வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
பேய்களின் தொல்லைகளுக்கு ஆளாகும் நபர் அதிலிருந்து விடுபட என்ன செய்யலாம்?
பேய்களின் தொல்லைகளால் கஷ்டப்படும் ஆட்கள் அதிலிருந்து விடுபட முடியும் என பைபிள் கூறுகிறது. அதற்கு ஜெபம் பெரிதும் உதவும். (மாற்கு 9:25-29) அதேசமயத்தில், கூடுதலான சில படிகளையும் எடுக்க வேண்டியிருக்கும். அவற்றைத் தெரிந்துகொள்ள, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் விஷயத்தில் என்ன நடந்ததென கவனியுங்கள்.
பூர்வ எபேசு பட்டணத்தைச் சேர்ந்த சிலர், கிறிஸ்தவர்களாவதற்கு முன் ஆவியுலகத்தொடர்பு சம்பந்தப்பட்ட பழக்கங்களில் ஈடுபட்டு வந்தார்கள். என்றபோதிலும், கடவுளைச் சேவிக்க தீர்மானித்தவுடன் “மாயவித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டுவந்து, எல்லாருக்கு முன்பாகச் சுட்டெரித்தார்கள்.” (அப்போஸ்தலர் 19:19) இவ்வாறு குறிசொல்லுதல் சம்பந்தப்பட்ட தங்கள் புத்தகங்களையெல்லாம் சுட்டெரித்ததன் மூலம் அவர்கள் நல்ல முன்மாதிரி வைத்தார்கள். ஆகவே, பேய்களின் தொல்லைகளால் இன்று கஷ்டப்படுவோர் ஆவியுலகத்தொடர்பு சம்பந்தப்பட்ட எல்லாப் பொருள்களையும் அப்புறப்படுத்துவது மிக மிக அவசியம். அது சம்பந்தமான புத்தகங்கள், பத்திரிகைகள், திரைப்படங்கள், இன்டர்நெட் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள், இசைப் பதிவுகள், “பாதுகாப்புக்காக” அணியப்படும் தாயத்துகள், தகடுகள், மந்திரித்த கயிறுகள் போன்றவற்றை அவர்கள் ஒழித்துக்கட்டிவிட வேண்டும்.—உபாகமம் 7:25, 26; 1 கொரிந்தியர் 10:21.
எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்கள் மாயவித்தை சம்பந்தமான தங்கள் புத்தகங்களைச் சுட்டெரித்ததற்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: ‘பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு நமக்குப் போராட்டம் உண்டு.’ (எபேசியர் 6:12) ஆகையால், கிறிஸ்தவர்களை அவர் இவ்வாறு அறிவுறுத்தினார்: “நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.” (எபேசியர் 6:11) இந்த அறிவுரை இன்று நமக்கும் பொருந்துகிறது. எனவே, பொல்லாத ஆவிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள விரும்புவோர் ஆன்மீக ரீதியில் தங்களைப் பலப்படுத்திக்கொள்வது முக்கியம். “பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத் தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்” என பவுல் வலியுறுத்தினார். (எபேசியர் 6:16) பைபிளைப் படிப்பதன் மூலம் ஒருவர் தன்னுடைய விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள முடியும். (ரோமர் 10:17; கொலோசெயர் 2:6, 7) இப்படித் தவறாமல் பைபிளைப் படித்து, விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்வது பொல்லாத ஆவிகளின் தாக்குதலைச் சமாளிப்பதற்குரிய கேடகமாகச் செயல்படுகிறது.—சங்கீதம் 91:4; 1 யோவான் 5:5.
எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்கள் மற்றொரு முக்கியமான படியை எடுக்க வேண்டியிருந்தது. அதை பவுல் இவ்வாறு விளக்கினார்: ‘எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம் பண்ணுங்கள்.’ (எபேசியர் 6:18) ஆம், இன்று பேய்களின் தாக்குதலிலிருந்து விடுபட விரும்புவோர் யெகோவாவின் பாதுகாப்பிற்காக ஊக்கமாய் ஜெபிப்பது மிக அவசியம். (நீதிமொழிகள் 18:10; மத்தேயு 6:13; 1 யோவான் 5:18, 19) “தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்” என்று பைபிள் சொல்வது பொருத்தமாகவே இருக்கிறது.—யாக்கோபு 4:7.
ஆக, பேய்களின் தாக்குதலால் கஷ்டப்படும் ஒருவர் தனக்காக ஊக்கமாய் ஜெபம் செய்ய வேண்டும். அதேசமயத்தில் சக கிறிஸ்தவர்களும் அவருக்காக ஜெபிக்கலாம்; முக்கியமாய், அவர் யெகோவாவைச் சேவிக்கவும் பொல்லாத ஆவிகளை எதிர்க்கவும் மனதார விரும்பி, அதற்காக கடும் முயற்சி செய்துவருகிறார் என்றால் அவ்வாறு ஜெபிக்கலாம். பேய்களின் தொல்லைகளிலிருந்து விடுபடுவதற்குத் தேவையான ஆன்மீக பலத்தை அவருக்கு அளிக்கும்படி கடவுளிடம் மன்றாடலாம். ‘பிசாசை எதிர்த்து நிற்க’ முழுமூச்சாகப் போராடுவோருக்கு இத்தகைய ஜெபங்கள் பெரிதும் உதவியாக இருக்கும். ஏனென்றால், “நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது” என்று பைபிள் உறுதி அளிக்கிறது.—யாக்கோபு 5:16.
[பக்கம் 31-ன் படம்]
மாயவித்தை சம்பந்தமான புத்தகங்களை எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்கள் சுட்டெரித்தனர்