வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
பொ.ச. 33 முதல் பொ.ச. 36 வரை முழுக்காட்டப்பட்ட யூதர்களுக்கு தனிப்பட்ட ஒப்புக்கொடுத்தல் தேவைப்படவில்லை என முன்பு எண்ணிக்கொண்டிருந்தோம்; அப்படியிருக்க, பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளன்று புதிய யூத விசுவாசிகள் “கிறிஸ்துவின் மூலமாய் கடவுளுக்குத் தங்கள் தனிப்பட்ட ஒப்புக்கொடுத்தலை” தண்ணீர் முழுக்காட்டுதலில் அடையாளப்படுத்தினார்கள் என ஏப்ரல் 1, 2002 தேதியிட்ட காவற்கோபுரம், பக்கம் 11, பாரா 7-ல் குறிப்பிட்டது ஏன்?
இஸ்ரவேலர் யெகோவாவின் ‘வாக்கை உள்ளபடி கேட்டு, அவரது உடன்படிக்கையைக் கைக்கொண்டால்’ அவரது பரிசுத்த ஜனமாகும் வாய்ப்பை பெறுவார்கள் என பொ.ச.மு. 1513-ல் கூறினார். அதற்கு அவர்கள், ‘யெகோவா சொன்னவைகளையெல்லாம் செய்வோம்’ என பதிலளித்தார்கள்.—யாத்திராகமம் 19:3-8; 24:1-8.
இப்படி மோசேயின் நியாயப்பிரமாண உடன்படிக்கையின் சட்டதிட்டங்களைக் கைக்கொள்ள சம்மதிப்பதன் மூலம் இஸ்ரவேலர்கள் தங்களைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தார்கள். ஒப்புக்கொடுக்கப்பட்ட இந்தத் தேசத்தில் வழி வழியாக யூதர்கள் பிறந்தார்கள். எனினும், பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாள் முதல் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றத் தொடங்கிய யூதர்கள் முழுக்காட்டுதல் பெற்றார்கள்; இது, ஒப்புக்கொடுக்கப்பட்ட தேசத்தின் பிரஜைகளாக தங்களை கடவுளுக்கு அர்ப்பணிப்பதை மட்டுமே குறிக்கவில்லை. இயேசு கிறிஸ்துவின் மூலம் யெகோவா தேவனுடன் புதிய உறவுக்குள் வருவதற்கு அவர்கள் தங்களை ஒப்புக்கொடுத்ததை இது அடையாளப்படுத்தியது. எப்படி?
பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளன்று எருசலேமில் ஒரு மேல் மாடியில் கூடியிருந்த சுமார் 120 சீஷர்களின் மீது பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டது; அப்போது நடந்ததை அறிய திரண்டு வந்திருந்த எண்ணற்ற யூதர்களிடமும் யூத மதத்திற்கு மாறியவர்களிடமும் அப்போஸ்தலன் பேதுரு எழுந்து நின்று பிரசங்கிக்கத் தொடங்கினார். எல்லாவற்றையும் அவர் தெள்ளத் தெளிவாக விளக்கியதைக் கேட்ட யூதர்களின் மனம் உறுத்தத் தொடங்கியது; “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்” என அவர்களிடம் பேதுரு சொன்னார். அதோடு அவர் கொடுத்த அறிவுரைக்கு கீழ்ப்படியும் விதமாக, ‘அவருடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத் தினம் ஏறக்குறைய மூவாயிரம் பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.’—அப்போஸ்தலர் 2:1-41.
பேதுருவின் அறிவுரையைக் கேட்டு முழுக்காட்டுதல் பெற்ற அந்த யூதர்கள் ஏற்கெனவே ஒப்புக்கொடுக்கப்பட்ட தேசத்தின் பிரஜைகளாக இருந்தார்களா? அவர்கள் ஏற்கெனவே கடவுளுடன் ஓர் ஒப்புக்கொடுக்கப்பட்ட உறவுக்குள் இருந்தார்களா? இல்லை. கடவுள் ‘நியாயப்பிரமாணத்தை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்தார்’ என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (கொலோசெயர் 2:14) பொ.ச. 33-ல் கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் அந்த நியாயப்பிரமாண உடன்படிக்கையை, அதாவது, இஸ்ரவேலர்கள் அவருடன் ஒப்புக்கொடுக்கப்பட்ட உறவுக்குள் வருவதற்கு ஆதாரமாக இருந்ததையே கடவுள் ரத்துசெய்தார். கடவுளுடைய குமாரனை புறக்கணித்த தேசத்தை இப்போது கடவுளே புறக்கணித்துவிட்டார். ‘மாம்சத்தின்படியான இஸ்ரவேலர்’ கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட தேசத்தார் என இனிமேல் தங்களைக் குறித்து உரிமை பாராட்ட முடியவில்லை.—1 கொரிந்தியர் 10:18; மத்தேயு 21:43.
நியாயப்பிரமாண உடன்படிக்கை பொ.ச.33-ல் முடிவுக்கு வந்தது; ஆனாலும் யூதர்கள் கடவுளின் விசேஷித்த தயவையும் கவனத்தையும் பெறுவதற்கான காலம் அப்போது முடிவடையவில்லை.a அந்தக் காலப்பகுதி பொ.ச. 36 வரை நீடித்தது, அதாவது தேவபயமிக்க இத்தாலியனாகிய கொர்நேலியுவுக்கும், அவரது வீட்டாருக்கும், மற்ற புறதேசத்தாருக்கும் பேதுரு பிரசங்கித்த சமயம் வரை நீடித்தது. (அப்போஸ்தலர் 10:1-48) அது நாள் வரை தயவைப் பெற்றதற்கான காரணம் என்ன?
ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை [மேசியா] உறுதிப்படுத்த வேண்டும்’ என தானியேல் 9:27 குறிப்பிடுகிறது. இயேசு முழுக்காட்டுதல் பெற்று மேசியாவாக ஊழியம் செய்ய ஆரம்பித்த பொ.ச. 29-ம் வருடம் முதல் ‘ஒரு வாரத்திற்கு’ அல்லது ஏழு வருடங்களுக்கு அமலில் இருந்த உடன்படிக்கை ஆபிரகாமிய உடன்படிக்கையாகும். ஒரு நபர் அந்த உடன்படிக்கையின் உறவுக்குள் இருப்பதற்கு ஆபிரகாமின் வம்சத்தில் வந்த எபிரெயனாக இருக்க வேண்டும். ஒருபக்கமாக செய்யப்பட்ட அந்த உடன்படிக்கை (unilateral covenant) யெகோவாவுடன் ஒப்புக்கொடுக்கப்பட்ட உறவில் அவர் இருந்ததற்கு எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை. ஆகவே யூதர்களாக பிறந்து கடவுளுடைய விசேஷ தயவை பெற்றவர்களாக இருந்தாலும், நியாயப்பிரமாண உடன்படிக்கை முடிவுக்கு வந்த பிறகு அவருடன் ஒப்புக்கொடுக்கப்பட்ட உறவுக்குள் இருப்பதாக சொல்ல முடியாது; எனவேதான், பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளில் பேதுருவின் சொற்பொழிவைக் கேட்ட பின்பு யூத விசுவாசிகள் முழுக்காட்டுதல் பெற்றார்கள். அவர்கள் தனிப்பட்ட விதமாக தங்களை கடவுளுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டியிருந்தது.
பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளில் முழுக்காட்டுதல் பெற்ற யூதர்களும் யூத மதத்திற்கு மாறியவர்களும் தனிப்பட்ட ஒப்புக்கொடுத்தலை செய்ய வேண்டியதற்கு மற்றொரு காரணமும் இருந்தது. மனந்திரும்பி, இயேசுவின் பெயரில் முழுக்காட்டுதல் பெறும்படி தன் சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்தோருக்கு அப்போஸ்தலன் பேதுரு அறிவுரை கூறினார். அவ்வாறு செய்கையில், அவர்கள் உலகப்பிரகாரமான போக்கை விட்டுவிட்டு, இயேசுவை கர்த்தர், மேசியா, பிரதான ஆசாரியர், பரலோகத்தில் கடவுளுடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பவர் என்றெல்லாம் ஏற்றுக்கொள்வது அவசியமாக இருந்தது. இரட்சிப்பை பெறுவதற்கு கிறிஸ்து இயேசுவின் மூலம் அவர்கள் யெகோவா தேவனுடைய பெயரில் கூப்பிட வேண்டியிருந்தது; அதற்கு அவர்கள் கிறிஸ்துவை விசுவாசிக்கவும் தங்களுடைய தலைவராக அவரை ஏற்றுக்கொள்ளவும் வேண்டியிருந்தது. கடவுளுடன் உறவை அனுபவிப்பதற்கும், பாவங்களுக்கு மன்னிப்பைப் பெறுவதற்கும் இப்போது முற்றிலும் புதிய ஒன்றை அவர்கள் செய்ய வேண்டியிருந்தது. யூத விசுவாசிகள் தனிப்பட்ட விதத்தில் இந்தப் புதிய ஏற்பாட்டை ஏற்றுக்கொள்வது அவசியமானது. எப்படி? கடவுளுக்கு ஒப்புக்கொடுப்பதன் மூலமும், அந்த ஒப்புக்கொடுத்தலை இயேசு கிறிஸ்துவின் பெயரில் தண்ணீர் முழுக்காட்டுதல் வாயிலாக யாவரறிய தெரிவிப்பதன் மூலமும் ஆகும். தண்ணீர் முழுக்காட்டுதல் அவர்கள் தங்களைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்திருப்பதற்கு அடையாளமாக இருந்தது; அது அவர்களை இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுளுடன் புதிய உறவுக்குள் வர செய்தது.—அப்போஸ்தலர் 2:21, 33-36; 3:19-23.
[அடிக்குறிப்பு]
a பலியாக செலுத்திய தம் மானிட ஜீவனின் மதிப்பை பரலோகத்துக்குச் சென்று யெகோவா தேவனிடம் இயேசு கிறிஸ்து சமர்ப்பித்த போது மோசேயின் நியாயப்பிரமாண உடன்படிக்கை முடிவுக்கு வந்தது. அப்போது, முன்னறிவிக்கப்பட்ட “புது உடன்படிக்கை”க்கான அஸ்திவாரம் போடப்பட்டது.—எரேமியா 31:31-34.