பில் 1 மற்றும் அதன் விசுவாசப்பிரமாணத்தைக் குறித்ததில் ஒரு பொதுவான நிசப்தம் நிலவியிருந்ததென தோன்றுகிறது.”14 இந்த ஆதாரம், மேற்கே ஏழாவது அல்லது எட்டாவது நூற்றாண்டு வரை அந்த ஆலோசனைக் குழுவின் விசுவாசப்பிரமாணம் பரவலாக அறியப்படவில்லை எனக் காட்டுகிறது.
திரித்துவத்துக்கு ஒரு தரமான பொருள்விளக்கம் மற்றும் ஆதரவாக அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் அதனேசியன் விசுவாசப்பிரமாணம் அதனேசியஸால் அல்ல, ஆனால் வெகு காலத்திற்குப் பின் அறியப்படாத ஓர் எழுத்தாளரால் எழுதப்பட்டதெனவும் கல்விமான்கள் ஒப்புக்கொள்கின்றனர். தி நியு என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா கூறுகிறது:
“இந்த விசுவாசப்பிரமாணம் 12-வது நூற்றாண்டு வரையில் கிழக்கத்திய சர்ச்சுக்கு அறியப்படாமலிருந்தது. 17-வது நூற்றாண்டு முதற்கொண்டு, கல்விமான்கள், அதனேசியன் விசுவாசப்பிரமாணம் (373-ல் மரித்த) அதனேசியஸால் எழுதப்படவில்லை. ஆனால் 5-வது நூற்றாண்டின்போது தென் ஃபிரான்ஸில் ஒருவேளை இயற்றப்பட்டிருக்கலாமென பொதுவாய் கல்விமான்கள் ஒப்புக்கொண்டிருக்கின்றனர். . . . இந்த விசுவாசப்பிரமாணத்தின் பாதிப்பு முதன்முதல் 6-ம் 7-ம் நூற்றாண்டுகளில் தென் ஃபிரான்ஸிலும் ஸ்பெய்னிலும் இருந்ததெனத் தெரிகிறது. 9-ம் நூற்றாண்டில் ஜெர்மனியிலும் சற்றுப்பின்னர் ரோமிலும் சர்ச்சின் பொது ஆராதனையில் பயன்படுத்தப்பட்டது.”15
அது எவ்வாறு தோன்றிற்று
திரித்துவக் கோட்பாடு அதன் மெதுவான வளர்ச்சியை நூற்றாண்டுகள் கொண்ட ஒரு காலப்பகுதியில் ஆரம்பித்தது. கிறிஸ்துவுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த பிளேட்டோ போன்ற கிரேக்க தத்துவஞானிகளின் திரித்துவக் கருத்துகள் மெல்ல சர்ச் போதனைகளுக்குள் நுழைந்தது. முதல் மூன்று நூற்றாண்டுகளின் சர்ச் கூறுவது போல:
“இந்தத் திரித்துவக் கோட்பாடு படிப்படியாயும் மற்றவற்றோடு ஒப்பிட பிந்தியும் உருவானதாகும் என்று நாங்கள் உறுதியாக சொல்லுகிறோம்; இது யூத மற்றும் கிறிஸ்தவ வேத எழுத்துக்களுக்கு முற்றிலும் புறம்பான ஒரு தோற்றுமூலத்தில் அதன் தொடக்கத்தைக் கொண்டிருந்தது; இது வளர்ச்சியடைந்து, பிளேட்டோனிய மதத் தத்துவப் பிதாக்களின் மூலம் கிறிஸ்தவத்துக்குள் பொருந்தவைக்கப்பட்டது. ஜஸ்டின் காலத்திலும் அதற்கு வெகு காலத்திற்குப் பின்னரும் குமாரனின் தனிப்பட்டதன்மையும் தாழ்வான நிலையும் உலகம் முழுவதும் கற்பிக்கப்பட்டது; திரித்துவத்தின் நிழலான முதல் உரு மட்டுமே அப்போது புலப்பட்டது என நாங்கள் உறுதியாயிருக்கிறோம்.”16
பிளேட்டோவுக்கு முன்பே, பாபிலோனிலும், எகிப்திலும், மும்மூர்த்திகள் அல்லது திரித்துவக் கடவுட்கள் பொதுவாய் இருந்தன. மேலும் ரோம உலகிலிருந்த அவிசுவாசிகளைக் கவர சர்ச் ஆட்களின் முயற்சிகள், கிறிஸ்தவத்திற்குள் அந்தக் கருத்துகள் சில படிப்படியாய்ப் புகுத்தப்படுவதற்கு வழிகோலியது. இறுதியாக இது குமாரனும் பரிசுத்த ஆவியும் பிதாவுக்குச் சமமானவர்கள் என்ற நம்பிக்கை ஏற்றுக்கொள்ளப்பட வழிநடத்தியது.a
“திரித்துவம்” என்ற சொல்லும்கூட மெதுவாகத்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சிரியாவிலுள்ள அந்தியோகியாவின் பிஷப், தியோபிலஸ் (மும்மூர்த்தி) அல்லது (திரித்துவம்) எனப்பொருள்படும் tri·asʹ என்ற பதத்தை கிரேக்கில் எழுதி அறிமுகப்படுத்தினது, 2-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலாகும். வட ஆப்பிரிக்காவில் கார்த்தேஜில் லத்தீன் எழுத்தாளர் டெட்ரூலியன் அவன் எழுத்துக்களில் “திரித்துவம்” எனப் பொருள்படும் trinitas எனும் பதத்தை அறிமுகப்படுத்தினான்.b ஆனால் tri·asʹ எனும் பதம் ஏவப்பட்ட கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களில் காணப்படவில்லை. Vulgate என அழைக்கப்படும் பைபிளின் லத்தீன் மொழிபெயர்ப்பிலும் trinitas எனும் பதம் காணப்படுவதில்லை. இரு சொற்களும் பைபிள் சார்ந்தவையல்ல. ஆனால் “திரித்துவம்” எனும் பொய்மதக் கோட்பாடுகளின் மேல் சார்ந்த பதம், சர்ச்சுகளின் இலக்கியங்களினுள் நுழைந்து, 4-வது நூற்றாண்டுக்குப்பின் அவர்களின் மதக்கோட்பாட்டின் பாகமானது.
இவ்விதமாக, இப்படிப்பட்ட ஒரு கோட்பாடு பைபிளில் கற்பிக்கப்பட்டிருக்கிறதா என பார்க்க கல்விமான்கள் பைபிளை முழுவதுமாக ஆராய்ந்து பார்த்தார்கள் என்பதில்லை. மாறாக, உலக மற்றும் சர்ச் கட்சிப்பிரிவினைகள் இந்தக் கோட்பாட்டை பெரிதும் தீர்மானித்தது. கிறிஸ்தவ பாரம்பரியம் என்ற நூலில் அதன் எழுத்தாளர் ஜார்ஸ்லாவ் பெலிக்கன் “விவாதத்திலிருந்த இறையியல் அல்லாத காரணகூறுகளுக்கு கவனத்தை ஈர்க்கிறார். அவைகளில் பல தம் விளைவைத் தீர்மானிக்க மீண்டும் மீண்டும் தயாராயிருப்பது போல் தோன்றினாலும் அவைகளைப் போன்ற வேறு சக்திகளால் மாற்றப்பட்டன. சர்ச் ஆட்சிமுறைகள் மற்றும் தனிமனிதரின் பூசல்களின் பலி அல்லது விளைபொருளாக கோட்பாடு அடிக்கடி தோன்றியது.”17 யேல் பேராசிரியர் E. வாஷ்பர்ன் ஹாப்கின்ஸ் இப்படிக் கூறுகிறார்: “திரித்துவத்தின் முடிவாய் ஏற்கப்பட்ட பொருள்விளக்கம் பெரும்பாலும் சர்ச்சுக்குள்ளே இருந்த கட்சிப் பிரிவினைகளால் தீர்மானிக்கப்பட்ட ஒரு காரியமாயிருந்தது.”18
கடவுள் எல்லாவற்றிற்கும் மேலானவர் மற்றும் நிகரற்றவர் என்ற எளிய பைபிள் போதகத்துடன் ஒப்பிட திரித்துவக் கோட்பாடு எவ்வளவு நியாயமற்றதாயிருக்கிறது! கடவுள் கூறுவது போல, “யாருக்கு என்னைச் சாயலும் சமமுமாக்கி, யாருக்கு நான் ஒப்பாகும்படிக்கு என்னை ஒப்பிடுவீர்கள்?”—ஏசாயா 46:5.
அது எதைக் குறித்தது
திரித்துவ கொள்கையின் படிப்படியான வளர்ச்சி எதைக் குறித்தது? அது இயேசு முன்னறிவித்திருந்த வண்ணமாக மெய்க் கிறிஸ்தவத்திலிருந்து வீழ்ந்துபோதலின் ஒரு பாகமாக இருந்தது. (மத்தேயு 13:24-43) வரவிருந்த விசுவாசத்துரோகத்தைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுலும்கூட முன்னுரைத்திருந்தார்:
“அவர்கள் ஆரோக்கியகரமான உபதேசத்தைச் சகிக்காமல் செவித்தினவுள்ளவர்களாகி மிக நவீன புதியகூறுகளுக்கு பேராவல் உள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் திரட்டிக் கூட்டிக்கொண்டவர்களாய்ச் சத்தியத்துக்குச் செவியை விலக்கிக் கட்டுக்கதைகளுக்கு சாய்ந்துபோகுங்காலம் வரும்.”—2 தீமோத்தேயு 4:3, 4, கத்தோலிக்க ஜெருசலேம் பைபிள்.
அந்தக் கட்டுக்கதைகளில் ஒன்று திரித்துவ போதனை. படிப்படியாக வளர்ந்த, கிறிஸ்தவத்துக்கு அந்நியமான வேறு சில கட்டுக்கதைகள் வருமாறு: மனித ஆத்துமாவின் இயல்பான சாவாமை, உத்தரிக்கும் ஸ்தலம், புறநரகம், மற்றும் நரகஅக்கினியில் நித்திய வாதனை.
ஆகவே திரித்துவக்கோட்பாடு என்பது என்ன? அது உண்மையில் கிறிஸ்தவக் கோட்பாடாக பொய்வேடமணிந்துள்ள ஒரு புறமத கோட்பாடு. மக்களை ஏமாற்றுவதற்காக, கடவுளை அவர்களுக்குக் குழப்பமாகவும் புரியாத புதிராகவும் ஆக்குவதற்காக அது சாத்தானால் ஊக்குவிக்கப்பட்டது. இது மற்ற பொய் மத கருத்துக்களையும் தவறான பழக்கங்களையும் ஏற்றுக்கொள்ள அவர்கள் அதிக மனமுள்ளவர்களாக இருப்பதில் விளைவடைகிறது.
“அவர்களுடைய கனிகளினாலே”
மத்தேயு 7:15-19-ல், பொய் மதத்தை மெய்மதத்திலிருந்து நீங்கள் இவ்வாறு வேறுபடுத்திக் காணலாம் என்பதாக இயேசு சொன்னார்:
“கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள். முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். . . . நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும்.”
ஓர் உதாரணத்தைச் சிந்தித்துப்பாருங்கள். இயேசு யோவான் 13:35-ல் சொன்னார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” மேலும், 1 யோவான் 4:20 மற்றும் 21-ல் கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தை அறிவிப்பதாவது:
“தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்பு கூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்.”
மெய்க் கிறிஸ்தவர்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருக்க வேண்டும் என்ற அடிப்படை நியமத்தை, இந்த நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களிலும் மற்ற சண்டைகளிலும் என்ன நடந்தது என்பதோடு பொருத்திப்பாருங்கள். கிறிஸ்தவமண்டலத்தில் ஒரே மதத்தைச் சேர்ந்த ஆட்கள் தேசீய வேறுபாடுகளின் காரணமாக போர்க்களத்தில் சந்தித்துகொண்டு ஒருவரையொருவர் கொன்றுபோட்டனர். ஒவ்வொரு பக்கமும் தன்னை கிறிஸ்தவமாக உரிமைப்பாராட்டி, கடவுள் தங்கள் பக்கமாக இருப்பதாக உரிமைப்பாராட்டிய அதன் குருவர்க்கத்தின் ஆதரவைப் பெற்றிருந்தது. “கிறிஸ்தவனைக்” “கிறிஸ்தவன்” கொலைசெய்தது கெட்ட கனியாக இருந்தது. இது கிறிஸ்தவ அன்பை மீறுவதாக, கடவுளுடைய கற்பனைகளை மறுதலிப்பதாக இருக்கிறது.—1 யோவான் 3:10-12-ஐயும்கூட பார்க்கவும்.
கணக்கொப்புவிக்கும் நாள்
இப்படியாக கிறிஸ்தவத்திலிருந்து வீழ்ந்து போனது, திரித்துவக் கோட்பாடு போன்ற தெய்வபக்தியற்ற நம்பிக்கைகளுக்கு மட்டுமல்லாமல் தெய்வபக்தியற்ற பழக்கவழக்கங்களுக்கும்கூட வழிநடத்தியது. என்றபோதிலும் கணக்கொப்புவிக்க வேண்டிய ஒருநாள் வரவிருக்கிறது, ஏனென்றால் இயேசு சொன்னார்: “நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும்.” இதன் காரணமாகவே கடவுளுடைய வார்த்தை துரிதப்படுத்துகிறது:
“என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு [பொய் மதம்] வெளியே வாருங்கள். அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களைத் தேவன் நினைவுகூர்ந்தார்.”—வெளிப்படுத்துதல் 18:4, 5.
விரைவில் கடவுள், பொய் மதத்துக்கு எதிராக திரும்பும்படி அரசியல் அதிகாரங்களின் ‘இருதயங்களை ஏவு’வார். அப்பொழுது அவர்கள், “அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்.” (வெளிப்படுத்துதல் 17:16, 17) கடவுளைப் பற்றிய புறமத தத்துவங்களோடுகூட பொய் மதம் என்றுமாக அழிக்கப்படும். உண்மையில், இயேசு அவருடைய நாளில் சொன்னது போலவே, கடவுள் பொய் மதத்தைக் கடைப்பிடிக்கிறவர்களிடமாக இவ்வாறு சொல்வார்: “உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்.”—மத்தேயு 23:38.
கடைசியாக “ஒன்றான மெய்த்தேவன்” என்பதாக இயேசு குறிப்பிட்ட அவருக்கே எல்லா கனமும் மகிமையும் கொடுக்கப்படும் பொருட்டு மெய் மதம் கடவுளுடைய நியாயத்தீர்ப்பைத் தப்பிப்பிழைக்கும். அவரே பின்வருமாறு அறிவித்த சங்கீதக்காரனால் அடையாளங்காட்டப்படுகிறார். “யெகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர்.”—யோவான் 17:3; சங்கீதம் 83:17.
a கூடுதலான தகவலுக்கு, உவாட்ச்டவர் சங்கம் பிரசுரித்திருக்கும் நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா? புரோஷுரை பார்க்கவும்.
b இத்தொடரின் முந்தையக் கட்டுரைகளில் காண்பிக்கப்பட்டுள்ளபடி, தியோபிலஸும் டெட்ரூலியனும் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்திய போதிலும், இன்று கிறிஸ்தவமண்டலம் நம்பும் திரித்துவத்தை அவர்கள் மனதில் கொண்டிருக்கவில்லை.
[பக்கம் 22-ன் படம்]
அரசியல் அதிகாரங்கள் பொய் மதத்துக்கு எதிராகத் திரும்பும்படி கடவுள் செய்வார்
[பக்கம் 24-ன் படம்]
மெய் மதம் கடவுளுடைய நியாயத்தீர்ப்பைத் தப்பிப்பிழைக்கும்