வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
பூர்வ இஸ்ரவேலில், ஆசரிப்புக் கூடாரம் மற்றும் ஆலயத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்தில் தோன்றிய அற்புத ஒளி—இது சிலசமயங்களில் ஷெக்கீனா என அழைக்கப்படுகிறது—எதை பிரதிநிதித்துவம் செய்தது?
அன்புள்ள தகப்பனும் பாதுகாவலருமான யெகோவா தமது பிரசன்னத்தை இஸ்ரவேலில் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தினார். இதை அவர் வெளிப்படுத்திய ஒரு வழி என்னவென்றால், மகிமை பொருந்திய மேகத்தின் வாயிலாகும். அது அவருடைய வழிபாட்டு தலத்துடன் நெருங்கிய தொடர்புடையதாக இருந்தது.
பிரகாசமான அந்த ஒளி யெகோவாவின் காணக்கூடாத பிரசன்னத்தை பிரதிநிதித்துவம் செய்தது. ஆசரிப்புக் கூடாரத்திலும் சாலொமோன் கட்டிய ஆலயத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்திலும் அது தோன்றியது. அந்த அற்புத ஒளி யெகோவா அங்கு வாசம் செய்தார் என்பதை அடையாளப்படுத்தவில்லை. ஏனென்றால் மனிதரால் உண்டாக்கப்பட்ட எந்தவொரு கட்டடத்திலும் கடவுளை அடைத்து வைக்க முடியாது. (2 நாளாகமம் 6:18; அப்போஸ்தலர் 17:24) கடவுளுடைய பிரகாரத்தில் தோன்றிய இந்தத் தெய்வீக ஒளி, இஸ்ரவேலரையும் அவர்களுடைய தேவைகளையும் யெகோவாவின் பிரசன்னம் கவனித்துக் கொண்டதை பிரதான ஆசாரியருக்கும் அவர் மூலம் மற்றெல்லாருக்கும் நம்பிக்கை அளிக்க முடிந்தது.
பைபிள் காலத்திற்குப் பின்வந்த அரமேயிக் மொழியில், இந்த ஒளி ஷெக்கீனா என அழைக்கப்பட்டது; “வாசம்பண்ணுகிற” அல்லது “வாசம் செய்யுமிடம்” என்ற அர்த்தத்தை இது கொடுத்தது. இந்த வார்த்தை பைபிளில் இல்லை, ஆனால் டார்கம் என்றும் அழைக்கப்பட்ட எபிரெய வேதாகமத்தின் அரமேயிக் மொழிபெயர்ப்புகளில் காணப்படுகிறது.
ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டுவதற்குரிய அறிவுரைகளைக் கொடுத்தபோது, மோசேயிடம் யெகோவா இவ்வாறு கூறினார்: ‘கிருபாசனத்தைப் பெட்டியின் மீதில் வைத்து, பெட்டிக்குள்ளே நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப் பிரமாணத்தை வைப்பாயாக. அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின் மீதிலும் சாட்சிப் பெட்டியின் மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலும் இருந்து . . . உன்னோடே பேசுவேன்.’ (யாத்திராகமம் 25:21, 22) மகா பரிசுத்த ஸ்தலத்தில் வைக்கப்பட்டிருந்த இந்தப் பெட்டி தங்கத்தால் கவசமிடப்பட்டிருந்தது. அதன் மூடியில் இரண்டு பொற்கேருபீன்கள் இருந்தனர்.
யெகோவா எங்கிருந்து பேசுவார்? “கிருபாசனத்தின் மேல் ஒரு மேகத்தில் நான் காணப்படுவேன்” என மோசேயிடம் சொன்னபோது இந்தக் கேள்விக்கு அவர் பதிலளித்தார். (லேவியராகமம் 16:2) இந்த மேகம் பரிசுத்த பெட்டியின் மீது அந்த இரண்டு பொற்கேருபீன்களுக்கு நடுவில் இருந்தது. அந்த மேகம் எவ்வளவு உயரமுடையதாக இருந்தது அல்லது கேருபீன்களுக்கு மேலே எவ்வளவு உயரம் வரை இருந்தது என்பதைப் பற்றி சொல்லப்படவில்லை.
ஒளிரும் இந்த மேகம் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு வெளிச்சம் கொடுத்தது. சொல்லப்போனால், அந்த அறையிலிருந்த ஒரே ஒளி இதுதான். பிராயச்சித்த நாளில் அந்த உட்புற அறைக்குள் பிரதான ஆசாரியர் நுழைவதற்கு இந்த வெளிச்சம் உதவியது. அவர் யெகோவாவின் சமுகத்தில் நின்றுகொண்டிருந்தார்.
கிறிஸ்தவர்களுக்கு இந்த அற்புத ஒளி ஏதாவது அர்த்தமுடையதாக இருக்கிறதா? ‘இராக்காலமே இல்லாத’ ஒரு நகரத்தைப் பற்றி தரிசனத்தில் அப்போஸ்தலன் யோவான் கண்டார். அந்த நகரமே புதிய எருசலேம்; அது இயேசுவுடன் அரசாளுவதற்கு உயிர்த்தெழுப்பப்பட்ட அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களால் ஆனது. அடையாள அர்த்தமுடைய அந்நகரத்தின் ஒளி சூரியனிலிருந்தோ சந்திரனிலிருந்தோ வரவில்லை. ஷெக்கீனா மேகம் மகா பரிசுத்த ஸ்தலத்தை பிரகாசிக்கச் செய்ததைப் போலவே, இந்த அமைப்பின் மீது யெகோவா தேவனுடைய மகிமை நேரடியாக பிரகாசிக்கிறது. அதோடு, ஆட்டுக்குட்டியானவராகிய இயேசு கிறிஸ்துவே அந்நகரத்தின் “விளக்கு.” சகல தேசங்களிலுமிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட மக்களை வழிநடத்துவதற்காக அவர்கள்மீது ஆவிக்குரிய ஒளியையும் தயவையும் இந்த ‘நகரம்’ வீசுகிறது.—வெளிப்படுத்துதல் 21:22-25.
யெகோவாவிடமிருந்து அந்தளவு அபரிமிதமான ஆசீர்வாதங்களைப் பெறுவதால், அவரே அவர்களைப் பாதுகாக்கும் மேய்ப்பரும் பாசமுள்ள தகப்பனுமாக இருக்கிறார் என்பதைக் குறித்து யெகோவாவின் வணக்கத்தார் உறுதியாக இருக்கலாம்.