ஏட்ரியானாவின் ஆசைக் கனவு
ஏட்ரியானா அமெரிக்காவில் ஓக்லஹாமாவிலுள்ள டல்சா என்ற இடத்தில் வசிக்கிறாள். இந்த ஆறு வயது சிறுமிக்கு ஓர் ஆசைக் கனவிருந்தது. அது பின்வருமாறு பாடிய சங்கீதக்காரனான தாவீது ஆசைப்பட்டதைப் போலிருந்தது: “கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.”—சங்கீதம் 27:4.
ஏட்ரியானா ஆறே மாதக் குழந்தையாக இருந்தபோது, நியூரோபிளாஸ்டோமா என்ற ஒருவித புற்றுநோய் அவளுடைய நரம்பு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளைத் தாக்குவது தெரிய வந்தது. உயிர் குடிக்கும் இந்த வியாதி, நடக்க முடியாதபடி அவளுடைய இரண்டு கால்களையும் முடமாக்கியது. மருத்துவர்கள் ஒன்று மாற்றி ஒன்றாகப் பல அறுவை சிகிச்சைகளைச் செய்து, கீமோதெரபி சிகிச்சையையும் ஒரு வருடத்திற்கு அளித்தார்கள்.
ஏட்ரியானாவும் அவளுடைய அம்மாவும் யெகோவாவின் சாட்சிகள். அவளுடைய அப்பா யெகோவாவின் சாட்சியல்ல. இப்படி உயிரைக் குடிக்கும் வியாதியோடு மல்லுக்கட்டுகிற பிள்ளைகளின் ஆசைக் கனவை நனவாக்கும் லட்சியத்தோடு செயல்படும் ஒரு ஸ்தாபனத்தை அவளுடைய அப்பா அணுகினார்; உலகப் பிரசித்தி பெற்ற வேடிக்கைப் பூங்கா ஒன்றைத் தன் மகள் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யும்படி அவர் வேண்டினார். தன் அப்பா வேடிக்கைப் பூங்காவிற்கு அனுப்ப ஒரு ஸ்தாபனத்திடம் உதவி கேட்டிருப்பதை அறிந்த நாள் முதல் ஏட்ரியானா தன் ஆசையை நிறைவேற்றும்படி யெகோவாவிடம் ஜெபித்தாள். அவளுடைய அப்பாவின் வேண்டுகோளை நிறைவேற்ற முன்வந்த அந்த ஸ்தாபனம், அதற்கு முன்பாக ஏட்ரியானாவைப் பேட்டி கண்டது. அப்போது அவள், தன்னை அனுப்ப முன்வந்ததற்கு அந்த ஸ்தாபனத்திற்கு நன்றி சொன்னதோடு, அந்தப் பூங்காவிற்குச் செல்வதற்குப் பதிலாக நியு யார்க்கிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய வேலையின் மையமாய்த் திகழ்கிற பெத்தேலைப் போய்ப் பார்க்க ஆசைப்படுவதாகச் சொன்னாள். மத அமைப்பு ஒன்றைப் போய் பார்ப்பது ஒரு சிறுமிக்கு அந்தளவு சந்தோஷத்தைத் தருவதாய் இருக்காதென அந்த ஸ்தாபனத்தார் ஆரம்பத்தில் நினைத்தார்கள்; ஆனாலும், அவளுடைய அப்பா அவளுடைய ஆசைக்குக் குறுக்கே வராததால் அவளுடைய கனவை நனவாக்க அந்த ஸ்தாபனம் வகைசெய்தது.
தன்னுடைய அம்மாவோடும் அக்காவோடும் ஒரு சிநேகிதியோடும் நியு யார்க்கிலுள்ள பெத்தேலை முதன்முறையாகப் போய் பார்ப்பதற்கு ஏட்ரியானா பயணப்பட்டாள். “யெகோவா என் ஜெபத்திற்குப் பதில் அளித்தார். அவர் எங்களை பெத்தேலுக்குப் போய்வர வழிசெய்வாரென எனக்குத் தெரியும். புத்தகங்கள், பத்திரிகைகள், பைபிள்கள் எல்லாம் எப்படித் தயாரிக்கப்படுகின்றன என்று பார்த்தேன். அது வேடிக்கைப் பூங்காவைவிட எவ்வளவோ மேல்” என்று அவள் சொன்னாள்.
‘யெகோவாவுடைய மகிமையை’ ஏட்ரியானா ‘பார்த்தாள்’; தற்போது யெகோவாவின் ஜனங்களுடைய ஊழியத்திற்கு மையமாய்த் திகழுகிற இடத்தில் பல்வேறு வேலைகள் நடக்கும் விதத்தை நன்றி பொங்கப் பெருமிதத்துடன் பார்த்தாள். உங்களையும் அழைக்கிறோம், பெத்தேலைக் காண வாரீர்! நியு யார்க்கிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய உலக தலைமை அலுவலகம் தவிர, கிளை அலுவலகங்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ளன.