தேவைக்கதிகமான தகவல்
இதுவரை இருந்திராத அளவு தேவைக்கதிகமான தகவலை இந்த 20-ம் நூற்றாண்டு கண்டிருக்கிறது. அச்சடிக்கப்பட்டவை, ரேடியோ அல்லது தொலைக்காட்சி ஒளிபரப்பு, இன்டர்நெட் அல்லது மற்ற ஏதாவது விதங்களில் இந்த உலகம் தகவலால் நிரம்பி வழிகிறது. “அதிகமான தகவல் உண்மையான ஒரு ஆபத்தாகி வருகிறது. . . . இனி மிதமிஞ்சிய தகவல் என்ற நிலை ஏற்படும் என எதிர்பார்க்கிறோம்” என்று செய்தி புகைப்பனி—தேவைக்கதிகமான தகவலை தப்பிப்பிழைத்தல் என்ற தன் ஆங்கில புத்தகத்தில் டேவிட் ஷெங்க் எழுதுகிறார்.
ஒரே ஒரு உதாரணமாக பிரபலமான செய்தித்தாள் ஒன்றை கவனியுங்கள். 17-வது நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த ஒரு சராசரி மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் கேள்விப்பட்ட செய்தியைவிட அதிகம், த நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையின் வழக்கமான வாரநாள் பதிப்பு ஒன்றில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் தினசரி செய்தித்தாளுடன்கூட, எண்ணற்ற விஷயங்களின் பேரிலான பல்வேறு விதமான பத்திரிகைகளும் புத்தகங்களும், தயாராகும் செய்திக் குவியலுடன் கூட்டிச்சேர்க்கின்றன. ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு ஆறு வருடத்திலும் அறிவியல் சார்ந்த தகவல் இரட்டிப்பாவதால், தொழில்நுட்ப பத்திரிகைகள் மாத்திரம் உலகளவில் 1,00,000-த்திற்கும் அதிகமாக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அதோடு, கம்ப்யூட்டர் உபயோகிப்பவர்களுக்கு அபரிமிதமான தகவல்கள் கிடைக்கும்படி இன்டர்நெட் செய்கிறது.
பத்திரிகைகளைப் பற்றியதென்ன? வியாபார இதழ்கள், பெண்கள் பத்திரிகைகள், பருவ வயதினர் பத்திரிகைகள், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு பத்திரிகைகள்—உண்மையில் ஏறக்குறைய ஒவ்வொரு பொருளையும் மனித அக்கறையையும் பற்றிய பத்திரிகைகள்—போன்றவை இந்த உலகத்தைச் சூழ்ந்து, நம் கவனத்தை இழுக்கின்றன. “வெறும் டம்பம் அடிப்பவன்” என்று பொருத்தமாக விவரிக்கப்பட்டுள்ள விளம்பரதாரரின் வேலையைப் பற்றியென்ன? “பார்க்கும்படியும், கேட்கும்படியும், நுகரும்படியும், தொடும்படியும் நம்மை தூண்டும் விளம்பரங்கள் மூலம் விளம்பர நிறுவனங்கள் நம் உணர்வுகளைத் தாக்குகின்றன” என்று தகவல் கவலை என்ற தன் ஆங்கில புத்தகத்தில் ஆசிரியரான ரிச்சர்ட் எஸ். வர்மன் கூறுகிறார். ‘அடுத்தாத்து அம்புஜத்தைப்’ போலிருக்க, அதிநவீன கருவி, அதன் புத்தம்புதிய டிசைன் போன்றவை உங்களுக்குத் தேவை என்று அவை வற்புறுத்துகின்றன.
‘தகவலால் இந்த உலகம் மூழ்கடிக்கப்படுகிறது என்றும் இன்டர்நெட் மூலம் மிகச் சுலபமாக கிடைக்கும் தகவலை உபயோகிக்கும்படி மக்கள் அழைக்கப்படுகின்றனர்’ என்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உளவியல் நிபுணரும் சமூக ஆராய்ச்சியாளருமான டாக்டர் ஹியூ மக்கை கூறுகிறார். ரேடியோ, தொலைக்காட்சி ஆகியவற்றில் வரும் செய்திகள் மற்றும் நாட்டு நடப்பு விவரங்களில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது; அதோடு, கம்ப்யூட்டர் அடிப்படையிலான தகவல் இணைப்புகளின் வேகமான வளர்ச்சியும் சேர்ந்து அநேக செய்திகளை கொடுக்கிறது; உண்மைகள் மற்றும் நிகழ்ச்சிகளின் முழுமையான விவரமாக இல்லாமல் வெறும் பகுதியளவான தோற்றமாக மட்டுமே இருக்கும் இப்படிப்பட்ட தகவலை அநேகர் நம்பும் ஓர் உலகத்தில் விளைவடைந்திருப்பதுதான் பெரும் பிரச்சினையாகும் என்று டாக்டர் மக்கை கூறுகிறார்.
தகவல் என்றால் என்ன?
இன்ஃபார்ம் என்ற ஆங்கில வார்த்தையின் மூல லத்தீன் வார்த்தையான இன்ஃபார்மரே (informare) என்பது, ஒரு குயவன் மண்ணை வடிவமைப்பதைப் போல பொருளை வடிவமைப்பது என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. ஆகவே, இந்த ஆங்கில வார்த்தையின் சில சொற்பொருள் விளக்கங்கள், “மனதை உருவமைப்பது,” “மனதை வடிவமைப்பது அல்லது கற்பிப்பது” போன்றவற்றை அர்த்தப்படுத்துகின்றன. தகவல் என்பது யார், எங்கே, என்ன, எப்போது, எப்படி என்ற விவரங்களை நமக்களித்த உண்மைகள் அல்லது செய்திகளின் ஒரு பட்டியலாக மட்டுமே ஒரு காலத்தில் இருந்ததை பெரும்பாலான வாசகர்கள் தெளிவாக நினைவுகூருவார்கள். தகவலுக்கென்று விசேஷித்த மொழி அல்லது சொற்றொகுதி அப்போது இருக்கவில்லை. நாம் தகவலை கேட்க அல்லது நாமே தேடிப்பார்க்க வேண்டியதாக மட்டுமே இருந்தது.
ஆனால் 1990-களிலோ, தகவல் சம்பந்தப்பட்ட அநேக புதிய வார்த்தைகளை மக்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்; அவற்றை தனியாக படித்தால் குழப்பம்தான் ஏற்படும். அவற்றுள், “தகவல் பைத்தியம்,” (“இன்ஃபோமேனியா” [“infomania”]), “தொழில்நுட்ப பைத்தியம்,” (“டெக்னோஃபிளியா” [“technophilia”]), “தகவல் சகாப்தம்,” (“இன்ஃபர்மேஷன் ஏஜ்” [“information age”]) போன்ற சில வார்த்தைகள் அல்லது சொற்றொடர்கள் ஓரளவு எளிதாகவும் புரிந்துகொள்ளக் கூடியதாகவும் இருக்கையில், மற்றவை உண்மையிலேயே பிரச்சினையை ஏற்படுத்தலாம். இன்று இந்த உலகமானது தகவல் பைத்தியத்தால்—மிகவும் அதிக தகவலை உடையவரே, தகவல் பெற வாய்ப்பில்லாத மற்றவர்களைவிட அதிக அனுகூலமான நிலையில் இருப்பார் என்றும் தகவலைப் பெறுவது ஒரு நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அல்லாமல் அதை சேகரிப்பதற்காகவே என்ற நம்பிக்கையால்—அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறது.
ஃபேக்ஸ் மிஷின், செல்லுலார் ஃபோன், பர்சனல் கம்ப்யூட்டர் போன்ற எண்ணற்ற தொலைத்தொடர்பு சாதனங்களால் இந்தப் பைத்தியம் ஊட்டி வளர்க்கப்படுகிறது. இவையெல்லாம் தகவல் சகாப்தத்தின் சின்னமாகவும் அடையாளமாகவும் சிலரால் கருதப்படுகின்றன. இதுவரை இருந்திராத அளவு தகவலைப்பெற கம்ப்யூட்டர்களின் வசதியும் வேகமும் சக்தியும் உதவியிருக்கின்றன என்பது உண்மையே; அது அவ்வளவு அதிகமாய் இருப்பதால், மாசச்யூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிக்கோலஸ் நேக்ரோபான்ட் இவ்வாறு கூறுகிறார்: “மக்கள், கம்ப்யூட்டர்களை வெறுமனே கருவிகளாக இனிமேலும் கருதுவதில்லை. அதுதான் வாழ்க்கையே என கருதுகின்றனர்.” அதன் விளைவாக, தகவலும் அதைக் கொடுக்கும் தொழில்நுட்பங்களும் மிகவும் அதிகமாக மதிக்கப்படுகின்றன; சில சமயங்களில், அவற்றை ஆதரிக்கும் பெரும் திரளான, பூமியெங்குமுள்ள மக்களால் அவை வணங்கவும் படுகின்றன. தொலைக்காட்சி செய்திகளும் நாட்டு நடப்பு விவரங்கள் பற்றிய நிகழ்ச்சிகளும் ஏறக்குறைய முழுமையாக நம்பப்படுகின்றன; அதேசமயம், அளவுக்கதிகமான தேவையற்ற விஷயங்கள் டிவி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பப்பட்டு, அநேகமாக பகுத்தறிய முடியாத, எளிதில் ஏமாற்றப்படக்கூடிய பொதுமக்களால் மௌனமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
நாம் வாழும் மற்றும் வேலைசெய்யும் விதத்தை இந்தத் தகவல் சகாப்தம் மாற்றியிருப்பதால், இன்றுள்ள அநேக மக்கள் ஏதாவது ஒருவிதமான ‘தகவல் கவலையால்’ பாதிக்கப்படுகின்றனர். தகவல் கவலை என்பது உண்மையில் எதை அர்த்தப்படுத்துகிறது? நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா என்று எப்படி சொல்ல முடியும்? அதைக் குறித்ததில் நீங்கள் ஏதாவது செய்ய முடியுமா?
[பக்கம் 3-ன் குறிப்பு]
பக்கங்கள் 3, 5 மற்றும் 10-ல் உள்ள பூமி உருண்டை: Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.