இன்டர்நெட் ஞானமாய் உபயோகியுங்கள்
அச்சடித்தல் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டபோது மக்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ளும் விதமே மாறியது. நவீன காலங்களில் இன்டர்நெட் கண்டுபிடிக்கப்பட்ட பிறகும் அவ்வாறே நடந்திருக்கிறது. நடைமுறை உதவியளிக்கிற இந்தச் சாதனம் உலகத்திற்கு உதவுகிற தகவல்தொடர்பு சாதனம் என்று பொருத்தமாகவே அழைக்கப்படுகிறது. அதில் பல்வேறு விஷயங்களைப் பற்றிய தகவல்களையும், புள்ளிவிவரங்களையும், கருத்துகளையும் பெற முடியும்.
பேச்சுத்தொடர்பு, நம் படைப்பாளர் நமக்குக் கொடுத்த அற்புத வரங்களில் ஒன்று. மற்றவர்களிடம் கருத்துகளையும் தகவல்களையும் பரிமாற அது உதவுகிறது. மனிதர்களோடு முதலில் தொடர்புகொண்டது யெகோவாதான்; அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெள்ளத்தெளிவான வார்த்தைகளில் கூறினார். (ஆதி. 1:28-30) ஆனால், இந்த அற்புத வரம் தவறாக உபயோகிக்கப்படலாம் என்பதை மனித சரித்திரத்தின் ஆரம்பத்திலேயே நடந்த ஒன்று நிரூபித்தது. சாத்தான் ஏவாளிடம் முற்றிலும் பொய்யான ஒரு விஷயத்தைச் சொன்னான். ஏவாள் அதை நம்பி ஆதாமிடமும் கூறினாள்; அதன் விளைவாக மனிதகுலமே படுகுழியில் விழுந்தது.—ஆதி. 3:1-6; ரோ. 5:12.
இன்டர்நெட் உபயோகிப்பதைப் பற்றியென்ன? இன்டர்நெட் நமக்கு மதிப்புள்ள தகவலை அளிக்கிறது, நேரத்தை மிச்சப்படுத்துகிறது, பேருதவியாக இருக்கிறது; அதேசமயம், அது நமக்குப் பொய்யான தகவலை அளிக்கலாம், அளவுக்கதிகமான நேரத்தை வீணாக்கலாம், நம் ஒழுக்கத்தைக் கெடுக்கலாம். ஆக, உலகிற்கே உதவுகிற இந்தத் தகவல்தொடர்பு சாதனத்தை நம் நன்மைக்கு எப்படி உபயோகிக்கலாம் என்று சிந்திப்போம்.
நம்பலாமா, நம்பக்கூடாதா?
இன்டர்நெட்டிலுள்ள தகவல் அனைத்துமே நல்லது, பிரயோஜனமானது என்று நினைத்துவிடாதீர்கள். இன்டர்நெட்டுக்குள் தகவல்களைத் தேட உதவும் ஸர்ச் இஞ்சின்கள், கீரைக்கட்டுகளை விற்போர்போல் உள்ளன; அவர்கள் கீரைகளைப் பறிக்கும்போது அவற்றோடு விஷச் செடிகளையும் பறித்து ஒன்றாகச் சேர்த்து கட்டிவிடலாம். நாம் அவை ஒவ்வொன்றையும் கவனமாக எடுத்துப் பார்த்துக் களைகளை நீக்காமல் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு சமைத்துவிடுவோமா? மாட்டவே மாட்டோம்! அதுபோல், இன்டர்நெட் ஸர்ச் இஞ்சின்கள் ஏகப்பட்ட கம்ப்யூட்டர்களில் உள்ள கோடிக்கணக்கான வெப் பக்கங்களிலிருந்து, மிகச் சிறந்தது முதல் மிக மட்டமானது வரை எல்லா விதமான தகவலையும் சேகரித்து நம் முன் கொட்டுகிறது. அந்தத் தகவலிலிருந்து நமக்குத் தேவையான ‘கீரையை’ மட்டும் பிரித்தெடுக்க வேண்டும்; இல்லையென்றால், அது நம் மனதில் விஷத்தைக் கலந்துவிடும்.
ஒரு பிரபலமான பத்திரிகை 1993-ல் ஒரு கேலிச் சித்திரத்தை வெளியிட்டது; அதில், ஒரு கம்ப்யூட்டர் முன்பு இரண்டு நாய்கள் இருக்கும். ஒன்று இன்னொன்றைப் பார்த்து, “இன்டர்நெட்டில், நாம் நாய்கள் என்பது யாருக்குமே தெரியாது” என்று சொல்லும். பல காலத்திற்கு முன்பு, சாத்தான் ஒரு பாம்பைப் பயன்படுத்தி ஏவாளோடு “அரட்டை” அடித்து, அவள் கடவுளைப் போல் ஆகிவிடலாம் என்று கூறினான். இன்று, இன்டர்நெட் வைத்திருக்கும் எவரும் ‘மேதாவி’ ஆகிவிடலாம்; தன் பெயரைக்கூட வெளியிடாமல் தனக்கு எல்லாம் தெரியும் என்று காட்டிக்கொள்ளலாம். அதோடு, கருத்துகள், தகவல்கள், படங்கள், ஆலோசனைகள் போன்றவற்றை இன்னார்தான் அளிக்க வேண்டுமென்ற எந்த விதிமுறைகளும் இன்டர்நெட்டில் இல்லை.
ஆகவே, இன்டர்நெட்டை உபயோகிக்கும்போது ஏவாளைப் போல் பேதையாக இருக்காதீர்கள். அதிலுள்ள தகவலைக் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு பார்ப்பதுபோல் பாருங்கள். அதை நம்புவதற்கு முன்பு பின்வரும் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்: (1) இந்த விஷயத்தை வெளியிட்டது யார்? இதைப் பற்றிக் கருத்து சொல்ல அவருக்குத் தகுதியிருக்கிறதா? (2) இதை ஏன் வெளியிட்டார்? இதை வெளியிட அவரைத் தூண்டியது எது? ஒருதலைப்பட்சமாகக் கருத்து சொல்கிறாரா? (3) எங்கிருந்து தகவலைப் பெற்றார்? மற்றவர்கள் எடுத்துப் பார்ப்பதற்காக அதைக் குறிப்பிடுகிறாரா? (4) இது சமீபத்திய தகவல்தானா? முதல் நூற்றாண்டில் வாழ்ந்த அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு ஓர் அறிவுரை அளித்தார், அது இன்று நமக்கும் பொருந்துகிறது. “உன்னிடம் ஒப்படைக்கப்பட்டதை நீ பாதுகாத்துக்கொள்; பரிசுத்தமானவற்றுக்கு விரோதமான வீண் பேச்சுகளுக்கும், ‘அறிவு’ என்று தவறாக அழைக்கப்படுகிற முரண்பட்ட கருத்துகளுக்கும் விலகியிரு” என்று அவர் எழுதினார்.—1 தீ. 6:20.
நேரத்தை மிச்சப்படுத்துகிறதா வீணடிக்கிறதா?
இன்டர்நெட்டை ஞானமாகப் பயன்படுத்தினால் நம் நேரமும் சக்தியும் பணமும் மிச்சமாகும் என்பதில் சந்தேகமில்லை. வீட்டில் இருந்துகொண்டே எதை வேண்டுமானாலும் சுலபமாக வாங்கலாம். விலைப் பட்டியல்களை ஒப்பிட்டுப் பார்த்துப் பொருட்களை வாங்குவதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தலாம். இன்டர்நெட் மூலம் பேங்க் வேலைகளையும்கூட செய்துவிடலாம்; இவ்வாறு, எல்லா வரவுசெலவுகளையும் வீட்டில் ஹாயாய் உட்கார்ந்தவாறே எந்நேரத்திலும் கவனித்துக்கொள்ளலாம். அதோடு, எங்காவது சுற்றுலா போக நினைத்தால், குறைந்த செலவில் சௌகரியமாகப் பயணம் செய்வதற்குத் தேவையான தகவல்களை இன்டர்நெட்டில் பெறலாம்; டிக்கெட்டுகளையும் வாங்கிக்கொள்ளலாம். இன்னும் சற்று அலசினால், அங்கு செல்ல என்னென்ன வழிகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொண்டு, தேவையான ஃபோன் நம்பர்களையும் விலாசங்களையும் பெற்றுக்கொள்ளலாம். உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகங்கள் நேரத்தையும், பணத்தையும், பணியாளர்களையும் மிச்சப்படுத்த இப்படிப்பட்ட பல இன்டர்நெட் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்கின்றன.
என்றாலும், இன்டர்நெட்டுக்குக் கோரமான இன்னொரு முகமும் உண்டு. அது மணிக்கணக்கான நேரத்தை விழுங்கிவிடுகிறது. சிலருக்கு அது பிரயோஜனமான சாதனமாக இருப்பதற்குப் பதிலாக ஆசையான விளையாட்டுப் பொருளாக ஆகிவிட்டிருக்கிறது. விளையாடுவது, வாங்குவது, அரட்டை அடிப்பது, ஈ-மெயில் அனுப்புவது, தகவல்களைத் தேடுவது, அலசி ஆராய்வது என சர்வ சதாகாலமும் இன்டர்நெட்டே கதி என்றிருக்கிறார்கள். இதனால், குடும்பம், நண்பர்கள், சபை போன்ற மிக முக்கியமான காரியங்களை அசட்டை செய்ய ஆரம்பிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இன்டர்நெட்டுக்கு அடிமையாகவும் ஆகிவிடலாம். உதாரணத்திற்கு, கொரியாவைச் சேர்ந்த பருவவயதினரில் 18.4 சதவீதத்தினர் இன்டர்நெட்டுக்கு அடிமையாகியிருந்ததாக 2010-ல் வெளியிடப்பட்ட ஒரு புள்ளிவிவரம் காட்டுகிறது. “கணவர்கள் இன்டர்நெட்டுக்கு அடிமையாகிவிட்டதாகப் புலம்பும் மனைவிகளின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது” என்று ஜெர்மனியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டார்கள். ஒரு பெண்ணின் கணவர் இன்டர்நெட்டே கதி என்றிருப்பதால் அடியோடு மாறிவிட்டாராம், இதனால் அவர்களது மணவாழ்வே சீரழிந்துவிட்டதாம்.
ஒருவர் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்குக் கடிதம் எழுதினார். தான் ஒரு “இன்டர்நெட் வெறியனாக” இருந்ததாய்க் குறிப்பிட்டார். சில நாட்களில் அவர் கிட்டத்தட்ட பத்து மணிநேரம் இன்டர்நெட்முன் உட்கார்ந்திருந்தது உண்டாம். “முதலில், எந்தப் பிரச்சினையும் இல்லாததுபோல்தான் தெரிந்தது, ஆனால் காலப்போக்கில் கூட்டங்களுக்குப் போகப் பிடிக்காமல் போனது, அதோடு ஜெபம் செய்வதையே நிறுத்திவிட்டேன்” என அவர் சொல்கிறார். அப்படியே அவர் கூட்டங்களுக்குப் போனாலும் தயாரித்துப் போகவில்லையாம்; அவர் மனமெல்லாம் வீட்டிலிருந்த இன்டர்நெட்டையே சுற்றிச் சுற்றி வந்ததாம். நல்ல வேளையாக, விபரீதம் ஏற்படப் போவதை அவர் புரிந்துகொண்டு, செய்ய வேண்டிய மாற்றங்களைச் செய்தார். ‘இன்டர்நெட் இல்லாமல் நான் இல்லை’ என்ற நிலை நமக்கு ஒருபோதும் வராதபடி பார்த்துக்கொள்வோமாக.
நல்லதா கெட்டதா?
“எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நல்லது எதுவென நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்; அதையே உறுதியாகப் பிடித்துக்கொள்ளுங்கள். எல்லா விதமான பொல்லாத செயலையும் விட்டு விலகுங்கள்” என்று 1 தெசலோனிக்கேயர் 5:21, 22 சொல்கிறது. ஆகவே, இன்டர்நெட்டில் நாம் பார்க்கிற தகவல் கடவுளுடைய உயர்ந்த நெறிகளுக்குப் பொருந்தாமல் ஆட்சேபணைக்குரியதாக இருக்கிறதா என்பதைச் சோதித்துப் பார்ப்பது நம் பொறுப்பு. அது ஒழுக்க ரீதியில் சுத்தமானதாக, கிறிஸ்தவர்களுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். இன்டர்நெட்டில் ஆபாசம் அளவில்லாமல் ஊடுருவியிருக்கிறது; நாம் சர்வ ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் சட்டென அதின் வலையில் சிக்கிவிடுவோம்.
‘நான் இன்டர்நெட்டில் எதையாவது பார்த்துக் கொண்டிருக்கும்போது என் துணையோ, பெற்றோரோ, கிறிஸ்தவச் சகோதரர்களோ வந்துவிட்டால் உடனடியாக அதை மறைத்துவிடுவேனா?’ என்று நம்மையே கேட்டுக்கொள்வது புத்திசாலித்தனமானது. ஆம் என்றால், மற்றவர்கள் இருக்கும்போது மட்டுமே இன்டர்நெட்டைப் பயன்படுத்துவதுதான் நல்லது. நாம் மற்றவர்களோடு தொடர்புகொள்வதற்கும் பொருட்களை வாங்குவதற்கும் இன்டர்நெட் புதிய வழியை வகுத்திருப்பது வாஸ்தவம்தான். அதோடு சேர்த்து, ‘இருதயத்தில் தவறான உறவுகொள்வதற்கும்’ புதிய வழியை வகுத்துவிட்டதே!—மத். 5:27, 28.
மற்றவர்களுக்கு அனுப்புவதா வேண்டாமா?
இன்டர்நெட்டில் தகவல்களைப் பெறுவதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் அனுப்ப முடியும். இதைச் செய்ய நமக்குச் சுதந்தரம் இருந்தாலும், அந்தத் தகவல்கள் உண்மைதானா, தரமானவைதானா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது. நாம் எழுதுகிற அல்லது அனுப்புகிற தகவல் உண்மை என்பதற்கு உத்தரவாதம் தர முடியுமா? அந்தத் தகவலை மற்றவர்களுக்கு அனுப்ப நமக்கு அனுமதி இருக்கிறதா?a அது மற்றவர்களுக்குப் பயன் அளிக்குமா அல்லது உற்சாகம் தருமா? என்ன காரணத்திற்காக அதை அனுப்ப நினைக்கிறோம்? மற்றவர்களை அசத்த வேண்டும் என்பதற்காக மட்டும்தானா?
சரியாகப் பயன்படுத்தினால் ஈ-மெயில் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். அதேசமயத்தில் வண்டி வண்டியான தகவலைத் தந்து நம்மைத் திணறடிக்கவும் செய்யும். சுடச்சுட கிடைக்கும் தகவல்களையோ, கண்ட கண்ட விஷயங்களையோ நாம் எல்லாருக்கும் அனுப்பி வைக்கிறோமா? இப்படிக் கணக்குவழக்கில்லாத மெசேஜ்களை அனுப்பி அவர்களுடைய பொன்னான நேரத்தை வீணடிக்கிறோமா? அவற்றை அனுப்புவதற்குமுன் எதற்காக அனுப்ப நினைக்கிறோம் எனக் கேட்டுக்கொள்ள வேண்டாமா? என்னதான் சாதிக்க விரும்புகிறோம் எனச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? வாழ்க்கையில் நடக்கிற முக்கிய விஷயங்களைத் தெரிவிக்கவும் சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்ளவும்தான் எல்லாரும் உற்றார் உறவினருக்கு கடிதங்கள் எழுதி வந்தார்கள், அல்லவா? இப்போது நாம் ஈ-மெயில் அனுப்புவதன் நோக்கமும் அதுவாகவே இருக்க வேண்டாமா? உண்மையா பொய்யா என்று நமக்கே தெரியாத ஒரு விஷயத்தை எதற்காக மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டும்?
ஆக, இன்டர்நெட்டை என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்? அடியோடு வெறுத்து ஒதுக்கிவிடலாமா? சில சமயங்களில் அப்படிச் செய்ய வேண்டியிருக்கலாம். முன்பு குறிப்பிடப்பட்ட “இன்டர்நெட் வெறியன்” அப்படித்தான் செய்தாராம். அதன் கோரப் பிடியிலிருந்து மீண்டு வர அதுதான் அவருக்கு உதவியது. மறுபட்சத்தில், இன்டர்நெட் நமக்குப் பயன் அளிக்கலாம்; எப்போது? ‘நுண்ணறிவு நமக்குக் காவலாய் இருக்கும்போதும், மெய்யறிவு நம்மைக் காத்துக்கொள்ளும்போதும்’ மட்டுமே!—நீதி. 2:10, 11, பொது மொழிபெயர்ப்பு.
[அடிக்குறிப்பு]
a ஃபோட்டோக்களுக்கும் இது பொருந்தும். நம் உபயோகத்திற்காக ஃபோட்டோக்கள் எடுக்கலாம் என்றாலும், அவற்றை மற்றவர்களுக்கு அனுப்ப நமக்கு அனுமதி இல்லாதிருக்கலாம்; ஃபோட்டோக்களில் உள்ளவர்களின் பெயர்களையும் விலாசங்களையும் மற்றவர்களுக்கு அனுப்பக்கூட நமக்கு அனுமதி இல்லாதிருக்கலாம்.
[பக்கம் 4-ன் படம்]
நீங்கள் எப்படிப் பொய்யான தகவலை நம்பி ஏமாந்துவிடாதிருக்கலாம்?
[பக்கம் 5-ன் படம்]
மெசேஜ் அனுப்புவதற்குமுன் நீங்கள் எதை யோசித்துப் பார்க்க வேண்டும்?