இன்டர்நெட்—ஏன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்?
நிச்சயமாகவே, கல்வி சம்பந்தமாகவும் அன்றாட தகவல் பரிமாற்றம் சம்பந்தமாகவும் இன்டர்நெட் அதிக பயனுள்ளது. ஆனாலும், அதிக தொழில்நுட்பத்துடன் வசீகரமாய் காட்சியளிக்கும் தன்மைகொண்ட அதன் இயல்பைத் தவிர்த்து, தொலைக்காட்சி, தொலைபேசிகள், செய்தித்தாள்கள், நூலகங்கள் ஆகியவற்றில் வெகுகாலமாக இருந்துவரும் அதே பிரச்சினைகளில் சில இன்டர்நெட்களிலும் இருக்கின்றன. ஆகவே, ஒரு பொருத்தமான கேள்வி பின்வருமாறு கேட்கப்படலாம்: இன்டர்நெட்டில் அடங்கியிருக்கும் தகவல்கள் எனக்கும் என் குடும்பத்துக்கும் ஏற்றவைதானா?
இன்டர்நெட்டில் காணக்கூடிய ஆபாசத்தைப் பற்றி எண்ணற்ற அறிக்கைகள் குறிப்பு தெரிவித்திருக்கின்றன. ஆனாலும், இன்டர்நெட், பாலியல் சம்பந்தமாக முறைதகா விஷயங்கள் நிறைந்த வெறும் ஒரு சாக்கடையாய் இருப்பதாக இது குறிப்பிட்டுக் காட்டுகிறதா? இது மிகையான கூற்று என்பதாக சிலர் விவாதிக்கின்றனர். ஒரு நபர், கவனமாகவும் தீர்மானத்துடனும் முயற்சி எடுத்துத்தான் தகாத விஷயங்களைக் கண்டுபிடிக்க முடியும் என அவர்கள் விவாதிக்கின்றனர்.
ஒரு நபர் தரமற்ற விஷயங்களைக் கண்டுபிடிப்பதற்கென்று விருப்பத்துடன் முயற்சி செய்ய வேண்டும் என்பது மெய்யே; ஆனால், வேறெதையும்விட, இன்டர்நெட்டில் வெகு எளிதாக அவற்றைக் கண்டுபிடித்துவிடலாம் என்று மற்றவர்கள் விவாதிக்கின்றனர். சில பட்டன்களைத் தட்டினாலே போதும், ஆடியோ, வீடியோ இணைப்பு உட்பட, படு ஆபாசமான படங்களைப் போன்ற சிற்றின்ப விஷயங்களை ஒருவர் கண்டுபிடித்துவிடலாம்.
இன்டர்நெட்டில் எந்தளவுக்கு ஆபாசம் இருக்கிறது என்பதைப் பற்றிய சர்ச்சை தற்போது ஒரு காரசாரமான விவாதத்திற்குரிய பொருளாய் இருக்கிறது. ஒரு பரவலான பிரச்சினை பற்றிய அறிக்கைகள் மிகைப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சிலர் உணருகின்றனர். ஆனாலும், உங்கள் வீட்டுக் கொல்லைப்புறத்தில் 100 நச்சுப்பாம்புகள் இல்லாமல், ஒருசிலதான் இருக்கின்றன என உங்களுக்குத் தெரியவந்தால், உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பைப் பற்றி குறைந்தளவு கவலையுள்ளவர்களாய் இருப்பீர்களா? இன்டர்நெட்டைப் பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது ஞானமான காரியம்.
சிறார் துர்ப்பிரயோகம் செய்பவர்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள்!
சிறுவர் புணர்ச்சிக்காரர்கள் சிலர், இன்டர்நெட் உரையாடல் அறைகளில் இளைஞருடன் கலந்தாலோசிப்பு செய்கின்றனர் என்று சமீப செய்தி அறிக்கைகள் காட்டியிருக்கின்றன. வயதுவந்த இவர்கள், சிறார்களைப் போலவே தங்களைக் காட்டிக்கொண்டு, சந்தேகப்படாத இளைஞர்களின் பெயர்களையும் முகவரிகளையும் தந்திரமாக பெற்றிருக்கின்றனர்.
காணாமல்போன மற்றும் துர்ப்பிரயோகம் செய்யப்பட்ட சிறார்களுக்கான தேசிய மையம் [The National Center for Missing and Exploited Children (NCMEC)] இந்த நடவடிக்கையில் சிலவற்றை நிரூபித்துள்ளது. உதாரணமாக, 1996-ல், அ.ஐ.மா.-வைச் சேர்ந்த தென் கரோலினாவில், 13 மற்றும் 15 வயது பெண் பிள்ளைகள் இருவரை ஒரு வாரமாகக் காணவில்லை என்று போலீஸ் கண்டறிந்தது. அவர்கள், இன்டர்நெட்டில் தாங்கள் சந்தித்திருந்த 18 வயது ஆணுடன் மற்றொரு மாநிலத்துக்குப் போயிருந்தனர். ஒரு 35 வயது ஆண், பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில் தனித்திருந்த ஒரு 14 வயது பையனுடன் முறைதகா பாலியல் உறவு கொள்ளும்படி அவனை வசப்படுத்தியிருந்ததற்காக குற்றஞ்சாட்டப்பட்டான். இந்த இரண்டு சந்தர்ப்பங்களுமே, இன்டர்நெட் உரையாடல் அறையில் கலந்துரையாடலுடன் ஆரம்பித்தன. 1995-ல், மற்றொரு வயதுவந்த ஆண், ஒரு 15 வயது பையனை ஆன்லைனில் சந்தித்து, அவனை நேரில் சந்திக்கும்படி அவனுடைய பள்ளிக்கே தைரியமாய்ச் சென்றுவிட்டான். இன்னுமொரு வயதுவந்த ஆண், ஒரு 14 வயது பெண்பிள்ளையுடன் பாலுறவு கொண்டிருந்ததை ஒப்புக்கொண்டான். அவள், ஆன்லைன் செய்தி இதழ்ப்பலகைகளில் டீனேஜர்களுடன் தகவல் பரிமாற்றம் செய்வதற்கு தன்னுடைய அப்பாவின் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தியிருந்தாள். அவளும் ஆன்லைனில் இந்த வயதுவந்த ஆணைச் சந்தித்தாள். இந்த இளைஞர் அனைவருமே காலப்போக்கில் வயதுவந்த இந்த ஆட்களிடம் தங்களுடைய உண்மையான பெயர்களைத் தெரிவிக்க கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.
பெற்றோரின் வழிகாட்டுதலுக்கான தேவை
மேற்கண்டவற்றைப் போன்ற சந்தர்ப்பங்கள் ஓரளவு அரிதாகவே நிகழும் அதே சமயத்தில், பெற்றோரும் இந்த விஷயத்தைக் கவனத்துடன் சோதித்துப் பார்க்க வேண்டும். தங்களுடைய பிள்ளைகள் குற்றச்செயலுக்கும் துர்ப்பிரயோகத்துக்கும் குறியிலக்குகளாவதிலிருந்து அவர்களைப் பாதுகாக்க என்ன தகவல் மூலங்கள் பெற்றோர்களுக்கு இருக்கின்றன?
திரைப்படங்களுக்கானவற்றைப் போன்ற தரப்பிரிப்பு சிஸ்டம்கள் முதல், விரும்பத்தகாத பொருட்களை எடுத்துவிடும் வார்த்தை-கண்டுபிடிப்பு சாஃப்ட்வேர் வரையாகவும், போதிய வயதானவர்களுக்கு மாத்திரமே பயன்படுத்துவதற்கான அனுமதி அளிக்கும் சிஸ்டம்கள் வரையாகவும் அநேக புரோகிராம்களைத் தயாரித்து அளிக்க நிறுவனங்கள் ஆரம்பித்திருக்கின்றன. சில சிஸ்டம்கள், குடும்பத்தின் கம்ப்யூட்டரை அவை அடைவதற்கு முன்பாகவே அத்தகைய பொருட்களைத் தடுத்துவிடுகின்றன. என்றபோதிலும், இவற்றுள் பெரும்பாலான சிஸ்டம்கள் முற்றிலும் நம்பத்தக்கவையல்ல; வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்தி அவற்றை எப்படியாவது கண்டுபிடித்துவிடலாம். இன்டர்நெட்டில், எந்தவித ஊறும் ஏற்பட்டுவிடாதபடி காத்துக்கொள்ளும் விதத்திலேயே முதன்முதலில் வடிவமைக்கப்பட்டதால், அதை சென்சார் செய்வது கடினம்.
விழித்தெழு!-வுடன் நடத்தப்பட்ட ஒரு பேட்டியில், கலிபோர்னியாவிலுள்ள சிறார் துர்ப்பிரயோக புலனாய்வுத் துறை ஒன்றை மேற்பார்வையிடும் ஒரு போலீஸ் அதிகாரி பின்வரும் இந்த ஆலோசனையை அளித்தார்: “பெற்றோருடைய வழிகாட்டுதலுக்கு ஈடிணை எதுவுமில்லை. எனக்குமே 12 வயது மகன் இருக்கிறான். நானும் என் மனைவியும் இன்டர்நெட்டைப் பயன்படுத்த அவனுக்கு அனுமதி அளித்திருக்கிறோம்; ஆனால், குடும்பமாகச் சேர்ந்து பயன்படுத்துகிறோம்; மேலும் நாங்கள் எவ்வளவு நேரம் அதில் செலவிடப்போகிறோம் என்பதைப் பற்றியும் கவனமாக இருக்கிறோம்.” உரையாடல் அறைகளைப் பற்றி இந்தத் தகப்பனார் பிரத்தியேகமாக எச்சரிக்கையுடன் இருக்கிறார்; அவற்றைப் பயன்படுத்துவதில் உறுதியான கட்டுப்பாடுகளை வைக்கிறார். அவர் மேலும் கூறுவதாவது: “தனிப்பட்ட கம்ப்யூட்டர் என் மகனின் அறையில் அல்லாமல் வீட்டின் பொது அறையில் வைக்கப்பட்டிருக்கிறது.”
இன்டர்நெட்டைப் பயன்படுத்த தங்களுடைய பிள்ளைகளை அனுமதித்தாலும், எந்தளவுக்கு அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் பெற்றோர்கள் கவனமான சிரத்தை எடுக்க வேண்டியது அவசியம். என்ன நடைமுறையான, நியாயமான முன்னெச்சரிக்கைகள் எண்ணிப் பார்க்கப்பட வேண்டியவை?
வீட்டில் இன்டர்நெட்டைப் பயன்படுத்தத் தீர்மானிக்கும் பெற்றோர்களுக்கென சான் ஜோஸ் மெர்குரி நியூஸ் என்ற செய்தித்தாளின் ஆசிரியர்களில் ஒருவர் சில பயனுள்ள குறிப்புகளை அளிக்கிறார்.
• உங்கள் பிள்ளைகள் உங்களோடு சேர்ந்து இன்டர்நெட்டைப் பயன்படுத்துகையில், உங்களுடைய தீர்மானம் மற்றும் வழிகாட்டுதலின் மதிப்பை அவர்கள் கற்றுக்கொள்ளுகையில் அவர்கள் பெறும் அனுபவம் பயனுள்ளதாய் இருக்கும். உங்களுடைய வழிநடத்துதல் இல்லாமல், “இன்டர்நெட்டிலுள்ள தகவல் எல்லாமே, கிளாஸ் எதுவும் இல்லாத தண்ணீரைப் போன்றது” என்று எச்சரிக்கிறார். நீங்கள் விதிக்கும் விதிமுறைகள், “உங்கள் பிள்ளைகளுக்கு இவ்வளவு காலம் நீங்கள் புகட்டியிருக்கும் பொது அறிவின் தொடர்ச்சியாக இருக்கின்றன.” நீங்கள் அவர்களுக்குக் கற்பித்திருக்கும் விஷயங்களில் ஒன்றின் உதாரணம், முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம் அவர்கள் பேச வேண்டிய விதத்தைப் பற்றிய விதிமுறைகள்.
• இன்டர்நெட் என்பது ஒரு பொது இடம்; அதை குழந்தை காப்பகமாக பயன்படுத்தக் கூடாது. ஒரு மாநகரில், உங்களுடைய பத்து வயது பிள்ளையை தனியே விட்டுவிட்டு, சில மணிநேரம் ஜாலியாக இரு என்று சொல்லமாட்டீர்கள்; இல்லையா?”
• இன்டர்நெட்டில் விளையாட அல்லது உரையாட உதவியாய் இருக்கும் மையங்களைக் கண்டுபிடிப்பதற்கும் வீட்டுப்பாடங்களைச் செய்வதில் உதவியாய் இருக்கும் மையங்களைக் கண்டுபிடிப்பதற்கும் இடையிலான வித்தியாசத்தைக் கண்டுகொள்ள கற்றுக்கொள்ளுங்கள்.
இன்ஃபர்மேஷன் ஹைவேயில் குழந்தை பாதுகாப்பு (ஆங்கிலம்) என்ற NCMEC கைப்பிரதி, இளைஞருக்கென்று பல்வேறு வழிகாட்டு குறிப்புகளை அளிக்கிறது:
• உங்களுடைய முகவரி, உங்கள் வீட்டு தொலைபேசி எண், அல்லது உங்கள் பள்ளியின் பெயர், பள்ளி இருக்கும் இடம் போன்ற தனிப்பட்ட தகவலை வெளியே சொல்லாதீர்கள். உங்கள் பெற்றோரின் அனுமதியின்றி போட்டோக்களை அனுப்பாதீர்கள்.
• உங்களுக்குக் கவலைதரும் தகவல் எதையாவது நீங்கள் பெற்றீர்களென்றால், உடனே உங்கள் பெற்றோரிடம் தெரிவியுங்கள். தயவற்ற அல்லது வலிய வம்புக்கு வருவது போன்ற செய்திகளுக்கு ஒருபோதும் பதிலளிக்காதீர்கள். உடனே உங்கள் பெற்றோரிடம் தெரிவியுங்கள்; அப்போதுதான் அவர்கள் ஆன்லைன் சேவையிடம் தொடர்புகொள்ள முடியும்.
• இன்டர்நெட்டைப் பயன்படுத்துவது சம்பந்தமாக, அந்த நாளின் குறிப்பிட்ட நேரம், ஆன்லைனில் செலவிடும் நேரப்பகுதி, பார்க்கப்போகும் பொருத்தமான பகுதிகள் ஆகியவை சம்பந்தமாக ஏற்படுத்தும் விதிமுறைகளில் உங்கள் பெற்றோருடன் ஒத்துழையுங்கள்; அவர்களுடைய தீர்மானத்தின்படியே நடந்திடுங்கள்.
முன்னெச்சரிக்கையுடன் இருப்பது வயதுவந்தவர்களுக்கும் பயனுள்ளது என்பதை மனதில் கொள்ளுங்கள். தங்களுடைய கவனக்குறைவின் காரணமாக, வயதுவந்தவர்களில் சிலர் தேவையற்ற உறவுகளிலும் கடும் பிரச்சினைகளிலும் ஏற்கெனவே சிக்கியிருக்கின்றனர். உரையாடல் அறைகளின் மர்மம், நேரடியாக சந்திக்காமல் இருத்தல், மறுபெயரைப் பற்றிய தெளிவின்மை ஆகியவை சிலரது தயக்க உணர்வைக் குறைத்திருக்கிறது; அத்துடன் பாதுகாப்பான ஒரு பொய் உணர்வை உருவாக்கியிருக்கிறது. வயதுவந்தவர்களே, எச்சரிக்கை!
ஒரு சமநிலை நோக்கை வைத்திருத்தல்
இன்டர்நெட்டில் காணப்படும் சில தகவல்களும் பல புரோகிராம்களும் கல்வி புகட்டும் மதிப்பு வாய்ந்தவை; அவை ஒரு பயனுள்ள நோக்கத்தை நிறைவேற்றலாம். அதிகரித்துவரும் கூட்டு நிறுவனங்கள் தங்களுடைய அக வலைப்பின்னல்களில், அல்லது அவற்றிற்கிடையே உள்ள தனிப்பட்ட வலைப்பின்னல்களில் தங்களுடைய உள் டாக்குமென்ட்டுகளைச் சேமிக்கின்றன. உருவாகிவரும் இன்டர்நெட் அடிப்படையிலான வீடியோ, ஆடியோ கலந்தாய்வுகள், நம் பயணத்தையும் வணிக நோக்குடன் செய்யும் சந்திப்பு விதங்களையும் நிரந்தரமாய் மாற்றியமைக்கும் திறன் படைத்தவையாய் இருக்கின்றன. நிறுவனங்கள் தங்களுடைய கம்ப்யூட்டர் சாஃப்ட்வேரை விநியோகிக்க இன்டர்நெட்டைப் பயன்படுத்துவதன் மூலம் செலவுகளைக் குறைத்துக்கொள்கின்றன. இன்டர்நெட்டைப் பயன்படுத்துவோர் தங்கள் சொந்த ஏற்பாடுகளில் சிலவற்றையோ அல்லது அனைத்தையுமோ கையாளுவதற்கு உரிமை பெறுவதால், போக்குவரத்து மற்றும் ஸ்டாக் புரோக்கர் வேலை செய்வது போன்ற வாணிகம் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களைக் கையாளுவதற்கென்று பணியாட்களைத் தற்போது பயன்படுத்தும் பல கம்பெனிகள் அநேகமாய் பாதிக்கப்படும். ஆம், இன்டர்நெட்டினால் கிடைக்கும் பயன் மிக அதிகம்; தகவல் பகிர்வுக்கும், வாணிகத்திற்கும், தகவல் தொடர்புக்கும் முக்கியமான ஒரு சாதனமாய் அது தொடர்ந்திருக்கும்.
பல சாதனங்களைப் போலவே, இன்டர்நெட்டாலும் பலன்தரும் பயன்கள் ஏற்படுகின்றன. ஆனாலும், அதைத் தவறாக பயன்படுத்தும் சாத்தியமும் இருக்கிறது. இன்டர்நெட்டை இன்னும் அதிகமாய் எவ்வழிகளில் பயன்படுத்த முடியும் என்று தேடும்படி சிலர் விரும்பலாம்; அதே சமயத்தில் பிறர் விரும்பாமலும் இருக்கலாம். தனிப்பட்ட விஷயங்களில் மற்றவருடைய தீர்மானங்களை நியாயந்தீர்க்க ஒரு கிறிஸ்தவனுக்கு அதிகாரமில்லை.—ரோமர் 14:4.
இன்டர்நெட்டைப் பயன்படுத்துவது, ஒரு புதிய நாட்டுக்குப் பயணிப்பதைப் போல இருக்கலாம். அங்கு பார்ப்பதற்கும் கேட்பதற்கும் பல புதிய விஷயங்கள் இருக்கின்றன. பயணிப்பது நல்ல பழக்கங்களைக் கடைப்பிடிப்பதையும், கணிசமான அளவு எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதையும் தேவைப்படுத்துகிறது. இன்டர்நெட்டில்—இன்ஃபர்மேஷன் ஹைவேயில்—சேர்ந்துகொள்ள நீங்கள் தீர்மானித்தாலும் அதுவே தேவைப்படுகிறது.
[பக்கம் 12-ன் சிறு குறிப்பு]
“தனிப்பட்ட கம்ப்யூட்டர் என் மகனின் அறையில் அல்லாமல் வீட்டின் பொது அறையில் வைக்கப்பட்டிருக்கிறது”
[பக்கம் 13-ன் சிறு குறிப்பு]
இன்டர்நெட் என்பது ஒரு பொது இடம்; அதை குழந்தை காப்பகமாக பயன்படுத்தக் கூடாது
[பக்கம் 11-ன் சிறு குறிப்பு]
நன்னயத்துக்கும் எச்சரிக்கைக்குமான தேவை
நன்னயம்
நன்னயத்துக்கும் பண்பான நடத்தைக்குமான விதிமுறைகளைப் பற்றி கற்றுக்கொள்ளுங்கள். இன்டர்நெட் சேவை அளிக்கும் பலர், நடத்தை சம்பந்தமான யோசனையுடன் கூடிய, ஏற்றுக்கொள்ளத் தகுந்த வழிகாட்டுக் குறிப்புகளைப் பிரசுரிக்கின்றனர். இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் மற்றவர்கள் இந்த வழிகாட்டுக் குறிப்புகளைத் தெரிந்துகொண்டு நீங்கள் பயன்படுத்துவதற்காகவும் உங்களுடைய நல்ல பழக்கவழக்கங்களுக்காகவும் போற்றுவர்.
எச்சரிக்கை
கலந்தாலோசிப்புத் தொகுதிகள் சில மத சம்பந்தமான, அல்லது முரண்பாடான விஷயங்களைப் பற்றிய சர்ச்சையில் ஈடுபடுவர். அப்படிப்பட்ட கலந்தாலோசிப்புகளுக்கு குறிப்புகள் கொடுப்பதைப் பற்றி கவனமாயிருங்கள்; அந்தத் தொகுதியில் இருக்கும் அனைவருக்கும் உங்கள் ஈ-மெய்ல் முகவரியும் பெயரும் அஞ்சல் செய்யப்படலாம். இது, நேரமெடுக்கும், தேவையற்ற தொடர்புகளில் பெரும்பாலும் விளைவடையலாம். உண்மையில், வாசிப்பதற்கே பொருத்தமற்ற சில செய்திக் குழுக்கள் இருக்கின்றன; அப்படியென்றால் அத்துடன் தொடர்பு கொள்வதைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.
ஒரு கலந்தாலோசிப்பு தொகுதியை, அல்லது செய்திக் குழுவை உடன் கிறிஸ்தவர்களுக்கென்று உருவாக்குவதைப் பற்றியென்ன? ஆரம்பத்தில் எதிர்பார்த்ததைவிட அதிக பிரச்சினைகளையும் ஆபத்துகளையும் இவை ஏற்படுத்தலாம். உதாரணமாக, அந்தரங்க நோக்குள்ள தனி நபர்கள், இன்டர்நெட்டில் தங்களைப் பொய்யாக அறிமுகப்படுத்திக் கொள்வதாக அறியப்பட்டிருக்கின்றனர். தற்போது, தங்களை அறிமுகம் செய்துகொள்பவர்கள் உண்மையிலேயே அந்த நபர்கள்தாம் என்பதை உறுதி செய்வதற்கான ஏற்பாடு இன்டர்நெட்டில் இல்லாதிருக்கிறது. கூடுதலாக, ஒருசில அம்சங்களில் அப்படிப்பட்ட ஒரு குழு, தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் ஒரு பெரிய விருந்துக் கூட்டத்துடன் ஒப்பிடப்படலாம்; விருந்துக்கு அழைத்தவர், தேவையான மற்றும் பொறுப்பான மேற்பார்வை அளிக்க அவருக்கு அதிகளவு நேரமும் திறமையும் தேவைப்படுகின்றன.—நீதிமொழிகள் 27:12-ஐ ஒப்பிடுக.
[பக்கம் 13-ன் பெட்டி/படம்]
உங்கள் நேரம் எவ்வளவு மதிப்புள்ளது?
இந்த 20-வது நூற்றாண்டில், வாழ்க்கை படிப்படியாய் மிகவும் சிக்கல்வாய்ந்ததாகி இருக்கிறது. சிலருக்கு பயன்தரும் கண்டுபிடிப்புகளாய் இருந்திருப்பவை, பலருக்கு நேரத்தை வீணாக்குபவையாய் இருப்பதில் விளைவடைந்திருக்கின்றன. மேலுமாக, ஒழுக்கக்கேடான, வன்முறையான டிவி நிகழ்ச்சிகளும், ஆபாச புத்தகங்களும், தரக்குறைவான இசை பதிவுகளும், இன்னும் இதுபோன்ற மற்றவையும் தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கும் தொழில்நுட்பத்திற்கு உதாரணங்கள். இவை மதிப்புவாய்ந்த நேரத்தைப் பட்சிப்பது மட்டுமின்றி மக்களை ஆவிக்குரிய வகையில் சேதப்படுத்தவும் செய்கின்றன.
நிச்சயமாகவே, பைபிளை அன்றாடம் வாசித்தல், உவாட்ச் டவர் சொஸைட்டியால் பிரசுரிக்கப்படும் காவற்கோபுரம், விழித்தெழு! மற்றும் பிற பிரசுரங்களில் கலந்தாலோசிக்கப்படும் விலைமதிப்பற்ற வேதாகம சத்தியங்களைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ளுதல் போன்ற ஆவிக்குரிய விஷயங்களுக்கென்றே ஒரு கிறிஸ்தவனின் முதல் முன்னுரிமைகள் அளிக்கப்படுகின்றன. நித்திய நன்மைகள், இன்டர்நெட்டில் மேலெழுந்தவாரி தேடலின் மூலமாக கிடைப்பதில்லை; ஆனால், ஒரே மெய்க் கடவுளையும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் பற்றிய அறிவைப் பெறுவதற்கு உங்கள் நேரத்தைப் பயன்படுத்துவதன் மூலமாகவும், வைராக்கியமாக அதைப் பொருத்துவதன் மூலமாகவுமே கிடைக்கின்றன.—யோவான் 17:3; எபேசியர் 5:15-17-ஐயும் காண்க.