குற்றச்செயல்களே இல்லா ஓர் உலகம் விரைவில்!
உங்களால் முடிந்தால், குற்றவாளிகளே இல்லா ஓர் உலகை கற்பனை செய்து பாருங்கள். போலீஸ் துறை, சிறைச்சாலைகள், செலவுபிடித்த, சிக்கலான குற்றவியல் நீதித் துறைகள் ஆகிய எதற்குமே அங்கு அவசியமிராது. ஒவ்வொருவரும் உயிருக்கும் பிறருடைய உடைமைக்கும் மதிப்பு கொடுப்பர். இது நம்ப முடியாத கனவுபோல தோன்றுகிறதா? நீங்கள் ஒருவேளை அப்படி நினைக்கலாம், ஆனால் அற்புதகரமான இந்த மாற்றத்தைப் பற்றித்தான் பைபிள் வாக்குறுதி அளிக்கிறது. இந்தப் பூமியில் இழைக்கப்படும் குற்றச் செயல்களையும் தீமைகளையும் பற்றி வேதவசனங்கள் என்ன முன்னறிவிக்கின்றன என்பதை நீங்கள் ஏன் சிந்தித்துப் பார்க்கக் கூடாது?
சங்கீத புத்தகத்தில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே. அவர்கள் புல்லைப் போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும் பூண்டைப் போல் வாடிப் போவார்கள். சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:1, 2, 11) இந்த வாக்குறுதியையும் இதயத்திற்கு இதமளிக்கும் பிற வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதிலிருந்து யாரும் கடவுளை தடுத்து நிறுத்த முடியாது.
இத்தகைய ஆசீர்வாதங்களைப் பொழிய கடவுள் ஏற்பாடு செய்திருக்கும் வழியே அவருடைய ராஜ்யம். இந்த ராஜ்யம் வருவதற்கும், கடவுளுடைய சித்தம் “பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும்” செய்யப்படுவதற்கும் ஜெபிக்கும்படி பரமண்டல ஜெபத்தில் இயேசு கிறிஸ்து தம்மை பின்பற்றுவோருக்குக் கற்றுக் கொடுத்தார். (மத்தேயு 6:9, 10) விரைவில், கடவுள் ஸ்தாபிக்கும் அந்த ராஜ்யத்தில் வாழும் எவருமே வறுமை, ஒடுக்குதல், அல்லது சுயநலம் காரணமாக குற்றச்செயல் புரிய தூண்டப்பட மாட்டார்கள். அதற்கு மாறாக, கடவுளுடைய வார்த்தை இவ்வாறு கூறுகிறது: ‘பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்; அதின் விளைவு மிகுதியாக இருக்கும்.’ (சங்கீதம் 72:16) நிச்சயமாகவே, பூமியில் வாழும் அனைவருக்கும் நற்காரியங்களை முடிவில்லாமல் யெகோவா தேவன் கொடுப்பார். மிக முக்கியமாக, மனித சமுதாயம் கடவுள் மீதும் மனிதர் மீதும் கொண்டுள்ள அன்பினால் வேரூன்றிய சமுதாயமாக தழைத்தோங்கும்; பின்பு ஒருகாலும் இவ்வுலகம் குற்றச்செயல்களால் தொல்லைபடுத்தப்படாது.