வறுமையே இல்லாத உலகம் அருகில்!
இப்பத்திரிகையின் அட்டைப் படத்தை அலங்கரிக்கும் பூங்காவனம் போன்ற பரதீஸ் படங்கள் வறுமையில் வாழும் மக்களைக் கவர்ந்திழுக்கின்றன. முதல் மானிட ஜோடியான ஆதாமும் ஏவாளும் பரதீஸை நிஜமாகவே அனுபவித்தார்கள். ஏதேன் தோட்டம் அவர்களுடைய வீடாக இருந்தது. (ஆதியாகமம் 2:7-23) அந்தப் பரதீஸ் இழக்கப்பட்டபோதிலும், எதிர்கால பரதீஸில், அதாவது வறுமையே இல்லாத புதிய உலகில், நாம் நம்பிக்கை வைக்கலாம்; அது வெறும் கனவல்ல. அது பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளின் மீது உறுதியான ஆதாரம் கொண்டுள்ளது.
பூமியில் தனது வாழ்க்கையின் கடைசி நாளில் இயேசு கிறிஸ்து கொடுத்த வாக்குறுதியை சிந்தித்துப் பாருங்கள். மனித பிரச்சினைகளைக் கடவுளால் தீர்க்க முடியும் என்பதை இயேசுவுடன் இறந்த கெட்ட ஆட்களில் ஒருவன் விசுவாசித்தான். “ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்” என்று அவன் கூறினான். இயேசு ராஜாவாக அரசாளுவார் என்பதையும், இறந்தவர்கள் மீண்டும் உயிரடைவார்கள் என்பதையும் அந்தக் கெட்ட மனிதன் நம்பியதை இந்த வார்த்தைகள் காட்டுகின்றன. இயேசு அவனிடம்: “இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” என்று பதிலளித்தார்.—லூக்கா 23:42, 43.
பரதீஸில் வாழ்பவர்களைப் பற்றி பேசும்போது பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள்.” (ஏசாயா 65:21) ஆம், “அவனவன் தன்தன் திராட்சச் செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.”—மீகா 4:4.
ஆனால், இன்றைக்கு ஏன் வறுமை அனுமதிக்கப்பட்டுள்ளது? வறுமையால் பீடிக்கப்பட்டோருக்கு கடவுள் என்ன உதவி அளிக்கிறார்? வறுமை எப்போது ஒழியும்?
வறுமை ஏன் அனுமதிக்கப்பட்டுள்ளது?
பொல்லாத தூதனான பிசாசாகிய சாத்தான் ஆரம்பித்து வைத்த கலகத்தனத்தின் விளைவாக ஆதாமும் ஏவாளும் பரதீஸை இழந்தார்கள். சர்ப்பத்தை தனது கைப்பாவையாக பயன்படுத்தி, ஏவாளை சாத்தான் மோசம்போக்கினான். அதனால், குறிப்பிட்ட ஒரு மரத்தின் கனியை புசிக்கக் கூடாதென்று கடவுள் விதித்திருந்த சட்டத்தை அவள் மீறினாள். கடவுளிடமிருந்து பிரிந்து வாழ்வது மேம்பட்ட வாழ்க்கையைத் தருமென அவளை நம்ப வைத்து ஏமாற்றினான். அந்தக் கனியை ஆதாமுக்கு ஏவாள் கொடுத்தபோது, அவனும் தன்னுடைய மனைவிக்குப் பிரியமாக நடந்து கடவுளைப் புறக்கணித்துவிட்டான்.—ஆதியாகமம் 3:1-6; 1 தீமோத்தேயு 2:14.
ஆகவே கலகம் செய்த அந்தத் தம்பதியர் பரதீஸிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள், அதுமுதல் பிழைப்புக்காக அவர்கள் போராட வேண்டியதாயிற்று. இவ்வாறு, கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனதால் ஏற்பட்ட விளைவுகளைத் தெளிவாக எடுத்துக் காட்டுவதற்காக பாவமுள்ள மனிதகுலத்தின் மீது சாத்தான் ஆளுகை செய்ய இன்றுவரை யெகோவா அவனை அனுமதித்திருக்கிறார். மனிதரால் பூமியில் பரதீஸை ஸ்தாபிக்க முடியாது என்பதை சரித்திரம் நிரூபித்திருக்கிறது. (எரேமியா 10:23) கடவுளிடமிருந்து பிரிந்து தன்னிச்சையாக செயல்பட்டதால், வறுமை உள்ளிட்ட பயங்கர பிரச்சினைகள் தலைதூக்கியிருக்கின்றன.—பிரசங்கி 8:9.
என்றாலும், இந்தத் தொல்லைமிகு உலகில் வறியோர் நிராதரவாக விடப்படவில்லை. கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட பைபிள் அவர்களுக்குச் சிறந்த வழிநடத்துதலைத் தருகிறது.
“கவலைப்படாதிருங்கள்”
அநேக ஏழை எளியோர் உள்ளிட்ட பெரும் திரளான கூட்டத்தாரிடம் இயேசு பேசியபோது இவ்வாறு கூறினார்: “ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரம பிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? . . . ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரம பிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.”—மத்தேயு 6:26-33.
வறுமையில் வாடும் ஒருவர் திருட வேண்டிய அவசியமில்லை. (நீதிமொழிகள் 6:30, 31) வாழ்க்கையில் கடவுளுக்கு முதலிடம் கொடுத்தால் எல்லாத் தேவைகளையும் அவர் பூர்த்தி செய்வார். உதாரணமாக, தென் ஆப்பிரிக்காவில் லெசோதோ என்ற இடத்தைச் சேர்ந்த டுகிஸோ என்பவரை எடுத்துக்கொள்ளுங்கள். 1998-ல், அரசாங்கத்திற்கு எதிரான எழுச்சியை அடக்குவதற்கு அந்நிய படைகள் லெசோதோவுக்குள் நுழைந்தன. அந்தப் போரினால், கடைகள் சூறையாடப்பட்டன, மக்கள் தங்களுடைய வேலைகளை இழந்தார்கள், கடும் பஞ்சம் ஏற்பட்டது.
அந்தத் தலைநகரில் மிகவும் ஏழ்மை நிலையிலிருந்த ஒரு பகுதியில் டுகிஸோ வசித்து வந்தார். அவருடைய அக்கம்பக்கத்தார் அநேகர் உயிர் பிழைப்பதற்காக கடைகளையெல்லாம் கொள்ளையடித்திருந்தார்கள். ஒரேவொரு அறையைக் கொண்ட தன் வீட்டிற்கு டுகிஸோ வந்தபோது, தன்னுடன் வசித்துவந்த பெண் மாசேஸோ அநேக உணவுப் பொருட்களைக் கொள்ளையடித்து வைத்திருந்ததைப் பார்த்தார். திருடுவது கடவுளுடைய சட்டத்திற்கு விரோதமானது என அவளிடம் விளக்கிவிட்டு, “எல்லாவற்றையும் வெளியே கொண்டுபோ” என கூறினார். அவருடைய வார்த்தைக்கு மாசேஸோ கீழ்ப்படிந்தாள். அக்கம் பக்கத்தில் வசித்தவர்கள் இதைப் பார்த்து கேலி செய்தார்கள், பிறகு அந்த உணவுப் பொருட்களையெல்லாம் அவர்கள் எடுத்துக்கொண்டார்கள்.
யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிள் படித்து வந்ததால் டுகிஸோ இந்தத் தீர்மானத்தை எடுத்தார். கடவுளுடைய சட்டத்திற்குக் கீழ்ப்படிந்ததால் அவர் பட்டினி கிடந்தாரா? இல்லை. கொஞ்ச நேரத்திற்குப்பின், அவர் சென்றுகொண்டிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய சபையைச் சேர்ந்த மூப்பர்கள் டுகிஸோவுடன் தொடர்புகொண்டு அவருக்கு உணவளித்தார்கள். சொல்லப்போனால், லெசோதோவில் வசிக்கும் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காக, அண்டை நாடான தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த யெகோவாவின் சாட்சிகள் இரண்டு டன்னுக்கும் அதிகமாக நிவாரண பொருட்களை அனுப்பியிருந்தார்கள். கடவுளுக்கு டுகிஸோ கீழ்ப்படிந்ததையும், சபையார் அன்போடு அவருக்கு உதவியதையும் பார்த்து மாசேஸோ மனம் கவரப்பட்டாள். அவளும் பைபிளைப் படிக்க ஆரம்பித்தாள். கடைசியில், அவர்கள் இருவரும் சட்டப்படி திருமணம் செய்துகொண்டு முழுக்காட்டப்பட்ட யெகோவாவின் சாட்சிகளானார்கள். அவர்கள் இன்றும்கூட கடவுளுக்கு உண்மையுடன் சேவை செய்து வருகிறார்கள்.
யெகோவா தேவன் ஏழை எளியோர் மீது அக்கறை காட்டுகிறார். (“ஏழைகளைக் கடவுள் எப்படி கருதுகிறார்?” என்ற பெட்டியைக் காண்க.) டுகிஸோவையும் மாசேஸோவையும் போல மற்றவர்களும் தம்மைப் பற்றி அதிகமாக கற்றுக்கொள்வதற்குக் கடவுள் அன்புடன் ஏற்பாடுகள் செய்திருக்கிறார். அன்றாட வாழ்க்கைக்கு உதவும் நடைமுறையான அறிவுரைகளைத் தம்முடைய வார்த்தையில் கொடுத்திருக்கிறார்.
ஒரு நல்ல ஏற்பாடு
கடவுளைப் போலவே ஏழைகள் மீது அக்கறை காட்டுவதற்கு யெகோவாவின் சாட்சிகள் எப்போதும் முயற்சி செய்திருக்கிறார்கள். (கலாத்தியர் 2:10) ஏதாவது ஓரிடத்தில் இயற்கை சேதங்கள் ஏற்பட்டு மெய் கிறிஸ்தவர்கள் பாதிக்கப்படும்போது, தேவையான உதவியை வழங்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. மிக முக்கியமாக, ஏழைகள் உட்பட, எல்லாருடைய ஆன்மீகத் தேவைகளையும் கவனிப்பதில் யெகோவாவின் சாட்சிகள் அக்கறை காட்டுகிறார்கள். (மத்தேயு 9:36-38) கடந்த 60 ஆண்டுகளாக, பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான ஊழியர்கள் அயல் நாடுகளில் மிஷனரிகளாய் சேவை செய்வதற்கு முன்வந்திருக்கிறார்கள். உதாரணமாக, பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு மிஷனரி தம்பதியர்தான், ஸிஸோதோ மொழியைக் கற்றுக்கொண்டு, இயேசுவின் சீஷராவதற்கு டுகிஸோவுக்கும் மாசேஸோவுக்கும் உதவி செய்தார்கள். (மத்தேயு 28:19, 20) இத்தகைய மிஷனரி சேவை செய்வதற்காக அநேகர் செல்வச் செழிப்புமிக்க நாட்டில் சொகுசான வாழ்க்கையை விட்டுவிட்டு ஏழை நாட்டிற்குக் குடிபெயர்ந்து வந்திருக்கிறார்கள்.
வயிற்றுப் பிழைப்புக்காக திருடுவது மெய் கிறிஸ்தவர்களுக்கு ஏற்றதல்ல. மாறாக, கொடுக்க வல்லவரான யெகோவா தேவன் மீது அவர்கள் விசுவாசம் வைத்திருக்கிறார்கள். (எபிரெயர் 13:5, 6) யெகோவா தமது மக்களுக்கு கொடுக்கும் ஒரு வழி, ஒருவரையொருவர் அக்கறையோடு கவனித்துக்கொள்கிற தமது வணக்கத்தாராலான உலகளாவிய அமைப்பின் வாயிலாகும்.
ஏழைகளுக்கு யெகோவா உதவுகிற மற்றொரு வழி, அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு நடைமுறையான அறிவுரையை வழங்குவதன் மூலமாகும். உதாரணமாக, பைபிள் இவ்வாறு கட்டளையிடுகிறது: “திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலை செய்து, பிரயாசப்படக்கடவன்.” (எபேசியர் 4:28) வேலையில்லா ஆட்கள் பலர் சுய வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்; பயிரிடுதல், காய்கறித் தோட்டம் அமைத்து பராமரித்தல் போன்ற கடினமான வேலை செய்கிறார்கள். பணத்தை மிச்சப்படுத்துவதற்கும்கூட ஏழைகளுக்கு பைபிள் உதவுகிறது. எப்படியெனில், மதுபான துஷ்பிரயோகம் போன்ற கெட்ட பழக்கங்களைத் தவிர்ப்பதற்குப் போதிக்கிறது.—எபேசியர் 5:18.
வறுமையே இல்லாத உலகம்—எப்போது?
சாத்தானுடைய ஆட்சியின் “கடைசி நாட்களில்” நாம் வாழ்ந்து வருகிறோமென பைபிள் சுட்டிக் காட்டுகிறது. (2 தீமோத்தேயு 3:1) விரைவில், மனிதகுலத்தை நியாயந்தீர்ப்பதற்கு இயேசு கிறிஸ்துவை யெகோவா தேவன் அனுப்புவார். அப்பொழுது என்ன நடக்கும்? அதை இயேசு ஒரு உவமையில் குறிப்பிட்டார். ‘அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமை பொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள்; மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறது போல அவர்களை அவர் பிரிப்பார்’ என்றார்.—மத்தேயு 25:31-33.
இந்த உதாரணத்தில் சொல்லப்படும் செம்மறியாடுகள் இயேசுவின் அரசாட்சிக்கு அடிபணிபவர்கள். அவர்களைச் செம்மறியாடுகளுக்கு இயேசு ஒப்பிட்டார், ஏனென்றால் மேய்ப்பரான அவரையே அவர்கள் பின்பற்றுகிறார்கள். (யோவான் 10:16) செம்மறியாடுகளைப் போன்ற இவர்கள் இயேசுவின் பரிபூரண ஆட்சியில் ஜீவனைப் பெறுவார்கள். வறுமையே இல்லாத புதிய உலகில் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இயேசுவின் அரசாட்சியைப் புறக்கணிக்கும் வெள்ளாடுகளைப் போன்றவர்கள் நிரந்தரமாக அழிக்கப்படுவார்கள்.—மத்தேயு 25:46.
துன்மார்க்கத்திற்குக் கடவுளுடைய ராஜ்யம் முடிவு கட்டும். வறுமை இனிமேலும் இராது. மாறாக, ஒருவரையொருவர் நேசித்து அக்கறை காட்டுகிற மக்களால் இந்தப் பூமி நிறைந்திருக்கும். அத்தகைய புதிய உலகம் சாத்தியமே என்பதை யெகோவாவின் சாட்சிகளுடைய அன்பான சர்வதேச சகோதரத்துவம் காட்டுகிறது; ஏனென்றால் இயேசு இவ்வாறு கூறினார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.”—யோவான் 13:35.
[பக்கம் 6, 7-ன் பெட்டி/படங்கள்]
ஏழைகளைக் கடவுள் எப்படி கருதுகிறார்?
‘பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங் கொடுக்கிறவர்’ என மனிதரைப் படைத்தவரை பைபிள் விவரிக்கிறது. (சங்கீதம் 146:7) ஏழைகள் மீது கடவுளுக்கு இருக்கும் அக்கறையை சிறப்பித்துக் காட்டுகிற நூற்றுக்கும் மேற்பட்ட வசனங்கள் அதில் உள்ளன.
உதாரணமாக, பூர்வ இஸ்ரவேல் தேசத்திற்கு யெகோவா தமது சட்டத்தைக் கொடுத்தபோது, விவசாயிகள் தங்களுடைய வயலில் விளையும் பயிர்களை ஓரம் வரை முழுவதுமாக அறுவடை செய்யக் கூடாதென கட்டளையிட்டார். அவர்கள் தங்களுடைய ஒலிவ மரத்தில் அல்லது திராட்சைச் செடியில் விடப்பட்ட பழத்தை இரண்டாவது தடவை சென்று பறிக்கக் கூடாது என்றும் சொன்னார். இத்தகைய சட்டங்கள், அந்நியருக்கும் அநாதைகளுக்கும் விதவைகளுக்கும் கஷ்டப்படுகிறவர்களுக்கும் உதவும் அன்பான ஏற்பாடாக இருந்தன.—லேவியராகமம் 19:9, 10; உபாகமம் 24:19-21.
அதோடு, இஸ்ரவேலருக்குக் கடவுள் இவ்வாறு கட்டளையிட்டார்: “விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக; அவர்களை எவ்வளவாகிலும் ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாய்க் கேட்டு, கோபம்மூண்டவராகி, உங்களைப் பட்டயத்தினால் கொலை செய்வேன்; உங்கள் மனைவிகள் விதவைகளும், உங்கள் பிள்ளைகள் திக்கற்ற பிள்ளைகளுமாவார்கள்.” (யாத்திராகமம் 22:22-24) ஆனால் வருத்தகரமாக, செல்வந்தரான இஸ்ரவேலர் அநேகர் அந்த வார்த்தைகளை அசட்டை செய்தார்கள். இதற்காகவும், அவர்கள் செய்த மற்ற தவறுகளுக்காகவும், தீர்க்கதரிசிகள் வாயிலாக யெகோவா தேவன் பல்வேறு எச்சரிப்புகள் கொடுத்தார். (ஏசாயா 10:1, 2; எரேமியா 5:28; ஆமோஸ் 4:1-3) கடைசியில், அசீரியர்களும் பிற்பாடு பாபிலோனியர்களும் இஸ்ரவேல் மீது படையெடுத்து வந்து அதைக் கைப்பற்றுவதற்கு அவர் அனுமதித்தார். இஸ்ரவேலர் அநேகர் கொல்லப்பட்டார்கள், தப்பிப்பிழைத்தவர்களோ அந்நிய நாடுகளுக்கு கைதிகளாக கொண்டு செல்லப்பட்டார்கள்.
கடவுளுடைய நேச குமாரனான இயேசு கிறிஸ்து, தமது தகப்பனைப் போலவே ஏழைகள் மீது அன்பும் அக்கறையும் காட்டினார். அவர் தமது ஊழியத்தின் நோக்கத்தை இவ்வாறு விளக்கினார்: “கர்த்தருடைய ஆவியானவர் என் மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார்.” (லூக்கா 4:18) ஆனால் இயேசு ஏழைகளுக்கு மட்டுமே பிரசங்கித்தார் என இது அர்த்தப்படுத்தாது. பணக்காரருக்கும்கூட அவர் அன்புடன் உதவி செய்தார். இருப்பினும் அவர்களுக்கு உதவி செய்கையிலும்கூட, ஏழைகள் மீது தமக்கிருந்த அக்கறையை பெரும்பாலும் வெளிப்படுத்தினார். உதாரணமாக, பணக்கார அதிபதி ஒருவனுக்கு அவர் இவ்வாறு அறிவுரை கூறினார்: “உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா.”—லூக்கா 14:1, 12-14; 18:18, 22; 19:1-10.
யெகோவா தேவனும் அவருடைய குமாரனும் ஏழைகளை ஆழ்ந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறார்கள். (மாற்கு 12:41-44; யாக்கோபு 2:1-6) மேலும், இறந்துபோன கோடிக்கணக்கான ஏழை எளியவர்களை யெகோவா தமது நினைவில் வைத்து, இவ்வாறு தமது அக்கறையைக் காட்டுகிறார். வறுமையே இல்லாத புதிய உலகில் இவர்கள் அனைவரும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்.—அப்போஸ்தலர் 24:15.
[படங்கள்]
புதிய உலகம் சாத்தியம் என்பதை யெகோவாவின் சாட்சிகளுடைய சர்வதேச சகோதரத்துவம் காட்டுகிறது
[பக்கம் 5-ன் படம்]
டுகிஸோவுக்கு பைபிள் படிப்பு நடத்திய மிஷனரியுடன் டுகிஸோவும் மாசேஸோவும்
[பக்கம் 5-ன் படம்]
பைபிள் படிப்பு நடத்திய மிஷனரியுடன் தனது வீட்டின் கதவருகில் நிற்கும் மாசேஸோ