இறந்தோரைப் பற்றி கடவுளின் நோக்குநிலை
அன்பான ஒருவரின் மரணம் உண்மையில் கவலை தரும் ஒன்று. வெறுமையான உணர்ச்சி, தனிமையுணர்வு, இழப்பினால் வரும் வேதனை இவை எல்லாம் தாங்கிக்கொள்ள முடியாதவை. அன்பானவரின் இழப்பு ஒருவரை ஆதரவற்றவராக உணரச் செய்கிறது. ஏனெனில் பணம், அதிகாரம், செல்வாக்கு என என்னதான் இருந்தாலும், இந்த உலகில் யாராலும் மரித்தவரை திரும்ப உயிருக்குக் கொண்டுவர முடியாது.
ஆனால், நம் படைப்பாளரோ காரியங்களை வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கிறார். பூமியின் மண்ணிலிருந்து முதல் மனிதனை உருவாக்கிய அவருக்கு மரித்தவரையும் மீண்டும் உருவாக்க முடியும். அதன் காரணமாகவே, மரித்தோரை கடவுள் உயிருள்ளோராக கருதுகிறார். மரித்துப்போன பூர்வகால உண்மை ஊழியர்கள் “எல்லாரும் அவருக்குப் [கடவுளுக்குப்] பிழைத்திருக்கிறார்களே” என்று இயேசு சொன்னார். வேறு வார்த்தைகளில் சொன்னால், கடவுளின் கண்ணோட்டத்தில் அவர்கள் உயிருள்ளவர்கள் என்றார்.—லூக்கா 20:38.
இயேசு பூமியில் இருக்கையில் மரித்தோரை உயிர்த்தெழுப்புவதற்கான அதிகாரத்தைப் பெற்றிருந்தார். (யோவான் 5:21) எனவே, கடைசி வரை உண்மையோடிருந்து மரித்த ஆட்களைக் குறித்ததில் அவரும் தம் பிதாவின் நோக்குநிலையையே கொண்டிருக்கிறார். உதாரணமாக, தம் சிநேகிதன் லாசரு மரித்தபோது, அவன் “நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப் போகிறேன்” என சீஷர்களிடம் இயேசு சொன்னார். (யோவான் 11:11) மனிதரின் கண்ணோட்டத்தில் லாசரு மரித்துவிட்டான், ஆனால் யெகோவாவின் கண்ணோட்டத்திலும் இயேசுவின் கண்ணோட்டத்திலும் லாசரு தூங்கிக் கொண்டிருந்தான்.
இயேசுவின் ராஜ்ய ஆட்சியில், ‘நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பார்கள்.’ (அப்போஸ்தலர் 24:15) அதற்குப் பின்பு, உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள் தெய்வீக கல்வியைப் பெற்று, பூமியில் என்றென்றும் வாழும் எதிர்பார்ப்பை பெறுவார்கள்.—யோவான் 5:28, 29.
ஆம், அன்பானவரின் மரணத்தால் வரும் வேதனையும் வருத்தமும் பல ஆண்டுகளுக்கு நீடித்திருக்கலாம். இருந்தாலும், மரித்தோரை கடவுளுடைய நோக்குநிலையில் பார்ப்பது மிகுந்த ஆறுதலை தந்து நம் மனதை நம்பிக்கையினால் நிரப்புகிறது.—2 கொரிந்தியர் 1:3, 4.