ஒவ்வொரு நாளையும் ஞானமாக எண்ணுவது எப்படி?
“நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.” (சங்கீதம் 90:12) இதுவே பைபிள் எழுத்தாளரான மோசேயின் பணிவான விண்ணப்பம். கடவுளிடம் அவர் குறிப்பாக எதைக் கேட்டுக்கொண்டிருந்தார்? நாமும் அதுபோல் பக்தியோடு விண்ணப்பிக்க வேண்டுமா?
பத்தாம் வசனத்தில், மனிதருடைய ஆயுசு காலம் குறுகியதாக இருப்பதைப் பற்றி மோசே புலம்பினார். மற்றொரு சந்தர்ப்பத்தில், யோபு சொன்னதை அவர் பதிவு செய்தார். “ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்” என்று அவர் கூறினார். (யோபு 14:1) அபூரண மனிதரின் ஆயுசு மிக குறுகியதாக இருப்பதை மோசே நன்கு அறிந்திருந்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆகவே, ஒவ்வொரு நாளையும் அருமையான ஒரு பரிசு போல் அவர் கருதினார். கடவுளிடம் அவர் இப்படி ஜெபித்தபோது, மீதமுள்ள தனது வாழ்நாளை ஞானமாகப் பயன்படுத்துவதற்கு, அதாவது தனது படைப்பாளரைப் பிரியப்படுத்தும் விதத்தில் வாழ்வதற்கு, தனக்கிருந்த ஆசையைத் தெரிவித்தார். நம்முடைய வாழ்நாளை அர்த்தமுள்ள விதத்தில் செலவிட நாமும் முயல வேண்டும் அல்லவா? இப்பொழுது கடவுளுடைய பிரியத்தை சம்பாதிக்க விரும்பினால், அதுவே நம்முடைய விடாமுயற்சியாக இருக்க வேண்டும்.
இன்னுமொரு அம்சம் மோசேயையும் யோபுவையும் உந்துவித்தது, அது நம்மையும் உந்துவிக்க வேண்டும். தேவ பக்திமிக்க இந்த இருவருமே எதிர்கால பரிசை—பூமியில் மேம்பட்ட நிலைமைகளின்கீழ் வாழ்வதை—எதிர்நோக்கி இருந்தார்கள். (யோபு 14:14, 15; எபிரெயர் 11:26) அத்தகைய எதிர்காலத்தில், எவருடைய நற்செயல்களையும் மரணம் பறித்துக்கொண்டு போகாது. உண்மையுள்ளவர்கள் பூங்காவனம் போன்ற பரதீஸ் பூமியில் என்றென்றும் வாழ வேண்டுமென்பது நம் படைப்பாளரின் நோக்கம். (ஏசாயா 65:21-24; வெளிப்படுத்துதல் 21:3, 4) ஆகவே, ‘ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, உங்கள் நாட்களை எண்ணும் அறிவை பெற்றால்’ இத்தகைய வாழ்க்கையை நீங்களும் அனுபவித்து மகிழலாம்.