மனிதனால் வறுமையை ஒழிக்க முடியுமா?
கோடிக்கணக்கானோர் வாழ்க்கையில் வறுமையையே அனுபவிக்காமல் வளர்ந்திருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் பசியோடு படுக்கைக்குச் சென்றதுமில்லை, குளிரில் நடுநடுங்கிக் கொண்டு உறங்கியதுமில்லை. என்றாலும், இவர்களில் அநேகர் ஏழை எளியோருக்காக அனுதாபப்படுகிறார்கள், அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட பெருமுயற்சி செய்கிறார்கள்.
இருந்தபோதிலும், உள்நாட்டுச் சண்டைகள், வெள்ளப் பெருக்குகள், வறட்சிகள், இன்ன பிற பிரச்சினைகளால் பீடிக்கப்படுவோருக்கு வறுமை என்பது ஒரு கொடிய அனுபவமாக இருக்கிறது. ஆப்பிரிக்க நாட்டில் பிழைப்பிற்காக பயிர் செய்யும் ஏழை விவசாயிகளுக்கு இவையெல்லாம் கொடுங்கனவாகவே இருக்கின்றன. சிலர் தங்களுடைய வீடுகளை விட்டுவிட்டு பெருநகரங்களுக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள், அல்லது வேறொரு நாட்டில் அகதிகளாக வாழும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள். வேறுசில கிராமவாசிகளோ வளமான வாழ்க்கை வாழும் ஆசையில் நகரங்களுக்கு குடிபெயர்ந்து சென்றிருக்கிறார்கள்.
ஜனநெருக்கடிமிக்க நகரங்கள் பெரும்பாலும் வறுமையை வளர்க்கும் நாற்றங்கால்களாக மாறிவருகின்றன. பயிர் செய்ய அற்ப சொற்ப இடமே இருக்கின்றன. வேலை கிடைப்பதும் குதிரைக் கொம்பாக இருக்கிறது. வாழ வழியின்றி அப்படியே துவண்டுபோய், பலர் குற்றச்செயல் புரிய ஆரம்பித்து விடுகிறார்கள். நகரவாசிகள் உதவி கேட்டு அபயக் குரல் கொடுக்கிறார்கள், ஆனால் வளர்ந்து வரும் பிரச்சினையாகிய வறுமையை மனித அரசாங்கங்களால் தீர்க்கவே முடியவில்லை. நவம்பர் 2003-ல் வெளியிடப்பட்ட ஐக்கிய நாட்டு அறிக்கையைக் குறிப்பிட்டு, தி இன்டிப்பெண்டன்ட் என்ற லண்டன் செய்தி இவ்வாறு கூறியது: “இவ்வுலகில் பசியால் வாடும் மக்கள் மேன்மேலும் பெருகி வருகிறார்கள்.” அது தொடர்ந்து இவ்வாறு கூறியது: “இன்று உலகில் 84 கோடியே 20 லட்சம் மக்கள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்—ஒவ்வொரு ஆண்டும் 50 லட்சம் மக்கள் என்ற வீதத்தில் இந்த எண்ணிக்கை இன்னும் உயர்ந்துகொண்டே போகிறது.”
வறுமையால் வாடும் மக்களிடமிருந்து யெகோவாவின் சாட்சிகளுடைய தென் ஆப்பிரிக்க கிளை அலுவலகத்திற்கு சிலசமயங்களில் கடிதங்கள் வரும். உதாரணமாக, புளும்ஃபான்டேன் என்ற இடத்தைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறு எழுதினார்: “நான் வேலையில்லாதவன், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நகரத்திற்கு சென்று திருடுகிறேன். இல்லையென்றால், பல நாட்களுக்கு நாங்கள் பட்டினி கிடக்க வேண்டியதுதான்—கடுங்குளிரைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. எந்த வேலையுமில்லை. வேலை தேடிக் கொண்டும் சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று அலைந்து கொண்டும் அநேகர் தெருக்களில் திரிகிறார்கள். சிலர் குப்பைத் தொட்டியில் உணவு தேடுவதைப் பார்த்திருக்கிறேன். இன்னும் சிலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். என்னைப் போன்ற பலர் மனச்சோர்வுற்று நம்பிக்கையிழந்து தவிக்கிறார்கள். எதிர்கால நம்பிக்கையே கிடையாது என்றுதான் தோன்றுகிறது. உண்ணுவதற்கும் உடுத்துவதற்குமான தேவையோடு நம்மைப் படைத்த கடவுள் இதையெல்லாம் பார்ப்பதில்லையா?”
இந்த நபருடைய கேள்விகளுக்கு ஆறுதலான பதில்கள் இருக்கின்றன. அவை கடவுளுடைய வார்த்தையான பைபிளில் காணப்படுகின்றன. பின்வரும் கட்டுரையை வாசித்து அவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்.