பைபிள் ஆர்வத்திற்குப் பாராட்டு
இத்தாலியின் தென்பகுதியில் வசிக்கும் யெகோவாவின் சாட்சியான மாரியான்னாவுக்கு 18 வயது, அவள் மேனிலைப் பள்ளியில் இறுதி ஆண்டு படித்து வருகிறாள். வேறுசில இளம் சாட்சிகளும் அதே பள்ளியில் படிக்கிறார்கள்.
“சில ஆண்டுகளாக, தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல் என்ற சிறு புத்தகத்திலிருந்து அந்தந்த நாளுக்குரிய பைபிள் வசனத்தை இடைவேளை நேரத்தில் நாங்கள் படித்து வருகிறோம். ஆசிரியர்கள் அறைக்குப் பக்கத்திலுள்ள நடைபாதையே நாங்கள் ஒன்றுசேர்ந்து படிப்பதற்கு இருக்கிற ஒரே இடம். அந்த இடம் அவ்வளவு அமைதியாக இருக்காது. ஆசிரியர்கள் பலர் கடந்து செல்லும்போது எங்களை கவனித்தார்கள், நாங்கள் என்ன செய்கிறோம் என்பதைப் பார்ப்பதற்கு சிலர் நிற்பார்கள். அவர்களுடைய கேள்விகளுக்குப் பதிலளிக்க இது எங்களுக்கு அநேக வாய்ப்புகளை அளித்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு ஆசிரியராவது எங்களிடம் வந்து பேசுவார். நாங்கள் பைபிள் வசனத்தை கலந்தாலோசிப்பதைக் கேட்பதற்கு அநேகர் நின்றிருக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகளான நாங்கள் ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் காட்டுவதைப் பார்த்து, எங்களைப் பாராட்டியுமிருக்கிறார்கள். எங்களுடைய உரையாடலை ஆசிரியர்கள் அறையில் வைத்து நடத்துமாறு பள்ளியின் துணை முதல்வர் ஒருமுறை சொன்னார்.
“நாங்கள் பைபிள் வசனத்தை சிந்திக்கும் இடத்தைப் பார்த்த பிறகு, கலந்தாலோசிப்பை ஒரு வகுப்பறையில் நடத்தினால் அமைதியாக இருக்குமென முதல்வரிடம் எனது ஆசிரியர் கேட்டார். முதல்வரும் இதற்கு அனுமதி அளித்தார், எங்களுடைய சிறந்த முன்மாதிரியைப் பார்த்து, வகுப்பினர் முன்னிலையில் எனது ஆசிரியர் எங்களைப் பாராட்டினார். யெகோவா எங்களுக்குக் கொடுத்த மிகப் பெரிய இந்தப் பாக்கியத்திற்காக நாங்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.”