இன்டர்நெட்—ஜாக்கிரதை!
1 யெகோவாவின் மக்கள் ஒருவரோடொருவர் பரஸ்பர கூட்டுறவை அனுபவித்து மகிழ்கின்றனர். ஊழியத்தில் அவர்கள் பெற்ற அனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கின்றனர். யெகோவாவின் சாட்சிகளைப் பற்றியும் உலகம் முழுவதிலும் நடக்கும் ராஜ்ய வேலையைப் பற்றியும் கேட்பதில் சந்தோஷமடைகின்றனர். ஏதாவது நெருக்கடி அல்லது இயற்கை நாசங்கள் போன்றவை அவர்களுடைய உடன் சகோதரர்களுக்கு ஏற்பட்டால் அதை உடனடியாக தெரிவிக்க வேண்டும் எனவும் அந்த சமயங்களில் உதவி ஏதும் தேவையா என்பதை தெரிந்துகொள்ளவும் விரும்புகிறார்கள். இப்படிப்பட்ட அக்கறை, சகோதர ஐக்கியத்தை காட்டுகிறது. நாம் ஒருவரிலொருவர் அன்புகூருகிறோம் என்பதை இது நிரூபிக்கிறது.—யோவா. 13:34, 35.
2 இன்று, உலக நிகழ்ச்சிகளை உடனுக்குடன் கேட்கிறோம். எல்லா நிகழ்ச்சிகளையும் விவரமாக உலகம் முழுவதிலும் உள்ளவர்கள் பார்க்கும்படியாக டெலிவிஷனும், ரேடியோவும் உடனுக்குடன் நேரடியாக ஒலிபரப்புகின்றன. உலகின் எந்த மூலைமுடுக்கில் உள்ளவர்களோடும் பேசுவதை சாத்தியமாக்குகிறது டெலிபோன். தகவல் தொடர்புத் துறையில் உலகையே கலக்கிடும் பிரபல்யமான லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு இன்டர்நெட்.—1997, ஜூலை 22, விழித்தெழு! பிரதியைக் காண்க.
3 உலகத்தின் எந்தக் கோடியில் இருந்தாலும் ஒருவரோடு ஒருவர் உடனடியாக தொடர்பு கொள்ள வழிதிறந்தது டெலிபோனே. மிக மிக பயனுள்ள ஒன்றாக டெலிபோன் இருந்தபோதிலும், அதை எப்படி உபயோகப்படுத்துகிறோம் என்பதில் கவனம் தேவை. தவறான சகவாசத்திற்கும் அல்லது செயல்களுக்கும் தூண்டுகோலாய் அது அமைந்திடலாம். டெலிபோனை அளவுக்கு மிஞ்சி பயன்படுத்தினால் பெருஞ்செலவாகும். கல்வித்துறையில் ரேடியோவும் டெலிவிஷனும் பெரும்பங்கு வகிக்கின்றன. விசனத்திற்குரிய விஷயம் என்னவென்றால், அவற்றில் வரும் நிகழ்ச்சிகளில் பெரும்பாலானவை ஒழுக்கக்கேடான நிகழ்ச்சிகளாகவே இருக்கின்றன. அவற்றைப் பார்ப்பது நேரத்தை வீணடிப்பதே. டெலிவிஷனிலும் ரேடியோவிலும் நிகழ்ச்சிகளை தேர்ந்தெடுத்து பார்ப்பது அல்லது கேட்பதே ஞானமான செயல்.
4 குறைந்த செலவில், உலகிலுள்ள லட்சக்கணக்கான ஆட்களோடு தொடர்பு கொள்வதை இன்டர்நெட் சாத்தியமாக்குகிறது. கணக்கிலடங்கா தகவல்களை தெரிந்துகொள்ளும் வாய்ப்பிற்கும் இது வழி திறக்கிறது. (விழித்தெழு!, ஜனவரி 8, 1998) எனினும், கட்டுப்பாடில்லாமல் இன்டர்நெட்டை பயன்படுத்துவது, ஒருவரை ஆவிக்குரிய மற்றும் ஒழுக்க ரீதியான படுகுழிகளில் தள்ளிவிடும். எப்படி?
5 வெடிகுண்டுகள் உட்பட ஆயுதங்களை எப்படி தயாரிப்பது போன்ற தகவல்கள் இதில் உடனடியாக கிடைப்பதைக் குறித்து அநேகர் கவலை தெரிவிக்கின்றனர். வேலையாட்கள், இன்டர்நெட்டில் மூழ்கி நேரத்தை பெருமளவில் வீணடிப்பதாக தொழிற்சாலைகள் குறைகூறுகின்றன. இதில் இருக்கும் ஆவிக்குரிய ஆபத்துகளைப் பற்றி நம் பிரசுரங்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன. கிறிஸ்தவர்கள் ஒட்டுமொத்தமாக தவிர்க்கவேண்டிய வன்முறை, தரங்கெட்ட பாலியல் உறவுகளை காட்டும் நிகழ்ச்சிகளே பெரும்பாலும் இப்படிப்பட்ட இன்டர்நெட்டுகளில் வலம் வருகின்றன. (சங். 119:37) இந்த ஆபத்துகள் அத்துடன் முடிந்துவிடுவதில்லை, யெகோவாவின் சாட்சிகள் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டிய மற்றொரு படுகுழியும் இருக்கிறது. அது என்ன?
6 முன்பின் தெரியாத ஒருவரை உங்கள் வீட்டிற்குள் அனுமதிப்பீர்களா? வந்தவரைப் பற்றி எதுவும் தெரிந்துகொள்ள வாய்ப்பே இல்லை என்றால் அப்போது? அப்படிப்பட்ட ஓர் ஆளை உங்கள் பிள்ளைகளோடு தனியே இருக்க அனுமதிப்பீர்களா? ஆனால், இவையனைத்தும் இன்டர்நெட் மூலம் சர்வசாதாரணமாக அனுமதிக்கப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
7 உங்களுக்கு தெரியாத ஒரு நபருக்கு ஈ-மெயில் மூலம் செய்தி அனுப்பவும் முடியும், செய்தியைப் பெற்றுக்கொள்ளவும் முடியும். ஈ-மெயில் உரையாடலில் நீங்கள் பங்குகொள்ளும்போதும் இதுவே நிகழ்கிறது. அதில் பங்குகொள்வோர், தாங்கள் யெகோவாவின் சாட்சிகள் என சொல்லிக்கொள்கின்றனர். ஆனால், உண்மையில் அவர்கள் சாட்சிகள் அல்ல. அதேபோல், இளைஞராக இல்லாத ஒருவரும்கூட தான் இளைஞர் என்று சொல்லிக்கொள்ளலாம். அல்லது தன்னை ஆண் அல்லது பெண் என சொல்லி ஏமாற்றவும்கூடும்.
8 நம் நம்பிக்கைகளைப் பற்றிய குறிப்புகளாகவோ அல்லது அனுபவங்களாகவோ தகவல்கள் உங்களுக்கு வரலாம். இந்த தகவல்கள் மற்றவர்களுக்கும் அனுப்பப்படுகிறது. அவர்கள் அதை இன்னும் நிறைய பேருக்கு அனுப்பலாம். ஆனால், பெரும்பாலான சமயங்களில் கிடைத்த தகவல்கள் உண்மையா என்று சரிபார்க்க முடிவதில்லை. மேலும், அத்தகவல்கள் பொய்யானவையாகவும் இருக்கலாம். இத்தகைய தகவல்கள், விளக்கங்கள் அல்லது குறிப்புகள் என்ற போர்வையில் விசுவாசத்துரோக கருத்துக்கள் பரப்பப்படலாம்.—2 தெ. 2:1-3.
9 நீங்கள் இன்டர்நெட்டை உபயோகிப்பவராக இருந்தால், இந்த ஆபத்தை மனதில்கொண்டு பின்வரும் கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள்: ‘எதற்காக அதை நான் உபயோகப்படுத்துகிறேன்? நான் அதை உபயோகிக்கும் விதம் என்னை ஆவிக்குரிய படுகுழியில் தள்ளும் சாத்தியம் இருக்கிறதா? மற்றவர்களை ஆவிக்குரிய அபாயத்திற்குள்ளாக்க நான் ஒரு கருவியாக இருக்கிறேனா?’
10 “யெகோவாவின் சாட்சிகளு”டைய வெப் சைட்: யெகோவாவின் சாட்சிகள் என சொல்லிக்கொள்ளும் சில நபர்களால் நடத்தப்படும் சில இன்டர்நெட் சைட்டுகளை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள். சாட்சிகள் என உரிமைபாராட்டிக் கொள்ளுபவர்களால் தரப்படும் அனுபவங்களை தங்களுடைய வெப் சைட்டில் வாசிக்க உங்களை அழைக்கலாம். சங்கத்தின் பிரசுரங்களைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களையும் எண்ணங்களையும் பகிர்ந்துகொள்ள நீங்கள் உற்சாகப்படுத்தப்படலாம். வெளி ஊழியத்தில் பேசுவதற்கான குறிப்புகளை சொல்லலாம். இந்த வெப்சைட்கள், தனி நபர்கள் தொடர்புகொள்ளும் உரையாடல் தளங்கள் அமைத்து கொடுக்கும். டெலிபோனில் பேசுவதுபோலவே மற்றவர்களோடு நீங்கள் பேசலாம். உலகம் முழுவதிலும் உள்ள யெகோவாவின் சாட்சிகளோடு நேரடியாக தொடர்புகொள்ளும் மற்ற சைட்டுகளையும் அவர்கள் உங்களுக்கு சொல்லலாம். இப்படிப்பட்ட தொடர்புகள் விசுவாசத்துரோகிகள் தந்திரமாக பின்னிய வலை அல்ல என்பதை நீங்கள் உறுதியாக மறுக்க முடியுமா?
11 இன்டர்நெட் மூலமாக சகவாசம் கொள்வது, எபேசியர் 5:15-17-ல் உள்ள பரிந்துரைகளுக்கு இசைவாக இல்லை. அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார்: “நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போல் கவனமாய் நடந்து கொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள். ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.”
12 “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பார் மூலம் நாம் ஆவிக்குரிய விதத்தில் போஷிக்கப்படும் தேவராஜ்ய ஏற்பாடே கிறிஸ்தவ சபை. (மத். 24:45-47, NW) கடவுளுடைய அமைப்பில், வழிநடத்துதலையும் பாதுகாப்பையும் நாம் பெறுகிறோம். உலகில் இருந்து தனியே பிரிந்திருக்க இது நமக்கு உதவுகிறது. அதோடு, கர்த்தருடைய வேலையில் சுறுசுறுப்பாய் இருக்கவும் நம்மை உந்துவிக்கிறது. (1 கொ. 15:58) கடவுளுடைய மக்கள் கூடியிருந்த சபையிலே பாதுகாப்பையும் ஆனந்தத்தையும் அனுபவித்ததாக சங்கீதக்காரன் சொல்கிறார். (சங். 27:4, 5; 55:14; 122:1) சபையில் உள்ள அனைவருக்கும் ஆவிக்குரிய ஆதரவையும் உதவியையும் சபை அளிக்கிறது. அங்கே, அன்பும் கரிசனையும் மிக்க உதவிடும் நண்பர்களை நீங்கள் காணலாம். இவர்கள் இக்கட்டு காலங்களில் ஆறுதலாகவும் உதவி செய்யும் விருப்பத்தோடு தயாராயும் இருப்பவர்கள். இவர்களெல்லாரையும் உங்களுக்கு தனிப்பட்ட விதமாக நன்றாக தெரிந்திருக்கும். (2 கொ. 7:5-7) மனந்திரும்பாமல் தொடர்ந்து பாவம் செய்துகொண்டிருப்பவர்களை அல்லது விசுவாசத்துரோக எண்ணங்களை வித்திட்டு, வளர்ப்பவர்களை சபைநீக்கம் செய்யும் வேதாகம ஏற்பாட்டின்மூலம் சபை அங்கத்தினர்கள் காக்கப்படுகின்றனர். (1 கொ. 5:9-13, தீத். 3:10, 11) இப்படிப்பட்ட அன்பான ஏற்பாடுகளை இன்டர்நெட் வழியாக சகவாசம் கொள்ளும் நபர்களிடம் எதிர்பார்க்க முடியுமா?
13 ஆனால், இதற்கு நேர் எதிர்மாறான விளைவுகளையே இன்று நாம் காண்கிறோம். விசுவாசத்துரோக பிரச்சாரத்தின் சாதனமாகவே சில வெப் சைட்டுகள் நிரூபித்திருக்கின்றன. இந்த வெப் சைட்டுகள், தாங்கள் அப்படிப்பட்டவை அல்ல என ஒருவேளை சொல்லிக்கொள்ளலாம். அவைகளில் நிகழ்ச்சிகளை அளிப்பவர்களும் தாங்கள் உண்மையிலேயே யெகோவாவின் சாட்சிகள்தான் என்பதை உறுதிப்படுத்த விரிவான விளக்கங்களையும் தரலாம். நீங்கள் ஒரு யெகோவாவின் சாட்சிதானா என்பதை உறுதிப்படுத்த உங்களிடமிருந்தே தகவல்களைக் கேட்கலாம்.
14 இந்த விஷயங்களில் நாம் பகுத்தறிவோடு செயல்பட வேண்டுமென யெகோவா விரும்புகிறார். ஏன்? ஏனென்றால், பல ஆபத்தான படுகுழிகளில் இருந்து உங்களை அது பாதுகாக்கும் என அவர் அறிந்திருக்கிறார். நீதிமொழிகள் 2:10-19 இவ்வாறு தொடங்குகிறது: “ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது, நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி [பகுத்தறிவு] உன்னைப் பாதுகாக்கும்.” எதிலிருந்து பாதுகாக்கும்? ‘துன்மார்க்கனுடைய வழியிலிருந்து,’ நீதியான பாதைகளை விட்டு விலகுபவர்களிடமிருந்து, ஒழுக்கம்கெட்ட மனிதர்களிடமிருந்து, தாறுமாறான பாதைகளில் நடப்பவர்களிடமிருந்து பாதுகாக்கும்.
15 ராஜ்ய மன்றத்திற்கு போகும்போது, நாம் நம் சகோதரர்களோடு இருக்கிறோம். இதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்கள் நமக்கு தெரிந்தவர்கள். இதற்கு எந்த ஆதாரமும் தேவையில்லை. ஏனென்றால், வெளிப்படையாக காட்டப்படும் சகோதர அன்பே அதற்கு நிரூபணம். நாம் யெகோவாவின் சாட்சிகள்தான் என்பதை நிரூபிக்க சான்றிதழ்கள் தேவையில்லை. எபிரெயர் 10:24, 25-ல் பவுல் சொல்லியபடி, ஒருவருக்கொருவர் உண்மையான உற்சாகப்படுத்துதலை இங்கே நாம் கண்டடையலாம். வெப் சைட்டுகள் மூலம் சகவாசம் கொண்டாலோ இவையனைத்தும் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. சங்கீதம் 26:4, 5-ல் உள்ள வார்த்தைகளை மனதில் கொள்வது, இன்டர்நெட்டில் வெப் சைட்டுகளை உபயோகப்படுத்துவதில் இருக்கும் ஆபத்துக்களுக்கு நம்மை எச்சரிக்கும்.
16 இன்டர்நெட்டை உபயோகிப்பவர்கள் வைத்திருக்கும் தகவல்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடோ, வரையறையோ இல்லை. அதேபோல அவர்கள் பெறக்கூடிய தகவல்களுக்கும் இதேநிலைதான். வன்முறையும் தவறான நடத்தையும் நிறைந்த இப்படிப்பட்ட சூழலுக்கு எளிதில் பலியாடுகளாவது பெரும்பாலும் பிள்ளைகளும் வாலிப வயதினருமே. பிள்ளைகள் எதையும் எளிதில் நம்பிவிடுபவர்கள், எந்த விஷயத்தையும் துருவித்துருவி ஆராயும் ஆவல் உடையவர்கள், சமீபத்தில் பிரபலமாகி வரும் உலகளாவிய கம்ப்யூட்டர் வலைப்பின்னலை (cyberspace) ஆராயும் ஆர்வமுடையவர்கள். எனவே, பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும். இன்டர்நெட்டை உபயோகிப்பதில் பிள்ளைகளுக்கு தெளிவான வேதாகம புத்திமதிகளை கொடுக்க வேண்டும். இசை அல்லது சினிமாக்களை தேர்ந்தெடுப்பதில் எப்படி அறிவுரைகளை அளிப்பார்களோ அதேமாதிரி இந்த விஷயத்திலும் அவர்களை வழிநடத்த வேண்டும்.—1 கொ. 15:33.
17 வருத்தத்திற்குரிய விஷயம் என்னவெனில், நம் சகோதர, சகோதரிகளாக ஒருசமயம் இருந்தவர்கள் சபைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஏன்? ஏனென்றால், இப்படிப்பட்ட இன்டர்நெட் உரையாடல்களில் உலகப்பிரகாரமான ஆட்களோடு சகவாசத்தை ஆரம்பித்து, முடிவில் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டதன் காரணமாகவே. சில கணவன்மார்களும் மனைவிமார்களும் தங்கள் துணையை விட்டுவிட்டு இன்டர்நெட்டில் ஆரம்பித்த உறவுகளைப் பின்தொடர்ந்து சென்றிருப்பதை ஜீரணிக்க முடியாத அதிர்ச்சியுடன் மூப்பர்கள் தெரிவித்திருக்கின்றனர். (2 தீ. 3:6, 7) இந்த விசுவாசத்துரோகிகளால் கொடுக்கப்பட்ட தகவல்களை நம்பி இன்னும் பலர் சத்தியத்தை விட்டு சென்றிருக்கின்றனர். (1 தீ. 4:1, 2) மிக பயங்கரமான இந்த ஆபத்துக்களை சிந்திக்கையில், இன்டர்நெட் உரையாடல்களில் ஈடுபடுவதில் அதிக ஜாக்கிரதையாய் இருக்க வேண்டுமென்பது நியாயமானதல்லவா? நிச்சயமாகவே! நீதிமொழிகள் 2:10-19-ல் சொல்லப்பட்டுள்ள ஞானம், அறிவு, நல்யோசனை, பகுத்தறிவு ஆகியவற்றை நடைமுறையில் செயல்படுத்துவதே இவற்றிலிருந்து நம்மை காக்கும்.
18 நற்செய்தியைப் பிரசங்கிக்க வெப் சைட்டுகளை அநேகர் உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவற்றில் பல, ஞானமற்ற விதத்தில் நம் சகோதரர்களால் உருவாக்கப்பட்டவை. மற்றவையோ, சூதுவாதறியாத அப்பாவிகளை வேட்டையாட விரும்பும் விசுவாச துரோகிகளால் உருவாக்கப்பட்டவை. (2 யோ. 9-11) இப்படிப்பட்ட வெப் சைட்டுகளை நம் சகோதரர்கள் உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறதா என்பதைப் பற்றி 1997, நவம்பர் நம் ராஜ்ய ஊழியம், 3-ம் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டது: “யெகோவாவின் சாட்சிகளைப் பற்றியோ, நம் செயல்களைப் பற்றியோ, அல்லது நம் நம்பிக்கைகளைப் பற்றியோ தனிப்பட்ட நபர்கள் எவருமே இன்டர்நெட்டில் வெப் சைட்டுகளை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. நம் சங்கத்தின் அதிகாரப்பூர்வ வெப் சைட்டே [www.watchtower.org] போதுமானது. நம் அமைப்பைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு துல்லியமான தகவல்களை இது அளிக்கும்.”
19 இன்டர்நெட் வழியாக படிக்க உதவி? தேவராஜ்ய நடவடிக்கைகள் பலவற்றைப் பற்றிய ஆராய்ச்சி செய்யப்பட்ட தகவல்களை சிலர் இன்டர்நெட்டில் கொடுக்கின்றனர். இப்படியாக நம் சகோதரர்களுக்கு சேவை செய்வதாக சிலர் நினைக்கின்றனர். உதாரணமாக, ஒரு பொதுப்பேச்சு குறிப்புத்தாளின் அடிப்படையில் ஒருவர் ஆராய்ச்சி செய்யலாம். பின்னர் அந்தக் குறிப்புகளை வெப் சைட்டில் போடலாம். அதே குறிப்புத்தாளின் பேரில் பேச்சு கொடுக்க வேண்டிய மற்றொருவர் இதனால் நன்மையடைவார் என அவர் ஒருவேளை நினைக்கலாம். படிக்க வேண்டிய காவற்கோபுர படிப்பில் வரும் எல்லா வசனங்களையும் இன்னொருவர் அதில் சேர்க்கலாம். தேவராஜ்ய ஊழியப்பள்ளிக்கான அல்லது சபை புத்தக படிப்பிற்கான கட்டுரைகளை அதில் சேர்க்கலாம். வெளி ஊழியத்தில் பேசுவற்கு சில ஆலோசனைகளை சிலர் கொடுக்கலாம். ஆனால், இவையெல்லாம் உண்மையிலேயே பயன் அளிப்பவையா?
20 யெகோவாவின் அமைப்பு அளிக்கும் பிரசுரங்கள், கட்டியெழுப்பும் எண்ணங்களால் நம் மனங்களை உந்துவிக்கின்றன. மேலும், ‘நன்மை தீமையின்னதென்று . . . பகுத்தறிய’ நம்மை பயிற்றுவிக்கின்றன. (எபி. 5:14) நமக்காக இன்னொருத்தர் ஆராய்ச்சி செய்வதால் இந்த பயிற்றுவிப்பு கிடைக்குமென சொல்ல முடியுமா?
21 “தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிக”ளென பெரோயா பட்டணத்தார் சொல்லப்பட்டனர். ஏன்? ஏனென்றால், அவர்கள் ‘மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்தார்கள்.’ (அப். 17:11) பவுலும் சீலாவும் அவர்களுக்கு பிரசங்கித்தனர். என்றபோதிலும், தனிப்பட்ட விதமாக அவர்களும் ஆராய்ந்திராமல் சத்தியத்தை தங்களுடையதாக்கிக் கொண்டிருக்க முடியாது.
22 ஒரு பேச்சிற்கோ அல்லது கூட்டங்களுக்காக தயாரிப்பதற்கோ, இன்னொருவரின் ஆராய்ச்சிக் குறிப்புகளை உபயோகிப்பது உண்மையிலேயே தனிப்பட்ட படிப்பின் நோக்கத்தையே ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறது. கடவுளுடைய வார்த்தையில் உங்கள் சொந்த விசுவாசத்தை பலப்படுத்த வேண்டுமென்பது உங்கள் விருப்பமில்லையா? ஆணித்தரமான நம்பிக்கையின் அடிப்படையில், உங்கள் விசுவாசத்தை அறிக்கையிடலாம்—உங்கள் பேச்சுகளில், கூட்டங்களில் நீங்கள் சொல்லும் பதிலில், வெளி ஊழியத்தில். (ரோ. 10:10) இன்னொருவரின் ஆராய்ச்சிக் குறிப்புகளை பயன்படுத்துவது, நீதிமொழிகள் 2:4, 5-ல் விளக்கப்பட்டு உள்ளவற்றிற்கு கொஞ்சம்கூட பொருந்தாது. தனிப்பட்டவிதமாக ஒவ்வொருவரும் ‘புதையல்களைத் தேடுகிறதுபோல் . . . தேவனை அறியும் அறிவை’ நாடி தேட வேண்டுமென அந்த வசனங்கள் சொல்கின்றன.
23 உதாரணமாக, உங்கள் சொந்தப் பிரதியில், பைபிள் வசனங்களை எடுத்துப் பார்க்கும்போது, ஒவ்வொரு வசனத்தின் சூழமைவையும் நீங்கள் சுருக்கமாக சிந்தித்து பார்க்கலாம். லூக்கா தன்னுடைய சுவிசேஷத்தை எழுதியபோது ‘எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்ததுபோல’ நீங்களும் செய்யலாம். (லூக். 1:3) பேச்சுக்களை கொடுக்கும்போதும், வெளி ஊழியத்திலும் திறமையாக வசனங்களை எடுக்க இந்த கூடுதல் முயற்சி உங்களுக்கு உதவும். யெகோவாவின் சாட்சிகள் எப்படி அருமையாக பைபிள் வசனங்களை எடுக்க தெரிந்திருக்கின்றனர் என்பதே அவர்களை பெரிதும் கவர்ந்திழுத்ததாக அநேகர் தெரிவிக்கின்றனர். நம் சொந்த பைபிள்களில் வசனங்களை எடுத்துப் பார்ப்பதை ஒரு பழக்கமாக கொண்டிருந்தால் மட்டுமே இது நமக்கு பொருந்தும்.
24 நேரத்தை ஞானமாக உபயோகித்தல்: இன்டர்நெட் வெப்சைட்களில் தகவல்களை கொடுக்க அவற்றை உருவாக்கவும் அவற்றில் உள்ள தகவல்களை படித்து, பதில் அளிக்கவும் செலவிடப்படும் நேரமே கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய மற்றொரு காரியம். “நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்” என்று ஜெபிக்கும்படி சங்கீதம் 90:12 நம்மை உற்சாகப்படுத்துகிறது. மிஞ்சியுள்ள ‘காலம் குறுகினது’ என பவுல் அறிவுறுத்துகிறார். (1 கொ. 7:29) “ஆகையால், நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மை செய்யக்கடவோம்” என அவர் மேலும் கூறுகிறார்.—கலா. 6:10.
25 நம்முடைய நேரத்தை ஞானமாக உபயோகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இப்படிப்பட்ட ஆலோசனை சிறப்பித்துக் காட்டுகிறது. கடவுளுடைய வார்த்தையை படிப்பதில் செலவிடும் நேரம் எவ்வளவு நன்மையளிக்கும் ஒன்று! (சங். 1:1, 2) நாம் வைத்திருக்கும் சகவாசத்திலேயே மிகச் சிறந்தது அதுவே. (2 தீ. 3:16, 17) பெற்றோரே, ராஜ்ய அக்கறைகளில் நேரத்தை ஞானமாக செலவிடுவதன் பயனை உங்கள் பிள்ளைகளுக்கு போதிக்கிறீர்களா? (பிர. 12:1) இன்டர்நெட்டிலுள்ள தகவல்களை தேடி தேடி, விரயமாக்கும் நேரத்தைவிட, தனிப்பட்ட மற்றும் குடும்ப பைபிள் படிப்பில், கூட்டங்களுக்கு செல்வதில், வெளி ஊழியத்தில் செலவிடப்படும் நேரமே அதிக பலனளிப்பது.
26 ஆவிக்குரிய காரியங்களுக்கும், கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அவசியமான அதோடு பொருத்தமான காரியங்களுக்கும் நம் கவனத்தை செலுத்துவதே ஞானமான போக்கு. இந்த விஷயத்தில் நாம் எடுக்கும் தீர்மானம் நன்கு தீர யோசித்து எடுத்த ஒன்றாக இருக்க வேண்டும். நம் எண்ணங்களையும் நேரத்தையும் சிறந்ததாக்கும் பொன்னான தகவல்களாக அவை இருக்க வேண்டும். நம் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு பொருத்தமானதைப் பற்றி இயேசு ரத்தினசுருக்கமாக கூறினார். கிறிஸ்தவர்களாக, “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்” என அவர் சொன்னார். (மத். 6:33) மற்ற நடவடிக்கைகளல்ல. மாறாக ராஜ்ய அக்கறைகளால் உங்கள் வாழ்க்கை நிரம்பியதாக இருக்கும்போது நீங்கள் அளவிலா சந்தோஷம் அடைகிறீர்கள் அல்லவா?
27 இன்டர்நெட் ஈ-மெயில்: தூர இடங்களில் வாழும் குடும்ப அங்கத்தினர்களுடனோ அல்லது நண்பர்களுடனோ, நம்முடைய அனுபவங்களை அல்லது எண்ணங்களை பகிர்ந்துகொள்வது பொருத்தமானதே. என்றபோதிலும், உங்களுடைய குடும்ப அங்கத்தினர்களையோ அல்லது நண்பர்களையோ தெரியாத மற்றவர்களுக்கு இந்த தகவல்களை அனுப்புவது உண்மையிலேயே அன்பான செயலா? அல்லது யார் வேண்டுமானாலும் படிக்கும்படி வெப் சைட்டில் தகவல்களை போடலாமா? இப்படிப்பட்ட தனிப்பட்ட தகவல்கள் பல பிரதிகள் எடுக்கப்பட்டு, உங்களுக்கு தெரிந்தவர்களோ அல்லது தெரியாதவர்களோ யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பப்படலாமா? அதைப்போலவே, உங்களுக்காக அனுப்பப்படாத தகவல்களை நீங்கள் பெறும்போது, அவற்றை இன்னும் அநேகருக்கு அனுப்புவது அன்பான காரியமா?
28 நீங்கள் அனுப்பிய அனுபவமோ அல்லது தகவலோ உண்மையானதாக இல்லாவிட்டால்? பொய்யை பரப்புவதில் நீங்களும் பங்காளியாகி விடுவீர்களல்லவா? (நீதி. 12:19; 21:28; 30:8; கொ. 3:9) ஆகவே, “[நாம்] ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போல் கவனமாய் நடந்து”கொண்டால், இதை நாம் நிச்சயமாகவே ஆழ்ந்து சிந்திப்போம். (எபே. 5:15) சரியான “வழி”யிலே தொடர்ந்து நடக்க நம்மை உற்சாகப்படுத்தும் உண்மை அனுபவங்கள் நிறைந்த வருடாந்தர புத்தகம், காவற்கோபுரம், விழித்தெழு! போன்ற பிரசுரங்களுக்காக நாம் எவ்வளவு மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கிறோம்!—ஏசா. 30:20, 21.
29 மற்றொரு ஆபத்தும் இருக்கிறது. சிலரை குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு எழுதினார்: “அவர்கள் சோம்பலுள்ளவர்களாய், வீடுவீடாய்த் திரியப் பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாய் மாத்திரமல்ல, அலப்புகிறவர்களாயும் வீணலுவற்காரிகளாயும் தகாத காரியங்களைப் பேசுகிறவர்களாயும் இருப்பார்கள்.” (1 தீ. 5:13) தேவையற்ற தகவல்களை நம் சகோதரர்களுக்கு அனுப்புவதில் எடுக்கப்படும் முயற்சி, செலவிடப்படும் நேரம் இவற்றிற்கு எதிராக இது எச்சரிக்கிறது.
30 ஈ-மெயில் வழியாக கிடைக்கும் எல்லா தகவல்களையும் அப்போதைக்கப்போது படிக்க எடுக்கும் நேரத்தைப் பற்றியும் சிந்தியுங்கள். ஆர்வத்தைத் தூண்டும் விஷயம் என்னவெனில், “ஈ-மெயிலில் கிடைக்கும் செய்திகளைப் படிப்பதில் ஒருவர் அதிக நேரத்தை செலவழிக்க செலவழிக்க, ஆர்வத்தைத் தூண்டும் புதுமையாக அல்ல, ஆனால் நேரத்தை வீணடிக்கும் தொல்லையாகிவிடுகிறது இந்த ஈ-மெயில். ஒவ்வொரு நாளும் உடன் வேலை செய்பவர்களிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும், குடும்ப அங்கத்தினர்களிடமிருந்தும் வந்து குவியும் செய்திகளையும், . . . தேவையற்ற விளம்பரங்களையும் படித்து, அவற்றிற்கு பதில் அனுப்புவது பெரும் சுமையாகிவிடுகிறது,” என டேட்டா ஸ்மாக் என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. “ஈ-மெயிலிலேயே மூழ்கிவிடும் “தகவல் பைத்தியங்கள்” பெறும் ஒவ்வொரு துணுக்கு செய்தியையும், அது ஜோக்குகளாக இருந்தாலும்சரி, நகர்ப்புற கட்டுக்கதைகளாக இருந்தாலும்சரி, எலக்ட்ரானிக் செய்ன் கடிதங்களாக இருந்தாலும்சரி, எல்லாவற்றையும் அட்ரஸ் புக்கில் உள்ள அனைவருக்கும் அனுப்பும் கெட்ட பழக்கத்திற்கு ஆளாகிவிடுகிறார்கள்” என அந்தப் புத்தகம் மேலும் குறிப்பிடுகிறது.
31 ஈ-மெயிலை அனுப்பும் நம் சகோதரர்கள் பலர் மத்தியிலும் இதே நிலைமைதான் இருக்கிறது. ஊழியத்தைப் பற்றிய நகைச்சுவை கதைகள் அல்லது ஜோக்குகள், நம் நம்பிக்கைகளைக் குறித்த கவிதைகள், மாநாடுகளில் அல்லது ராஜ்ய மன்றங்களில் பல பேச்சுகளில் கேட்ட உதாரணங்கள், வெளி ஊழிய அனுபவங்கள் போன்றவற்றை ஒருவரோடொருவர் பகிர்ந்து கொள்வதில் தீங்கு ஏதும் இல்லையென்றே தோன்றலாம். இப்படிப்பட்ட தகவல்களை யார் அனுப்பினார்கள் என பார்க்காமலேயே அப்படியே அவற்றை மற்றவர்களுக்கு அநேகர் அனுப்புகின்றனர். தகவல்களை உண்மையிலேயே யார் அனுப்பியது என்பதை தெரிந்துகொள்வதே இதில் சாத்தியமில்லை. எனவே, அந்தத் தகவல்கள் உண்மையா, பொய்யா என்ற குழப்பத்தில் ஒருவரை ஆழ்த்தி விடுகிறது.—நீதி. 22:20, 21.
32 பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதும்போது ஆரோக்கியமான வார்த்தைகள் என அறிவுறுத்தியவை இம்மாதிரி தேவையற்ற செய்திகளை அல்ல. ‘நீ கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் என்னிடத்தில் கேட்டிருக்கிற ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொண்டிரு’ என எழுதினார். (2 தீ. 1:13) “சுத்தமான பாஷை”யாகிய பைபிள் சத்தியம் “ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தை” உடையதாய் இருக்கிறது. ராஜ்யத்தின் மூலம் யெகோவாவின் அரசுரிமையை நியாயநிரூபணம் செய்யும் பைபிள் பொருளை இது அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. (செப். 3:9) யெகோவாவின் அரசுரிமையை நியாயநிரூபணம் செய்யும் நடவடிக்கைக்கு நம்முடைய நேரம், சக்தி எல்லாவற்றையும் அர்ப்பணிக்க முழுமுயற்சி எடுக்க வேண்டும்.
33 இந்த ஒழுங்குமுறையின் முடிவுகாலத்தின் இறுதிப் பகுதியில் வாழ்கிறோம். எனவே, நம் எச்சரிக்கையை தளரவிடுவதற்கான நேரமல்ல இது. “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்” என பைபிள் எச்சரிக்கிறது. (1 பே. 5:8) “நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்” என அது மேலும் வலியுறுத்துகிறது.—எபே. 6:11.
34 இன்டர்நெட்டை முறைதவறி பயன்படுத்தினால், அதன் சக்தியில் மயங்கியிருப்பவர்களை தன்வயப்படுத்தும் சாத்தானின் கருவியாகிவிடலாம். அது ஓரளவு பயன் அளிப்பதாக இருந்தாலும், அஜாக்கிரதையாய் இருந்தால் அபாயம் உண்டு. குறிப்பாக, பிள்ளைகள் இன்டர்நெட்டை உபயோகிப்பதைக் குறித்து பெற்றோர் அதிக கவனம் உள்ளவர்களாய் இருக்க வேண்டும்.
35 இன்டர்நெட்டை உபயோகிப்பதில் சமநிலையாக இருத்தல் பாதுகாப்பானது. பவுலின் காலத்திற்கேற்ற இந்த அறிவுரையை நாம் போற்றுகிறோம்: “இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாய் [முழுமையாய்] அனுபவியாதவர்கள்போலவும் இருக்கவேண்டும்; இவ்வுலகத்தின் வேஷம் கடந்துபோகிறதே.” (1 கொ. 7:29-31) இவற்றை மனதில் கொண்டிருப்பது, இன்டர்நெட் உட்பட இந்த உலகம் அளிக்கும் எல்லாவற்றிலிருந்தும் நம் கவனமும், நம் குடும்பங்களின் கவனமும் திசை திரும்பாமல் இருக்க உதவும்.
36 சபையில் உள்ள சகோதர, சகோதரிகளோடு நெருங்கிய கூட்டுறவு கொண்டு, மீதமுள்ள நம் நேரத்தை ஞானமாக செலவிடுவதே மிக முக்கியம். அப்படி செய்வோமாகில், ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதற்கு நமக்கு நேரம் கிடைக்கும். இந்த ஒழுங்குமுறை அதன் முடிவை நெருங்குகையில், “மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல” நாம் நடவாமல், “கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்து” நடப்போமாக.—எபே. 4:17; 5:17.