வாழ்க்கை சரிதை
யெகோவாவின் பலமே எங்கள் உயிர்நாடி
எர்ஷேபெட் ஹாஃப்னர் சொன்னபடி
செக்கோஸ்லோவாகியாவிலிருந்து வெளியேறும்படி எனக்கு உத்தரவிடப்பட்டிருந்தது; அதைப் பற்றி டீபார் ஹாஃப்னர் கேள்விப்பட்டபோது, “அவர்கள் உன்னை நாடுகடத்த நான் விடமாட்டேன்” என சொன்னார். பிறகு, “உனக்கு சம்மதம் என்றால் உன்னை கல்யாணம் செய்து கொள்ள நான் தயார், நீ காலமெல்லாம் என்கூடவே இருக்கலாம்” என்று சொன்னார்.
டீபார் இப்படி திடுதிப்பென்று திருமணத்திற்கு என் சம்மதத்தை கேட்டார்; சில வாரங்களுக்குள்ளாகவே ஜனவரி 29, 1938-ல் எங்கள் திருமணம் நடந்து முடிந்தது. டீபார்தான் என் குடும்பத்தாருக்கு முதன்முறையாக சத்தியத்தை அறிவித்தவர். என்னால் உடனடியாக தீர்மானம் எடுக்க முடியவில்லை. எனக்கு அப்போதுதான் 18 வயது ஆகியிருந்தது, யெகோவாவின் சாட்சிகளது முழுநேர ஊழியர்களில் ஒருத்தியாக நான் இருந்ததால் என் இளமைக் காலத்தை முழுக்க முழுக்க கடவுளுடைய சேவையில் அர்ப்பணிக்கவே விரும்பினேன். எனவே அழுதேன். ஜெபித்தேன். ஒருவழியாக என்னை தேற்றிக் கொண்டதும், ஏதோ என்மீது இரக்கப்பட்டதால் மட்டும் டீபார் என்னை மணக்க முன்வரவில்லை என்பதை புரிந்துகொண்டேன், என்னை நெஞ்சார நேசிக்கும் இவருடன் என் வாழ்க்கையை பகிர்ந்துகொள்ள தீர்மானித்தேன்.
ஆனால் நான் ஏன் நாடுகடத்தப்படும் ஆபத்திலிருந்தேன்? இத்தனைக்கும், மக்களாட்சியும் மத சுதந்திரமும் இருப்பதாக பெருமைப்பட்டுக் கொண்ட நாட்டில் அல்லவா நான் வசித்து வந்தேன்! இந்த சமயத்தில் என்னுடைய பின்னணியைப் பற்றி உங்களுக்கு விளக்கமாக சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
நான் டிசம்பர் 26, 1919-ல் ஷாயாசன்ட்பீடர் என்ற கிராமத்தில் பிறந்தேன்; இது ஹங்கேரியில் புடாபெஸ்ட்டுக்குக் கிழக்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவிலிருந்தது. என் பெற்றோர் கிரேக்க கத்தோலிக்க சர்ச்சை சேர்ந்தவர்கள். நான் பிறப்பதற்கு முன்பே என் அப்பா இறந்துவிட்டது கவலையான விஷயம். சீக்கிரத்திலேயே என் அம்மா வேறொருவரை மறுமணம் செய்துகொண்டார்; அவர் மனைவியை இழந்தவர், நான்கு பிள்ளைகளுடையவர். அன்றைய செக்கோஸ்லோவாகியாவின் அழகிய நகரங்களில் ஒன்றான லுசென்யெட்ஸ் என்ற இடத்திற்கு நாங்கள் குடிமாறினோம். அந்தக் காலத்தில் மாற்றான் குடும்பத்தில் வாழ்வது என்பது அவ்வளவு சுலபமானதல்ல. ஐந்து பிள்ளைகளில் கடைக்குட்டியாக இருந்த நான் தண்டச்சோறுபோல் உணர்ந்தேன். குடும்பத்தில் பணக் கஷ்டம் இருந்தது; எனக்குத் தேவையான பொருட்கள் கிடைக்காதது ஒருபுறமிருக்க, சாதாரணமாக கிடைக்கும் பெற்றோரின் பராமரிப்பும் அன்பும்கூட எனக்குக் கிடைக்கவில்லை.
யாருக்காவது பதில் தெரியுமா?
எனக்கு 16 வயதிருக்கும்; எக்கச்சக்கமான கேள்விகள் என் தலையைக் குடைந்துகொண்டிருந்தன. முதல் உலகப் போர் பற்றிய சரித்திரத்தை அதிக ஆர்வத்துடன் வாசித்தேன், கிறிஸ்தவ நாடுகள் என சொல்லிக்கொள்ளும், நாகரிகத்தில் வளர்ச்சி கண்ட நாடுகளுக்கிடையில் நடந்த கொலைகளை பற்றி அறிந்தபோது விக்கித்துப் போனேன். அதுமட்டுமல்ல, எங்கு பார்த்தாலும் இராணுவத்தை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மும்முரமடைவதைக் காண முடிந்தது. அயலானை நேசிக்கும்படி சர்ச்சில் நான் கற்றுக்கொண்டதற்கும் இவற்றிற்கும் துளியும் சம்பந்தமில்லாதிருந்தது.
எனவே, ரோமன் கத்தோலிக்க பாதிரியிடம் சென்று, “கிறிஸ்தவர்களாக நாம் எந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டும்? யுத்தத்திற்குப் போய் நம் அயலாரை கொல்ல வேண்டுமா அல்லது அவர்களை நேசிக்க வேண்டுமா?” என கேட்டேன். என் கேள்வியால் எரிச்சலடைந்த அவர், மேலிடத்தார் சொல்வதையே தானும் கற்பிப்பதாக பதிலளித்தார். இதே போன்ற உரையாடல்தான், கால்வினிய இயக்கத்தின் மதகுரு ஒருவரையும் யூத ரபீ ஒருவரையும் சந்தித்தபோது நிகழ்ந்தது. எனக்கு பதில் ஏதும் கிடைக்கவில்லை, என் விநோதமான கேள்வியால் அவர்கள் திக்குமுக்காடிப் போனதுதான் மிச்சம். இறுதியில் லூத்தரன் மதகுரு ஒருவரை சந்திக்க சென்றேன். என் கேள்வியால் நிலைகுலைந்து போன அவர், நான் அங்கிருந்து புறப்படுவதற்கு முன்பு “இதைப் பற்றி உண்மையிலேயே நீ தெரிந்துகொள்ள விரும்பினால் யெகோவாவின் சாட்சிகளிடம் கேள்” என சொன்னார்.
சாட்சிகளைத் தேடிக் கண்டுபிடிக்க முயன்றேன், ஆனால் பயனில்லை. சில நாட்களுக்குப் பிறகு வேலை முடிந்து வீடு திரும்புகையில் கதவு பாதி திறந்திருந்ததைப் பார்த்தேன். அழகான இளைஞர் ஒருவர் பைபிளிலிருந்து என் அம்மாவுக்கு வாசித்துக் காட்டிக் கொண்டிருந்தார். ‘அவர் நிச்சயம் ஒரு யெகோவாவின் சாட்சியாகத்தான் இருக்க வேண்டும்!’ என்ற எண்ணம் என் மனதில் பளிச்சிட்டது. அவர்தான் டீபார் ஹாஃப்னர். நாங்கள் அவரை வீட்டுக்குள் அழைத்தோம்; என் கேள்விகளை திரும்பவும் அவரிடம் கேட்டேன். சொந்தமாக தனக்குத் தெரிந்ததை பதிலாக சொல்லாமல் மெய் கிறிஸ்தவர்களின் அடையாளத்தைப் பற்றியும் எப்படிப்பட்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தோம் என்பதைப் பற்றியும் பைபிளிலிருந்து காட்டினார்.—யோவான் 13:34, 35; 2 தீமோத்தேயு 3:1-5.
சில மாதங்களில், 17 வயது ஆவதற்கு முன்பே முழுக்காட்டுதல் பெற்றேன். நான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்திருந்த இந்த மணியான சத்தியங்களை எல்லாரும் தெரிந்துகொள்ள வேண்டுமென நினைத்தேன். முழுநேர பிரசங்க ஊழியம் செய்ய ஆரம்பித்தேன்; 1930-கள் முடியும் சமயத்தில் செக்கோஸ்லோவாகியாவில் பிரசங்கிப்பது பெரும் சவாலாக இருந்தது. சாட்சிகளின் ஊழியம் சட்டப்படி பதிவுசெய்யப்பட்டிருந்தாலும் மதகுருமாரால் தூண்டிவிடப்பட்ட கடும் எதிர்ப்பை ஓயாமல் சந்தித்தோம்.
முதன்முறையாக துன்புறுத்தலை அனுபவித்தல்
1937-ஆம் வருட முடிவில் ஒருநாள் நானும் இன்னொரு கிறிஸ்தவ சகோதரியும் லுசென்யெட்ஸுக்கு அருகிலிருந்த ஒரு கிராமத்தில் பிரசங்கித்துக் கொண்டிருந்தோம். கொஞ்ச நேரத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். “நீங்கள் இங்கேயே கிடந்து சாக வேண்டியதுதான்” என சொல்லிவிட்டு காவலாளி எங்கள் அறையின் கதவை படாரென சாத்தினார்.
சாயங்காலத்திற்குள் இன்னும் நான்கு பேர் எங்கள் அறையில் அடைக்கப்பட்டார்கள். நாங்கள் அவர்களுக்கு ஆறுதல் சொன்னோம், சாட்சி கொடுத்தோம். அவர்கள் ஒருவாறு சமாதானமடைந்தார்கள், விடியவிடிய அவர்களுடன் பைபிள் சத்தியத்தை மும்முரமாக கலந்தாலோசித்தோம்.
காலையில் ஆறு மணிக்கு காவலாளி என்னை அறையிலிருந்து வெளியே வரும்படி அழைத்தார். “கடவுளுடைய ராஜ்யத்தில் சந்திப்போம்” என உடனிருந்த சகோதரியிடம் சொன்னேன். ஒருவேளை அந்த சகோதரி உயிர்தப்பினால் எனக்கு என்ன நேர்ந்தது என்பதை என் குடும்பத்தாரிடம் சொல்லும்படியும் கேட்டுக் கொண்டேன். மௌனமாக ஜெபித்துவிட்டு அந்த காவலாளியுடன் நடந்தேன். அவர் என்னை சிறை வளாகத்திலிருந்த அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். “பெண்ணே, உன்னிடம் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்” என சொன்னார். “நேற்று இரவு கடவுளுடைய பெயர் யெகோவா என சொன்னாயே. அதை பைபிளிலிருந்து எனக்குக் காட்ட முடியுமா?” என கேட்டார். எனக்கு ஒரே ஆச்சரியம், நிம்மதிகூட! அவர் தனது பைபிளைக் கொண்டு வந்தார், அவருக்கும் அவரது மனைவிக்கும் யெகோவா என்ற பெயரைக் காட்டினேன். ராத்திரியிலே அந்த நான்கு பெண்களிடமும் நாங்கள் கலந்தாலோசித்த விஷயங்கள் சம்பந்தமாக அவருக்கு அநேக கேள்விகள் இருந்தன. என் பதில்களில் திருப்தி அடைந்தவராக எனக்கும் என் பார்ட்னருக்கும் காலை உணவை தயார்படுத்தும்படி தனது மனைவியிடம் சொன்னார்.
ஓரிரு நாட்களுக்குப் பிறகு நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம், ஆனால் நான் ஹங்கேரி நாட்டை சேர்ந்தவளாக இருந்ததால் செக்கோஸ்லோவாகியாவை விட்டு வெளியேறும்படி நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த சம்பவத்துக்குப் பிறகுதான் டீபார் ஹாஃப்னர் தன்னை மணந்துகொள்ளும்படி கேட்டார். நாங்கள் திருமணம் செய்துகொண்டோம், பிறகு அவரது பெற்றோரின் வீடே என் வீடானது.
தீவிரமடைந்த துன்புறுத்தல்
நாங்கள் இருவரும் தொடர்ந்து பிரசங்க வேலையை செய்துவந்தோம்; அதோடுகூட அமைப்பு சம்பந்தப்பட்ட வேலையையும் டீபார் செய்ய வேண்டியிருந்தது. 1938, நவம்பர் மாதத்தில், ஹங்கேரியப் படையினர் எங்கள் நகரத்திற்குள் நுழைவதற்கு சில நாட்களே இருந்த சமயத்தில் எங்கள் மகன் ஜூனியர் டீபார் பிறந்தான். ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் மேகங்கள் திரண்டு வந்தன. செக்கோஸ்லோவாகியாவின் பெரும் பகுதியை ஹங்கேரி கைப்பற்றியது; அப்படி கைப்பற்றப்பட்ட பகுதிகளிலிருந்த யெகோவாவின் சாட்சிகளுக்கு துன்புறுத்தல் அதிகரித்தது.
1942, அக்டோபர் 10-ம் தேதி டெப்ரட்சென் என்ற இடத்தில் சில சகோதரர்களை சந்திக்க டீபார் சென்றிருந்தார். ஆனால் இந்த சமயம் அவர் திரும்பி வரவில்லை. என்ன நடந்தது என்பதை பின்னர் அவர் என்னிடம் சொன்னார். சந்திக்க திட்டமிட்டிருந்த பாலத்தில், சகோதரர்களுக்குப் பதிலாக வேலையாட்கள் போல உடையணிந்த சில போலீசார் இருந்தார்கள். கடைசியாக வரவிருந்த என் கணவருக்காகவும் பால் நாஜ்பால் என்பவருக்காகவும் அவர்கள் காத்திருந்தார்கள். அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, லத்திக் கம்பால் அவர்களது பாதங்களில் அடித்தார்கள். வலி தாங்காமல் மயங்கி விழும்வரை அடித்தார்கள்.
பிறகு ஷூக்களை மாட்டிக்கொண்டு நிற்கும்படி கட்டளையிட்டார்கள். தாங்க முடியாத வலியோடு, ரயில் நிலையத்துக்கு செல்லும்படி வற்புறுத்தப்பட்டார்கள். பார்க்கக்கூட முடியாதளவுக்கு தலை முழுவதும் கட்டுப்போடப்பட்ட மற்றொருவரை போலீசார் அழைத்து வந்தார்கள். அவர்தான் சகோதரர் ஆன்ட்ராஷ் பில்லிங்க்; இவரும் சகோதரர்களை சந்திக்கச் சென்றவர். புடாபெஸ்ட்டுக்கு அருகிலிருந்த ஆலாக் என்ற இடத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்படுவதற்காக என் கணவர் ரயிலில் அழைத்துச் செல்லப்பட்டார். அவரது அடிபட்ட பாதங்களைக் கண்ட காவலாளிகளில் ஒருவன், “சிலர் எவ்வளவு கொடூரமாக நடந்துகொள்கிறார்கள்! கவலைப்படாதே, காயத்தையெல்லாம் நாங்கள் சரிப்படுத்திவிடுகிறோம்” என கிண்டலாக சொன்னான். பின்பு வேறு இரண்டு காவலாளிகள் அவருடைய பாதங்களில் அடிக்க ஆரம்பித்தார்கள், நாலா புறமும் இரத்தம் தெறித்தது. சில நிமிடங்களுக்குள் அவர் நினைவிழந்துவிட்டார்.
அதற்கு அடுத்த மாதம் டீபாரும் 60-க்கு மேற்பட்ட சகோதர சகோதரிகளும் விசாரணை செய்யப்பட்டார்கள். சகோதரர்கள் ஆன்ட்ராஷ் பார்ட்டா, டேனஷ் ஃபால்யுவேகி, யாநாஷ் கான்ராட் ஆகியோரை தூக்கிலிடும்படி தீர்ப்பளிக்கப்பட்டது. சகோதரர் ஆன்ட்ராஷ் பில்லிங்க்குக்கு ஆயுள் தண்டனையும், என் கணவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. அவர்கள் செய்த குற்றம்? அரசாங்கத்தைக் கவிழ்க்க முயன்றவர்கள், இராணுவ சேவை செய்ய மறுப்பவர்கள், வேவுகாரர்கள், மகா புனித சர்ச்சை தூஷிப்பவர்கள் என்றெல்லாம் அரசு தரப்பு வழக்குரைஞர் அவர்கள் மீது குற்றஞ்சாட்டினார். முன்னர் விதிக்கப்பட்ட மரணதண்டனைத் தீர்ப்பு பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
என் கணவரின் அடிச்சுவட்டில்
டெப்ரட்செனில் சகோதரர்களை சந்திக்க டீபார் சென்று இரண்டு நாட்கள் ஆகியிருந்தன. விடியற்காலை ஆறு மணிக்கு முன்பே எழுந்து துணிமணிகளை அயர்ன் செய்துகொண்டிருந்தேன். திடீரென கதவு பலமாக தட்டப்பட்டது. ‘இங்கே வந்துவிட்டார்கள்’ என நினைத்தேன். ஆறு போலீசார் உள்ளே வந்தார்கள், வீட்டை சோதனையிட தாங்கள் அனுமதி பெற்றிருப்பதாக சொன்னார்கள். எங்கள் மூன்று வயது மகன் உட்பட வீட்டிலிருந்த அனைவரும் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அன்றே எங்களை ஹங்கேரியிலிருந்த பெட்டர்வாஷாரா என்ற சிறைக்கு மாற்றினார்கள்.
அங்கு சென்றதும் எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது, மற்ற கைதிகளிடமிருந்து என்னை தனித்து வைத்தார்கள். எனக்கு குணமானதும் என் அறையில் இருந்த இரண்டு காவலாளிகள் என்னை முன்னிட்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். “நாம் அவளை சுட்டுக் கொல்ல வேண்டும்! நான் சுடுகிறேன்!” என்றான் ஒருவன். அப்படி சுடுவதற்கு முன்பாக என் உடல்நிலை எப்படியிருக்கிறதென அறிந்துகொள்ள நினைத்தான் மற்றொருவன். எனக்கு உயிர்ப் பிச்சை அளிக்கும்படி அவர்களிடம் கெஞ்சினேன். கடைசியில் அவர்கள் என் அறையிலிருந்து சென்றுவிட்டார்கள், எனக்கு உதவியதற்காக யெகோவாவுக்கு நன்றி செலுத்தினேன்.
விசாரணை நடத்த காவலாளிகள் விசேஷ முறையைக் கையாண்டார்கள். என்னை தரையில் குப்புறப் படுக்க சொன்னார்கள், என் வாயில் சாக்ஸுகளை திணித்தார்கள், என் கைகால்களை கட்டினார்கள், இரத்தம் வரும் வரை என்னை சாட்டையால் விளாசினார்கள். காவலாளிகளில் ஒருவன் களைத்துவிட்டதாக சொன்னபோதுதான் அடிப்பதை அவர்கள் நிறுத்தினார்கள். என் கணவர் கைது செய்யப்பட்ட அந்த நாளில் யாரை சந்திப்பதற்காக சென்றார் என என்னிடம் கேட்டார்கள். நான் பதில் சொல்லவில்லை, எனவே மூன்று நாட்களுக்கு தொடர்ந்து என்னை அடித்தார்கள். நான்காம் நாள் என் மகனை என் அம்மாவிடம் கொண்டு விட்டு வருவதற்கு எனக்கு அனுமதி கிடைத்தது. நடுநடுங்கும் குளிரில் புண்ணாகியிருந்த என் முதுகில் என் குழந்தையை சுமந்துகொண்டு ரயில் நிலையத்திற்கு சுமார் 13 கிலோமீட்டர் நடந்தேன். அங்கிருந்து வீட்டிற்கு ரயிலில் பயணித்தேன், ஆனால் அன்றே முகாமிற்கு திரும்ப வேண்டியிருந்தது.
புடாபெஸ்ட்டில் இருந்த சிறையில் ஆறு வருட காவல் தண்டனை எனக்கு விதிக்கப்பட்டது. அங்கு வந்தபோது டீபாரும் அங்கிருப்பதை அறிந்தேன். கம்பி வேலி வழியாக சில நிமிடங்களே பேசிக்கொள்ள எங்களுக்கு அனுமதி கிடைத்தபோதிலும் அளவிலா ஆனந்தம் அடைந்தோம்! யெகோவாவின் அன்பை இருவருமே ருசித்தோம், இப்படிப்பட்ட பொன்னான நேரங்கள் எங்களைப் பலப்படுத்தின. மீண்டும் நாங்கள் சந்திப்பதற்கு முன்பு இருவருமே பயங்கரமான பரீட்சைகளை எதிர்ப்பட்டோம், தொடர்ந்து மயிரிழையில் உயிர்தப்பி வந்தோம்.
ஒரு சிறையிலிருந்து மறு சிறைக்கு
சிறையில் சுமார் 80 சகோதரிகளை ஓர் அறையில் அடைத்து வைத்திருந்தார்கள். ஆன்மீக உணவுக்காக ஏங்கினோம், ஆனால் வெளியிலிருந்து எதையும் சிறைக்குள் கொண்டு வருவது முடியாத காரியமாகவே தோன்றியது. எனினும் சிறைக்குள்ளிருந்தே எங்களால் எதையேனும் பெற முடிந்ததா? நாங்கள் என்ன செய்தோம் என்பதை சொல்கிறேன். சிறை க்ளார்க்குகளின் கிழிந்த சாக்ஸுகளை தைத்துக் கொடுக்க நானாகவே முன்வந்தேன். சிறை நூலகத்திலுள்ள புத்தக பட்டியலில் பைபிளின் பதிவு எண்ணை தயவுசெய்து தெரிவிக்கும்படி ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதி அதை ஒரு சாக்ஸினுள் போட்டேன். எந்த சந்தேகமும் ஏற்படாதிருப்பதற்காக இன்னும் இரண்டு புத்தகங்களின் பதிவு எண்களையும் அதில் கேட்டு எழுதினேன்.
மறுநாள் க்ளார்க்குகள் இன்னும் அநேக சாக்ஸுகளை என்னிடம் அனுப்பியிருந்தார்கள். அவற்றில் ஒன்றில் எனக்கு பதிலும் கிடைத்தது. நான் ஒரு காவலாளியிடம் அந்த பதிவு எண்களைக் கொடுத்து அந்த புத்தகங்களை கொண்டு வந்து தருமாறு கேட்டேன். பைபிள் உட்பட அந்த புத்தகங்களைப் பெற்றபோது எவ்வளவாய் சந்தோஷப்பட்டோம்! மற்ற புத்தகங்களை வாரா வாரம் மாற்றிக்கொண்டே இருந்தோம், ஆனால் பைபிளை மட்டும் கொடுக்கவில்லை. அதைப் பற்றி காவலாளி விசாரித்த போது, “அது பெரிய புத்தகம், அதுவும் இல்லாமல் எல்லாரும் அதை வாசிக்க வேண்டும் என்கிறார்கள்” என்றே எப்போதும் பதிலளித்தோம். இப்படியாக எங்களால் பைபிளை வாசிக்க முடிந்தது.
ஒருநாள் அதிகாரி ஒருவர் என்னை அவருடைய அலுவலகத்துக்கு அழைத்தார். அவர் என்னிடம் ரொம்பவே பவ்வியமாக நடந்துகொள்வதுபோல் தோன்றியது.
“மிஸஸ். ஹாஃப்னர், உங்களிடம் ஒரு சந்தோஷமான செய்தியை சொல்லப் போறேன். நீங்கள் வீட்டுக்குப் போகலாம். நாளைக்கே போகலாம். ரயில் இருந்தால் இன்றேகூட போகலாம்” என சொன்னார்.
“ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது” என பதிலளித்தேன்.
“ரொம்பவே சந்தோஷமாகத்தான் இருக்கும். உங்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது, அவனை வளர்க்க வேண்டுமென்ற ஆசையும் இருக்கிறது என்பது தெரியும். இந்த கடிதத்தில் மட்டும் கையெழுத்துப் போட்டுவிடுங்கள்” என சொன்னார்.
“என்ன கடிதம்?” என கேட்டேன்.
“அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள். சும்மா கையெழுத்துப் போட்டுவிட்டு, நீங்கள் போகலாம்” என வற்புறுத்தினார். “நீங்கள் வீட்டுக்குப் போனதும் உங்கள் இஷ்டப்படி எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் இனிமேலும் ஒரு யெகோவாவின் சாட்சி இல்லை என்று நீங்கள் இப்போது கையெழுத்துப் போட வேண்டும்” என சொன்னார்.
நான் பின்வாங்கினேன், அதை செய்ய உறுதியாக மறுத்தேன்.
“அப்படியென்றால் நீங்கள் இங்கேயே சாக வேண்டியதுதான்!” என கோபத்தில் கூச்சல் போட்டு, என்னை அனுப்பிவிட்டார்.
1943, மே மாதத்தில் புடாபெஸ்ட்டிலிருந்த மற்றொரு சிறைக்கு மாற்றப்பட்டேன், பின்னர் மாரியானாஸ்ட்ரா என்ற கிராமத்திற்கு அனுப்பப்பட்டேன்; அங்கு, சுமார் 70 கன்னியாஸ்திரீகள் இருந்த மடத்தில் தங்கினோம். பசியையும் பல கஷ்டங்களையும் அனுபவித்த போதிலும் எங்கள் நம்பிக்கையைப் பற்றி அவர்களுடன் பகிர்ந்துகொள்ள ஆர்வமாக இருந்தோம். நாங்கள் சொன்ன செய்தியிடம் ஒரு கன்னியாஸ்திரீ உண்மையிலேயே ஆர்வம் காட்டினார், “இவை அருமையான போதனைகள். இப்படி எதையும் நான் இதுவரை கேட்டதே இல்லை. தயவுசெய்து எனக்கு இன்னும் அதிகமாக சொல்லிக் கொடுங்கள்” என சொன்னார். புதிய உலகத்தையும் அதில் அருமையான வாழ்க்கையையும் பற்றி அவரிடம் நாங்கள் சொன்னோம். இப்படி நாங்கள் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் மதர் சுப்பீரியர் அங்கு வந்தார். ஆர்வம் காட்டிய அந்தக் கன்னியாஸ்திரீ உடனடியாக இழுத்துச் செல்லப்பட்டு, அவருடைய உடைகள் களையப்பட்டு, கண்மண் தெரியாமல் சாட்டையால் அடிக்கப்பட்டார். மீண்டும் அவரை நாங்கள் சந்தித்தபோது “என்னைக் காப்பாற்றி இங்கிருந்து எப்படியாவது நான் வெளியேறுவதற்கு உதவும்படி தயவுசெய்து யெகோவாவிடம் ஜெபியுங்கள். நானும் உங்களில் ஒருத்தியாக வேண்டும்” என கெஞ்சினார்.
அடுத்ததாக நாங்கள் டேன்யூப் நதிக்கரை மீதிருந்த ஒரு நகரத்தில் உள்ள கோமாரோம் என்ற பழைய சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டோம்; இது புடாபெஸ்ட்டுக்கு மேற்கே சுமார் 80 கிலோமீட்டர் தூரத்திலிருந்தது. எந்த வசதியுமில்லாத படுமோசமான சிறைச்சாலை அது. அநேக சகோதரிகளைப் போலவே நானும் டைஃபஸ் ஜுரத்தால் பாதிக்கப்பட்டேன், இரத்த இரத்தமாக வாந்தியெடுத்து ரொம்பவே பலவீனமாகிவிட்டேன். எங்களுக்கு எந்த மருந்தும் கொடுக்கப்படவில்லை, அவ்வளவுதான் சாகப் போகிறேனென நினைத்தேன். அப்போது அலுவலகத்தில் வேலை செய்ய முடிந்த ஒருவருக்காக அதிகாரிகள் தேடிக் கொண்டிருந்தார்கள். சகோதரிகள் என்னை சிபாரிசு செய்தார்கள். அதனால் எனக்கு ஓரளவு மருந்து கொடுக்கப்பட்டது, சுகமடைந்தேன்.
குடும்பத்துடன் ஒன்று சேருதல்
கிழக்கிலிருந்து சோவியத் துருப்புகள் நெருங்கி வந்தபோது மேற்கே செல்ல நாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டோம். நாங்கள் அனுபவித்த கொடுமைகளை எல்லாம் விவரிக்க நேரமே போதாது. அநேக முறை நான் மரணத்தின் வாசலுக்கே சென்றுவிட்டேன், ஆனால் யெகோவாவின் காக்கும் கரங்களால் காப்பாற்றப்பட்டேன். போர் முடிந்தபோது நாங்கள் செக் நாட்டில் டாபார் என்ற நகரத்தில் இருந்தோம்; இது ப்ராக்கிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. லுசென்யெட்ஸிலிருந்த எங்கள் வீட்டுக்குப் போய்ச் சேர எனக்கும் என் நாத்தனார் மாக்டாலேனாவுக்கும் இன்னும் மூன்று வாரங்கள் எடுத்தன; நாங்கள் 1945, மே 30-ம் தேதி வீடு திரும்பினோம்.
என் மாமியாரும் என் அருமை மகன் டீபாரும் முற்றத்தில் இருப்பதை தூரத்திலேயே பார்த்துவிட்டேன். என் கண்கள் குளமாயின; “டீபிக்கி!” என குரல் கொடுத்தேன். அவன் ஓடி வந்து தாவிய போது கைகளில் அள்ளி எடுத்தேன். “அம்மா நீங்க என்னை விட்டுட்டு போக மாட்டீங்க தானே?” வாய்திறந்து அவன் முதலில் இதைத்தான் என்னிடம் கேட்டான், அதை என்னால் மறக்கவே முடியாது.
என் கணவர் டீபாரிடமும் யெகோவா இரக்கத்தைக் காட்டினார். புடாபெஸ்ட்டிலிருந்த சிறையிலிருந்து சுமார் 160 சகோதரர்களுடன் பார் என்ற இடத்திலிருந்த உழைப்பாளர் முகாமிற்கு அனுப்பப்பட்டார். அவர்கள் அநேக முறை மரணத்தின் வாசலுக்கே சென்றிருக்கிறார்கள், ஆனால் ஒரு தொகுதியாக அவர்கள் காப்பாற்றப்பட்டார்கள். நான் விடுதலை ஆவதற்கு சுமார் ஒரு மாதம் முன்பு 1945, ஏப்ரல் 8-ம் தேதி டீபார் வீடு திரும்பியிருந்தார்.
போருக்குப் பிறகு, செக்கோஸ்லோவாகியாவில் நடந்த கம்யூனிஸ ஆட்சியின் கீழ் அடுத்த 40 வருடங்களுக்கு சோதனைகளை சகிக்க யெகோவாவின் பலம் தொடர்ந்து எங்களுக்கு தேவைப்பட்டது. மீண்டும் டீபார் நீண்ட கால சிறைத் தண்டனை பெற்றார், அவரின்றி தனியாக எங்கள் மகனை வளர்க்கும் பொறுப்பு என்மீது விழுந்தது. அவர் விடுதலை பெற்றதும் பயணக் கண்காணியாக சேவை செய்தார். 40 வருட கால கம்யூனிஸ ஆட்சியில் கிடைத்த எல்லா சந்தர்ப்பங்களிலும் எங்கள் விசுவாசத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டோம். சத்தியத்தைக் கற்றுக்கொள்ள அநேகருக்கு உதவினோம். அவர்கள் எங்கள் ஆன்மீக பிள்ளைகள் ஆனார்கள்.
1989-ல் மத சுயாதீனத்தைப் பெற்றபோது ஒரே மகிழ்ச்சி! அதற்கு அடுத்த வருடம், நீண்ட காலத்திற்குப் பிறகு எங்கள் நாட்டில் நடைபெற்ற முதல் மாநாட்டில் கலந்துகொண்டோம். பல பத்தாண்டுகளாக உத்தமத்தில் உறுதியாய் நிலைத்திருந்த ஆயிரக்கணக்கான சகோதர சகோதரிகளைக் கண்டபோது அவர்கள் எல்லாருக்குமே யெகோவா மகா பலத்தின் ஊற்றாக இருந்திருப்பதை அறிந்தோம்.
என் அருமை கணவர் டீபார் 1993, அக்டோபர் 14-ம் தேதி கடவுளுக்கு உண்மையுள்ளவராக மரித்தார், ஸ்லோவாக்யாவிலுள்ள ஷிலினா என்ற நகரத்தில் என் மகன் இருக்குமிடத்திற்கு அருகே இப்போது நான் வசிக்கிறேன். உடலில் இப்போது தெம்பில்லை, ஆனால் யெகோவாவுடைய வல்லமையால் என் ஆவி திடகாத்திரமாக இருக்கிறது. அவர் தரும் பலத்தால் இந்த உலகத்தில் எந்த சோதனையையும் நிச்சயம் சகிக்க முடியுமென நம்புகிறேன். மேலும் யெகோவாவின் தகுதியற்ற தயவால் நித்தியமாய் வாழும் நாளை எதிர்நோக்கி இருக்கிறேன்.
[பக்கம் 20-ன் படம்]
விட்டுப் பிரிய நேர்ந்த என் மகன் டீபார் (4 வயதில்)
[பக்கம் 21-ன் படம்]
பார் என்ற இடத்தில் வேறு சகோதரர்களுடன் என் கணவர் டீபார்
[பக்கம் 22-ன் படம்]
ப்ரனோ என்ற இடத்தில் 1947-ல் டீபாருடனும் என் நாத்தனார் மாக்டாலேனாவுடனும்
[பக்கம் 23-ன் படங்கள்]
அநேக முறை நான் மரணத்தின் வாசலுக்கே சென்றுவிட்டேன், ஆனால் யெகோவாவின் காக்கும் கரங்களால் காப்பாற்றப்பட்டேன்