இயேசுவுடைய பிரசன்னத்தின் அடையாளத்தைப் புரிந்துகொள்கிறீர்களா?
நமக்கு ஏதோவொரு கொடிய வியாதி வர வேண்டுமென்றோ ஏதோவொரு பேரழிவில் திடீரென மாட்டிக்கொள்ள வேண்டுமென்றோ நம்மில் யாருமே விரும்ப மாட்டோம். அதற்குப் பதிலாக, புத்திசாலியான ஆட்கள் அத்தகைய கடுந்துயரங்களைத் தவிர்ப்பதற்கு, ஆபத்தைச் சுட்டிக்காட்டுகிற அடையாளங்களை விழிப்போடு கவனிப்பார்கள், அதற்கேற்றாற்போல் நடவடிக்கையும் எடுப்பார்கள். இயேசு கிறிஸ்துவும் ஓர் அடையாளத்தைக் கொடுத்தார், அதை விளக்கவும் செய்தார்; அந்த அடையாளத்தை நாம் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பிடத்தக்க அந்த அடையாளம் உலகளவில் நிகழ இருந்தது, முழு மனிதகுலத்தையே அது பாதிக்கும். அதில் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சம்பந்தப்பட்டிருக்கிறீர்கள்!
பூமியிலிருந்து துன்மார்க்கத்தை நீக்கி, அதை ஒரு பரதீஸாக மாற்றப்போகிற கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி இயேசு பிரசங்கித்தார். அதைக் குறித்து அவருடைய சீஷர்கள் வெகு ஆர்வமாக இருந்தார்கள், அந்த ராஜ்யம் எப்போது வருமென்று தெரிந்துகொள்ள விரும்பினார்கள். எனவே, “உம்முடைய வருகைக்கும் [“பிரசன்னத்திற்கும்,” NW], உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன” என்று கேட்டார்கள்.—மத்தேயு 24:3.
தம்முடைய மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவை நிகழ்ந்து பல நூற்றாண்டுகள் கழித்தே மனிதகுலத்தின் மீது அரசாளப்போகிற மேசியானிய ராஜாவாக தாம் பரலோகத்தில் முடிசூட்டப்படுவார் என்பதை இயேசு அறிந்திருந்தார். பரலோகத்தில் தாம் முடிசூட்டப்படுவதை மனிதர்கள் பார்க்க முடியாது என்பதால், தம்முடைய ‘பிரசன்னத்தின்’ ஆரம்பத்தையும் ‘இந்த உலகத்தின் முடிவு’ நெருங்கியிருப்பதையும் தம் சீஷர்கள் புரிந்துகொள்வதற்காக இயேசு ஓர் அடையாளத்தைக் கொடுத்தார். அந்த அடையாளத்தில் ஏராளமான அம்சங்கள் அடங்கியிருந்தன; அவையெல்லாம் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்ததே, இயேசுவின் பிரசன்னம் ஆரம்பமாகிவிட்டதற்கான அடையாளம் அல்லது அறிகுறி ஆகும்.
இயேசு சொன்ன அந்த அடையாளத்தை மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய சுவிசேஷக எழுத்தாளர்கள் மிகக் கவனமாகப் பதிவுசெய்தார்கள். (மத்தேயு 24 மற்றும் 25-ம் அதிகாரங்கள்; மாற்கு 13-ம் அதிகாரம்; லூக்கா 21-ம் அதிகாரம்) பைபிளை எழுதிய மற்றவர்கள் அந்த அடையாளம் சம்பந்தமாக இன்னும் கூடுதலான விவரங்களை அளித்தார்கள். (2 தீமோத்தேயு 3:1-5; 2 பேதுரு 3:3, 4; வெளிப்படுத்துதல் 6:1-8; 11:18) அந்த எல்லா விவரங்களையும் இங்கே ஆராய்வதற்குப் பக்கங்கள் போதாது, ஆனாலும், இயேசு சொன்ன அந்த அடையாளத்தின் ஐந்து முக்கிய அம்சங்களை இப்போது சிந்திக்கலாம். அவ்வாறு சிந்திப்பது தனிப்பட்ட விதத்தில் உங்களுக்கு அர்த்தமுள்ளதாயும் முக்கியமானதாயும் இருக்கும்.—பக்கம் 6-லுள்ள பெட்டியைக் காண்க.
“ஒரு புதிய சகாப்தத்திற்கான திருப்புக்கட்டம்”
“ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்.” (மத்தேயு 24:7) 1914-க்கு முன்பாக ஜனங்கள், “இன்னுமதிக சுதந்திரமும், முன்னேற்றமும், செழிப்பும் உள்ள ஒரு பொற்காலம் வருமென்ற நம்பிக்கையுடன் இருந்தார்கள்” என ஜெர்மன் செய்திப் பத்திரிகையான டேர் ஷ்பிகல் அறிவிக்கிறது. ஆனால் அதன்பின் எல்லாமே தலைகீழாகிவிட்டது. “ஆகஸ்ட் 1914-ல் ஆரம்பித்து நவம்பர் 1918-ல் முடிவடைந்த போர், அதிர்ச்சியளிக்கும் ஒரு திருப்புக்கட்டமாக அமைந்தது. மனித சரித்திரத்தில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தி, பழைய சகாப்தத்திலிருந்து புதிய சகாப்தத்தை உருவாக்கியது” என கேயோ என்ற பத்திரிகை குறிப்பிடுகிறது. ஐந்து கண்டங்களைச் சேர்ந்த 6 கோடி இராணுவ வீரர்கள் காட்டுமிராண்டித்தன சண்டைகளில் ஈடுபட்டார்கள். சராசரியாக, ஒவ்வொரு நாளும் சுமார் 6,000 வீரர்கள் கொல்லப்பட்டார்கள். அன்றிலிருந்து, இன்றுவரை ஒவ்வொரு தலைமுறையைச் சேர்ந்தவர்களும் அரசியல் ரீதியில் பல்வேறு கருத்துக்களை உடையவர்களுமான சரித்திராசிரியர்கள் “1914-லிருந்து 1918 வரையான வருடங்களை ஒரு புதிய சகாப்தத்திற்கான திருப்புக்கட்டம்” என்பதாகவே கருதியிருக்கிறார்கள்.
முதல் உலகப் போர் மனித சமுதாயத்தில் சரிசெய்ய முடியாதளவு பாதிப்புகளை ஏற்படுத்தியதோடு, மனிதகுலத்தை இந்தப் பொல்லாத உலகின் கடைசி நாட்களுக்குள் தள்ளியது. அதன்பின், அந்த நூற்றாண்டு முழுவதிலும் இன்னுமதிகமான போர்களும், ஆயுதச் சண்டைகளும், பயங்கரவாத சம்பவங்களும் நடைபெற்றன. தற்போதைய நூற்றாண்டின் ஆரம்பத்திலும் நிலைமை அதேதான், எந்தவொரு நல்ல மாற்றமும் ஏற்படவில்லை. போர்களைத் தவிர, இயேசு சொன்ன அடையாளத்தின் மற்ற அம்சங்களும் தென்படுகின்றன.
பஞ்சங்கள், கொள்ளைநோய்கள், பூமியதிர்ச்சிகள்
‘பஞ்சங்கள் உண்டாகும்.’ (மத்தேயு 24:7) முதல் உலகப் போரின்போது ஐரோப்பா பஞ்சத்தாலும் பட்டினியாலும் பீடிக்கப்பட்டிருந்தது, அன்று முதல் பஞ்சம் மனிதகுலத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. 1933-ல், ரஷ்யாவிலும் உக்ரைனிலும் “பசியால் தவித்த ஜனங்கள் கும்பல் கும்பலாக நாட்டுப்புற பகுதிகளெங்கும் அலைந்து திரிந்தார்கள் . . . சாலையோரங்களில் அவர்களுடைய பிரேதங்கள் குவிந்து கிடந்தன” என்று சரித்திராசிரியரான ஆலன் புலக் எழுதினார். 1943-ல், பத்திரிகை எழுத்தாளர் டி. எச். வைட் என்பவர் ஹனான் என்ற சீன மாகாணத்தில் நிலவிய பஞ்சத்தை நேரில் பார்த்தார். அவர் இவ்வாறு எழுதினார்: “பஞ்ச காலத்தில், கிட்டத்தட்ட எல்லாமே உணவுப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது, எல்லாமே பொடிக்கப்படுகிறது, உட்கொள்ளப்படுகிறது, உடலுக்குள் சக்தியாக மாற்றப்படுகிறது. ஆனால் மரண பயம்தான், சாப்பிட முடியாத பொருள்களையும் சாப்பிட வைத்துவிடுகிறது.” வருத்தகரமாக, சமீப பத்தாண்டுகளில் ஆப்பிரிக்காவில் பஞ்சம் சர்வசகஜமாகிவிட்டது. இந்தப் பூமி எல்லோருக்கும் வேண்டிய உணவை போதுமானளவு உற்பத்தி செய்கிறபோதிலும், 84 கோடி பேருக்கு மிகக் குறைந்தளவு உணவு மட்டுமே கிடைப்பதாக ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மைத் துறை கணக்கிட்டிருக்கிறது.
‘கொள்ளைநோய்கள் உண்டாகும்.’ (லூக்கா 21:11) “1918-ல், ஸ்பானிஷ் ஃப்ளுவினால் 2 முதல் 5 கோடி பேர் உயிரிழந்தார்கள்; இப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, பிளேக் நோயால் இறந்தவர்களைவிட அல்லது முதல் உலகப் போரில் இறந்தவர்களைவிட அதிகம்” என ஸுயெட்டாச்செ ட்ஸைட்டுங் என்ற செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. அதிலிருந்து, மலேரியா, சின்னம்மை, டிபி, போலியோ, காலரா போன்ற நோய்களால் எண்ணிலடங்காத ஆட்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதோடு, எய்ட்ஸ் நோய் கட்டுக்கடங்காமல் பரவி வருவதைப் பார்த்து இந்த உலகமே அதிர்ச்சியில் ஆடிப்போயிருக்கிறது. ஆச்சரியப்படத்தக்க விதத்தில் மருத்துவத்துறை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்துவருகிறபோதிலும், சில நோய்கள் குணமாகாமல் இருப்பதால், இன்று நாம் குழப்பமான நிலையை எதிர்ப்பட்டு வருகிறோம். மனிதகுலத்தினால் இதுவரை புரிந்துகொள்ள முடியாத இந்தக் குழப்பநிலை, நாம் அசாதாரணமான காலங்களில்தான் வாழ்கிறோம் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
‘பூமியதிர்ச்சிகள்.’ (மத்தேயு 24:7) கடந்த 100 ஆண்டுகளில், பூமியதிர்ச்சிகள் லட்சக்கணக்கானோரின் உயிரைப் பறித்திருக்கிறது. 1914-லிருந்து ஒவ்வொரு வருடமும் சராசரியாக 18 பூமியதிர்ச்சிகள் கட்டிடங்களைச் சின்னாபின்னமாக்கி, நிலத்தைப் பிளந்திருப்பதாக ஓர் அறிக்கை குறிப்பிடுகிறது. கட்டடங்களைத் தரைமட்டமாக்கிப்போடும் அளவுக்குப் படுபயங்கர பூமியதிர்ச்சிகள் வருடத்திற்கு ஒருமுறை நிகழ்ந்திருக்கின்றன. தொழில்நுட்பத்துறையில் அநேக முன்னேற்றங்கள் ஏற்படுகிறபோதிலும், சாவு எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது; அதற்குக் காரணம், ஜனத்தொகை அதிகரித்துவரும் நகரங்கள் புவியோட்டிலுள்ள அபாயகரமான பெயர்ச்சிப் பிளவுக் கோடுகள்மீது அமைந்திருப்பதே.
இனிய செய்தி!
கடைசி நாட்களுக்குரிய அடையாளத்தின் பெரும்பாலான அம்சங்கள் வேதனை அளிக்கின்றன. என்றாலும், கூடவே ஓர் இனிய செய்தியையும் இயேசு சொன்னார்.
“ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.” (மத்தேயு 24:14) இயேசு தாமே ஆரம்பித்து வைத்த இந்த வேலை, அதாவது கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலை, இந்தக் கடைசி நாட்களில் அதன் உச்சக்கட்டத்தை அடையும். உண்மையில் அதுதான் நடந்து வருகிறது. யெகோவாவின் சாட்சிகள் பைபிளின் செய்தியைப் பிரசங்கித்து வருகிறார்கள், அதோடு, ஆர்வமுள்ளவர்கள் தங்களிடமிருந்து படித்துத் தெரிந்துகொண்ட விஷயங்களை அன்றாட வாழ்க்கையில் பொருத்திப் பிரயோகிப்பதற்கும் கற்றுக்கொடுத்து வருகிறார்கள். தற்போது, 235 நாடுகளில், அறுபது லட்சத்திற்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள் 400-க்கும் மேற்பட்ட மொழிகளில் நற்செய்தியைப் பிரசங்கித்து வருகிறார்கள்.
வேதனைமிக்க உலக நிலைமை, வாழ்க்கையையே ஸ்தம்பிக்கச் செய்துவிடுமென இயேசு சொல்லவில்லை என்பதைக் கவனியுங்கள். அதுமட்டுமல்ல, அந்த அடையாளத்தின் ஒரேவொரு அம்சம் மட்டுமே உலகெங்கும் நிகழுமென்றும் அவர் சொல்லவில்லை. ஆனால், பூமியில் எந்த இடத்திலிருந்தும் பார்க்கக்கூடிய ஓர் அடையாளத்தை, அதாவது பல சம்பவங்களை உட்படுத்துகிற ஓர் அடையாளத்தைப் பற்றியே அவர் முன்னறிவித்தார்.
தனித்தனி சம்பவங்கள்மீது அல்லது குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகள்மீது மட்டுமே கவனத்தை ஒருமுகப்படுத்தாமல், ஒரேவிதமாக நடைபெறும் சம்பவங்களை, உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டு அடையாளமாக உங்களால் பார்க்க முடிகிறதா? இன்று பூமியில் நடக்கும் காரியங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதிக்கின்றன. ஆனால், ஏன் வெகு சிலரே அவற்றைக் கவனிக்கிறார்கள்? என்று ஒருவேளை நீங்கள் கேட்கலாம்.
சொந்த நாட்டங்களுக்கே முதலிடம்
“இங்கு நீந்தக் கூடாது,” “ஹை வோல்டேஜ்-அபாயம்,” “வேகத்தைக் குறைக்கவும்.” இவை சாதாரணமாக நம் கண்களில் படுகிற, ஆனால் அடிக்கடி அசட்டை செய்யப்படுகிற சில அறிவிப்புகளும் எச்சரிப்புக்குறிகளும் ஆகும். இவை ஏன் அடிக்கடி அசட்டை செய்யப்படுகின்றன? நமக்கு எது நல்லது என்று படுகிறதோ அதைச் செய்யவே வெகு எளிதில் நம் மனம் சாய்ந்துவிடுகிறது. உதாரணத்திற்கு, விதிமுறைக்குட்பட்ட வேகத்தைவிட வேகமாக வண்டியை ஓட்ட நாம் ஆசைப்படலாம், அல்லது நீந்துவதற்குத் தடைசெய்யப்பட்டுள்ள இடங்களில் நீந்துவதற்கு நம் மனம் பரபரக்கலாம். ஆனால் எச்சரிப்புக்குறிகளை அசட்டை செய்வது ஞானமற்ற செயலாகும்.
உதாரணமாக, ஆஸ்திரியா, பிரான்சு, இத்தாலி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலுள்ள ஆல்பைன் மலைத்தொடர்களில் பனிச்சரிவுகள் சிலசமயம் சுற்றுலாப் பயணிகளின் உயிரைப் பறித்துவிடுகின்றன, காரணம், பனிச்சறுக்கு விளையாட்டிற்கு அல்லது பனிப்பலகையில் சறுக்குவதற்குப் பாதுகாப்பான பாதைகளை மட்டுமே பயன்படுத்துங்கள் என்ற எச்சரிப்புகளை அவர்கள் அசட்டை செய்வதாலேயே. ஸுயெட்டாச்செ ட்ஸைட்டுங் செய்தித்தாள் சொல்கிறபடி, அத்தகைய எச்சரிப்புகளை அசட்டை செய்கிற ஏராளமான சுற்றுலாப் பயணிகளின் நியதி, ‘நோ ரிஸ்க், நோ ஃபன்’ என்பதாகும், அதாவது துணிந்து இறங்காவிட்டால் எதையும் அனுபவித்து மகிழ முடியாது என்பதாகும். வருத்தகரமாக, எச்சரிப்புகளை அசட்டை செய்வது துயரத்தில் முடிவடையலாம்.
இயேசு விவரித்த அடையாளத்தை ஜனங்கள் என்ன காரணங்களுக்காகப் புறக்கணிக்கிறார்கள்? ஒருவேளை அவர்கள் பேராசையால் குருடாக்கப்பட்டிருக்கலாம், அசட்டை மனப்பான்மையால் மனம் கல்லாகியிருக்கலாம், தயக்கத்தில் செயலற்றுப் போயிருக்கலாம், அன்றாட காரியங்களில் மூழ்கிப்போயிருக்கலாம், அல்லது தன்மானத்தை இழந்துவிடுவோமோ என்ற பயத்தில் பீடிக்கப்பட்டிருக்கலாம். இதில் ஏதாவது ஒன்று இயேசுவுடைய பிரசன்னத்திற்கான அடையாளத்தை அசட்டை செய்யும்படி உங்களைத் தூண்டியிருக்குமோ? அந்த அடையாளத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் நடப்பதல்லவா ஞானம்?
பரதீஸ் பூமியில் வாழ்க்கை
இன்று அதிகமதிகமான ஜனங்கள் இயேசுவுடைய பிரசன்னத்தின் அடையாளத்திற்குக் கவனம்செலுத்தி வருகிறார்கள். ஜெர்மனியில் உள்ள க்ரிஸ்டியான் என்ற மணமான இளைஞர் இவ்வாறு எழுதுகிறார்: “இது ஓர் இருண்ட காலம். நாம் ‘கடைசி நாட்களில்தான்’ வாழ்கிறோம் என்பதில் சந்தேகமே இல்லை.” அவரும் அவருடைய மனைவியும் மேசியானிய ராஜ்யத்தைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதில் அதிக மணிநேரம் செலவிடுகிறார்கள். ஃபிராங்க் என்பவரும் அதே நாட்டில் வசிப்பவர். அவரும் அவருடைய மனைவியும் பைபிளிலுள்ள நற்செய்தியை அறிவிப்பதன் மூலம் மற்றவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்கள். ஃபிராங்க் இவ்வாறு சொல்கிறார்: “இன்றைய உலக சூழ்நிலை காரணமாக, அநேகர் எதிர்காலத்தை நினைத்து கவலைப்படுகிறார்கள். பரதீஸ் பூமியைப் பற்றிய பைபிள் தீர்க்கதரிசனங்களைக் காண்பிப்பதன் மூலம் அவர்களை ஊக்கப்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம்.” இவ்வாறு, க்ரிஸ்டியானும் ஃபிராங்க்கும் இயேசு சொன்ன அடையாளத்தின் ஓர் அம்சத்தை நிறைவேற்றுவதில் பங்குகொள்கிறார்கள், அதாவது ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் பங்குகொள்கிறார்கள்.—மத்தேயு 24:14.
இந்தக் கடைசி நாட்கள் உச்சக்கட்டத்தை அடையும்போது, இந்தப் பழைய உலகிற்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் இயேசு நிரந்தரமாக முடிவுகட்டுவார். அதன்பின், மேசியானிய ராஜ்யம் பூமியின் மீது காரியங்களை ஒழுங்கமைக்க ஆரம்பிக்கும்; அந்தச் சமயத்தில், ஏற்கெனவே முன்னறிவித்தபடி பூமி, ஒரு பரதீஸாக மாற்றப்படும். மனிதர்கள் நோயிலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவிக்கப்படுவார்கள்; அதுமட்டுமல்ல, இறந்தவர்கள் பூமியில் உயிர்த்தெழுப்பப்படுவார்கள். மகிழ்ச்சிகரமான இந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் காலத்தின் அடையாளத்தைப் புரிந்துகொள்பவர்களுக்காகக் காத்திருக்கின்றன. அப்படியானால், அந்த அடையாளத்தைப் பற்றியும் இந்தப் பொல்லாத உலகின் முடிவைத் தப்பிப்பிழைக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் இன்னுமதிக விஷயங்களைக் கற்றுக்கொள்வது ஞானமாக இருக்கும், அல்லவா? நிச்சயமாகவே, அது எல்லோரும் மிகுந்த அவசர உணர்வுடன் செய்ய வேண்டிய ஒரு காரியமாகும்.—யோவான் 17:3.
[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]
பூமியில் எந்த இடத்திலிருந்தும் பார்க்கக்கூடிய ஓர் அடையாளத்தை, அதாவது பல சம்பவங்களை உட்படுத்துகிற ஓர் அடையாளத்தைப் பற்றி இயேசு முன்னறிவித்தார்
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
ஒரேவிதமாக நடைபெறும் சம்பவங்களை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டு அடையாளமாக உங்களால் பார்க்க முடிகிறதா?
[பக்கம் 6-ன் பெட்டி/படங்கள்]
கடைசி நாட்களுக்கான அடையாளங்கள்
முன்னொருபோதும் இல்லாத அளவுக்குப் போர்கள்.—மத்தேயு 24:7; வெளிப்படுத்துதல் 6:4
பஞ்சங்கள்.—மத்தேயு 24:7; வெளிப்படுத்துதல் 6:5, 6, 8
கொள்ளைநோய்கள்.—லூக்கா 21:11; வெளிப்படுத்துதல் 6:8
அக்கிரமம் அதிகரித்தல்.—மத்தேயு 24:12
பூமியதிர்ச்சிகள்.—மத்தேயு 24:7
கையாளுவதற்குக் கடினமான காலங்கள்.—2 தீமோத்தேயு 3:1
அளவுக்கு மிஞ்சிய பண ஆசை.—2 தீமோத்தேயு 3:2
பெற்றோர்களுக்குக் கீழ்ப்படியாமை.—2 தீமோத்தேயு 3:2
சுபாவ அன்பில்லாமை.—2 தீமோத்தேயு 3:3
தேவனை அல்லாமல், சுகபோகங்களை விரும்புதல்.—2 தீமோத்தேயு 3:4
இச்சையடக்கம் இல்லாமை.—2 தீமோத்தேயு 3:3
நல்ல காரியங்களை வெறுத்தல்.—2 தீமோத்தேயு 3:3
ஆபத்தை அசட்டை செய்தல்.—மத்தேயு 24:39
பரியாசக்காரர் கடைசி நாட்களுக்கான அத்தாட்சிகளை நிராகரித்தல்.—2 பேதுரு 3:3, 4
கடவுளுடைய ராஜ்யத்தைக் குறித்து உலகளவில் பிரசங்கித்தல்.—மத்தேயு 24:14
[பக்கம் 5-ன் படங்களுக்கான நன்றி]
WWI படைவீரர்கள்: From the book The World War—A Pictorial History, 1919; ஏழை குடும்பம்: AP Photo/Aijaz Rahi; போலியோவினால் பாதிக்கப்பட்டவன்: © WHO/P. Virot