மணநாளின் மகிழ்ச்சிக்கும் கண்ணியத்திற்கும் மெருகூட்டுங்கள்
“மணநாள். அது என் வாழ்க்கையில் மறக்க முடியாத, மகிழ்ச்சியான நாட்களில் ஒன்று” என்கிறார் கார்டன்; இவருடைய மணவாழ்க்கை கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக மணம்வீசிக் கொண்டிருக்கிறது. உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு மணநாள் மறக்க முடியாத நாளாக இருப்பது ஏன்? அந்நாளில்தான், தங்கள் அன்புக்குரிய யெகோவா தேவனுக்கும், நேசத்துக்குரிய துணைவருக்கும் அவர்கள் ஒரு புனிதமான வாக்குறுதியை அளிக்கிறார்கள். (மத்தேயு 22:37; எபேசியர் 5:22-29) ஆம், திருமணத்திற்கு தயாராகிக்கொண்டிருப்போர் தங்களுடைய மணநாள் மகிழ்ச்சியான நாளாக இருக்க வேண்டுமென விரும்புகிறார்கள். அதோடு, திருமணத்தை ஆரம்பித்து வைத்தவருக்கு கனம் சேர்க்கவும் விரும்புகிறார்கள்.—ஆதியாகமம் 2:18-24; மத்தேயு 19:5, 6.
இந்த மகிழ்ச்சியான தருணத்தின் கண்ணியத்திற்கு மணமகன் எப்படி மெருகூட்டலாம்? தன் கணவருக்கும் யெகோவாவுக்கும் மணமகள் எப்படி மரியாதை காட்டலாம்? மணநாளின் மகிழ்ச்சிக்கு அதில் கலந்துகொள்ளும் மற்றவர்கள் எப்படிப் பங்களிக்கலாம்? இக்கேள்விகளுக்குப் பதிலைப் பெறுவதற்கு, சில பைபிள் நியமங்களைக் கவனிக்கலாம். இவற்றைக் கடைப்பிடிக்கையில் இந்த விசேஷ நிகழ்ச்சியின் மகிழ்ச்சியைப் பறிக்கும் சங்கடங்கள் சிலவற்றைத் தவிர்க்க முடியும்.
பொறுப்பு யாருக்கு?
பெரும்பாலான நாடுகளில், யெகோவாவின் சாட்சியாக இருக்கும் நியமிக்கப்பட்ட ஊழியர் ஒருவர் திருமணத்தை சட்டப்படி நடத்தி வைக்கிறார். சில இடங்களிலோ, அரசாங்க அதிகாரி ஒருவர்தான் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டுமென்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. அவ்விடங்களில் உள்ள தம்பதியர் தங்கள் திருமணத்தின்போது பைபிள் அடிப்படையிலான பேச்சு ஒன்று கொடுக்கப்பட வேண்டுமென விரும்பலாம். குடும்பத் தலைவருக்கு கடவுள் கொடுத்துள்ள பொறுப்பைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கும்படி அந்தப் பேச்சில் மணமகனுக்கு நினைப்பூட்டப்படுகிறது. (1 கொரிந்தியர் 11:3) ஆகவே, திருமணத்தின்போது என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்கும் முக்கியப் பொறுப்பு மணமகனுக்குத்தான். திருமண நிகழ்ச்சி, அதைத் தொடர்ந்து நடைபெறும் வரவேற்பு ஆகியவை சம்பந்தமான ஏற்பாடுகள் அனைத்தும் முன்கூட்டியே செய்யப்பட்டு விடுகின்றன. இந்த ஏற்பாடுகளைச் செய்கையில் மணமகனுக்கு என்னென்ன சிக்கல்கள் ஏற்படலாம்?
மணமகன் வீட்டாரோ, மணமகள் வீட்டாரோ திருமண ஏற்பாடுகளில் அளவுக்கதிகமாக மூக்கை நுழைக்க முயலலாம். பல திருமணங்களை நடத்தி வைத்த ரோடால்ஃபோ என்பவர் பின்வருமாறு கூறுகிறார்: “சில சமயங்களில், உறவினர்களின் வற்புறுத்தலைச் சமாளிக்க முடியாமல் மணமகன் திக்குமுக்காடிப்போய்விடுகிறார். அதுவும், திருமணத்திற்கு அவர்கள் பணம் கொடுத்து உதவுகிறார்கள் என்றால் கேட்கவே வேண்டாம். திருமண நிகழ்ச்சியும் வரவேற்பும் இப்படித்தான் இருக்க வேண்டும் என அவர்கள் கண்டிஷன் போடலாம். இப்படிச் செய்வதன் மூலம், இந்நிகழ்ச்சிக்கு முக்கியப் பொறுப்பு மணமகனுக்குத்தான் என்று பைபிள் சொல்வதை அவர்கள் மதிப்பற்றதாக்கி விடலாம்.”
மேக்ஸ் என்பவர் 35 ஆண்டுகளுக்கும் மேலாக திருமண நிகழ்ச்சிகளை நடத்திவருபவர். அவர் பின்வருமாறு கூறுகிறார்: “நான் கவனித்தவரையில் திருமணமும், வரவேற்பு நிகழ்ச்சியும் எப்படி இருக்க வேண்டுமென்பதை மணப்பெண்ணே தீர்மானித்து விடுகிறார். மணமகன் பேசுவதற்கு அந்தளவு வாய்ப்பு கிடைப்பதில்லை.” பல திருமணங்களை நடத்தி வைத்தவரான டேவிட் இவ்வாறு கூறுகிறார்: “காரியங்களை தலைமையேற்று செய்கிற பழக்கம் மணமகனுக்கு இல்லாதிருக்கலாம். பொதுவாக, திருமண ஏற்பாடுகளில் மற்றவர்களும் அவரிடம் அவ்வளவாய் கலந்துபேசுவதில்லை.” நிலைமை இப்படியிருக்க, மணமகன் தன்னுடைய பொறுப்பை எவ்வாறு சரிவரச் செய்யலாம்?
சந்தோஷம் வேண்டுமா? பேசுங்கள்!
திருமண ஏற்பாடுகளைப் பொறுப்பேற்று நல்ல முறையில் செய்ய மணமகன் விரும்பினால், சம்பந்தப்பட்டவர்களிடம் பேச வேண்டும். “அந்தரங்கமான பேச்சு இல்லையென்றால் திட்டங்கள் வெற்றியடையாது” என்று பைபிள் நேரடியாகவே எச்சரிக்கிறது. (நீதிமொழிகள் 15:22, NW) ஆகவே, மணமகன் முதலிலேயே திருமண ஏற்பாடுகளைக் குறித்து மணப்பெண்ணிடமும் குடும்பத்தினரிடமும் பேச வேண்டும்; அத்துடன், பைபிளின் அடிப்படையில் நல்ல ஆலோசனை கொடுக்கும் மற்றவர்களிடமும் கலந்து பேச வேண்டும். இப்படிப் பேசினால் தேவையற்ற மனஸ்தாபங்களைத் தவிர்க்கலாம்.
ஆம், நிச்சயிக்கப்பட்ட ஜோடி தங்கள் திட்டங்களையும், அவற்றில் எவற்றையெல்லாம் செயல்படுத்த முடியும் என்பதையும் குறித்து ஒருவருக்கொருவர் கலந்து பேசுவது அவசியம். ஏன்? இது சம்பந்தமாக ஐவன், டெல்வின் தம்பதியர் சொல்வதைக் கேட்கலாம். அவர்கள் வித்தியாசமான கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்தவர்கள். இருந்தாலும், மணவாழ்வில் பல வருடங்களை இனிதாய்க் கழித்திருப்பவர்கள். திருமணத்திற்காக தாங்கள் போட்ட திட்டங்களைக் குறித்து ஐவன் இவ்வாறு கூறுகிறார்: “திருமணம் எப்படி நடக்க வேண்டும் என்பதைப் பற்றி நான் ஓர் ஐடியா வைத்திருந்தேன். அதாவது, நண்பர்கள் எல்லாரையும் அழைத்து வரவேற்பு நிகழ்ச்சியை விமரிசையாக நடத்த வேண்டும், கேக் வெட்ட வேண்டும், மணப்பெண் வெள்ளை கவுன் அணிந்திருக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைக் கனவு கண்டிருந்தேன். ஆனால், டெல்வினின் விருப்பமோ ரொம்ப வித்தியாசமாக இருந்தது. சிலரை மட்டும் அழைத்து திருமணத்தை எளிமையாக நடத்த வேண்டும், கேக்கெல்லாம் வெட்ட வேண்டாம் என அவள் நினைத்திருந்தாள். வெள்ளை கவுனுக்குப் பதிலாக சாதாரண உடையே போதும் என்றும்கூட அவள் நினைத்திருந்தாள்.”
இருவருடைய விருப்பங்களும் வித்தியாசப்பட்டன. அவர்கள் எப்படி ஒரு முடிவுக்கு வந்தார்கள்? கனிவாக, ஒளிவுமறைவின்றி இருவரும் மனம்விட்டுப் பேசினார்கள். (நீதிமொழிகள் 12:18) ஐவன் இவ்வாறு கூறுகிறார்: “திருமணத்தைப் பற்றிய பைபிள் சார்ந்த கட்டுரைகளை நாங்கள் படித்தோம். அதில் ஒன்றுதான் ஏப்ரல் 15, 1984 (ஆங்கிலம்) காவற்கோபுரத்தில் வெளிவந்த கட்டுரை.a திருமணத்தைக் கடவுளின் கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு இந்தக் கட்டுரைகள் எங்களுக்கு உதவின. எங்கள் பின்னணி ஒன்றுக்கொன்று வித்தியாசமானதாக இருந்ததால், எங்களுடைய தனிப்பட்ட ஆசைகளைத் தியாகம் செய்துவிட்டு, இருவர் மனதுக்கும் பிடித்த விதத்தில் தீர்மானங்களைச் செய்தோம்.”
ஆரெட், பென்னி தம்பதியரும் இதுபோலத்தான் செய்தார்கள். தங்கள் திருமண நாளைப் பற்றி ஆரெட் இவ்வாறு கூறுகிறார்: “திருமண நாள் குறித்து எங்களுக்கிருந்த வேறுபட்ட ஆசைகளை பென்னியும் நானும் கலந்து பேசினோம். பிறகு சுமுகமான முடிவுக்கு வந்தோம். அந்நாளை ஆசீர்வதிக்கும்படி யெகோவாவிடம் ஜெபித்தோம். இதுதவிர, எங்கள் பெற்றோரிடமும், சபையில் இருந்த முதிர்ச்சி வாய்ந்த தம்பதியரிடமும் நான் ஆலோசனை கேட்டேன். அவர்களுடைய ஆலோசனை ரொம்பவே உதவியாக இருந்தது. இதன் விளைவாக, எங்கள் திருமணம் இனிதே நடைபெற்றது.”
அடக்கமான ஆடை அலங்காரம்
திருமணத்தன்று ‘பளிச்சென’ உடுத்த மணமக்கள் விரும்புவதில் தவறில்லை. (சங்கீதம் 45:8-15) தகுந்த திருமண உடையைத் தேர்ந்தெடுக்க தங்கள் நேரம், முயற்சி, பணம் ஆகியவற்றை அவர்கள் செலவழிக்கலாம். அழகான, அடக்கமான உடையைத் தேர்ந்தெடுக்க பைபிளிலுள்ள எந்த நியமங்கள் அவர்களுக்கு உதவலாம்?
மணமகளின் உடையைப் பற்றி கொஞ்சம் சிந்திக்கலாம். ரசனை என்பது நபருக்கு நபர், நாட்டுக்கு நாடு வேறுபடலாம். இருந்தாலும், பைபிள் தரும் அறிவுரை எல்லாருக்குமே பொருந்தும். பெண்கள் தங்களை “தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், [அடக்கத்தினாலும், NW] தெளிந்த புத்தியினாலும், . . . அலங்கரிக்க வேண்டும்” என்று பைபிள் அறிவுறுத்துகிறது. கிறிஸ்தவ பெண்கள் இந்த அறிவுரையை திருமண நாள் உட்பட, எல்லா சமயத்திலும் பின்பற்ற வேண்டும். மகிழ்ச்சியான திருமணத்திற்கு ‘விலையேறப்பெற்ற வஸ்திரம்’ தேவையில்லை என்பதே உண்மை. (1 தீமோத்தேயு 2:9, 10; 1 பேதுரு 3:3, 4) இந்த அறிவுரையைப் பின்பற்றினால் எவ்வளவு அருமையாக இருக்கும்!
முன்பு குறிப்பிடப்பட்ட டேவிட் இவ்வாறு கூறுகிறார்: “பெரும்பாலான தம்பதியர் பைபிள் தரும் அறிவுரைகளைப் பின்பற்றுகிறார்கள். அவர்களை நாம் பாராட்ட வேண்டும். ஆனால், மணப்பெண்ணும் அவளோடிருக்கும் தோழிகளும் அடக்கமற்ற விதத்தில் உடுத்தியிருந்தது சில சமயங்களில் கவனிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, உடையின் கழுத்துப்பகுதி ரொம்ப இறக்கமாக அல்லது துணி கண்ணாடி போல மெல்லிசாக இருந்திருக்கிறது.” மணமுடிக்கவிருக்கும் ஜோடியை முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவ மூப்பர் ஒருவர் முன்னதாகவே சந்தித்து, பைபிளின் கண்ணோட்டத்தில் காரியங்களைக் காண உதவுகிறார். எப்படி? அவர்கள் அணியத் தீர்மானித்திருக்கும் உடை ஒரு கிறிஸ்தவ கூட்டத்தில் அணிவதற்குத் தகுந்ததாக இருக்குமா என அவர்களிடம் கேட்கிறார். சாதாரணமாக கூட்டங்களில் அணியப்படும் உடைக்கும் திருமண உடைக்கும் வித்தியாசம் இருப்பது உண்மையே. உள்ளூர் பழக்கத்தின் அடிப்படையில் திருமண உடை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அடக்கத்தைப் பொறுத்தவரை, அது கிறிஸ்தவ தராதரங்களின் அடிப்படையில் கண்ணியமாக இருக்க வேண்டும். பைபிளைப் பின்பற்றாத ஆட்கள் அதன் ஒழுக்க நியதிகளை ரொம்பவே கட்டுப்படுத்துவதாகக் கருதலாம். ஆனால், உண்மைக் கிறிஸ்தவர்கள் இந்த உலகத்தின் பாணியைப் பின்பற்றாமல் கவனமாக இருக்கிறார்கள்.—ரோமர் 12:2; 1 பேதுரு 4:4.
பென்னி பின்வருமாறு கூறுகிறார்: “டிரெஸ்ஸும், ரிசெப்ஷனும்தான் எல்லாமே என நானோ, ஆரெட்டோ நினைக்கவில்லை. மாறாக, திருமண நிகழ்ச்சிக்கே, அதாவது அந்நாளின் ஆன்மீக அம்சத்திற்கே நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்தோம். அதுதான் அந்நாளின் மிக முக்கியப் பகுதி. என்ன டிரெஸ் போட்டிருந்தேன், என்ன சாப்பிட்டேன் என்பதெல்லாம் என் மனதில் நிற்கவில்லை. அதற்குப் பதிலாக, யாரோடு அந்த நாளை செலவிட்டேன் என்பதும் என் அன்புக்குரியவரைக் கரம் பிடித்த சந்தோஷமும்தான் என் நினைவில் நிற்கிறது.” திருமணத்திற்குத் திட்டமிடும் ஜோடிகள் இப்படிப்பட்ட கருத்துகளைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பது நல்லது.
ராஜ்ய மன்றம்—கண்ணியமான இடம்
சொந்தமாக ராஜ்ய மன்றம் இருந்தால், தங்கள் திருமணத்தை அங்கு நடத்தவே அநேக கிறிஸ்தவ ஜோடிகள் விரும்புகிறார்கள். இதற்குக் காரணம் என்ன? ஒரு தம்பதியர் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்: “திருமணம் என்பது யெகோவாவின் புனிதமான ஏற்பாடு என்பதை நாங்கள் உணர்ந்தோம். நம்முடைய வணக்க ஸ்தலமான ராஜ்ய மன்றத்தில் திருமணத்தை நடத்தியது, எங்கள் மணவாழ்வில் யெகோவாவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்பதை ஆரம்பத்திலிருந்தே மனதில் வைக்க உதவியது. திருமணத்தை ராஜ்ய மன்றத்தில் நடத்துவதில் இன்னொரு நன்மையும் உண்டு. அதாவது, யெகோவாவை வணங்குவதை நாம் எந்தளவுக்கு முக்கியமானதாகக் கருதுகிறோம் என்பதை சத்தியத்தில் இல்லாத உறவினர்களுக்கு அது உணர்த்தியது.”
ராஜ்ய மன்றத்திற்குப் பொறுப்புடைய மூப்பர்கள் அங்கே திருமணத்தை நடத்துவதற்கு அனுமதியளித்தால், திருமண ஜோடி தாங்கள் செய்யவிருக்கும் ஏற்பாடுகளைக் குறித்து அவர்களிடம் முன்னதாகவே தெரிவித்துவிட வேண்டும். திருமணத்தில் கலந்துகொள்வோருக்கு மணமக்கள் எவ்வாறு உரிய மரியாதை காட்டலாம்? சரியான நேரத்தில் மன்றத்திற்கு வரத் தீர்மானமாயிருப்பதன் மூலம் காட்டலாம். அதோடு, அனைத்தும் கண்ணியமான முறையில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதன் மூலமாகவும் காட்டலாம்.b (1 கொரிந்தியர் 14:40) சத்தியத்தில் இல்லாதவர்களின் திருமணங்களில் காணப்படும் பகட்டு, படாடோபத்தை இதன் மூலம் அவர்கள் தவிர்ப்பார்கள்.—1 யோவான் 2:15, 16.
திருமணத்தை யெகோவா எப்படிக் கருதுகிறாரோ அப்படியே தாங்களும் கருதுவதை அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வோரும் காட்டலாம். உதாரணத்திற்கு, மற்ற கிறிஸ்தவர்களின் திருமணத்தையெல்லாம் விஞ்சிவிடும் அளவுக்கு அது விமரிசையாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது. யார் வீட்டுத் திருமணம் தடபுடலாக நடந்தது என்று போட்டி போடுவது போன்ற சூழ்நிலையை உருவாக்கக் கூடாது. திருமண விருந்தைவிட ராஜ்ய மன்றத்தில் பைபிள் அடிப்படையில் கொடுக்கப்படும் திருமணப் பேச்சிற்கு ஆஜராயிருப்பதுதான் முக்கியம், அதுவே பயன்தரும் என்பதை முதிர்ச்சிவாய்ந்த கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள். திருமணப் பேச்சு அல்லது விருந்து என ஏதாவது ஒன்றில் மட்டுமே கலந்துகொள்கிற சூழ்நிலை ஏற்பட்டால், ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் பேச்சில் கலந்துகொள்வதே மிகவும் நல்லது. வில்லியம் என்ற மூப்பர் இவ்வாறு சொல்கிறார்: “ராஜ்ய மன்றத்திற்கு வராமல் அதன்பிறகு நடைபெறும் வரவேற்பில் மட்டும் கலந்துகொள்வது, அந்நிகழ்ச்சியின் பரிசுத்தத்தன்மையை அவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. விருந்திற்கு நாம் அழைக்கப்படாவிட்டாலும், ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதன் மூலம் மணமக்களுக்கு நம்முடைய ஆதரவைத் தெரிவிக்க முடியும். அதோடு, அங்கே கூடிவந்திருக்கிற, விசுவாசத்தில் இல்லாத உறவினர்களுக்கு நல்ல விதத்தில் சாட்சி கொடுக்கவும் முடியும்.”
மணநாளுக்குப் பிறகும் தொடரும் மகிழ்ச்சி
வியாபார உலகம், திருமண விழாவை பெரிய பிஸினஸாகவே மாற்றிவிட்டது. சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, அமெரிக்காவில் நடைபெறும் சராசரி திருமணம் ஒன்றிற்கு “22,000 டாலர், அதாவது ஒரு அமெரிக்க குடும்பத்தின் சராசரி [ஆண்டு] வருமானத்தில் பாதியை” செலவழிக்க வேண்டியிருக்கிறது. விளம்பரங்களில் மயங்கி, பல திருமண ஜோடிகள் அல்லது அவர்கள் குடும்பத்தார் திருமணத்தை ஆடம்பரமாக நடத்திவிடுகிறார்கள். அதனால் ஏறிவிடும் கடன் சுமையை இறக்கிவைக்க வழியின்றி வருடக்கணக்கில் தவிக்கிறார்கள். ஒருவர் தன் மணவாழ்க்கையை இப்படித் தொடங்குவது விவேகமானதா? பைபிள் நியமங்களை அறியாதவர்களும், அதைப் பற்றி கவலைப்படாதவர்களும் திருமணத்தை பகட்டாக நடத்த விரும்பலாம். ஆனால், உண்மைக் கிறிஸ்தவர்கள் அப்படியிருக்க விரும்புவதில்லை!
அநேக கிறிஸ்தவ தம்பதியர் தங்கள் திருமணத்திற்கு அநேகரை அழைத்து ஆடம்பரமாக நடத்தாமல், செலவுகள் ‘கையைக் கடிக்காத’ வகையில் சிக்கனமாக நடத்துகிறார்கள்; அந்நிகழ்ச்சியின் ஆன்மீக முக்கியத்துவத்தை கவனத்தில் வைக்கிறார்கள்; இதன்மூலம் தங்களது நேரத்தையும், சொத்துக்களையும் தங்கள் ஒப்புக்கொடுத்தலுக்கு இசைவாக அவர்களால் பயன்படுத்த முடிந்திருக்கிறது. (மத்தேயு 6:33) லாய்ட், அலெக்சாண்ட்ரா தம்பதியரின் அனுபவத்தைக் கவனியுங்கள். திருமணம் ஆனதிலிருந்து 17 வருடங்களாக முழுநேர ஊழியத்தில் அவர்கள் தொடர்ந்திருக்கிறார்கள். லாய்ட் பின்வருமாறு கூறுகிறார்: “எங்கள் திருமணம் ரொம்ப சாதாரணமாய் நடந்ததாக சிலர் நினைத்திருக்கலாம். ஆனால், அலெக்சாண்ட்ராவும் நானும் ரொம்பவே சந்தோஷப்பட்டோம். திருமணம் என்பது, இரு நபர்களுக்கு அளவிலா ஆனந்தத்தைத் தருவதற்காக யெகோவா செய்த ஏற்பாடு. எங்கள் திருமணம் அந்த ஏற்பாட்டிற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் இருக்க வேண்டுமென விரும்பினோம். கடனை தலையில் கட்டிவிடும் நாளாக அதை ஆக்க நாங்கள் விரும்பவில்லை.”
அலெக்சாண்ட்ரா இவ்வாறு கூறுகிறார்: “திருமணத்திற்கு முன் நான் பயனியராக இருந்தேன். எங்கள் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த வேண்டும் என்பதற்காக பயனியர் ஊழியத்தை விட்டுவிட நான் விரும்பவில்லை. உண்மைதான், எங்கள் திருமண நாள் ரொம்ப விசேஷமானது. என்றாலும், வாழ்நாள் முழுவதும் தொடரவிருந்த பந்தத்திற்கு அது வெறும் ஓர் ஆரம்பமே. அந்த நிகழ்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், யெகோவா அளித்திருக்கும் ஆலோசனையைப் பின்பற்ற தம்பதியராக என்ன செய்யலாம் என்பதற்கே நாங்கள் அதிக கவனம் செலுத்தினோம். இப்படிச் செய்தது நிச்சயமாகவே யெகோவாவின் ஆசீர்வாதத்தை அள்ளித் தந்தது.”c
ஆம், உங்கள் மணநாள் விசேஷமான தருணம் என்பதில் சந்தேகமில்லை. அந்நாளில் வெளிப்படும் மனப்பான்மையும் செயல்களும், உங்கள் திருமண வாழ்க்கையில் பின்பற்றத்தக்க மாதிரியாக அமையலாம். ஆகவே, வழிநடத்துதலுக்காக யெகோவாவைச் சார்ந்திருங்கள். (நீதிமொழிகள் 3:5, 6) அந்நாளின் ஆன்மீக முக்கியத்துவத்தை மனதில் வைத்திருங்கள். கடவுள் கொடுத்திருக்கும் பொறுப்பைச் செய்வதில் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருங்கள். இப்படியாக உங்கள் திருமண பந்தத்திற்கு நீங்கள் நல்லதோர் அஸ்திவாரத்தைப் போடமுடியும். உங்கள் மணநாளில் தொடங்கும் சந்தோஷம் ஆண்டாண்டு காலத்திற்குத் தொடர யெகோவா ஆசீர்வதிப்பாராக!—நீதிமொழிகள் 18:22.
[அடிக்குறிப்புகள்]
a இது சம்பந்தமாக கூடுதல் தகவலை பிப்ரவரி 8, 2002 ஆங்கில விழித்தெழு! இதழில் காணலாம். இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
b மணமக்கள் தங்கள் திருமண நிகழ்ச்சியை ஃபோட்டோ எடுக்கவோ வீடியோ எடுக்கவோ திட்டமிட்டால், திருமணத்தின் கண்ணியத்தைக் குலைக்கிற எதுவும் நடந்துவிடாதபடி முன்கூட்டியே ஏற்பாடுகளைச் செய்துவிட வேண்டும்.
c யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தில் பக்கம் 26-ஐக் காண்க.
[பக்கம் 29-ன் படம்]
திருமண ஜோடி தங்கள் திருமணத் திட்டங்களை ஒளிவுமறைவின்றியும் மரியாதையாகவும் மனம்விட்டுப் பேச வேண்டும்
[பக்கம் 31-ன் படம்]
உங்கள் மணநாளின் ஆன்மீக முக்கியத்துவத்தை மனதில் வைத்திருங்கள்