தகவல் கவலை எதனால் ஏற்படுகிறது?
“தகவல் கவலை ஏற்படுவதற்கு காரணம், நமக்கு புரிந்திருப்பதற்கும், புரிந்துகொள்ள வேண்டும் என்று நாம் நினைப்பதற்கும் மத்தியிலுள்ள தொடர்ந்து அதிகரிக்கும் இடைவெளிதான். அது செய்திக்கும் அறிவுக்கும் இடையிலுள்ள இடைவெளியினால் ஏற்படுகிறது; அவசியமானதை அல்லது தெரிந்திருக்க வேண்டியதை தகவல் நமக்கு தெரிவிக்காதபோது அது ஏற்படுகிறது.” இவ்வாறாக, தகவல் கவலை என்ற தன் புத்தகத்தில் ரிச்சர்ட் எஸ். வர்மன் எழுதினார். “நீண்ட காலமாக மக்கள், தாங்கள் எவ்வளவு அதிகமானதை அறியாமல் இருந்தார்கள் என்பதை உணராதிருந்தார்கள். ஏன், தாங்கள் எதை அறியவில்லை என்பதையே அறியாமல் இருந்தார்கள். ஆனால் இப்பொழுதோ தாங்கள் எதை அறியவில்லை என்பதை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள், அதுவே அவர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது.” இதன் விளைவாக, நம்மில் பெரும்பாலானோர் நாம் அறிந்திருப்பதைவிட அதிகத்தை அறியவேண்டும் என உணரலாம். நமக்கு கிடைக்கும் அபரிமிதமான தகவலிலிருந்து நாம் சிறு சிறு செய்திகளை எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அநேக சமயங்களில், அவற்றை வைத்து என்ன செய்வது என்று நிச்சயமில்லாமல் இருக்கிறோம். அதேசமயம், மற்றவர்கள் நம்மைவிட அதிகமானவற்றை அறிந்திருக்கிறார்கள் அல்லது புரிந்திருக்கிறார்கள் என்று ஒருவேளை நாம் நினைக்கலாம். அப்போதுதான் நாம் கவலை அடைகிறோம்!
‘செய்தி புகைப்பனியை’ உருவாக்கும் அளவுக்கு, அதிகமான தகவல் ஒரு மாசுப்பொருள் ஆகிவிட்டது என்று டேவிட் ஷெங்க் வாதாடுகிறார். “செய்தி புகைப்பனி, தடங்கல் ஏற்படுத்துகிறது; அமைதியான பொழுதே இல்லாமல் போகச்செய்கிறது, அதிகமாக தேவைப்படும் ஆழ்ந்த சிந்தனையை தடைசெய்கிறது. . . . அது நமக்கு அதிக கவலையை ஏற்படுத்துகிறது” என்றும் தொடர்ந்து கூறுகிறார்.
மிகவும் அதிகமான தகவல் அல்லது செய்திகளின் அபரிமிதம் கவலையைத் தூண்டலாம் என்பது உண்மையே. அதேசமயம், போதிய தகவல் நமக்கு கிடைக்கவில்லை என்றாலும்—அதைவிட இன்னும் மோசமாக தவறான தகவல் கிடைத்திருந்தாலும்—இதுவே உண்மை. ஆட்கள் நிறைந்த ஒரு அறையில் தனிமையை உணருவதைப்போல் அது இருக்கிறது. “நாம் தகவல் கடலில் மூழ்குகிறோம், ஆனால் அறிவு தாகத்தால் தவிக்கிறோம்” என மேகாடிரெண்ட்ஸ் என்ற தன்னுடைய புத்தகத்தில் ஜான் நேஸ்பிட் கூறுகிறார்.
கம்ப்யூட்டர் குற்றச்செயல் உங்களை எப்படி பாதிக்கலாம்
கம்ப்யூட்டர் குற்றச்செயலில் அதிகரிப்பு, கவலைக்கான மற்றொரு காரணமாகும். அதிநவீன தகவல் நெடுஞ்சாலையில் பாதுகாப்பும் கவலையின்மையும் என்ற தன்னுடைய ஆங்கில புத்தகத்தில் டாக்டர் ஃபிரெட்ரிக் பி. கோஹென் தன்னுடைய கவலையை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்: “கம்ப்யூட்டர் குற்றச்செயலால் ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய 500 கோடி டாலர் நஷ்டமடைவதாக எஃப்பிஐ [ஃபெடரல் பியூரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்] கணிக்கிறது. மேலும் வியக்கத்தக்க விதமாக, அது ஒரு பெரும் பிரச்சினையின் சிறுதுளி மட்டுமே. பேச்சுவார்த்தைகளில் ஆதிக்கம் செலுத்தவும், நற்பெயர்களை கெடுக்கவும், ராணுவ போராட்டங்களை வெல்லவும், கொலை செய்யவும்கூட கம்ப்யூட்டர் அமைப்புகளிலுள்ள குறுக்குவழிகளை சாதகமாக பயன்படுத்தியிருக்கின்றனர்.” இதோடுகூட, கம்ப்யூட்டர் ஆபாசத்தை சிறுபிள்ளைகள் அணுகக்கூடிய பிரச்சினைப் பற்றிய அதிகரித்துவரும் கவலையும் சேர்ந்துகொள்கிறது. அதிலும் ஒருவரின் அந்தரங்க விஷயங்களில் தலையிடுவதைப் பற்றி சொல்லவேண்டியதே இல்லை.
நெறிமுறையற்ற கம்ப்யூட்டர் பித்தர்கள், வேண்டுமென்றே வைரஸ்களை கம்ப்யூட்டர் அமைப்புகளில் நுழைத்து பேரழிவை ஏற்படுத்துகின்றனர். கம்ப்யூட்டர் திருடர்கள், மின்னணு அமைப்புகளை சட்டவிரோதமாக அணுகி ரகசிய தகவல்களை பெறுகின்றனர்; சிலசமயங்களில் பணத்தைக்கூட திருடுகின்றனர். தனிப்பட்ட கம்ப்யூட்டர்களை பயன்படுத்தும் ஆயிரக்கணக்கானோர்மீது இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மிகமோசமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். தொழில்துறை மற்றும் அரசாங்கத்திற்கு கம்ப்யூட்டர் குற்றச்செயல் ஒரு பெரும் அச்சுறுத்தலாகும்.
தகவலை முழுமையாக அறிந்திருப்பதன் தேவை
நாம் எல்லாருமே தகவலை முழுமையாக அறிந்திருக்க வேண்டும்; ஆனால், அதிக தகவலை அறிந்திருப்பதுதானே நம்மை உண்மையில் போதிக்காது. ஏனென்றால், தகவல்போல தோற்றமளிப்பவற்றில் அதிகமானவை நம்முடைய அனுபவத்திற்கு தேவையற்ற, வெறும் உண்மைகள் அல்லது முழுமை பெறா செய்திகளே. இந்நிகழ்ச்சியை, “தகவல் வெடிப்பு” என்று அழைப்பதற்கு மாறாக “செய்தி வெடிப்பு” அல்லது இன்னும் குற்றம்காணும் விதமாக சொல்லப்போனால் “தகவலற்ற வெடிப்பு” என்றும்கூட சொல்லலாம் என சிலர் குறிப்பிடுகின்றனர். பொருளாதார ஆய்வாளரான ஹேஸல் ஹேன்டர்சன் இவ்வாறுதான் இதை கருதுகிறார்: “தகவல் தன்னில்தானே அறிவொளியூட்டுவதில்லை. தகவல் தொடர்பு சாதனங்களின் ஆதிக்கம் நிறைந்த இந்தச் சூழலில், தவறான தகவல் எது, எதிர் தகவல் எது, அல்லது புரளி எது என்று நம்மால் தெளிவாக சொல்ல முடியாது. வெறும் தகவல்மீதே கவனம் செலுத்துவதானது, புதிய புரிந்துகொள்ளுதலுக்கான தேடுதலில் விளைவடைவதில்லை. மாறாக, முழுமை பெறா செய்தியின் அர்த்தமற்ற, கோடிக்கணக்கான சிறுசிறு துண்டுகளான சம்பந்தமில்லாத செய்திகள் வெகு ஏராளமாக அதிகரிப்பதில்தான் விளைவடைந்திருக்கிறது.”
என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா பிரசுரிப்பு குழுவின் தலைவரான ஜோஸப் ஜே. எஸ்போஸிடோ, அப்பட்டமான இந்த மதிப்பிடுதலை செய்கிறார்: “தகவல் சகாப்தத்தின் தகவலில் பெரும்பாலானவை பிரயோஜனமற்ற வெறும் இரைச்சலே. தகவல் வெடிப்பு என்பது பொருத்தமான பெயர்; நாம் எதையும் தெளிவாக கேட்பதை அந்த வெடிப்பு தடைசெய்கிறது. நம்மால் கேட்கமுடியவில்லை என்றால் அறிந்துகொள்ளவும் முடியாது.” ஆரன் ஈ. க்ளாப் தன்னுடைய ஆய்வைத் தெரிவிக்கிறார்: “பொது தகவல்தொடர்புகள் மூலம் கிடைக்கும் தகவல்களில், போலி தகவல்—ஏதோ ஒன்றை தெரிவிப்பதாக உரிமைபாராட்டி, ஆனால் உண்மையில் எதையுமே தெரிவிக்காத தகவல்—எவ்வளவு இருக்கின்றன என்பது ஒருவருக்குமே தெரியாது என நான் நினைக்கிறேன்.”
நீங்கள் பள்ளியில் படித்தவற்றில் அநேகம், பரீட்சையில் தேர்ச்சி பெறும் நோக்கத்துடன் உண்மைகளைப் பற்றி கற்றுக்கொள்வதாகவே இருந்ததை நீங்கள் நினைவுகூருவீர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அநேக சமயங்களில், பரீட்சைக்கு முன்புதான் உங்கள் மூளைக்குள் உண்மைகளை திணித்தீர்கள். சரித்திரப் பாடங்களில், தேதிகளின் நீண்ட ஒரு பட்டியலை புரியாமல் மனப்பாடம் செய்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அந்தத் தேதிகளில் மற்றும் நிகழ்ச்சிகளில் எவ்வளவை உங்களால் இப்போது நினைவுகூர முடியும்? நியாயமாக சிந்தித்து, நம்பகமான முடிவுகளை செய்ய அந்த உண்மைகள் உங்களுக்கு கற்பித்தனவா?
அதிகம் வைத்திருப்பது எப்போதுமே நல்லதா?
கவனமாக கட்டுப்படுத்தவில்லை என்றால், கூடுதலான தகவலைப் பெறுவதிலுள்ள ஈடுபாடு, நேரம், தூக்கம், உடல்நலம், மற்றும் பணமும்கூட அதிகமாக விரயமாவதில் விளைவடையலாம். அதிக தகவல், தெரிவு செய்வதற்கான கூடுதல் வாய்ப்புகளை கொடுத்தபோதிலும், கிடைக்கும் எல்லா தகவலையும் சரிபார்த்துவிட்டாரா அல்லது தெரிந்துகொண்டாரா என்று யோசிக்க வைப்பதால், அதைத் தேடுபவரை கவலைக்குள்ளாக்கலாம். “உண்மையில், அறிவொளியூட்டுவதற்கு தகவல் ஒரு வழிமுறை அல்ல. தகவல் தானே, நம் வாழ்க்கையின் அர்த்தத்தைப் பற்றிய எந்த விளக்கத்தையும் தருவதில்லை. ஞானத்தைப் பெறுவதோடு தகவலுக்கு அதிக தொடர்பில்லை. உண்மையில், மற்ற உடைமைகளைப் போலவே அதுவும் ஞானத்தைப் பெறுவதற்கு தடையாகக்கூட இருக்கலாம். நம்மிடம் தேவைக்கதிகம் இருக்கக்கூடும், அதைப்போலவே நாம் தேவைக்கு அதிகத்தையும் அறிந்திருக்கலாம்” என்று டாக்டர் ஹியூ மக்கை எச்சரிக்கிறார்.
அநேகமாக, இன்று கிடைக்கும் அதிகளவான தகவலால் மட்டுமே மக்கள் பாரமடைவதில்லை. ஆனால் அத்தகவலை புரிந்துகொள்ளத்தக்கதாக, அர்த்தமுள்ளதாக, உண்மையில் பிரயோஜனமுள்ளதாக ஆக்க முயற்சித்து தோல்வியடையும் போதும்கூட பாரமடைகின்றனர். நாம், “சிறு குப்பியை வைத்து மெயின் தண்ணீர் குழாயிலிருந்து தண்ணீர் குடிக்க முயலும் தாகமுள்ள ஒரு நபரைப்போல இருக்கலாம்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. “கிடைக்கக்கூடிய மிக அதிகளவான தகவலும், அநேக சமயங்களில் அது கொடுக்கப்படும் விதமும், அவற்றில் பெரும்பாலானவற்றை நமக்கு பிரயோஜனமற்றதாக ஆக்கிவிடுகின்றன.” ஆகவே, போதுமான தகவல் எது என்பதை, அதன் அளவை வைத்தல்ல, மாறாக அதன் தரத்தையும் தனிப்பட்ட விதமாக நமக்கு பிரயோஜனமாக இருப்பதையும் வைத்தே தீர்மானிக்க வேண்டும்.
செய்தி இடமாற்றத்தைப் பற்றியென்ன?
இன்று பொதுவாக இருக்கும் மற்றொரு கூற்று “செய்தி இடமாற்றம்” என்பதாகும். இது, மின்னணு சார்ந்த முறையில் தகவலை அனுப்புவதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. அதற்கென்று ஒரு முக்கிய இடம் இருந்தபோதிலும், முழுமையான கருத்தில் அது நல்ல தகவல்தொடர்பு முறை அல்ல. ஏன்? ஏனென்றால், ஆட்களிடம்தான் நாம் நல்ல பிரதிபலிப்பை காட்ட முடியும், இயந்திரங்களிடம் அல்ல. செய்தி இடமாற்றம் செய்யும்போது முகபாவங்களை பார்க்க முடியாது, கண் தொடர்பு இருக்காது அல்லது சரீர மொழியை கேட்க முடியாது; அவைதான், பேச்சுத்தொடர்பை உயிர்ப்பூட்டி, உணர்ச்சிகளின் பரிமாற்றத்திற்கு முக்கியமாக இருப்பவை. நேருக்கு நேர் பேசுகையில், உபயோகிக்கப்படும் வார்த்தைகளை அநேக சமயம் தெளிவுபடுத்தி அழகுபடுத்துபவை இவையே. புரிந்துகொள்வதற்கான மதிப்புமிக்க இந்த உதவிகள் எதுவுமே மின்னணு இடமாற்றத்தில் இருப்பதில்லை; அதிக பிரபலமாகிவரும் செல்லுலார் தொலைபேசியில்கூட இவை இல்லை. சில சமயங்களில், நேருக்கு நேர் பேசும்போதுகூட, பேசுபவருடைய மனதில் இருப்பதை முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. கேட்பவர், அவருடைய சொந்த பாணியில் வார்த்தைகளை கேட்டு, சிந்தித்து, அவற்றிற்கு தவறான அர்த்தம்கூட கொடுக்கலாம். பேசுபவரை பார்க்க முடியாதபோதோ இவ்வாறு நடப்பதற்கு இன்னும் எவ்வளவு அதிக சாத்தியம் இருக்கிறது!
கம்ப்யூட்டர் மற்றும் தொலைக்காட்சி பெட்டிக்கு முன்பாக சிலர் மணிக்கணக்காக நேரத்தை செலவழிப்பதால், சில சமயங்களில் அவர்கள் வீட்டிலுள்ள குடும்ப அங்கத்தினர்களே ஒருவருக்கொருவர் அந்நியர்களைப் போல இருக்கிறார்கள் என்பது வாழ்க்கையின் வருந்தத்தக்க ஓர் உண்மையாகும்.
தொழில்நுட்ப பயத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
“தொழில்நுட்ப பயம்” என்பது வெறுமனே “தொழில்நுட்பத்தைக் கண்டு பயப்படுவது;” கம்ப்யூட்டர், அதைப்போன்ற மற்ற மின்னணு சாதனங்களை உபயோகிப்பதில் உள்ள பயம். இது, தகவல் சகாப்தத்தால் உண்டாக்கப்பட்ட மிகப் பொதுவான கவலைகளில் ஒன்று என சிலரால் நம்பப்படுகிறது. கூட்டுறவு அச்சக வெளியீட்டின் அடிப்படையில், த கான்பரா டைம்ஸ் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரை, “ஜப்பானிய ஆபீஸர்கள் கம்ப்யூட்டர்களைக் கண்டு பயப்படுகின்றனர்” என்று அறிவித்தது. “[அவர்] அதிகாரமும் கௌரவமும் மிக்கவர். ஆனால் ஒரு கம்ப்யூட்டருக்கு முன்பாக அவரை உட்கார வைத்தால், பொட்டிப் பாம்பாகி விடுகிறார்” என்று ஒரு பெரிய ஜப்பானிய கம்பெனியின் எக்ஸிக்யூட்டிவ் டைரக்டரைப் பற்றி சொல்லப்பட்டது. 880 ஜப்பானிய கம்பெனிகளில் செய்யப்பட்ட ஒரு சுற்றாய்வின்படி, அவற்றின் ஆபீஸர்களில் 20 சதவீதத்தினரால் மட்டுமே கம்ப்யூட்டர்களை உபயோகிக்க முடிகிறது.
நியூ யார்க் நகரத்தில், பல மணிநேரத்திற்கு உள்ளூர் விமான நிலையங்களை செயலிழக்கச் செய்த, 1991-ல் ஏற்பட்ட தொலைபேசி அமைப்பு முடக்கம் போன்ற பேரழிவுகளால்தான் தொழில்நுட்ப பயம் தூண்டப்படுகிறது. 1979-ல், ஐக்கிய மாகாணங்களிலுள்ள த்ரீ மைல் தீவில் நடந்த அணுமின் நிலைய விபத்தைப் பற்றியென்ன? கம்ப்யூட்டரால் இயக்கப்பட்ட அபாய சமிக்கைகளை புரிந்துகொள்வதற்கே அந்நிலையத்தின் அதிகாரிகளுக்கு வேதனைமிக்க பல மணிநேரம் எடுத்தது.
இந்தத் தகவல் சகாப்தத்தின் தொழில்நுட்பம், மனிதவர்க்கத்தை எந்தளவுக்கு பாதித்திருக்கிறது என்பதைக் காட்டும் சில உதாரணங்களே இவை. “சமீபத்தில் நீங்கள் வங்கிக்கு சென்றிருந்தீர்களா? கம்ப்யூட்டர்கள் செயலிழந்துவிட்டன என்றால், அவற்றிலிருந்து கொஞ்சம் பணத்தையாவது உங்களால் பெற முடியுமா? சூப்பர் மார்க்கெட்டைப் பற்றியென்ன? அங்குள்ள கம்ப்யூட்டர்கள் வேலை செய்யவில்லை என்றால், அவர்களால் உங்களை வெளியே அனுப்ப முடியுமா?” என்ற சிந்தனையைத் தூண்டும் கேள்விகளை டாக்டர் ஃபிரெட்ரிக் பி. கோஹேன் தன்னுடைய புத்தகத்தில் கேட்கிறார்.
பின்வரும் கற்பனையான சூழ்நிலைகளில் ஒன்றையோ பலவற்றையோ நீங்களும்கூட அனுபவித்திருக்கலாம்:
• நீங்கள் பதிவுசெய்ய விரும்பும் ஒரு நிகழ்ச்சியை தெரிவுசெய்யும்போது, உங்களுடைய புதிய வீடியோ டேப்-ரிக்கார்டரில் (விசிஆர்) நிறைய பட்டன்கள் இருப்பதை கவனிக்கிறீர்கள். விசிஆரை இயக்குவதற்கு, ஒன்பது வயதான உங்கள் சொந்தக்கார பையனை நீங்கள் கூச்சத்துடன் அழைக்கிறீர்கள் அல்லது அந்நிகழ்ச்சியை பார்க்கவே வேண்டாமென முடிவு செய்கிறீர்கள்.
• உங்களுக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது. அருகிலுள்ள தானியங்கி பணம் வழங்கும் மிஷினிடம் செல்கிறீர்கள்; ஆனால், போன தடவை நீங்கள் அதை உபயோகித்தபோது, குழப்பமடைந்து தவறான பட்டன்களை அழுத்தினது திடீரென்று உங்கள் நினைவுக்கு வருகிறது.
• அலுவலகத்திலுள்ள தொலைபேசி மணி ஒலிக்கிறது. அந்த அழைப்பு தவறாக உங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டது. அடுத்த மாடியிலிருக்கும் உங்கள் மேலதிகாரிக்கு வந்தது அது. அந்த அழைப்பை மாற்றி அனுப்புவதற்கு ஓர் எளிய முறை இருக்கிறது; ஆனால் நீங்கள் அதை சரியாக அறிந்திராததால் ஆப்பரேட்டர் அதை செய்யும்படி விட்டுவிடுகிறீர்கள்.
• நீங்கள் புதிதாக வாங்கிய காரிலுள்ள டாஷ்போர்ட், ஒரு அதிநவீன ஜெட் விமானத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு உரியதுபோல் தோன்றுகிறது. திடீரென்று ஒரு சிவப்பு விளக்கு எரிகிறது; அது எதை அர்த்தப்படுத்துகிறது என்று அறியாததால் நீங்கள் கவலையடைகிறீர்கள். பிறகு, விளக்கமான வழிகாட்டி புத்தகம் ஒன்றை நீங்கள் பார்க்க வேண்டியிருக்கிறது.
இவை, தொழில்நுட்ப பயத்தைப் பற்றிய வெகு சில உதாரணங்களே. அதிநவீன கருவிகளை தொழில்நுட்பத்துறை தொடர்ந்து தயாரிக்கும் என நாம் நிச்சயமாக இருக்கலாம். முந்தைய சந்ததியைச் சேர்ந்த மக்கள் அவற்றை சந்தேகமில்லாமல் “அற்புதகரமான” என்று அழைத்திருப்பர். மார்க்கெட்டுக்கு வரும் ஒவ்வொரு புதிய பொருளையும் நாம் நன்றாக உபயோகிக்க வேண்டுமானால் அதிகத்தை அறிந்திருக்க வேண்டும். விளக்கவுரை புத்தகங்களை படிப்பவர்கள் அதிலுள்ள சொற்றொடர்களை புரிந்துகொள்கிறார்கள் என்றும் ஓரளவு அறிவும் திறமைகளும் உடையவர்களாய் இருக்கிறார்கள் என்றும் கருதி, நிபுணர்களால் அவர்களுக்கே உரிய பாஷையில் a அவை எழுதப்பட்டிருக்கும்போது பயத்தைத்தான் ஏற்படுத்துகின்றன.
இந்தச் சூழ்நிலையை, தகவல் கோட்பாட்டாளரான பால் காஃப்மேன் பின்வருமாறு சுருக்கி உரைக்கிறார்: “தகவலைப் பற்றிய நம் சமுதாயத்தின் எண்ணம் கவர்ந்திழுப்பதாக இருந்தபோதிலும் முடிவில் முன்னேற்றத்தை தடைசெய்வதாகவே இருக்கிறது. . . . உலகத்தை புரிந்துகொண்டு, ஒருவருக்கு ஒருவர் பிரயோஜனமானவற்றை செய்துகொள்வதற்காக தகவலை உண்மையில் உபயோகிக்கும் மக்கள்மீது குறைவான கவனமும், கம்ப்யூட்டர்கள் மற்றும் அவற்றின் பொருட்கள்மீது அதிக கவனமும் செலுத்தப்படுவதே ஒரு காரணமாகும். . . . பிரச்சினையானது, நாம் கம்ப்யூட்டர்களை உயர்வாக மதிக்க ஆரம்பித்ததினால் அல்ல, ஆனால் மனிதர்களைப் பற்றி ஓரளவு குறைவாக மதிப்பிட ஆரம்பித்துவிட்டோம்.” திகைக்க வைக்கும் புதிய தொழில்நுட்பத்தை தயாரித்து புகழ் சேர்ப்பதிலேயே அதிகமாக ஈடுபட்டிருப்பதால், அநேக சமயங்களில், அடுத்தது என்ன புதிய பொருள் கண்டுபிடிக்கப்படும் என்ற வியப்பிலேயே மக்கள் இருப்பதாக தோன்றுகிறது. “சாத்தியமானதற்கும் விரும்பப்படுவதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை தொழில்நுட்ப கனவியலாளர்கள் புரிந்துகொள்ளவே மாட்டார்கள். திகைக்க வைக்கும் சிக்கலான காரியத்தை செய்ய ஒரு மிஷின் தயாரிக்கப்பட்டால், உண்மையில் அந்தக் காரியத்தை செய்வது தகுதிவாய்ந்ததே என்று அந்தக் கனவியலாளர் கருதுகிறார்” என்று எட்வர்ட் மேண்டல்சன் கூறுகிறார்.
தொழில்நுட்பம் மனிதனை புறக்கணிப்பதால்தான் தகவல் கவலை இன்னும் அதிகளவில் ஏற்படுகிறது.
உற்பத்தி திறன் உண்மையில் மேம்பட்டிருக்கிறதா?
பத்தி எழுத்தாளரான பால் அட்வேல் தி ஆஸ்திரேலியன் பத்திரிகைக்கு எழுதும்போது, சமீப ஆண்டுகளில் கம்ப்யூட்டர் உபயோகத்தால் எவ்வளவு நேரமும் பணமும் மிச்சப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றிய தன் ஆராய்ச்சியை குறிப்பிடுகிறார். அவர் சொன்ன நியாயமான விஷயங்களில் சில இவை: “நிர்வாக வேலைகளை கவனித்து, செலவுகளை குறைக்கும் நோக்கத்துடன் கம்ப்யூட்டர் அமைப்புகளை தயாரிப்பதற்காக பல வருடங்களாக பணத்தை வாரியிறைத்து வந்த அநேக பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும், அவற்றின் நிர்வாக அலுவலர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதையே காண்கின்றன. . . . தாங்கள் விற்கும் தொழில்நுட்பம், உற்பத்தியில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தி நிர்வாக வேலையின் ஒரு பகுதியை குறைவான வேலையாட்கள் மிகக்குறைவான செலவில் செய்ய வழிவகுக்கும் என்று பல பத்தாண்டுகளாக கம்ப்யூட்டர் தயாரிப்பாளர்கள் உறுதிகூறி வந்திருக்கிறார்கள். அதற்கு மாறாக, முயற்சிகள் தவறான திசையில் செல்வதற்கே தகவல் தொழில்நுட்பம் வழிநடத்தியிருக்கிறது என்று உணர ஆரம்பித்திருக்கிறோம். குறைவான வேலையை குறைவான ஊழியர்கள் முன்பு செய்ததைப்போல் அல்லாமல், அதே அளவு அல்லது அதைவிட அதிகளவான ஆட்களால் அநேக புதிய வேலைகள் செய்யப்படுகின்றன. அநேக சமயங்களில் பணம் மிச்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை. வெறுமனே காகித வேலையை சீக்கிரத்தில் செய்வதற்கு மாறாக, ஆவணங்களின் தோற்றத்தை மேம்படுத்தவே மக்கள் தொழில்நுட்பத்தை உபயோகிக்கின்றனர் என்பதே இதற்கு ஒரு உதாரணமாகும்.”
கிறிஸ்தவர்களுக்கு அதிக ஆபத்தாக இருக்கக்கூடிய அதிநவீன தகவல் நெடுஞ்சாலை ஏற்றுக்கொள்ளப்பட்டு, வாழ்க்கையின் பாகமாகிவிட்டதுபோல் தோன்றுகிறது. ஆனால் ஓரளவிற்காவது, தகவல் கவலையை நாம் எவ்வாறு தவிர்க்கலாம்? பின்வரும் சிறிய கட்டுரையில் சில நடைமுறையான ஆலோசனைகளை நாங்கள் தருகிறோம்.
[அடிக்குறிப்புகள்]
a கம்ப்யூட்டர் பாஷைக்கு உதாரணங்கள்: லாக் ஆன் (log on), “அமைப்போடு இணை” என்று அர்த்தம்; பூட் அப் (boot up), “ஆரம்பி அல்லது இயக்கு”; போர்ட்ரேட் போசிஷன் (portrait position), “செங்குத்து”; லாண்ட்ஸ்கேப் போசிஷன் (landscape position), “கிடைநிலை.”
[பக்கம் 6-ன் பெட்டி]
மிதமிஞ்சிய தேவையற்ற தகவல்
“நம்முடைய அனுபவத்தால் அறிந்திருக்கிறபடி, சமுதாயமானது விடாப்பிடியாய் முட்டாளாகி வருகிறது. உபயோகமற்ற டிவி நிகழ்ச்சிகள், ரேடியோவில் வரும் வெறுப்பைத் தூண்டிடும் ஒலிபரப்புகள் மற்றும் ஆபாசமான ஜோக்குகள், நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் முறையிடுதல், பிரபலமடைய செய்யப்படும் வினோத முயற்சிகள், அதிக வன்முறையான, கேலிசெய்யும் பகட்டாரவார பேச்சு போன்றவையே நம் வாழ்வில் ஆதிக்கம் செலுத்துவதை கவனிக்கிறோம். சினிமாக்கள் ஒழுக்க ரீதியில் இன்னும் அதிக வெளிப்படையாகவும் வன்முறையாகவும் இருக்கின்றன. விளம்பரங்கள் இரைச்சல் மிக்கவையாயும், அதிகம் தாக்குபவையாயும், அடிக்கடி விரும்பப்படாதவையாயும் இருக்கின்றன . . . கீழ்த்தரமான பேச்சு அதிகரிக்கிறது, பொது நாகரிகம் குறைகிறது. . . . பாரம்பரிய குடும்ப ஏற்பாட்டிற்கு ஹாலிவுட் காட்டும் மரியாதை குறைவின் காரணமாக, நம்முடைய ‘குடும்ப தராதரங்களில் நெருக்கடி’ என்று சிலர் அழைத்திருப்பது ஏற்படவில்லை. மாறாக, தகவல் புரட்சியே அதற்கு அதிமுக்கிய காரணமாகும்.”—டேவிட் ஷெங்க்கின் செய்தி புகைப்பனி—தேவைக்கதிகமான தகவலை தப்பிப்பிழைத்தல்.
[பக்கம் 7-ன் பெட்டி]
ஞானம் பழம் பாணி
“என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு, நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய். கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும். ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது, நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும்.”—நீதிமொழிகள் 2:1-6, 10, 11.
[பக்கம் 8, 9-ன் படம்]
தேவைக்கதிகமான தகவல், மெயின் தண்ணீர் குழாய் ஒன்றிலிருந்து ஒரு சிறு குப்பியை நிரப்ப முயலுவதற்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது