கிறிஸ்து ராஜாவுக்கு உண்மைத்தன்மையுடன் சேவை செய்தல்
“சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது.”—தானியேல் 7:14.
1, 2. பொ.ச. 33-ல் ராஜ்ய அதிகாரத்தை கிறிஸ்து முழுமையாகப் பெறவில்லை என்பது நமக்கு எப்படித் தெரியும்?
எந்த அரசனால் தன் குடிமக்களுக்காக உயிர்துறந்து மீண்டும் உயிர்பெற்று வந்து ஆட்சி செய்ய முடியும்? எந்த அரசனால் பூமியில் வாழ்ந்து, உண்மைத்தன்மையைக் காட்டுகிற குடிமக்களைச் சம்பாதித்து பின்பு பரலோகத்திலிருந்து ஆள முடியும்? இதைச் சாதிக்கக்கூடிய—ஏன், இன்னும் அநேக காரியங்களைச் சாதிக்கக்கூடிய—ஒரே நபர் இயேசு கிறிஸ்துவே. (லூக்கா 1:32, 33) பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளன்று, அதாவது கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்து பரலோகத்திற்குப் போன பின்பு, கடவுள் அவரை ‘எல்லாவற்றிற்கும் மேலான தலையாக சபைக்குத் தந்தருளினார்.’ (எபேசியர் 1:20-23; அப்போஸ்தலர் 2:32-36) இவ்விதமாக, கிறிஸ்து சிறிய அளவில் ஆட்சி செய்ய ஆரம்பித்தார். அப்போது அவருக்குக் குடிமக்களாக இருந்தவர்கள் ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களே; இவர்கள் ஆவிக்குரிய இஸ்ரவேலர், அதாவது ‘தேவனுடைய இஸ்ரவேலர்,’ என அழைக்கப்படுகிறார்கள்.—கலாத்தியர் 6:16; கொலோசெயர் 1:13.
2 அச்சமயத்தில் ராஜ்ய அதிகாரத்தை கிறிஸ்து முழுமையாகப் பெறவில்லை; அதற்கு மாறாக, “தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து, இனித் தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார்” என்று பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளுக்கு சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அப்போஸ்தலன் பவுல் உறுதிப்படுத்தினார். (எபிரெயர் 10:12, 13) இதன் சம்பந்தமாக முதல் நூற்றாண்டின் இறுதியில், வயதான அப்போஸ்தலன் யோவான் ஒரு தரிசனத்தைக் கண்டார்; சர்வலோக பேரரசரான யெகோவா, புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட பரலோக ராஜ்யத்தின் ராஜாவாக கிறிஸ்து இயேசுவை அமர்த்துவதை அதில் கண்டார். (வெளிப்படுத்துதல் 11:15; 12:1-5) 1914-ம் ஆண்டு பரலோகத்தில் கிறிஸ்து ஆட்சி செய்ய ஆரம்பித்தார் என்பதற்கு பலமான அத்தாட்சியை இப்பொழுது நாம் மீண்டும் அலசி ஆராயலாம்.a
3. (அ) 1914-லிருந்து பிரசங்கிக்கப்படும் ராஜ்ய நற்செய்தியில் என்ன புதிய அம்சம் அடங்கியுள்ளது? (ஆ) என்ன கேள்விகளை நம்மையே கேட்டுக்கொள்ளலாம்?
3 ஆம், 1914-லிருந்து பிரசங்கிக்கப்பட்டு வருகிற ராஜ்ய நற்செய்தியில் மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு புதிய அம்சம் அடங்கியுள்ளது. கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் ராஜாவாக கிறிஸ்து இப்பொழுது ‘சத்துருக்களின் மத்தியில்’ ஆட்சி செய்து வருகிறார் என்பதே அந்தப் புதிய அம்சம். (சங்கீதம் 110:1, 2; மத்தேயு 24:14; வெளிப்படுத்துதல் 12:7-12) வரலாறு காணாத அளவில் உலகெங்கும் நடைபெற்று வருகிற இந்த பைபிள் கல்வி திட்டத்தில் பங்குகொள்வதன் மூலம் அவருடைய உண்மையுள்ள குடிமக்கள் அவரது அதிகாரத்திற்கு மனமுவந்து கீழ்ப்படிகிறார்கள். (தானியேல் 7:13, 14; மத்தேயு 28:18) ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், அதாவது ‘ராஜ்யத்தின் புத்திரர்கள்,’ ‘கிறிஸ்துவுக்கு உடன் ஸ்தானாபதிகளாக’ சேவை செய்கிறார்கள். ‘வேறே ஆடுகள்,’ அதாவது கடவுளுடைய ராஜ்யத்தின் பிரதிநிதிகள், உண்மைத்தன்மையுடன் இவர்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். (மத்தேயு 13:38; 2 கொரிந்தியர் 5:20; யோவான் 10:16) என்றாலும், தனிப்பட்டவர்களாக நாம் உண்மையிலேயே கிறிஸ்துவின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்கிறோமா என்பதை பரிசீலித்துப் பார்ப்பது அவசியம். அவருக்கு உண்மைத்தன்மையை தொடர்ந்து வெளிக்காட்டுகிறோமா? பரலோகத்தில் ஆளுகை செய்யும் ராஜாவுக்கு நாம் எப்படி உண்மைத்தன்மையைக் காட்ட முடியும்? இவற்றை சிந்திப்பதற்கு முன்னால், கிறிஸ்துவுக்கு உண்மையாய் இருப்பதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கின்றன என்பதை ஆராயலாம்.
ராஜாவின் குணங்கள்—உண்மைத்தன்மையைக் காட்ட உந்துவிக்கின்றன
4. வருங்கால அரசரான இயேசு பூமியில் வாழ்ந்தபோது எதைச் சாதித்தார்?
4 கிறிஸ்துவின் தலைசிறந்த குணங்களுக்காகவும், நமக்காக அவர் செய்த காரியங்களுக்காகவும் நன்றியுள்ளவர்களாக இருப்பதன் மூலம் நாம் அவருக்கு உண்மைத்தன்மையைக் காட்டுகிறோம். (1 பேதுரு 1:8) இயேசு பூமியில் வாழ்ந்தபோது, பசியால் வாடியவர்களுக்கு உணவளித்தார்; நோயாளிகளையும் பார்வையற்றவர்களையும் முடவர்களையும் காதுகேளாதவர்களையும் ஊமையர்களையும் குணப்படுத்தினார்; இறந்தவர்கள் சிலரையும் உயிர்த்தெழுப்பினார். (மத்தேயு 15:30, 31; லூக்கா 7:11-16; யோவான் 6:5-13) இதையெல்லாம் அவர் சிறிய அளவில் செய்துகாட்டினார். ஆனால் அவர் பூமியை ஆட்சி செய்யும்போது இவற்றை மிகப் பெரிய அளவில் செய்வார். இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையைப் பற்றி படிக்கும்போது, இந்த வருங்கால அரசருடைய குணங்களை—மிக முக்கியமாக சுயதியாக அன்பை—நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. (மாற்கு 1:40-45) அவரைக் குறித்து நெப்போலியன் போனபார்ட் இவ்வாறு சொன்னதாக கூறப்படுகிறது: “அலெக்சாந்தரும் சீசரும் சார்லிமேனும் நானும் சாம்ராஜ்யங்களை ஸ்தாபித்தோம், இதையெல்லாம் நாங்கள் எப்படி சாதித்தோம்? அடக்குமுறையால் மட்டுமே. இயேசு ஒருவரே அன்பினால் தமது ராஜ்யத்தை ஸ்தாபித்தார், இன்று அவருக்காக லட்சோபலட்சம் பேர் தங்கள் உயிரையே கொடுப்பார்கள்.”
5. இயேசுவின் ஆளுமை பிறரை கவர்ந்ததற்குக் காரணம் என்ன?
5 இயேசு சாந்தமும் மனத்தாழ்மையும் உள்ளவராக இருந்தார். அதனால்தான், பலவித அழுத்தங்களாலும் துன்பங்களாலும் வாழ்க்கையில் பாரமடைந்திருந்தவர்களுக்கு அவரது ஊக்கமூட்டும் போதனையும் தயவான குணமும் புத்துணர்ச்சி அளித்தது. (மத்தேயு 11:28-30) சிறுபிள்ளைகள் எவ்வித பயமுமின்றி தாராளமாய் அவரிடம் நெருங்கி வந்தார்கள். தாழ்மையும் பகுத்துணர்வுமுடைய ஆண்கள் அவரது சீஷர்களாவதற்கு உடனடியாக முன்வந்தார்கள். (மத்தேயு 4:18-22; மாற்கு 10:13-16) கரிசனையும் மரியாதையுமிக்க அவரது குணத்தைக் கண்டு, கடவுள் பயமுள்ள பெண்கள் பலர் அவருக்கு உண்மைத்தன்மையைக் காட்டினார்கள். அவரது ஊழியத்திற்காக அவர்களில் அநேகர் தங்களுடைய நேரத்தையும் சக்தியையும் செலவழித்தார்கள், பொருளுதவியும் அளித்தார்கள்.—லூக்கா 8:1-3.
6. இயேசு இளகிய மனமுடையவராய் இருந்ததை லாசருவின் சம்பவம் எப்படிக் காட்டுகிறது?
6 இயேசு இளகிய மனமுடையவராய் இருந்தார்; தமது நண்பர் லாசரு இறந்தபோது மரியாளும் மார்த்தாளும் படும் துக்கத்தைக் கண்டு மிகவும் மனதுருகினார், அவர் ஆவியிலே கலங்கி “கண்ணீர் விட்டார்.” விரைவில் லாசருவை அவர் உயிர்த்தெழுப்பவிருந்தபோதிலும் ‘துயரமடைந்தார்’—வேதனையிலும் துக்கத்திலும் துடிதுடித்தார். அன்பும் இரக்கமும் அவரைத் தூண்டியதால், கடவுள் தந்த வல்லமையைப் பயன்படுத்தி லாசருவை உயிர்த்தெழுப்பினார்.—யோவான் 11:11-15, 33-35, 38-44.
7. இயேசுவுக்கு நாம் ஏன் உண்மைத்தன்மையுடன் இருக்க வேண்டும்? (பக்கம் 31-ல் உள்ள பெட்டியையும் காண்க.)
7 சரியானதைச் செய்வதற்கு இயேசு காட்டிய விருப்பத்தையும், மாய்மாலத்திடமும் துன்மார்க்கத்திடமும் அவர் காட்டிய வெறுப்பையும் கண்டு நாம் மலைத்து நிற்கிறோம். ஆலயத்திலிருந்த பேராசைமிக்க வியாபாரிகளை விரட்டுவதற்கு இருமுறை தைரியமாய் நடவடிக்கை எடுத்தார். (மத்தேயு 21:12, 13; யோவான் 2:14-17) அதோடு, பூமியில் ஒரு மனிதராக வாழ்ந்தபோது, எல்லாவித கஷ்டங்களையும் அவர் எதிர்ப்பட்டார்; நாம் படுகிற கஷ்டங்களையும் துன்பங்களையும் அவரே நேரடியாக அனுபவித்தார். (எபிரெயர் 5:7-9) பகைமைக்கும் அநீதிக்கும் ஆளானார். (யோவான் 5:15-18; 11:53, 54; 18:38–19:16) கடைசியில், தம்முடைய பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதற்காக கொடூரமான மரணத்தைத் தைரியமாக சந்தித்தார்; இதன்மூலம், தமது குடிமக்கள் நித்திய ஜீவனைப் பெற வழிவகுத்தார். (யோவான் 3:16) கிறிஸ்துவுக்கு உண்மைத்தன்மையுடன் சேவை செய்ய அவருடைய குணங்கள் உங்களைத் தூண்டுகின்றன, அல்லவா? (எபிரெயர் 13:8; வெளிப்படுத்துதல் 5:6-10) ஆனால், கிறிஸ்து ராஜாவின் குடிமக்களாக ஆவதற்கு என்ன தேவை?
கிறிஸ்துவின் குடிமக்களுக்குரிய தகுதிகள்
8. கிறிஸ்துவின் குடிமக்களாக ஆவதற்கு என்ன தகுதிகள் தேவை?
8 இந்த ஒப்புமையைக் கவனியுங்கள்: வேறொரு நாட்டின் குடிமகனாய் ஆக விரும்பும் ஒருவர் சில தகுதிகளை பூர்த்தி செய்வது அவசியம். அவர் நன்னடத்தை உள்ளவராகவும், நல்ல ஆரோக்கியம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். அது போலவே, கிறிஸ்துவின் குடிமகனாக ஆவதற்கு, ஒருவர் உயர்ந்த ஒழுக்கத் தராதரங்களை கடைப்பிடிக்க வேண்டும். அதோடு, ஆன்மீக ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ள வேண்டும்.—1 கொரிந்தியர் 6:9-11; கலாத்தியர் 5:19-23.
9. கிறிஸ்துவுக்கு நம் உண்மைத்தன்மையை எவ்வாறு வெளிக்காட்டலாம்?
9 தமது குடிமக்கள் தமக்கும் தம்முடைய ராஜ்யத்திற்கும் உண்மைத்தன்மையுடன் இருக்க வேண்டுமென்று இயேசு கிறிஸ்து எதிர்பார்க்கிறார். அவர்களும் இயேசுவின் போதனைகளுக்கு இசைவாக வாழ்வதன் மூலம் அவருக்கு உண்மைத்தன்மையை வெளிக்காட்டுகிறார்கள். உதாரணமாக, பொருளாதார காரியங்களுக்கு அல்ல, ஆனால் ராஜ்ய அக்கறைகளுக்கும் கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்கும் அவர்கள் முதலிடம் கொடுக்கிறார்கள். (மத்தேயு 6:31-34) இக்கட்டான சூழ்நிலைமைகளிலும்கூட கிறிஸ்துவின் ஆளுமையைப் பின்பற்ற ஊக்கமாய் முயற்சி செய்கிறார்கள். (1 பேதுரு 2:21-23) அதுமட்டுமல்ல, பிறருக்கு நன்மை செய்ய முன்வருவதன் மூலமும் கிறிஸ்துவின் குடிமக்கள் அவரது முன்மாதிரியைப் பின்பற்றுகிறார்கள்.—மத்தேயு 7:12; யோவான் 13:3-17.
10. (அ) குடும்பத்தில் (ஆ) சபையில் எவ்வாறு கிறிஸ்துவுக்கு உண்மைத்தன்மையைக் காட்டலாம்?
10 குடும்பத்தில் இயேசுவின் குணங்களைப் பிரதிபலிப்பதன் மூலமும் அவரைப் பின்பற்றுவோர் அவருக்கு உண்மைத்தன்மையைக் காட்டுகிறார்கள். உதாரணமாக, மனைவிகளையும் பிள்ளைகளையும் நடத்தும் விதத்தில் கிறிஸ்துவைப் பின்பற்றுவதன் மூலம் பரலோக ராஜாவுக்கு கணவர்கள் உண்மைத்தன்மையைக் காட்டுகிறார்கள். (எபேசியர் 5:25, 28-30; 6:4; 1 பேதுரு 3:7) மனைவிகள் கற்புள்ள நடத்தையின் மூலமும் “சாந்தமும் அமைதலுமுள்ள ஆவி”யைக் காட்டுவதன் மூலமும் கிறிஸ்துவுக்கு உண்மைத்தன்மையைக் காட்டுகிறார்கள். (1 பேதுரு 3:1-4; எபேசியர் 5:22-24) தம்முடைய பெற்றோர்கள் அபூரணராக இருந்தபோதிலும், இளைஞரான இயேசு அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார். பிள்ளைகள் கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றும்போது அவருக்கு உண்மைத்தன்மையைக் காட்டுகிறார்கள். (லூக்கா 2:51, 52; எபேசியர் 6:1) ‘இரக்கமுள்ளவர்களும், சகோதர சிநேகமுள்ளவர்களும், மனஉருக்கமுள்ளவர்களுமாய்’ இருப்பதன் மூலம் கிறிஸ்துவின் குடிமக்கள் உண்மைத்தன்மையுடன் அவரைப் பின்பற்ற முயலுகிறார்கள். “மனத்தாழ்மை” காட்டுவதன் மூலமும் ‘தீமைக்குத் தீமை செய்யாதிருப்பதன் மூலமும் பழிச்சொல்லுக்குப் பழிச்சொல் கூறாதிருப்பதன் மூலமும்’ கிறிஸ்துவைப் போல நடப்பதற்கு அவர்கள் அரும்பாடு படுகிறார்கள்.—1 பேதுரு 3:8, 9; பொது மொழிபெயர்ப்பு; 1 கொரிந்தியர் 11:1.
கிறிஸ்துவின் சட்டத்திற்குக் கீழ்ப்படியும் குடிமக்கள்
11. எந்தப் பிரமாணத்திற்குக் கிறிஸ்துவின் குடிமக்கள் கீழ்ப்படிந்து நடக்கிறார்கள்?
11 வேறொரு நாட்டில் குடிமகனாய் ஆக விரும்பும் ஒருவர் அந்நாட்டின் சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறார்; அதுபோல், கிறிஸ்துவின் குடிமக்கள் அவருடைய போதனைகளுக்கும் கட்டளைகளுக்கும் இசைய வாழ்வதன் மூலம் ‘கிறிஸ்துவினுடைய பிரமாணத்திற்குக்’ கீழ்ப்படிந்து நடக்கிறார்கள். (கலாத்தியர் 6:2) முக்கியமாக, அன்பு எனும் ‘ராஜரிக பிரமாணத்திற்கு’ ஏற்ப உண்மைத்தன்மையுடன் வாழ்கிறார்கள். (யாக்கோபு 2:8) இந்தப் பிரமாணங்கள் யாவை?
12, 13. ‘கிறிஸ்துவின் பிரமாணத்திற்கு’ நாம் எப்படி உண்மைத்தன்மையுடன் கீழ்ப்படிகிறோம்?
12 கிறிஸ்துவின் குடிமக்கள் பரிபூரணர்களோ தவறிழைக்காதவர்களோ அல்ல. (ரோமர் 3:23) ஆகவே, ‘ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருவதற்கு’ ‘மாயமற்ற சகோதர சிநேகத்தை’ அவர்கள் தொடர்ந்து வளர்ப்பது அவசியம். (1 பேதுரு 1:22) ‘ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால்,’ ‘ஒருவரையொருவர் தாங்குவதன்’ மூலமும் ‘ஒருவருக்கொருவர் மன்னிப்பதன்’ மூலமும் அவர்கள் உண்மையுடன் கிறிஸ்துவின் பிரமாணத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். இது மற்றவர்களுடைய அபூரணத்தைப் பார்க்காதிருப்பதற்கு உதவுகிறது; அதேசமயத்தில், ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவதற்குரிய காரணங்களைக் கண்டுபிடிப்பதற்கும் உதவுகிறது. இவ்வாறாக அவர்கள் ‘பூரண சற்குணத்தின் கட்டாகிய’ அன்பை உடுத்திக்கொண்டு, நமது அன்புள்ள அரசருக்கு உண்மைத்தன்மையோடு கீழ்ப்படிகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் மத்தியில் இருப்பதற்காக நீங்கள் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறீர்கள், அல்லவா?—கொலோசெயர் 3:13, 14.
13 பொதுவாக மனிதர் ஒருவருக்கொருவர் காண்பிக்கும் அன்பைவிட தம்முடைய அன்பு மிக உயர்ந்தது என்பதை இயேசு விளக்கினார். (யோவான் 13:34, 35) நம்மை நேசிப்பவர்களை மட்டுமே நாம் நேசித்தால், அதில் எந்த ‘விசேஷமும்’ இல்லை. நமது அன்பும் பூரணமாக இருக்காது. மாறாக, குறைவுள்ளதாகவே இருக்கும். நம்மைப் பகைக்கிற, துன்புறுத்துகிற விரோதிகள் மீதுகூட நியமத்தின் அடிப்படையில் அன்புகூருவதன் மூலம் பிதாவின் அன்பைப் பிரதிபலிக்கும்படி இயேசு உந்துவித்தார். (மத்தேயு 5:46-48) அதுமட்டுமல்ல, ஒரு முக்கியமான வேலையை உண்மைத்தன்மையுடன் தொடர்ந்து செய்வதற்கும் இந்த அன்பு ராஜ்யத்தின் குடிமக்களை உந்துவிக்கிறது. அது என்ன வேலை?
குடிமக்களின் உண்மைத்தன்மை பரீட்சிக்கப்படுகிறது
14. பிரசங்கிப்பது ஏன் மிக முக்கியம்?
14 இப்பொழுது, ‘தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துச் சாட்சி கொடுக்கும்’ முக்கியமான வேலை ராஜ்யத்தின் குடிமக்களுக்கு இருக்கிறது. (அப்போஸ்தலர் 28:23) அதைச் செய்வது இன்றியமையாதது, ஏனென்றால் யெகோவாவின் சர்வலோக பேரரசே சரியென மேசியானிய ராஜ்யம் நிரூபித்துக் காட்டும். (1 கொரிந்தியர் 15:24-28) நாம் பிரசங்கிக்கும் நற்செய்தியை கேட்போருக்குக் கடவுளுடைய ராஜ்யத்தின் குடிமக்களாய் ஆகும் வாய்ப்பு கிடைக்கிறது. மேலும், அந்தச் செய்திக்கு மக்கள் பிரதிபலிக்கும் விதத்தைப் பொறுத்தே அவர்களை ராஜாவான கிறிஸ்து நியாயந்தீர்ப்பார். (மத்தேயு 24:14; 2 தெசலோனிக்கேயர் 1:6-10) ஆகையால், ராஜ்யத்தைப் பற்றி பிறருக்கு அறிவிக்க வேண்டுமென்ற கட்டளைக்குக் கீழ்ப்படிவதே கிறிஸ்துவுக்கு உண்மைத்தன்மையுடன் இருக்கிறோம் என்பதைக் காட்ட முக்கியமான வழியாகும்.—மத்தேயு 28:18-20.
15. கிறிஸ்தவர்களுடைய உண்மைத்தன்மை ஏன் பரீட்சிக்கப்படுகிறது?
15 இந்தப் பிரசங்க வேலையை நிறுத்துவதற்கு சாத்தான் தன்னால் முடிந்ததை எல்லாம் செய்கிறான். அதோடு மனித ஆட்சியாளர்களும் கிறிஸ்துவின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதில்லை. (சங்கீதம் 2:1-3, 6-8) எனவே, இயேசு தமது சீஷர்களை இவ்வாறு எச்சரித்தார்: “ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல . . . அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்.” (யோவான் 15:20) ஆகையால், உண்மைத்தன்மையைப் பரீட்சிக்கும் ஓர் ஆன்மீக போரில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.—2 கொரிந்தியர் 10:3-5; எபேசியர் 6:10-12.
16. ராஜ்யத்தின் குடிமக்கள் எவ்வாறு “தேவனுடையதை தேவனுக்கு” செலுத்துகிறார்கள்?
16 இப்படிப்பட்ட பரீட்சைகள் மத்தியிலும் கடவுளுடைய ராஜ்யத்தின் குடிமக்கள் தங்களுடைய ராஜாவுக்கு உண்மைத்தன்மையைக் காட்டுகிறார்கள். அதேசமயத்தில், மனித அதிகாரிகளை அவமதிக்காமலும் நடந்து கொள்கிறார்கள். (தீத்து 3:1, 2) “இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்” என்று இயேசு குறிப்பிட்டார். (மாற்கு 12:13-17) எனவே, கடவுளுடைய சட்டங்களோடு முரண்படாத அரசாங்க சட்டங்களுக்குக் கிறிஸ்துவின் குடிமக்கள் கீழ்ப்படிகிறார்கள். (ரோமர் 13:1-7) உதாரணமாக, பிரசங்கிக்கக் கூடாதென இயேசுவின் சீஷர்களுக்கு யூத உயர்நீதி மன்றம் ஆணையிட்டபோது, அதாவது கடவுளுடைய சட்டத்திற்கு எதிராக ஆணையிட்டபோது, ‘மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்கே கீழ்ப்படிய’ வேண்டுமென உறுதியாக அதேசமயத்தில் மரியாதையுடன் அவர்கள் கூறினார்கள்.—அப்போஸ்தலர் 1:8; 5:27-32.
17. உண்மைத்தன்மையுடன் இருக்கையில் வரும் பரீட்சைகளை நீங்கள் ஏன் தைரியமாய் எதிர்கொள்ளலாம்?
17 துன்புறுத்தப்படும்போது கிறிஸ்துவுக்கு உண்மைத்தன்மையுடன் நிலைத்திருப்பதற்கு அதிக தைரியம் தேவை. என்றாலும், இயேசு இவ்வாறு கூறினார்: “என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்.” (மத்தேயு 5:11, 12) இந்த வார்த்தைகள் உண்மை என்பதை கிறிஸ்துவின் ஆரம்பகால சீஷர்கள் அனுபவத்தில் கண்டார்கள். ராஜ்யத்தைப் பற்றி தொடர்ந்து பிரசங்கித்ததற்காக வாரினால் அடிக்கப்பட்டார்கள். என்றபோதிலும், “அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால்” சந்தோஷப்பட்டார்கள். அதோடு, “தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்.” (அப்போஸ்தலர் 5:41, 42) கஷ்டமோ வியாதியோ துயரமோ எதிர்ப்போ எதன் மத்தியிலும் இப்படிப்பட்ட உண்மைத்தன்மையைக் காட்டுகிற நீங்கள் ஒவ்வொருவரும் பாராட்டுக்குரியவர்கள்.—ரோமர் 5:3-5; எபிரெயர் 13:6.
18. பொந்தியு பிலாத்துவிடம் இயேசு கூறிய வார்த்தைகள் எதைச் சுட்டிக்காட்டுகின்றன?
18 ரோம ஆளுநர் பொந்தியு பிலாத்துவிடம் இயேசு இவ்வாறு கூறினார்: “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல.” (யோவான் 18:36) ஆகவே, பரலோக ராஜ்யத்தின் குடிமக்கள் யாருக்கும் எதிராகப் போராயுதங்களை எடுப்பதுமில்லை, எத்தரப்பினரையும் போரில் ஆதரிப்பதுமில்லை. “சமாதானப் பிரபு”வுக்கு உண்மையுடன் இருப்பதால், அரசியலில் எந்தப் பக்கத்தையும் ஆதரிக்காமல் முற்றிலும் நடுநிலை வகிக்கிறார்கள்.—ஏசாயா 2:2-4; 9:6, 7.
உண்மைத்தன்மையுள்ள குடிமக்களுக்கு நித்திய நன்மைகள்
19. கிறிஸ்துவின் குடிமக்கள் ஏன் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்கலாம்?
19 “ராஜாதி ராஜா”வான கிறிஸ்துவுக்கு உண்மைத்தன்மையுடன் இருக்கும் குடிமக்கள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்கியிருக்கிறார்கள். சீக்கிரத்தில், பரலோக ராஜாவாக அவர் தம்முடைய வல்லமையை வெளிப்படுத்தும் காலத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 19:11–20:3; மத்தேயு 24:30) இன்று பூமியில் வாழும் அபிஷேகம் பண்ணப்பட்ட உண்மையுள்ள “ராஜ்யத்தின் புத்திரர்” பரலோகத்தில் கிறிஸ்துவின் உடன் அரசர்களாக ஆளுகை செய்யும் அருமையான ஆஸ்தியைப் பெற ஆவலோடு காத்திருக்கிறார்கள். (மத்தேயு 13:38; லூக்கா 12:32) கிறிஸ்துவின் உண்மையுள்ள ‘வேறே ஆடுகள்’ தங்களுடைய ராஜாவின் பின்வரும் அன்பான அழைப்பைக் கேட்க ஆவலாய் காத்திருக்கிறார்கள்: “வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.” (யோவான் 10:16; மத்தேயு 25:34) ஆகவே, ராஜ்யத்தின் குடிமக்கள் அனைவரும், கிறிஸ்து ராஜாவுக்கு உண்மைத்தன்மையுடன் சேவை செய்ய வேண்டுமென்ற திடதீர்மானத்தை எடுப்பார்களாக.
[அடிக்குறிப்பு]
a வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில், “கடவுளுடைய ராஜ்யம் 1914-ல் ஸ்தாபிக்கப்பட்டதென யெகோவாவின் சாட்சிகள் ஏன் சொல்கின்றனர்?” என்பதை 95-7 பக்கங்களில் காண்க. இப்புத்தகம் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
உங்களால் விளக்க முடியுமா?
• நம்முடைய உண்மைத்தன்மையை பெற கிறிஸ்து ஏன் தகுதியானவர்?
• கிறிஸ்துவின் குடிமக்கள் அவருக்கு எவ்வாறு உண்மைத்தன்மையைக் காட்டுகிறார்கள்?
• கிறிஸ்து ராஜாவுக்கு நாம் ஏன் உண்மைத்தன்மையுடன் இருக்க வேண்டும்?
[பக்கம் 31-ன் பெட்டி]
கிறிஸ்துவின் தலைசிறந்த மற்ற குணங்கள்
பாரபட்சமின்மை—யோவான் 4:7-30.
இரக்கம்—மத்தேயு 9:35-38; 12:18-21; மாற்கு 6:30-34.
சுயதியாக அன்பு—யோவான் 13:1; 15:12-15.
உண்மைத்தன்மை—மத்தேயு 4:1-11; 28:20; மாற்கு 11:15-18.
அனுதாபம்—மாற்கு 7:32-35; லூக்கா 7:11-15; எபிரெயர் 4:15, 16.
நியாயத்தன்மை—மத்தேயு 15:21-28.
[பக்கம் 29-ன் படம்]
ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவதன் மூலம், நாம் உண்மைத்தன்மையுடன் “கிறிஸ்துவின் பிரமாணத்தை” பின்பற்றுகிறோம்
[பக்கம் 31-ன் படங்கள்]
கிறிஸ்துவுக்கு உண்மைத்தன்மையுடன் சேவை செய்ய அவரது குணங்கள் உங்களை உந்துவிக்கின்றனவா?