தகவல் சகாப்தத்தில் நீங்கள் எவ்வாறு சமாளிக்கலாம்
நம்மை தொடர்ந்து கவலையுள்ளவர்களாக ஆக்கும் அநேக காரியங்கள் 1990-களின் தகவல் சகாப்தத்தில் இருக்கின்றன என்ற உண்மையை நாம் ஏற்றே ஆகவேண்டும். இவற்றுள் சிலவற்றின்மீது நமக்கு மிகவும் குறைவான கட்டுப்பாடே இருக்கிறது அல்லது எந்தக் கட்டுப்பாடுமே இல்லை. மறுபட்சத்தில், அப்படிப்பட்ட கவலையில் எல்லாவற்றையும் நீக்க முடியாவிட்டாலும் அதிகத்தை நீக்குவதற்கு நாம் செய்யக்கூடிய அநேக காரியங்கள் இருக்கின்றன. ஆகவே, இந்தத் தகவல் சகாப்தத்தில் உயிர்வாழ்வது, ஒரு சவால் நிறைந்த அதேசமயம் திருப்தியளிக்கும் வேலை என்றும் நாம் சொல்லலாம்.
தகவலைப் பெறுபவர்களும் கொடுப்பவர்களும்
நம்மை நாமே இவ்வாறு வகைப்படுத்திக் கொண்டோமோ இல்லையோ, நம் வாழ்நாள் முழுவதிலும் நாம் எல்லாருமே ஓரளவுக்கு தகவலைப் பெறுபவர்களும் கொடுப்பவர்களுமாகவே இருக்கிறோம். என்றபோதிலும், நம்முடைய மூளை, தகவலைப் பெற்று அதற்கேற்ப செயல்படுத்துவதை பல வித்தியாசப்பட்ட வழிகளில் செய்கிறது. ஒரு வழியானது, அரையுணர்வு நிலையில் தகவலை செயல்படுத்தக்கூடிய மூளையின் வியக்கத்தக்க திறமையை உட்படுத்துகிறது.
மற்றொரு வழியானது, உரையாடலின்போது நடப்பதைப் போல, முழு உணர்வு நிலையில் தகவலை செயல்படுத்துவதை உட்படுத்துகிறது. கொடுப்பவர்களாகவும் பெறுபவர்களாகவும், நமக்கு இவ்விதமான தகவல் செயல்பாட்டின்மீது மிக அதிக கட்டுப்பாடு இருக்கிறது. பயனற்ற பேச்சு என்று வரும்போது, “சோம்பலுள்ளவர்களாய் மாத்திரமல்ல, அலப்புகிறவர்களாயும் வீணலுவற்காரிகளாயும் தகாத காரியங்களைப் பேசுகிறவர்களாயுமிருப்ப[வர்களை]” பற்றி பைபிள் எச்சரிக்கிறது. (1 தீமோத்தேயு 5:13) வேறு வார்த்தைகளில் சொன்னால், பயனற்ற விஷயங்களைப் பற்றி அல்லது கேடு விளைவிக்கும் தகவலைப் பற்றியும்கூட பேசுவதில் அளவுக்கதிகமான நேரத்தை வீணாக்காதபடி ஜாக்கிரதையாய் இருங்கள். வீண்பேச்சு பேசுவதே வாழ்வின் முக்கிய வேலையென கருதும் ஆளாகாதீர்கள். மதிப்புவாய்ந்த நேரமும் சக்தியும் வீணாக்கப்பட்டு, அதனால் நாமும் மற்றவர்களும் கவலைக்குள்ளாகலாம். தொல்லை நிறைந்த இந்த உலகில் உயிர்வாழ்வதற்கு உண்மையில் கட்டியெழுப்புவதும் அவசியமாகவும் இருக்கும் தகவலைப் பெற்று, பகிர்ந்தளிக்கும் வாய்ப்புகளை ஒருவேளை நீங்கள் தவறவிடலாம்.
வாசிப்பதன் மூலம் சேகரிக்கப்படும் தகவல், முழு உணர்வு நிலையில் செயல்படுவதால் மிக அதிக நேரத்தை எடுக்கிறது. “என்னால் எல்லாவற்றையும் வாசிக்கவே முடியவில்லை!” என்ற கவலை நிறைந்த புலம்பல் மிகவும் பொதுவானதே. வாசிப்பதற்கு மிக அதிகம் இருக்கிறது ஆனால் அதைச் செய்வதற்கு நேரமே இல்லை என நீங்கள் உணருகிறீர்களா? வாசிப்பது அதிக நேரத்தை எடுப்பதால், உடனடி தகவல் கிடைக்கும் இந்தச் சகாப்தத்தில் அதன் கலையும் இன்பமும் அடிக்கடி இழக்கப்படுகின்றன. டிவி தங்கள் நேரத்தை முழுமையாக விழுங்கிவிடும்படி அநேகர் அனுமதிக்கின்றனர். இருந்தபோதிலும், கற்பனையை தூண்டுவதற்கும், தகவல்கள், எண்ணங்கள், கருத்துகள் ஆகியவற்றை கடத்துவதற்கும் எழுதப்பட்ட தகவலே தற்போதும் மிக அதிக வல்லமைவாய்ந்த வழியாய் இருக்கிறது.
டிவி, கம்ப்யூட்டர் விளையாட்டுகள், மற்ற பொழுதுபோக்கு காரியங்கள் ஆகியவற்றோடு போட்டியிட்டு, நம் கவனத்தை ஈர்க்கும் இவ்வளவு அதிகமான வாசிப்பு பொருள் இருக்கையில், இந்தச் சூழ்நிலையை நாம் எப்படி சமாளிப்பது? தெரிவு செய்வதே இதற்கு பதில். நாம் கேட்க, பார்க்க, பேச அல்லது வாசிக்க வேண்டியவற்றை தெரிவு செய்வது, வகைப்படுத்துவது, அல்லது பட்டியலிடுவது, தகவல் கவலையில் அதிகமானதை நீக்கிவிட உதவும். திறம்பட்ட விதமாக தெரிவு செய்வதை இரண்டு நிலைகளில் செய்யலாம்.
இவ்வளவு அதிக வெட்டிச் செய்திகள் நமக்கு அவசியமா?
நமக்கு தேவை என்று மற்றவர்கள் நினைக்கும் காரியத்தால் அல்லது நமக்கு தேவை என்று நம்பும்படி செய்திகளின் விளம்பர திறமைகள் நம்மை வழிநடத்தும் காரியத்தால், நம்முடைய தேவைகள் பற்றிய உணர்வு அடிக்கடி சிதைவுறுகிறது. குழப்பமேற்படுத்தும் இந்தத் தகவல் பின்னலை மேற்கொள்வதற்கு அடிப்படையான இந்தச் சட்டத்தை பொருத்துங்கள்: அதை எளிமையாக வைத்துக்கொள்ளுங்கள்! ரிச்சர்ட் எஸ். வர்மன் இவ்வாறு கூறுகிறார்: “உங்கள் வாழ்க்கைக்கு பொருத்தமானவற்றோடு உங்கள் தகவலை மட்டுப்படுத்திக்கொள்வதே அதைச் செய்வதன் ரகசியமாகும் . . . அதிகமான வாய்ப்புகள் இருக்கும்போது அதிக பொருத்தமான செயல்களை நீங்கள் செய்து, அதிக சுயாதீனத்தையும் அனுபவிப்பீர்கள் என்ற எண்ணம் தவறானது என நான் நம்புகிறேன். மாறாக, அதிக வாய்ப்புகள் அதிக கவலையை ஏற்படுத்துவதாக தோன்றுகிறது.”
ஆகவே, வாசிப்பதா அல்லது டிவி பார்ப்பதா என்று வரும்போது, உங்கள் பழக்கங்களை ஆராய்வது சிறந்தது. ‘என்னுடைய வேலைக்கு அல்லது வாழ்க்கைக்கு இது அவசியமா? இந்த உலகத்தின் பிரபலமானவர்கள், அழகானவர்கள் என சொல்லப்படுபவர்களைப் பற்றிய எல்லா வெட்டி செய்திகளையும் வீண்பேச்சையும் நான் அவசியம் அறிந்துகொள்ள வேண்டுமா? இந்த டிவி நிகழ்ச்சியை நான் பார்க்காவிட்டால், இந்தப் புத்தகம் அல்லது அந்தப் பத்திரிகையை வாசிக்காவிட்டால், அல்லது செய்தித்தாளை வாசிப்பதில் இவ்வளவு அதிக நேரத்தை செலவு செய்யாவிட்டால் என் வாழ்க்கை எப்படி மாற்றமடையும்?’ என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். சிலர், தங்களுடைய வாசிப்பு மற்றும் டிவி பார்க்கும் விஷயத்தை ஆராய்ந்து, தங்கள் மனங்களையும் வீடுகளையும் குப்பைமேடு ஆக்குபவற்றை நீக்கியிருக்கிறார்கள். உதாரணமாக, ஒரேயொரு தினசரி செய்தித்தாளை மட்டுமே சந்தாவாக பெற தீர்மானித்திருக்கிறார்கள். எப்படியிருந்தாலும் பெரும்பாலான செய்தித்தாள்களில் அதே அடிப்படை செய்தியே இருக்கின்றன. தங்கள் தபால் பெட்டிகளில் அனாவசிய தபால்கள் போடவேண்டாம் என சிலர் குறிப்பாக கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.
வாழ்க்கையை எளிமையாகவும் சிக்கலற்றதாகவும் வைத்துக்கொள்ளும்படியே எக்காலத்திலும் வாழ்ந்தவர்களுள் மிகப்பெரிய மனிதராகிய இயேசு கிறிஸ்து பரிந்துரை செய்தார். (மத்தேயு 6:25-34) எளிமையாயிருப்பது அநேக ஆசிய கலாச்சாரங்களில் சிபாரிசு செய்யப்பட்டு, விரும்பவும்படுகிறது; மேற்கத்திய கலாச்சாரத்திலுள்ள அநேகராலும் அது மேம்பட்ட வாழ்க்கைமுறையாக கருதப்படுகிறது. எழுத்தாளரான ட்வேன் எல்ஜின் கூறினார்: “அதிக நோக்கத்துடனும் குறைந்த அனாவசிய கவனச்சிதறல்களுடனும் இருப்பதே அதிக எளிமையாக வாழ்வதாகும்.”
நீங்கள் எடுத்துக்கொள்ளும் தகவலை உங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறு பட்டியலிட்டுவிட்டதைப்போல, உங்கள் அக்கறைகளைப் பொருத்தவரையிலும்கூட அவ்வாறே செய்யுங்கள். ஏனென்றால் அக்கறையே கற்பதற்கு தூண்டுதலளிக்கும் சக்தியாகும். என்றபோதிலும், உங்களுக்கு உண்மையிலேயே அக்கறையாக இருப்பவற்றிற்கும், ஒருவேளை நீங்கள் வேலைசெய்யும் இடத்திலிருக்கும் மற்றவர்களை சந்தோஷப்படுத்துவதற்காக, உங்களுக்கு அக்கறையூட்ட வேண்டும் என நீங்கள் நினைப்பவற்றிற்கும் உள்ள வித்தியாசத்தைக் காண்பதே இப்போதுள்ள பெரும் பிரச்சினையாகும். மற்ற எந்த வேலையையும் நீங்கள் திட்டமிடுவதைப் போலவே வாசிப்பது, டிவி அல்லது கம்ப்யூட்டர் முன் நேரம் செலவு செய்வது போன்றவற்றையும் உங்களால் திட்டமிட முடியும் என்றால், உண்மையான அக்கறையை மையமாக வைத்தே அதைச் செய்வதானது, உங்கள் வாழ்க்கை அதிக சந்தோஷமுள்ளதாகவும் தேவையற்ற கவலை இல்லாமலும் இருக்க உதவும்.
ஆகவே, தகவல் கவலையை நீங்கள் எவ்வாறு சமாளிக்கலாம்? உங்களால் அதை முழுமையாக நீக்க முடியாமல் போகலாம், ஆனால் நாங்கள் குறிப்பிட்ட சில எளிய விதிகளை பின்பற்றுவது அதிக உதவியாக இருக்கும். அதை எளிமையாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கும் அக்கறைகளுக்கும் ஏற்றவாறு தகவலை வகைப்படுத்துங்கள். தகவல் கவலை உட்பட வாழ்க்கையின் எல்லா சிக்கல்களும் இல்லாமற்போகும் ஒரு காலம் வருகிறது. அதுவரையிலும், நவீன தொழில்நுட்பத்திற்கு உங்கள் வாழ்க்கையில் தேவையற்ற முக்கியத்துவம் கொடுக்காதிருங்கள். ஒரு நோக்கத்தை நிறைவேற்ற அவற்றை ஒரு வழிமுறையாக மட்டுமே கருதுங்கள். அவற்றிற்கு அடிமையாகாதீர்கள் அல்லது அவற்றைக் கண்டு பிரமித்துப்போகாதீர்கள். இப்படியாக, உபயோகமான தகவல், கவலையை ஏற்படுத்துவதற்கு மாறாக கட்டியெழுப்புவதாகவும், உற்சாகமூட்டுவதாகவும், பிரயோஜனமுள்ளதாகவும் இருக்கும்.
[பக்கம் 11-ன் பெட்டி]
ஒரு மாற்றத்தை முயற்சித்துப் பாருங்கள்
“உங்கள் கேபிள் டிவி இணைப்பை துண்டித்து விடுங்கள், . . . ஒரு மாதத்திற்கு ஆகும் அதேயளவு [பணத்தை] ஒன்று அல்லது அதற்கும் அதிகமான நல்ல புத்தகங்களுக்காக செலவு செய்யுங்கள். புத்தகங்கள் டிவிக்கு நேர் எதிரானவை: அவை மெதுவாக படிக்க முடிந்தவையாகவும், கவர்ந்திழுப்பவையாகவும், ஊக்கமளிப்பவையாகவும், அறிவைத் தூண்டுபவையாகவும், ஆக்க திறனை ஊக்குவிப்பவையாகவும் இருக்கின்றன.”
“ஒவ்வொரு வாரமும் கொஞ்சநேரம் மட்டுமே இன்டர்நெட்டிற்காக ஒதுக்க நீங்கள் தீர்மானிக்கலாம்; அல்லது இன்டர்நெட்டில் நீங்கள் செலவு செய்யும் அதேயளவு நேரத்தை புத்தகம் வாசிப்பதில் செலவு செய்வதன் மூலமாகவும்கூட சமநிலைப்படுத்தலாம்.”—பசெய்தி புகைப்பனி—தேவைக்கதிகமான தகவலை தப்பிப்பிழைத்தல்.
[பக்கம் 12-ன் பெட்டி]
அடிமையாக இல்லாமல் எஜமானாக இருங்கள்
“தொலைக்காட்சியை நிறுத்திவிடுங்கள். நம்மில் மிகவும் அதிகமானோருக்கு நம்முடைய வாழ்க்கையின் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் அந்தச் சாதனத்தை நிறுத்திவிடுங்கள். உங்கள் வாழ்க்கையின் வேகம், குடும்பத்தின் அமைதி, சிந்தனையின் உட்பொருள் ஆகியவற்றை மறுபடியும் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அதைவிட விரைவான வழி வேறொன்றும் இல்லை. ஆஃப் பட்டனை உபயோகிப்பதனால் வரும் அமைதியையும் சக்தியையும் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் தற்போது உணர ஆரம்பித்திருக்கிறார்கள். முன்பு செய்வதற்கு நேரமில்லை என்பதாக நினைத்த வேலைகளை செய்வதற்கு, புதிதாக கிடைத்த பல மணிநேர அவகாசம் அவர்களுக்கு இருப்பதை பற்றியும் சொல்லவேண்டியதே இல்லை.”—செய்தி புகைப்பனி—தேவைக்கதிகமான தகவலை தப்பிப்பிழைத்தல்.
[பக்கம் 12-ன் பெட்டி]
இன்டர்நெட் ஜாக்கிரதை
ஒழுக்கங்கெட்ட தனிநபர்கள் தங்கள் முறைகேடான பாலுறவு ஆசைகளை திருப்தி செய்துகொள்ளவும், அதற்கு இணங்கும் துணைகளுடன் அல்லது அப்பாவி பலியாட்களுடன் தொடர்புகொள்ளவும் இன்டர்நெட்டைப் பயன்படுத்துகின்றனர். மற்றவர்கள், தங்களுடைய தனிப்பட்ட விருப்பங்களை திருப்தி செய்துகொள்ள இன்டர்நெட்டைப் பயன்படுத்துகின்றனர். கள்ளப்போதகர்களும்கூட, அனுபவமில்லாதவர்களைப் பிடிப்பதற்காக, வெப்-சைட்டுகளை உருவாக்கி இருக்கின்றனர்.
ஆகவே, இன்டர்நெட்டை உபயோகிக்கும்போது மிகவும் அதிக கவனம் தேவை. அதை உபயோகிக்கும் தங்கள் பிள்ளைகளை நிச்சயமாகவே பெற்றோர் கவனமாக மேற்பார்வையிட வேண்டும். ஆராய்ச்சிக்கான லைப்ரரிகள், புக் ஸ்டோர்கள், நியூஸ் சேனல்கள் போன்ற அநேக உபயோகமான மூலங்கள் இருப்பது உண்மையே. உதாரணமாக, யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய உண்மையான தகவலைக் கொடுப்பதற்காக, சமீபத்தில் உவாட்ச்டவர் சொஸைட்டி தனது சொந்த வெப்-சைட்டை (http://www.watchtower.org) அறிவித்தது. இருந்தாலும், கம்ப்யூட்டர் ஆபாசமும் கள்ளப்போதகமும் உட்பட, மிகவும் ஆபத்தான சில செல்வாக்குகளும் இன்டர்நெட்டில் இருக்கின்றன என்பதை ஒருவர் உணர வேண்டும்.
ஒரு கிறிஸ்தவர், பவுலின் ஆலோசனையை மனதில் வைத்திருக்க வேண்டும்: “ஆதலால், கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில், மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறது போல நீங்கள் இனி நடவாமலிருங்கள். . . . உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள். நீங்களோ இவ்விதமாய்க் கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ளவில்லை.” (எபேசியர் 4:17-20) “மேலும் பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது. அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்.” (எபேசியர் 5:3, 4) ஒழுக்கங்கெட்ட அல்லது நேர்மையற்ற நோக்கமுள்ள மக்களால் அநேக வெப்-சைட்டுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒழுக்கங்கெட்டவையாக அல்லது நேர்மையற்றவையாக இராத மற்ற அநேக வெப்-சைட்டுகள், கதையடிக்கும் கிளப்புகள் போன்றவை, வெறுமனே நேரத்தை வீணாக்குபவையே. அப்படிப்பட்ட எல்லாவற்றிலிருந்தும் விலகியிருங்கள்!