உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w05 2/15 பக். 10-11
  • சபா தீவுக்கு ஒரு பயணம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சபா தீவுக்கு ஒரு பயணம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • துணை தலைப்புகள்
  • சபாவை சுற்றிப் பார்த்தல்
  • சபாவில் வீட்டுக்கு வீடு ஊழியம்
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
w05 2/15 பக். 10-11

சபா தீவுக்கு ஒரு பயணம்

டச் தீவான சபா, முன்பு கரீபியன் கடலில் செல்வத்தைத் தேடி வந்த கடற்கொள்ளையரின் கோட்டையாகத் திகழ்ந்தது. பியூர்டோ ரிகோ நாட்டிற்கு கிழக்கே 240 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்தக் குட்டித் தீவில் 1,600 பேர் குடியிருக்கிறார்கள், அதில் ஐந்து பேர் யெகோவாவின் சாட்சிகள். அஞ்சா நெஞ்சம் படைத்த இந்த ஐந்து பேரும் செல்வத்தைவிட அதிக மதிப்புமிக்க ஒன்றைத் தேடுகிறார்கள். அதாவது, ‘நித்திய ஜீவனுக்கான சரியான மனச்சாய்வுடைய’ நபர்களை ஊக்கமாகத் தேடுகிறார்கள்.​—⁠அப்போஸ்தலர் 13:48, NW.

1952, ஜூன் 22-⁠ம் தேதி யெகோவாவின் சாட்சிகளுக்குச் சொந்தமான சிபியா என்ற 59 அடி உயரமுள்ள பாய்மரக் கப்பல், சபாவுக்கு அருகே நங்கூரமிட்டு நின்றபோது கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தி முதன்முதலில் அத்தீவை எட்டியது. (மத்தேயு 24:14) மிஷனரிகளான கஸ்ட் மாகியும், ஸ்டான்லி கார்டரும் த லாடர் என்றழைக்கப்படும் 500-⁠க்கும் மேற்பட்ட கல் படிக்கட்டுகளைக் கடந்து சபாவின் தலைநகரான த பாட்டம் கிராமத்தை அடைந்தார்கள்.a நூற்றாண்டுகளாகப் புழக்கத்திலிருந்த இந்தக் குறுகிய பாதையே இந்தத் தீவு வாசிகளைப் போய் சந்திப்பதற்கான ஒரே வழியாக இருந்தது.

சபா தீவில் நடைபெறும் கிறிஸ்தவ பிரசங்க வேலையைப் பற்றிய முதல் அதிகாரப்பூர்வ அறிக்கை 1966 யெகோவாவின் சாட்சிகளுடைய இயர் புக்கில் வெளிவந்தது. அதன்படி, அன்று அத்தீவில் ஒரே ஒரு சாட்சி மட்டுமே சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்தார். பிற்பாடு, கனடாவிலிருந்து வந்து குடியேறிய ஒரு குடும்பத்தார் அநேக வருடங்களாக ராஜ்ய நற்செய்தியை அங்கே பிரசங்கித்து வந்தனர். சமீபத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த ரஸல், கேத்தி என்ற வயதான தம்பதியர் சபாவுக்குச் சென்று பிரசங்க வேலையில் பங்கெடுத்தனர். அவர்களுடைய அனுபவத்தைக் கேளுங்களேன்.

சபாவை சுற்றிப் பார்த்தல்

நானும் என் மனைவியும் விமானத்தில் சபா தீவுக்கு வந்து இறங்கினோம். கிட்டத்தட்ட 1990-கள் முழுவதும் இத்தீவில் ஒரேவொரு சாட்சியாக இருந்த ரானால்ட் என்ற சகோதரரின் விருந்தாளிகளாக நாங்கள் வந்தோம். எங்களுக்காக அவர் விமான நிலையத்தில் காத்திருந்தார். காய்கறிகள் அடங்கிய ஒரு சிறிய பெட்டியை அவருக்குப் பரிசளித்தோம். வர்த்தக ரீதியாக இங்கு விவசாயம் நடைபெறாததால் அப்பரிசை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். சிறிய டிரக் ஒன்றில் ஏறி மவுண்ட் சீநெரி என்ற செயலற்ற எரிமலையின் உச்சியை நோக்கி மெதுவாகச் சென்றோம்.

ஹெல்ஸ் கேட் கிராமத்தில் டிரக்கை நிறுத்தி, பொது அறிவிப்பு பலகையில் ஞாயிற்றுக்கிழமை பொதுப் பேச்சுக்கான அழைப்பிதழ் ஒட்டப்பட்டிருக்கிறதா என்று ரானால்ட் பார்த்தார். அது இருந்ததைப் பார்த்ததும் எங்களுக்கு மகிழ்ச்சி. மறுபடியும் அவர் டிரக்கில் ஏறியவுடன், இத்தீவின் மிகப் பெரிய கிராமமான வின்ட்வார்ட்சைடை நோக்கி மலை மீது பயணிக்கத் துவங்கினோம். கண்ணுக்கு விருந்தளிக்கும் இக்கிராமம் அந்தத் தீவில் காற்று வீசும் திசையில், கடல் மட்டத்திலிருந்து 1,300 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ரானுடைய [ரானால்டின்] வீட்டின் ‘கேட்’டைத் தாண்டி உள்ளுக்குள் செல்லும்போதே, முன்பக்கத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றம் என பல வர்ணங்களில் எழுதப்பட்டிருந்ததைக் கவனித்தோம்.

எந்த கேள்வியை கேட்க சபா தீவுக்கு நாங்கள் வந்தோமோ அதை மதிய உணவின் போது ரானிடம் கேட்டேன்: “ராஜ்ய அறிவிப்பாளராகச் சபா தீவுக்கு எப்படி வந்தீர்கள்?”

ரான் இவ்வாறு பதிலளித்தார்: “யெகோவாவின் சாட்சிகளுடைய பியூர்டோ ரிகோ கிளை அலுவலகக் கட்டுமானப் பணி 1993-⁠ல் முடிவடைந்தது, அதன் பிறகும் ஒரு அயல்நாட்டில் ஊழியம் செய்யவே நானும் என் மனைவியும் விரும்பினோம். முன்னர் ஒருமுறை, வேறொரு பயனியர் தம்பதியினருடன் சபாவுக்கு வந்திருந்தபோது, இங்கே 1,400 பேர் குடியிருப்பதையும் ஒரு சாட்சிகூட இல்லாதிருப்பதையும் அறிந்தோம். அதனால் பியூர்டோ ரிகோ கிளை அலுவலகக் குழுவிடம் சபா தீவுக்குச் செல்வதைக் குறித்து பேசினோம்.

“காரியங்கள் எல்லாம் நல்ல விதமாக நடந்தன, கடைசியில் சபாவுக்குக் குடிமாற அனுமதியும் கிடைத்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் என் மனைவி நோய்வாய்ப்பட்டு உடல்நலம் குன்றியபோது வருத்தத்துடன் கலிபோர்னியாவுக்குத் திரும்பினோம். அவள் இறந்த பிறகு மீண்டும் சபாவுக்கே வந்தேன். ஏனென்றால் ஒரு வேலையை ஆரம்பித்த பிறகு அதை பாதியிலே விட்டுவிடுவது எனக்குப் பிடிக்கவே பிடிக்காது.”

சபாவில் வீட்டுக்கு வீடு ஊழியம்

ரானுடைய வீடு நூறு ஆண்டுகள் பழமையானது; அதன் ஹால்தான் ராஜ்ய மன்றமாகவும் பயன்படுத்தப்​படுகிறது.b காலை உணவை ருசித்துக் கொண்டும், ஊழியத்திற்கு தயாராகிக் கொண்டும் இருந்தபோது, மழை மேகம் ஒன்று சட்டென்று மழையைப் பொழிந்து கூரையில்லா சமையல் அறையை நனைத்தது. காலை உணவுக்குப் பின், மேகங்கள் கலைந்து சென்றன, நாங்களும் த பாட்டம் என்ற ஊரில் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்ய சென்றோம். ஒவ்வொரு வீட்டிலும், ரான் வீட்டுக்காரருடைய பெயரைச் சொல்லி அழைத்தார். அங்கு சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்றை மையமாக வைத்து அவர்களுடன் உரையாடினோம். பெரும்பாலான மக்களுக்கு ரானையும் அவருடைய ஊழியத்தையும் பற்றி நன்றாக தெரிந்திருந்தது. பலர் உடனடியாக பைபிள் பிரசுரங்களை ஏற்றுக்கொண்டனர்.

கிராமவாசிகளை நன்கு தெரிந்து வைத்துக்கொள்ளாவிட்டால், ராஜ்ய செய்திக்கு ஆர்வம் காட்டுகிறவர்களின் வீட்டு விலாசத்தை எழுதி வைத்துக் கொள்வது ஒரு பெரிய சவாலாக இருக்கும். ஏன்? ஏனென்றால் “எல்லா வீடுகளுக்கும் ஒரே நிற வர்ணம் பூசப்பட்டிருக்க வேண்டும் என்பது சட்டம்” என்று ரான் பதிலளிக்கிறார். அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. கண்ணை சுழலவிட்டபோது சபாவில் உள்ள எல்லா வீடுகளும் வெள்ளை நிறத்தில் சிவப்பு நிற கூரையோடு காட்சியளித்ததைக் கவனித்தேன்.

பைபிள் உரையாடலுக்குப் பின், ஞாயிற்றுக்கிழமை ராஜ்ய மன்றத்தில் நடக்கும் பொதுப் பேச்சிற்கு வரும்படி வீட்டுக்காரர்களை அழைத்தோம். ரான் அத்தீவில் இல்லாத சமயம் தவிர, மற்றபடி ஒவ்வொரு வாரமும் பொதுப் பேச்சைக் கொடுக்கிறார். தற்போது, சபாவில் 17 பைபிள் படிப்புகள் நடத்தப்படுகின்றன. 2004-⁠ல் கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்புக்கு 20 பேர் வந்திருந்தார்கள். வெகு குறைவான எண்ணிக்கையினரே வந்திருந்ததாகத் தோன்றினாலும், சபாவின் மொத்த ஜனத்தொகையில் அது ஒரு சதவீதமாகும்.

இரட்சிப்பைப் பற்றிய கடவுளுடைய செய்தியோடு ஆட்களைப் போய் சந்திக்க உண்மையிலேயே யெகோவாவின் சாட்சிகள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். சபா போன்ற ஒரு சிறிய தீவாக இருந்தாலும் சரி, ஒரு பெரிய கண்டமாக இருந்தாலும் சரி, ‘சகல தேசத்தாரையும் சீஷராக்க’ வேண்டும் என்ற பொறுப்பை உண்மையாய் நிறைவேற்றி வருகிறார்கள்.​—⁠மத்தேயு 28:19, NW.

எங்களுடைய பயணம் முடிவுக்கு வந்தபோது வருத்தமாக இருந்தது. ரானிடம் பிரியாவிடை பெற்றுக்கொண்டு விமானத்தில் ஏறினோம். சபாவுக்கு பயணம் செய்ததும் த பாட்டம் கிராமத்திற்கு படிக்கட்டுகளில் ஏறிச் சென்றதும் எங்கள் மனதில் எப்போதும் பசுமையாக இருக்கும்!

[அடிக்குறிப்புகள்]

a அது ஒரு எரிமலைவாயின் அடிப்புறத்தில் இருந்ததாக கடற்கொள்ளையர் நினைத்ததால் அதை த பாட்டம் [அதாவது, அடிப்புறம்] என அழைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

b 2003, செப்டம்பர் 28-⁠ல் அமெரிக்காவில் உள்ள ஃப்ளாரிடாவிலிருந்து வந்த வாலண்டியர்கள் சபாவுக்குச் சென்று அருகில் இருந்த ஒரு கட்டடத்தை சீரமைத்தனர். இப்போது அக்கட்டடம் ராஜ்ய மன்றமாகப் பயன்படுத்தப்படுகிறது.

[பக்கம் 10-ன் தேசப்படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

பியூர்டோ ரிகோ

[பக்கம் 10-ன் படத்திற்கான நன்றி]

பின்னணி: www.sabatourism.com

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்