வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
சாட்சியல்லாத உறவினர் அல்லது தெரிந்தவர் ஒருவரின் திருமணத்திற்கு ஒரு யெகோவாவின் சாட்சி செல்வது சரியா?
திருமணம் என்பது சந்தோஷகரமான ஒரு தருணம். பொதுவாக எந்த ஒரு கிறிஸ்தவரும் அதில் கலந்துகொள்ளவே விரும்புவார். இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு மைனராக இருக்கும் பிள்ளைகள் அழைக்கப்பட்டால், பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாப்பாளருக்கு அவர்கள் கீழ்ப்படிய வேண்டும். ஏனெனில், தங்கள் அரவணைப்பில் இருக்கும் பிள்ளைகளுக்காகத் தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்கே உரியது. (எபேசியர் 6:1-3) ஆனால், சர்ச்சில் நடக்கவிருக்கும் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு யெகோவாவின் சாட்சியல்லாத ஒரு கணவர் தன் கிறிஸ்தவ மனைவியை அழைத்தால் என்ன செய்யலாம்? நிகழ்ச்சியுடன் சம்பந்தப்பட்ட மத சடங்குகள் எதிலும் ஈடுபடாமல் வெறுமனே நிகழ்ச்சிக்கு சென்றுவர அந்த மனைவியின் மனசாட்சி ஒருவேளை அனுமதிக்கலாம்.
ஆகவே, குறிப்பிட்ட ஒரு திருமணத்திற்குச் செல்வதா வேண்டாமா என்பது, தனிப்பட்டவர்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயம். ஆனால், ஒவ்வொரு கிறிஸ்தவரும் யெகோவாவுக்குக் கணக்கு கொடுக்க வேண்டியிருப்பதை மனதில்கொள்ள வேண்டும். எனவே, சாட்சியல்லாத ஒருவரின் திருமணத்திற்குச் செல்வதா வேண்டாமா என்பதைக் குறித்து தீர்மானிக்கையில் பைபிளின் பல நியமங்களைச் சிந்தித்துப் பார்ப்பதும் அவசியம்.
கடவுளின் அங்கீகாரத்தைப் பெறுவதே ஒரு கிறிஸ்தவரின் முக்கிய குறிக்கோளாய் இருக்க வேண்டும். “தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்” என்று இயேசு கூறினார். (யோவான் 4:24) எனவே, யெகோவாவின் சாட்சிகள், மற்ற மதங்களுடன் சம்பந்தப்பட்ட காரியங்களில், அதாவது, பைபிள் சத்தியத்திற்கு விரோதமாயுள்ள ஜெபங்கள், சடங்குகள், ஆராதனைகள் ஆகியவற்றில் பங்கு கொள்வதில்லை.—2 கொரிந்தியர் 6:14-17.
ஒரு கிறிஸ்தவர், தான் எடுக்கும் தீர்மானம் மற்றவர்களையும் பாதிக்கக்கூடும் என்பதை அறிந்திருக்கிறார். வெறுமனே ஒரு திருமணத்திற்குச் சென்றுவர நீங்கள் தீர்மானிக்கலாம். ஆனால், திருமண வைபவத்தின் சடங்குகளில் நீங்கள் முழுமையாக ஈடுபடவில்லை என்பதற்காக உங்கள் உறவினர்கள் வருத்தப்படுவார்களா? அதேசமயம், நீங்கள் எடுக்கிற தீர்மானம் சக விசுவாசிகளை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். (ரோமர் 14:13) சாட்சியல்லாத ஒருவரின் திருமணத்திற்குச் செல்வதில் தவறேதுமில்லை என்று நீங்களோ உங்கள் குடும்பத்திலுள்ள மற்றவர்களோ நினைக்கலாம். ஆனால், உங்களுடைய ஆன்மீகச் சகோதர சகோதரிகள் தவறான விதத்தில் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறதா? உங்களுடைய தீர்மானம் சிலருடைய மனசாட்சியைப் புண்படுத்தக்கூடுமா?
சாட்சியல்லாத உறவினர்களின் திருமணச் சடங்குகள் இக்கட்டான சந்தர்ப்பங்களை உருவாக்கலாம். மணப்பெண் தோழியாக அல்லது மாப்பிள்ளைத் தோழனாக இருக்கும்படி உங்களிடம் கேட்கப்பட்டால் என்ன செய்வீர்கள்? அல்லது சாட்சியல்லாத உங்கள் துணை திருமணச் சடங்கில் முழுமையாக ஈடுபட விரும்பினால் என்ன செய்வீர்கள்? ஒருவேளை அந்தத் திருமணத்தை நீதிபதியோ அரசாங்க அதிகாரியோ நடத்திவைப்பதாக இருந்தால் வெறுமனே ஒரு சட்டப்பூர்வ திருமணத்தில் கலந்துகொள்வதுபோல் அது இருக்கும்.
மறுபட்சத்தில், மத சம்பந்தப்பட்ட கட்டிடத்தில் நடக்கவிருக்கும் திருமணத்திற்குச் செல்வது அல்லது மதகுரு நடத்திவைக்கும் திருமணத்திற்குச் செல்வது இன்னும் பல கேள்விகளை எழுப்பலாம். பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட உங்களுடைய மனசாட்சிக்குச் செவிகொடுக்கவும் உங்களுடைய மத நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்காதிருக்கவும், கல்யாண வீட்டைச் சேர்ந்தவர்களைப் புண்படுத்தும் விதத்தில் எதையும் செய்துவிடாதிருக்கவும் வேண்டுமானால், அந்தத் திருமண நிகழ்ச்சிக்குப் போகாதிருப்பதே நல்லது என்று நீங்கள் தீர்மானிக்கலாம். (நீதிமொழிகள் 22:3) பைபிள் அடிப்படையிலான உங்கள் நம்பிக்கைகளை முன்கூட்டியே விளக்கி எவற்றில் கலந்துகொள்வீர்கள், எவற்றில் கலந்துகொள்ள மாட்டீர்கள் என்பதைச் சொல்லிவிடுங்கள். இப்படிச் செய்வதன்மூலம் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் முடிந்தளவு அழுத்தங்களைத் தவிர்த்து நிம்மதியாக இருக்கலாம்.
எல்லா விஷயங்களையும் கவனமாகச் சீர்தூக்கி பார்த்த பிறகு, எந்தவித மத சடங்குகளிலும் கலந்துகொள்ளாமல் வெறுமனே திருமணத்திற்குச் சென்றுவருவதில் தவறேதுமில்லை என சில கிறிஸ்தவர்கள் தீர்மானிக்கலாம். ஆனால், அப்படிச் சென்றால் கடவுளுடைய நியமங்களை மீறவேண்டிய சூழ்நிலைமை ஏற்பட்டுவிடலாம் என்று ஒரு கிறிஸ்தவர் யோசிக்கலாம். எனவே, அங்குச் செல்வதனால் நன்மைகளைவிட ஆபத்துகள்தான் அதிகம் என்ற முடிவுக்கு அவர் வரலாம். ஒருவேளை, அந்தக் கிறிஸ்தவர் அந்தத் திருமண வைபவத்திற்குச் செல்லாமல், தான் அழைக்கப்பட்டதன் காரணமாக அதற்கு பிறகு நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தீர்மானித்தால், ‘எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்வதற்கு’ அவர் உறுதியாய் இருக்க வேண்டும். (1 கொரிந்தியர் 10:31) இப்படிப்பட்ட தீர்மானங்களை எடுக்கையில் அவரவரே அவற்றுக்கு பொறுப்பேற்க வேண்டும். ஆம், ‘அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பான்.’ (கலாத்தியர் 6:5) ஆகவே, நீங்கள் என்ன தீர்மானம் எடுத்தாலும் யெகோவா தேவனுக்கு முன் ஒரு நல்ல மனசாட்சியைக் காத்துக்கொள்வது முக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள்.