“இந்தச் சிறிய பரிசை தயவுசெய்து ஏற்றுக்கொள்ளுங்கள்”
ரஷ்யாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு வந்த ஒரு கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது. இந்தக் கடிதத்துடன் கம்பளிக் காலுறைகள் நிரம்பிய ஒரு பெரிய பெட்டியும் வந்துசேர்ந்தது.
இந்தப் பரிசை அனுப்பிவைத்தவர், 67 வயது நிரம்பிய ஆலா என்ற ஒரு யெகோவாவின் சாட்சி. இவர் ரஷ்யாவின் கிழக்கு கோடியிலுள்ள ஒரு சபையில் சேவைசெய்து வருகிறார். 10 வருடங்களுக்கும் அதிகமாக யெகோவாவைச் சேவித்து வரும் ஆலா, ராஜ்யத்தின் நற்செய்தியைச் சுறுசுறுப்பாகப் பிரசங்கித்து வருகிறவர். ஆனால், திடீரென்று பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். முதல் நூற்றாண்டில் தொற்காள் என்ற கிறிஸ்தவ பெண்மணி சக விசுவாசிகளுக்காக வஸ்திரங்களைச் செய்ததுபோல் ஆலாவும் பாசத்துடன் அவ்வாறு செய்திருக்கிறார்.—அப்போஸ்தலர் 9:36, 39.
தன்னுடைய கடிதத்தில் ஆலா இவ்வாறு எழுதினார்: “என் கால்கள் செயலிழந்தாலும் என் கைகள் தற்போது நன்றாக இருக்கின்றன. அதனால், கடிதங்கள் எழுதி சாட்சி கொடுத்து வருகிறேன்.” அவர் மேலும் சொல்வதாவது: “என் கைகள் நன்றாக இருக்கும்போதே சில கம்பளிக் காலுறைகளைப் பின்னிவிட தீர்மானித்தேன். ரஷ்யாவின் கிழக்கு கோடி, சைபீரியா போன்ற குளிர் பிரதேசங்களில் ராஜ்ய மன்றங்களைக் கட்டப்போகும் சகோதர சகோதரிகளுக்கு கதகதப்பூட்டும் இந்தக் கம்பளிக் காலுறைகளைக் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.”
தம்மை உண்மையாய் பின்பற்றுகிறவர்களைக் குறித்து இயேசு இவ்வாறு கூறினார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” (யோவான் 13:35) ஆலா காண்பித்தது போன்ற அன்பு இயேசுவின் மெய்யான சீஷர்களுக்கு அடையாளச் சின்னமாக இருக்கிறது.