கம்ப்யூட்டர் தொழிற்நுட்பத்தைக் குறித்து சமநிலையான ஓர் நோக்கை காத்துக்கொள்ளுதல்
1 கவனம் சிதறடிக்கப்படாதவாறு பார்த்துக்கொள்ளும்படிக்கு முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்தவர்களை அப்போஸ்தலன் பவுல் உந்துவித்தார், ஏனென்றால் ‘இனிவரும் காலம் குறுகியது.’ (1 கொ. 7:29) இந்தப் பழைய காரிய ஒழுங்குமுறையின் முடிவு நெருங்கிவருகிறபடியால், ‘முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுவதும்,’ ‘வாய்ப்பான நேரத்தை வாங்குவதும்’ நமக்கு எவ்வளவு அவசரமானதாயிருக்கிறது! காலம் பொன்போன்றது.—மத். 6:33; எபே. 5:15, 16, NW.
2 தொழிற்நுட்பம் ஓர் மகத்தான நேர சேமிப்பாளனாக வாழ்த்தி வரவேற்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு கம்ப்யூட்டர் பட்டனைத் தட்டினாலே போதும், பயன்படுத்துபவர் திரளான தகவலை உடனடியாகப் பெறமுடியும். மற்ற முறைகளில் மணிக்கணக்காக அல்லது வாரக்கணக்காக செய்யக்கூடிய வேலையை பெரும்பாலும் ஒருசில வினாடிகளில் கம்ப்யூட்டர் செய்துவிட முடியும். சரியான முறையில் பயன்படுத்தப்படும்போது, அவை ஓர் பயனுள்ள கருவி.
3 அது உண்மையிலேயே நேரத்தை சேமிக்குமா?: மறுபட்சத்தில், கணிசமானளவு பணமும் நேரமும் செலவழிக்காமல் இத்தகைய தொழிற்நுட்பம் பயன்படுத்துபவர் கைக்கு வராது. சில வேலைகளைக் கம்ப்யூட்டரில் எவ்வாறு செய்வது என்பதைக் கற்றுக்கொள்வது அநேக மணிநேரங்களை எடுக்கலாம். மேலுமாக, அந்தத் தொழிற்நுட்பத்தையே அறிய ஆவல்கொண்டவராய் மாறுகிற ஒரு நபர், மேம்பட்ட விதத்தில் செலவழித்திருக்கக்கூடிய நேரத்தை இதற்காக செலவழித்துவிடக்கூடும். ‘உங்களுக்காக வாய்ப்பான நேரத்தை வாங்கி, ஞானமுள்ளவர்களாக’ நடக்கும்படி அப்போஸ்தலன் பவுல் கொடுத்த அறிவுரையில் உட்பட்டுள்ள நியமத்தை மனதிற்கொண்டு, நாம் சமநிலையான ஒரு நோக்கை காத்துக்கொள்ள வேண்டும்.—1 கொரிந்தியர் 7:31-ஐக் காண்க.
4 நல்லெண்ணமுள்ள தனிநபர்கள் அநேகர், சபையின் பதிவுகளைப் பாதுகாத்து வைப்பதற்காக கம்ப்யூட்டர் புரோகிராம்களை வடிவமைத்திருக்கிறார்கள். ஒருவர் எவ்வாறு தன்னுடைய கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகிறார் என்பது தனிப்பட்ட ஒரு தீர்மானம்தான். என்றபோதிலும், சபை பதிவுகளுக்காக கொடுக்கப்பட்டுள்ள நமூனாக்களை கம்ப்யூட்டர்களில் பதிவுசெய்து வைக்கக்கூடாது, ஏனெனில் பிள்ளைகள் அல்லது அதிகாரமளிக்கப்படாத நபர்கள் அவற்றைப் பார்க்கமுடியும். சபையின் பதிவுகள் அனைத்தும்—கணக்குப் பதிவுகள், சபையின் பிரஸ்தாபி பதிவு அட்டைகள், இதுபோன்றவை அனைத்தும்—சங்கத்தால் கொடுக்கப்பட்டுள்ள நமூனாக்களில் பதிவுசெய்யப்பட வேண்டும்; சபை நமூனாக்களில் உள்ள இந்தத் தகவல் கம்ப்யூட்டர்களில் பதிவுசெய்து வைக்கப்படக்கூடாது. இந்த முறையில், இரகசியமாக வைக்கப்படவேண்டிய சபை பதிவுகள் பாதுகாக்கப்படும்.
5 தேவராஜ்ய ஊழியப் பள்ளி மற்றும் ஊழியக் கூட்ட நிகழ்ச்சிநிரலுக்கான நியமிப்புகளைச் செய்வதில் உத்தரவாதமுள்ள கண்காணிகள் பகுத்துணர்வுள்ளவர்களாக இருக்கவேண்டும். ஒரு குறிப்பிட்ட பாகத்தில் செய்யப்பட வேண்டிய விஷயத்தை அவர்கள் மனதில் கொண்டிருக்க வேண்டும். உதாரணமாக, பள்ளியில், ஏதாவதொரு விஷயம் எந்தவொரு மாணாக்கருக்கும் கையாளுவதற்குப் பொருத்தமாயிருக்காது. பிரசங்கத்தின் நோக்கத்தையும் தனிநபருடைய தகுதிகளையும் விஷயத்தின் தன்மையையும் கவனத்தில் கொள்ளவேண்டும். அதை கம்ப்யூட்டர் தீர்மானிக்கும்படி விட்டுவிடக்கூடாது.
6 சபை கூட்டங்களில் பேச்சுக்கொடுக்க வேண்டிய ஒரு பாகத்திற்காக நியமிக்கப்பட்ட ஒரு சகோதரர், வேறு ஒருவரால், முக்கியமாக அறியப்படாத ஒருவரால் தயார்செய்யப்பட்ட பொருளின்பேரில் சார்ந்திருக்கக் கூடாது. ஒரு சகோதரர் கம்ப்யூட்டரை வைத்திருக்கிறார் என்பதற்காகவும் அதை ஆராய்ச்சிக்கு பயன்படுத்துவதோடுகூட குறிப்புத்தாளை வேகமாகவும் தெளிவாகவும் டைப் செய்வார் என்பதற்காகவும், மற்றவர்கள் தங்களுடைய சொந்த நியமிப்புகளை தயாரிப்பதில் நேரத்தையும் பிரயாசத்தையும் சேமிப்பதற்காக இவரை தங்களுடைய கூட்டத்திற்கான நியமிப்புப் பகுதிகளை தயாரித்துக் கொடுக்குமாறு கேட்கக்கூடாது. உத்தரவாதமுள்ள கிறிஸ்தவர்கள் பைபிள் பேச்சுகளை அல்லது கூட்டத்திற்கான பாகங்களைத் தயாரித்து, மற்றவர்கள் பயன்படுத்துவதற்காக அவற்றை சபையிலுள்ள மற்றவர்களுக்கோ மற்ற சபைகளுக்கோ கிடைக்கும்படி செய்ய முற்படக்கூடாது. என்றபோதிலும், கம்ப்யூட்டர் மற்றும் CD-ROM-ல் உள்ள சங்கத்தின் உவாட்ச்டவர் லைப்ரரி மதிப்புவாய்ந்த கருவிகளாக, கிடைக்கும் குறுகிய நேரத்தில் பலன்தரத்தக்க ஆராய்ச்சி செய்வதற்கு உதவியளிப்பவையாக இருக்கலாம்.—ஏப்ரல் 22, 1994 விழித்தெழு! பிரதியில் பக்கம் 23-ல் இருக்கும் பெட்டியைப் பாருங்கள்.
7 சகோதரர்களுக்கு மத்தியில், கம்ப்யூட்டர் புரோகிராம்கள், பட்டியல்கள், அதன் சம்பந்தப்பட்ட ஆவணத்தொகுப்புகள் (documentation) ஆகியவற்றை மீண்டும் உருவாக்குதல் (reproduce) மற்றும் விநியோகித்தல், எலக்ட்ரானிக் அல்லது மற்ற முறைகளின் மூலம் ஊழியக் கூட்டம் மற்றும் தேவராஜ்ய ஊழியப் பள்ளியின்பேரில் பாகங்களைத் தயார்செய்தல், விநியோகித்தலைப் பொருத்தமட்டில், சபையின் நன்மைகளை மனதிற்கொண்டு சகோதரர்கள் தங்களுடைய சொந்த பொருளை தயார்செய்வது அவர்களுக்கு மிகவும் நல்லது. (1 தீ. 4:13, 15) பணசம்பந்தமான அனுகூலத்திற்காக எக்காரணத்தை முன்னிட்டும் சபைக்குரிய இணைப்புகளைத் தவறாக பயன்படுத்தக்கூடாது.
8 காவற்கோபுர படிப்பு அல்லது சபை புத்தகப் படிப்பில் பயன்படுத்தப்படுகிற வேதவசனங்களடங்கிய கம்ப்யூட்டர் பிரிண்ட்டுகளை விநியோகிப்பதைப் பற்றியென்ன? பிரஸ்தாபிகள் தங்களுடைய தனிப்பட்ட குறிப்புகளையும் கோடிடுதல்களையும் பைபிள் மற்றும் படிக்கிற பிரசுரங்களிலேயே செய்வது விரும்பத்தக்கதாக இருக்கலாம். கூட்டத்தில், பிரசுரங்களில் இடக்குறிப்பு செய்யப்பட்டுள்ள வேதவசனங்களடங்கிய கம்ப்யூட்டர் பிரிண்ட்டுகளைப் பயன்படுத்துவது வசனங்களைக் கண்டுபிடிப்பதில் பைபிளைப் பயன்படுத்துவதையே தடைசெய்யக்கூடும். இருந்தபோதிலும், ஒரு பைபிள் படிப்பு அல்லது சபை கூட்டத்தின்போது வேதவசனங்களை எடுத்துப் பார்ப்பது பெற்றுக்கொள்கிற ஒரு பயிற்சியின் பாகமாயிருக்கிறது; வெளி ஊழியத்தில் பைபிளைத் திறம்பட்ட விதத்தில் பயன்படுத்துவதற்கு நம்மை ஆயத்தமாக்குகிறது. பெரும்பாலான சமயங்களில், விசேஷமாக நீளமான மேற்கோள்கள் வருகையில், நேரடியாக பைபிளிலிருந்து வாசிப்பது அதிக பலன்தரத்தக்கதாய் இருக்கிறது; முக்கியமாக பைபிளை திறந்து வாசிக்கப்படுகிற வசனத்தை கவனித்து வரும்படி சபையார் உற்சாகப்படுத்தப்படுகையில், அவ்விதம் செய்வது அதிக பலன்தருவதாய் இருக்கிறது.
9 வேறுசில வினைமையான படுகுழிகள்: ஆகஸ்ட் 1, 1993, காவற்கோபுர இதழ், ஒரு கம்ப்யூட்டரை நெட்வொர்க்கில் இணைப்பது வினைமையான ஆவிக்குரிய ஆபத்துக்களுக்கு வழியைத் திறக்கக்கூடும் என்று பக்கம் 17-ல் குறிப்பிட்டது. எதையும் செய்யத்துணியும் ஒருவர் நெட்வொர்க்கின் மூலமாக ஒரு வைரஸை—கம்ப்யூட்டர் ஃபைல்களைக் கெடுக்கவும் அழிக்கவும் வடிவமைக்கப்பட்ட புரோகிராமை—போட்டுவிடுவது போல, விசுவாசதுரோகிகள், குருமார்கள், ஒழுக்க ரீதியிலோ அல்லது மற்றவிதத்திலோ மற்றவர்களைக் கெடுக்க முயற்சிக்கிற ஆட்கள் தங்களுடைய விஷமிக்க கருத்துக்களை அத்தகைய நெட்வொர்க்குகளின் மூலமாக தாராளமாக பரவச்செய்ய முடியும். அதை பயன்படுத்துகிற கிறிஸ்தவர்களை ‘கெட்ட கூட்டுறவுகளுக்கு’ ஆளாகும் நிலையில் இவை வைக்கக்கூடும். (1 கொ. 15:33, NW) கம்ப்யூட்டர் நெட்வொர்க்குகள், ஆவிக்குரிய காரியங்கள் சம்பந்தமாக தியானிப்பதற்கு மட்டுமல்ல, தீய யோசனையைக் கொடுப்பதற்கும், பழிதூற்றுதல் மற்றும் பொய்யான தகவலைப் பரப்புவதற்கும், எதிர்மறையான கருத்துக்களை விதைப்பதற்கும், ஒருவருடைய விசுவாசத்தைக் கவிழ்க்கிற கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புவதற்கும், பைபிளைப் பற்றிய தனிப்பட்ட விளக்கங்களைப் பரப்பிவிடுவதற்கும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக சங்கம் அறிக்கைகளைப் பெற்றிருக்கிறது. விசுவாசதுரோகிகளுடைய மற்றும் குருவர்க்கத்தினருடைய பிரசுரங்களும் பத்திரிகைகளும் அவற்றையே செய்ய நாடுகின்றன. மேலோட்டமாக பார்த்தால், ஒருசில விஷயங்கள் அக்கறையூட்டுபவையாகவும் தகவலளிப்பவையாகவும் தோன்றக்கூடும், என்றபோதிலும் விஷமிக்க அம்சங்கள் இதில் கலக்கப்பட்டிருக்கலாம். காலத்திற்கேற்ற ஆவிக்குரிய உணவுக்காகவும் விளக்கங்களுக்காகவும் கிறிஸ்தவர்கள் ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையை’ எதிர்நோக்கியிருக்கிறார்கள். (காவற்கோபுரம், ஜூலை 1, 1994, பக்கங்கள் 9-11-ஐக் காண்க.) கேடுண்டாக்கும் செல்வாக்குகளுக்கு எதிராக கிறிஸ்தவர் ஒருவர் தன்னுடைய விசுவாசத்தைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய பொறுப்புவாய்ந்த உத்தரவாதம் இருக்கிறது. அந்த உத்தரவாதத்திற்கு இணங்க, தான் கூட்டுறவுகொண்டு வருபவரை எப்பொழுதும் அவர் அறிந்திருக்க வேண்டும்.—மத். 24:45-47, NW; 2 யோ. 10, 11.
10 பதிப்புரிமை சட்டங்களை மதிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி அதே காவற்கோபுர கட்டுரை வலியுறுத்திக் கூறியது. கம்ப்யூட்டர் புரோகிராம்களை தயாரித்து விற்கிற பெரும்பாலான கம்பெனிகள் இவற்றிற்கு பதிப்புரிமை அளிக்கின்றன, மேலும் அந்தப் புரோகிராம்களை எவ்வாறு சட்டப்பூர்வமாக பயன்படுத்தலாம் என்பதை குறிப்பிட்டுக் காட்டுகிற உரிமத்தை அவை தருகின்றன. புரோகிராம் காப்பிகளை அதற்குரிய சொந்தக்காரர் மற்றவர்களுக்கு கொடுக்க முடியாது என்று அந்த உரிமம் பொதுவாக சொல்கிறது; சொல்லப்போனால், சர்வதேச பதிப்புரிமை சட்டம் அவ்விதமாக செய்வதை சட்டவிரோதமானதாக்குகிறது. சட்டத்தை மீறுவதைப் பற்றி பேராசைபிடித்த ஆட்கள் அநேகருக்கு எந்தவித நேர்மையுணர்வும் கிடையாது. என்றபோதிலும், கிறிஸ்தவர்கள் சட்டசம்பந்தமான விஷயங்களில் இராயனுக்குரியதை இராயனுக்கு செலுத்தி, மனச்சாட்சியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.—மத். 22:21; ரோ. 13:1.
11 தொழிற்நுட்பம் சம்பந்தமான எந்தவொரு பயன்பாட்டின் மதிப்பையும், அதை பயன்படுத்துவதில் இயற்கையாக அமைந்துள்ள பெரும் ஆபத்துக்களுக்கு எதிராக சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். தொலைக்காட்சி நல்ல அனுகூலத்திற்காக பயன்படுத்தப்பட முடிவதுபோல, இன்று அது மனிதவர்க்கத்தின்மீது கொண்டிருக்கிற ஆரோக்கியமற்ற விளைவு உலகப்பிரகாரமான செய்திமூலங்களும்கூட ஆழ்ந்த கவலைக்குரியதாக தெரிவிக்கும்படி செய்திருக்கிறது. கம்ப்யூட்டர் நெட்வொர்க்குகள் உலகளாவ பரந்து காணப்படுகின்றன, வீட்டிற்குள் அல்லது வேலைசெய்யும் இடத்திற்குள் எல்லையற்ற மதிப்புவாய்ந்த தகவலைக் கொண்டுவரக்கூடும். தொழில் நிறுவனங்களுக்கும், அமைப்புகளுக்கும், நாம் வாழ்ந்துவருகிற வேகமாகச் செல்லும் சமுதாயத்தில் தனிப்பட்ட அல்லது வியாபார ஆதாயங்களுடன் ஈடுகொடுத்துச் செல்லவேண்டியதாக இருக்கிற தனி நபர்களுக்கும் அவை மிகவும் தேவையான சேவைகளை அளிக்கின்றன. அதே சமயத்தில் கம்ப்யூட்டர் நெட்வொர்க்குகள், ஆபாசம், பிளவுண்டாக்கும் பகைமைக்குரிய பிரச்சாரம், இழிவான, கெட்ட செயல்களை எவ்வாறு செய்வது என்பதன்பேரில் விளக்கமான தகவல் போன்ற பிரச்சினைகளால் பீடிக்கப்பட்டிருக்கின்றன.
12 ஆகவே ஒரு கிறிஸ்தவர், கம்ப்யூட்டர் தொழிற்நுட்பத்தைக் குறித்து ஏன் சமநிலையான ஓர் நோக்குநிலையைக் காத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு அநேக முக்கிய காரணங்கள் இருக்கின்றன. அநேக ஆட்கள் புதிய உலக மொழிபெயர்ப்பு, உட்பார்வை ஆங்கில தொகுதிகள், கெட்வெர்ஸ் (GetVerse) புரோகிராம் ஆகியவற்றை அனுபவித்து மகிழுகிறார்கள், சங்கம் இவற்றை கம்ப்யூட்டர் டிஸ்கட்டுகளில் கிடைக்கும்படி செய்திருக்கிறது. சங்கம் இன்னும் இந்தியாவில் விநியோகிக்க ஆரம்பிக்காதபோதிலும், மற்றவர்கள், கூடுதலான ஆராய்ச்சி அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கிற, CD-ROM-ல் உள்ள உவாட்ச்டவர் லைப்ரரியை தனிப்பட்ட விதமாக வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ள முடிந்திருக்கிறது. குறிப்பிட்ட சில தொழிற்நுட்பத்தின் மதிப்பை உணருகிறபோதிலும், பயனுள்ள நோக்கங்களுக்காக இத்தகைய நவீன தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்துகிறவர், எதிர்மறையான அம்சங்களிலிருந்து தன்னையும் மற்றவர்களையும் பாதுகாப்பதற்கு கவனமுள்ளவராக இருக்க வேண்டும். தீங்கற்ற விதமாக தொழிற்நுட்பத்தை பயன்படுத்துவதும்கூட நம்முடைய அர்ப்பணிக்கப்பட்ட மிகையான நேரத்தை எடுத்துக்கொள்ளாதவாறு அல்லது நம்முடைய பிரதான வேலையிலிருந்தும் இலக்கிலிருந்தும் திசைதிருப்பாதவாறு நாம் சமநிலையைப் பயன்படுத்த வேண்டும்.—மத். 6:22; 28:19, 20.