கடவுள் தெரிந்தெடுத்த ஜனத்தில் பிறந்தவர்கள்
“உன் தேவனாகிய கர்த்தர் [“யெகோவா,” NW] உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்.”—உபாகமம் 7:6.
1, 2. யெகோவா தம் மக்களுக்காக வல்லமைமிக்க என்ன காரியங்களைச் செய்தார், கடவுளுடன் இஸ்ரவேலர் என்ன உறவுக்குள் வந்தார்கள்?
யெகோவா, பூமியிலுள்ள தம் ஊழியர்களை பொ.ச.மு. 1513-ல் ஒரு புதிய பந்தத்திற்குள் கொண்டுவந்தார். அந்த வருடத்திலே அவர், ஓர் உலக வல்லரசுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தி, இஸ்ரவேலரை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார். அப்படிச் செய்ததன் மூலம் அவர் இஸ்ரவேலரின் இரட்சகரும் எஜமானருமாக ஆனார். அவர்களை விடுவிப்பதற்கு முன்பே மோசேயிடம் கடவுள் இவ்வாறு கூறியிருந்தார்: ‘இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நானே கர்த்தர்; உங்கள்மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி நான் உங்களை விடுவித்து, உங்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு நீங்கலாக்கி, ஓங்கிய கையினாலும், மகா தண்டனைகளினாலும் உங்களை மீட்டு, உங்களை எனக்கு ஜனங்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாயிருப்பேன் என்று சொல்.’—யாத்திராகமம் 6:6, 7; 15:1-7, 11.
2 எகிப்தைவிட்டு புறப்பட்ட கொஞ்ச காலத்திலேயே இஸ்ரவேலர் தங்களுடைய தேவனாகிய யெகோவாவுடன் ஓர் உடன்படிக்கை உறவுக்குள் வந்தார்கள். அதுமுதற்கொண்டு, பூமியிலே தனித்தனி நபர்களுடனோ, குடும்பங்களுடனோ, தொகுதிகளுடனோ தொடர்புகொள்வதற்குப் பதிலாக, ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட ஜனத்துடன் யெகோவா தொடர்புகொள்ள ஆரம்பித்தார். (யாத்திராகமம் 19:5, 6; 24:7) அவர்களுக்கு அன்றாட வாழ்க்கை சம்பந்தமான சட்டங்களையும், மிக முக்கியமாக வழிபாடு சம்பந்தமான சட்டங்களையும் கொடுத்தார். அவர்களிடம் மோசே இவ்வாறு கூறினார்: “நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல், தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி [அதாவது, ஜனம்] எது? இந்நாளில் நான் உங்களுக்கு விதிக்கிற இந்த நியாயப்பிரமாணம் முழுமைக்கும் ஒத்த இவ்வளவு நீதியுள்ள கட்டளைகளையும் நியாயங்களையும் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதியும் [அதாவது ஜனம்] எது?”—உபாகமம் 4:7, 8.
சாட்சிகளாலான ஓர் ஜனத்தில் பிறந்தவர்கள்
3, 4. இஸ்ரவேலர் ஒரு ஜனமாக இருந்ததற்குக் முக்கியக் காரணம் என்ன?
3 இஸ்ரவேலர் ஒரு ஜனமாக இருந்ததற்கான முக்கிய காரணத்தை பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு தம் தீர்க்கதரிசி ஏசாயா மூலம் யெகோவா நினைப்பூட்டினார். அதை ஏசாயா இவ்வாறு சொன்னார்: “யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன். நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும், உன் இரட்சகருமாயிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர். . . . தூரத்திலிருந்து என் குமாரரையும், பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் குமாரத்திகளையும், நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் நாமந்தரிக்கப்பட்ட யாவரையும் கொண்டுவா என்பேன். . . . நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; . . . இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்.”—ஏசாயா 43:1, 3, 6, 7, 10, 21.
4 யெகோவாவின் பெயரில் அழைக்கப்பட்ட இஸ்ரவேல் மக்கள், மற்ற ஜனத்தாருக்கு முன்பாக அவருடைய உன்னத ஆட்சிக்கு சாட்சிகளாக இருந்தார்கள். அவர்கள், ‘யெகோவாவின் மகிமைக்கென்று சிருஷ்டிக்கப்பட்ட’ மக்களாக இருக்க வேண்டியிருந்தது. ஆகவே, அவர்கள் ‘யெகோவாவின் துதியை, [அதாவது புகழை] சொல்ல’ வேண்டியிருந்தது; அவரது மீட்பின் அற்புத செயல்களை அறிவிப்பதன் மூலம் அவருடைய மகத்தான பெயரை மகிமைப்படுத்த வேண்டியிருந்தது. சுருங்கச் சொன்னால், யெகோவாவுக்குச் சாட்சிகளான ஒரு ஜனமாக இருக்க வேண்டியிருந்தது.
5. இஸ்ரவேலர் எந்த விதத்தில் ஒப்புக்கொடுத்த ஜனமாக இருந்தார்கள்?
5 இஸ்ரவேலரை ஒரு ஜனமாக யெகோவா பிரித்தெடுத்திருந்ததைப் பற்றி பொ.ச.மு. 11-ம் நூற்றாண்டில் சாலொமோன் ராஜா குறிப்பிட்டார். யெகோவாவிடம் செய்த ஜெபத்தில் அதை அவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “தேவரீர் பூமியின் சகல ஜனங்களிலும் அவர்களை உமக்குச் சுதந்தரமாகப் பிரித்தெடுத்தீரே.” (1 இராஜாக்கள் 8:53) ஒவ்வொரு இஸ்ரவேலரும் யெகோவாவுடன் ஒரு விசேஷித்த உறவைக் கொண்டிருந்தனர். ஆரம்பத்தில், அவர்களிடம் மோசே இவ்வாறு சொல்லியிருந்தார்: “நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்; . . . நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான ஜனங்கள்.” (உபாகமம் 14:1, 2) ஆகவே, இஸ்ரவேல் ஜனத்திலிருந்த சிறுவர், சிறுமியர் யெகோவாவுக்குத் தங்களை ஒப்புக்கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவர்கள் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட ஜனத்தின் அங்கத்தினர்களாக பிறந்திருந்தார்கள். (சங்கீதம் 79:13; 95:7) பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் யெகோவாவின் சட்டங்கள் கற்பிக்கப்பட்டன; அவர்கள் அச்சட்டங்களைக் கடைப்பிடிப்பது அவசியமாயிருந்தது. ஏனென்றால், இஸ்ரவேலர் எல்லாருமே அந்த உடன்படிக்கையின் மூலம் யெகோவாவுக்கு கட்டுப்பட்டவர்களாய் இருந்தனர்.—உபாகமம் 11:18, 19.
தீர்மானம்செய்ய சுதந்தரம்
6. இஸ்ரவேலர் ஒவ்வொருவரும் தனிப்பட்ட விதமாக என்ன தீர்மானத்தை எடுக்க வேண்டியிருந்தது?
6 இஸ்ரவேலர் ஒப்புக்கொடுத்த ஜனத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும், கடவுளைச் சேவிப்பதற்கு ஒவ்வொருவரும் தனிப்பட்ட விதமாக தீர்மானம் எடுக்க வேண்டியிருந்தது. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைவதற்கு முன்பாக அவர்களிடம் மோசே இவ்வாறு சொன்னார்: “நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள் மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சி வைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு, கர்த்தர் உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர்.” (உபாகமம் 30:19, 20) ஆகவே, யெகோவாவில் அன்புகூர்ந்து, அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து அவரைப் பற்றிக்கொள்வதற்கு இஸ்ரவேலர் ஒவ்வொருவருமே தனிப்பட்ட விதமாக தீர்மானம்செய்ய வேண்டியிருந்தது. இஸ்ரவேலருக்குத் தெரிவு செய்வதற்கான சுதந்தரம் இருந்ததால், அவர்கள் செய்த தீர்மானத்தின் பலாபலன்களை அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.—உபாகமம் 30:16-18.
7. யோசுவாவின் காலத்தைச் சேர்ந்தவர்கள் இறந்த பிறகு என்ன நடந்தது?
7 உண்மையுள்ளவர்களாக நடந்தபோது பெற்ற ஆசீர்வாதங்களையும், உண்மையற்றவர்களாக நடந்தபோது பெற்ற சாபங்களையும் நியாயாதிபதிகளின் காலம் தெளிவாகக் காட்டுகிறது. நியாயாதிபதிகளின் காலம் துவங்குவதற்குச் சற்று முன்பு, இஸ்ரவேலர் யோசுவாவின் முன்மாதிரியைப் பின்பற்றியதால் ஆசீர்வதிக்கப்பட்டனர். “யோசுவாவின் சகல நாட்களிலும் கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் செய்த அவருடைய பெரிய கிரியைகளையெல்லாம் கண்டவர்களும், யோசுவாவுக்குப் பின்பு உயிரோடிருந்தவர்களுமாகிய மூப்பரின் சகல நாட்களிலும் ஜனங்கள் கர்த்தரைச் சேவித்தார்கள்.” என்றாலும், யோசுவாவின் மரணத்திற்குப்பின், ‘கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின் எழும்பிற்று. அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்.’ (யோசுவா 2:7, 10, 11) அந்த ஒப்புக்கொடுத்த ஜனத்திற்காக யெகோவா வல்லமையான செயல்களை கடந்த காலத்தில் செய்திருந்தார். அப்படிப்பட்ட ஜனத்தின் பாகமாக இருக்கும் பாக்கியத்தை அனுபவமற்ற இளம் தலைமுறையினர் மதிக்கவில்லை.—சங்கீதம் 78:3-7, 10, 11.
ஒப்புக்கொடுத்ததற்கு இசைய வாழ்தல்
8, 9. (அ) இஸ்ரவேலர் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருப்பதை வெளிப்படையாகக் காட்டுவதற்கு என்ன ஏற்பாடு இருந்தது? (ஆ) மனமுவந்து பலி செலுத்தியவர்கள் எதைச் சம்பாதித்தார்கள்?
8 ஒப்புக்கொடுத்த ஜனம் என்ற தகுதிக்கேற்ப வாழ்வதற்கு யெகோவா தம் மக்களுக்கு பல வாய்ப்புகளை அளித்தார். உதாரணமாக, காணிக்கைகளையும் பலிகளையும் அளிப்பதற்கான ஏற்பாடு நியாயப்பிரமாணத்தில் இருந்தது; அவற்றில் சில கட்டாயமாக செய்ய வேண்டியவை, மற்றவை மனமுவந்து செய்யப்படுபவை. (எபிரெயர் 8:3) தகனபலிகள், போஜனபலிகள், சமாதானபலிகள் இவையாவும் மனமுவந்து செலுத்தப்படுபவை, அதாவது யெகோவாவின் பிரியத்தைச் சம்பாதிப்பதற்காகவும் அவருக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் அளிக்கப்படுபவை.—லேவியராகமம் 7:11-13.
9 மனமுவந்து செலுத்தப்பட்ட இந்தப் பலிகள் யெகோவாவின் மனதைக் குளிர்வித்தன. தகனபலியும் போஜனபலியும் ‘யெகோவாவுக்குச் சுகந்த வாசனையாக’ இருந்ததாக சொல்லப்பட்டது. (லேவியராகமம் 1:9; 2:2) சமாதானபலியில், மிருகத்தின் இரத்தமும் கொழுப்பும் யெகோவாவுக்கு பலியாகச் செலுத்தப்பட்டன, அதன் இறைச்சியையோ ஆசாரியர்களும் பலி செலுத்துபவரும் சாப்பிட்டார்கள். இப்படிச் செய்தது யெகோவாவுடன் சமாதான உறவுக்குள் வருவதை அடையாளப்படுத்தியது. நியாயப்பிரமாணம் இவ்வாறு குறிப்பிட்டது: “நீங்கள் சமாதானபலியைக் கர்த்தருக்குச் செலுத்தினால், அதை மனோற்சாகமாய்ச் [“நீங்கள் பிரியத்தைச் சம்பாதிக்கும்படி,” NW] செலுத்துங்கள்.” (லேவியராகமம் 19:5) இஸ்ரவேலர் எல்லாரும் பிறப்பிலேயே யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தவர்களாய் இருந்தது உண்மையே. இருந்தாலும், அந்த ஒப்புக்கொடுத்தலை அர்த்தமுள்ள ஒன்றாக ஆக்க விரும்பியவர்கள் மனமுவந்து பலிகளைச் செலுத்தினார்கள். இதனால் யெகோவாவின் ‘பிரியத்தைச் சம்பாதித்தார்கள்,’ அபரிமிதமான ஆசீர்வாதங்களையும் பெற்றார்கள்.—மல்கியா 3:10.
10. ஏசாயாவின் காலத்திலும் மல்கியாவின் காலத்திலும் யெகோவா எவ்வாறு தம் வெறுப்பைத் தெரிவித்தார்?
10 என்றாலும், ஒப்புக்கொடுத்த ஜனமான அந்த இஸ்ரவேலர் அடிக்கடி யெகோவாவுக்கு உண்மையற்றவர்களாய் நடந்துகொண்டார்கள். தமது தீர்க்கதரிசியான ஏசாயாவின் மூலம் அவர்களிடம் யெகோவா இவ்வாறு சொன்னார்: “உன் ஆடுகளை தகனபலிகளாக நீ எனக்குச் செலுத்தவில்லை; உன் பலிகளாலே நீ என்னைக் கனம்பண்ணவுமில்லை; காணிக்கைகளைச் செலுத்தும்படி நான் உன்னைச் சங்கடப்படுத்தாமலும், . . . இருந்தேன்.” (ஏசாயா 43:23) அதுமட்டுமல்ல, மனமில்லாமலும், அன்பில்லாமலும் செலுத்தப்பட்ட பலிகள் யெகோவாவின் பார்வையில் மதிப்பற்றவையாய் இருந்தன. உதாரணமாக, ஏசாயாவின் காலத்திற்கு சுமார் 300 வருடங்களுக்குப் பின், தீர்க்கதரிசியான மல்கியாவின் நாட்களில் இஸ்ரவேலர் குறைபாடுள்ள மிருகங்களை பலி செலுத்தினார்கள். ஆனால், மல்கியா அவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “உங்கள் பேரில் எனக்குப் பிரியமில்லையென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் கைகளிலுள்ள காணிக்கை எனக்கு உகந்ததல்ல. பீறுண்டதையும் கால் ஊனமானதையும் நசல்கொண்டதையும் கொண்டுவந்து காணிக்கையாகச் செலுத்துகிறீர்கள் . . . அதை உங்கள் கைகளில் அங்கீகரித்துக்கொள்வேனோ என்று கர்த்தர் கேட்கிறார்.”—மல்கியா 1:10, 13; ஆமோஸ் 5:22.
ஒப்புக்கொடுத்த தேசம் நிராகரிக்கப்பட்டது
11. இஸ்ரவேலருக்கு என்ன வாய்ப்பு கொடுக்கப்பட்டது?
11 இஸ்ரவேலர், யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த ஜனமாக ஆன சமயத்தில், அவர்களுக்கு அவர் இவ்வாறு உறுதி அளித்திருந்தார்: “நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது. நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள்.” (யாத்திராகமம் 19:5, 6) வாக்குப்பண்ணப்பட்ட மேசியா, அவர்களுடைய மத்தியில் தோன்றவிருந்தார், கடவுளுடைய அரசாங்கத்தின் அங்கத்தினர்களாவதற்கான முதல் வாய்ப்பை அவர்களுக்கு கொடுக்கவிருந்தார். (ஆதியாகமம் 22:17, 18; 49:10; 2 சாமுவேல் 7:12, 16; லூக்கா 1:31-33; ரோமர் 9:4, 5) ஆனால், இஸ்ரவேலரில் பெரும்பாலோர் தங்களுடைய ஒப்புக்கொடுத்தலுக்கு இசைய வாழவில்லை. (மத்தேயு 22:14) அவர்கள் மேசியாவை நிராகரித்து, கடைசியில் அவரைக் கொன்றே போட்டனர்.—அப்போஸ்தலர் 7:51-53.
12. யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருந்த இஸ்ரவேல் ஜனம் நிராகரிக்கப்பட்டதை இயேசு எவ்வாறு தெளிவுபடுத்தினார்?
12 இயேசு தாம் இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன், யூத மதத்தலைவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா? ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.” (மத்தேயு 21:42, 43) தமக்கு ஒப்புக்கொடுத்திருந்த ஜனமான அவர்களை யெகோவா நிராகரித்துவிட்டார் என்பதை இயேசு பின்வருமாறு சொல்லி விளக்கினார்: “எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும்வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்.”—மத்தேயு 23:37, 38.
ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒரு புதிய ஜனம்
13. எரேமியாவின் காலத்தில் தீர்க்கதரிசனமாக யெகோவா என்ன சொன்னார்?
13 எரேமியா தீர்க்கதரிசியின் காலத்தில், தம்முடைய மக்கள் சம்பந்தமாக யெகோவா ஒரு புதிய விஷயத்தை முன்னறிவித்தார். அதை நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன். நான் அவர்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்து வரக் கைப்பிடித்த நாளிலே அவர்களோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார். அந்நாட்களுக்குப் பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”—எரேமியா 31:31-33
14. எப்பொழுது, எந்த அடிப்படையில் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த புதிய ஜனம் உருவானது? அப்புதிய ஜனத்தைப் பற்றி விவரியுங்கள்.
14 பொ.ச. 33-ல் இயேசு மரித்தபின், தாம் சிந்திய இரத்தத்தின் மதிப்பை தம் பிதாவிடம் செலுத்தியபோது, இப்புதிய உடன்படிக்கைக்கான அஸ்திவாரம் போடப்பட்டது. (லூக்கா 22:20; எபிரெயர் 9:15, 24-26) என்றாலும், பொ.ச. 33-ல் பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டு, ‘தேவனுடைய இஸ்ரவேலரான’ புதிய ஜனம் பிறந்தபோதுதான், இந்தப் புதிய உடன்படிக்கை அமலுக்கு வந்தது. (கலாத்தியர் 6:16; ரோமர் 2:28, 29; 9:6; 11:25, 26) அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு எழுதுகையில் அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு அறிவித்தார்: “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள். முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்.” (1 பேதுரு 2:9, 10) ஆம், யெகோவாவுக்கும் மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலருக்கும் இடையேயிருந்த விசேஷித்த உறவு முடிவுக்கு வந்திருந்தது. பொ.ச. 33-ல் யெகோவாவின் ஆசீர்வாதம் அந்த மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலரிடமிருந்து எடுக்கப்பட்டு ஆன்மீக இஸ்ரவேலருக்கு, அதாவது மேசியானிய அரசாங்கத்திற்குரிய ‘கனிகளைத் தருகிற ஜனமான’ கிறிஸ்தவ சபைக்குக் கொடுக்கப்பட்டது.—மத்தேயு 21:43.
தனிப்பட்ட விதமாக ஒப்புக்கொடுத்தல்
15. பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளில் செவிகொடுத்தோரிடம் என்ன முழுக்காட்டுதலைப் பெறும்படி பேதுரு ஊக்குவித்தார்?
15 பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளுக்குப்பின், யூதரானாலும் சரி, புறஜாதியாரானாலும் சரி ஒவ்வொருவருமே தங்களைத் தனிப்பட்ட விதமாக கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே” முழுக்காட்டுதல் பெற வேண்டியிருந்தது.a (மத்தேயு 28:19) பெந்தெகொஸ்தே நாளின்போது, செவிகொடுத்த யூதர்களிடமும் யூத மதத்திற்கு மாறியவர்களிடமும் அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு கூறினார்: “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.” (அப்போஸ்தலர் 2:38) யெகோவாவுக்கு தங்களை ஒப்புக்கொடுத்திருப்பதையும் தங்கள் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக அவர் வழிசெய்துள்ள இயேசுவை ஏற்றுக்கொண்டதையும் முழுக்காட்டுதல் மூலமாக அவர்கள் அடையாளப்படுத்த வேண்டியிருந்தது. யெகோவா ஏற்படுத்திய பிரதான ஆசாரியராகவும் தங்களுடைய தலைவராகவும் கிறிஸ்தவ சபைக்கு தலையாகவும் இயேசு இருக்கிறார் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.—கொலோசெயர் 1:13, 14, 18.
16. பவுலின் நாளில், நல்மனமுள்ளவர்களான யூதரும் புறஜாதியாரும் எவ்வாறு ஆன்மீக இஸ்ரவேலின் பாகமாக ஆனார்கள்?
16 பல வருடங்களுக்குப் பிறகு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு குறிப்பிட்டார்: “முன்பு தமஸ்குவிலும் எருசலேமிலும் யூதேயா தேசமெங்குமுள்ளவர்களிடத்திலும், பின்பு புறஜாதியாரிடத்திலும் நான் போய், அவர்கள் தேவனிடத்திற்கு மனந்திரும்பிக் குணப்படவும், மனந்திரும்புதலுக்கேற்ற கிரியைகளைச் செய்யவும் வேண்டுமென்று அறிவித்தேன்.” (அப்போஸ்தலர் 26:20) இயேசுதான் மேசியாவாகிய கிறிஸ்து என்பதை யூதருக்கும் புறஜாதியாருக்கும் பவுல் புரியவைத்தார். அதன்பிறகு, அவர்கள் ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற அவர்களுக்கு உதவினார். (அப்போஸ்தலர் 16:14, 15, 31-33; 17:3, 4; 18:8) அப்புதிய சீஷர்கள் கடவுளிடம் திரும்பியதன் மூலமாக ஆன்மீக இஸ்ரவேலின் அங்கத்தினர்களாக ஆனார்கள்.
17. முத்திரையிடும் என்ன வேலை முடியும் தறுவாயில் இருக்கிறது, வேறு என்ன வேலை மும்முரமாக நடைபெற்று வருகிறது?
17 இன்று, ஆன்மீக இஸ்ரவேலரில் மீதிபேரை கடைசியாக முத்திரையிடுவது முடியும் தறுவாயில் இருக்கிறது. அது முடிவடைந்ததும், ‘மிகுந்த உபத்திரவம்’ எனும் அழிவின் காற்றுகளைப் பிடித்துக்கொண்டிருக்கும் ‘நான்கு தூதர்களுக்கு’ அவற்றை அவிழ்த்துவிடும்படி கட்டளையிடப்படும். இதற்கிடையே, பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையுடைய ‘திரள் கூட்டத்தாரை’ கூட்டிச்சேர்க்கும் வேலை மும்முரமாக நடைபெற்று வருகிறது. ‘வேறே ஆடுகளான’ இவர்கள், ‘ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தில்’ விசுவாசம் வைப்பதற்கு தாங்களாகவே தெரிவு செய்கிறார்கள்; அதோடு, யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருப்பதன் அடையாளமாக முழுக்காட்டுதலும் பெறுகிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:1-4, 9-15; 22:17; யோவான் 10:16; மத்தேயு 28:19, 20) கிறிஸ்தவ பெற்றோரால் வளர்க்கப்பட்ட அநேக இளைஞரும் அவர்களில் அடங்குவர். நீங்கள் அப்படிப்பட்ட ஓர் இளைஞராக இருந்தால், அடுத்துவரும் கட்டுரையை வாசிப்பதற்கு ஆர்வம் காட்டுவீர்கள்.
[அடிக்குறிப்பு]
மறுபார்வைக்காக
• இஸ்ரவேலரான சிறுவர் சிறுமியர் ஏன் தங்களை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை?
• ஒப்புக்கொடுத்ததற்கு இசைய வாழ்வதை இஸ்ரவேலர் எப்படி காட்டியிருக்கலாம்?
• தமக்கு ஒப்புக்கொடுத்திருந்த ஜனத்தை யெகோவா ஏன் நிராகரித்தார், அவர்களுக்குப் பதிலாக யார் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்?
• பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாள்முதல், யூதரும் புறஜாதியாரும் ஆன்மீக இஸ்ரவேலரின் பாகமாவதற்கு என்ன செய்ய வேண்டியிருந்தது?
[பக்கம் 21-ன் படம்]
இஸ்ரவேலருடைய பிள்ளைகள் பிறப்பிலேயே கடவுள் தேர்ந்தெடுத்த ஜனத்தின் அங்கத்தினர்களாக இருந்தார்கள்
[பக்கம் 23-ன் படம்]
கடவுளைச் சேவிக்க இஸ்ரவேலர் ஒவ்வொருவருமே தனிப்பட்ட விதமாக தீர்மானம்செய்ய வேண்டியிருந்தது
[பக்கம் 23-ன் படம்]
மனமுவந்து செலுத்தப்பட்ட பலிகள் யெகோவா மீதுள்ள அன்பை வெளிப்படுத்த இஸ்ரவேலருக்கு வாய்ப்பளித்தன
[பக்கம் 25-ன் படம்]
பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளுக்குப்பின், கிறிஸ்துவைப் பின்பற்றியவர்கள் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற வேண்டியிருந்தது