மெக்சிகோவில் ஆங்கிலம் பேசுவோரிடம் சந்தர்ப்ப சாட்சி கொடுத்தல்
ஏதன்ஸ் நகரில் அப்போஸ்தலன் பவுல் தன்னுடன் பயணித்த தோழர்களுக்காக காத்துக்கொண்டிருந்தார்; அவ்வாறு காத்திருக்கும் நேரத்தை சந்தர்ப்ப சாட்சி கொடுக்க பயன்படுத்தினார். ‘சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடு தினந்தோறும் சம்பாஷணை பண்ணினார்’ என பைபிள் அறிவிக்கிறது. (அப்போஸ்தலர் 17:17) யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு பயணித்த வழியில், இயேசு சந்தர்ப்ப சாட்சி கொடுத்தார்; கிணற்றண்டையில் ஒரு சமாரியப் பெண்ணிடம் சாட்சி கொடுத்தார். (யோவான் 4:3-26) நீங்களும்கூட கிடைக்கிற ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைக் குறித்து சாட்சி கொடுக்கிறீர்களா?
மெக்சிகோவில் ஆங்கிலம் பேசுவோரிடம் சந்தர்ப்ப சாட்சி கொடுப்பது மிகவும் வசதியாக அமைந்துவிடுகிறது. சுற்றுலா பயணிகள் சுற்றுலா மையங்களுக்கு வருகிறார்கள், புதிய புதிய மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் படிக்க வந்துபோகிறார்கள், மெக்சிகோவில் வேலை செய்து ஓய்வுபெற்ற வெளிநாட்டவர் பார்க்குகளிலும் ரெஸ்ட்டாரன்ட்டுகளிலும் பொழுதை கழிக்க வருகிறார்கள். ஆங்கிலம் பேசத்தெரிந்த யெகோவாவின் சாட்சிகள் அப்படிப்பட்டவர்களிடம் சம்பாஷணையை ஆரம்பிப்பதில் கெட்டிக்காரர்களாக ஆகியிருக்கிறார்கள். சொல்லப்போனால், யாராவது பார்ப்பதற்கு வெளிநாட்டுக்காரரைப் போல தெரிந்தாலோ ஆங்கிலம் பேசுபவராக இருந்தாலோ சரியான சந்தர்ப்பத்தில் அவர்களிடம் போய் டக்கென்று பேச்சை ஆரம்பிக்க எப்போதும் தயாராக இருக்கிறார்கள். இதை அவர்கள் எப்படி செய்கிறார்களென்று நாம் பார்க்கலாம்.
வெளிநாட்டிலிருந்து சில யெகோவாவின் சாட்சிகள் மெக்சிகோவிற்கு வந்து, ஆங்கிலம் பேசுவோர் உள்ள பிராந்தியங்களில் சேவை செய்கிறார்கள்; வெளிநாட்டுக்காரர்கள் போல தெரிபவர்களிடம் இவர்கள் தங்களை அறிமுகம் செய்துகொள்வார்கள், பிறகு அவர்கள் எந்த நாட்டிலிருந்து வந்திருக்கிறார்களென பெரும்பாலும் கேட்பார்கள். பதிலளிக்கும் வெளிநாட்டுக்காரர் அடுத்து ஒரு கேள்வி கேட்பார், அதாவது அந்த சாட்சி மெக்சிகோவில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்பார்; இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்தச் சாட்சி கிறிஸ்தவ நம்பிக்கைகளைக் குறித்து பேசுவார். அவ்விதத்தில் சம்பாஷணையை ஆரம்பிப்பது வெகு சுலபமாக இருப்பதாக ஆக்ஸகா நகரில் தேவை அதிகமுள்ள ஆங்கில பிராந்தியத்தில் சேவை செய்யும் க்லாரியா கூறுகிறார். ஒருநாள் பொது இடம் ஒன்றில் சந்தர்ப்ப சாட்சி கொடுத்துவிட்டு அவர் வீடு திரும்பிக்கொண்டு இருந்தபோது, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியர் அவரை அணுகினார்கள். “இந்த ஆக்ஸகா நகர வீதியில் கறுப்பு இனத்துப் பெண்ணை பார்க்கறப்ப என் கண்ணை என்னாலேயே நம்ப முடியல!” என அந்தப் பெண்மணி ஆச்சரியத்துடன் சொன்னாள். அவள் தன்னை கறுப்பு இனத்துப் பெண் என்று சொன்னதைக் கேட்டு க்லாரியா கோபப்படவில்லை, மாறாக சிரிக்கவே செய்தார், பிறகு தான் மெக்சிகோவில் இருக்கும் காரணத்தை சொல்லி கலகலப்பாக பேச ஆரம்பித்தார். அதன்பின் க்லாரியாவை அந்தப் பெண் தன் வீட்டிற்கு காஃபி சாப்பிட அழைத்தாள். அதற்கான நேரத்தை குறித்துக்கொண்ட பிறகு க்லாரியா காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை அளித்தார்; ஆனால் தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, தான் ஒரு நாஸ்திகவாதி என சொல்லி அந்தப் பெண் அவற்றை வாங்க மறுத்துவிட்டாள். அதற்கு, நாஸ்திகவாதிகளுடன் பேசுவது தனக்கு மிகவும் பிடிக்கும் என சட்டென்று பதிலளித்துவிட்டு, “வழிபாட்டு தலங்கள் நமக்கு தேவையா?” என்ற கட்டுரையை க்லாரியா காண்பித்தார்; அதைப் பற்றி அவளுடைய அபிப்பிராயத்தை கேட்க தான் விரும்புவதாகவும் சொன்னார். அதை ஏற்றுக்கொண்ட அந்தப் பெண், “கடவுள் இருக்கிறார்னு மட்டும் என்னை நம்ப வச்சிட்டீங்கன்னா, உண்மையிலேயே நீங்க சாதனை படைச்சுட்டீங்கன்னுதான் அர்த்தம்” என்று சொன்னாள். வீட்டில் சந்திக்கச் சென்றிருந்தபோது, காஃபி குடித்தபடியே பல விஷயங்களைப் பற்றி சுவாரஸ்யமாக அவர்கள் பேசினார்கள். பிற்பாடு, அந்தத் தம்பதியர் இங்கிலாந்திற்கு திரும்பிப் போனார்கள், என்றாலும் ஈ-மெயில் மூலமாக சம்பாஷணைகள் தொடர்ந்தன.
வாஷிங்டன், டி.ஸி.-யைச் சேர்ந்த ஸரான் என்ற மாணவியுடனும் க்லாரியா பேச ஆரம்பித்தாள்; அவள் தன்னுடைய முதுநிலைப் பட்டப் படிப்பை முடிப்பதற்காக ஆக்ஸகாவிலுள்ள பழங்குடிப் பெண்களுடன் வாலண்டியர் வேலை செய்து கொண்டிருந்தாள். அவளுடைய நல்ல வேலையை க்லாரியா பாராட்டினாள், பிறகு மெக்சிகோவில் தான் இருக்கும் காரணத்தை விளக்கினாள். இதன் விளைவாக, பைபிளைப் பற்றியும், கடவுள் ஏழைகளுக்கு மட்டுமல்லாமல் எல்லாருக்குமே என்ன செய்யப் போகிறார் என்பதைப் பற்றியும் அருமையாக உரையாடினார்கள். ‘அமெரிக்காவில் ஒருமுறைகூட நான் யெகோவாவின் சாட்சிகளோட பேசினதே இல்லை, ஆனா இங்க மெக்சிகோவுக்கு வந்த பிறகு நான் முதன்முதலா பேசினது யெகோவாவின் சாட்சிகளோடத்தான்னு நினைக்கும்போது ரொம்ப வியப்பா இருக்கு!’ என ஸரான் சொல்கிறாள். பைபிள் படிப்பை அவள் ஏற்றுக்கொண்டாள், கிறிஸ்தவ கூட்டங்களிலும் உடனடியாக கலந்துகொள்ள ஆரம்பித்தாள்.
ஏராளமான வெளிநாட்டுக்காரர்கள் பரதீஸ் போன்ற ஏதாவதொரு இனிய சூழலை விரும்புவதால் மெக்சிகோவில் கடற்கரைகள் அமைந்துள்ள சுற்றுலா மையங்களுக்கு குடிபெயர்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய இந்த விருப்பத்தை பயன்படுத்தி லாரல் தன்னுடைய சம்பாஷணையை ஆரம்பிக்கிறாள்; அவர்களுடைய ஊருடன் ஒப்பிட, இந்த அகபுல்கோ நகர் ஒரு பரதீஸ் போல இருக்கிறதா என்றும், இந்த நகரில் அவர்களுக்கு பிடித்தமான விஷயம் என்ன என்றும் கேட்டு பேச்சை தொடங்குவாள். பிறகு, இந்த முழு பூமியும் உண்மையிலேயே ஒரு பரதீஸ் போல சீக்கிரத்தில் மாறப் போகிறது என அவள் விளக்குவாள். கால்நடை மருத்துவரின் க்ளினிக்கில் ஒரு கனடா நாட்டுப் பெண்ணிடம் இவ்விதமாக அவள் பேச்சை ஆரம்பித்தது பைபிள் படிப்புக்கு வழிநடத்தியது. நீங்கள் வசிக்கும் இடத்தில் இதே போன்ற அணுகுமுறையை உபயோகிப்பது பயனளிப்பதாக இருக்குமா?
‘வீதிகளிலும் பொது இடங்களிலும்’
வீதிகளிலும் பொது இடங்களிலுமுள்ள ஜனங்களிடம் “நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்களா?” என்று கேட்பதன் மூலமாக அவர்கள் பெரும்பாலும் பேச்சை ஆரம்பிக்கிறார்கள். அநேக மெக்சிகர்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள், அதற்கு அவர்களுடைய வேலை காரணமாக இருக்கலாம், அல்லது அவர்கள் அமெரிக்காவில் வசித்திருப்பது காரணமாக இருக்கலாம்.
ஒரு வயதான பெண் வீல்சேரில் அமர்ந்திருப்பதையும், அந்த வீல்சேரை நர்ஸ் ஒருத்தி தள்ளிக்கொண்டு வருவதையும் யெகோவாவின் சாட்சிகளான ஒரு தம்பதியர் பார்த்தார்கள். அந்த வயதான பெண்ணை அணுகி, அவருக்கு ஆங்கிலம் பேச வருமா என கேட்டார்கள். அமெரிக்காவில் பல வருடங்கள் வாழ்ந்திருந்ததால் தனக்கு ஆங்கிலம் பேச வருமென அவர் பதிலளித்தார். காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை ஏற்றுக்கொண்டார், அதற்கு முன் அந்தப் பத்திரிகைகளை அவர் வாசித்ததே கிடையாதாம்; பிறகு தன்னுடைய பெயர் கோன்ஸ்விலோ என்று சொல்லிவிட்டு, தன்னுடைய விலாசத்தை கொடுத்தார். நான்கு நாள் கழித்து, அந்த விலாசத்திற்கு இவர்கள் சென்றபோது, அது கத்தோலிக்க கன்னியாஸ்திரீகளால் நடத்தப்படும் ஒரு நர்ஸிங் ஹோம் என்பதை கண்டார்கள். போனவுடன் கோன்ஸ்விலோவை அவர்களால் சந்திக்க முடியவில்லை; காரணம், அந்தக் கன்னியாஸ்திரீகள் அத்தம்பதியரை சந்தேகப்பட்டு, கோன்ஸ்விலோவை பார்க்க முடியாது என சொல்லி விட்டார்கள். அதற்கு அந்தத் தம்பதியர் தாங்கள் அங்கு வந்திருப்பதையும், கோன்ஸ்விலோவைப் பார்த்து நலம் விசாரிக்க விரும்புவதையும் அவரிடம் தெரிவிக்குமாறு மிகவும் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்கள். பிறகு, கோன்ஸ்விலோ அத்தம்பதியரை உள்ளே வரவழைத்தார். அன்றிலிருந்து, இந்த 86 வயது பாட்டி, விருப்பத்துடன் பைபிளை படித்துவருகிறார்; எதிர்மறையான கருத்துக்களை அந்தக் கன்னியாஸ்திரீகள் சொல்லி வந்தபோதிலும், பைபிள் படிப்பை அவர் விடுவதாக இல்லை. கிறிஸ்தவ கூட்டங்களிலும் சில முறை கலந்துகொண்டிருக்கிறார்.
“மெய் ஞானமானது வீதியில் நின்று உரக்க கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறது, பொது இடங்களிலிருந்து குரலெழுப்பியவாறே இருக்கிறது” என நீதிமொழிகள் 1:20 (NW) சொல்கிறது. சான் மிகல் டே ஆயன்டேயிலுள்ள பொது இடத்தில் அது எவ்வாறு நடந்ததென்பதைக் கவனியுங்கள். ஓர் அதிகாலை வேளையின்போது பெஞ்சில் அமர்ந்திருந்த ஒருவரை—நடுத்தர வயதுள்ளவரை—ரால்ஃப் என்ற யெகோவாவின் சாட்சி அணுகினார். காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள் அவருக்கு கொடுக்கப்பட்டபோது பெரிதும் வியப்படைந்தார், பிறகு தன் கதையை ரால்ஃபிடம் சொல்ல ஆரம்பித்தார்.
அவர் ஓய்வுபெற்ற ஓர் இராணுவ வீரர்; வியட்நாம் போரில் ஈடுபட்டிருந்தபோது அவர் கணக்கு வழக்கில்லா சாவுகளை கண்ணாரப் பார்த்து அதிர்ச்சியுற்றதன் காரணமாக உணர்ச்சி ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டார். எனவே, போர்முனையிலிருந்து முகாம் தளத்திற்கு அனுப்பப்பட்டார். இராணுவ வீரர்களின் சடலங்கள் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படுமுன், அவற்றை கழுவி சுத்தம் செய்யும் வேலை அவருக்கு கொடுக்கப்பட்டது. இப்போது, 30 வருடம் கழிந்த பிறகும்கூட, கொடுங்கனவுகளாலும் நடுக்க உணர்வுகளாலும் தொடர்ந்து அல்லல்பட்டு வருகிறார். அந்தக் காலை வேளையின்போது, பொது இடத்தில் உட்கார்ந்தபடி உதவிக்காக அவர் மனதிற்குள்ளேயே ஜெபம் செய்து கொண்டிருந்தாராம்.
ஓய்வுபெற்ற அந்த இராணுவ வீரர் ரால்ஃபிடமிருந்து பிரசுரங்களை பெற்றுக்கொண்டார், அதோடு ராஜ்ய மன்றங்களுக்கு வருமாறு கொடுக்கப்பட்ட அழைப்பையும் ஏற்றுக்கொண்டார். அங்கு நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, ‘இந்த ராஜ்ய மன்றத்தில உட்கார்ந்திருந்த இரண்டு மணிநேரமாத்தான் என் மனசு ரொம்ப அமைதியா இருந்துச்சு; 30 வருஷத்தில இப்போதான் முதல் முறையா இப்படி உணர்றேன்’ என்று சொன்னார். சான் மிகல் டே ஆயன்டேயில் அவர் ஓரிரு வாரங்களுக்கு மட்டும்தான் இருந்தார், என்றாலும் பல முறை பைபிள் படிப்பு அவருக்கு நடத்தப்பட்டது; தன் தாய்நாட்டிற்கு திரும்பிப் போகும்வரை எல்லா கூட்டங்களிலும் கலந்துகொண்டார். அவருக்கு பைபிள் படிப்பு தொடர்ந்து நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
வேலை செய்யுமிடத்திலும் பள்ளியிலும் சந்தர்ப்ப சாட்சி கொடுத்தல்
வேலை செய்யும் இடத்தில் உள்ள எல்லாருக்குமே நீங்கள் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதை தெரியப்படுத்துகிறீர்களா? ஆட்ரியான் என்பவர் கேப் ஸான் லூகாஸ் என்ற இடத்தில் விடுமுறையைக் கழிக்க வருபவர்களிடம் அப்பார்ட்மென்ட்டுகளை ஏற்பாடு செய்து தரும் வேலை செய்து வருகிறார்; தான் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவது அவருடைய வழக்கம். அதன் காரணமாக, அவருடன் வேலை பார்க்கும் ஜூடி என்பவள் இவ்வாறு சொல்கிறாள்: “மூணு வருஷத்துக்கு முன்னால என்னை ஒரு யெகோவாவின் சாட்சியா மாறுன்னு யாராவது சொல்லியிருந்தால், ‘பத்து லட்சம் வருஷம் ஆனாலும்கூட நான் அப்படி மாற மாட்டேன்னு’ சொல்லியிருப்பேன். ஆனா இப்போ பைபிளை வாசிக்க தீர்மானிச்சுட்டேன். பொதுவாவே புத்தகங்களை நான் விரும்பி வாசிப்பதனால பைபிளை படிக்கிறது ஒன்னும் அவ்வளவு பெரிய கஷ்டமா இருக்காதுன்னு நினைச்சேன். ஆனா நான் நினைச்சது தப்பு, என்னால ஆறு பக்கங்களைக்கூட படிச்சு முடிக்க முடியல; பைபிளை விளங்கிக்க எனக்கு உதவி தேவைன்னு புரிஞ்சுக்கிட்டேன். எனக்கு யார் உதவுவாங்கன்னு யோசிச்சப்ப, ஒரு பெயர்தான் பளிச்சின்னு ஞாபகத்துக்கு வந்தது, ஆமா, என்கூட வேலை பார்த்த ஆட்ரியானுடைய பெயர்தான் ஞாபகத்துக்கு வந்தது. அவர்கிட்ட பேசறதுன்னா எனக்கு ரொம்ப இஷ்டம், ஏன்னா அங்க வேலை பார்த்தவங்கள்ல அவர் ஒருத்தர்தான் உண்மையிலேயே தங்கமானவரா இருந்தார்.” ஜூடிக்கு உதவுவதற்கு ஆட்ரியான் உடனடியாக ஒப்புக்கொண்டார்; தனக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்த கேட்டி என்ற பெண்ணுடன் வந்து அவளுடைய எல்லா கேள்விகளுக்கும் பதிலளிப்பதாக உறுதியளித்தார். சொன்னபடியே, ஜூடியுடன் கேட்டி பைபிள் படிப்பை ஆரம்பித்தாள், அதன்பின் சீக்கிரத்திலேயே ஜூடி ஒரு யெகோவாவின் சாட்சியாக முழுக்காட்டுதல் பெற்றாள்.
பள்ளியில் சந்தர்ப்ப சாட்சி கொடுப்பது பற்றி என்ன? யெகோவாவின் சாட்சிகளான இரண்டு மாணவிகள் பல்கலைக்கழகத்தில் ஸ்பானிஷ் படித்துக் கொண்டிருந்தார்கள்; ஆனால் கிறிஸ்தவ மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக வகுப்புக்கு அவர்கள் ஒருநாள் செல்லவில்லை. மறுநாள் வகுப்புக்கு சென்றபோது, மாநாட்டில் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை ஸ்பானிஷ் மொழியில் விளக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். அந்த வாய்ப்பை பயன்படுத்தி, அவ்விருவரும் ஸ்பானிஷ் மொழியில் முடிந்தளவு திறம்பட்ட விதத்தில் சாட்சி கொடுத்தார்கள். அவர்களுடைய டீச்சர் ஸில்வியாவுக்கு பைபிள் தீர்க்கதரிசனங்களில் மிகுந்த ஆர்வம் இருந்தது. எனவே தனக்கு பைபிள் படிப்பு நடத்தப்பட ஒத்துக்கொண்டார், இப்போது அவர் நற்செய்தியை பிரசங்கிக்கும் ஒரு பிரஸ்தாபியாக இருக்கிறார். அவருடைய குடும்பத்திலுள்ள பலரும்கூட பைபிளை படித்து வருகிறார்கள். “வாழ்நாள் பூராவும் நான் தேடிகிட்டு இருந்தது இப்போ எனக்கு கிடைச்சிருச்சு” என ஸில்வியா சொல்கிறார். ஆம், சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதால் அருமையான பலன்கள் கிடைக்கும்.
வேறு சந்தர்ப்பங்களை பயன்படுத்துதல்
உபசரிக்கும் குணத்தை காண்பிப்பது சாட்சி கொடுக்க வழிவகுக்கலாம். இது எவ்வளவு உண்மை என்பதை ஸனோராவிலுள்ள சான் கர்லோஸில் சேவை செய்துவரும் ஜிம் மற்றும் அவருடைய மனைவி கேல் அனுபவரீதியில் கண்டார்கள். அதிகாலை 6:00 மணிக்கு ஒரு பெண் தன் நாய்களை வாக்கிங் கூட்டிக்கொண்டு சென்றபோது, அவர்களுடைய வீட்டுத் தோட்டத்தை பார்த்து ரசிப்பதற்காக அங்கு சற்று நின்றாள். அவளை ஜிம்மும் கேலும் காஃபி சாப்பிட உள்ளே அழைத்தார்கள். தன்னுடைய 60 வருடங்களில், அப்போதுதான் அவள் முதல்முறையாக யெகோவாவைப் பற்றியும், என்றென்றுமாக வாழும் நம்பிக்கையைப் பற்றியும் தெரிந்துகொண்டாள். அவளோடு பைபிள் படிப்பு ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
ஏட்ரீன் என்பவளும் முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம் தயவோடு நடந்துகொள்கிறாள். ஒருமுறை அவள் கன்கூனில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு சிறுவன் அவளை அணுகி அவள் கனடா நாட்டை சேர்ந்தவளா என்று கேட்டான். ஆம் என அவள் பதிலளித்தாள்; அதற்கு, கனடா நாட்டவரைப் பற்றி ஸ்கூல் ரிப்போர்ட் ஒன்றை தயாரிக்க தானும் தன் அம்மாவும் தன்னுடைய தங்கைக்கு உதவ முயற்சி செய்துகொண்டிருப்பதாக அச்சிறுவன் சொன்னான். ஆங்கிலம் பேசத் தெரிந்திருந்த அவனுடைய அம்மா ஏட்ரீனுக்கு அருகே வந்து அமர்ந்தாள். கனடா நாட்டவரைப் பற்றி அவள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக பதிலளித்த பிறகு, “ஆனா நான் கனடாவிலிருந்து இங்கு வந்ததற்கு உண்மையிலேயே ஒரு முக்கியமான காரணம் இருக்கு, பைபிளைப் பத்தி ஜனங்களுக்கு கத்துக்கொடுக்கத்தான் நான் இங்க வந்திருக்கேன். உங்களுக்கும் கத்துக்க ஆர்வம் இருக்கா?” என்று ஏட்ரீன் கேட்டாள்; அதற்கு அந்தப் பெண் தனக்கு ஆர்வம் இருக்கிறதென பதிலளித்தாள். பத்து வருடங்களுக்கு முன்பே அவள் சர்ச்சுக்கு போவதை நிறுத்திவிட்டிருந்தாளாம், அதுமட்டுமல்லாமல் தானாகவே பைபிளைப் படித்துப் புரிந்துகொள்ள முயன்று கொண்டிருந்தாளாம். தன் ஃபோன் நம்பரையும் விலாசத்தையும் அவள் ஏட்ரீனுக்கு கொடுத்தாள்; பிறகு மனநிறைவளிக்கும் பைபிள் படிப்பு அவளுடன் ஆரம்பிக்கப்பட்டது.
‘உன் ஆகாரத்தை தண்ணீர்கள்மேல் போடு’
பைபிள் சத்தியத்தைப் பற்றி எல்லா சந்தர்ப்பங்களிலும் பேசுவது, ராஜ்ய செய்தியை அதுவரை கேட்டிராதவர்களிடம் சாட்சி கொடுப்பதில் பெரும்பாலும் விளைவடைகிறது. சிவாட்டானிகோ என்ற துறைமுக பட்டணத்திலுள்ள ஒரு பிஸியான கஃபேயில், யெகோவாவின் சாட்சி ஒருவர் அமர்ந்திருந்தார்; அந்தக் கஃபேயில் கூட்டம் நிரம்பி வழிந்ததால், ஒரு வெளிநாட்டு தம்பதியரை தன் மேஜையில் உட்காரும்படி அழைத்தார். அந்தத் தம்பதியர் இடம் இடமாக ஏழு வருடங்களுக்கு கடல் பிரயாணம் செய்து வந்திருந்தார்கள். யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி தங்களுடைய எதிர்மறையான கருத்துக்களை சொன்னார்கள். பிற்பாடு, இந்த சாட்சி அத்தம்பதியரை அவர்களுடைய படகிற்கே சென்று சந்தித்தார், பிறகு தன்னுடைய வீட்டிற்கு வருமாறு அவர்களை அழைத்தார். 20-க்கும் அதிகமான பத்திரிகைகளையும் 5 புத்தகங்களையும் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்; அதுமட்டுமல்ல, அடுத்த துறைமுகத்தை அடைந்தபின், அங்கு யெகோவாவின் சாட்சிகளை கட்டாயம் தாங்கள் சந்திக்கப் போவதாகவும் உறுதி அளித்தார்கள்.
சாட்சிகளாய் இருந்த ஜெஃப் என்பவரும் டெப் என்பவளும் கன்கூனில், ஷாப்பிங் சென்ட்டரிலுள்ள பொது உணவகத்தில் அழகான பெண் குழந்தையோடு இருந்த ஒரு தம்பதியரை பார்த்தார்கள். அந்தக் குழந்தையின் அழகை ரசித்து அவர்கள் ஏதோ சொல்ல, தங்களோடு பிட்ஸா சாப்பிடுமாறு அத்தம்பதியர் இவர்களை அழைத்தார்கள். அவர்கள் இந்தியாவிலிருந்து வந்திருந்தார்கள். யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அவர்கள் கேள்விப்பட்டதே இல்லையாம், அவர்களுடைய பிரசுரங்களையும் பார்த்ததே கிடையாதாம். ஷாப்பிங் சென்ட்டரிலிருந்து போகும்போது சாட்சிகளுடைய பிரசுரங்கள் சிலவற்றை பெற்றுக்கொண்டு சென்றார்கள்.
யூக்கட்டன் கடலோரப் பகுதிக்கு அப்பால் உள்ள தீவில் ஜெஃப்புக்கு இதே போன்ற ஒரு சம்பவம் நடந்தது; புதிதாக மணமான சீன தம்பதியர் தங்களை ஃபோட்டோ எடுக்குமாறு ஜெஃப்பிடம் கேட்டுக்கொண்டார்கள், மறுப்புத் தெரிவிக்காமல் அவரும் ஃபோட்டோ எடுத்துக்கொடுத்தார். பிறகு ஜெஃப் அவர்களோடு பேச்சுக் கொடுத்தார், அவர்கள் கடந்த 12 ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்திருந்தபோதிலும் யெகோவாவின் சாட்சிகளைப் பார்த்ததில்லையென்பதும், அவர்களைப் பற்றி கேள்விப்பட்டதுகூட இல்லையென்பதும் அப்போது அவருக்கு தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து ஓர் இனிய உரையாடல் ஆரம்பமானது. தங்கள் ஊருக்கு திரும்பிச் சென்றதும் யெகோவாவின் சாட்சிகளைப் போய் சந்திக்கும்படி ஜெஃப் அவர்களை உற்சாகப்படுத்தினார்.
நீங்கள் வசிக்கும் பிராந்தியத்தில் ஏதோவொரு விசேஷ சம்பவம் ஒருவேளை நிகழலாம்; அச்சம்பவம் சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கலாம். க்வேனவேட்டோ என்ற இடத்திற்கு அருகே மெக்சிகோ நாட்டு ஜனாதிபதியின் பண்ணை ஒன்றிருந்தது; அங்கு அவரை சந்திப்பதற்காக அமெரிக்க அதிபர் விஜயம் செய்திருந்தார்; இது தொடர்பான செய்தியை வெளியிட உலகெங்கிலுமிருந்து பத்திரிகையாளர்கள் வந்திருந்தார்கள். ஆங்கிலத்தில் சாட்சி கொடுப்பதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள யெகோவாவின் சாட்சிகளாயிருந்த ஒரு குடும்பத்தார் தீர்மானித்தார்கள். நல்ல பலன் கிடைத்தது. உதாரணத்திற்கு, கொஸோவோ, குவைத் போன்ற நாடுகளில் நடைபெற்ற ஏராளமான போர்களைப் பற்றி முன்பு அறிக்கை செய்திருந்த ஒரு பத்திரிகையாளரை இக்குடும்பத்தார் அணுகிப் பேசினர். அவருடைய நண்பரை எங்கிருந்தோ வந்த துப்பாக்கிக்குண்டு பதம் பார்த்ததாம், அச்சமயத்தில் இவருடைய கைகளிலேயே அந்த நண்பர் உயிரை விட்டாராம். அதனால் இப்போது உயிர்த்தெழுதல் பற்றி கேள்விப்பட்டதும், வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்கிறது என்பதை தனக்கு உணர்த்தியதற்காக கண்ணீர் மல்க கடவுளுக்கு நன்றி சொன்னார். சாட்சிகளான அத்தம்பதியரை மறுபடியும் தன்னால் பார்க்க முடியாது என்றாலும், பைபிளின் இந்த நல்ல செய்தியை தன் இருதயத்திலே சுமந்துகொண்டு செல்லப் போவதாக அவர் சொன்னார்.
மேற்கூறப்பட்டுள்ள அனுபவங்களில் பார்க்கிறபடி, சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதன் முடிவு என்னவாக இருக்கும் என்பது பெரும்பாலும் நமக்கு தெரிவதில்லை. என்றாலும், சாலொமோன் ஞானி இவ்வாறு சொன்னார்: “உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்.” மேலும், “காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாய்ப் பயன்படுமோ என்றும் நீ அறியாயே” எனவும் அவர் சொன்னார். (பிரசங்கி 11:1, 6) ஆம், பக்தி வைராக்கியத்தோடு பவுலைப் போலவும், இயேசுவைப் போலவும், மெக்சிகோவிலுள்ள ஆங்கிலப் பிராந்தியத்தில் சேவிக்கிற நவீன நாளைய யெகோவாவின் சாட்சிகளைப் போலவும் ‘உங்கள் ஆகாரத்தை’ தண்ணீர்கள்மேல் போடுங்கள், தாராளமாக ‘உங்கள் விதையை விதையுங்கள்.’