நீங்கள் புத்துணர்ச்சியூட்டும் பனித்துளியா?
ஆ ன்டி-லெபனான் மலைத்தொடரின் தென்முனையில் எர்மோன் மலை வீற்றிருக்கிறது; கடல்மட்டத்திற்கு மேலே 2,814 மீட்டர் உயரத்தில் அதன் சிகரம் கம்பீரமாய் காட்சி அளிக்கிறது. வருடத்தின் பெரும்பாலான நாட்கள் இதன் உச்சியை பனி மூடியிருக்கிறது; இதனால், இரவு நேரத்தில் இதன் உச்சியை வருடிச் செல்லும் வெப்பக்காற்று, திரவமாகி, பனித்துளிகளாய் உருமாறுகிறது. இந்தப் பனித்துளிகள், தாழ்வான மலைச் சரிவுகளிலுள்ள ஊசியிலை மரங்களையும் கனி மரங்களையும் முத்தமிட்டு, அதற்கும் சற்று கீழே உள்ள திராட்சை தோட்டங்களை நனைக்கின்றன. பூர்வ இஸ்ரவேலில் நீண்ட காலத்திற்கு நீடித்த வறட்சியின்போது குளுகுளுவென்ற இத்தகைய பனித்துளிகள், தாவரங்களுக்குத் தேவையான ஈரப்பதத்தை அளித்தன.
கடவுளுடைய வழிநடத்துதலால் எழுதப்பட்ட ஒரு சங்கீதத்தில் யெகோவாவை வழிபடுகிறவர்கள் மத்தியில் காணப்படும் இதமான ஐக்கியம், “எர்மோன் மேலும், சீயோன் பர்வதங்கள் மேலும் இறங்கும் பனிக்கு” ஒப்பிடப்படுகிறது. (சங்கீதம் 133:1, 3) எர்மோன் மலையில் பொழியும் பனித்துளி, தாவரங்களுக்கு புத்துயிர் அளிப்பதுபோல, நம்மோடு பழகுவர்களுக்கு நாம் புத்துணர்ச்சி அளிக்கலாம். நாம் அதை எப்படிச் செய்யலாம்?
மனதிற்கு இதமூட்டும் இயேசுவின் முன்மாதிரி
மற்றவர்களின் நெஞ்சைத் தொடும் விதத்தில் இயேசு கிறிஸ்து நடந்துகொண்டார். அவருடன் கொஞ்ச நேரத்தைச் செலவிட்டவர்கள்கூட புத்துணர்ச்சி பெற்றார்கள். உதாரணத்திற்கு, “[இயேசு] அவர்களை [பிள்ளைகளை] அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்” என்று சுவிசேஷ எழுத்தாளரான மாற்கு குறிப்பிடுகிறார். (மாற்கு 10:16) அந்தப் பிள்ளைகளின் பிஞ்சு உள்ளங்களில் அது ஓர் இதமான உணர்வை ஏற்படுத்தியிருக்கும், அல்லவா?
இயேசு இறப்பதற்கு முந்தைய நாள் இரவில் தம்முடைய சீஷர்களின் கால்களை அவர் கழுவினார். அவருடைய மனத்தாழ்மை அவர்களுடைய நெஞ்சை நெகிழ வைத்திருக்கும். பிறகு, “நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்” என்று அவர்களிடம் சொன்னார். (யோவான் 13:1-17) ஆம், அவர்களும் மனத்தாழ்மையோடு நடந்துகொள்ள வேண்டியிருந்தது. ஆனாலும், அவர் சொன்னதை உடனடியாகப் புரிந்துகொள்ளாமல், சற்றுநேரம் கழித்து தங்களில் யார் பெரியவன் என அவர்கள் வாக்குவாதம் செய்தபோது இயேசு கோபப்படவில்லை. மாறாக, பொறுமையோடு அவர்களுக்குக் காரணம்காட்டி புரியவைத்தார். (லூக்கா 22:24-27) “வையப்படும்போது”கூட இயேசு ‘பதில் வையவில்லை.’ சொல்லப்போனால், ‘பாடுபடும்போது பயமுறுத்தாமல், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.’ மனதிற்கு இதமூட்டும் இயேசுவின் முன்மாதிரி பின்பற்றுவதற்கு உகந்ததாகும்.—1 பேதுரு 2:21, 23.
“நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் [“புத்துணர்ச்சி,” NW] கிடைக்கும்” என்று இயேசு குறிப்பிட்டார். (மத்தேயு 11:29) அவருடைய போதனையை நேரடியாகக் கேட்பது எப்படியிருந்திருக்குமென சற்று கற்பனை செய்துபாருங்கள். அவர் ஜெப ஆலயத்தில் போதித்ததைக் கேட்ட பிறகு, அவருடைய சொந்த ஊரிலிருந்தவர்கள் ஆச்சரியத்துடன், “இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது?” என்று கேட்டார்கள். (மத்தேயு 13:54) இயேசுவுடைய வாழ்க்கை வரலாற்றையும் ஊழியத்தையும்பற்றி வாசிக்கும்போது நாம் எப்படி மற்றவர்களுக்குப் புத்துணர்ச்சி அளிப்பவர்களாய் இருக்கலாம் என்பதைக் குறித்து அதிகத்தைக் கற்றுக்கொள்ளலாம். ஊக்கம் தரும் பேச்சிலும் உதவும் உள்ளத்திலும் இயேசு எப்படி உத்தம உதாரணமாய்த் திகழ்ந்தார் என்பதைச் சிந்தித்துப் பார்ப்போமாக.
எப்போதும் ஊக்கம் தரும் விதத்தில் பேசுங்கள்
ஒரு கட்டடத்தைக் கட்டுவதைவிட அதைத் தரைமட்டமாக்குவது ரொம்பவே சுலபம். இந்தத் தத்துவம் பேச்சுக்கும் பொருந்தும். அபூரணர்களாய் இருப்பதால் நம் எல்லாரிடமும் குற்றங்குறைகள் உள்ளன. “ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை” என்று சாலொமோன் ராஜா சொன்னார். (பிரசங்கி 7:20) அடுத்தவருடைய குற்றங்குறைகளைக் கண்டுபிடித்து, குத்தலாய் பேசி அவருடைய மனதை நோகடிப்பது அதிக சுலபம். (சங்கீதம் 64:2-4) ஆனால், ஒருவரைத் தூக்கி நிறுத்தும் விதத்தில் பேசுவதற்கு, நன்கு யோசிப்பதும், முயற்சி செய்வதும் அவசியம்.
தம்முடைய பேச்சினால் ஜனங்களுக்கு இயேசு நம்பிக்கையூட்டினார். ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை அவர்களுக்கு அறிவிப்பதன்மூலம் ஆன்மீக ரீதியில் உற்சாகம் அளித்தார். (லூக்கா 8:1) பரலோகத்திலுள்ள தம்முடைய தகப்பனைப்பற்றிச் சொல்வதன்மூலம் தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்கு ஊக்கம் அளித்தார். (மத்தேயு 11:25-27) இயேசுவைத் தேடி ஜனங்கள் ஓடோடி வந்ததில் ஆச்சரியமே இல்லை!
வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவுக்கு நேர்மாறாக இருந்தார்கள்; பிறருடைய தேவைகளை அவர்கள் கண்டுகொள்ளாதிருந்தார்கள். அவர்கள், “விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும் . . . விரும்புகிறார்கள்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 23:6, 7) சொல்லப்போனால், சாமானியர்களை அவர்கள் கேவலமாகக் கருதினார்கள்; “வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள்” என்று சொன்னார்கள். (யோவான் 7:49) அவர்களுடைய மனப்பான்மை மற்றவர்களுடைய மனதுக்குத் துளியும் ஊக்கமளிக்கவில்லை!
நம் எண்ணங்களையும் மற்றவர்களை எப்படிக் கருதுகிறோம் என்பதையும் நம் பேச்சு பெரும்பாலும் பளிச்செனப் படம்பிடித்துக் காட்டுகிறது. “நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்” என்று இயேசு சொன்னார். (லூக்கா 6:45) அப்படியானால், நம்முடைய பேச்சு மற்றவர்களுக்கு உற்சாகத்தை அளிக்க நாம் என்ன செய்யலாம்?
அதற்கு ஒரு வழி, பேசுவதற்கு முன்பாக நிதானமாய் யோசிக்க வேண்டும். “நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்” என்று நீதிமொழிகள் 15:28 சொல்கிறது. இதற்காக நீண்ட நேரம் யோசிக்க வேண்டியதில்லை. முன்னதாக கொஞ்சம் யோசித்தாலே, நம் பேச்சு மற்றவர்களின் இதயத்திற்கு இதமூட்டுமா என்பதை பெரும்பாலும் தீர்மானித்துவிடலாம். நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘நான் சொல்லப்போகிற விஷயம் அவர்கள்மீது அன்பிருப்பதைக் காட்டுமா? அந்த விஷயம் நிஜமானதா அல்லது புரளியா? அது “காலமும் வேளையும் அறிந்து சொல்லும் சொல்லாக” இருக்குமா? நான் சொல்கிற விஷயத்தைக் கேட்கிறவரின் மனதுக்கு அது தெம்பளிக்குமா?’ (நீதிமொழிகள் 15:23, பொது மொழிபெயர்ப்பு) நாம் சொல்லும் விஷயம் இதமளிக்காது என்றோ அது சரியான சமயமல்ல என்றோ நினைத்தால், அந்தப் பேச்சை எடுக்காமல் இருப்பதே நல்லது. வேண்டாத வார்த்தைகளுக்குப் பதிலாக பிறரை உற்சாகப்படுத்தும் நல்ல வார்த்தைகளைப் பேச நாம் முயற்சி செய்யலாமே. முன்பின் யோசிக்காமல் படபடவென பொரிந்து தள்ளுகிறவர்களுடைய வார்த்தைகள், “பட்டயக்குத்துகள்போல்” உள்ளன, இதமான வார்த்தைகள், ‘ஔஷதமாய்,’ ஆறுதலின் அருமருந்தாய் உள்ளன.—நீதிமொழிகள் 12:18.
பிறருக்கு புத்துணர்ச்சியூட்டுகிறவர்களாய் இருப்பதற்கு மற்றொரு வழி: நம் சகவிசுவாசிகளிடமுள்ள என்னென்ன நற்பண்புகளின் காரணமாக கடவுள் அவர்களைப் பொன்னெனக் கருதுகிறார் என்பதை யோசித்துப் பார்ப்பதாகும். “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்” என்று இயேசு சொன்னார். (யோவான் 6:44) யாரோடும் ஒத்துவராதவர் என நாம் கருதுகிற நபர் உட்பட, தம்மை உண்மையாய் வழிபடுகிற ஒவ்வொரு ஊழியரிடமும் உள்ள நற்பண்புகளை யெகோவா பார்க்கிறார்; அவர்களுடைய நல்ல குணங்களை அடையாளம் கண்டுகொள்ள நாம் முயற்சி செய்யும்போது, அவர்களைப்பற்றி நல்ல விதமாக நாலுவார்த்தை பேச நமக்குக் காரணம் இருக்கும்.
உதவிக்கரம் நீட்டுங்கள்
மோசமாக நடத்தப்பட்டவர்களுடைய துன்பத்தையெல்லாம் இயேசு முற்றும் முழுமையாய் புரிந்துகொண்டார். உண்மையில், ‘அவர் திரளான ஜனங்களைக் கண்ட பொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகினார்.’ (மத்தேயு 9:36) அவர்களுடைய அவல நிலையைப் பார்த்து பரிதாபப்படுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவர்களுக்கு உதவியும் செய்தார். “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் [“புத்துணர்ச்சி அளிப்பேன்,” NW]” என்று அழைப்புவிடுத்தார். “என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது” என்று உறுதியும் அளித்தார்.—மத்தேயு 11:28, 30.
இன்று, “கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்களில்” நாம் வாழ்கிறோம். (2 தீமோத்தேயு 3:1, NW) ‘உலகக் கவலையால்’ அநேகருடைய நெஞ்சம் கனக்கிறது. (மத்தேயு 13:22) நெருக்கடியான சூழ்நிலைகள் சிலருக்குப் பாரமாக இருக்கின்றன. (1 தெசலோனிக்கேயர் 5:14, NW) இப்படிப்பட்டவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்? கிறிஸ்துவைப் போல, அவர்களுடைய பாரத்தை இறக்கி வைப்பதில் நாமும் உதவலாம்.
தங்களுடைய பிரச்சினைகளைப்பற்றி யாரிடமாவது மனம்விட்டு பேசி, மனதிலுள்ள பாரத்தையெல்லாம் இறக்கி வைக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். கனத்த இதயத்தோடு ஆறுதல் தேடி யாரேனும் நம்மிடம் வந்தால், அவர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கிறோமா? அவர்களுடைய வேதனையை நம் இதயத்தில் உணருவதற்கு சுயகட்டுப்பாடு தேவைப்படுகிறது. அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே, அவருக்கு எப்படிப் பதில் அளிப்பது, எப்படிப் பிரச்சினையைத் தீர்ப்பது என்றெல்லாம் யோசிக்காமல் அவர் சொல்கிற விஷயத்தைக் கவனமாய்க் கேட்பது அவசியம். சொல்வதைக் கவனமாய் கேட்பதன் மூலமும், கண்ணைப் பார்த்துப் பேசுவதன் மூலமும், பொருத்தமான சமயத்தில் புன்முறுவல் செய்வதன் மூலமும் அவரிடம் நமக்கு அக்கறை இருப்பதைக் காட்டுகிறோம்.
கிறிஸ்தவ சபையில், சகவிசுவாசிகளை உற்சாகப்படுத்த ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. உதாரணத்திற்கு, ராஜ்ய மன்றத்தில் நடைபெறுகிற கூட்டங்களில் கலந்துகொள்கிறபோது, சுகவீனத்தோடு போராடுகிறவர்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம். அப்படிப்பட்டவர்களுக்கு உற்சாகமெனும் மருந்து தேவை; அதற்கு, கூட்டத்திற்கு முன்போ, பின்போ அவர்களிடம் நம்பிக்கையூட்டும் விதத்தில் பேச ஒருசில நிமிடங்களைச் செலவிட்டாலே போதும். அதோடுகூட, நம்முடைய சபை புத்தகப் படிப்புக்கு யாரெல்லாம் வரவில்லையென கவனிக்கலாம். பிறகு, அவர்களைத் தொலைபேசியில் அழைத்து விசாரிக்கலாம்; அவர்களுடைய நலனில் நமக்கு அக்கறை இருப்பதைத் தெரிவிக்கலாம் அல்லது உதவி தேவைப்பட்டால் செய்யலாம்.—பிலிப்பியர் 2:4.
சபையில் பொறுப்புகள் என்ற பாரமான சுமையை மூப்பர்கள் சுமக்கிறார்கள். அவர்களோடு ஒத்துழைப்பதன் மூலமும் நமக்குப் பொறுப்புகள் கொடுக்கப்பட்டால், அவற்றைக் கீழ்ப்படிதலோடு செய்வதன் மூலமும் அவர்களுடைய பாரத்தைக் குறைக்க நாம் பெரிதும் உதவலாம். “உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே” என்று கடவுளுடைய வார்த்தை நம்மை ஊக்கப்படுத்துகிறது. (எபிரெயர் 13:17) மனமுவந்து உதவுவதன்மூலம், ‘நன்றாய் விசாரணை செய்கிறவர்களின்’ மனதுக்கு நாம் புத்துணர்ச்சியூட்டலாம்.—1 தீமோத்தேயு 5:17.
சொல்லில் ஊக்கம், செயலில் உதவி—அதிகமதிகமாக
திடீரென வானிலிருந்து ஒய்யாரமாய் இறங்கி வரும் ஆயிரக்கணக்கான நீர்துளிகளே சில்லென்ற பனித்துளிகளாய் பிறக்கின்றன. அதேபோல், ஒருமுறை அன்பாக நடந்துகொள்வது மட்டுமே மற்றவர்களை ஊக்கமூட்டிவிடாது; எல்லாச் சமயத்திலும் கிறிஸ்து வெளிக்காட்டியதைப் போன்ற குணங்களை வெளிக்காட்ட முயற்சி செய்தால் மட்டுமே மற்றவர்களுக்கு நாம் உற்சாக ஊற்றாக இருக்க முடியும்.
“சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (ரோமர் 12:10) பவுல் கொடுத்த புத்திமதியைப் பின்பற்றுவோமாக. நம்முடைய சொல்லிலும் செயல்களிலும் உண்மையிலேயே நாம் புத்துணர்ச்சியூட்டும் பனித்துளியாய் திகழ்வோமாக.
[பக்கம் 16-ன் படங்கள்]
தாவரங்களை ஈரமாக்கும் எர்மோன் மலையின் பனி
[பக்கம் 17-ன் படம்]
மற்றவர்களுடைய வேதனையை தன் இதயத்தில் உணரும் நபர் அவர்களை உற்சாகமூட்டுகிறார்