உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w04 6/1 பக். 30-31
  • கஷ்ட காலங்களில் நன்மை செய்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கஷ்ட காலங்களில் நன்மை செய்தல்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • இதே தகவல்
  • கடந்த ஆண்டின் சிறப்பம்சங்கள்
    2006 யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக்
  • வணக்கத்துக்காக ஒன்றுகூடி வரும் இடங்கள்
    யெகோவாவின் விருப்பத்தைச் செய்யும் அமைப்பு
  • தற்காலத்தில் யெகோவாவின் மீட்புச் செயல்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • புயற்காற்று ஆண்ட்ரு அழிக்க முடியாத காரியங்கள்
    விழித்தெழு!—1993
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
w04 6/1 பக். 30-31

கஷ்ட காலங்களில் நன்மை செய்தல்

“யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மை செய்யக்கடவோம்” என அப்போஸ்தலன் பவுல் உந்துவித்தார். (கலாத்தியர் 6:10) உலகெங்கிலும் உள்ள யெகோவாவின் சாட்சிகள் இந்தக் கொள்கையை தங்களுடைய வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கு ஊக்கமாக முயலுகிறார்கள். எல்லாருக்கும், முக்கியமாக உடன் விசுவாசிகளுக்கும் நன்மை செய்கிறார்கள். இதைத்தான் கஷ்ட காலங்களில் மீண்டும் மீண்டும் காண்கிறோம். மூன்று நாடுகளிலிருந்து வரும் சமீபகால உதாரணங்களை இப்பொழுது நாம் கவனிக்கலாம்.

டிசம்பர் 2002-⁠ல், மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்திற்கும் அதிகமாக குவாமில் கடும் புயல் வீசியது. அநேக வீடுகளை தகர்த்தெறிந்துவிட்டது, சில வீடுகள் அடியோடு அழிந்துவிட்டன. உள்ளூர் சபைகள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு சுத்தப்படுத்தும் பணியாளர்களை ஒருங்கிணைத்து, பயங்கரமாக பாதிக்கப்பட்ட சாட்சி குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டின. சேதமடைந்த வீடுகளை சரிப்படுத்துவதற்கு குவாம் கிளை அலுவலகம் பொருளுதவியையும் ஆளுதவியையும் அளித்தது, அதோடு ஹவாய் கிளை அலுவலகமும் ஆதரவு அளித்தது. சில வாரங்களுக்குள், மறுகட்டுமான வேலைக்காக ஹவாயிலிருந்து தச்சர்கள் அடங்கிய ஒரு தொகுதி வந்து சேர்ந்தது; இவர்களுக்கு உதவ உள்ளூர் சகோதரர்கள் சிலர் வேலையிலிருந்து விடுப்பு எடுத்தனர். மகிழ்ச்சியுடன் ஒத்துழைத்தது, சமுதாயத்திலுள்ள அனைவருக்கும் ஒரு சாட்சியாக அமைந்தது.

மயன்மாரில் மண்டலே என்ற நகரத்தின் ஒரு புறநகர்ப் பகுதியில், ராஜ்ய மன்றத்திற்கு அருகிலுள்ள ஓர் இடத்தில் திடீரென தீ பற்றிக்கொண்டது. செயலற்ற ஒரு சகோதரிக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் சொந்தமான ஒரு வீடு அதற்குப் பக்கத்தில் இருந்தது. காற்று அந்தச் சகோதரியின் வீட்டு வாக்கில் அடித்தது, அதனால் உதவிகேட்டு ராஜ்ய மன்றத்திற்கு ஓடினார். அந்தச் சமயத்தில், ராஜ்ய மன்றம் புதுப்பிக்கப்பட்டு வந்தது, அதனால் அங்கே அநேக சகோதரர்கள் இருந்தார்கள். அந்தச் சகோதரியைப் பார்த்ததும் அவர்களுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது, ஏனென்றால் அந்தச் சகோதரி அந்த ஏரியாவில்தான் குடியிருக்கிறார் என்பது அவர்களுக்குத் தெரியாது. உடனடியாக, அந்தக் குடும்பத்தாருடைய உடைமைகளையெல்லாம் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசெல்ல சகோதரர்கள் உதவினார்கள். தீப்பற்றிய செய்தியை கேள்விப்பட்ட சாட்சியல்லாத கணவர் வீட்டிற்கு விரைந்தார், அங்கே அந்தச் சகோதரர்கள் அவருடைய குடும்பத்துக்கு உதவியாக இருப்பதைக் கண்டார். இதனால் அவர் மனங்கவரப்பட்டார், நன்றியும் தெரிவித்தார். அவருடைய கவலையும் தணிந்தது, ஏனென்றால் இப்படிப்பட்ட சமயங்களில் கொள்ளையடிப்பவர்கள் கையில் கிடைத்ததை சுருட்டிக்கொண்டு போய்விடுவார்கள். சகோதரர்கள் காட்டிய இந்த அன்பான செயல், கிறிஸ்தவ சபையுடன் மீண்டும் இணைவதற்கு அந்தச் சகோதரியையும் அவருடைய மகனையும் உந்துவித்தது, இப்பொழுது அவர்கள் எல்லா கூட்டங்களுக்கும் ஆஜராகிறார்கள்.

கடந்த ஊழிய ஆண்டில், வறட்சியாலும் விளைச்சல் இல்லாததாலும் மொசம்பிக்கில் உள்ள அநேகர் பஞ்சத்தால் அவதியுற்றார்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் கிளை அலுவலகம் கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உணவு வழங்குவதன் மூலம் உடனடியாக செயல்பட்டது. ராஜ்ய மன்றங்களில் உணவு வழங்கப்பட்டது, சில சமயங்களில் கூட்டங்கள் முடிந்தபின் வழங்கப்பட்டது. ஒற்றைத்தாயாக இருக்கும் சகோதரி ஒருவர் இவ்வாறு கூறினார்: “கூட்டம் முடிந்து வீட்டிற்கு சென்றதும் என்னுடைய பிள்ளைகள் சாப்பிட என்ன கொடுப்பேன் என தெரியாமல் மனக்கவலையுடன் கூட்டத்திற்கு வந்தேன்.” சகோதரர்கள் அளித்த அன்பான இந்த உதவி அவளுக்கு உற்சாகம் அளித்தது. “இது எனக்கு உயிர்த்தெழுதல் போல இருந்தது!” என அவர் கூறினார்.

ஆறுதலும் நம்பிக்கையும் தரும் பைபிள் செய்தியை பகிர்ந்து கொள்வதன் மூலமும் யெகோவாவின் சாட்சிகள் ஆன்மீக ரீதியிலும் ‘நன்மை செய்கிறார்கள்.’ “[தெய்வீக ஞானத்திற்கு] செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்” என பண்டைய காலத்தில் வாழ்ந்த ஞானி ஒருவர் நம்பியதைப் போல இவர்களும் நம்புகிறார்கள்.​—⁠நீதிமொழிகள் 1:⁠33.

[பக்கம் 31-ன் படங்கள்]

1, 2. மொசம்பிக்கில் கஷ்டப்படுகிறவர்களுக்கு உணவு வழங்குதல்

3, 4. குவாமில் புயல் அநேக வீடுகளை நாசமாக்கியது

[படங்களுக்கான நன்றி]

குழந்தை, இடது: Andrea Booher/FEMA News Photo; பெண், மேலே: AP Photo/Pacific Daily News, Masako Watanabe

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்