பிஞ்சு மனதில் பதியும்படி பேசுதல்
குழந்தைகள் வெறித்தனமான கேம்ஸ் விளையாடுவதைப் பார்த்து எப்போதாவது கவலைப்பட்டிருக்கிறீர்களா? இப்போதெல்லாம் பொடிசுகள்கூட துப்பாக்கி, பீரங்கி போன்ற ஆயுதங்களுள்ள கேம்ஸைத்தான் எந்நேரமும் விளையாடிக் கொண்டிருக்கின்றன. காரணம், பொழுதுபோக்கு துறையை இன்று வன்முறை ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கிறது. அப்படியென்றால், வெறித்தனமான கேம்ஸை எல்லாம் விட்டுவிட்டு நல்ல விளையாட்டுகளை விளையாட பிள்ளைகளுக்கு எப்படி உதவி செய்வீர்கள்? இதற்கு ஒரு சிறந்த வழியை வால்ட்ராட் என்ற மிஷனரி கண்டுபிடித்தார். இவர் ஆப்பிரிக்காவில் ரொம்ப காலமாக சேவை செய்து வருகிறார்.
போர் காரணமாக வால்ட்ராட் ஆப்பிரிக்காவில் இருக்கும் மற்றொரு நாட்டுக்கு போக வேண்டியதாயிற்று. அங்கே ஒரு பெண்ணுக்கு பைபிள் படிப்பு நடத்த ஆரம்பித்தார். அந்தப் பெண்ணுக்கு ஐந்து வயதில் ஒரு பையன் இருந்தான். விளையாடுவதற்கு அவனிடம் ஒரு குட்டி பிளாஸ்டிக் துப்பாக்கி மட்டும்தான் இருந்தது. வால்ட்ராட் பைபிள் படிப்பு நடத்த போகும் போதெல்லாம் அவன் அதை வைத்து விளையாடிக் கொண்டிருப்பான். குறிபார்த்து சுடுவது போல அந்தத் துப்பாக்கியை வைத்து அவன் விளையாடியதே இல்லை. ஆனால் எப்போது பார்த்தாலும் அதில் குண்டு நிரப்புவது மாதிரி திறந்து திறந்து மூடிக்கொண்டே இருப்பான்.
வால்ட்ராட் அந்த பையனிடம் இவ்வாறு கேட்டார்: “வெர்னர், நான் ஏன் உங்க நாட்டுக்கு வந்தேன்னு தெரியுமா? நான் இருந்த இடத்தில ஒரே சண்டையா இருந்துச்சு. உங்கிட்ட இருக்கில்ல துப்பாக்கி, இது மாதிரி பெரிய பெரிய துப்பாக்கியை வைச்சுகிட்டு எல்லாரும் ஷூட் பண்ணிட்டு இருந்தாங்க. அவங்ககிட்ட இருந்து தப்பிக்கத்தான் நான் இங்க வந்தேன். இப்படி ஒருத்தரையொருத்தர் ஷூட் பண்ணறது எல்லாம் சரியா, தப்பா? நீ என்ன சொல்ற?”
“தப்புதான்” என்று அவன் சோகமாக பதில் அளித்தான்.
“கரெக்டா சொன்ன வெர்னர். சரி, நான் ஏன் உங்க வீட்டுக்கு வாராவாரம் வர்றேன்னு உனக்கு தெரியுமா? எங்களை யெகோவாவின் சாட்சின்னு சொல்வாங்க. சண்டை போடாம ஒத்துமையா இருக்க எல்லாருக்கும் நாங்க உதவி செய்றோம். கடவுள்கிட்டயும் மத்தவங்ககிட்டயும் சமாதானமா இருக்க கத்துக்கொடுக்கிறோம்” என்று வால்ட்ராட் விளக்கினார். அதன்பின், “உன் துப்பாக்கிய கொடுக்கிறியா, தூக்கிப்போட்டுடலாம். அதுக்கு பதிலா ஒரு நல்ல லாரி பொம்மையை கண்டிப்பா வாங்கிக்கலாம்” என்று சொன்னார், அவனுடைய அம்மாவின் சம்மதத்தோடு.
வெர்னர் உடனே தன் துப்பாக்கியை கொடுத்துவிட்டான். ஆனால் புது பொம்மைக்காக அவன் நான்கு வாரங்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டியிருந்தது. கடைசியில், மரத்தால் செய்யப்பட்ட ஒரு லாரி பொம்மை கிடைத்தபோது, அவனுக்கு ஒரே குஷி.
உங்கள் பிள்ளைகளிடம் பேச நீங்கள் நேரம் செலவழிக்கிறீர்களா? அதுவும், அவர்களுடைய பிஞ்சு மனதில் பதியும்படி பேசுகிறீர்களா? அப்படி செய்தீர்கள் என்றால், வன்முறையைத் தூண்டும் விளையாட்டுச் சாமான்களை அவர்களாகவே தூக்கிப் போட்டுவிடுவார்கள். இப்படி பிள்ளைகளுடைய மனதில் நீங்கள் பதியவைக்கும் பாடம், வாழ்நாள் பூராவும் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.