விசுவாசத்தால் பலமிக்க படையை பாராக் வென்றார்
போர்க்களத்தில் அணிவகுத்து நிற்கும் எதிரிகளை நீங்கள் நேருக்கு நேர் சந்திப்பதாக கற்பனை செய்து பாருங்கள். அவர்கள் நவீன ஆயுதங்களுடன் சண்டைக்குத் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் முன்னால் நீங்களும் உங்களுடைய தோழர்களும் நிராயுதபாணியாக நிற்கிறீர்கள்.
இஸ்ரவேலில் நியாயாதிபதிகள் வாழ்ந்த காலப்பகுதியில், பாராக், தெபொராள், மற்றும் 10,000 இஸ்ரவேலருக்கு இது போன்ற அனுபவம் ஏற்பட்டது. இராணுவத் தளபதி சிசெராவின் தலைமையில் வந்த கானானியரே எதிரி படையினர். சக்கரங்களில் பயங்கர அரிவாள்கள் பொருத்தப்பட்ட இரதங்கள் அவர்களுடைய படைக்கருவிகளில் ஒன்று. இச்சம்பவம் நடைபெற்ற இடம் தாபோர் மலை மற்றும் கீசோன் நதிப் பள்ளத்தாக்கு. அங்கே நடந்த சம்பவம், பாராக்கை விசுவாசத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அடையாளம் காட்டுகிறது. இப்பொழுது, இந்தப் போருக்கு வழிநடத்திய சம்பவங்களை சிந்தித்துப் பாருங்கள்.
யெகோவாவிடம் இஸ்ரவேலின் கூக்குரல்
இஸ்ரவேலர் அடிக்கடி தூய வணக்கத்தைத் துறந்ததையும் அதனால் ஏற்பட்ட பயங்கர விளைவுகளையும் நியாயாதிபதிகள் புத்தகம் படம்பிடித்துக் காட்டுகிறது. அவர்கள் ஒவ்வொரு முறையும் இரக்கத்திற்காக கடவுளிடம் உள்ளப்பூர்வமாய் மன்றாடுவார்கள், கடவுளும் ஓர் இரட்சகரை நியமிப்பார், அவர்கள் விடுதலையும் பெறுவார்கள்—ஆனால் மீண்டும் தங்களுடைய கலகத்தனத்தை ஆரம்பித்துவிடுவார்கள். இதே போல, “ஏகூத் [மோவாபியரின் ஒடுக்குதலிலிருந்து அவர்களைக் காத்த ஒரு நியாயாதிபதி] மரணமடைந்த பின்பு இஸ்ரவேல் புத்திரர் திரும்பக் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து வந்தார்கள்.” சொல்லப்போனால், அவர்கள் “நூதன தேவர்களைத் தெரிந்துகொண்டார்கள்.” விளைவு? “கர்த்தர் அவர்களை ஆத்சோரில் ஆளுகிற யாபீன் என்னும் கானானியருடைய ராஜாவின் கையிலே விற்றுப் போட்டார்; அவனுடைய சேனாபதிக்குச் சிசெரா என்று பேர்; . . . அவனுக்குத் தொளாயிரம் இருப்பு ரதங்கள் இருந்தது; அவன் இஸ்ரவேல் புத்திரரை இருபது வருஷம் கொடுமையாய் ஒடுக்கினான்; இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்.”—நியாயாதிபதிகள் 4:1-3; 5:8.
இஸ்ரவேலில் நிலவிய வாழ்க்கைச் சூழலைக் குறித்து வேதவசனங்கள் இவ்வாறு சொல்கின்றன: “[அந்நாட்களில்] நெடுஞ்சாலைகள் வெறுமையாகிக் கிடந்தன. பயணிகள் சுற்றுப் பாதைகளில் சென்றனர். . . . இஸ்ரயேலின் சிற்றூர்கள் வாழ்விழந்து கிடந்தன.” (நியாயாதிபதிகள் [நீதித் தலைவர்கள்] 5:6, 7, பொது மொழிபெயர்ப்பு) ரதங்களில் வந்து சூறையாடிய கொள்ளையரைக் கண்டு மக்கள் அஞ்சி நடுங்கினர். “இஸ்ரவேல் ஜனங்களுடைய வாழ்க்கையை பயம் ஆட்டிப்படைத்தது; முழு சமுதாயமும் செயலிழந்து நிராதரவாக நின்றது போல் தோன்றியது” என ஓர் அறிஞர் கூறுகிறார். ஆகவே, மனமொடிந்திருந்த இஸ்ரவேலர் எப்போதும் போல யெகோவாவிடம் உதவி கேட்டு கூக்குரலிட்டார்கள்.
ஒரு தலைவரை யெகோவா நியமிக்கிறார்
கானானியருடைய ஒடுக்குதல் இஸ்ரவேல் தேசத்துக்கு நெருக்கடிமிக்க ஒரு காலமாக ஆனது. கடவுள் தமது நியாயத்தீர்ப்புகளையும் கட்டளைகளையும் அறிவிப்பதற்கு தீர்க்கதரிசினியாகிய தெபொராளை பயன்படுத்தினார். இஸ்ரவேலில் ஓர் அடையாளப்பூர்வ தாயாக செயல்படும்படி யெகோவா அவளுக்கு பாக்கியம் அளித்தார்.—நியாயாதிபதிகள் 4:4; 5:7.
தெபொராள் பாராக்கை வரவழைத்து அவரிடம் இவ்வாறு கூறினாள்: “நீ நப்தலி புத்திரரிலும், செபுலோன் புத்திரரிலும் பதினாயிரம் பேரைக் கூட்டிக்கொண்டு, தாபோர் மலைக்குப் போகக்கடவாய் என்றும், நான் யாபீனின் சேனாபதியாகிய சிசெராவையும், அவன் ரதங்களையும், அவன் சேனையையும், கீசோன் பள்ளத்தாக்கிலே உன்னிடத்திற்கு வர இழுத்து, அவனை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிடவில்லையா”? (நியாயாதிபதிகள் 4:6, 7) “கர்த்தர் உனக்குக் கட்டளையிடவில்லையா”? என சொல்வதன் மூலம், பாராக் மீது எந்தவிதமான அதிகாரமும் செலுத்தவில்லை என்பதை தெபொராள் அழுத்தம்திருத்தமாக தெரிவித்தாள். தெய்வீக கட்டளையை தெரிவிப்பதற்கு வெறுமனே ஒரு கருவியாகவே செயல்பட்டாள். அதற்கு பாராக் என்ன சொன்னார்?
“நீ என்னோடேகூட வந்தால் போவேன்; என்னோடேகூட வராவிட்டால், நான் போகமாட்டேன்” என பாராக் கூறினார். (நியாயாதிபதிகள் 4:8) கடவுளால் கொடுக்கப்பட்ட உத்தரவாதத்தை ஏற்றுக்கொள்ள பாராக் ஏன் தயங்கினார்? அவர் கோழையாக நடந்துகொண்டாரா? கடவுளுடைய வாக்குறுதிகள் மீது நம்பிக்கையற்றவராக இருந்தாரா? இல்லை. பாராக் தனக்கு கொடுக்கப்பட்ட நியமிப்பை நிராகரிக்கவுமில்லை, யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போகவுமில்லை. மாறாக, கடவுளுடைய கட்டளையை தன்னந்தனியாக நிறைவேற்றுவதற்கு தகுதியற்றவராக உணர்ந்ததையே அவருடைய பதில் சுட்டிக்காட்டியது. கடவுளுடைய பிரதிநிதி அருகில் இருப்பது தெய்வீக வழிநடத்துதல் இருப்பதை உறுதிப்படுத்தும், அதேசமயத்தில் அவருக்கும் அவருடைய ஆட்களுக்கும் நம்பிக்கையூட்டும். ஆகவே, பாராக்கின் நிபந்தனை பலவீனத்திற்கு அறிகுறியாக இல்லாமல், பலமான விசுவாசத்திற்கு அத்தாட்சியாகவே இருந்தது.
பாராக்கின் பிரதிபலிப்பை மோசே, கிதியோன், எரேமியா ஆகியோருடைய பிரதிபலிப்புடன் ஒப்பிடலாம். கடவுளால் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவதில் இவர்களும் தங்களுடைய திறமையில் நம்பிக்கையற்றவர்களாக இருந்தார்கள். இதற்காக அவர்கள் விசுவாசத்தில் குறைவுபட்டவர்களாக கருதப்படவில்லை. (யாத்திராகமம் 3:11–4:17; 33:12-17; நியாயாதிபதிகள் 6:11-22, 36-40; எரேமியா 1:4-10) தெபொராளின் மனப்பான்மையைக் குறித்து என்ன சொல்லலாம்? பொறுப்பை தானே எடுத்துக்கொள்ள அவள் முயற்சி செய்யவில்லை. மாறாக, யெகோவாவின் மனத்தாழ்மையுள்ள ஊழியக்காரியாக இருந்தாள். “நான் உன்னோடேகூட நிச்சயமாய் வருவேன்” என்று பாராக்கிடம் கூறினாள். (நியாயாதிபதிகள் 4:9) நடக்கப்போகும் போரில் பாராக்குடன் சேர்ந்துகொள்வதற்காக தனது வீட்டைவிட்டுச் செல்ல—அதிக பாதுகாப்புமிக்க ஓர் இடத்தைவிட்டுச் செல்ல—அவள் மனமுள்ளவளாக இருந்தாள். தெபொராளும் விசுவாசத்தையும் தைரியத்தையும் காண்பித்தாள்.
விசுவாசத்தால் பாராக்கை பின்பற்றினார்கள்
இஸ்ரவேல் படைகள் சந்திக்கும் இடம் கம்பீரமாய் நிற்கும் தாபோர் மலை. மிகச் சிறந்த இடமே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. அருகில் குடியிருந்த நப்தலி, செபுலோன் கோத்திரங்களுக்கு இது ஓர் இயற்கையான சந்திப்பு மையமாக விளங்கியது. ஆகவே, கடவுள் கட்டளையிட்டிருந்தபடி, பாராக்கைப் பின்தொடர்ந்து பத்தாயிரம் பேரும் தெபொராளும் இந்த மலைக்குச் சென்றார்கள்.
பாராக்குடன் சேர்ந்துகொண்ட அனைவர் பங்கிலும் விசுவாசம் தேவைப்பட்டது. கானானியர் மீது இஸ்ரவேலர் வெற்றி சிறப்பார்கள் என பாராக்கிற்கு யெகோவா வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் இஸ்ரவேலர் என்ன ஆயுதங்கள் வைத்திருந்தார்கள்? நியாயாதிபதிகள் 5:8 இவ்வாறு கூறுகிறது: ‘இஸ்ரவேலிலே நாற்பதினாயிரம் பேருக்குள்ளே கேடகமும் ஈட்டியும் காணப்படவில்லை.’ ஆகவே இஸ்ரவேலர் அதிக கருவிகளை வைத்திருக்கவில்லை. அப்படியே ஈட்டிகளையும் கேடகங்களையும் வைத்திருந்தாலும், அரிவாள்கள் பொருத்தப்பட்ட ரதங்களுடன் ஒப்பிடும்போது அவை ஒன்றுமேயில்லை. தாபோர் மலைமீது பாராக் ஏறிவிட்டதைக் கேள்விப்பட்டு, சிசெரா உடனடியாக தனது ரதங்களையும் படை வீரர்களையும் கீசோன் நதிப் பள்ளத்தாக்கிற்கு அழைத்தான். (நியாயாதிபதிகள் 4:12, 13) ஆனால் தான் சர்வவல்ல தேவனுடன் சண்டை பண்ணப்போகிறான் என்பதை சிசெரா உணரத் தவறிவிட்டான்.
சிசெராவின் படைகளை பாராக் முறியடிக்கிறார்
சண்டையை எதிர்ப்படும் சந்தர்ப்பம் வந்தபோது, பாராக்கிடம் தெபொராள் இவ்வாறு கூறினாள்: “எழுந்துபோ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக் கொடுக்கும் நாள் இதுவே; கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா”? பாராக்கும் அவனுடைய ஆட்களும் தாபோர் மலையிலிருந்து இறங்கி பள்ளத்தாக்கு சமவெளிகளுக்கு வர வேண்டியிருந்தது, ஆனால் இது சிசெராவின் ரதங்களுக்கு அனுகூலமான இடமாக இருந்திருக்குமே. பாராக் படையில் இருந்திருந்தால் நீங்கள் எப்படி உணர்ந்திருப்பீர்கள்? வழிநடத்துதல் யெகோவாவிடமிருந்து வருகிறதென நினைத்து நீங்கள் உடனடியாக கீழ்ப்படிந்திருப்பீர்களா? பாராக்கும் அவருடைய பத்தாயிரம் மனிதரும் கீழ்ப்படிந்தார்கள். “கர்த்தர் சிசெராவையும் அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார்.”—நியாயாதிபதிகள் 4:14, 15.
யெகோவாவின் ஆதரவினால், சிசெராவின் படையை பாராக் முறியடித்தார். போர் சம்பந்தமாக நடந்த எல்லாவற்றையும் பைபிள் விளக்குவதில்லை. ஆனால், “வானம் சொரிந்தது, மேகங்களும் தண்ணீராய்ப் பொழிந்தது” என பாராக் மற்றும் தெபொராவின் வெற்றிப் பாடல் கூறுகிறது. மழையுடன்கூடிய புயல் வீசியதால் சிசெராவின் ரதங்கள் சேற்றில் மாட்டியிருக்கலாம், இவ்வாறு பாராக்கின் கை ஓங்கியிருக்கலாம். கானானியருடைய முக்கியமான ஆயுதமே அவர்களுக்கு பாதகமாகிவிட்டது. சிசெராவின் ஆட்களுடைய பிணத்தைக் குறித்து அந்தப் பாடல் இவ்வாறு சொல்கிறது: ‘கீசோன் நதி அவர்களை அடித்துக்கொண்டு போயிற்று.’—நியாயாதிபதிகள் 5:4, 21.
இது நம்பத்தக்கதா? கீசோன் நதிப் பள்ளத்தாக்கு வறண்ட நதிப் பள்ளத்தாக்கு, பொதுவாக இந்த நதிப் படுகையில் அதிக தண்ணீர் ஓடாது. புயலோ பெருமழையோ வந்தால், இந்த ஓடைகளில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து, அவை ஆபத்தான நீரோடைகளாக மாறிவிடும். முதல் உலகப் போரில், இதே பகுதியில் களிமண் நிலத்தில் பெய்த வெறும் 15 நிமிட மழையினால் தரைப்படைகளின் வெற்றியே பாதித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. ஏப்ரல் 16, 1799-ல் நெப்போலியனுக்கும் துருக்கியருக்கும் இடையே தாபோர் மலையில் நடந்த யுத்தத்தைப் பற்றிய பதிவு இவ்வாறு கூறுகிறது: “கீசோனின் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட ஒரு சமவெளிப் பகுதியை கடந்து தப்பிக்க முயன்றபோது துருக்கியர்கள் பலர் மூழ்கிவிட்டார்கள்.”
சிசெராவின் படைகளும் பாராக்கின் படைகளும் மோதவிருந்த சமயத்தில் “வானத்திலிருந்து பெரும் புயல் அடித்ததுடன், மழையும் கல்மழையும் கொட்டோ கொட்டென்று கொட்டியது, கானானியர்களை நோக்கி காற்று வீசியதால் மழை அவர்கள் பக்கமாகவே அடித்தது, அவர்களுடைய கண்கள் மிகவும் இருளடைந்தன, அதனால் அவர்களுடைய அம்புகளாலும் கவண்களாலும் எந்தப் பிரயோஜனமும் இல்லாமல் போயிற்று” என யூத சரித்திராசிரியர் பிளேவியஸ் ஜொஸிபஸ் கூறுகிறார்.
“வானத்திலிருந்து யுத்தம் உண்டாயிற்று, நட்சத்திரங்கள் தங்கள் அயனங்களிலிருந்து சிசெராவோடே யுத்தம் பண்ணின” என நியாயாதிபதிகள் 5:20 குறிப்பிடுகிறது. எவ்வாறு நட்சத்திரங்கள் சிசெராவுக்கு எதிராக போர் புரிந்தன? இந்தக் கூற்று தெய்வீக உதவி கிடைத்ததை குறிப்பிடுவதாக சிலர் கருதுகின்றனர். வேறு சிலரோ தேவதூதர்களுடைய உதவி கிடைத்ததாக, விண்கற்கள் விழுந்ததாக, அல்லது சிசெரா சோதிட முன்கணிப்புகளை நம்பியிருந்தது பொய்யாகிப் போனதாக கருதுகின்றனர். இந்தப் போரில் நட்சத்திரங்கள் எப்படி போரிட்டன என்பதைப் பற்றி பைபிள் எந்த விளக்கமும் கொடுக்காததால், இஸ்ரவேலருடைய படையின் சார்பாக ஏதோ ஒரு வகை தெய்வீக தலையீடு இருந்ததென நாம் புரிந்துகொள்ளலாம். எதுவாக இருந்தாலும்சரி, இஸ்ரவேலர் அந்தச் சூழ்நிலைமையை நன்றாக பயன்படுத்திக் கொண்டனர். “பாராக் ரதங்களை . . . துரத்தினான்; சிசெராவின் சேனையெல்லாம் பட்டயக்கருக்கினால் விழுந்தது; ஒருவனும் மீதியாயிருக்கவில்லை.” (நியாயாதிபதிகள் 4:16) படைத்தளபதி சிசெராவுக்கு என்ன ஏற்பட்டது?
ஒடுக்கினவன் “ஒரு ஸ்திரீயின் கையில் ஒப்புக்கொடு”க்கப்படுகிறான்
“சிசெரா [போரிடுவதை விட்டுவிட்டு] கால்நடையாய்க் கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்கு ஓடி வந்தான்; அப்பொழுது யாபீன் என்னும் ஆத்சோரின் ராஜாவுக்கும், கேனியனான ஏபேரின் வீட்டுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.” களைப்புற்றிருந்த சிசெராவை யாகேல் தனது கூடாரத்திற்குள் வரும்படி அழைத்து, அவனுக்கு குடிப்பதற்கு பால் கொடுத்து அவனை போர்வையால் மூடினாள், அதனால் அவன் கண் அயர்ந்து தூங்கிவிட்டான். பின்பு யாகேல், கூடாரவாசிகள் வழக்கமாக பயன்படுத்துகிற “ஒரு கூடார ஆணியை எடுத்து, தன் கையிலே சுத்தியைப் பிடித்துக் கொண்டு, மெல்ல அவனண்டையில் வந்து, அவன் நெற்றியிலே அந்த ஆணியை அடித்துப் போட்டாள்; அது உருவிப்போய், தரையிலே புதைந்தது; அப்பொழுது ஆயாசமாய்த் தூங்கின அவன் செத்துப்போனான்.”—நியாயாதிபதிகள் 4:17-21.
பின்பு யாகேல் வெளியே வந்து பாராக்கை சந்தித்து, “வாரும், நீர் தேடுகிற மனுஷனை உமக்குக் காண்பிப்பேன்” என்று அவரிடம் சொன்னாள். அந்தப் பதிவு மேலும் இவ்வாறு சொல்கிறது: “அவன் அவளிடத்திற்கு வந்தபோது, இதோ, சிசெரா செத்துக் கிடந்தான்; ஆணி அவன் நெற்றியில் அடித்திருந்தது.” பாராக்கிற்கு அது எந்தளவு விசுவாசத்தைப் பலப்படுத்துவதாய் இருந்திருக்கும்! ஏனென்றால், “நீ போகிற பிரயாணத்தில் உண்டாகிற மேன்மை உனக்குக் கிடையாது; கர்த்தர் சிசெராவை ஒரு ஸ்திரீயின் கையில் ஒப்புக்கொடுப்பார்” என தீர்க்கதரிசினியாகிய தெபொராள் முன்பு அவரிடம் கூறியிருந்தாள்.—நியாயாதிபதிகள் 4:9, 22.
யாகேலின் செயல் வஞ்சகமான செயல் என சொல்ல முடியுமா? யெகோவா அவ்வாறு கருதவில்லை. “கூடாரத்தில் வாசமாயிருக்கிற ஸ்திரீகளுக்குள்ளே அவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே” என பாராக் மற்றும் தெபொராளைப் பற்றிய வெற்றிப் பாடல் சொன்னது. சிசெராவின் மரணத்தைப் பற்றிய சரியான நோக்குநிலையை பெற அந்தப் பாடல் உதவுகிறது. தனது மகன் போர்க் களத்திலிருந்து திரும்பி வருவதை எதிர்நோக்கி அவனுடைய தாய் கவலையுடன் காத்திருப்பதாக வர்ணிக்கப்படுகிறாள். “அவனுடைய ரதம் வராமல் பிந்திப் போனதென்ன?” என அவள் கேட்கிறாள். “அவளுடைய நாயகிகளில் புத்திசாலிகள்” அவளுடைய பயத்தை தணிப்பதற்கு முயலுகிறார்கள்; ஆகவே, போரில் கிடைத்த கொள்ளைப் பொருட்களை—அழகிய சித்திரத் தையலாடைகளையும் ஆண்களுக்காக அழகிய பெண்களையும்—அவன் பங்கிட்டுக் கொண்டிருக்க வேண்டும் என சொல்கிறார்கள். “அவர்கள் கொள்ளையைக் கண்டுபிடிக்கவில்லையோ, அதைப் பங்கிட வேண்டாமோ, ஆளுக்கு இரண்டொரு பெண்களையும், சிசெராவுக்குக் கொள்ளையிட்ட பலவருணமான ஆடைகளையும், கொள்ளையிட்ட பலவருணமான சித்திரத் தையலாடைகளையும், கொள்ளையிட்டவர்களின் கழுத்துக்கு இருபுறமும் பொருந்தும் சித்திரத் தையலுள்ள பலவருணமான ஆடையையும் கொடுக்க வேண்டாமோ” என கேட்கிறார்கள்.—நியாயாதிபதிகள் 5:24, 28-30.
நமக்குப் பாடம்
பாராக்கைப் பற்றிய விவரப்பதிவு நமக்கு முக்கியமான பாடங்களை கற்பிக்கிறது. யெகோவாவை தங்களுடைய வாழ்க்கையிலிருந்து ஒதுக்கிவிடுகிற எவரையும் பிரச்சினைகளும் ஏமாற்றங்களும் கண்டிப்பாக தொற்றிக்கொள்ளும். பாவத்திலிருந்து மனந்திரும்பி கடவுளிடம் விசுவாசம் வைக்கிறவர்கள் பல வகையான ஒடுக்குதல்களிலிருந்து விடுதலை பெற முடியும். நாமும்கூட கீழ்ப்படியும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டாமா? கடவுள் எதிர்பார்க்கும் காரியங்கள் மனிதனுடைய அறிவுக்கு ஒத்துவராதது போல தோன்றினாலும்கூட, அவர் தரும் அறிவுரைகள் எல்லாம் நம்முடைய நீடித்தகால நன்மைக்கே என்ற நம்பிக்கையுடன் இருக்கலாம். (ஏசாயா 48:17, 18) யெகோவா மீது விசுவாசம் வைத்து அவருடைய அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிந்ததன் மூலமே “அந்நியருடைய சேனைகளை [பாராக்] முறியடித்தார்.”—எபிரெயர் 11:32-34.
தெபொராள் மற்றும் பாராக்கின் பாடலில் இருதயத்தை தொடக்கூடிய இறுதி வரிகள் என்னவென்றால்: “கர்த்தாவே, உம்மைப் பகைக்கிற யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்; அவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப் போல இருக்கக்கடவர்கள்.” (நியாயாதிபதிகள் 5:31) சாத்தானுடைய பொல்லாத உலகத்திற்கு யெகோவா முடிவு கட்டும்போது இது எவ்வளவு உண்மையாக இருக்கும்!
[பக்கம் 29-ன் படம்]
பாராக்கை அழைப்பதற்கு தெபொராளை யெகோவா பயன்படுத்தினார்
[பக்கம் 31-ன் படம்]
கீசோன் ஆறு கரைபுரண்டோடுகிறது
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 31-ன் படம்]
தாபோர் மலை