விசேஷ விதத்தில் வெற்றி சிறத்தல்
வேலை செய்யுமிடத்தில், பள்ளியில், அல்லது குடும்பத்தில் உங்கள் விசுவாசத்திற்கு எதிர்ப்பைச் சந்திக்கிறீர்களா? ஒருவேளை அரசாங்கம் விதித்துள்ள தடையினால் அத்தகைய எதிர்ப்பைச் சந்திக்கிறீர்களா? அப்படியானால் சோர்ந்து விடாதீர்கள். யெகோவாவின் சாட்சிகளில் அநேகர் இப்படிப்பட்ட சோதனைகளைச் சந்தித்திருக்கிறார்கள். இருப்பினும் அவர்கள் வெற்றி சிறந்திருக்கிறார்கள். எர்னா லூடால்ஃப் என்ற பெண்மணியின் அனுபவத்தைக் கவனியுங்கள்.
1908-ஆம் ஆண்டில் ஜெர்மனியிலுள்ள லூபெக்கில் எர்னா பிறந்தார். அவருடைய குடும்பத்தில் அவர் மட்டும்தான் யெகோவா தேவனுக்கு சேவை செய்து வந்தார். 1933-ல் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தபோது, யெகோவாவின் சாட்சிகளுக்குக் கஷ்டகாலம் ஆரம்பித்தது. ‘ஹெய்ல் ஹிட்லர்’ என சொல்ல மறுத்ததால் எர்னாவின் சக வேலையாட்கள் அவரை வெளிப்படையாகவே கண்டனம் செய்தனர். இதன் விளைவாக, நாசிக்கள் அவரைக் கைது செய்தனர். பல்வேறு சிறைகளிலும், ஹாம்பர்க்-ஃபூல்ஸ்ப்யூட்டல், மோரிங்கன், லிக்டன்பர்க், ராவன்ஸ்புரூக் ஆகிய இடங்களில் இருந்த சித்திரவதை முகாம்களிலும் அவர் எட்டு ஆண்டுகளைக் கழித்தார். எர்னா ராவன்ஸ்புரூக்கில் இருந்தபோது நடந்த சம்பவம் ஒன்று, வெற்றி சிறக்க அவருக்கு உதவியது.
வித்தியாசமான ஒரு பணிப்பெண்
பேராசிரியர் ஃப்ரிட்ரிக் ஹோல்ட்ஸும் அவருடைய மனைவி ஆலிஸும் பெர்லினில் வசித்து வந்தனர். அவர்கள் நாசி கட்சியில் சேரவில்லை, அதன் கொள்கைகளை ஆதரிக்கவும் இல்லை. அவர்களுடைய உறவினர் ஒருவரோ, சித்திரவதை முகாமிலுள்ள சிலரை கவனித்துக்கொள்ளும் பொறுப்புடைய முதுநிலை எஸ்எஸ் அதிகாரியாக இருந்தார். ஆகவே, வீட்டில் வேலை செய்ய ஒரு பணிப்பெண் வேண்டுமென இந்தப் பேராசிரியரும் அவருடைய மனைவியும் தேடிக்கொண்டிருந்தபோது, ஒரு பெண் கைதியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும்படி இந்த எஸ்எஸ் அதிகாரி அவர்களிடம் சொன்னார். இதற்காக, மார்ச் 1943-ல் ராவன்ஸ்புரூக்கிற்கு ஆலிஸ் சென்றார். அவர் யாரைத் தேர்ந்தெடுத்தார் தெரியுமா? எர்னா லடால்ஃபை. ஹோல்ட்ஸ் குடும்பத்தாருடன் எர்னா சேர்ந்துகொண்டார். அவர்கள் எர்னாவை நன்றாக நடத்தினார்கள். போர் முடிந்த பிறகு, அவர் அந்தக் குடும்பத்தாரோடு சேர்ந்து சாலா நதிப் பகுதியில் அமைந்துள்ள ஹால்லா நகரத்திற்குக் குடிமாறினார். அங்கே கிழக்கு ஜெர்மனியிலுள்ள சோஷியலிஸ்ட் அதிகாரிகளிடமிருந்து எதிர்ப்பை மீண்டும் சந்தித்தார். 1957-ல் அந்தக் குடும்பத்தார் மேற்கு ஜெர்மனிக்குச் செல்லுமாறு வற்புறுத்தப்பட்டனர். எர்னாவும் அவர்களோடு சென்றார். கடைசியாக, எர்னா தனது மத நம்பிக்கைகளைக் கடைப்பிடிக்க சுதந்திரம் பெற்றார்.
எர்னா எவ்வாறு விசேஷ விதத்தில் வெற்றி சிறந்தார்? எர்னா நல்ல விதத்தில் நடந்துகொண்டு பைபிள் செய்தியைத் திறம்பட பிரசங்கித்ததால், ஆலிஸ் ஹோல்ட்ஸும் அவருடைய ஐந்து பிள்ளைகளும் யெகோவாவின் முழுக்காட்டப்பட்ட சாட்சிகளாக ஆனார்கள். அதுமட்டுமின்றி, ஆலிஸின் பேரப்பிள்ளைகள் 11 பேரும்கூட சாட்சிகளாக இருக்கிறார்கள். அவர்களில் இருவர் ஜெர்மனியில் செல்ட்டர்ஸில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் தற்போது சேவை செய்கிறார்கள். “எங்களுடைய குடும்பம் சத்தியத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம் எர்னாவின் முன்மாதிரிதான்” என ஆலிஸின் மகள் சூசன்னா கூறுகிறார். எர்னாவின் சகிப்புத்தன்மைக்குப் பெரும் வெகுமதி கிடைத்தது. உங்களைப் பற்றியென்ன? கஷ்டமான சூழ்நிலையில் உண்மையோடு சகித்திருந்தால் நீங்களும் இதுபோன்ற வெகுமதியைப் பெறலாம். ஆம், நல்ல நடத்தையும் திறம்பட்ட பிரசங்க ஊழியமும் விசேஷ விதத்தில் வெற்றி சிறக்க உங்களுக்கும் உதவக்கூடும்.a
[அடிக்குறிப்பு]
a இந்தக் கட்டுரை வெளியிடுவதற்காக தயாராகும் வேளையில், 96 வயதான எர்னா லூடால்ஃப் இறந்துவிட்டார். அவர் கடைசி வரை உண்மையுள்ளவராக வாழ்ந்தார்.
[பக்கம் 31-ன் படம்]
ஹோல்ட்ஸ் குடும்பத்தாரோடு எர்னா லூடால்ஃப் (அமர்ந்திருப்பவர்)