உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w05 4/15 பக். 3-4
  • அளவுக்கு மிஞ்சிய அறிவா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அளவுக்கு மிஞ்சிய அறிவா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • இதே தகவல்
  • அறிவைப் பெறுதல் இன்றும் என்றும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • மனிதவர்க்கத்துக்கு கடவுளைப் பற்றிய அறிவு தேவை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • அறிவில் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • தகவல் கவலை எதனால் ஏற்படுகிறது?
    விழித்தெழு!—1998
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
w05 4/15 பக். 3-4

அளவுக்கு மிஞ்சிய அறிவா?

மேற்கு ஆப்பிரிக்க கடற்கரையில் காற்று வாங்கியவாறு ஒரு மிஷனரி தம்பதியர் வானில் தவழும் வெள்ளி நிலாவைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது கணவர் கேட்டார்: “நிலாவைப் பற்றி மனிதனுக்கு எந்தளவு தெரியும், இன்னும் தெரிந்துகொள்ள வேண்டியது எவ்வளவு இருக்கிறது?”

அவருடைய மனைவி இவ்வாறு பதிலளித்தார்: “நாம் இப்போது நிலாவைப் பார்த்துக் கொண்டிருப்பது போல, பூமியையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். ஜனங்களுக்குப் பூமியைப் பற்றி எந்தளவு தெரியும், இன்னும் எந்தளவு தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! பூமி மட்டுமே சூரியனை சுற்றி வருவதில்லை, நம்முடைய முழு சூரிய மண்டலமும் நகர்ந்துகொண்டே இருக்கிறது. அப்படியென்றால், நாம் இந்த அண்டத்தில் இப்போது எந்த இடத்தில் இருக்கிறோமோ, அதே இடத்தில் மறுபடியும் ஒருவேளை இருக்கவே மாட்டோம்! சொல்லப்போனால், நாம் ஏற்கெனவே அறிந்திருக்கும் சூரியனையும் நட்சத்திரங்களையும் வைத்தே நாம் தற்போது இருக்கும் இடத்தை கணக்கிடுகிறோம். சில விஷயங்களைப் பற்றி நாம் நிறைய தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் ஒரு வகையில் பார்த்தால், நாம் சரியாக எங்கே இருக்கிறோம் என்பதைக்கூட அறியாமல் இருக்கிறோம்!”

இந்தக் கருத்துகளில் சில அடிப்படை உண்மை இருக்கிறது. இன்னும் எவ்வளவோ அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் தினம் தினம் புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்வது உண்மைதான். ஆனால் எவ்வளவுதான் கற்றுக் கொண்டாலும், நாம் விரும்பும் அளவுக்கு அநேக விஷயங்களை வேகவேகமாக கற்றுக்கொள்ள முடியாமல் போய்விடுகிறது.

இன்று புதுப்புது தகவல்களைப் பெற முடிகிறது, அதோடு தகவல்களைச் சேகரித்து வைக்கும் திறமையும் பெருமளவு அதிகரித்திருக்கிறது. தொழில்நுட்பத்தின் காரணமாக மொத்தத்தில் மனிதருடைய நினைவாற்றல் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. கம்ப்யூட்டர் ‘ஹார்டு டிஸ்கு’களின் சேகரிப்புத் திறன் அந்தளவு அதிகரித்திருப்பதால் அவற்றை விவரிக்க புதிய கணித பதங்களைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்திருக்கிறது. ஒரு சாதாரண சிடி-ரோமில் ஏராளமான தகவல்களைத் திரட்டி வைக்க முடியும்; அது 680 மெகாபைட்டுகள் அல்லது அதற்கும் அதிகமான கொள்ளளவு கொண்டது. ஒரு டிவிடி-யின் கொள்ளளவு, சிடி-ரோமின் கொள்ளளவைவிட கிட்டத்தட்ட ஏழு மடங்கு அதிகம்; அதைவிடவும் அதிக கொள்ளளவு கொண்ட டிவிடி-கள் கிடைத்து வருகின்றன.

தகவல் பரிமாற்றத்திற்கு நவீனகால மனிதன் பயன்படுத்தும் முறைகள் நம் அறிவுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. செய்தித்தாள்களையும், பத்திரிகைகளையும், புத்தகங்களையும் அச்சிடும் ரோட்டரி பிரஸ்கள் வியத்தகு வேகத்தில் இயங்குகின்றன. இன்டர்நெட்டை பயன்படுத்தும் ஒருவருக்கு, ஒரேவொரு ‘க்ளிக்’கில் எக்கச்சக்கமான தகவல்கள் கிடைத்துவிடுகின்றன. இது போல இன்னும் பல வழிகளில், ஒருவரால் கிரகிக்க முடியாதளவு வேகமாக தகவல்கள் பரிமாறப்படுகின்றன. தகவல்களின் அளவு சிலசமயங்களில் கடலுக்கு ஒப்பிட்டுப் பேசப்படுகிறது. அது அந்தளவு பரந்து விரிந்ததாக இருப்பதால், அதிலுள்ள தகவலெனும் தண்ணீர் முழுவதையும் குடிக்க முயற்சி செய்யாமல் அதில் வெறுமனே நீந்த கற்றுக்கொள்ள வேண்டும். அது வியக்க வைக்குமளவு பெரிதாக இருப்பதால், நாம் கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நாம் கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டியதற்கு மற்றொரு காரணம், அதிலுள்ள எல்லா தகவல்களுமே பிரயோஜனமானவை அல்ல. சொல்லப்போனால், அவற்றில் சில தேவையற்றவை. தெரிந்துகொள்ள வேண்டிய அளவுக்கு முக்கியமானவை அல்ல. அறிவு என்பது தகவல்களோடு தொடர்புடையது, அவை நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம், பயனுள்ளதாகவும் இருக்கலாம் பயனற்றதாகவும் இருக்கலாம் என்பதை நினைவில் வையுங்கள். உண்மையென அநேகர் நம்பும் விஷயங்கள் எப்போதுமே உண்மையாய் இல்லாதிருப்பது இன்னும் கொடுமை. மதிப்பிற்குரிய அதிகாரிகளின் அறிக்கைகள்கூட எத்தனையோ முறை தவறானவையாகவும் பொய்யானவையாகவும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, பூர்வ எபேசு பட்டணத்தில், அறிவுள்ள அதிகாரி என கருதப்பட்ட சம்பிரதியை சற்று சிந்தித்துப் பாருங்கள். அவன் இவ்வாறு கேட்டான்: ‘எபேசியருடைய பட்டணம் மகா தேவியாகிய அர்த்தெமிக்கும் வானத்திலிருந்து விழுந்த சிலைக்கும் விசாரணைக் கர்த்தாவென்பதை அறியாதவனுண்டோ?” (அப்போஸ்தலர் 19:35, 36, திருத்திய மொழிபெயர்ப்பு) இது அனைவரும் அறிந்தது, மறுக்க முடியாதது என பலர் சொன்னாலும், சிலை வானத்திலிருந்து விழுந்தது உண்மையல்ல. ஆகவே, ‘ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிறவைகளுக்கு’ விலகியிருக்கும்படி கிறிஸ்தவர்களை பைபிள் எச்சரிப்பதற்கு நல்ல காரணம் இருக்கிறது.​—⁠1 தீமோத்தேயு 6:⁠20.

தகவல்களை கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டியதற்கு முக்கிய காரணம், நம் வாழ்நாள் மிகவும் குறுகியதாய் இருப்பதுதான். நீங்கள் எந்த வயதினராய் இருந்தாலும் சரி, நீங்கள் ஆராய விரும்பும் அநேக துறைகள் நிச்சயமாகவே இருக்கும்; ஆனால் அனைத்தையும் ஆராய்ந்து முடிக்கும் வரை நீங்கள் வாழப்போவதில்லை என்பதையும் அறிவீர்கள்.

இந்த அடிப்படைப் பிரச்சினை என்றாவது மாறுமா? நீண்ட காலத்திற்கு அல்லது என்றென்றும் வாழத் துணை புரியும் ஏதாவது ஒரு துறையைச் சார்ந்த அறிவு இன்று இருக்கிறதா? அப்படிப்பட்ட அறிவு ஏற்கெனவே உள்ளதா? அப்படி இருந்தால், ஒவ்வொருவருக்கும் அது கிடைக்குமா? கிடைக்கும் எல்லா தகவல்களும் உண்மையான தகவல்களாக இருக்கும் ஒரு காலம் வருமா? ஆரம்பத்தில் குறிப்பிட்ட அந்த மிஷனரி தம்பதியர் இந்தக் கேள்விகளுக்கு திருப்திகரமான பதில்களை கண்டுபிடித்திருக்கிறார்கள். உங்களாலும் கண்டுபிடிக்க முடியும். தயவுசெய்து அடுத்த கட்டுரையை வாசித்துப் பாருங்கள்; என்றென்றும் அறிவை வளர்த்துக்கொண்டே இருப்பது எப்படி என்பதை அது விளக்கும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்